ஞாயிறு, 24 நவம்பர், 2024

அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை வழங்கக் கோரியும், மக்களுக்கு விளக்கவும் கன்னியாகுமரி முதல் சென்னை வரையிலான விழிப்புணர்வுப் பிரச்சார விரைவுப் பயணம்

அய்யாவின் அடிச்சுவட்டில்… இயக்க வரலாறான தன் வரலாறு (338)

2024 அய்யாவின் அடிச்சுவட்டில் மே 1-15, 2024

– கி.வீரமணி 

அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை வழங்கக் கோரியும் அதன் மூலம் ஜாதி தீண்டாமை ஒழிப்பை வலியுறுத்தவும், கொலை, பாலியல், பொருளாதார குற்றங்களுக்கு ஆளாகியுள்ள சங்கராச்சாரியார்கள் குற்றவாளிகள் தான் என்பதை மக்களுக்கு விளக்கவும் கன்னியாகுமரி முதல் சென்னை வரையிலான விழிப்புணர்வுப் பிரச்சார விரைவுப் பயணம் மேற்கொண்டோம். தொடக்க விழாவுக்கு 6.2.2005 அன்று நாகர்கோவில் சென்ற நாம், 3.10.2004 அன்று மறைவுற்ற பழம்பெரும் சுயமரியாதை வீரரும் திராவிடர் கழக குமரி மாவட்ட மேனாள் பொருளாளருமான கோட்டாறு (நாகர்கோவில்) பி. பகவதி பெருமாள் அவர்களது இல்லத்திற்குச் சென்று அவரது படத்தைத் திறந்து வைத்து மரியாதைச் செலுத்தியதோடு, அவருடைய குடும்பத்திற்கு ஆறுதல் கூறினோம்.

தமது மறைவுக்குப்பின் எவ்வித சடங்குகளும் இல்லாமல் எரியூட்டவும், கண்களைக் கொடையாகவும், உடலில் கருப்புச் சட்டையுடன் இருக்கவேண்டும்
என்றும், ‘விடுதலை’ நாளேட்டிற்கு சந்தா ரூ.1000/-, நகர தி.கவுக்கு நன்கொடையாக ரூ.5000/- வழங்க வேண்டும் என்றும் அவர் தனது மறைவுக்கு முன் எழுதிய மரண சாசன உயிலை அவரது மகன் ப.எழிலன் எம்மிடம் காண்பித்து நன்கொடை வழங்கினார்.

அன்று மாலை 5 மணியளவில் நாகர்கோவில் பொன்னப்பா திடலில் நடந்த பொதுக்கூட்டத்தில் நாம் உரையாற்றுகையில், தந்தை பெரியார் அவர்கள் இறுதியாக அறிவித்த அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை வழங்கப்பட வேண்டும் என்பதை இன்னும் செயல்படுத்தாமல் இருப்பதை மக்களுக்கு விளக்கியும் அதே சட்டம் கேரள மாநிலத்தில் நடைமுறைக்கு வந்துள்ளது போல் தமிழ்நாடு அரசும் சட்டம் மூலம் நிறைவேற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தியும் பேசினோம். தொடர்ந்து திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய இடங்களில் பிரச்சாரம் செய்துவிட்டு புறப்பட்டோம்.

விழிப்புணர்வுப் பிரச்சாரப் பயணத்தின் இரண்டாம் நாளான 7.2.2005 அன்று அருப்புக்கோட்டை, விருதுநகர், மதுரையில் நாம் பிரச்சாரப் பயணம்
மேற்கொண்டோம். அங்கு நடைபெற்ற பொதுக்கூட்டங்களில் கலந்துகொண்டு உரையாற்றினோம். ஜாதியை ஒழிக்க தந்தை பெரியார் பல போராட்டங்கள் மூலமாகப் பாடுபட்டதையும், சேது சமுத்திரத் திட்டத்தின் நன்மை குறித்தும் நாம் மக்களுக்கு விளக்கிக் கூறினோம். பொதுமக்கள், வணிகர்கள் பெருமளவில் திரண்டிருந்தனர்.

மூன்றாம் நாள் 8.2.2005 அன்று திண்டுக்கல், திருச்சி, தஞ்சாவூர் பகுதிகளில் பிரச்சாரப் பயணம் மேற்கொண்டோம். அன்று காலை 11:45 மணிக்கு திண்டுக்கல் வந்தடைந்த நாம் திண்டுக்கல் மாவட்டத் தலைவர் இரா. வீரபாண்டியன் அவர்களின் தந்தையார் இராமசாமி அவர்களின் அண்ணன் திரு.வே.மு.கிருஷ்ணன் 13.1.2005ஆம் தேதி மறைவுற்ற செய்தி அறிந்து, நாகல் நகரில் உள்ள அவரது இல்லம் சென்று மறைந்த வே.மு. கிருஷ்ணன் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்து அவரது குடும்பத்தினர்க்கு ஆறுதல் கூறினோம்.

பின்னர் இரவு 7:50க்கு திருச்சி வந்த நாம் கழக இளைஞரணித் தோழர் திருச்சி திருவெறும்யூர் கே.வீ. பச்சையப்பன்- திருவரங்கம் ஆகியோரின் மகன் ப. சுரேசுக்கும் திருவெறும்யூர் மேற்கு கணபதி நகர் சி. பிச்சைய்யா- அம்சவள்ளி ஆகியோரின் மகள் பி. சாந்திக்கும் பிரச்சார மேடையில் வாழ்க்கை இணை ஏற்பு நிகழ்வை நடத்தி வைத்தோம்.

அடுத்து, இரவில் திருச்சி (ஜங்சன்) ரயில்வே சந்திப்பு அருகில் நடந்த பொதுக்கூட்டத்தில் உரையாற்றி
னோம். பொதுமக்கள் ஆயிரக்கணக்கில் திரண்டு வந்து உரையைக் கேட்டுத் தெளிவு பெற்றனர்.

எழுச்சியூட்டும் விழிப்புணர்வுப் பயணத்தின் இடைவிடா நிகழ்ச்சிகளுக்கு இடையே தஞ்சை ‘விடுதலை’ வாசகர் வட்டத் தலைவர் இரா.பன்னீர்செல்வத்தின் குடும்பத்தினர் விருப்பத்தை ஏற்று, புதிதாகக் கட்டப்பட்டுள்ள அவர்களது இல்லத்தினை எமகண்ட நேரத்தில் திறந்து வைத்து அந்தக் குடும்பத்தினரை மகிழ்வித்தோம்.

நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பொதுநலத் தொண்டர்களுக்குச் சால்வை அணிவித்து, வீட்டைக் கட்டிய தொழிலாளர் தோழர்களுக்கும் ஆடைகள் அளித்து, ‘விடுதலை’ வளர்ச்சி நிதிக்காக ரூபாய் ஆயிரத்தை நம்மிடமும், ‘தீக்கதிர்’ வளர்ச்சி நிதிக்காக ரூபாய் ஆயிரத்தை தோழர் ஆர்.சி. பழநிவேலிடமும் அளித்தனர்.
விழிப்புணர்வுப் பிரச்சாரப் பயணத்தின் நான்காம் நாளான 9.2.2005 அன்று குடந்தை, மயிலாடுதுறை, சிதம்பரம் நகரங்களில் விழிப்புணர்வுப்
பிரச்சாரம் செய்து அங்கு நடைபெற்ற பொதுக் கூட்டங்களில் உரையாற்றினோம்.

குடந்தை ஒன்றிய மே்னாள் தலைவரும் நகர கழகத் தலைவர் கு.கவுதமன் தந்தையார் எஸ்.வி. குமாரசாமி (வயது 77) அவர்கள் 8.2.2005 ஆம் தேதி மறைவுற்ற செய்தியறிந்து வருந்தினோம். குடந்தையில் பிரச்சாரப் பயணம் சென்ற நாம், 9.2.2005 மாலை 5.45க்கு சோழபுரம் சென்று எஸ்.வி. குமாரசாமி அவர்களது உடல்மீது மலர்மாலை வைத்து இறுதி மரியாதை செலுத்தினோம். அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினோம்.

அய்ந்தாம் நாள் 10.2.2005 அன்று கடலூர், புதுச்சேரி, திண்டிவனம் நகரங்களில் விழிப்புணர்வுப் பிரச்சாரம் செய்தோம். திண்டிவனம் காந்தியார் திடலில் நடந்த பொதுக்கூட்டத்தில் விழுப்புரம் மாவட்டக் கழகம் சார்பில் பிறந்த நாள் பரிசாக 50 ‘விடுதலை’ சந்தா மற்றும் ‘உண்மை’, ’பெரியார் பிஞ்சு’, தி மாடர்ன் ரேசனலிஸ்ட்’ இதழ்களுக்கு சந்தாவாக ரூ.25,510/- எம்மிடம் வழங்கப்பட்டது.

ஆறாம் நாளான 11.2.2005 அன்று செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய ஊர்களில் விழிப்புணர்வுப் பிரச்சாரம் மேற்கொண்டோம். செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம் காமராசர் சிலை அருகில் அன்று மாலை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரச்சார நோக்கம் குறித்த கருத்துகளை ஆதாரங்களோடு விளக்கி உரையாற்றினோம். ஏராளமான மக்கள், நடுநிலையாளர்கள் திரண்டு வந்து தெளிவு பெற்றனர்.

பின்னர், இரவு 8:50க்கு காஞ்சிபுரம் வணிகர் வீதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினோம்.

ஏழாம் நாளான 12.2.2005 அன்று அரக்கோணம், திருத்தணி, திருவள்ளூரில் விழிப்புணர்வுப் பிரச்சாரம் மேற்கொண்டோம். அன்று இரவு 7 மணிக்கு அரக்கோணம் எஸ்.ஆர்.கேட் அருகில் அமைக்கப்பட்ட அலங்கார மேடையில் பிரச்சாரப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. பொதுக்குழு உறுப்பினர் சொ.ஜீவன்தாஸ் தலைமை தாங்கினார். எமது உரையில், இந்துத்துவா குறித்தும் குஜராத் கலவரத்தில் பல அப்பாவி உயிர்கள் பலியானது குறித்தும் ஆதாரத்துடன் விளக்கிக் கூறினோம். அதன்பின் இரவு 8 மணிக்கு திருத்தணியிலும் இரவு 10:10 மணிக்கு திருவள்ளூர் நகரிலும் நடந்த கூட்டத்தில் சிறப்புரையாற்றினோம்.

பிரச்சாரப் பயணத்தின் நிறைவு நாளான 13.2.2005 அன்று ஞாயிற்றுக்கிழமை திருப்பெரும்புதூர், தாம்பரம் மற்றும் சென்னையில் விழிப்புணர்வுப் பிரச்சாரம் மேற்கொண்டோம். அன்று இரவு 9:15 மணியளவில் சென்னை திருவல்லிக்கேணியில் பிரச்சார நிறைவு விழாப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் நாம் உரையாற்றுகையில், “ஜாதி ஒழிக்கப்பட- தீண்டாமை ஒழிக்கப்பட அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராவது தான் ஒரே வழி; தமிழ்நாடு அரசு இதை உடனே செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்தினோம்.

அன்றைய திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் சு.அறிவுக்கரசு, தஞ்சை இரா.பெரியார்செல்வம், சீனி. விடுதலை அரசு,
இராம.அன்பழகன் ஆகியோர் பயணத்தில் உரையாற்றினர்.சுற்றுப்பயண ஏற்பாடுகளை திராவிடர் கழக துணைப் பொதுச் செயலாளர் ஒரத்தநாடு இரா.குணசேகரன் மேற்கொண்டார்.

இறுதியாக, பிரச்சாரப் பயணத்தில் பங்கேற்ற கழக நிருவாகிகள், பேச்சாளர்கள், பயணக்குழுவினர், தொண்டர்களுக்குப் பாராட்டும், நன்றியும் தெரிவிக்கும் விழா இரவு 11:30க்கு கழகத் தோழர் அன்சாரி- அசீனா இணையரின் இல்லத்தில் எமது தலைமையில் நடந்தது. தேனீக்களை மிஞ்சும் கழகத் தோழர்களின் சுறுசுறுப்பைப் பாராட்டி நாம் அவர்களுக்குச் சால்வை அணிவித்து சிறப்பு செய்தோம்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக