புதன், 27 நவம்பர், 2024

வரலாறு படைத்தது ஈரோடு சுயமரியாதை இயக்கம் மற்றும் ‘குடிஅரசு’ நூற்றாண்டு விழாக்கள்!

ஜாதிக்கென்று தனி சுடுகாடு கூடாது; எங்கும் பொது சுடுகாட்டையும், பாதையையும் உருவாக்கவேண்டும்! தமிழர் தலைவர் ஆசிரியர் மாநாட்டுச் செய்தி!

Published November 27, 2024, விடுதலை நாளேடு

 * வரலாறு படைத்தது ஈரோடு சுயமரியாதை இயக்கம் மற்றும் ‘குடிஅரசு’ நூற்றாண்டு விழாக்கள்!

* மழை மிரட்டினாலும், மக்கள் கூட்டம் அலைமோதியது
* படத் திறப்பு, நூல்கள் வெளியீடு போன்ற சிறப்பு அம்சங்கள்!

ஈரோடு, நவ.27 தந்தை பெரியார் பிறந்த ஈரோட்டில், சுயமரியாதை இயக்க நூற்றாண்டு, ‘குடிஅரசு‘ நூற்றாண்டு விழாக்கள் வெகு எழுச்சியோடு நடைபெற்றன.
ஜாதிக்கென்று தனி சுடுகாடு கூடாது – எங்கும் பொது சுடுகாடும், பாதையையும் உருவாக்க வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் மாநாட்டுச் செய்தியாக அறிவித்தார்!
சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா- ‘குடிஅரசு’ இதழ் நூற்றாண்டு விழா மாநாடு ஜாதி ஒழிப்பு, சட்ட எரிப்பு நாளான நேற்று (26.11.2024) ஈரோடு-வீரப்பன் சத்திரம் சிறீ ஜனனி மகாலில் நடைபெற்றது.

நூற்றாண்டு விழாவினை ஏற்கெனவே திட்டமிடப்பட்ட வீரப்பன் சத்திரம் பேருந்து நிலையம் அருகில் நடத்திட மாநாட்டு விழாக் குழுவினர் மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்த நிலையில், காலை முதலே மேகமூட்டத்துடன் காணப்பட்ட காரணத்தால், மாலையில் மழை பெய்தால் தோழர்களுக்கு சிரமம் ஏற்பட கூடும் என்பதை உணர்ந்த கழகத் தலைவர் ஆசிரியர் அரங்க மாநாடாக நடத்திட ஏற்பாடுகளை செய்திட அறிவுறுத்தினார்.

உடனடியாக களத்தில் இறங்கிய கழகக் கண்மணிகள், கழகத் தலைவர் அறிவுறுத்தலுக்கிணங்க உடனடியாக ஏற்பாடு செய்ய வேண்டும் என்ற அடிப்படையில், அரங்கத்தினுள் மாநாட்டினை நடத்திட ஏற்பாடுகளை செய்தனர்.
தந்தை பெரியார் பிறந்த மண்ணான ஈரோட்டில் தந்தை பெரியார் உருவாக்கிய உலகின் தலைசிறந்த இயக்கம் – சுயமரியாதை இயக்கம்! சுயமரியாதை இயக்கத்தின் போர்க் கருவி, அறிவு ஆயுதம் ‘பச்சை அட்டை’ குடிஅரசு 1925 முதல் தொடங்கிய நூற்றாண்டு விழாவும் இணைத்துக் கொண்டாடப்பட்டது.

‘குடிஅரசு’ இதழ் செய்த அறிவுப் புரட்சி சாதாரணமான தல்ல; பழைமைப் பூமியைப் புரட்டிப் போட்ட புதிய பூகம்பம்! தூங்கிக் கொண்டிருந்த மக்களைத் துறைதோறும் தட்டி எழுப்பியது! ‘சுயமரியாதை வாழ்வே சுக வாழ்வு’ என்று சொல்லிக் கொடுக்கும் ஆசானாக பல்வேறு மேடு பள்ளங்களை உடைத்து சமதளமாக்கி சமத்துவம் சமதர்மம் சமைத்தது – புதியதோர் உலகைப் படைத்தது!
“மனித சமூகத்தினிடம் அன்பு கொண்டு சம நோக்குடன் மக்களுக்குச் சேவை செய்ய வேண்டுமென்ற ஆசையுள்ள மக்களை, அப்படிப்பட்ட சம தர்ம நோக்கமுள்ள உண்மைத் தொண்டர்களை இரண்டு கைகளையும் நீட்டி மண்டியிட்டு வரவேற்க சுயமரியாதை இயக்கம் காத்திருக்கிறது.

அது உலக மக்கள் எல்லோரையும் பொறுத்த இயக்கம்!
ஜாதி, மதம், வருணம், தேசம் என்கின்ற கற்பனை நிலைகளை எல்லாம் தாண்டிய இயக்கம். பிராமணன், சத்திரியன், வைசியன். சூத்திரன், பஞ்சமன் என்கின்ற வருணங்களை ஒழித்து எல்லோரும் எப்பொழுதும் மனிதரே என்று கூவும் இயக்கம். ஏழை என்றும். பணக்காரன் என்றும், எஜமானன் என்றும், கூலி என்றும். ஐமீன்தாரன் என்றும், குடியானவன் என்றும் உள்ள சகல வகுப்புகளையும். வேறுபாடுகளையும், நிர்மூலமாக்கித் தரை மட்டமாக்கும் இயக்கம்.’
சுயமரியாதை இயக்கம் என்பது கோடான கோடி ஒடுக்கப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களின், பெண்களின் வாழ்க்கையை எந்தவித வன்முறையும் இல்லாமல் மாற்றி அமைத்த ஒரு ஒப்பற்ற சமூக புரட்சி இயக்கம்! உலக வரலாற்றில் இப்படி ஒரு கலாச்சார புரட்சி இயக்கத்தைக் காண்பது அரிது. ஈராயிரம் ஆண்டு பழைமைக் கோட்டைகளை, அடிமைத்தனத்தை ஒரு நூற்றாண்டில் உடைத்து நொறுக்கிய ஒப்பற்ற இயக்கம், பழைமைக் கோட்டைகளை அடிமைத்தனத்தை ஒரு நூற்றாண்டில் உடைத்து நொறுக்கிய ஒப்பற்ற இயக்கம்!
இப்படி ஒரு மாபெரும் புரட்சியைச் செய்வதற்கு தந்தை பெரியாருக்குப் பேராயுதமாக கிடைத்தது தான் ‘குடிஅரசு‘ இதழ்!
வரலாற்றுச் சிறப்புமிக்க நூற்றாண்டு விழாவை ‘குடிஅரசு‘ பிறந்த ஈரோட்டில் நடத்திய தீர வேண்டும் என்ற நோக்கத்துடன் இயற்கை ஒத்துழைக்காத நிலையிலும், தோழர்களின் கடும் உழைப்பால் மிகச் சிறப்பாக நடத்தப்பட்டது. வீரப்பன் சத்திரம் சிறீ ஜனனி மகாலில் மாலை 5 மணிக்கு முனைவர் திருத்தணி பன்னீர்செல்வம், உறந்தை கருங்குயில் கணேஷ் குழுவினர் பகுத்தறிவுப் பாடல்களை, உணர்வுபூர்வமாகப் பாடினார்கள்.

திட்டமிட்டப்பட்டப்படி மாநாடு சரியாக 6 மணிக்குத் தொடங்கியது. மாநாட்டில் ஈரோடு மாவட்டக் கழகச் செயலாளர் மா.மணிமாறன் தமிழ்நாடு முழுவதும் இருந்து வருகை தந்த கழகப் பொறுப்பாளர்களையும், தோழர்களையும், சிறப்பு விருந்தினர்களையும் வரவேற்று உரையாற்றினார். மாநாட்டுத் தலைவரை தலைமைக் கழக அமைப்பாளர் ஈரோடு த.சண்முகம் முன்மொழிந்தார். மாநாட்டுத் தலைவரை ஈரோடு மாநகரத் தலைவர் கோ.திருநாவுக்கரசு வழிமொழிந்தார்.
மாநாட்டிற்குத் தலைமை தாங்கிய ஈரோடு மாவட்ட கழகத் தலைவர் இரா. நற்குணன் தலைமை உரை ஆற்றினார். அவரது தலைமை உரையில், வரலாற்றுச் சிறப்புமிக்க மாநாட்டினை நடத்தக்கூடிய பெரும் வாய்ப்பை வழங்கிய கழகத் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு நன்றி தெரிவித்தார்.
திராவிடர் கழகத்தின் இலட்சியக் கொடியை திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் தோழர்களின் விண்ணை முட்டும் முழக்கத்துடன் ஏற்றி வைத்து, ‘‘இந்த மாநாட்டினை 40 நாட்களுக்கு முன்பு தான் சென்னையில் தலைமைச் செயற்குழுக் கூட்டத்தில் கழகத் தலைவர் அவர்கள் அறிவித்தார். இன்று (26.11.2024) மழை ஒருபுறம் மிரட்டினாலும், கழகத் தலைவர் ஆணையிட்டால் அதனை மிகச்சிறப்பாக நடத்திக் காட்டுவோம் என்ற நோக்கத்தில் நடத்தி வரும் தலைமைக் கழக அமைப்பாளர் த.சண்முகம், இரா.நற்குணன் உள்ளிட்ட ஈரோடு மாவட்டத் தோழர்களுக்கு நன்றியைத் தெரிவிக்கின்றேன். தொடர்ந்து இயக்கத்தின் பல்வேறு பெருவிழாக்களை நடத்திக் கொண்டே இருக்கிறார்கள். அடுக்கடுக்கான பணிகளை இடைவிடாது ஆற்றி வருகிறோம் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்’’ என்று உரையாற்றினார்.

103 வயது இளைஞர் பொத்தனூர் க.சண்முகம்
மாநாட்டு நிகழ்ச்சிகளை பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் தலைவரும், 103 வயது நிரம்பிய ‘‘இளைஞருமான’’ பொத்தனூர் க.சண்முகம் தொடங்கி வைத்து உரையாற்றினார். மாநாட்டிற்கு முன்னிலை ஏற்று ஈரோடு மாநகர மேயர் எஸ்.நாகரத்தினம், ஈரோடு மாநகர துணை மேயர் வி.செல்வராஜ் ஆகியோர் மாநாட்டின் நோக்கத்தினை வலியுறுத்தி கருத்துரை ஆற்றினர்.
நவம்பர் 26–க்கான சிறப்பு!
திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் தனது உரையில், ‘‘நவம்பர் 26 என்பது திராவிடர் கழக வரலாற்றில் பல்வேறு முக்கிய நிகழ்வுகளின் தோரணமாக விளங்குகிறது.
அவற்றில் முக்கியமானவை –
இந்நாளில் இயக்க வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த நாள்.1933 ஆம் ஆண்டு – இதே நாளில் தான் “புரட்சி” என்னும் வரலாற்று முக்கியத்துவம் பெற்ற ஏடு தொடங்கப்பட்டது.
இதே நாளில் தான் (நவம்பர் 26) 1957 ஆம் ஆண்டு இந்திய வரலாற்றில் அதற்கு முன்பும், பின்பும் இல்லை என்னும் அளவில் ஜாதியைப் பாதுகாக்கும் இந்திய அரசமைப்புச் சட்டம் எரிக்கப்பட்டது’’ என்று குறிப்பிட்டு சிறப்புரையாற்றினார்.

சுயமரியாதைச் சுடரொளிகளுக்குத் தனி இணைய தளம்
இயக்கத்திற்காக தன்னுடைய வாழ்நாளை அர்ப்பணித்துக் கொண்டு கடமையாற்றிய சுயமரியாதை இயக்க வீரர்களின் தொண்டை போற்றும் வகையில் சுயமரியாதைச் சுடரொளிகளுக்கென்று தனியான ஒரு இணையதளத்தினை கழகப் பொருளாளர் வீ.குமரேசன் செயலி மூலமாக அறிமுகப்படுத்தி வைத்தார்.
அதனை முதலில் தன்னுடைய அலைப்பேசி மூலமாக திமுக செய்தித் தொடர்புத் துறைத் தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன், ‘ஸ்கேன்’ செய்து அறிமுகப்படுத்தினார். இணையதளத்தை அறிமுகப்படுத்தி வைத்து, கழகப் பொருளாளர் வீ.குமரேசன், சுயமரியாதை இயக்கம் பத்திரிகை உலகில் மட்டுமல்லாமல் மற்ற துறைகளிலும் மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்கிய இயக்கம் என்றும், சுயமரியாதை இயக்கம் தனித்தன்மையான ஒரு இயக்கம் என்றும் குறிப்பிட்டார். சுயமரியாதை வீரர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு நான்கு உறுதிமொழியினை நினைவுகூர்ந்தார்.
1.உன்னதமான தலைமை,
2.உண்மையான தொண்டர்கள்,
3.உறுதியான கொள்கை,
4.யோக்கியமான பிரச்சாரகர்கள்
இந்த முழக்கத்தை ஒவ்வொரு இளைஞரும் நன்கு உள்வாங்கிக் கொண்டு பணியாற்ற வேண்டும் என்று குறிப்பிட்டார்.

புத்தகங்கள் வெளியீடும் – தமிழர் கழகத் தலைவரின் கருத்தும்…
அதனைத் தொடர்ந்து இரண்டு வரலாற்று ஆவணங்கள் – தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களால் எழுதப்பட்ட ‘‘உலகத் தலைவர் தந்தை பெரியார் வாழ்க்கை வரலாறு’’ (தொகுதி 10) புத்தகத்தினை, திராவிட இயக்க தமிழர் பேரவையின் தலைவர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் அவர்கள் வெளியிட, ஈரோடு மாநகர மேயர் எஸ்.நாகரத்தினம் பெற்றுக்கொண்டார். தந்தை பெரியாரின் ஆயுளின் ரகசியமாய் அவரை காத்து 95 ஆண்டு காலம் வாழ தன் இளமையையும், வாழ்நாளையும் அர்ப்பணித்து, பெரியாரின் மறைவுக்குப் பின் அவர் தந்த இயக்கத்தை கட்டி காத்து இந்தியாவில் ஒரு மாபெரும் எழுச்சியை உருவாகத் திகழ்ந்த அன்னை மணியம்மையார் குறித்த, ‘‘அன்னை ஈ.வெ.ரா.மணியம்மையார் தொண்டறம்’’ புத்தகத்தினை திராவிடர் கழகத்தின் பிரச்சாரச் செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி வெளியிட, தி.மு.க.சட்டத்துறை மாநில இணைச் செயலாளர் மா.சு.ராதாகிருஷ்ணன் பெற்றுக்கொண்டார். நூலினை பெற்றுக்கொண்ட ராதாகிருஷ்ணன் உரையாற்றுகையில், ‘‘வரலாற்று சிறப்புமிக்க நாளில் எனக்கு இந்த வாய்ப்பை வழங்கியதை எண்ணி பெருமையாக கருதுகிறேன். ஒரே ஒரு கோரிக்கையை மட்டும் இந்த மேடைக்கு பொருத்தமான தலைவரிடத்தில் வைக்க விரும்புகிறேன். இன்னும் சில இடங்களில் அரிஜன் காலனி என்று உள்ளது. இதுபோன்ற இருக்கக்கூடிய இடங்களை அறிந்து அதனை எடுப்பதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள கழகத் தலைவரிடம் கோரிக்கையை முன் வைக்கிறேன்’’ என்று உரையாற்றினார்.

தமிழர் தலைவர் தமது கருத்துரையில், ‘‘தந்தை பெரியார் அவர்கள் நடத்துகின்ற மாநாடுகளுக்கு வரக்கூடியவர்கள் – நான் கூறுவது 80 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற செய்தியை சொல்லுகிறேன். ஆத்திகர்கள் எல்லாம் திருவிழாக்களுக்கு செல்லும் வழக்கத்தை வைத்து இருப்பார்கள் அவ்வாறு செல்லக்கூடிய ஊர்களில் அங்கு ஏதேனும் பொருட்களை வாங்கி செல்வார்கள். தந்தை பெரியார் அவர்கள் கூறுவார்கள் ‘‘நம்முடைய தோழர்கள் தேவையான ரூபாயை வைத்துக் கொண்டு மீதிக்குப் புத்தகங்களை வாங்கி செல்ல வேண்டும்’’ என்று சொல்லுவார்கள் – அதையே நாமும் சொல்லுகிறோம். வாங்கிச் செல்லுங்கள், படியுங்கள், மற்றவர்களுக்குப் பரப்புங்கள்” என்றார்.

பிரச்சாரச் செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி
‘‘அன்னை ஈ.வெ.ரா.மணியம்மையார் தொண்டறம்’’ புத்தகத்தினை வெளியிடக்கூடிய மிகப்பெரிய பொறுப்பை பெற்றதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். அன்னை நாகம்மையார், கண்ணம்மாள் ஆகியோர் தமிழ்நாட்டில் நடத்திய கள்ளுக்கடை மறியல் போராட்டம் இந்தியா முழுமைக்கும் எதிரொலித்தது. மும்பையில் காந்தியார் தலைமையில் நடைபெற்ற மாநாட்டில், ‘‘இந்தப் போராட்டத்தை கைவிடுவது ஈரோட்டில் இருக்கும் இரண்டு பெண்கள் கையில் தான் இருக்கிறது. நாகம்மையார், கண்ணம்மாள் ஆகியோரிடம் தான் இருக்கிறது’’ என்று காந்தியார் பேசியதை நினைவுகூர்ந்ததோடு, ‘‘அப்படிப்பட்ட இயக்கத்தில் நாமும் இணைந்து பணியாற்றுவதை விட வேறு ஏதும் பெருமை இருக்கக் முடியாது. இதே நாளில் தான் அரசமைப்புச் சட்டத்தை நாட்டிற்கு டாக்டர் அம்பேத்கர் எழுதி அர்ப்பணித்தார்.

இதே நாள்தான் ஜாதியை பாதுகாக்கும் சட்டப் பிரிவுகளை எரித்த நாளும். அப்போராட்டத்தில் மூவாயிரத்திற்கும் மேற்பட்ட தோழர்கள் கைதாகி சிறையில் இருந்தனர். 18 தோழர்கள் தன்னுடைய உயிரை இழக்க நேரிட்டது. அதில் 2 தோழர்கள் திருச்சி மத்திய சிறையில் இறந்து போகிறார்கள். அப்போது அவர்களது உடலினை சிறையிலேயே அடக்கம் செய்கிறது சிறை நிர்வாகம். அதனைக் கண்டு கொதித்து எழுந்த தொண்டறத் தாய் அன்னை மணியம்மையார், கழகத் தலைவர் ஆசிரியர் போராட்டம் நடத்தி புதைக்கப்பட்ட தோழர்களின் உடலைப் பெற்று மிகப் பெரிய ஊர்வலம் நடத்தி அடக்கம் செய்தனர். அன்னையாரின் வாழ்க்கை முழுவதுமே போராட்டம் தான்; போராட்ட வாழ்க்கையை விரும்பி ஏற்றுக்கொண்டு வாழ்ந்தவர் அன்னை மணியம்மையார்’’ என்று குறிப்பிட்டு உரையாற்றினார்.

பேராசிரியர் தோழர் அருணன் உரை
‘‘கைம்பெண் திருமணத்தை ஆதரித்து கதை எழுதும் துணிச்சல், பார்ப்பன எழுத்தாளரான கல்கிக்கு எப்படி வந்தது என்றால், தந்தை பெரியார் சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்கிய பிறகுதான்! தமிழ்நாட்டிற்கு மட்டும் எழுதி இருந்தால் நான் எனது புத்தகத்திற்கு “காலம் தோறும் பார்ப்பனியம்’’ என்று தான் எழுதியிருப்பேன். இந்தியா முழுக்க செல்ல வேண்டியிருந்ததால் “காலம் தோறும் பிராமணியம்’’ என்று எழுதியிருக்கிறேன்’’ என்றார்.
திராவிட இயக்கத் தமிழர் பேரவைத் தலைவர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன்
‘‘திராவிடர் கழகக் கூட்டங்களில் எதிரிகள் வருவார்கள்; கேள்விகள் கேட்பார்கள். அப்படியொருவர் கேட்ட கேள்விக்கு பெரியார் சிறப்பான பதிலைச் சொன்னார். அதைக்கேட்டவுடன் நமது தோழர்கள் அனைவரும் கைதட்டி சிரித்தனர். பெரியார், கைதட்டாதீங்க. அவரு நம்மை மதிச்சு கேள்வி கேட்டிருக்காரு. நீங்க கை தட்டினால் நாம் அவரை ஏளனப்படுத்துவது போலல்லவா ஆகிவிடும் என்று கண்டித்திருக்கிறார். உலகத்தில் இதுபோன்ற ஒரு தலைவர் இருப்பாரா என்று தெரிவில்லை’’ என்று கூறினார்.

தி.மு.க. செய்தித் தொடர்புத்துறைத் தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன்
திருநெல்வேலியிலே காங்கிரஸ் மாநாடு நடத்துகிறது. பல தலைவர்கள் அதில் கலந்துகொள்கிறார்கள். அங்கே விருதுநகரைச் சேர்ந்த கோவிந்தசாமி நாடார் என்பவரும் கலந்துகொள்கிறார். அவர் பெரிய பணக்காரர்; வணிகர். மதியம் அனைவருக்கும் உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. கோவிந்தசாமி நாடார் சாப்பிடுவதற்குச் சென்றிருக்கிறார். அப்போது அங்கே இருந்த ஒருவர், நாடாரே, ‘‘நீங்க அங்கே போய் சாப்பிடுங்கள்’’ என்று சொல்லியிருக்கிறார். இவர் என்ன நினைத்தார் என்றால், ‘‘ஒருவேளை அசைவம் அங்கேயிருக்கிறது. நாம் சைவம் என்று நினைத்துவிட்டார்’’ என்று கருதி, ‘‘இல்லையில்லை நானும் சைவம்தான்’’ என்கிறார். அப்போது அங்கிருந்த பார்ப்பனர் சொல்கிறார், ‘‘நாடாரே உங்களவாக்கெல்லாம் சாப்பாடு அங்கே’’ என்று. இது ஜாதி ஒழிப்பு, மாநாட்டில் நடந்தது. கோவிந்தசாமி நாடார் வெளியில் வந்து கதர் சட்டை வேட்டியை கழட்டி, கீழே போட்டு நெருப்பு வச்சு கொளுத்திவிட்டு வெளியேறினார்’’ என்று குறிப்பிட்டார்.

சுயமரியாதைச் சுடரொளிகள் படங்களைத் திறந்து வைத்து கழகத் துணைத் தலைவர்
கவிஞர் கலி.பூங்குன்றன் உரை
‘‘ஜாதி ஒழிப்பிற்கே தமது பெரும்பகுதி பிரச்சாரத்தையும் போராட்டங்களையும் நடத்திவந்த தந்தை பெரியார் 1957 நவம்பர் 3ஆம் நாள் தஞ்சையில் ஜாதி ஒழிப்பு சிறப்பு மாநாட்டைக் கூட்டினார். பல லட்சம் தமிழ்ப் பெருமக்கள் திரண்டனர்; அம்மாநாட்டில் உலக வரலாற்றில் முதல்முறையாக ஒரு நாத்திகத் தலைவருக்கு மக்களால் எடைக்கு எடை வெள்ளி நாணயம் ரூ.7,704-க்கு வழங்கப்பட்டது. இந்த மாநாட்டில்தான் தந்தை பெரியார் ஜாதி ஒழிப்பிற்காக அதனைப் பாதுகாக்கும் இந்திய அரசமைப்பின் சட்டப்பிரிவுகளை எரிப்பது என்று தீர்மானத்தை நிறைவேற்றினார். அரசமைப்புச் சட்டம் பூர்த்தியான அதே மாதத்தில், அதே 26 ஆம் தேதி எரிப்பேன் என்று அறிவித்தார். சட்டப்பிரிவுகளை மாற்றுங்கள்; சட்டத்தைத் திருத்துங்கள்: குறிப்பிட்ட நாட்களுக்குள் செய்யாவிட்டால் சட்டம் எரிக்கப்படும் என்று அரசாங்கத்திற்கு வாய்தா கொடுத்தார்.
ஆனால், அரசு தமது அரசமைப்புச் சட்டத்தை திருத்துவதற்குப் பதிலாக அப்படி எரித்தால் என்ன தண்டனை தரலாம் என்று தேடியது. பின்னர் ஒர் உண்மையைத் தெரிந்துகொண்டது, அரசமைப்புச் சட்டத்தை எரித்தால் என்ன தண்டனை என்று சட்டத்தில் இடம் இல்லை. உடனே புதிய சட்டத்தை இயற்றினர்.

1957ஆம் ஆண்டு நவம்பர் 26இல் நடைபெற்ற அரசமைப்புச் சட்ட எரிப்பு போராட்டம் – ஜாதி ஒழிப்புப் போராட்டம்!! ஜாதி ஒழிப்பிற்காக ஒரு நாட்டின் அரசமைப்புச் சட்டம் அந்நாட்டு குடிமக்களால் தீவைத்து எரிக்கப்பட்ட முதலும் கடைசியுமான போராட்டம் அது’’ என்றார்.
மாநாட்டினை திராவிடர் கழகத் துணைப்பொதுச் செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் தொகுத்து வழங்கினார். சரியாக இரவு 10.10 மணிக்கு பகுத்தறிவாளர் கழகத் தோழர் பி.என்.எம்.பெரியசாமி நன்றி கூறி, மாநாட்டை முடித்து வைத்தார்.
தமிழ்நாடு முழுவதும் இருந்து கழகப் பொறுப்பாளர்கள், தோழர்கள் மாநாட்டில் கலந்துக் கொண்டனர்.
மாநாட்டின் சூளுரையும் – வேண்டுகோளும்!
‘‘ஜாதியை ஒழிப்பதுதான் நமது முக்கிய குறிக்கோள் என்றும், இனியும் ஜாதிக்கென்று தனி சுடுகாடு கூடாது; அப்படி இருப்பது வெட்கக்கேடு! பொது சுடுகாட்டையும், பாதையையும் உருவாக்க வேண்டும்’’ என்று அரசுக்கு இம்மாநாட்டின் கருத்துரையாக கழகத் தலைவர் வலியுறுத்தினார் (முழு உரை பின்னர்).

கழக செயலவைத் தலைவர் வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி, மாநில ஒருங்கிணைப்பாளர்கள் தஞ்சை
இரா.ஜெயக்குமார், உரத்தநாடு இரா.குணசேகரன், பேராசிரியர் முனைவர் ப.காளிமுத்து, கோபி மாவட்ட கழகத் தலைவர் வழக்குரைஞர் மு.சென்னியப்பன், மாவட்ட செயலாளர் வெ.குணசேகரன், திமுக மாவட்ட துணைச் செயலாளர் ஆ.செந்தில்குமார், திமுக மாநகர செயலாளர் மு.சுப்பிரமணியம், திமுக மாநில மாணவர் கழக துணைச் செயலாளர் வீரமணி, திமுக மாவட்ட பொருளாளர் ப.க.பழனிசாமி, திமுக வீரப்பன்சத்திரம் பகுதி செயலாளர் வி.சி.நடராசன், திமுக சுற்றுச்சூழல் அணி மாநில துணை அமைப்பாளர் கு.இளங்கவி, அப்பாவு புவனேசுவரி, மருத்துவர் தமிழ்க்கொடி, பெரியார் படிப்பக வாசகர் வட்ட தலைவர் அனிச்சம் கனிமொழி, பெரியார் படிப்பக வாசகர் வட்ட செயலாளர் கவிதா நந்தகோபால், திராவிட இயக்க தமிழர் பேரவையின் மாவட்ட செயலாளர் ஆ.தமிழ்க்குமரன், பேராசிரியர் முனைவர் ப.கமலக்கண்ணன், டாக்டர் பி.டி.சக்திவேல், டாக்டர் சண்முகம், பவானி பூபதிராஜா, செ.பிரகாசன், ந.மோகன்ராஜ், சசிதரன், அசோக்குமார், பவானி ப.சம்பத்குமார், பெரியார் படிப்பக வாசகர் வட்ட பொருளாளர் ஆனந்த லட்சுமி, திராவிட இயக்க தமிழர் பேரவையின் ஈரோடு மாநகர செயலாளர் தே.காமராஜ், பொதுக்குழு உறுப்பினர்கள் கோ.பாலகிருட்டிணன், கு.சிற்றரசு, கழக மாவட்ட துணைத் தலைவர் வீ.தேவராஜ், துணைச் செயலாளர் து.நல்லசிவம், மாவட்ட காப்பாளர் கு.சண்முகம், செல்வக்குமார், கார்த்திக், ராம்கண், பவானி, குமார், ஜெபராஜ், செல்லத்துரை, பார்த்திபன், ஜெ.ஜெயச்சந்திரன், ப.தமிழ்ச்செல்வன், ராஜேஸ்வரி, மாலதி பெரியசாமி, கண்ணம்மா சண்முகம், அன்பு பிரசாத், பிரகாஷ், கி.பிரபு, சதீஷ், தேவேந்திரன், பெரியார் பிஞ்சு அன்பெழில் அன்பரசு மற்றும் தலைமைக் கழக அமைப்பாளர்கள், மாவட்ட காப்பாளர்கள், மாவட்ட கழகத் தலைவர்கள், செயலாளாகள், பொதுக்குழு உறுப்பினர்கள், மகளிரணி பொறுப்பாளர்கள், தொழிலாளரணி, திராவிடர் கழக இளைஞர்ணி, திராவிட மாணவர் கழகம் மற்றும் தமிழ்நாடு முழுவதிலுமிருந்தும் கழகப் பொறுப்பாளர்கள் தோழர்கள் கலந்து கொண்டனர்.

தொகுப்பு: க.கலைமணி


‘‘எனக்கு அளிக்கப்பட்ட பிறந்த நாள் பரிசு’’ – தமிழர் தலைவர்

வைக்கம் போராட்ட நூற்றாண்டையொட்டி வைக்கத்தில் புதுப்பொலிவுடன் கட்டடம் உருவாக்கப்பட்டு இருப்பதும் (12.12.2024), அதனைக் கேரள முதலமைச்சர் திறந்து வைப்பதும், தந்தை பெரியார் நூலகத்தை நமது ‘திராவிட மாடல்’ அரசின் முதலமைச்சர் திறந்து வைப்பதும், அந்நிகழ்ச்சிக்கு நான் தலைமை ஏற்கும் வாய்ப்பை நான் பெற்றதும் – ‘‘எனக்கு அளிக்கப்பட்ட பிறந்த நாள் பரிசு’’ என்று ஈரோட்டு மாநாட்டில் கழகத் தலைவர் அறிவித்தபோது அனைவரும் எழுந்து நின்று பலத்த கரஒலி எழுப்பினர். (26.11.2024 – ஈரோடு)



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக