ஞாயிறு, 7 ஜூலை, 2019

கழக இளைஞரணி தோழர் சண்முகப்பிரியன் - விஜித்திரா மணவிழாவில் தமிழர் தலைவர் உரை

வைதீகர்கள் நடுங்கும் சனிக்கிழமையில் திருமணம் செய்துகொண்டதற்காகப் பாராட்டுகிறோம்


நாளும் - கிழமையும் நலிந்தோர்க்கு இல்லை என்று கூறிக்கொண்டே நாள் பார்ப்பது - நட்சத்திரம் பார்ப்பது சரியா?




சென்னை, ஜூலை 7  வைதீகர்கள் அஞ்சி நடுங்கும் சனிக்கிழமையில் இந்தத் திருமணத்தை நடத்திக் கொள் ளும் கழக இளைஞரணி தோழர் சண்முகப்பிரியனைப் பாராட்டுகிறோம். நாளும், கிழமையும் நலிந்தோர்க்கு இல்லை என்று கூறிக்கொண்டே, நாள் நட்சத்திரம் பார்ப்பது ஏன்? என்ற அறிவார்ந்த வினாவை எழுப்பினார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

8.6.2019 அன்று மாலை சென்னை ஆழ்வார்ப்பேட்டை டி.டிகே. சாலையில் உள்ள சமுதாய நலக் கூடத்தில் நடைபெற்ற சண்முகப்பிரியன் - விஜித்திரா  ஆகியோரின் வாழ்க்கை இணை ஒப்பந்த விழாவில்  திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.

அவரது உரை வருமாறு:

சண்முகப் பிரியன் - விஜித்திரா மணவிழா


சண்முகப் பிரியன் - விஜித்திரா ஆகியோருடைய வாழ்க்கை இணையேற்பு விழா நிகழ்ச்சிக்கு வருகை தந்து சிறப்பான ஒரு உரையை ஆற்றிய, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினரும், மேனாள் சட்டப்பேரவை உறுப்பினரும், தலைசிறந்த மகளிர் புரட்சியாளருமான அன்பிற்கும், பாராட்டிற்கும் உரிய பாலபாரதி அவர்களே,

இந்நிகழ்வில் வரவேற்புரையாற்றிய இயக்க இளைஞர் களுடைய அருமைத் தோழர்களில் முக்கியமான தோழர் செல்வேந்திரன் அவர்களே,

அறிமுக உரையாற்றிய தோழர் தமிழ்சாக்ரட்டீஸ் அவர்களே, அமைப்புச் செயலாளர் தோழர் பன்னீர் செல்வம் அவர்களே, மண்டலத் தலைவர் தோழர் இரத்தினசாமி அவர்களே, மண்டல செயலாளர் தோழர் கோபால் அவர்களே, தென்சென்னை மாவட்டத் தலைவர் தோழர் வில்வநாதன் அவர்களே, தென்சென்னை மாவட்ட செயலாளர் தோழர் பார்த்தசாரதி அவர்களே, கும்மிடிப்பூண்டி மாவட்டத் தலைவர் தோழர் ஆனந்தன் அவர்களே,

கழகப் பொதுச்செயலளர் தோழர் அன்புராஜ் அவர்களே, கழகப் பொதுச்செயலாளர் தோழர் ஜெயக் குமார் அவர்களே, மாநில மாணவர் கழக அமைப்பாளர் தோழர் குணசேகரன் அவர்களே,

அமைப்புச் செயலாளர் தோழர் மதுரை வே.செல்வம் அவர்களே,  மாநில இளைஞரணி செயலாளர் தோழர் இளந்திரையன் அவர்களே,

மற்றும் இணைப்புரை வழங்கிக் கொண்டிருக்கக்கூடிய பொறியாளர் குமார், இனியரசன் அவர்களே, நன்றியுரை கூறவிருக்கக்கூடிய விஜயராஜா அவர்களே,

அருமைப் பெரியோர்களே, தோழர்களே, தாய்மார் களே, மன்றல் கொண்டிடும் மணமக்களின் பெற்றோர் களான அருமை அய்யா முனுசாமி அவர்களே, அம்மா ராணி அவர்களே,  அதேபோல, சென்னை விஜயன் அவர்களே, பாரதி அவர்களே உங்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பான வணக்கத்தினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த மணவிழாவை தோழர்கள் சண்முகப்பிரியன் - விஜித்திரா ஆகிய இருவருடைய வாழ்க்கை இணையேற்பு விழாவாக நடத்தி வைப்பதில், உங்களைப் போலவே நாங்களும் எல்லையற்ற மகிழ்ச்சியை அடைகின்றோம்.

தந்தை பெரியார் அவர்கள் உடலால் மறைந்து, உணர்வால் நிறைந்த 46 ஆண்டுகளுக்குப் பிறகு...

இந்த மணவிழா வெறும் மணவிழா மட்டுமல்ல, தந்தை பெரியார் அவர்கள் உடலால் மறைந்து, உணர்வால் நிறைந்த 46 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த இயக்கம் எவ்வளவு சிறப்பான கொள்கை இயக்கமாக இருக்கிறது என்பதற்கு எடுத்துக்காட்டுத்தான், தோழர்கள் சண்முகப் பிரியன் - விஜித்திரா ஆகிய இருவருடைய வாழ்க்கை இணையேற்பு விழாவாகும்.

பெரியார் காலத்தில் இல்லாத இளைஞர் கூட்டத்தை இங்கே நீங்கள் பார்க்கிறீர்கள்!


எல்லா வகையிலும், இந்தக் கொள்கை இருக்குமா பெரியாருக்குப் பிறகு என்று கேட்டார்கள். பெரியாரோடு இந்தக் கொள்கை முடிந்துவிடும்; ஊருக்கு நான்கு வயதானவர்கள் இருப்பார்கள்; கிழவர்கள் இருப்பார்கள். அவர்கள் பெரியாருக்கு விருந்து கொடுப்பார்கள், பெரியாரை வைத்து கூட்டம் நடத்துவார்கள். அதுவும் பெரியாரோடு முடிந்துவிடும் என்றெல்லாம் சிலர் ‘ஆரூடம்' சொன்னார்கள்; சிலர் தவறாகக் கணித்தார்கள். ஆனால், பெரியார் காலத்தில் இல்லாத இளைஞர் கூட்டத்தை இங்கே நீங்கள் பார்க்கிறீர்கள்.

இந்த இளைஞர் கூட்டம் எல்லாம், கட்டுப்பாடு மிகுந்த இளைஞர் கூட்டம். ராணுவம் போல ஒரு கட்டுப்பாடு மிகுந்த இளைஞர் கூட்டம்.

இளைஞரணிக்கு வரும் இளைஞர்களே,


அய்ந்து ஆண்டுகளுக்கு உங்களுடைய திருமணத்தை தள்ளிப் போடுங்கள்


இந்த இளைஞர் கூட்டத்தில் ஒரு எடுத்துக்காட்டாக இருக்கின்றவர்தான் இன்றைய மணமகன் சண்முகப்பிரியன் அவர்கள். மணமகன் பெற்றோர்கள் எனக்குப் பயனாடை அணிவித்தார்கள். நியாயமாக அவர்கள் என்மேல் கோபப்பட்டு இருக்கவேண்டும். எதற்காக என்று கழகப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட தோழர்கள் விளக்கிச் சொன்னார்கள்.

திராவிடர் கழக இளைஞரணிக்கு வரும் இளை ஞர்களே, அய்ந்து ஆண்டுகளுக்கு உங்களுடைய திருமணத்தை தள்ளிப் போடுங்கள். திருமணம் செய் யாமல், இந்த இயக்கத்தின் சோதனையான காலகட்டத்தில், இயக்கப் போர் வீரர்களாக, இராணுவக் கட்டுப்பாடோடு இருங்கள் என்று ஈரோட்டில் நடைபெற்ற கூட்டத்தில் சொன்னபொழுது,

‘‘நான் அய்ந்தாண்டுகளுக்கு என்னுடைய திருமணத் தைத் தள்ளிப் போடுகிறேன்'' என்று சொன்ன இளைஞ ருக்குத்தான் இன்றைக்கு மணவிழா.

எனவேதான், சொன்னேன் நியாயமாக என்மீது அவர்களுடைய பெற்றோர்கள் கோபப்பட்டு இருக்க வேண்டும். ஆனால், அவருடைய பெற்றோர் எவ்வளவு முதிர்ந்தவர்கள் என்பதற்கு அடையாளம், எவ்வளவு சிறந்தவர்கள் என்பதற்கு அடையாளம், பாராட்டத் தகுந்தவர்கள் என்பதற்கு அடையாளம் என்றால், அவர்கள் என்னை வரவேற்றார்கள்.

பெரியாரின் பெருங்குடும்பம்!


காரணம், அவர்களைப்போலவே, நாங்களும் இந்தப் பிள்ளைகளுக்குப் பெற்றோர்கள். தலைவர் என்பதோடு மட்டுமல்ல, வழிகாட்டக் கூடியவர்கள் என்பதோடு மட்டுமல்ல, இவர்கள் எங்கள் குடும்பம். பெரியாரின் பெருங்குடும்பம் என்பது எத்தகைய கொள்கைக் குடும்பம் என்பதற்கு இந்த மணவிழா ஒரு வெற்றித் திருவிழா! ஒரு அற்புதமான எடுத்துக்காட்டான விழா! அதைத்தான் நான் முதலில் கோடிட்டுக் காட்டினேன்.

இரண்டு, மூன்று விஷயங்களைச் சொல்லலாம். இந்த மணவிழா நூற்றுக்கு நூறு மதிப்பெண் வாங்கக்கூடிய மணவிழாவாகும்.

நீட் தேர்வில் போடுகிற மதிப்பெண் போன்றதல்ல; கார்ப்பரேட் நிறுவனத்தில் படித்து, மூன்றாண்டுகள் கழித்து வாங்குகின்ற மதிப்பெண் போன்றதல்ல.

இது உள்ளபடியே, கொள்கை வாழ்வு வாழ்ந்து, பல் வேறு சோதனைகளை வைத்து, நடைபெறுகின்ற மணவிழா.

அது என்ன என்று கேட்பீர்கள். சுருக்கமாகச் சொல்லாமல், மிகத் தெளிவாக சில கருத்துகளை நான் கோடிட்டுக் காட்ட விரும்புகிறேன்.

அறிவுபூர்வமாக சிந்தித்துப் பார்த்தால்...


இன்றைய நாள், வாரத்தில் என்ன கிழமை? சனிக் கிழமை. இந்த நாளில் திருமணம் நடத்த மாட்டார்கள். காரணம், பக்தி அவர்களை மிரட்டி வைத்திருக்கிறது.

எல்லாக் கிழமையும் போலத்தான் சனிக்கிழமையும். இன்னுங்கேட்டால், சனிக்கிழமை மாலை மணவிழாவினை வைத்தால், எல்லோருக்கும் வசதி. எவ்வளவு நேரம் ஆனாலும், இருந்து விருந்து உள்பட சாப்பிட்டுவிட்டு, மகிழ்ச்சியாக வாழ்த்திவிட்டுச் செல்வார்கள். அறிவுபூர்வ மாக சிந்தித்துப் பார்த்தால், சனிக்கிழமை மிகவும் பயன் படும்.

ஆனால், வைதீக சிந்தனை உடையவர்கள், மூட நம்பிக்கை உடையவர்கள் சனிக்கிழமையன்று திரு மணத்தை நடத்தமாட்டார்கள்.

அதனால், எங்களுக்குத்தான் லாபம். மணவிழா நடத்துகின்றவர்களுக்கு லாபம். இன்றைக்குத் திருமண மண்டபத்திற்கு கிராக்கி கிடையாது. வேறு கிழமை என்றால், மண்டபத்திற்குக் கிராக்கி இருக்கும். சில திருமண மண்டப உரிமையாளர்கள், சனிக்கிழமைகளில் மணவிழா நடத்தினால், குறைந்த வாடகைக்குக்கூட விடுவார்கள். எங்களைத் தவிர வேறு யாரும் சனிக்கிழமையில் மண விழாவை நடத்தமாட்டார்கள்.

இதற்குத் தேவை துணிவு. இந்தத் துணிவைத்தான் தந்தை பெரியார் அவர்கள் கொடுத்திருக்கிறார்.

சனிக்கிழமை என்றால் என்ன? ஞாயிற்றுக்கிழமை என்றால் என்ன?

‘நாளும் கிழமையும் நலிந்தோருக்கு இல்லை' என்ற பழமொழியை நாங்கள் உண்டாக்கியது இல்லை.

கொஞ்சம் விட்டுக் கொடுப்பதினால்


தவறில்லை!


‘நாளும் கிழமையும் நலிந்தோருக்கு இல்லை' என்று சொல்லிவிட்டு, இன்னொரு பக்கத்தில் நாள் பார்க்கிறார்கள், நட்சத்திரம் பார்க்கிறார்கள்.

பக்குவம் இல்லாதவர்கள், நம்முடைய கொள்கை உள்ள குடும்பத்தவர்கள் - இரண்டு குடும்பங்கள் இணைய வேண்டும் மணவிழாவில். ஒரு குடும்பம் பக்குவமாக இருப்பார்கள்; இன்னொரு குடும்பம் வைதீக நம்பிக்கை உடையவர்களாக இருப்பதினால், அவர்களுக்காக கொஞ்சம் விட்டுக் கொடுப்பதினால் தவறில்லை என்று, கொஞ்சம் நீக்குப் போக்காக இருப்போம், முரட்டுத்தனமாக இருக்கமாட்டோம்.

முகூர்த்த நேரம் போகப் போகிறது, திருமணத்தை முடித்துவிடலாமே, ராகுகாலம் வருகிறது; எமகண்டம் குறுக்கிடுகிறது என்று சொல்கின்ற காலகட்டத்தில், சனிக்கிழமையைத் தேர்ந்தெடுத்து, கொள்கை வெற்றியை நிலைநாட்டிக் காட்டியிருக்கிறார்கள் மணமக்கள். மண மக்களைவிட, இதற்கு ஒப்புக்கொண்ட மணமக்களின் பெற்றோர்கள் பாராட்டத்தகுந்தவர்கள், அவர்களை வெகுவாக நான் பாராட்டுகிறேன்.

அடுத்ததாக, மாலை நேரத்தில் நடைபெறுகிற திரு மணம் இது.  மணவிழாக்களை காலையில்தான் நடத்து வார்கள். வடநாட்டில், ஆந்திரா போன்ற மாநிலங்களில் மாலையில்தான் திருமணம் நடைபெறும். வைதீகத் திருமணம் டில்லியில் இரவில்தான் நடைபெறும்.

நம்முடைய மூளைக்கு


விலங்கு போட்டு விட்டார்கள்


ஆனால், நம்முடைய தமிழ்நாட்டில், சுபயோக சுபதினம் முகூர்த்த நேரம் என்று சொல்லி, காலையில் பல் துலக்காமல், குளிக்காமல் வேக வேகமாக வந்து, காலை 4.30 மணிக்கு, 5.30 மணிக்கு, 6.30 மணிக்கு என்றெல்லாம் சொல்லி, மூடநம்பிக்கைக்கு ஆட்படுத்தி நம்முடைய மூளைக்கு விலங்கு போட்டு விட்டார்கள்.

கைகளில் விலங்கு போட்டால், அது பொருளாதாரத் தடை

கால்களில் விலங்கு போட்டால், அது அரசியல் தடை

மூளையில் விலங்கு போட்டால், அது பகுத்தறிவுக்குத் தடை - நம் பண்பாட்டுப் படையெடுப்புக்கு அடையாளம்.

ஆகவே, அதுபோன்ற ஒரு பயத்தை உண்டாக்கி வைத்துவிட்டார்கள்.

முதலில், தன்னம்பிக்கை, தன்மானம், தன்னிறைவு. அடியெடுத்து வைக்கும்பொழுதே உறுதியாக அடி யெடுத்து வைக்கிறவன் தடுமாறவே மாட்டான். வழுக்கி விழுவதற்கான வாய்ப்பே கிடையாது. எங்களுடைய தோழர்கள் உறுதியாக அடியெடுத்து வைக்கிறார்கள். துணிச்சல் சிகரங்களாக, உருவங்களாக அவர்கள் இருக்கிறார்கள்.

மணமக்களும் கருப்புடை -


தலைமை வகிப்பவர்களும் கருப்புடை


அடுத்ததாகப் பாருங்கள், மிக முக்கியமாக இயக் கத்திற்காக தன்னுடைய மணவிழாவினை அய்ந்தாண்டு கள் தள்ளிப் போட்டார் என்பது ஒரு பக்கம் இருக்கட்டும். மணமக்கள் இருவரையும் கொஞ்சம் உற்றுப் பாருங்கள்.

மணமகன் சண்முகப்பிரியன் கருப்புச் சட்டை அணிந்திருக்கிறார். அதேபோன்று, மணமகள் விஜித்திரா - அய்.பி.எஸ். தேர்வுக்கு அவர்கள் தயாராகிறார் என்பது பாராட்டுக்குரியது; விரைவில் அவரை அய்.பி.எஸ். ஆகப் பார்ப்போம் என்பதில் சந்தேகமேயில்லை. மணமகளான அவரும் கருப்புடை அணிந்திருக்கிறார். தலைமை வகிக்கின்றவர்களும் கருப்பு உடை அணிந்திருக்கிறார்கள். இந்தக் கருப்பு விடாது கருப்பு.

தாய்மார்களுக்காக சொல்கிறேன், விளங்கிக் கொள்வதற்காக சொல்கிறேன்.

மணவிழாவிற்காக புடவை எடுப்பதற்காக கடைக்குச் செல்லும்பொழுது, அங்கேயுள்ள புடவைகள் எல்லா வற்றையும் எடுத்துப் போடச் சொல்வார்கள். எல்லாப் புடவைகளையும் பார்த்துவிட்டு, ‘‘வேறு புடவை இல்லையா?'' என்று கேட்பார்கள்.

கடைக்காரரோ, ‘‘ஏம்மா, இவ்வளவு புடவை எடுத்துப் போட்டிருக்கிறேனே, இதில் ஒன்று கூடவா உங்களுக்குப் பிடிக்கவில்லை?'' என்றவுடன்,

இந்தப் புடவை நன்றாகத்தான் இருக்கிறது; மண விழாவிற்காக இந்தப் புடவையை எடுக்கிறோம்.  ஆனால், இந்தப் புடவையில் ஒரு கருப்பு இழை ஓடுகிறதே? அதற்காகத்தான் வேறு புடவையை கேட்கிறோம் என்பார்கள்.

அழகு என்றாலே, கருப்புதான். ஆகவே, கருப்பு நிறைய பேருக்குப் பிடித்த கலராகும். அதிலொன்றும் சந்தேகமேயில்லை. அப்படியிருக்கும்பொழுது, ஒரு பயத்தை உண்டாக்கி, அந்தப் புடவையில் ஒரு கருப்பு இழையோடுகிறது என்று சொல்கிறார்கள்.

ஆனால், இங்கே அப்படியில்லை. மணமகளே, கருப்பு உடைதான் அணிந்திருக்கிறார்கள்.

கருப்புதான் நீதியைப் பெற்றுத்தரும் சின்னம்!


நீதிமன்றத்தில் தீர்ப்பு சொல்லும் நீதிபதியினுடைய உடை கருப்புதான். வழக்குரைஞர்களின் உடை கருப்பு தான். எனவே, கருப்பு வெறும் இழிவுச் சின்னம் அல்லது துக்கச் சின்னம் என்று ஒரு பக்கத்தில் இருந்தாலும், இன்னொரு பக்கத்தில் அதுதான் நீதியைப் பெற்றுத்தரும் சின்னம் என்பதை மறந்துவிடாதீர்கள்.

எனவே,


கருப்புடைத் தரித்தோர் உண்டு


கொடுமையை நறுக்கியே திரும்பும் வாட்கள்


என்று கலைஞர் அவர்கள் எழுதினார்.

அதுபோன்று, முழுக்க முழுக்க அந்த சிந்தனையை வைத்துக்கொண்டு, இந்த மணமக்கள் வாழ்க்கை

இணையேற்பு விழாவினை மிகச் சிறப்பாக நடத்திக் கொள்ளவிருக்கிறார்கள்.

எனவே, இந்த மணவிழாவில், முதலில் மூடநம்பிக்கை இல்லை. தன்னம்பிக்கை இருக்கிறது. துணிவு இருக்கிறது. ஆகவே, இந்த மணமக்கள் இருவரும் தெளிவானவர்கள். இங்கே நம்முடைய தமிழ் சாக்ரட்டீஸ் பேசும்பொழுதும் சொன்னார்.

வன்முறையில்கூட இறங்கிவிடுவார்!


ஒரு நாள் நான் அலுவலகத்தில் எழுதிக் கொண் டிருந்தபொழுது,  ‘சன் நியூஸ்' தொலைக்காட்சியில் ஒளிப் பரப்பிய ஒரு நிகழ்ச்சியில், தோழர் சண்முகப்பிரியன் அவர்கள் கடுமையாகவும், அருமையாகவும் பதில் சொன்னார். பிறகு அவரை  நான் அழைத்து உற்சாகப் படுத்தினேன், பாராட்டினேன்.

இங்கே உரையாற்றிய நண்பர்கள் சொல்லும்பொழுது, ‘‘இயக்கத்தைப்பற்றி யாராவது ஏதாவது  தவறாகச் சொன்னால், கோபம் வரும். வன்முறையில்கூட இறங்கி விடுவார்'' என்று சொன்னார்கள்.

ஒரு இயக்கத்தில், எல்லா வகையான


தோழர்களும் தேவை


வன்முறை தவிர்க்கப்படவேண்டியதுதான். ஆனால், இயல்பான மனிதனுக்கு கோபம் வரவேண்டிய நேரத்தில், கோபம் வரவேண்டும். அதனால், அதனை மாற்றிக் கொள்ளுங்கள் என்று நாங்கள் சொல்லமாட்டோம். அதை ஒழுங்குபடுத்திக் கொள்ளுங்கள் என்று சொல்லலாம். அதனை மாற்றிக் கொள்ளவேண்டிய அவசியமில்லை. அப்படி மாற்றிக்கொண்டால், கோபம் வரவேண்டிய நேரத்தில், கோபம் இல்லாததுபோன்று காட்டிக்கொண் டால், ஏமாற்றுகிறார்கள் என்று அர்த்தம்; நடிக்கிறார்கள் என்று அர்த்தம். ஆகவே, மாற்றிக் கொள்ளவேண்டிய அவசியமில்லை. யார் யாருடைய சுபாவம் என்னவோ, அப்படியே இருக்கவேண்டும்.

ஒரு இயக்கத்தில், எல்லா வகையான தோழர்களும் தேவை. இதை நான் சொல்லவில்லை. லெனின் சொல் லியிருக்கிறார்; ஸ்டாலின் சொல்லியிருக்கிறார்.

தந்தை பெரியார் அவர்களும் சொல்லியிருக்கிறார். நம்முடைய பாதுகாப்பு, நம்முடைய கொள்கைப் பாது காப்பு வேண்டும் அல்லவா. உடல் பாதுகாப்பிற்காக கத்தி வைத்துக் கொள்கிறோம். கொள்கைப் பாதுகாப்பு நமக்கு வரவேண்டுமே!

ஆகவேதான் தோழர்களே, இந்த இயக்கம் என்பது எல்லா வகையான தோழர்களையும் கொண்டது. எனவே, அப்படிப்பட்ட ஒரு அற்புதமான இயக்க சொத்துக்களில் மிகவும் முக்கியம்.

நாம் பொதுக்கூட்டங்கள், மாநாடுகள் நடத்துவதற்காக நம்முடைய இளைஞர்கள் நன்கொடை வசூலுக்குச் செல்லும்பொழுது, அவர்களிடம் சிலர் கேட்பார்கள்.

இயக்கத்தின் அசையும் சொத்துகள்;


அசையா சொத்துகள்!


‘‘ஏங்க, பெரியாரிடம் இல்லாத சொத்தா? நிறைய சொத்துக்களை வைத்துவிட்டுப் போயிருக்கிறாரே?'' என்பார்கள்.

ஆமாம், பெரியார் ஏராளமான சொத்துக்களை வைத்திருக்கிறார். அசையா சொத்துக்கள் ஏராளம் இருக் கின்றன; அசையும் சொத்துக்களும் நிறைய இருக்கின்றன.

அசையா சொத்துக்கள் எதுவென்றால், அசையாத எங்கள் லட்சியங்கள்தான் பெரியார் தந்த அசையா சொத்துக்கள்.

அசையும் சொத்துக்கள் எதுவென்றால், சண்முகப்பிரியன் போன்ற, செல்வேந்திரன் போன்ற, இங்கே வந்திருக்கின்ற நம்முடைய எண்ணற்ற இளைஞர்கள்தான். இவர்கள்தான் அசையும் சொத்துக்கள்.

ஆகவே, இந்த இயக்கம் இருக்கிறதே, கொள்கையை சொல்லிக் கொடுத்து வளர்க்கின்ற இயக்கமாகும். எங்களுடைய இயக்கத்திற்கே தனி மரியாதை உண்டு. நான் இதனை கமிட்டியில்கூட சொல்லியிருக்கிறேன்.

எதிரிகளே நம்முடைய கொள்கையை வைத்துத்தான் சொல்வார்கள்!


அது என்னவென்றால், நாட்டில் ஏராளமான கட்சிகள், இயக்கங்கள் இருக்கின்றன. ஒரு கட்சியையோ, இயக் கத்தையோ ஆரம்பிப்பதற்கு ஒருவர் இருந்தாலே போதும். அப்படி இருக்கும்போது, அரசியல் கட்சியை ஆரம்பித்து தேர்தலில் நிற்கவேண்டும் என்றால்தான், அதற்கு சில விதிமுறைகள் உண்டு. கட்சிகளுக்குப் பெயர், கொடி போன்றவற்றைத் தேடுவார்கள்.

ஆனால், அய்யா அவர்கள் தொடங்கிய சுயமரியாதை இயக்கத்திற்கு, எதிரிகளே நம்முடைய கொள்கையை வைத்துத்தான் சொல்வார்கள். அதுதான் மிகவும் பாராட்ட வேண்டிய செய்தி.

கிராமமாக இருந்தாலும், நகரமாக இருந்தாலும் என்ன சொல்வார்கள், ‘‘கருப்புச் சட்டை போட்டிருப்பார்களே, அதான்ங்க, சாமி இல்லை என்று சொல்வார்களே, அவர்கள்தான்'' என்பார்கள்.

கொள்கையை வைத்து அழைக்கின்ற, எதிரிகள்கூட கூப்பிடுகின்ற ஒரே ஒரு இயக்கம் நம்முடைய இயக்கம் தான். அப்படிப்பட்ட இயக்கம், இவர்களைப் போன்ற இளைஞர்களால் வளர்ந்து கொண்டிருக்கிறது.

மணமகன் சண்முகப்பிரியன் ஏராளமான இளைஞர்களை இயக்கத்தில் சேர்த்திருக்கிறார்


மணமகன் அவர்கள் பச்சையப்பன் கல்லூரியில் படித்த காலத்திலிருந்து, தொடர்ந்து 2005 ஆம் ஆண்டு இயக்கத்தில் களப்பணி ஆற்றியது முதற்கொண்டு, மணமகன் சண்முகப்பிரியன் அவர்கள் ஏராளமான இளைஞர்களை சேர்த்திருக்கிறார். அப்படிப்பட்ட துடிப்பு மிகுந்தவர் இவர். அவர் இன்றைக்கு வாழ்க்கை இணை யேற்பு விழாவினை நடத்திக் கொள்ளவிருக்கிறார்.

இப்பொழுதுகூட சமஸ்கிருத திணிப்பு வந்திருக்கிறது. இளைஞர்களுக்கு மிகப்பெரிய அளவிற்கு வேலை இருக் கிறது. இப்பொழுதுதான் ஞாபகப்படுத்துகிறார், தென் சென்னை மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் வில் வநாதன் அவர்கள்,

எனக்கு முன்பே தெரியாது, இது ஜாதி மறுப்புத் திருமணம் என்று. ஆகவே, நூற்றுக்கு நூற்றி பத்து மதிப் பெண்களைப் போடலாம், அதிலொன்றும் சந்தேகமே யில்லை.

மூடநம்பிக்கை ஒழிப்பு, பெண்ணடிமை ஒழிப்பு, ஜாதி மறுப்புத் திருமணம் இவை அத்தனையும் இந்தத் திருமணத்தில் இருக்கக்கூடிய மணவிழாவில், நான் பேசுவதை நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்களோ இல்லையோ, பிடிக்கிறதோ இல்லையோ ஆனால், புரிகிறது அல்லவா, அதுதான் மிகவும் முக்கியம்.

உண்மை உருவம் என்ன என்று


காட்ட ஆரம்பித்துவிட்டார்கள்


வடமொழி மந்திரத்தை வைதீக மணவிழாக்களில் சொல்கிறார்களே, சமஸ்கிருதத்தைத் திணிக்கவேண்டும் என்கிறார்கள்; அதற்கு முதல்கட்டமாகத்தான் இந்தியைத் திணிக்கவேண்டும் என்கிறார்கள். ஆட்சிக்கு வந்து ஒரு வாரம்கூட ஆகவில்லை. உடனே தங்களுடைய சுயரூபத் தைக் காட்ட ஆரம்பித்துவிட்டார்கள். ஒப்பனைகளை யெல்லாம் கலைத்துவிட்டு, நடுவில் பார்த்ததையெல்லாம் கலைத்துவிட்டு, உண்மை உருவம் என்ன என்று காட்ட ஆரம்பித்துவிட்டார்கள்.

பன்மொழி, பல கலாச்சாரம், பல மதங்கள் உள்ள நாட்டில், ஆர்.எஸ்.எஸினுடைய கொள்கையான, என் மொழி சமஸ்கிருதம்; என் மதம் இந்து மதம்; என்னுடைய நாடு இந்துராஷ்டிரம். ஒற்றை ஆட்சி, மாநிலங்களை நாங்கள் மதிக்கமாட்டோம் என்று சொல்கின்ற நிலை.

தமிழ்நாட்டில் மட்டும்தான்


22 மருத்துவக் கல்லூரிகள்


இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் மட்டும்தான் 22 மருத்துவக் கல்லூரிகள் உள்ளே ஒரே மாநிலமாகும். திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில், கலைஞர் அவர்கள் முதலமைச்சராக இருந்து செய்த சாதனையாகும்.

இப்பொழுது அந்தக் கல்லூரிகளில் யார் உள்ளே நுழைகிறார்கள்?

மின்சார வாரியத்திற்குச் சென்று இனிமேல் தமிழில் பேச முடியாது.

ரயில்வே நிலையத்திற்குச் சென்று இனிமேல் தமிழில் பேச முடியாது. கொடி அசைப்பவருக்கு தமிழ் பேசத் தெரியாது.

மிக புத்திசாலி அமைச்சர் ஒருவர் சொல்கிறார், இரண்டு ஆண்டுகளுக்குள் அவர்களை தமிழ் மொழி யைக் கற்றுக்கொள்ளும்படியாக நாங்கள் செய்வோம் என்கிறார்.

தமிழ்நாட்டில், படித்து முடித்துள்ள பொறியாளர்கள் எல்லாம் உங்கள் கண்களுக்குத் தென்படவில்லையா?

எங்கள் பிள்ளைகளுக்கு எவ்வளவு வேதனையான ஒரு சூழல் என்று சொன்னால், இங்கே வருவதற்கு முன், நீட் தேர்வில் தோல்விடையந்து தற்கொலை செய்து கொண்ட பட்டுக்கோட்டை மாணவியின் பெற்றோருக்கு தொலைப்பேசியில் ஆறுதல் சொல்லிவிட்டுத்தான் வந்தேன். அவர்களுக்கு ஆறுதலே சொல்ல முடிய வில்லை.

அனிதாக்கள், பிரதீபாக்கள், சுபசிறீக்கள், திருப்பூர் மாணவி, பட்டுக்கோட்டை மாணவி, போதாக்குறைக்கு, கேரளாவில் ஒரு மாணவி ரயிலின்முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்.

வழிகாட்டக்கூடிய ஒரு இயக்கம்


திராவிடர் கழகம்!


இவ்வளவு கொடுமைகள் நடந்துகொண்டிருக்கின்ற நேரத்தில், அதனை தடுத்து நிறுத்தக் கூடிய, வழி காட்டக்கூடிய ஒரு இயக்கம் இருக்கிறது என்றால், திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம், அதன் தலைமையில் அமைந்த கூட்டணிக் கட்சிகள்தான்.

மார்க்சிஸ்ட் கட்சிகள் போன்ற கட்சிகள்கூட, நம்மு டைய கூட்டணியில் இருக்கும்பொழுது தெளிவான உணர்வோடு இருக்கிறார்கள். கேரளாவில் அவர்கள் நீட் தேர்வை ஆதரிக்கிறார்களோ இல்லையோ, அது வேறு விஷயம். ஆனால், தமிழ்நாட்டில் உள்ள மார்க்சிஸ்ட் கட்சியினர் நீட் தேர்வை எதிர்க்கிறார்கள்.

சூதாட்டத்தை, ஆன்லைனிலேயே ஆடுகிறார்கள்


ஆகவே, நம்முடைய இளைஞர்கள் தங்களுடைய சக்தியை வீணாக்குவதில்லை. மற்ற அமைப்புகளில் உள்ளவர்கள் போன்று, கேளிக்கை நிகழ்ச்சிகள், சூதாட்டம் போன்றவற்றில் கவனம் செலுத்துவது கிடையாது. அதுவும் இப்பொழுது நாடு எவ்வளவு வளர்ச்சி அடைந் திருக்கிறது என்றால், சூதாட்டத்தை, ஆன்லைனிலேயே ஆடி, தோற்றுப் போய், கடன் அதிகமாகி குடும்பத்தோடு தற்கொலை செய்துகொள்கிறார்கள், எங்கே என்றால், அதிக தூரத்தில்கூட அல்ல, பண்ருட்டியில். அந்த அள விற்குக் கொடுமைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

இவை அத்தனையையும் எதிர்க்கக்கூடிய ஒரு இயக்கம் இருக்கிறது என்றால், இந்த இனத்தை, நாட்டை, சமுகத்தைப் பாதுகாக்கக்கூடிய இயக்கம் இருக்கிறது என்றால், அது திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம், தென்னாட்டில் இருக்கக்கூடிய இந்திய கம்யூ னிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, முற்போக்கு இயக்கங்கள். ஓரணியில், ஒரு குடும்பம் போன்று இருக்கின்றோம்.

ஆகவே, இந்த இயக்கத்தினுடைய உணர்வுகளை நாம் ஒன்று திரட்டவேண்டும்.

வருகின்ற 15 ஆம் தேதி நீட் தேர்வை எதிர்த்தும், இந்தியை எதிர்த்தும், சமஸ்கிருதத் திணிப்பை எதிர்த்தும், நாடு தழுவிய அறப்போராட்டம், ஆர்ப்பாட்டங்களாக மாவட்டத் தலைநகரங்களில் நடைபெறவிருக்கின்றன. சென்னையிலும் நடைபெறும். அதில் மிகப்பெரும் பான்மையான அளவில் எல்லோரும் கலந்துகொள்ள வேண்டும்.

மாணவ, மாணவிகள் மனம் உடைந்து தற்கொலை செய்துகொள்ளக் கூடாது. அவர்களுக்கு நாம் தைரியம் சொல்லவேண்டும்.

21 ஆண்டுகளாகப் போராடி எம்.ஜி.ஆர். அவர்கள் கொண்டு வந்த நுழைவுத் தேர்வை ஒழித்தோம்!


எம்.ஜி.ஆர். அவர்கள் நுழைவுத் தேர்வை கொண்டு வந்தபொழுது, 21 ஆண்டுகள் போராடி, அதற்குப் பிறகு சட்டம் வந்தது. அந்த சட்டம் ஜெயலலிதா அவர்களாலும் ஆதரிக்கப்பட்டது. அந்த சட்டம் செல்லாது என்கிற பொழுது, அதற்கு நாங்கள் வழி சொன்னோம். அது போன்று அவர்கள் செய்யவில்லை. உயர்நீதிமன்றத்தில் அந்த சட்டம் செல்லாது என்று சொன்னார்கள். நிபுணர்களைப் போட்டு செய்யுங்கள் என்றோம்; கலைஞர் அவர்களும் முதலமைச்சராகி அதை செய்தார், அந்த சட்டம் இன்னமும் இருக்கிறது.

இரண்டு மசோதாக்கள் என்ன ஆயிற்றே என்று தெரியவில்லை


அதுமட்டுமல்ல, நீட் தேர்விலிருந்து விலக்கு வேண்டும் என்று தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக இரு மசோதாக்களை நிறைவேற்றி அனுப்பினார்கள் மத்திய அரசுக்கு. அந்த மசோதாக்கள் என்ன ஆயிற்றே என்று தெரியவில்லை. அதனுடைய விளைவு, தமிழ்நாட்டு மக்கள் பாடம் கற்பித்தார்கள். ஆனால், இன்னமும் அவர்கள் பாடம் கற்றுக்கொண்டதாகத் தெரியவில்லை.

ஆகவேதான் நண்பர்களே, பெற்றோர்களுக்குச் சொல்கிறோம், இது திருமண விழாவாக இருந்தாலும், இந்தக் கொள்கைகளைக் காப்பாற்றியது இதுபோன்ற மேடைகள்தான் காரணம், நெருக்கடி காலத்தில்கூட. அதுபோன்று இப்பொழுது அறிவிக்கப்படாத ஒரு நெருக்கடி காலத்தினுடைய தொடக்கம் தொடங்குகிறது. ஆகவேதான், இந்த நிலையிலேயே, மிக முக்கியமாக முதல் கட்டத் தொடக்கமாக, மாநிலம் தழுவிய அளவில், மாவட்டத் தலைநகரங்களில், திராவிடர் கழகத்தின் சார்பாக, இளைஞரணி, மாணவரணி, மகளிரணி, ஒத்தக் கருத்துள்ள தோழர்களை, பெற்றோர்களை அழைத்து போராட்டங்களில் ஈடுபடவேண்டும் என்று சொல்லி,

எங்களுடைய மணமக்களுக்கு அறிவுரை சொல்ல வேண்டிய அவசியமில்லை. ஏனென்றால், மணமக்கள் நிறைய விஷயம் தெரிந்தவர்கள். அவர்கள் கொள்கைத் தெளிவோடு இருக்கும்பொழுது, அவர்களுக்கு அறிவுரை தேவையில்லை.

தன்முனைப்பு இல்லாமல் வாழுங்கள்


வேண்டுகோள்தான்; நீங்கள் வாழ்வில் எவ்வளவு உயர்ந்தாலும், எவ்வளவு வளர்ந்தாலும் தன்முனைப்பு இல்லாமல் வாழுங்கள். விட்டுக்கொடுத்து வாழுங்கள்.

தந்தை பெரியார் அவர்கள் சொன்னதைப்போல, எளிமையாக வாழுங்கள். வரவிற்கு உட்பட்டு செல வழிப்பது மிகவும் முக்கியம். விட்டுக் கொடுப்பவர்கள் கெட்டுப்போவதில்லை; கெட்டுப் போகின்றவர்கள் விட்டுக் கொடுப்பதில்லை.

இவை எல்லாவற்றையும்விட மிக முக்கியமான கருத்து என்னவென்றால், நீங்கள் எவ்வளவு உயர்ந்தாலும், உங்கள் பெற்றோரிடம் நன்றி காட்ட, பாசம் காட்ட மறக்காதீர்கள். அவர்களுடைய தியாகத்தால்தான் நீங்கள் இந்த அளவிற்கு வளர்ந்திருக்கிறீர்கள். அதில் தெளிவாக இருங்கள் என்று சொல்லி,

தேர்தலில் வெற்றி பெற்றவருக்குப் பெருமை - சூதாட் டத்தில் வெற்றி பெற்றவருக்குப் பெருமை - விளையாட்டில் வெற்றி பெற்றவருக்குக் கோப்பை. ஆனால், வாழ்க்கையில் உங்கள் இருவருக்குள் ஒருவருக்காக மற்றவர் யார் போட்டி போட்டுக்கொண்டு தோல்வி அடைகிறீர்களோ, அதுதான் பெருமை. எனவே, தோற்கப் பழகிக்கொள்ளுங் கள். ஒருவருக் கொருவர் விட்டுக்கொடுத்து வாழ்ந்து, மேலும் மேலும் நீங்கள் நல்ல அளவிற்கு இந்த இயக் கத்தைப் பலப்படுத்துங்கள்.

போராட்டக் களத்திற்கு இனி இருவராக வருவார் மணமகன் சண்முகப்பிரியன்


வருகின்ற போராட்டங்களில், இதற்கு முன்னால், சண்முகப்பிரியன் ஒருவராக போராட்டக் களத்திற்கு வந்தார். இனிமேல் இருவராக வருவார். இன்னொரு போராளி கிடைத்திருக்கிறார் கூடுதலாக இந்த இயக் கத்திற்கு என்று சொல்லி, வாய்ப்பளித்த உங்களுக்கு நன்றி கூறி, விடைபெறுகிறேன்.

வணக்கம், நன்றி!


வாழ்க பெரியார்!  வாழ்க மணமக்கள்!


வளர்க பகுத்தறிவு!


- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.

-  விடுதலை நாளேடு, 7.7.19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக