புதன், 6 நவம்பர், 2024

பார்ப்பனர்கள் ஆர்ப்பாட்டம் ஜாதி ஆதிக்கத்துக்கானது திராவிடர் கழக ஆர்ப்பாட்டம் மக்கள் சமத்துவத்துக்கானது

விடுதலை நாளேடு

Published November 5, 2024

செய்தியாளர்களிடம் கழகத் துணைத் தலைவர்

திராவிட இயக்கத்தையும் அதன் தலைவர்களையும் இழிவுபடுத்தும் வகையிலும் வன்முறையைத் தூண்டும் வகையிலும் பார்ப்பனர்களும் அவர்களின் அம்புகளான விபீடணர்களும் சென்னை ராஜரத்தினம் விளையாட்டு அரங்கு அருகில் கடந்த 3.11.2024 அன்று காலையில் நடத்திய ஆர்ப்பாட்டத்திற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அன்று மாலை அதே இடத்தில் திராவிடர் கழகம் நடத்திய ஆர்ப்பாட்டத்தின்போது கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார் – பேட்டி வருமாறு:
இன்று காலையிலே இதே இடத்திலே ஓர் ஆர்ப்பாட்டம் நடைபெற்றிருக்கிறது. அது பார்ப்பனர்களால் தூண்டப்பட்டு பார்ப்பனர்களுடைய ஆயுதமாக, ஏவலாளியாக உள்ள ஒருவருடைய தலைமையிலே அந்த ஆர்ப்பாட்டம் கூட்டப்பட்டிருக் கிறது. அது கூட்டப்பட்ட கூட்டம். இங்கு வந்துள்ள கூட்டம் தாங்களாகவே வந்த தன்மான இயக்கக் கூட்டம்.

அவர்கள் நடத்திய அந்த ஆர்ப்பாட்டம், அதன் நோக்கம் என்னவென்றால், இந்த 2024ஆம் ஆண்டிலும், நாங்கள் பிராமணர்கள், எங்களை பிராமணர்கள் என்றுதான் சொல்ல வேண்டும். பார்ப்பனர் என்று சொல்லக்கூடாது. அவர்கள் ஆதிக்கத்தை எதிர்க்கக்கூடாது. ஜாதி இருக்க வேண்டும். ஜாதியைக் காப்பாற்ற வேண்டும் என்பது அவர்களுடைய ஆதிக்கக் குரலாக இருந்தது.
இன்னும் மேலாக, தாழ்த்தப்பட்டவர்களை, தீண்டத்தகாதவர்கள் என்று ஒதுக்கினால், இழிவுபடுத்தினால் அவர்கள்மீது பிசிஆர் சட்டம் பாய்வது போல, பிராமணர்களை எதிர்த்துப் பேசினால், அவர்களுடைய ஜாதி ஆணவத்தை எதிர்த்துப் பேசினால், பிராமணர் என்று சொல்லாமல் பார்ப்பனர் என்று சொன்னால் அவர்கள்மீது புதிய சட்டம் ஒன்று கொண்டுவந்து தண்டிக்க வேண்டும் என்று அவர்கள் கருத்து சொல்லியிருக்கிறார்கள்.
என்ன வேடிக்கை என்றால், பிராமணர் என்று சொல்லுகிறபோது ஹிந்து மத, வர்ணாஸ்ரமத்தின் அடிப்படையிலே பிராமண, சத்திரிய, வைஸ்ய, சூத்திரர் என்று 4 வகைப்படும்.

ஆகவே பிராமணர் என்றால், பார்ப்பனர் அல்லாத நாம் அனைவரும் சூத்திரர் என்று பொருள்.
நாங்கள் சொல்லவில்லை. ஹிந்து மத்தினுடைய முக்கிய ஸ்மிருதியாகிய மனுதர்மத்திலே 8ஆவது அத்தியாயத்தில் 415ஆவது சுலோகத்தில் சொல்கிறது.
சூத்திரர் என்றால் கீழ்ஜாதி மக்கள், விபச்சாரி மக்கள், காலங்காலமாக அடிமைத் தொழில் செய்ய வேண்டியவர்கள் என்று ஏழு காரணங்களை சொல்லி இவர்கள் சூத்திரர்கள் என்று சொல்கிறார்கள்.
இன்றைக்கு மீண்டும் அவர்கள் தங்களை பிராமணர்கள் என்று நிலை நிறுத்தப் போராடுகிறார்கள் என்றால், நாம் நம்மை சூத்திரர் என்று ஒப்புக்கொள்ள வேண்டும்.
இதை எதிர்ப்பதற்காக, இந்த இழிவைத் துடைப்பதற்காகத்தான் சுயமரியாதை இயக்கம், இந்த நாட்டிலே தோற்றுவிக்கப்பட்டது. 100 ஆண்டுகள் ஆகிவிட்டது.
அதுவும் இந்த நவம்பர் 3 ஆம் தேதி ஒரு தனிச்சிறப்பு.
இந்தத் தேதியில்தான், தந்தை பெரியார் 1957ஆம் ஆண்டு நவம் 3ஆம் தேதி தஞ்சாவூரிலே ஜாதி ஒழிப்பு மாநாடு நடத்தினார்.
அந்த மாநாட்டிலே தந்தை பெரியாருக்கு எடைக்கு எடை வெள்ளி நாணயம் கொடுக்கப் பட்டது.
அந்த மாநாட்டிலே தந்தை பெரியார் ஒரு கேள்வியை எழுப்பினார்.
இந்தியா சுதந்திரம் அடைந்துவிட்டதாக சொல்கிறாரகள். நான் கேட்கிறேன், சுதந்திர நாட்டிலே ஜாதி இருக்கலாமா? ஜாதி இருக்கும் நாட்டில் உண்மையான சுதந்திரம் இருக்குமா? என்று கேட்டார்.
அந்தக் கேள்விக்குப் பதில் இன்று வரை இல்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக