செவ்வாய், 10 ஏப்ரல், 2018

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி முழு வேலை நிறுத்தத்தால் தலைநகரம் வெறிச்சோடியது!


காவிரி உரிமை : தமிழ்நாடே நிலை குலைந்தது

சென்னை மறியல் போராட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர்,  தளபதி மு.க. ஸ்டாலின், அனைத்துக் கட்சித் தலைவர்கள் எழும்பூர் ரயில் மறியலில் கருஞ்சட்டைத் தோழர்கள் கைது

சென்னை, ஏப்.5 காவிரி நதிநீர் உரிமையில் தமிழகம் முழுவதும் மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து போராட்டங்கள் நடைபெற்றன. அனைத்துக்கட்சியினர், பொதுமக்கள் போராட் டங்களில் கலந்து கொண்டார்கள்.

ஆறு வார கால அவகாசத்திற்குள்ளாக ஸ்கீம் என்று சொல்லி காவிரி நதிநீர் மேலாண்மை வாரியம், ஒழுங்காற்றுக் குழு அமைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. ஆறு வார கால அவகாசம்  முடிவடைகின்ற கடந்த மார்ச் மாதம் 29ஆம் தேதி அன்று மத்திய அரசு  உச்சநீதிமன்றத்தில்  ஸ்கீம் என்ற சொல்லுக்கு விளக்கம் கேட்டு மனுதாக்கல் செய்தது.

உச்சநீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்தாத மத்திய அரசுக்கு எதிராக தமிழக அரசு நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தொடர்ந்தது.

கடந்த 1.4.2018 அன்று திமுக தலைமையில் கூடிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் ஒரு நாள் (5.4.2018) முழு அடைப்புப் போராட்டம், சாலைமறியல், ரயில் மறியல் போராட்டம் நடத் துவது என்று தீர்மானிக்கப்பட்டது.  அனைத்துக் கட்சிக் கூட்டத் தைத் தொடர்ந்து, அதிரடியாக சென்னை - வள்ளுவர் கோட்டம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இது ஒரு தொடர் போராட்டமாக நடைபெறும் என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி, தமிழகமெங்கும் அனைத்துக் கட்சியினர் பங்கேற்று  போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

காவிரி நதிநீர் மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்தும், மத்திய அரசுக்கு துணைபோகின்ற மாநில அரசைக் கண்டித்தும் திமுக செயல் தலைவர், சட்டப் பேரவை எதிர்க்கட்சித் தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் தலைமையில்   அனைத்துக்கட்சிக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, இன்று 5.4.2018 ஒரு நாள் சாலை மறியல் போராட்டம், ரயில் மறியல் போராட்டம், முழு கடையடைப்பு, வேலை நிறுத்தப் போராட்டங்கள் பொதுமக்களின் பேராதரவுடன் தமிழகம் முழுவதும் எழுச்சியுடன் நடைபெற்றன. அனைத்துக் கட்சியினர் பங்கேற்ற மறியல் போராட்டம் சென்னை -- அண்ணாசாலையில்   இன்று (5.4.2018) காலை நடைபெற்றது.

சென்னை - அண்ணாசாலையில் மறியல்

மறியல் போராட்டத்தில் திமுக செயல் தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின்,  திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர்  கி.வீரமணி, தமிழ்நாடு காங்கிரசு கட்சித் தலைவர் சு.திருநாவுக்கரசர், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன், மனித நேய மக்கள் கட்சித் தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா, மதிமுக துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்தியா, காங்கிரசு கட்சித் தலை வர்கள் பீட்டர்அல்போன்ஸ், தங்கபாலு, திமுக மாவட்ட செய லாளர் சட்டப் பேரவை உறுப்பினர்கள் மா. சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, ஜெ.அன்பழகன் மற்றும் மாதவரம் சுதர்சனம், கட்டட தொழிலாளர் சங்கம் பொன். குமார், கவிஞர் சல்மா உள்பட பலர் பெருந்திரளாக கலந்து கொண்டனர். சென்னை -- அண்ணாசாலையில் அண்ணா சிலை அருகில் சாலையில் அமர்ந்தபடி  தலைவர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சாலைமறியல் போராட்டத்தில் அனைத்துக் கட்சியினரும் பொது மக்களும் பெருந்திரளாகப்  பங்கேற்றனர். திமுக, தி.க. மதிமுக, காங்கிரஸ் கட்சி, விடுதலை சிறுத் தைகள் கட்சி, மனித நேய மக்கள் கட்சி,   மக்கள் அதிகாரம் அமைப்பினர் உள்ளிட்ட அனைத்துக் கட்சியினரும் போராட்டத் தில் அணிஅணியாக திரண்டு ஊர்வலத்தில் பங்கேற்று, மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்தும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும் முழக்கங்களை முழங்கினார்கள்.

அதனைத் தொடர்ந்து வாலாஜா சாலை வழியே சென்னை மெரினா கடற்கரை நோக்கி ஊர்வலமாக சென்று காமராசர் சாலையை அடைந்தார்கள். சாலையில் அனைவரும் அமர்ந்தபடி சாலைமறியல் பேராட்டத்தை தொடர்ந்து நடத்தினார்கள். காவல் துறையினர் தடுத்து நிறுத்தி அனைவரையும் கைது செய்தார்கள்.

எழும்பூர் ரயில் மறியல்

சென்னை மண்டல கழக செயலாளர் வி.பன்னீர்செல்வம் தலைமையில் எழும்பூர் ரயில் மறியல் போராட்டத்தில் கழகத் தோழர்கள் ஏராளமானவர்கள் கலந்துகொண்டனர்.

கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் ரயில் மறியல் போராட்டத்தைத் தொடங்கி வைத்தார். கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ்  வடசென்னை மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் சு.குமாரதேவன் உள்ளிட்ட கழகப் பொறுப் பாளர்கள்,   சென்னை மண்டல செயலாளர் வி.பன்னீர்செல்வம் தலைமையில் தென்சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன், செயலாளர் செ.ர.பார்த்தசாரதி, தாம்பரம் மாவட்டச் செயலாளர் கோ.நாத்திகன், ஆவடி மாவட்டத் தலைவர் பா.தென்னரசு மற்றும் கழகப்பொறுப்பாளர்கள், இளைஞரணி, மாணவரணி,   மகளிரணியினர் ஏராளமானவர்கள் பெரியார் திடலிலிருந்து ஊர்வலமாகப் புறப்பட்டு முழக்கங்களுடன் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திற்குள் சென்று சென்னை தாம்பரம் - கடற்கரை வழித்தடத்தில் செல்லும் ரயிலை மறித்து, மத்திய அரசையும், மாநில அரசையும் கண்டித்து முழக்கமிட்டபடி ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் பங்கேற்ற தோழர்கள் கைது செய்யப்பட்டனர்.


 - விடுதலை நாளேடு, 5.4.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக