மக்களவைத் தேர்தலில் மதவாத பிஜேபியையும்
துணை போகும் கட்சிகளையும் வீழ்த்துவோம்!
தி.மு.க. தலைமையிலான அணிக்கே வாக்களிப்பீர்
தஞ்சாவூர் பிப்.23 மக்களவைத் தேர்தலில் மதவாத பிஜேபி, அதன் கூட்டணிக் கட்சிகளை வீழ்த்த வேண்டும் என்றும் திமுகவுக்கும் அதன் தலைமையிலான கூட்டணி கட்சிகளுக்குமே வாக்களித்துவெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றும் தமிழ்நாடு சட்டப் பேரவை இடைத் தேர்தலிலும் திமுக தலைமையிலான அணிக்கே வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றும் வாக்காளர்களுக்கு தீர் மானம் மூலம் திராவிடர் கழக மாநில மாநாட்டில் (23.2.2019) வேண்டுகோள் வைக்கப்பட்டது.
தீர்மானம் எண் 1:
மக்களவைத் தேர்தலும் - வாக்காளர் கடமையும்
மத்தியில் ஆட்சி அதிகாரத்தில் உள்ள நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு என்பது கீழ்க்கண்ட காரணங்களின் அடிப்படையில் வீழ்த்தப்பட வேண்டும் என்று இம்மாநாடு தெரிவித்துக் கொள்கிறது.
(அ) இந்திய அரசமைப்புச் சட்டத்தில் வலியுறுத்தப் பட் டுள்ள மதச்சார்பின்மை, சமூக நீதிக்கு எதிரான செயல்பாடுகள்.
குறிப்பாக மதச்சார்பின்மைக்கு விரோதமாக - குடியரசு தின அரசு விளம்பரத்தில்கூட திட்டமிட்டு செக்குலர் என்று அரசமைப்புச் சட்டத்தில் உள்ள முக்கிய சொல்லை அகற் றியமை.
அரசமைப்புச் சட்டத்தில் இல்லாத பொருளாதார அடிப் படையில் பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள முற்பட் டோருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு.
விஞ்ஞானத்திற்கு எதிராக புராண - இதிகாச - மதவாத மனப்பான்மையுடன் செயல்படுதல் - பிரச்சாரம் செய்தல் - பாடத்திட்டம் வகுத்தல்.
பசு பாதுகாப்பு என்ற பெயரில் இந்து மதக் கோட்பாடான கோமாதா என்பதை உயர்த்திப் பிடித்தல், மாட்டுக்கறி உணவைத் தடை செய்தல், பசு பாதுகாப்புப் போர்வையில் தாழ்த்தப்பட்டோரையும், சிறுபான்மையினரையும் தாக்குதல், கொல்லுதல் - இந்து ராஜ்ஜியம் அமைப்போம் - ராமராஜ்ஜியம் அமைப்போம் என்று சூளுரைத்தல்.
மத்திய அமைச்சர்களாக இருக்கக் கூடியவர்களே இந்த வகையில் வெளிப்படையாகப் பிரச்சாரம் செய்தல்.
சிறுபான்மை மதத்தைச் சேர்ந்தவர்களுக்கு எதிராக வன்முறைகளைத் தூண்டுதல், கலகம் விளைவித்தல் போன்ற இந்திய அரசமைப்புச் சட்டம் வலியுறுத்தும் மதச்சார் பின்மைக்கு விரோதமான செயல்பாடுகள்.
(ஆ) சமூகநீதியைக் குழிதோண்டிப் புதைக்கும் வகையில் நீட் தேர்வு, நெட் தேர்வு, ஆசிரியர் பணிக்கான டெட் தேர்வு.
தேசியக் கல்வி என்றும், குருகுலக் கல்வி என்றும் கூறி வர்ணாசிரமக் குலக்கல்வித் திட்டம் - கல்வியைக் காவி மயமாக்குதல் - சமஸ்கிருதம் - இந்தித் திணிப்பு.
ஆர்.எஸ்.எஸின் ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே கலாச்சாரம் என்னும் இந்துத்துவாவைத் திணிக்கும் போக்குகள்.
(இ) தாழ்த்தப்பட்டவர்கள் - பழங்குடியினர் மீதான வன் முறைகள், வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தினைப் பாது காக்க மறுத்தல் - பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகள்.
(ஈ) ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு என்ற தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாமை.
(உ) பொருளாதார வளர்ச்சியில் மிகப் பெரிய வீழ்ச்சி, ரூபாய் மதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு இவற்றை செயல் படுத்தியதால் விலைவாசி உயர்வு, ஏற்கெனவே செயல்பட்டு வந்த - குறுந்தொழில்கள், நடுத்தர தொழில்கள் அழிவு. இதன் காரணமாக வேலையில்லாத் திண்டாட்டம் மேலும் அதிக ரிப்பு. கார்ப்பரேட்டுகள், சாமியார்களுக்கான ஆட்சி என்று சொல்லத்தக்க வகையில் ஆட்சியின் போக்குகள். கார்ப்பரேட் டுகளுக்குக் கடன் தள்ளுபடி 2.4 லட்சம் கோடி ரூபாய். கருப்பை வெள்ளையாக்கிய திட்டத்துக்குப் பெயர் கருப்புப் பண ஒழிப்புத் திட்டமா?
சட்டமன்ற இடைத் தேர்தலில் திமுக அணிக்கே வாக்களிப்பீர்!
10 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா மிகவும் கடுமையான பொருளாதார வீழ்ச்சியைச் சந்தித்து வருகிறது. 2008ஆம் ஆண்டு உலகம் முழுவதும் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால் இந்தியா கடுமையான பொருளாதார இழப்பைச் சந்தித்தது. ஆனால், உற்பத்தித்துறை மற்றும் விவசாயம் போன்றவற்றில் தன்னிறைவு பெற்ற காரணத்தால் அந்தப் பொருளாதார இழப்பை இந்தியா எதிர்கொண்டது.
ஆனால், தற்போது உலகம் முழுவதிலும் பொருளாதாரம் சிறப்பாக இருந்து வரும் நிலையில் இந்தியாவில் பெரும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு வருகிறது. இது மீளமுடியாத பொருளாதார இழப்பாகும்.
மன்மோகன்சிங் அரசு விலகி மோடி அரசு பதவி ஏற்ற காலகட்டத்தில் 2014-2015ஆவது நிதியாண்டில் 8.01 சதவிகிதம் ஆக இருந்த பொருளாதார வளர்ச்சி தொடர்ந்து சரிவைக் கண்டு கடந்த ஆண்டு (2018) 7.2 சதவிகிதம் என்ற கடுமையான சரிவைச் சந்தித்தது. இந்த நிலை 2019 ஜனவரியிலும் தொடரும் நிலை.
(ஊ) விவசாய புறக்கணிப்புக் காரணமாக விவசாயிகள் தற்கொலை அதிகரித்தல் - தொழிலாளர்களின் உரிமைப் பறித்தல். ரேசன் அரிசியை ஒழித்திட உணவுப் பாதுகாப்பு சட்டம்.
பி.ஜே.பி. ஆளாத மாநிலங்களில் ஆளுநர்களாக ஆர்.எஸ்.எஸ்.காரர்களை நியமித்து, மக்களால் தேர்ந் தெடுக்கப்பட்ட ஆட்சிக்கு எதிராக ஜனநாயக விரோத செயல்பாடுகளில் ஈடுபடச் செய்தல்.
(எ) தேர்தல் ஆணையம் - ரிசர்வ் வங்கி, மத்திய புல னாய்வு அமைப்பு, தகவல் உரிமை ஆணையம், ஊழல் கண்காணிப்பு அமைப்பு, மத்திய தணிக்கை வாரியம், பொருளாதார கண்காணிப்பு அமைப்பு போன்ற தன்ன திகாரம் பெற்ற அமைப்புகளின்மீது எதேச்சதிகார - பாசிச - அதீத தலையீடுகள், நீதிமன்ற அதிகாரத்திலும் குறுக்கீடுகள் என்ற அதிகாரத் துரைத்தனப் போக்கு.
(ஏ) வெகுமக்களுக்கு விரோதமாகவும், மாநில மக்க ளின் உணர்வுகளை மதிக்காமலும் அன்றாட வாழ்வில் கொடூரமான பாதிப்புகளை உண்டாக்கக்கூடியதும், கார்ப்ப ரேட்டுகளைக் கொழுக்க வைக்கக் கூடியதுமான மீத்தேன், ஹைட்ரோகார்பன், ஸ்டெர்லைட், நியூட்ரினோ போன்ற வற்றைத் திணித்தல்; நதிநீர்ப் பிரச்சினையில் அரசியல் லாபக்கண்ணோட்டத்தோடு ஒரு சார்பு நிலை எடுத்தல், உரிமைகளுக்காகப் போராட்டம் நடத்தும் மக்களை மாநில அரசின் துணையோடு காவல்துறையினர் மூலம் ஒடுக்குதல், தீவிரவாதிகள் என்று முத்திரை குத்துதல், தேசிய பாதுகாப்புச் சட்டங்களை ஏவி சிறையில் தள்ளுதல் போன்ற பாசிச நடவடிக்கைகளில் ஈடுபடுதல்.
எதிர்க்கட்சி மாநில முதல் அமைச்சர்களைக்கூட சந்திக்க மறுக்கும் பிரதமர் - எதிலும் கட்சிக் கண்ணோட்டத்தோடு அணுகும் போக்குகள் - குறிப்பாகச் சொல்ல வேண்டுமானால் பா.ஜ.க. ஆட்சி என்பது பச்சைப் பாசிச ஆட்சியாக செயல்படுவதால் 2019ஆம் ஆண்டில் நடைபெறவிருக்கும் மக்களவைத் தேர்தலில் பி.ஜே.பி.க்கும், அதன் கூட்டணிக் கட்சிகளுக்கும் வாக்குகள் மூலம் பெரும் தோல்வியைக் கொடுத்தே தீருவது என்பதில் வாக்காளர்கள் முனைப்பாக இருந்து தீர வேண்டும் என்று இம்மாநாடு வாக்காளர்களைக் கேட்டுக் கொள்கிறது.
கட்சிகளுக்கு அப்பாற்பட்ட முறையில் குறிப்பாக இளைஞர்கள், மாணவர்கள், பெண்கள், பா.ஜ.க. என்னும் பாசிச ஆட்சியை வீழ்த்தும் களத்தில் முழு வீச்சாக ஈடுபட வேண்டும் என்று இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.
இத்தகைய பிற்போக்கு மத்திய பி.ஜே.பி. அரசுக்கு ஏவலாக இருந்து செயல்படும் - நீட் தேர்வை ரத்து செய்யக் கோரும் இரு மசோதாக்களுக்கான ஒப்புதலை மத்திய அரசிடம் பெறுவதற்குக்கூட அக்கறையில்லாத ஆட்சியாக நடந்துவரும் தமிழ்நாடு அ.தி.மு.க. அரசும் அகற்றப்பட வேண்டியதே என்பதை இம்மாநாடு தெரிவித்துக் கொள் கிறது.
இந்த நிலையில் வரும் மக்களவைத் தேர்தலிலும், 21 சட்டமன்ற இடைத் தேர்தலிலும் பி.ஜே.பி - அதனோடு கூட்டுச் சேர்ந்துள்ள கட்சிகளை வீழ்த்தி, தமிழ்நாட்டில் தி.மு.க. தலைமையில் உள்ள அய்க்கிய முற்போக்குக் கூட்டணியை ஆதரித்துப் பெருவெற்றியைப் பெற்றுத் தருமாறு வாக்காளப் பெருமக்களை இம்மாநாடு ஒருமன தாகக் கேட்டுக்கொள்கிறது.
தீர்மானம் எண் 2:
ஜாதி - தீண்டாமை ஒழிப்பு
இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 17 ஆம் பிரிவில் தீண்டாமை ஒழிக்கப்படுகிறது'' என்ற அம்சம் இடம் பெற்றுள்ளது; தீண்டாமையின் மூல காரணம் ஜாதி என்பதால், வெறும் தீண்டாமை ஒழிப்பு என்பது நிஜத்தை விட்டுவிட்டு நிழலோடு சண்டை போடுவதற்குச் சமம் என்பதால், இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 17 ஆம் பிரிவில் இடம்பெற்றுள்ள தீண்டாமை (ஹிஸீஷீநீலீணீதீவீறீவீஹ்) ஒழிக்கப் படுகிறது என்பதற்குப் பதிலாக ஜாதி (சிணீமீ) ஒழிக்கப் படுகிறது என்று சட்டத் திருத்தம் கொண்டு வருமாறு மத்திய அரசை இம்மாநாடு வலியுறுத்துகிறது.
1973 டிசம்பர் 8, 9 ஆகிய நாள்களில் சென்னை பெரியார் திடலில் தந்தை பெரியார் தலைமையில் நடைபெற்ற தமிழர் சமுதாய இழிவு ஒழிப்பு மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட இந்தத் தீர்மானம் மீண்டும் இம் மாநாட்டில் வலியுறுத்தப் படுகிறது.
தீர்மானம் எண் 3:
ஜாதி மறுப்புத் திருமணம் செய்துகொள்வோருக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கு இட ஒதுக்கீடு தேவை!
ஜாதி என்னும் அளவுகோல் சமூகநீதிக் கண்ணோட் டத்தில் கல்வி, வேலை வாய்ப்புகள், பதவி உயர்வு என்கிற காரணங்களுக்காக மட்டும் மருந்தில் நோய்க் கொல்லியாக விஷம் சேர்க்கும் அளவு பயன்படுத்தவேண்டும் என்றும், வேறு எந்தக் காரணங்களுக்காகவும் ஜாதி முன்னிறுத்தப்படக் கூடாது - அடையாளப்படுத்தக் கூடாது என்றும் இம்மாநாடு மத்திய - மாநில அரசுகளை வலியுறுத்துகிறது.
ஜாதி சான்றிதழ் வழங்கும்போது, தாழ்த்தப்பட்டோர், மலைவாழ் மக்கள், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற் படுத்தப்பட்டோர் என்ற வகையில் அளிக்கப்படவேண்டும் என்றும், ஜாதியைக் குறிப்பிட்டு சான்றிதழ் கொடுக்க வேண்டிய அவசியமில்லை என்றும் இம்மாநாடு தெரிவித்துக் கொள்கிறது.
ஜாதி மறுப்புத் திருமணங்கள் செய்து கொள்வோருக்குப் பிறக்கும் குழந்தைகளை ஜாதியற்றவர்களாக அறிவித்து, குறிப்பிட்ட விழுக்காட்டில் அவர்களுக்குக் கல்வி, வேலை வாய்ப்புகள் உள்ளிட்டவற்றில் இட ஒதுக்கீடு மிஸீமீக்ஷீ சிணீமீ னிஷீணீ அளிக்கப்பட வேண்டும் என்றும், இந்த வகையான இடஒதுக்கீட்டின் விழுக்காடு அதிகரித்துக் கொண்டே போகவும், ஜாதி அடிப்படையிலான இட ஒதுக்கீடு நாளடை வில் குறைந்து போகும் வகையிலும் சட்டத் திருத்தத்தைக் கொண்டு வருமாறு இம்மாநாடு மத்திய அரசை வலியுறுத்துகிறது.
தாழ்த்தப்பட்டவர்களுக்கென்று தனிக் குடியிருப்புகளை - காலனிகளைச் கட்டக் கூடாது என்றும், அவ்வாறு கட்டுவது அவர்களைத் தனிமைப்படுத்தும் ஏற்பாடாக அமையும் என்றும் இம்மாநாடு தெரிவித்துக் கொள்வதுடன் சேரிகள் ஒழிக்கப்பட்டு அனைவரும் கலந்து வாழும் ஒரு பொதுவான நிலையை உருவாக்க வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளை இம்மாநாடு வலியுறுத்துகிறது.
*****
1978ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசின் ஆணையானது தமிழ்நாட்டின் சாலைகள், தெருக்கள், ஊர்களின் பெயர்களில் ஜாதிப் பெயர் இடம் பெறக் கூடாது என்பதாகும். இதனை நூறு விழுக்காடு செயல்படுத்துமாறு இம்மாநாடு தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறது.
*****
பெரியார் நினைவு சமத்துவபுரங்களில் எந்த மத வழிபாட்டுச் சின்னங்களும் கூடாது என்று அரசு ஆணை (நிலை) எண் 28 ஊரக வளர்ச்சி (மதிக) தெளிவாக இருந்தும், கன்னியாகுமரி மாவட்டம் செண்பகராமன்புதூர் போன்ற இடங்களில் கோயில் கட்டப்பட்டிருப்பதைச் சுட்டிக்காட்டி தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளருக்கும், கன்னியா குமரி மாவட்ட ஆட்சித் தலைவருக்கும் திராவிடர் கழகத் தலைமை நிலையத்திலிருந்து புகார் தெரிவிக்கப்பட்டும் இதுவரை இதன்மீது உரிய நடவடிக்கை எடுக்காதது கண்டிக்கத்தக்கதாகும். நீதிமன்ற ரீதியாக இதற்குத் தீர்வு காணுவது என்று தீர்மானிக்கப்படுகிறது.
*****
கோவில் சிலை திருட்டைக் கண்டுபிடிப்பதற்குக் காவல் துறையில் தனிப் பிரிவு இருப்பது போல ஜாதி, மத கலவரங்களைத் தடுத்திட காவல்துறையில் தனிப்பிரிவு ஒன்றை உருவாக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசை இம்மாநாடு வலியுறுத்துகிறது.
*****
வயது அடைந்த ஆணும், பெண்ணும் ஒருவரை ஒருவர் புரிந்து திருமணம் செய்து கொள்வதை இம்மாநாடு வரவேற் கிறது. ஆணவக் கொலை என்ற அநாகரீக சொல்லாடலை அருவருப்பாகக் கருத வேண்டும் என்று இருபால் இளை ஞர்களையும் இம்மாநாடு வலியுறுத்துகிறது.
*****
ஜாதி, மத மறுப்புத் திருமணங்களை, விதவையர் மற்றும் திருமண விடுதலை பெற்றவர்களைத் திருமணம் செய்து கொள்வதற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்று இம்மாநாடு இளைஞர்களைக் கேட்டுக் கொள்கிறது. ஜாதி மறுப்பு - மத மறுப்புத் திருமணம் செய்துகொள்வோர்க்குப் பாதுகாப்பு அளிக்கும் வகையில் முற்போக்கு சக்திகள் இணைந்து அமைப்புரீதியாக ஒரு பாதுகாப்புக் கட்ட மைப்பை உருவாக்குவது என்றும் இம்மாநாடு தீர்மானிக்கிறது.
*****
தேனீர் விடுதிகளில் இரு கிளாஸ்கள், தனி சுடுகாடு, இடுகாடு - இவைகளுக்குச் செல்லும் பாதைகளிலும் இடர்ப் பாடுகள், மலத்தைக் கையால் அகற்றும் கொடுமை 71 ஆண்டு சுதந்திர இந்தியாவில் நிலவுவது வெட்கப்படத் தக்கதாகும் - எல்லோருக்கும் பொதுவான மின் சுடுகாடு தேவையாகும்.
*****
மனிதனுக்குத் தான் சுதந்திரம் முக்கியமே தவிர, மண்ணுக்கல்ல என்று கூறிய தத்துவ ஆசான் தந்தை பெரியார் அவர்களின் கருத்தினை நினைவூட்டி, மனித சமத்துவத்துக்கும், மனித உரிமைக்கும் சுதந்திரத்துக்கும் கேடான, இழிவான இத்தன்மைகளை அடியோடு வேரறுக்க தீவிரமான சட்டங்களும், அதிவேகமான செயல்பாடுகளும் தேவை என்பதை இம்மாநாடு வலியுறுத்துகிறது; மாநில, மத்திய அரசுகள் இதற்கு முன்னுரிமை கொடுக்கவேண்டும் என்றும் திட்டவட்டமாக வற்புறுத்துகிறது
*****
ஜாதி - தீண்டாமை ஒழிப்புச் சிந்தனையை மாணவர் களுக்கு ஊட்டும் வகையில் இளம் வயதிலேயே சமத்துவ உணர்வு, மனிதநேயம் தூண்டும் பாடத் திட்டங்களை உருவாக்குமாறு இம்மாநாடு மத்திய - மாநில அரசுகளை வலியுறுத்துகிறது.
*****
மாணவர்களில் ஜாதி அடையாளத்தைக் காட்டும் வகையில் வெவ்வேறு வண்ணங்களில் கைகளில் கயிறு கட்டும் கேவலமான செய்கை உடனடியாக தடுத்து நிறுத் தப்பட வேண்டும். இதற்குக் காரணமானவர்கள் மீது உரிய வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசை, குறிப்பாக கல்வித்துறையை இம்மாநாடு வலி யுறுத்துகிறது.
தீர்மானம் எண் 4:
அர்ச்சகர் பயிற்சி பெற்ற அனைத்து ஜாதியினரையும் உடனடி பணி நியமனம் செய்க!
தந்தை பெரியார் அவர்கள் இறுதியாக அறிவித்த அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை என்ற போராட்ட அறிவிப்பினைத் தொடர்ந்து, தி.மு.க. ஆட்சியில் முத்தமிழ் அறிஞர் மானமிகு கலைஞர் அவர்களால் கொண்டுவரப்பட்ட சட்டம் செல்லும் என்ற அடிப்படையில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது; கேரள மாநில இடதுசாரி அரசால் 60-க்கும் மேற்பட்ட கோவில்களில் அனைத்து ஜாதியினரிலிருந்தும் அர்ச்சகர்கள் நியமிக்கப் பட்டுள்ளனர். தமிழ்நாட்டிலும் மதுரை தல்லாகுளத்தில் உள்ள அய்யப்பன் கோவிலுக்கு அர்ச்சகராக பிற்படுத்தப் பட்ட சமூகத்தைச் சேர்ந்த திரு.மாரிசாமி என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து ஏற்கெனவே அர்ச்சகர் பயிற்சி பெற்ற 200-க்கும் மேற்பட்ட அனைத்து ஜாதியினருக்கும் உடனடியாக பணி நியமனம் செய்யுமாறு இம்மாநாடு தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறது. அனைத்து ஜாதியினருக்கும் அளிக்கப்பட்டு வந்த அர்ச்சகர் பயிற் சியைத் தொடர்ந்து நடத்த வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசை இம்மாநாடு வலியுறுத்துகிறது.
தீர்மானம் எண் 5:
செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் வளர்ச்சி - செயல்பாடுகளுக்கு ஆக்கமும், ஊக்கமும் தேவை!
உலகின் மூத்த மொழியான தமிழின் தொன்மை, அதன் உள்ளடக்கம் உள்ளிட்ட சிறப்புகளை உலகறியச் செய்யவும், தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர்களும்கூட மேலும் அதன் உயர்வை உணர்ந்து கொள்ளவும், மேலும் தமிழில் காலத்துக்கேற்ற வளர்ச்சிகளை ஊட்டவும், மானமிகு முத்தமிழ் அறிஞர் கலைஞர் முதல் அமைச்சராக இருந்த போது, அவர்தம் விடாமுயற்சியால் அன்றைய அய்க்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் தமிழுக்குச் செம்மொழி என்ற தகுதி அளிக்கப்பட்டது (2006). 1918 மார்ச் 30, 31 நாள் களில் நடைபெற்ற நீதிக்கட்சி மாநாட்டின் தீர்மானம் இது.
செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் சென்னைத் தரமணியிலும் நிறுவப்பட்டது. 11 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், பழந்தமிழ் நூல்களின் பதிப்பு, பழந்தமிழ் நூல்களை மொழிபெயர்த்தல், வரலாற்று அடிப்படையில் தமிழ் இலக்கணம், தமிழின் தொன்மை, தமிழ் வழக்காறுகள் ஆய்வுத் திட்டம் உள்ளிட்டவற்றை மேற்கொள்ளும் உயரிய நோக்கத்துடன் முதன்மைத் திட்டப் பணிகள் வரையறுக்கப் பட்டன.
பதினொரு ஆண்டுகள் ஓடியும் ஒரே ஒரு பணிகூட இத்திசையில் மேற்கொள்ளப்படவில்லை என்பது மிகுந்த வேதனைக்குரியதாகும்.
நிறுவனம் தொடங்கப்பட்ட நாள் முதல் இந்நிறு வனத்துக்கான நிரந்தர இயக்குநர் நியமிக்கப்படவே இல்லை. தற்காலிகமாக நியமனம் செய்யப்பட்டவர்களும் தமிழுக்குத் தொடர்பில்லாத பொறியியல் துறைப் பேராசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டது மத்திய அரசின் அலட்சியப் போக்கையே வெளிப்படுத்து வதாகும்.
இந்த நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட 25 கோடி ரூபாய் இப்பொழுது வெறும் 2 கோடி ரூபாயாகச் சுருக்கப்பட்டது. பதினாறு ஆய்வறிஞர்கள் பணிபுரிந்த அந்நிறுவனத்தில் தற்போது ஒருவர்கூட இல்லை.
இதன் தலைவராக இருக்கக் கூடியவர் முதல் அமைச்சர் தான். இப்படி ஒரு நிறுவனம் இருப்பதாக அதன் தலைவ ருக்குத் தெரியுமா என்பது கேள்விக்குறியே.
ஒரு பக்கத்தில் மத்திய அரசு இந்தி - சமஸ்கிருத மொழிக்கு ஆக்கமும் ஊக்கமும் கொடுத்துக்கொண்டு மிகப் பெரிய அளவில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது.
தமிழ்நாடு அரசு இதற்குப் பிறகாவது விழித்துக்கொண்டு, எந்த நோக்கங்களுக்காக தமிழ் செம்மொழியாக ஆக்கப் பட்டு, அதன் வளர்ச்சிக்காக தமிழாய்வு மத்திய நிறுவனம் நிறுவப்பட்டதோ அந்த நோக்கங்கள் நிறைவேற்றப்படும் வகையில் மத்திய அரசினை வலியுறுத்தி நிறுவனத்தைச் செம்மைப்படுத்துமாறு இம்மாநாடு தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறது.
மத்திய அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் செயல்படாமல், இந்தியா என்பது பன்மொழிகளையும், பல இனங்களையும், பல கலாச்சாரங்களையும் கொண்ட ஒரு துணைக் கண்டம் என்ற வரலாற்று உண்மையின் அடிப் படையில் தொன்மொழியான தமிழுக்குரிய முக்கியத்துவத் தையும், மதிப்பையும் கொடுத்து செயல்படுமாறு இம்மாநாடு நடுவண் அரசை வலியுறுத்துகிறது.
தீர்மானம் எண் 6:
ஈழத் தமிழர்களின் உரிமை வாழ்வு உறுதிப்படுத்தப்படவேண்டும்
2009 ஆம் ஆண்டில் ஈழத் தமிழர்கள்மீது நடத்தப்பட்ட கோர யுத்தத்தின் காரணமாக அங்கு வாழும் தமிழர்களின் வாழ்வு முற்றாக அழிக்கப்பட்டுவிட்டது. மக்கள் மீதான இனப்போர் முடிந்து 10 ஆண்டுகள் கடந்த பிறகும், எஞ்சியிருக்கும் தமிழர்களின் வாழ்வில் வளர்ச்சிப் போக்கோ, உரிமையோ எட்டப்படவில்லை.
இனப் படுகொலைக்குக் காரணமான போர்க் குற்ற வாளிகள் மீதான விசாரணைக்கு அய்.நா. உத்தரவிட்டும், இதுவரை அதன்மீது எந்தவித நடவடிக்கையும் இல்லை என்பது அதிர்ச்சிக்குரியது மட்டுமல்ல; அய்.நா.மீதான நம்பிக்கையும் மதிப்பும் கேள்விக்குறியாகி விட்டன.
இந்த நிலையில், ஈழத் தமிழர்களின் அழிவுக்குக் காரண மாக இருந்த மகிந்த ராஜபக்சேவும், மைத்ரிபால சிறீசேனாவும் இணைந்து செயல்படும் போக்கு ஈழத் தமிழர்கள் மத்தியிலும், உலக மனித உரிமைச் சிந்தனையாளர்கள் மத்தியிலும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய அரசோ யாருக்கோ வந்த விருந்து என்ற நோக் கில், போக்கில் நடந்து வருகிறது. உலகில் தமிழர்களின் நிலை இதுதானா என்ற கேள்வி உலகத் தமிழர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
கட்சி வண்ணங்கள், எல்லைகள் இவற்றை எல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு, உலகத் தமிழர்கள் ஓங்கிக் குரல் கொடுக்க வேண்டும் என்றும், சம்பந்தப்பட்ட அரசுகளுக்கு அழுத்தம் கொடுக்கவேண்டும் என்றும் இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.
திராவிடர் கழகத் தோழர்கள் எடுக்கும் சூளுரை! சூளுரை!!
தீர்மானம் எண் 7:
தமிழக மீனவர்கள் பிரச்சினையின் பரிதாப நிலைக்கு நிரந்தரத் தீர்வு தேவை
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தமிழக மீனவர்கள் பிரச்சி னைக்குத் நிரந்தரத் தீர்வு காண்போம் என்று மார் தட்டிய பி.ஜே.பி. ஆட்சி அதிகாரத்துக்கு வந்து அய்ந்தாண்டுகள் ஆகியும் பாராமுகம் காட்டி வருகின்றது. தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது சிறைப்பிடிக்கப்படுவது, படகுகள், வலைகள் நாசப்படுத்தப்படுவது போன்ற அவலங்கள் தொடர்ந்த வண்ணமே உள்ளன.
ஆட்சி மாற்றத்தின்மூலம் தீர்வு காணுவதுதான் ஒரே வழி என்று இம்மாநாடு கருதுகிறது. மீனவ சகோதரர்களும் இதுகுறித்துச் சிந்தித்து நல்லதோர் முடிவினை எடுக்கவேண் டும் என்று இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.
தீர்மானம் எண் 8:
ஏழு பேரை விடுதலை செய்க!
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கிட்டத்தட்ட 27 ஆண்டுகள் சிறையில் கழித்த பேரறிவாளன், முருகன், சாந்தன், இரவிச்சந்திரன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், நளினி ஆகிய ஏழு பேர்களையும் விடுதலை செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றம் இருமுறை தீர்ப்புக் கூறியும், தமிழ்நாடு அரசும் அதனை ஏற்றுக்கொண்டு பரிந்துரைத்த பிறகும்கூட அதனைச் செயல்படுத்துவதில் காலங்கடத்தி முட்டுக்கட்டை போடும் தமிழ்நாடு ஆளுநருக்கும், மத்திய அரசுக்கும் இம்மாநாடு தனது கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது! இதில் மேலும் காலம் கடத்தி, நீதிமன்றத்தின் வழிகாட்டு தலையும், மாநில அரசின் உரிமையையும் புறக்கணிக்கும் - மனிதாபிமானத்தைப் புறந்தள்ளும் இந்தப் போக்கினைக் கைவிடுமாறு சம்பந்தப்பட்டவர்களை இம்மாநாடு வலியுறுத் துகிறது.
தமிழ்நாட்டில் வடநாட்டவர் மக்கள் பெருக்கமும், தொழில் ஆதிக்கமும் அதிகரிக்கும் ஆபத்து! ஆபத்து!!
தீர்மானம் எண் 9(அ):
பெண்களின் திருமண வயது
பெண்களின் திருமண வயது 18 அய்யும் கடந்து, தங்கள் படிப்பு, வேலைவாய்ப்பின் அடிப்படையில் பெண்களே திரு மண வயதை நிர்ணயித்துக் கொள்ளும் உரிமை அவசியம் தேவை என்று இம்மாநாடு தெரிவித்துக்கொள்கிறது.
தீர்மானம் எண் 9(ஆ):
வழிபாடும் - பெண்களும்
எந்த மத வழிபாட்டுத் தலங்களிலும் ஆண்களுக்கு உள்ள உரிமை பெண்களுக்கும் அவசியம் இருக்க வேண்டும் என்றும், பெண்களுக்கும் அர்ச்சகர் ஆகும் உரிமை வேண்டும் என்றும் இம்மாநாடு தெரிவித்துக்கொள்கிறது.
தீர்மானம் எண் 9 (இ):
பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமை - தற்காப்புப் பயிற்சி!
ஆண்களின் வக்கிரப் போக்கிலிருந்து தங்களைத் தற் காத்துக் கொள்ளவும், தேவைப்பட்டால் முந்தித் தாக்கவு மான உடற்பயிற்சியும், மனவளப் பயிற்சியும் கல்விக் கூடங் களிலேயே பெண்களுக்குத் தரப்பட வேண்டும் என்றும், துப்பாக்கி சுடும் பயிற்சியும் அளிப்பதோடு, அதற்கான உரிமம் முன்னுரிமையோடு பெண்களுக்குத் தரப்பட வேண்டும் என்றும் இம்மாநாடு மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்துகிறது.
பாலியல் கல்வி உரிய வயதில் இருபாலருக்கும் போதிக்க ஆவன செய்யப்பட வேண்டும் என்றும் இம்மாநாடு தெரிவித்துக்கொள்கிறது.
தீர்மானம் எண் 10:
அகழ்வாராய்ச்சியும் - நடுவணரசும்
1876ஆம் ஆண்டு பிரிட்டிஷ் ஆட்சியின்போதே ஆதிச்சநல்லூரில் தொல்லியல் ஆய்வு தொடங்கப்பட்டு இதுவரை, அதன் ஆய்வு முடிவுகள் வெளிப்படுத்தப்பட வில்லை. அதுபோலவே சிவகங்கையையடுத்த கீழடியில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு இடையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வின் முடிவுகள் திராவி டர்களின் தொன்மை, பண்பாடு, வாழ்க்கை வளம் உள்ளிட்ட பெருமை மிகு சான்றுகள் வெளி உலகத்திற்குத் தெரிந்து விடக்கூடாது - ஆரியத்துக்கு முந்தியது என்ற உண்மை வெளிச்சத்துக்கு வந்துவிடக்கூடாது. என்ற பார்ப்பனீயக் கண்ணோட்டம்தான் இந்தத் தடங்கலுக்கான திரைமறைவில் உள்ள காரணங்கள் என்பதை இம்மாநாடு திட்டவட்டமாகத் தெரிவித்துக் கொள்கிறது. ஆதிச்சநல்லூர் ஆய்வு அறிக்கை மேலும் காலந்தாழ்த்தாது உடனே வெளியிடப்பட வேண்டும் என்றும், கீழடியில் தொல்லியல் ஆய்வும் உடனே தொடரப்பட வேண்டும் என்றும், அதற்கான செயல்பாட்டில் மத்திய அரசு ஈடுபட வேண்டும் என்றும், அதற்கான அழுத்தத்தைத் தமிழ்நாடு அரசு கொடுக்க வேண்டும் என்றும் இம்மாநாடு வலியுறுத்துகிறது. மொகஞ்சதாரோ, ஹரப்பா ஹிந்து நாகரிகம் என்ற ஆர்.எஸ்.எஸ். தேசிய தலைவர் மோகன்பகவத் கூறியிருப்பது ஆரிய வஞ்சனையின் வெளிப்பாடு என்றும் இம்மாநாடு அறிவிக்கிறது.
தீர்மானம் எண் 11:
இந்தி - சமஸ்கிருதத் திணிப்புக்கு எதிர்ப்பு
மத்திய பி.ஜே.பி. அரசு இந்தி, சமஸ்கிருதத் திணிப்பை கல்வி, நிருவாகத் துறைகளில் எல்லாம் திட்டமிட்டு மேற் கொண்டு வருகிறது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை மொழிப் பிரச்சினை என்பது - தீப்பற்றி எரியக் கூடியது என்பதை எச்சரிக்கையாகத் தெரிவிப்பதுடன், இந்தி, சமஸ்கிருதத் திணிப்பைக் கைவிடுமாறு மத்திய அரசை இம்மாநாடு வலியுறுத்துகிறது.
தீர்மானம் எண் 12:
மாநில மொழிகளை மத்திய ஆட்சி மொழிகளாக்குக!
இந்திய அரசமைப்புச் சட்டம் எட்டாவது அட்டவணை யில் இடம்பெற்றுள்ள தமிழ் உள்ளிட்ட அனைத்து மொழிகளையும் ஆட்சி மொழியாக ஆக்குமாறு மத்திய அரசை இம்மாநாடு வலியுறுத்துகிறது.
உயர்நீதிமன்றத்திலும் தமிழை வழக்காடு மொழியாகக் கொண்டு வர வேண்டும் என்றும் அனைத்து மொழிகளிலும் அகில இந்தியத் தேர்வுகளை எழுதும் உரிமை தேவை என்றும் இம்மாநாடு வலியுறுத்துகிறது.
தீர்மானம் எண் 13:
தமிழில் பெயர்களை மாற்றுக!
பி.ஜே.பி. ஆளும் உத்தரப்பிரதேசத்தில் ஏற்கெனவேயிருந்த ஊர்ப் பெயர்கள், சாலை, வீதிகளின் பெயர்களை இந்து - காவி மயமாக்கும் வேலையில் ஈடுபடுகின்ற நிலை யில் - தமிழ்நாட்டில் சமஸ்கிருத மயமாக்கப்பட்ட ஊர்களின் பெயர்களை, பழையபடி தமிழிலேயே மாற்ற ஆவன செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு அரசை இம்மாநாடு வலியுறுத் துகிறது.
குழந்தைகளுக்குக் கண்டிப்பாக முற்போக்கான தமிழ்ப் பெயர்களையே சூட்ட வேண்டும் என்று தமிழைத் தாய் மொழியாகக் கொண்ட தமிழினத்தவரை இம்மாநாடு வலி யுறுத்துகிறது.
தீர்மானம் எண் 14:
காவிரி நீரும் வஞ்சிக்கப்படும் தமிழ்நாடும் - அதற்கான தீர்வும்!
இந்திய ஒருமைப்பாடு - இந்திய தேசியம் என்று ஒரு பக்கத்தில் பேசிக்கொண்டே ஒரு மாநிலத்தின் உரிமையை இன்னொரு மாநிலம் இடைமறிப்பது - தடுப்பது என்ற போக்கு நாளும் வளர்ந்து வருகிறது.
குறிப்பாக தமிழ்நாட்டின் வேளாண் தொழிலுக்கும், குடிநீருக்கும் உயிர்நாடியாக இருந்துவரும் காவிரி நீர்ப் பிரச்சினையில் கருநாடக மாநிலத்தில் எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் தலையிட்டு, தமிழ்நாட்டை வஞ்சிக்கும் போக்கு தொடர்கதையாகவே ஆகிவிட்டது.
நடுவர் மன்றம் சொன்னாலும் சரி, உச்சநீதிமன்றம் தீர்ப்புக் கூறினாலும் சரி அவற்றைக் கடைப்பிடிக்கும் சட்ட ரீதியான மனப்போக்கு கருநாடக மாநில அரசுக்கு எப்பொழு துமே இருந்ததில்லை.
நீதிமன்றத்தின் ஒப்புதல் ஏதுமின்றி கருநாடகம் அல்லது தமிழ்நாடு புதிய அணை எதுவும் கட்டக் கூடாது என்றும், காவிரிப் பிரச்சினையில் அனைத்து முடிவுகளையும் காவிரி மேலாண்மை வாரியமே எடுக்கும், மத்திய அரசுக்கும்கூட இதில்தலையிடும் அதிகாரம் கிடையாது என்றும் உச்சநீதி மன்றம் தீர்ப்பு வழங்கியதற்கு எதிராக - மேகதாதுவில் கருநாடக அரசு அணைகட்ட திட்டமிட்டு அதற்கான வரை படம் திட்ட மதிப்பீட்டு அறிக்கைக்கு மத்திய அரசு அனுமதியளித்ததும், அது தொடர்பான வழக்கில் உச்சநீதி மன்றம், கருநாடக அரசின் நடிவடிக்கைகளுக்கு அனுகூல மான வகையில் தீர்ப்பினை வழங்கி இருப்பதும் பெரும் அதிர்ச்சியை அளிக்கிறது.
தமிழ்நாடு எல்லாத் தரப்பிலும் வஞ்சிக்கப்படும் இடத் திற்குத் தள்ளப்படுகிறது என்ற வேதனை தமிழ்நாட்டு மக்களிடையே ஒருமனதாக நிலவி வருவதை இம்மாநாடு வெளிப்படுத்துகிறது.
இதில் அரசியல் கண்ணோட்டமின்றி தமிழ்நாடே எழுந்து நின்று இதனை முறியடிக்க வேண்டும் என்று அனைத்துக் கட்சிகளையும், அமைப்புகளையும், கட்சிக்கு அப்பாற்பட்டவர்களையும் இம்மாநாடு ஒருமனதாகக் கேட்டுக்கொள்கிறது - வற்புறுத்துகிறது.
தீர்மானம் எண் 15(அ):
தமிழ்நாட்டிலும் தென்மாநிலங்களிலும் வடநாட்டார் எண்ணிக்கை அதிகரிப்பும் - விளைவுகளும்!
2011ஆம் ஆண்டு நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட ஒரு புள்ளி விவரம் அதிர்ச்சி தருவதாக உள்ளது. 2001ஆம் ஆண்டில் தென்னிந்தியாவில் வடமாநிலத்தவர்களின் எண் ணிக்கை 58.2 லட்சம், 2011ஆம் ஆண்டிலோ 77.5 லட்சமாக அதிகரித்துவிட்டது. கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் 20 லட்சம் பேர் வடமாநிலத்தவர்கள் தென்னிந்தியாவில் அதிகரித்து விட்டனர். 2001இல் வட மாநிலங்களில் இருந்த தமிழர்களின் எண்ணிக்கை 8.2 லட்சம். 2011ஆம் ஆண்டிலோ 7.2 லட்சமாகக் குறைந்துவிட்டது.
குறைந்தபட்சம் ஊதியம் பெற்று வடமாநிலத்தவர் எல்லா வகையான வேலைகளுக்கும் தயாராக இருப்பதுதான் காரணம் என்று சொல்லப்பட்டாலும், வடமாநிலங்களைச் சேர்ந்தவர்கள் வந்து குவிவதால் உள்நாட்டு மக்களின் வேலைவாய்ப்புப் பாதிக்கப்படுகிறது.
மகாராட்டிரம், அரியானா மாநிலங்களில் உள்ள எந்த விதமான பணியாக இருந்தாலும் உள்மாநிலத் தொழிலாளர் களுக்கு 80 விழுக்காடு ஒதுக்கீடு என்ற சட்டத்தைத் தமிழ்நாட்டிலும் கொண்டுவருமாறு இம்மாநாடு தமிழ்நாடு அரசைக் கேட்டுக்கொள்கிறது.
தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் கொலைகள், கொள் ளைகள், கொள்ளைகளில் பெரும்பாலும் வடநாட்டவர்கள் ஈடுபட்டு வருவதையும் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியமாகிறது. வடமாநிலத்தவர்கள் தங்களை வாக்காளர் களாகவும் பதிவு செய்து கொள்வதால் தமிழ்நாட்டின் அடிப்படைப் பண்பாடு, வாழ்வியல்முறை, அரசியல், சமூகப் பொருளாதார நிலை போன்றவைகளில் பாதிப்பை ஏற் படுத்தக்கூடிய நிலை ஏற்படுவதை முக்கியமாகக் கவனத்தில் கொண்டு, இதனை வரைமுறை செய்வதற்கான சட்டத்தைக் கொண்டுவருமாறு தமிழ்நாடு அரசை இம்மாநாடு வலியுறுத் துகிறது.
தீர்மானம் எண் 15(ஆ):
வடநாட்டவர்களின் தொழில் சாம்ராஜ்ஜியம்
தமிழ்நாட்டில் தலைநகரம், குக்கிராமப்புறங்கள் வரை வடவர்கள் தொழில் சாம்ராஜ்ஜியம் அதிகரித்து வருகிறது. மொத்த வியாபாரம் எல்லாம் வடவர்களின் ஆதிக்கத்திற்குள் சரணடைந்துவிட்டது. ஒரு காலகட்டத்தில் சவுக்கார்பேட்டை என்ற பகுதிதான் வடநாட்டுக்காரர்களின் பகுதி என்ற நிலைமை மாறி, இப்பொழுது சென்னையின் அனைத்துப் பகுதிகளிலும் நீக்கமற நிறைந்துவிட்டனர்.
வெறும் குடியிருப்பு, வியாபாரம் என்பதையும் கடந்து ஒரு பண்பாட்டுப் படையெடுப்பு, அரசியலில் பாதிப்பு என்ற நிலை உருவாகும் அபாயமும் இதனில் அடங்கியிருப்பதை இம்மாநாடுசுட்டிக்காட்டுகிறது. இந்தியத் தேசியம் என்ற போர்வையில், மாநிலங்களின் தனித்தன்மை கள், பண்பாடுகள் சீரழிவதையும் இம்மாநாடு சுட்டிக்காட்டுகிறது. இதற்கொரு முடிவு காணப்பட வேண்டியது அவசரமும் அவசியமானதும் என்று இம்மாநாடு அறிவித்துக்கொள்கிறது.
தீர்மானம் எண் 16:
மக்கள் விரோதத் திட்டங்களைக் கைவிடுக!
மக்கள் விரோதத் திட்டங்களான தூத்துக்குடி ஸ்டெர் லைட், நியூட்ரினோ, மீத்தேன் முதலிய மக்கள் வெறுப்புக்கு ஆளாகியுள்ள திட்டங்களை கைவிடுமாறு மத்திய அரசை இம்மாநாடு வலியுறுத்துகிறது. தமிழ்நாடு அரசும் மக்கள் உணர்வை மதித்து இந்த வகையில் செயல்படுமாறு இம்மாநாடு வலியுறுத்துகிறது.
இந்தி - சமஸ்கிருதத் திணிப்பை எதிர்ப்போம்! எதிர்ப்போம்!!
தீர்மானம் எண் 17:
ஒப்பந்தத் தொழிலாளர் முறையைத் தடை செய்க!
ஒப்பந்தத் தொழிலாளர் என்ற முறை தொழிலாளர்களை வஞ்சிக்கக் கூடியதாகும். 240 நாள்கள் பணியாற்றினாலே அந்தத் தோழரை நிரந்தரம் செய்ய வேண்டும் என்ற நிலையை எல்லாம் புறந்தள்ளி, 20 ஆண்டுகள் பணி யாற்றினாலும் அவர் ஒப்பந்த தொழிலாளரே என்பது மனித உரிமைக்கு எதிரான கோட்பாடாகும்.
குறிப்பாக திருவெறும்பூர் பெல் நிறுவனத்தில் 20 ஆண்டுகளுக்கும் மேல் பணியாற்றிடும் பட்டதாரிகள் உட்பட ஒப்பந்த தொழிலாளராகவே நீடிக்கச் செய்வதும் நீதிமன்றம் ஒப்பந்த தொழிலாளரை நிரந்தரப்படுத்த வேண்டும் என்று தீர்ப்பு சொன்னால், நிறுவனத்தினர் அரசு செலவில் மேல்முறையீடு செய்வதும், பெல் நிறுவனத்தின் தொழிலாளர் விரோத ஆதிக்க மனப்பான்மையைத்தான் வெளிப்படுத்துகிறது - நீதிமன்றத் தீர்ப்பை உடனே செயல் படுத்துமாறு 'பெல்' நிறுவனத்தை இம்மாநாடு வலியுறுத் துகிறது. ஒட்டுமொத்தமாக ஒப்பந்தத் தொழிலாளர் முறையை ஒழிக்க புதிய சட்டத் திருத்தம் கொண்டுவர வேண்டும் என்றும் மத்திய அரசை இம்மாநாடு வலியுறுத்துகிறது.
தீர்மானம் எண் 18:
நடைபாதைக் கோயில்களை அகற்றுக!
உச்சநீதிமன்றம் - உயர்நீதிமன்றங்கள் நடைபாதைக் கோயில்களை அகற்ற வேண்டும் என்றும் திட்டவட்டமாகவே தீர்ப்பு வழங்கியுள்ளன. அவ்வாறு செய்யாத நிலையில் அரசின் தலைமைச் செயலாளரே நேரில் வரவேண்டும் என்று உச்சநீதிமன்றம் ஆணை பிறப்பித்த பிறகும், அவற்றைப் பொருட்படுத்தாத நிலையில் அரசுகள் செயல்படுவது கண்டிக்கத்தக்கது.
இந்த நிலையில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கினை நீதிமன்றங்களே நேரிடையாக (ஷிஷீனீஷீ) எடுத்துக்கொள்ள வேண்டும் என்று இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது. மதச்சார்பற்ற நாட்டில் அரசு அலுவலகங்களில் எந்த மத வழிபாட்டுச் சின்னங்களும், வழிபாடுகளும் கண்டிப்பாக இருக்கக் கூடாது - இதில் மாநில, மத்திய அரசுகள் கண்டிப் பான தன்மையுடன் செயல்பட வேண்டும் என்று இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.
தீர்மானம் எண் 19:
தேவை முழு மதுவிலக்கு!
மது - குடும்பங்களையும், சமுதாயத்தையும் சீரழிக்கும் கொடும் கரங்கொண்டதாக இருப்பதால் முழு மதுவிலக்கை செயல்படுத்துமாறு மத்திய, மாநில அரசுகளை இம்மாநாடு வலியுறுத்துகிறது.
தீர்மானம் எண் 20:
கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வருக!
கல்வியும் சுகாதாரமும், அரசமைப்புச் சட்டத்தின் மாநிலப் பட்டியலில் வைக்கப்பட்டதற்கு ஒரு நோக்கம் இருந்தது. அதனால்தான் ஒவ்வொரு மாநிலமும் பள்ளி கல்வி மற்றும் தகுதி வாய்ந்த பாடத்திட்டத்திற்கென கல்வித் திட்டத்தை தனித்தனியே வைத்துள்ளது. அந்தந்த மாநிலங் களின் மொழியியல், சமூக-கலாச்சார மற்றும் தன்னாட்சிப் பின்னணியில் இருந்து கல்வியை பிரித்துவிட முடியாது. உண்மையில், நாட்டில் கல்வியைக் கற்பிப்பதற்காக 1960 களில் கோத்தாரி கமிஷன் அமைக்கப்பட்டது, நாடு தழுவிய தர நிர்ணயத்திற்கு பரிந்துரைக்கப்பட்ட போதிலும், மாநிலத்துடன் தொடர்ந்து கல்வி இடம் பெற வேண்டும் என்று பரிந்துரைத்தது. ஆனால் அவசரநிலையின்போது, கல்வி ஒத்திசைவுப்பட்டியலுக்கு (சிஷீஸீநீக்ஷீக்ஷீமீஸீ லிவீ) மாற்றப் பட்டுவிட்டது.
ஒத்திசைவுப்பட்டியலிலும், மாநிலப் பட்டியலிலும் ஒரு பொருள் இருக்குமானால், மத்திய அரசின் அதிகாரமே மேலோங்கும். நீட் தேர்வு இதற்கு முக்கிய எடுத்துக்காட்டு.
இந்த முழுமையான அநீதியைத் தடுக்க ஒரே வழி மாநிலப் பட்டியலில் மீண்டும் கல்வியைக் கொண்டு வருவதுதான்; அதற்குரிய சட்டத்திருத்தத்தை கொண்டு வருமாறு மத்திய அரசை இம்மாநாடு வலியுறுத்துகிறது.
தீர்மானம் எண் 21:
அன்னை மணியம்மையார் நூற்றாண்டு விழாவை சிறப்பாக கொண்டாடுவோம்!
தந்தை பெரியார் அவர்களுக்கும், அவர்தம் கொள்கை களுக்கும் அரணாக இருந்தும், தந்தை பெரியார் அவர்களின் மறைவிற்குப் பிறகு இயக்கத்தையும், கொள்கைகளையும், நிறுவனங்களையும் பாதுகாத்த - நாத்திக இயக்கத்திற்குத் தலைமை தாங்கிய உலகின் ஒரே பெண்மணியான ஈகத்தின் சின்னமான அன்னை மணியம்மையார் அவர்களின் நூற்றாண்டு விழாவை அவர்தம் பிறந்த நாளான மார்ச் 10 ஆம் நாள் வேலூரில் தொடங்கி (2019) 2020 மார்ச் வரை பல மாவட்டங்களிலும் தொடர்ந்து சிறப்புடன் நடத்துவது என்று தீர்மானிக்கப்படுகிறது.
தீர்மானம் எண் 22:
இந்து அறநிலையத் துறைதான் பாதுகாப்பானது
கோவில்கள் பெருச்சாளிகளின் கூடாரமாக இருப்பதை ஆதாரப்பூர்வமாக அறிந்து சொத்துக்களை உரிய முறையில் காப்பாற்றவேண்டும் என்ற நல்ல நோக்கத்தில் நீதிக்கட்சி ஆட்சிக் காலத்தில் இந்து அறநிலையத் துறை உருவாக் கப்பட்டது (1926). ஓய்வு பெற்ற நீதிபதி பி.வெங்கட்ரமண ராவ் நாயுடு தலைமையில் ஆறு உறுப்பினர்கள் கொண்ட குழுவின் அறிக்கையின் அடிப்படையில் இந்து அறநிலையச் சட்டம் மேலும் செழுமைப்படுத்தப்பட்டது (1959). சர்.சி.பி. ராமசாமி அய்யர் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவின் அறிக்கையும் இதனை நியாயப்படுத்தியுள்ளது (1960-1962).
இந்தச் சூழ்நிலையில் இந்து அறநிலையத் துறையைக் கலைத்துவிட்டு, ஆதிக்கக்காரர்களின் கைகளில் கோவில் களின் நிர்வாகத்தைக் கொண்டு போவதற்கான கருத்து உருவாக்கங்களை, ஊடகங்களின் துணையோடு உரு வாக்கும் மோசடிக்கு எந்த வகையிலும் துணை போகக் கூடாது என்று தமிழ்நாடு அரசை இம்மாநாடு வலியுறுத் துகிறது.
தீர்மானம் எண் 23:
சமுதாய உரிமை ஆர்வலர் மற்றும் தலித் அறிஞர் ஆனந்த் டெல்முட்கேவை விடுதலை செய்க!
2019 பிப்ரவரி 2 ஆம் தேதி, சமுதாய உரிமை ஆர்வலர் மற்றும் தலித் அறிஞர் ஆனந்த் டெல்முட்கே கைது செய்யப்பட்டார்.சென்றஆண்டு (2018) ஜனவரி மாதம் மகாராட்டிர மாநிலத்தில் பீம் கோரேகான் 200 ஆவது ஆண்டு நினைவு கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட கலவரத்தை காரணம் காட்டி கைது செய்யப்பட்டுள்ளார்.
தற்போதைய மத்திய அரசு ஆட்சிக்கு வந்த பின்னர், எதிர்ப்புக் குரல்களை ஒடுக்குவதற்கு கடுமையான நடவடிக் கைகளை எடுத்து வருகிறது.
பேராசிரியர் ஆனந்த் தெல்டம்பேவை கைது செய்தது கருத்தை வெளிப்படுத்தும் அடிப்படை உரிமைக்கு எதிரானது என்றும் அவரை விடுதலை செய்யுமாறும்600 சர்வதேச பேராசிரியர்கள் அரசாங்கத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர். அதனை ஏற்று மத்திய அரசு பேராசிரியர் ஆனந்த் தெல்டம்பேவை விடுதலை செய்திட இந்த மாநாடு மத்திய அரசை வற்புறுத்துகிறது.
தீர்மானம் எண் 24:
கஜா புயல் பாதிப்பு: மத்திய அரசின் பாராமுகம் கண்டனத்துக்குரியது
கஜா புயலால் பெரும்பாதிப்புக்கு ஆளாகி உயிர் இழந்தவர்களுக்கு இம்மாநாடு இரங்கலைத் தெரிவிப் பதுடன், பாதிப்புக்கு ஆளான மக்களுக்கு நிதி உதவி ஏதும் அளிக்காத மத்திய அரசினை இம்மாநாடு கண்டிக் கிறது.
மத்திய அரசை வலியுறுத்தித் தேவையான நிதி உதவியைப் பெறத் தவறிய தமிழ்நாடு அரசுக்கும் இம்மாநாடு தனது கண்டனத்தைத் தெரிவித்துக் கொள் கிறது.
இனிமேலும், காலதாமதம் செய்யாமல் தமிழ்நாடு அரசு கோரியநிதியை உடனடியாக அளிக்குமாறு மத்திய பிஜேபி அரசை இம்மாநாடு வலியுறுத்துகிறது.
தீர்மானம் எண் 25:
நிறைவு சூளுரைத் தீர்மானம்
தந்தை பெரியார் காண விரும்பிய சமுதாயத்தைப் படைக்கும் வகையில் வருணம் - வர்க்கம் பேதமற்ற - மூடநம்பிக்கை ஒழிந்த - பாலியல் சமத்துவம் கொண்ட - பகுத்தறிவு, சமத்துவ, சமதர்ம - சுயமரியாதை ஒப்புரவு சமுதாயத்தைப் படைக்க பிரச்சாரம், போராட்டம் என்ற அணுகுமுறைகளோடு தமிழர் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்கள் தலைமையில் ஓய்வு - ஒழிச்சல் சலிப்பின்றி கொள்கையில் எள்ளளவு சமரசத்துக்கும் இடமின்றி - எந்தவித சபலங்களுக்கும் ஆளாகாமல் உழைப்பது - வெற்றி காண்பது என்றும், அதற்கான திட்டங்களை வகுத்து கடைகோடி மனிதனுக்கும் அவற்றைக் கொண்டு செல்லுவது என்றும், குறிப்பாக இருபால் இளைஞர்களிடத்திலும் கொண்டு சேர்ப்பது என்றும், உயர் எண்ணங்கள் மலரும் சோலையாம் தந்தை பெரியார் அவர்களின் உயர் தத்துவங்களை - உலகெலாம் கொண்டு செல்வதென்றும் - இனிவருவது பெரியார் உலகமே என்பதை நிருபிக்கும் வகையில் திட்டமிட்ட வகையில் விஞ்ஞான மனப்பான்மையுடன் பணிகளை மேற்கொள்ளுவது என்றும் இம்மாபெரும், திராவிடர் கழக மாநில மாநாட்டில் திராவிடர் கழகத்துக்காரர்களாகிய நாங்கள் உறுதி எடுக்கிறோம் - சூளுரை மேற்கொள்வோம்! வாழ்க பெரியார்! வளர்க பகுத்தறிவு!
மேற்கண்ட தீர்மானங்களை கை.முகிலன், ப.தேசிங்கு, சு.முருகேசன், வ.ஸ்டாலின், குடந்தை குருசாமி, வீ.வீரமணி, இரா.செந்தூர்பாண்டியன், ஈரோடு தே.காமராஜ், ஆத்தூர் அ.சுரேஷ், மயிலாடுதுறை கி.தளபதிராஜ், பொன்னமராவதி வெ.ஆசைத்தம்பி, சின்னவாடி பா.வெற்றிச்செல்வன், வழக்குரைஞர் மு.ராஜா, புதுக்கோட்டை இரா.குமார், சென்னை நா.பார்த்திபன், மதுரை எ.பிரபாகரன், பெரியார் நேசன், இராம.அன்பழகன், திருச்சி ஞா.ஆரோக்கியராஜ், திருத்துறைப்பூண்டிமுருகையன்,கள்ளக்குறிச்சி வழக்குரைஞர் கோ.சா.பாசுகர், சுப்பிரமணியம், பெ.வீரையன், இல.திருப்பதி, புதுவை ராசா ஆகியோர் தீர்மானங்களை முன்மொழிந்து உரையாற்றினார்கள்.
இறுதியில் வரலாற்று சிறப்பு வாய்ந்த பிரகடனமாக திராவிட கொள்கை விளக்க அறிக்கைப் பிரகடனத்தை திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் வெளியிட்டார்.
- விடுதலை நாளேடு, 23.2.19
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக