ஞாயிறு, 24 நவம்பர், 2024

மாநில அளவிலான ‘சடுகுடு’ விளையாட்டுப் போட்டி சென்னை எழும்பூர் மேயர் ராதாகிருஷ்ணன் விளையாட்டுத் திடலில் 26.1.2006 முதல் 29.1.2006 வரை

 

பெரியார் வீர விளையாட்டுக் கழகத்தின் சார்பில் மாநில அளவிலான ‘சடுகுடு’ விளையாட்டுப் போட்டி சென்னை எழும்பூர் மேயர் ராதாகிருஷ்ணன் விளையாட்டுத் திடலில் 26.1.2006 முதல் 29.1.2006 வரை நான்கு நாட்கள் வெகு சிறப்பாக நடைபெற்றது.

‘சடுகுடு’ போட்டியைத் தொடங்கி வைத்த சிவந்தி ஆதித்தன்
அவர்களுடன் வீரர்களின் அணிவகுப்பை ஆசிரியர் பார்வையிடுகிறார்.

26.1.2006 அன்று முதல் நாள் போட்டியை ‘தினத்தந்தி’ அதிபரும் தமிழ்நாடு ஒலிம்பிக் சங்கத் தலைவருமான சிவந்தி ஆதித்தன் அவர்கள் தொடங்கி வைத்துச் சிறப்புரையாற்றினார். எமது தொடக்கவுரையில், இந்தச் ‘சடுகுடு’ விளையாட்டு இந்தியா முழுவதும் தெரிந்த ஒன்றாக இருந்தாலும் இந்த ஆட்டம் ஏதோ ஒரு நலிந்த ஆட்டம் போலவும், இந்த நாட்டிலே வர்ணாசிரம தர்மத்தாலே எப்படி மேல் ஜாதி, கீழ் ஜாதி என்று இருக்கிறார்களோ அதுபோலவும் விளையாட்டில் கூட மேல்ஜாதி விளையாட்டு – கீழ்ஜாதி விளையாட்டு என்பதைப் போல இன்றைக்கு வந்துவிடக் கூடாது என்று நினைத்து எல்லோருக்கும் அந்த உணர்வை ஊட்ட வேண்டும் என்பதற்காக பெரியார் விளையாட்டுக் கழகத்தை நாங்கள் தொடங்கினோம். இளைஞர்களுக்கு நல்ல மூச்சுப் பயிற்சி ஏற்பட வேண்டும் என்பதற்காகத்தான் இந்தச் ‘சடுகுடு’ போட்டிகள். இதைப் பெரிய அளவில் ஊக்கப்படுத்த வேண்டும். அதற்கு ஒரு சிறப்பை உண்டாக்க வேண்டும்’’ எனக் குறிப்பிட்டு உரையாற்றினோம்.

வீரவிளையாட்டில் 9ஆவது கருப்பு பெல்ட் பெற்ற மனோகர் அவர்களுக்கும் மாநில கபடிக் கழக அமைப்புச் செயலாளர் ஏ.சபியுல்லா அவர்களுக்கும் நாம் பயனாடை அணிவித்துப் பாராட்டினோம்.

போட்டியின் நிறைவு விழா 29.1.2006 அன்று மாலையில் எமது தலைமையில் நடைபெற்றது. இதில் கலந்துகொள்ள வருகை புரிந்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.ஆர். சிங்காரவேலு அவர்களுக்குப் பொன்னாடை போர்த்தி சிறப்புச் செய்தோம். பின்னர் ‘சடுகுடு’ போட்டிக்கு ரூபாய் 1 லட்சம் வழங்கிய பெரியார் பெருந்தொண்டர் நெடுவை. வை. குப்புசாமி அவர்களுக்கு சால்வை அணிவித்துப் பாராட்டினோம்.

அடுத்து, போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசு வழங்கும் விழா நடைபெற்றது. பெண்கள் அணியில் முதல் பரிசு பெற்ற கலா சிமென்ட்ஸ் அணிக்கு ரூ.75,000/- பரிசுத் தொகையை நீதியரசர் எஸ்.ஆர்.சிங்காரவேலு அவர்கள் வழங்கினார்.

ஆண்கள் அணியில் முதல் பரிசு பெற்ற சென்னை அய்.சி.எஃப் அணிக்கு ரூ.1 லட்சமும் தந்தை பெரியார் சுழற்கோப்பையையும் இரண்டாம் இடம் பிடித்த சன் பேப்பர் மில் அணிக்கு ரூ.75 ஆயிரம், மூன்றாம் பரிசு வென்ற துறைமுகம் அணிக்கு ரூ.50 ஆயிரம், நான்காம் பரிசு பெற்ற கன்னியாகுமரி – அளத்தங்கரை அணிக்கு ரூ.25 ஆயிரம் பரிசுத் தொகைகளை நாம் வழங்கினோம்.
பின்னர், போட்டி நடுவர்களுக்கு சந்தனமாலை அணிவித்துப் பாராட்டினோம். இறுதியில் உரத்தநாடு நா.இராமகிருட்டினன் நன்றி கூறினார்.

- கட்டுரையின் ஒரு பகுதி...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக