ஏவுகணையைவிட சக்தி வாய்ந்த ‘விடுதலை’ ஏட்டை நமக்குக் கொடுத்துச் சென்றுள்ளார் தந்தை பெரியார்!
பாதிக்கப்பட்டோர் எங்களுக்கான செய்திகள் ‘விடுதலை’யில் வந்தால் எங்களுக்குப் பலன் கிட்டும் என்பார்கள்!
''60 ஆயிரம் சந்தாக்களைக் கொடுப்போம்'' என்ற உறுதியோடு வாய்ப்புகளை உருவாக்குங்கள் தோழர்களே!
சென்னை, ஆக.16 பாதிக்கப்பட்ட மக்களுக்காகக் குரல் கொடுக்கும் ஏடு - ஏவுகணையை விட சக்தி வாய்ந்த ஏடு ‘விடுதலை’ - 60 ஆயிரம் சந்தாக்களைச் சேர்க்க ஆயத்த மாகுங்கள் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார் திரா விடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
பெரியார் திடலில் நடைபெற்ற சென்னை - காஞ்சி மண்டல கலந்துரையாடல்
நேற்று (15.8.2022) அன்று காலை 60 ஆயிரம் ‘விடுதலை' சந்தா திரட்டுவது குறித்து சென்னை பெரியார் திடலில் உள்ள அன்னை மணியம்மையார் அரங்கத்தில் நடைபெற்ற சென்னை- காஞ்சி மண்டல திராவிடர் கழக கலந்துரையாடலில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.
அவரது சிறப்புரை வருமாறு:
ஒவ்வொரு மணியும் -
மணித்துளியும் நமக்கு முக்கியம்!
சென்னை - காஞ்சி மண்டல திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்ட நிகழ்ச்சியில், ‘விடுதலை' சந்தா சேர்ப்பு - 60 ஆயிரம் சந்தாக்கள் என்பதை மய்யப்படுத்தி இங்கே சிறப்பாகக் கருத்துகளை எடுத்து வைத்து, செயலூக்கிகளாக நம்முடைய தோழர்கள் - நாட்கள் வெகுகுறைவாக இருக்கின்ற காரணத்தினால், ஒவ்வொரு மணியும், மணித்துளியும் நமக்கு முக்கியம் என்ற அளவில், செயல்படவேண்டிய இந்த அவசியத்தை வலியுறுத்தி இங்கு உரையாற்றிய கழகத் துணைத் தலைவர் மானமிகு கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களே,
கழகப் பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார் அவர் களே, கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் அவர் களே, கழகப் பொருளாளர் வீ.குமரேசன் அவர்களே,
மாநில அமைப்பாளர் இரா.குணசேகரன் அவர்களே, துணைப் பொதுச்செயலாளர் பொறியாளர் இன்பக்கனி அவர்களே, அமைப்புச் செயலாளர்கள் வி.பன்னீர் செல்வம் அவர்களே, ஊமை.ஜெயராமன் அவர்களே, மாநில மகளிரணி செயலாளர் தகடூர் தமிழ்ச்செல்வி அவர்களே, மாநில மகளிர் பாசறை செயலாளர் வழக் குரைஞர் பா.மணியம்மை அவர்களே, அமைப்பாளர் வழக்குரைஞர் மதிவதனி அவர்களே,
பகுத்தறிவாளர் கழக மாநிலத் தலைவர் தமிழ்ச் செல்வன் அவர்களே, சென்னை மண்டல தலைவர் தோழர் இரத்தினசாமி அவர்களே, செயலாளர் கோபால் அவர்களே, காஞ்சி மண்டல தலைவர் தோழர் எல்லப்பன் அவர்களே, காஞ்சி மண்டல செயலாளர் காஞ்சி கதிரவன் அவர்களே, வடசென்னை மாவட்டத் தலைவர் மோகன் அவர்களே, செயலாளர் கணேசன் அவர்களே, தென்சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன் அவர்களே, செயலாளர் பார்த்தசாரதி அவர்களே, திருவள்ளூர் மாவட்டத் தலைவர் கிருஷ்ண மூர்த்தி அவர்களே, செயலாளர் அறிவுச்செல்வன் அவர் களே, தாம்பரம் மாவட்டத் தலைவர் தோழர் முத்தையன் அவர்களே, செயலாளர் நாத்திகன் அவர்களே,
ஆவடி மாவட்ட செயலாளர் தோழர் இளவரசன் அவர்களே, செங்கல்பட்டு மாவட்ட தலைவர் தோழர் சுந்தரம் அவர்களே, காஞ்சிபுரம் மாவட்டத் தலைவர் தோழர் அசோகன் அவர்களே, இந்நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பாகப் பங்களிப்பை செய்துகொண்டிருக்கக் கூடிய ராணிப்பேட்டை மாவட்டத் தலைவர் தோழர் லோகநாதன் அவர்களே,
சோழங்கநல்லூர் மாவட்ட அமைப்பாளர் குழ.செல்வராசு அவர்களே, மாவட்டத் துணை செயலாளர் தோழர் பாண்டு அவர்களே, பொன்னேரி நகர தலைவர் தோழர் அருண் அவர்களே, பெரியார் நூலக வாசகர் வட்டத்தலைவர் வழக்குரைஞர் வீரமர்த்தினி அவர் களே, மாநில இளைஞரணி துணை செயலாளர் சுரேஷ் அவர்களே, தோழர்களே உங்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பான வணக்கத்தினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
எல்லா செய்திகளையும் சொல்லி, நம்முடைய துணைத் தலைவர் அவர்கள் சொன்னதுபோன்று அதிகம் பேசவேண்டிய தேவையில்லை.
ஏனென்றால், நீங்கள் மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்லக்கூடியவர்கள்.
கடுமையான உழைப்பு இருந்தாலொழிய,
நாம் வெற்றியடைய முடியாது!
நாட்கள் வெகு குறைவாக உள்ளன; அதற்குள் நம் இலக்கை முடித்துவிட முடியுமா? என்று சொன்னால், கடுமையான உழைப்பு இருந்தாலொழிய, நாம் வெற்றியடைய முடியாது.
இதுதான் எதார்த்தம் - இதுதான் உண்மை நிலை.
ஆகவே இங்கே உரையாற்றிய தோழர்கள் இலக்கை முடித்துவிடுவோம் என்று சொன்னீர்கள்;
அது உற்சாகமான, நம்பிக்கையூட்டக் கூடிய செய்தி யாகும்.
அடுத்து, தெம்பூட்டக்கூடிய ஒரு செய்தியை இங்கே பேசிய தோழர்கள் அத்துணை பேரும் எடுத்துச் சொன்னார்கள்.
அது என்னவென்றால்,
இதுவரையில் நாம் தமிழ்நாடு முழுவதும் ‘விடுதலை’ சந்தா திரட்டியிருக்கின்ற அளவில், எல்லா மாவட்டக் கலந்துரையாடல்களை முடித்துவிட்டுத்தான் இங்கே வந்திருக்கிறேன். அடுத்ததாக கடலூர், புதுச்சேரி கலந் துரையாடல் மட்டும்தான் இருக்கிறது.
ஆகவே, இங்கே தோழர்கள் சொன்ன கருத்திலே ஒரு பொதுவான கருத்து என்னவென்று சொன்னால்,
‘‘நாங்கள் ‘விடுதலை' சந்தா கேட்டு சென்றபொழுது, எதற்காக சந்தா கொடுக்கவேண்டும்? என்று யாரும் மறுப்பே சொல்லவில்லை. மகிழ்ச்சியாக ஒப்புக்கொண்டு கொடுத்திருக்கிறார்கள்’’ என்று குறிப்பிட்டார்கள்.
இது முதல் வெற்றி நமக்கு! இதைவிட பெரிய முதலீடு வேறு இருக்க முடியாது.
பொதுமக்களின் விவாதமும் -
தோழர்களின் விளக்கமும்!
கழகத் தோழர்கள் நன்கொடை வாங்கச் செல்லும் பொழுது, ஒரு விவாதம்கூட நடந்திருக்கிறது.
பெரியாரிடம் இல்லாத பணமா?
உங்கள் இயக்கத்தில் இல்லாத சொத்தா?
அதையே நீங்கள் செலவழிக்கலாமே? என்று கேட்க,
நம்முடைய ஆட்களுக்கு இதுதான் வாய்ப்பு என்று நினைத்து, ‘‘ஏங்க, வெங்கடாசலபதிக்கிட்ட இல்லாத பணமா? ஏன் மறுபடியும், மறுபடியும் உண்டியலில் பணம் போடுகிறார்கள்?''
நாங்கள் என்னென்ன காரியங்கள் செய்கிறோம் தெரியுமா?
எவ்வளவு பெரிய உற்சாகமான பணிகள் நடை பெறுகின்றன. குழந்தைகள் இல்லத்திலிருந்து, பள்ளிக் கூடங்கள், கல்லூரிகள், பல்கலைக் கழகங்கள் வரை இருக்கிறது’’ என்று ஒரு விளம்பரம் போன்று, விவாதத் தைத் தொடங்கியவுடன், அந்த விவாதத்தின்மூலமாக பிரச்சாரம் போன்று அந்த நிகழ்வு அமைந்துவிடுகிறது.
மறுப்பேதும் சொல்லாமல், சந்தா கொடுக்கிறோம் என்று சொல்கிறார்கள்
நன்கொடை திரட்டச் சென்றபொழுது, கேள்வி கேட் டார்கள்; ஆனால், ‘விடுதலை' சந்தா கேட்டுச் சென்ற பொழுது, மறுப்பேதும் சொல்லாமல், கொடுக்கிறோம் என்று சொல்கிறார்கள்.
அப்படியென்றால், முதல் வெற்றி நமக்கு - அது ஒரு அடித்தளம்.
இங்கே நண்பர்கள் சுட்டிக்காட்டினார்கள், பொதுச் செயலாளர் சுட்டிக்காட்டினார்.
‘விடுதலை' நாளிதழின் 50 ஆண்டுகால ஆசிரியர் என்ற ஒரு வாய்ப்பாக வைத்து, அதை ஒரு குறியீடாக வைத்து, கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு, கமிட்டி போட்டு, 50 ஆயிரம் விடுதலை சந்தாக்களைத் திரட்டவேண்டும் என்ற முடிவெடுத்து, அந்த முயற்சியில் வெகுவேகமாக அன்றைக்கு ஈடுபட்டு, சொன்னதற்கு மேல், கொஞ்சம் கூடுதலாகவே செய்தீர்கள் என்ற புள்ளி விவரத்தினை சொன்னார்கள்.
நம் இயக்கத்திற்கு செல்வாக்கு
பெருகியிருக்கிறதா? குறைந்திருக்கிறதா?
இது எப்பொழுது கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு.
தோழர்கள் நம்பிக்கையோடு இறங்குவதற்கு உதாரணமாக - இப்பொழுது நான் உங்களை அன்போடு கேட்டுக்கொள்வது என்னவென்றால்,
10 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைவிட, நம் இயக் கத்திற்கு செல்வாக்கு பெருகியிருக்கிறதா? குறைந் திருக்கிறதா?
(கழகத் தோழர்கள் அனைவரும் பெருகியிருக்கிறது என்று குரல் கொடுத்தனர்).
நமக்கு ஆதரவு, நம்முடைய தேவைகளை உணர்ந்த மக்கள், முன்பு இருந்ததைவிட இப்பொழுது இருக் கிறார்களா? இல்லையா?
(இருக்கிறார்கள் என்று கழகத் தோழர்கள் குரல் கொடுத்தனர்).
கவிஞர் அவர்கள் இங்கே உரையாற்றும்பொழுது சொன்னதுபோன்று, இன்றைய காலகட்டத்தில் தி.மு.க. ஆட்சி, பாராளுமன்றத்திலிருந்து பஞ்சாயத்து வரையில் உறுப்பினர்களாக இருக்கிறார்கள் - கொள்கையாளர் களாக இருக்கிறார்களே - இந்த வாய்ப்பு இதற்கு முன்பு எப்பொழுதுதாவது இருந்திருக்கிறதா?
அதாவது கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு - 50 ஆயிரம் சந்தா திரட்டும்பொழுது, சுமூகமான வாய்ப்பு - ஒரு சூழல் இருந்ததா?
இல்லை.
இப்பொழுது கிடைத்திருப்பது அரிய வாய்ப்புதானே?
இப்பொழுது முடியவில்லை என்றால்,
வேறு எப்பொழுது முடியும்?
இப்பொழுது செய்ய முடியவில்லை என்றால், வேறு எப்பொழுது முடிக்க முடியும்?
இதற்கான பதிலை உங்களுடைய செயல்மூலம் எதிர்பார்க்கிறேன்.
இப்பொழுது செய்யவில்லை என்றால், எப்பொழுதும் செய்ய முடியாது.
நாம் பேசவேண்டிய அவசியமே இல்லை.
இங்கே உரையாற்றிய ஊமை.ஜெயராமன் சொன் னார் -
தோழர்களுக்கு அந்தப் ஃபார்மூலாவை ஒவ்வொரு கமிட்டியிலும் சொல்லியிருக்கிறேன்.
கூச்சம், வெட்கத்தைவிட்டு களத்தில் இறங்க வேண்டும்.
இறங்கினால் என்னாகும்? இறங்கினால் நம்மால் செய்ய முடியுமா? என்று இறங்காமலேயே சொல்லிக் கொண்டிருந்தவரின் கதை போன்று அல்லாமல், நாம் களத்தில் இறங்கவேண்டும்.
நாம் வெற்றி பெற்றே தீருவோம் என்ற உணர்ச்சியோடு!
60 ஆயிரம் சந்தாவா? என்று நினைக்கவேண்டிய அவசியமே இல்லை.
அப்படி நினைத்தால், அவர்கள் போர்க் குணத்தை இழக்கிறார்கள் என்று அர்த்தம்.
துப்பாக்கியைப் பிடிக்கின்ற போர் வீரன், எதை நினைத்துத் துப்பாக்கியைப் பிடிக்கிறான்?
நாம் வெற்றி பெற்றே தீருவோம் என்ற உணர்ச்சி யோடுதான். அதேபோன்று இலக்கை அடைந்தே தீருவோம் - நம்மால் முடியும் என்று செயலில் இறங்க வேண்டும்.
இங்கே நம்முடைய அசோகன் அவர்கள் சொன்னதுபோன்று,
‘‘நம்மால் முடியாதது வேறு யாராலும் முடியாது -
வேறு யாராலும் முடியாதது நம்மால் மட்டுமே முடியும்'' என்பதற்கு அடையாளம் - வேறு எங்கேயும் போகவேண்டாம் -
88 ஆண்டுகாலம் எதிர்ப்பிலே
நடத்தப்படுகின்ற நாளேடு!
88 ஆண்டுகாலம் இவ்வளவு எதிர்ப்பிலே ஒரு நாளேடு நடத்தப்படுகிறதே, இதுபோன்று வேறு இடத்தில் உண்டா?
ஒரு கொள்கை ஏடு -
கவர்ச்சியில்லாத ஏடு -
மக்கள் எதை விரும்புகிறார்களோ, அதைத் தராத ஏடு -
மக்கள் பின் சென்று, நாம் விடுதலையைக் கொடுப்பது இல்லை. நமக்குப் பின்னால் வர வேண்டும் என்பதற்காகத்தான் ‘விடுதலை' பேராயு தமாக, போராயுதமாகப் பயன்படுத்துகிறோம்.
ஆகவே, இப்பொழுது இறங்கி வேலை செய்யவேண்டும் என்பதுதான் மிகவும் முக்கியம்.
ஒவ்வொருவரும் நம்மால் முடியும் என்று உள்ளூரில் இறங்கவேண்டும்.
ஒருவர் 10 சந்தா என்றால், 6 ஆயிரம் பேர் களத்தில் இறங்கவேண்டும். 10 சந்தாவிற்கு என்ன வழிமுறை என்று இங்கே ஊமை.ஜெயராமன் சொன்னாரே!
ஒன்று உங்களுக்கு -
மூன்று சந்தா - உறவினர்களுக்கு
அடுத்த மூன்று சந்தா - நண்பர்களுக்கு
மற்ற மூன்று - பொதுவான அமைப்புகளுக்கு.
இப்படி ஒரு அணுகுமுறையை நாம் அமைத்துக் கொண்டால், ஒரு 10 பேர்கூட செல்வாக்குள்ளவர்கள் நமக்கு இல்லை என்று சொல்ல முடியுமா? உறவி னர்கள் இல்லை என்று யாராவது சொல்ல முடி யுமா? நாம் வரதட்சணை வாங்குபவர்களா? மொய் எழுதுங்கள் என்று கேட்பவர்களா? இல்லையே!
தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள், முகக்கவசம் அணிந்துகெள்ளுங்கள் என்று சொல்வது நமக்காகவா?
நாம் கருத்தைப் பரப்புவதற்காகக் கேட்கிறோம்.
எப்படி தடுப்பூசிக்கு முகாம் நடத்துகிறார்களோ -
முகக்கவசம் எல்லோரும் போடவேண்டும் என்று சொல்கிறார்களோ -
ஏனென்றால், கரோனா தொற்றிலிருந்து இன்று குரங்கம்மை வரைக்கும் வந்துவிட்டாயிற்று.
இவ்வளவு பெரிய ஆபத்துகள் இருக்கிறது - தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள், முகக்கவசம் அணிந்து கொள்ளுங்கள் என்று யாருக்காகச் சொல்கிறோம் - மக்களுக்காகச் சொல்கிறோம் - சமுதாயத்திற்காகச் சொல்கிறோம்.
கவிஞர் இங்கே சொன்னார் -
நிறைய பத்திரிகை அடிக்க அடிக்க நமக்கு நட்டம் அதிகமாகும். உங்களில் நிறைய பேருக்குத் தெரியாது - காகித விலை அதிகமாகிவிட்டது.
நிறைய பத்திரிகை போகும் மற்ற பத்திரிகைகளுக்கு எப்படி இலாபம் வருகிறது என்று நீங்கள் கேட்கலாம்.
விளம்பரங்கள் இல்லாமல்தான்
‘விடுதலை’ வெளிவருகிறது!
மற்ற பத்திரிகைகளுக்கு விளம்பரம் வருகிறது - எல்லா வகையான விளம்பரங்களும் வருகிறது. ஏமாற்றுகிறவன் விளம்பரமும் வருகிறது. ஏமாந்த வர்கள் சங்கம் வைத்த விளம்பரமும் வருகிறது. ஏமாந்தவர்கள், ஏமாற்றப்பட்டவர்கள் எல்லா விளம்பரங்களும்.
நமக்கு அப்படி இல்லை. விளம்பரங்கள் இல்லாமல்தான் ‘விடுதலை’ வெளிவருகிறது.
நட்டத்தில்தான் நாம் ‘விடுதலை'யை நடத்திக் கொண்டிருக்கின்றோம். என்ன நோக்கத்திற்காக நாம் ‘விடுதலை'யை நடத்திக் கொண்டிருக்கின் றோம்?
எதற்காக 60 ஆயிரம் ‘விடுதலை' சந்தாக்களைத் திரட்டுகிறோம் என்று இங்கே சொன்னார்களே தோழர்கள்,
எனக்கு நன்றி காட்ட என்று -
என்னை பாராட்ட அல்லது உற்சாகம் ஊட்ட என்று.
நான் ‘விடுதலை’யை விட்டு
ஓடிப்போய்விடுவேனா?
நீங்கள் 60 ஆயிரம் ‘விடுதலை' சந்தா கொடுக்க வில்லை என்றால், நான் ‘விடுதலை'யை விட்டு ஓடிப் போய்விடுவேனா?
வாழ்நாள் முழுவதும் அய்யா பணித்த பணி அது.
என்னையும், ‘விடுதலை’ விடாது -
‘விடுதலை’யையும் நான் விடமாட்டேன்.
இதை நான் பெருமைக்காகவோ, உங்களுடைய கைதட்டலுக்காகவோ, உற்சாகத்திற்காகவோ, மகிழ்ச்சிக் காகவோ சொல்லவில்லை.
தந்தை பெரியாரின் வாசகத்தைப் படியுங்கள்!
தந்தை பெரியார் அவர்கள் 1928 இல் ஒரு வாசகம் சொல்கிறார்.
‘‘எனக்கு நினைவு தெரிந்த நாள்முதல் இந்தக் கொள் கையைத்தான், இந்தப் பணியைத்தான் செய்வேன்.'' என்று சொல்லிவிட்டு,
இந்த வரிகளை எல்லோரும் சாதாரணமாக சொல்வது தான். ஆனால், அதற்கு அடுத்த வாக்கியத்தைப் படித்தால், ஒவ்வொருவருக்கும் கண்ணீர் வரும்.
‘‘எனக்கு நினைவு தப்பும் வரையில் இதுதான்.'' என்றார்.
இப்பொழுது இருக்கிற ஆபத்து போன்று, நம்முடைய நாட்டு வரலாற்றில், நம்முடைய இனத்தின் வரலாற்றில் முன் எப்பொழுதும் கிடையாது.
அதுதான் ஆர்.எஸ்.எஸ்., அதுதான் காவி. தொற்று நோய் பரவுவதுபோன்று, பரவுகிறது. வித்தை காட்டு கிறார்கள்.
பண பலம், இன பலம், பத்திரிகை பலம், கார்ப்பரேட் பலம் இப்படி எல்லாமே அவர்களுடைய கைகளில் இருக்கின்றன.
அவற்றை எதிர்ப்பது என்பது சாதாரணமானதல்ல. மற்றவர்கள் அவற்றிற்கு மண்டியிடுகிறார்கள்; மற்ற மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் சரணாகதி அடைகிறார்கள்; மற்ற மாநிலங்களை சாப்பிட்டு ஏப்பம் விடுவதில் முயற்சி செய்து, அதில் சில வெற்றிகளையும் பெற்றிருக்கிறார்கள்.
அவர்களுடைய வித்தை எடுபடாத ஒரே மாநிலம் - தமிழ்நாடு - பெரியார் மண்தான்!
ஆனால், அவர்களுடைய வித்தை எடுபடாத ஒரே மாநிலம் - தமிழ்நாடு. இந்த மண்தான் - பெரியார் மண் தான் - சமூகநீதி மண்தான் - திராவிட மாடல் ஆட்சி நடைபெறுகிற மண்தான்.
இது எப்படி முடிந்தது?
10 ஆண்டுகளாக நாம் வியூகம் அமைத்து, எல்லோ ரையும் சேர்த்து - அதற்கு எந்த கருவி பயன்பட்டது?
‘விடுதலை' நாளேடுதானே!
மேடைப் பேச்சின்போதுகூட, ‘விடுதலை'யின் கருத்தைத்தானே சொல்கிறார்கள்.
‘விடுதலை’யில் என்ன வருகிறதோ,
அதைப் பார்த்துத்தான்
நாங்கள் பல முடிவுகளை எடுப்போம்!
நேற்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர், தோழர் ஆத்தூர் தங்கவேலு நூற்றாண்டு விழா நிகழ்ச்சியில் அவர் உரையாற்றும்பொழுது, ‘விடுதலை'யில் என்ன வருகிறதோ, அதைப் பார்த்துத்தான் நாங்கள் பல முடிவு களை எடுப்போம்; அவர்கள் ஏதாவது சொன்னார்கள் என்றால், அதை நாங்கள் திருத்திக் கொள்வோம்.
பள்ளிக் குழந்தைகளுக்கு காலைச் சிற்றுண்டி போடுவதில், வேறு அமைப்புகள் ஊடுருவல் என்று ‘விடுதலை'யில் அறிக்கை வெளிவந்தது. நாங்கள் சென்று நேரில் ஆராய்ந்து பார்த்ததில், அதுபோன்றுதான் இருந்தது. பிறகு நாங்கள் எங்களை சரிப்படுத்திக் கொண்டோம்; திருத்திக்கொண்டோம். ‘விடுதலை' என்ன சொல்கிறது பார்த்து, திராவிடர் கழகம் காட்டும் வழிகாட்டுதலின்படிதான் நாங்கள் செயல்படுவோம் என்று சொல்லியிருக்கிறார்.
இதுபோன்ற வாய்ப்பு ‘விடுதலை' ஏட்டைத் தவிர, வேறு எந்த ஏட்டிற்கு உண்டு?
பாதிக்கப்பட்ட அரசு ஊழியர்களுக்கோ - மற்றவர்களுக்கோ பரிகாரம் கிடைப்பது ‘விடுதலை’யால்தான்!
‘விடுதலை' ஏடு பல இடங்களுக்குப் போகாமல் இருக்கலாம். ஆனால், பாதிக்கப்பட்ட அரசு ஊழியர்கள், மற்றவர்கள் எல்லாம்-
‘‘எங்களுடைய கோரிக்கைகள்பற்றி ‘விடுதலை' யில் செய்தி வெளிவந்தால், உடனே அரசாங்கத்தின் கவனத்திற்குப் போகும்; உடனே எங்களுக்குப் பரிகாரம் கிடைக்கும்’’ என்று சொல்கிறார்கள்.
இந்த சக்தி வேறு எந்த ஏட்டிற்காவது உண்டா? என்று நினைத்துப் பாருங்கள் தோழர்களே!
நம் பெருமைக்காக இதைச் சொல்லவில்லை. உண்மையின் அடிப்படையில் நாம் பத்திரிகை நடத்துகின்றோம்.
எந்தத் தொல்லைகள் ஏற்பட்டாலும், அதை எதிர்கொள்ளக் கூடிய அளவிலே இருக்கிறோம் - நெருக்கடிகாலம் முதற்கொண்டே!
ஏவுகணையைவிட சக்தி வாய்ந்த கருவியை நமக்குக் கொடுத்திருக்கிறார்!
பிறக்கும்பொழுதே அடக்குமுறையில்தான் பிறந்தது!
அய்யா என்ற பேராசான், ஒரு பெரிய பாசறை நடத்தி, நமக்கு ஒரு கருவியைக் கொடுத்துவிட்டுப் போயி ருக்கிறார். போர்ப் பயிற்சியையும் நமக்கு அளித்தி ருக்கிறார். அதோடு, ஏவுகணையைவிட சக்தி வாய்ந்த கருவியை நமக்குக் கொடுத்திருக்கிறார்.
அந்தக் கருவி யாராலும் பறிக்கப்பட முடியாத கருவியாகும் - ‘விடுதலை' என்ற போர்க் கருவி.
அந்த விடுதலை நாளிதழ் எல்லாவற்றையும் தாங்கியி ருக்கிறது. எதிரிகளை அதுதான் அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது.
காலையில்கூட தி.மு.க. எம்.பி. ஜெகத்ரட்சகன் அவர்கள் எங்கள் தெருவில் வசிப்பவர் - ஒவ்வொரு பிறந்த நாளின்போதும், அவருடைய இல்லத்திற்குச் சென்று, வாழ்த்திவிட்டு வருவேன். அதேபோல், இன்றும் வாழ்த்திவிட்டு வெளியே வரும்பொழுது, என்னுடைய கையைப் பிடித்து ‘வணக்கம்'ங்க என்றார். யார் என்று பார்த்தால், துக்ளக் ரமேஷ் - நாமம் போட்டுக் கொண்டிருப்பவர்.
‘‘உங்களைத் திடலில் வந்து பார்க்கிறேங்க’’ என்றார்.
‘‘என்னய்யா, எப்படி இருக்கீங்க, நல்லா இருக் கீங்களா?’’ என்று கேட்டுவிட்டு,
‘‘உங்கள் ஆசிரியர், ‘விடுதலை'யைப் பார்ப்பேன், படிப்பதில்லை என்று சொல்லியிருக்கிறார். அவ்வளவு பயப்படவேண்டாம், தாராளமாகப் படிக்கச் சொல்லுங்கள்’’ என்றேன்.
எதிரிகள் உள்ளே நுழைந்துகொண்டிருக்கிறார்கள்!
நம்முடைய ஏடு எல்லா துறைகளிலும் அதனுடைய வேலையைச் செய்கிறது.
ஆகவே, இப்பொழுது இருக்கின்ற நெருக்கடியில் எதிரிகள் உள்ளே நுழைந்துகொண்டிருக்கிறார்கள். ‘ட்ரோஜன் குதிரை' போன்று - ஏமாற்று வேலை.
இவை எல்லாவற்றையும் நாம்தான் எடுத்துச் சொல்ல முடியும்; செய்ய முடியும்.
அரசியல்வாதிகளுக்கும், மற்ற ஏடுகளுக்கும் - நமக்கும் என்ன வேறுபாடு?
‘விடுதலை’ ஏடு ஸ்கேன் மிஷின் போன்றது!
நம்முடைய விடுதலை ஏடு ஸ்கேன் மிஷின் - உடைந்த எலும்பை உடைந்த எலும்பாகத்தான் காட்டும். எங்கே புற்றுநோய்க் கிருமி இருக்கிறதோ, அதை அப்படியே காட்டும். நமது ஏடு சமுதாயத்தினுடைய அளவுகோல் ஆகும்.
மற்றவை அப்படியில்லை - போட்டோ கிராஃபி போன்றது - ஓவியரின் ஓவியம் போன்றது.
போட்டோ கிராஃபியில் எடுத்த படத்தை, கொஞ்சம் ‘டச்‘சப் செய்து கொடுங்கள் என்று சொல்வார்கள்.
ஸ்கேன் மிஷினில் எடுக்கப்பட்ட ரிப்போர்ட்டில், கொஞ்சம் ‘டச்' பண்ணி கொடுங்கள் என்று யாராவது கேட்க முடியுமா?
அதற்கு என்ன பரிகாரமோ அதனை செய்வது; மருத்துவ உதவியை மேற்கொண்டு, சிகிச்சை அளித்து வாழ வைப்பதுதான்.
ஸ்கேன் செய்வது எதற்காக? நோயிலிருந்து காப்பாற்றி ஒருவரை வாழ வைப்பதுதானே!
அறுவை சிகிச்சை எதற்காக?
நோய்க் கிருமியை முற்றிலும் ஒழிப்பதற்குத்தானே!
ஆகவே, சமுதாய நோய்களை ஒழிக்க, இவை அத்த னையும் செய்யக்கூடிய ஏடு நம்முடைய ஏடு!
தமிழ்நாட்டை காவி மண்ணாக்கவேண்டும் என்று முயற்சி செய்கிறார்கள்!
இன்றைய காலகட்டத்தில் சமுதாய நோய்க் கிருமிகள் வேகமாகப் பரவி, தமிழ்நாட்டை எப்படியாவது குறி வைத்து, இதை காவி மண்ணாக்கவேண்டும் என்று முயற்சி செய்கிறார்கள். இதற்கு, கார்ப்பரேட் காவி கூட்டணி உள்ளது.
கடந்த 10 ஆண்டுகாலத்தில் வெற்றிடம் என்று சொன்னார்கள்; அப்படியில்லை என்பதற்கு அடையா ளமாக நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி - சட்டப் பேரவை தேர்தலில் வெற்றி - ஊராட்சி மன்றத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளோம்.
இதை காவிகளால் பொறுத்துக் கொள்ள முடிய வில்லை; பணத்தை வாரி இறைக்கிறார்கள்; ரவுடித் தனத்தை கட்டவிழ்த்துவிடுகிறார்கள்; எல்லாவிதமான கீழ்த்தரமான வேலைகளிலும், வித்தைகளிலும் இறங்கியிருக்கிறார்கள்.
திராவிடர் கழகம் ஒன்றால்தான் முடியும் என்று சொல்கிறார்கள்!
ஆனால், அதை கவுண்ட்டர் பண்ணவேண்டும் என்றால், அதை சந்திக்கவேண்டும் என்றால், திராவிடர் கழகம் ஒன்றால்தான் முடியும் என்கிற கருத்து இருக்கிறதே - இதை நம்முடைய பெரு மைக்காக சொல்லவில்லை - இதைத்தான் எல்லாக் கட்சி நண்பர்களும் சொல்கிறார்கள்.
உங்களால்தான் முடியும் - நீங்கள்தான் செய்ய வேண்டும் என்று சொல்கிறார்கள்.
அவர்களுக்கு இல்லாத வீரம் நம்மிடம் இருக்கிறது என்று அர்த்தமா?
அல்லது அவர்களைவிட அறிவு நமக்கு அதிகமாக இருக்கிறது என்று அர்த்தமா?
இல்லை.
யாருக்கும் இல்லாத துணிச்சல்
நம்மிடம் இருக்கிறது!
அவர்களுக்கு இல்லாத துணிச்சல், நம்மிடம் இருக்கிறது என்பதுதான் உண்மை.
என்ன அந்தத் துணிச்சல்?
துறவிக்கு வேம்பும், துரும்பு!
நாம் எல்லாம் துறவி போன்றவர்கள் - ‘‘பெரியார் தொண்டர்கள் துறவி போன்றவர்கள்’’ என்று அய்யா சொன்னார்.
எனவேதான், அடக்கு முறை இல்லை - நாம் இறங்கிப் பணியாற்றவேண்டும்.
60 ஆயிரம் ‘விடுதலை’ சந்தாவினுடைய அடிப்படை என்னவென்றால், எல்லாப் பகுதிகளிலும் விடுதலை பரவவேண்டும். கிராமப்புறங்களில் ‘விடுதலை’யைக் கொண்டு சேர்க்கவேண்டும் என்று இங்கே சொன்னார்கள்.
இங்கே பேசிய தோழர்கள், நாங்கள் முடித்துவிடுவோம், எல்லா இடங்களுக்கும் சென்று சந்தாக்களை கேட்போம் என்றெல்லாம் சொன்னீர்கள்.
ஆரியூர் கிராமப்புற மக்கள்
113 சந்தாக்களைக் கொடுத்தனர்!
ஓர் அறிமுகமும் நம்மிடம் கிடையாது; ஒரு கல்லூரியில் பேராசிரியராக இருக்கக்கூடிய திரு மாமணி என்ற அம்மையார் அவர்கள் விழுப்புரம் பக்கத்திலுள்ள ஆரியூரைச் சேர்ந்தவர். அதற்கு முன்பு அறிமுகம் கிடையாது நமக்கு. அவருடைய தந்தையார் பேராசிரியர் ஜெகதீசன், ஓய்வு பெற்ற அரசு ஊழியர்.
அவர் ஒரு புத்தகம் எழுதி, அதை பெரியார் திடலுக்கு வந்து அந்தப் புத்தகத்தை என்னிடம் கொடுத்தார்கள்.
அன்றைக்கு வெளிவந்த ‘விடுதலை’யில் விடுதலை சந்தா திரட்டிக் கொடுங்கள்; ‘விடுதலை’ பரவவேண்டும் என்று மதுரையில் தீர்மானம் போட்டதை படித்துவிட்டு,
113 ‘விடுதலை’ சந்தாக்களை ஆரியூர் கிராமத் தைச் சேர்ந்தவர்கள் கொடுத்தார்கள்.
‘‘வீடுதோறும் விடுதலை’’ என்பதை அப்படியே நடத்திக் காட்டியிருக்கிறார்கள்.
‘‘இல்லந்தோறும் விடுதலை’’ என்ற கருத்து அப்படியே நடைமுறைப்படுத்தப்பட்டது!
இது வெறும் அழகுச் சொல் இல்லை - அலங் காரச் சொல் இல்லை - பெருமைக்கான சொல் அல்ல;
‘‘இல்லந்தோறும் விடுதலை - மக்கள்
உள்ளந்தோறும் பெரியார்’’ என்ற கருத்து அப்படியே நடைமுறைப்படுத்தப்பட்டது.
இதைப் பார்த்து நானும், கவிஞர் அவர்களும் இன்ப அதிர்ச்சி அடைந்தோம். அதைப் பாராட்டி விடுதலையில் எழுதினோம்.
விழுப்புரம் மாவட்டத் தோழர்கள் நேரில் சென்று அவர்களைப் பாராட்டியபொழுதுகூட,
நன்றி உணர்ச்சியோடு நாங்கள் இந்தப் பணியை மேற்கொண்டோம் என்றனர்!
எங்களைப் பாராட்டவேண்டிய அவசியம் இல்லீங்க; ‘விடுதலை’யைப் படித்தோம், நன்றி உணர்ச்சியோடு நாங்கள் இந்தப் பணியை மேற்கொண்டோம்’’ என்று அடக்கமாகப் பதில் சொல்லியிருக்கிறார்கள்.
அதற்கு அடுத்து சில நாள்கள் கழித்து (4.8.2022) அலுவலகத்திற்கு நான் வரும்பொழுது, வெளியில் பறையிசை கருவிகளுடன் சிலர், திருநங்கைகள் சிலர் இருந்தார்கள்; இன்னும் சில தோழர்களுடன் திருமாமணி அம்மையாரும் இருந்திருக்கிறார்.
சரியாக நான் கவனிக்கவில்லை. ஏதோ மனு கொடுக்க வந்திருக்கிறார்கள் என்று நினைத்தேன்.
உள்ளே சென்ற பிறகு, அவர்களை உள்ளே வரச் சொன்னேன்.
அலமேலுபுரத்தை சேர்ந்தவர்கள்
134 ‘விடுதலை’ சந்தாக்களைக் கொடுத்தனர்!
அப்பொழுது, அந்த அம்மையார் ஒரு பெரிய பட்டியலைக் கொடுத்தார்கள்; விழுப்புரம் மாவட் டத்தில் உள்ள அலமேலுபுரத்தைச் சேர்ந்தவர்கள் கொடுத்த 134 ‘விடுதலை’ சந்தாத் தொகைக்கான காசோலையை வழங்கினார்.
விழுப்புரம் மாவட்ட அலமேலுபுரம் ‘விடுதலை’ நாளிதழுக்கான சந்தாதாரர்கள் விவரம் என்ற தலைப்பில் அந்தச் செய்தி ‘விடுதலை’யில் வெளி வந்ததை நீங்கள் எல்லோரும் பார்த்திருப்பீர்கள்.
எனக்கு உள்ளபடியே
அவ்வளவு பெரிய உற்சாகம்
முதல் முறை 113 விடுதலை சந்தாக்கள்; இரண்டாம் முறை 134 விடுதலை சந்தாக்களைக் கொடுத்தனர்.
1. திருநங்கைகள் 41 பேர்
2. நரிக்குறவர் காலனி 6 பேர்
3. சுயஉதவிக் குழு மகளிர் 17 பேர்
4. இருளர்கள் (பழங்குடியினர்) 8 பேர்
5. பறையடிப்போர் சங்கம் 6 பேர்
6. புரதவண்ணார்கள் 11 பேர்
7. கிராமக் கோவில் பூசாரிகள் 9 பேர்
8. டாக்டர் அம்பேத்கர் ஆட்டோ ஓட்டுநர் சங்கம் 12 பேர்
9. துப்புரவுப் பணியாளர்கள் 9 பேர்
10. தேநீர்க் கடைக்காரர்கள் 2 பேர்
11. வேடம்பட்டு மாரியம்மன் கோவில் தெரு (காலனி) 10 பேர்
12. அறிஞர் அண்ணா மூட்டைத் தூக்கும் தொழி லாளர் சங்கம் 3 பேர்
ஆகக் கூடுதல் 134 சந்தாக்கள்!
இதைப் பார்த்த எனக்கு உள்ளபடியே அவ்வளவு பெரிய உற்சாகம் ஏற்பட்டது.
எல்லாத் தரப்பு மக்களிடமும் ‘விடுதலை’ நாளிதழ் போகவேண்டும் என்று சொல்கிறேமோ, அது இதுதான்.
இந்த 60 ஆண்டுகால ஆசிரியர் பணியில், நான் ‘விடுதலை’யில் இருந்து சம்பளம் வாங்கியது இல்லை.
இது பெருமையல்ல - அது கொள்கை ரீதியாக எடுக்கப்பட்ட முடிவு.
சிறப்பு மதிப்பூதியம் வேறு எதுவும் கிடையாது
ஆனால், ஆரியூர், அலமேலுபுரம் கிராமங்களைச் சேர்ந்தவர்கள் கொடுத்த ஊதியம் இருக்கிறதே - அதைவிட சிறப்பு மதிப்பூதியம் வேறு எதுவும் கிடையாது - என்னுடைய உழைப்புக்குப் பணிக்கு!
நம்மால் முடியும் என்பதற்கு உதாரணம்தான் - ஒரு சாதாரண கிராமத்தில், அடையாளம் தெரியாத ஒரு பெண்மணி - ஒரு குடும்பத்தினர் முன்னணியில் இருந்து, பணி செய்து இப்பெரும் பணியை செய்திருக்கிறார்கள்.
எவ்வளவோ அறிமுகம் உள்ள உங்களால், இடையில் உள்ள 10 நாள்களுக்கும் இலக்கை முடிக்க முடியுமா? முடியாதா?
அந்தத் தன்னம்பிக்கையோடு களத்தில் இறங்க வேண்டும்.
60 ஆயிரம் சந்தாக்களுக்கு மேலும் கொடுப்போம் என்ற வாய்ப்புகளை உருவாக்கவேண்டும்!
60 ஆயிரம் சந்தாக்கள் அல்ல - அதற்கும் மேல் 61 ஆயிரம் சந்தாக்களாகக் கொடுப்போம் என்ற அளவிற்கு வாய்ப்புகளை உருவாக்கிக் காட்டவேண்டும் நீங்கள்.
அப்படி இல்லையென்றால், இப்பொழுது இருக்கின்ற ஆபத்து, புதிய கல்வி கொள்கை என்ற பெயராலே குலதர்மக் கல்வித் திட்டம் - நீட் தேர்வு - கியூட் தேர்வு என்று புதிய உருவில் வருகின்றன.
மனுதர்மம் கோலோச்சுகிறது. மாநில உரிமைகள் பறிக்கப்பட்டு இருக்கின்றன
நம்முடைய கல்வி, மனுதர்மக் கல்வியாகிவிட்டது - மனுதர்மம் கோலோச்சுகிறது. மாநில உரிமைகள் பறிக்கப்பட்டு இருக்கின்றன.
நீதிக்கட்சித் தலைவர்களும், அய்யாவும், அண்ணா வும், கலைஞரும் பெற்றுக் கொடுத்து, இன்றைக்குத் ‘திராவிட மாடல்’ ஆட்சி தனித்தன்மையோடு தமிழ் நாட்டில் இருந்து கொண்டிருக்கின்ற நேரத்தில், அதை அப்படியே தலைகீழாக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள்.
விபீஷணர்கள் தயாராக இருக்கிறார்களே...!
இந்த மண்ணில் யாரும் காலூன்ற முடியாது என்று சொல்லிக் கொண்டிருக்கும் நேரத்தில், உள்ளே நுழைகிறானே? நம்மாள் துரோகி கிடைக்கின்றானே - விபீஷணர்கள் தயாராக இருக்கிறார்களே - தன்னை விற்றுக்கொள்ளக் கூடியவர்களின் கூட்டம், நம் மக்கள் மிக அதிகமாக இருக்கிறதே!
அப்படிப்பட்ட சூழ்நிலையில், அதைத் தடுக்கக் கூடிய ஒரே சக்தி - ‘விடுதலை’ ஏடு, திராவிடர் கழகத்திற்குத்தான் உண்டு.
இதில் நாம் கோட்டை விட்டுவிட்டோம் என்றால், நம்மீது பெரிய பழி ஏற்படும்.
எதிர்கால சந்ததியினருக்காக பெரியார் பெற்றுக் கொடுத்தார் - நம்முடைய இயக்கத் தலைவர்கள் எல்லாம் பாடுபட்டார்கள் - நீதிக்கட்சி காலத்திலிருந்து - மறுபடியும் மனுதர்மம் கோலோச்சிவிடும். அம்பேத் கருடைய அரசமைப்புச் சட்டத்திற்கு இடமிருக்காது; நம்முடைய ஜனநாயகத்திற்கு இடமிருக்காது.
இந்த ஆபத்துகளை விளக்கி, அதனால்தான் அய்யா உங்களிடம் ‘விடுதலை’ சந்தா கேட்கிறோம்.
நாம் அறிவுபூர்வமாக அணுகுகின்றோம்!
ஆறு மாத சந்தா என்றால், 1000 ரூபாய் கொடுங் கள்; ஓராண்டு சந்தா என்றால், 2000 ரூபாய் கொடுங் கள். நீங்கள் ஒரு நான்கு பேரிடம் சொல்லுங்கள் என்று சொல்லுங்கள்.
நாம் அறிவுபூர்வமாக அணுகப் போகிறோமே தவிர, பழைய காலம்போன்று ‘‘திருப்பதி நோட் டீசை 12 பேருக்கு அச்சடித்துக் கொடுக்கவேண்டும்; இல்லையென்றால் நரகத்திற்குப் போவீர்கள்; பாம்பு கடிக்கும் என்றெல்லாம் பயப்படுத்தப் போகி றோமோ’’ என்றால், கிடையவே கிடையாது.
ஆகவே, இதனை உணர்ந்துகொள்ளுங்கள் என்று சொல்லி, வாய்ப்பளித்த உங்களுக்கு நன்றி கூறுகிறேன்.
25 ஆம் தேதிக்குள் இலக்கை முடிக்கவேண்டும்
10 நாள்களுக்கு உங்களுக்கு வேறு சிந்தனையே இருக்கக்கூடாது - அப்படி செயல்பட்டால்தான், 25 ஆம் தேதிக்குள் இலக்கை முடிக்கவேண்டும்; அப்படி முடித் தால்தான், 27 ஆம் தேதி நிகழ்ச்சி நடத்தவேண்டி இருக்கும்.
மற்றவர்கள் வேறு விதமாகச் சொல்வார்கள் - நாம் உண்மைக்கு மாறாக நடந்துகொள்வதில்லை.
விடுதலை சந்தா கேட்டுச் செல்கிறவர்கள் எல்லாம் கொடுக்கிறேன் என்றுதான் சொல்கிறார்கள்; இன் றைக்குத் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் அவர்கள் 200 விடுதலை சந்தாக்களை கொடுக்கிறேன் என்று அறிவித்து, நாளை நடைபெறும் அவருடைய பிறந்த நாள் விழாவில் கொடுக்கிறேன் என்று சொல்லியிருக்கிறார்.
ஒவ்வொரு தலைவரும் உற்சாகத்தோடு ‘விடுதலை’ சந்தாக்களைக் கொடுக்கிறார்கள். அதை நாம் பயன் படுத்திக் கொள்ளவேண்டும்.
உழைப்போம்! வெற்றி பெறுவோம்!
உழைப்பைக் கொடுத்து, உரம் போட்டு அறுவடை செய்த நெல்லை பாதுகாப்பாக களத்து மேட்டுக்குக் கொண்டு சென்று, வீட்டிற்குக் கொண்டு வரும் காலகட்டம் வருகின்ற 10 நாள்களும்!
ஆகவே, கவனமாக இருங்கள்!
உழைப்போம்! வெற்றி பெறுவோம்!
சந்திப்போம்!
வாழ்க பெரியார்!
வளர்க விடுதலை!
நன்றி, வணக்கம்!
- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக