நூல் வெளியீட்டு விழா ஒரு கருத்தரங்கமாக நடைபெற்ற முத்திரை இந்நிகழ்ச்சிக்கு கிடைத்திருப்பது தனிச் சிறப்பு.
கருத்தரங்கில் பேசிய கவுதம்ராஜ் தேர்தல் அறிக்கை என்ற ஒன்றை முதன் முதலில் அறிமுகப்படுத்தியவர் அறிஞர் அண்ணா என்றார்.
கனிமொழி சோமு எம்.பி.
நூலினை வெளியிட்ட மாநிலங்களவை உறுப்பினர் டாக்டர் கனிமொழி சோமு அவர்கள் சுருக்கமாகக் கருத் துரைத்ததாவது:
ஒரு காலம் இருந்தது. நமது திராவிட இயக்கக் கூட்டங்களில்கூட வேட்டி, சட்டையோடு தரையில் அமர்ந்து கூட்டங்களைக் கேட்பார்கள். இன்று பேண்ட், டீ சர்ட், கோட் அணிந்து குளிரூட்டப்பட்ட மண்டபங்களில் நாற்காலிகளில் அமர்ந்து உரைகளைக்கேட்கும் நிலைக்கு உயர்ந்துள்ளோம். இதுவும் ஒரு வளர்ச்சிதான் - 'திராவிட மாடல்' ஆட்சியின் பங்களிப்பும் இதில் உண்டு.
இலவச திட்டங்களைப் பற்றிக் குறை கூறுவோரும் இருக்கிறார்கள். இலவச திட்டங்கள் பாதிப்பை ஏற்படுத்தவில்லை - வளர்ச்சிப் பாதைக்கு இழுத்துச் சென்றுள்ளன. இதன் அருமையை அயல் நாட்டவர்களும், அயல்நாடு சென்று பணியாற்றும் முனைவர் சுதாகர் பிச்சைமுத்து போன்றவர்களும் உணர்ந்து ஆய்வு நூல்களை எழுதுவது எவ்வளவு சிறப்பு!
என்னுடைய தந்தையார் என்னிடம் எனது சிறிய வயதுமுதல் சொல்லிச் சொல்லி வளர்த்தது என்ன தெரியுமா?
தந்தை பெரியார் கடற்கரையில் பேசுவார். பெரிய கூட்டமெல்லாம் இருக்காது; ஆங்காங்கே தனித் தனியாக அமர்ந்துகேட்பார்கள். ஆனாலும் அதைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல் தன் உரையைத் தந்தை பெரியார் நிகழ்த்திக் கொண்டே இருப்பார். அப்படி எல்லாம் வளர்ந்ததுதான் இந்த திராவிடர் இயக்கம்.
இன்றைக்குப் பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை குடியரசுத் தலைவராக ஆக்கி விட்டதாக ஒன்றிய பிஜேபி அரசு பெருமையாகக் கூறிக் கொண்டுள்ளது. இது ஓர் ஏமாற்று வித்தை.
9ஆம் வகுப்புப் படிக்கும் பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்களுக்கு 3000 ரூபாய் நிரந்தர வைப்பு நிதியில் வைக்கப்பட்டு 18 வயது வரும்போது வட்டியோடு பணம் கொடுக்கப்பட்டு வந்தது. அத்திட்டத்தை நிறுத்தியது இன்றைய பிஜேபி அரசு. இவர்கள்தான் பழங்குடி சமூகத்தைச் சேர்ந்தவரைக் குடியரசுத் தலைவராகக் கொண்டு வந்து விட்டதாகப் பெருமையடித்துக் கொள்கிறார்கள். இதைக் கண்டு எல்லாம் மக்கள் ஏமாந்துவிட மாட்டார்கள்.
தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, கலைஞர், ஆசிரியர் போன்ற திராவிட இயக்க முன்னோடிகளுக்கு வணக்கம். நன்றி கூறி முடிக்கிறேன் என்றார்.
முனைவர் சுதாகர் பிச்சைமுத்து
M.Sc., M.Phil, Ph.D., FRSC - நோக்கவுரை
இவர் எழுதிய நூல்தான் "அய்க்கிய நாடுகளின் வளம் குன்றா குறிக்கோள் பார்வையில் திமுக தேர்தல் அறிக்கை 2021" - என்பதாகும்.
இவர் தன் நோக்கவுரையாகக் கருத்தரங்கில் குறிப்பிட்டதாவது:
திராவிட மாடல் என்பது சுயமரியாதை 'Self Respect' என்பதன் தொடர்ச்சியாகும்.
2015ஆம் ஆண்டு அய்க்கிய நாடுகள் சபையில் அங்கம் வகிக்கும் நாடுகள் 'வளம் குன்றா வளர்ச்சிக் குறிக்கோள் (Sustainable Development Goals) என்று 17 இலக்குகளை அடையாளப்படுத்தி அவற்றை முன்னிலைப்படுத்தி திட்டங்கள், திட்ட வரைவுகள் என்று 2030க்குள் அவற்றினை எட்ட வேண்டிய வேலைகளைச் செய்கின்றன.
உண்மை என்னவென்றால் இந்தத் திட்டங்களை நாம் முடித்து விட்டோம் என்பதுதான். கரோனா காலத்தில் விளையாட்டுத் திடல் பக்கம் மாணவர்கள் செல்ல முடியாத சூழலில் அவர்களுக்குக் கால் ஷுவை இலவசமாக அணிவித்து விளையாட்டில் ஆர்வத்தை ஊட்டியது பிரிட்டன் அரசு.
(இந்திய பிரதமரும், வெளியுறவுத் துறை அமைச்சரும் இலவசங்களைக் கொடுத்த தமிழ்நாடு பொருளாதாரத்தில் பின்னுக்குத் தள்ளப்பட்டதாகக் கூறுவதைக் கண்டு வயிறு குலுங்குக் குலுங்க சிரித்துத் தொலையுங்கள்)
தமிழ்நாட்டை இந்திய மாநிலங்களோடு ஒப்பிடக் கூடாது; உலக நாடுகளுடன் ஒப்பிட வேண்டும்.
கட்டணமில்லாப் பேருந்து பயணம் பெண்களுக்கு என்பது சாதாரணமா? ஒவ்வொரு நாளும் இதனால் பொருளாதார பலன் அடைகிறார்கள் - பெண்களுக்கான வேலை வாய்ப்பு அதிகரிக்கிறது.
அரசு தொடக்கப்பள்ளிகளில் முதல் மற்றும் இரண்டாம் வகுப்புகளில் 75 விழுக்காடு பெண் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 2006 -2011ஆம் ஆண்டிற்கு இடையில் எடுக்கப்பட்ட புள்ளிவிவரப்படி 100 ஆண் ஆசிரியர்களோடு ஒப்பிடும் போது பெண் ஆசிரியர் களின் விகிதம் 288 ஆக உயர்ந்துள்ளது. இது ஆண் ஆசிரியர்களைவிட பெண் ஆசிரியர்களின் எண்ணிக்கை உயர்வு 2 புள்ளி 8 மடங்காகும். இதற்குக் காரணம் பெண்களுக்கு 30 விழுக்காடு இடஒதுக்கீடு என்று முதல் அமைச்சர் கலைஞர் அவர்களால் கொண்டு வரப்பட்ட சட்டத்தின் பலனாகும்.
12ஆம் வகுப்பில் 'தோற்றேன்!'
நான் 12ஆம் வகுப்பில் தோற்றேன். இதனால் நான் என்ன கெட்டு விட்டேன்?
நம்மை ஆண்ட வெள்ளைக்கார பரம்பரையினருக்கு வகுப்பு நடத்தும் பேராசிரியராக உயரவில்லையா? (பலத்த கரஒலி) (மெரிட் என்றும் - மார்க்கு தான் அதற்கு அடையாளம் என்றும் கொக்கரிப் போரின் மூக்கு இந்த இடத்தில் உடைபடவில்லையா?)
Welfare State என்ற சமூக நலத் திட்டங்களுக்கு முதலீடு செய்வதுதான் முக்கியம் என்பதை நமது திராவிட மாடல் உருவாக்கியதன் விளைவு சாதாரணமானதல்ல - இது பொருளாதார வளர்ச்சிக்கும் உறுதுணையாக இருக்கும் என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக