செவ்வாய், 2 ஜூலை, 2019

4 மணி நேரம் நடைபெற்ற தலைமைச் செயற்குழுக் கூட்டத்தில் வரலாற்று சிறப்புமிக்க முடிவுகள்

ஜூலை 1 முதல் ஆகஸ்ட் 15 வரை கழக உறுப்பினர் சேர்க்கை

*  ஜூலை 13 முதல் கிராமப் பிரச்சாரத் திட்டம்

* ஆகஸ்ட் 27 சேலத்தில் கழக பவள விழா மாநாடுசென்னை, ஜூன் 30 ஜூலை 1 முதல் ஆகஸ்ட் 15 வரை கழக உறுப்பினர் சேர்க்கை, ஜூலை 13 முதல் கிராமப் பிரச்சாரத் திட்டம்,  ஆகஸ்ட் 27 சேலத்தில் கழக பவள விழா மாநாடு என்பன குறித்து நேற்று (29.6.2019) 4 மணி நேரம் நடைபெற்ற திராவிடர் கழக தலைமைச் செயற்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட வரலாற்று சிறப்புமிக்க முடிவுகள் வருமாறு: திராவிடர் கழக தலைமைச் செயற்குழு உறுப்பினர் களும், சிறப்பு அழைப்பாளர்களும் கலந்து கொண்ட சிறப்புக் கூட்டம் நேற்று (29.6.2019) காலை 10 மணிக்கு சென்னை பெரியார் திடலில் நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றத்தில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின்  தலைமையில் நடைபெற்றது. மாநில மகளிர்ப் பாசறை செயலாளர் வழக்குரைஞர் பா. மணியம்மை கடவுள் மறுப்புக் கூறினார்.

திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் வரவேற்று உரையாற்றினார். கடந்த 5 ஆண்டுகாலம் மதவாத பிஜேபி அரசால் நாடு அமைதி யற்ற சூழலைச் சந்தித்தது. கோமாதா பாதுகாப்பு என்ற பெயரால் தாழ்த்தப்பட்டவர்கள் அடித்துக் கொடுமைப் படுத்தப் பட்டனர், கொல்லப்பட்டும் வருகின்றனர்.

இரண்டாவது முறை ஆட்சிக்கு வந்ததும் - வராததுமாக தேசியக் கல்வி திட்டம் ஒன்றை அவசர அவசரமாக திணிக்க ஆரம்பித்தனர்.

ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே மதம், ஒரே கலாச்சாரம் என்னும் ஆர்.எஸ்.எஸின்., கொள்கையின் மறு வடிவம்தான் இந்த தேசியக் கல்வி திட்டமாகும். ஆர்.எஸ்.எஸின் சித்தாந்தத்தை பல வடிவங்களில் திணிப்பதுதான் இதன் நோக்கம்.

இந்த மதவாத பார்ப்பனீயத்தை சித்தாந்த ரீதியாக எதிர் கொள்ளும் ஒரே இயக்கம் திராவிடர் கழகமே.

இந்த நிலையில் திராவிடர் கழகம் திட்டமிட்ட வகைகளிலும் பிரச்சார யுக்திகளை மேற்கொள்ள வேண்டும். கிராமப் பிரச்சார திட்டத்தைத் திறம்பட நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டும். அதற்கான கருத்துகளைக் கழகத் தோழர்கள் வழங்குமாறு தனது வரவேற்புரையில் திராவிடர் கழகத் துணைத் தலைவர் கேட்டுக் கொண்டார்.

கூட்டத்திற்குத் தலைமை தாங்கிய திராவிடர் கழகத் தலைவர் கழகத்தின் உறுப்பினர் சேர்க்கையின் அவசியத்தை எடுத்துச் சொன்னார். இதுகுறித்து பிரச்சார செயலாளர் வழக்குரைஞர் அருள்மொழி உட்பட தோழர்கள் கருத்துகளை எடுத்துக் கூறினர்.

கழகத் தோழர்கள் தெரிவித்த ஒருமித்த கருத்தின் அடிப்படையில் உறுப்பினர் சேர்க்கை ஜூலை முதல் தேதி தொடங்கி ஆகஸ்ட் 15இல் முடித்திட வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.

உறுப்பினர் கட்டணம் ரூ.50 என்று நிர்ணயிக்கப் பட்டது.

பொதுச் செயலாளர்கள், அமைப்புச் செயலாளர்கள், மண்டல, மாவட்ட திராவிடர் கழகத் தலைவர், செயலாளர்கள், மாவட்ட அமைப்பாளர்கள் தங்களுக் கென்று மாவட்டங்களை ஒதுக்கிக் கொண்டு நேரில் சென்று உறுப்பினர்கள் சேர்க்கையை சிறந்த முறையில் செய்து தருமாறு கேட்டுக் கொண்டார் கழகத் தலைவர்.

மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை உறுப்பினர்கள் சேர்க்கை நடைபெற வேண்டும் என்றும் தீர்மானிக்கப் பட்டது.

கிராமப் பிரச்சார திட்டம்


ஜூலை 13 முதல் கிராமப் பிரச்சார திட்டம் வகுக்கப்பட்டது. (அதன் விவரம் 5ஆம் பக்கத்தில் காண்க) கிராமப் பிரச்சார திட்டத்தில் தலைமைக் கழகம் செய்ய வேண்டிய பணிகள், மாவட்டக் கழகத்தினர் மேற்கொள்ள வேண்டிய பணிகள், செலவுகள் வரையறுக்கப்பட்டன. மாவட்டக் கழகத்தினர் மேற்கொள்ள வேண்டிய ஏற்பாடுகளை பற்றியும் விரிவாகப் பேசப்பட்டது.

அடுத்து கிராமப் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட வேண்டிய மாவட்டங்கள் பற்றி கருத்துக் கேட்கப்பட்டது.

கோவை, ஈரோடு, திண்டுக்கல், மதுரை, மதுரைப் புறநகர், ஆத்தூர், காரைக்கால், அரக்கோணம் மாவட்டங்களில் கிராமப்பிரச்சாரத்தை அடுத்து மேற்கொள்ள சம்பந்தப்பட்ட கழகப் பொறுப்பாளர்கள் தாங்களாகவே முன்வந்து ஆர்வமாகத் தெரிவித்தனர்.

மகளிர் அணியினர் செயல்பாடுகளைப் பாராட்டிய கழகத் தலைவர், பெண்களின் உடல் நலன் குறித்து அக்கறை செலுத்தும் வகையில் உரையாட வேண்டும். நம்முடைய மருத்துவ அணியினர் அதற்கான மருத்துவ முகாம்களை நடத்துவதற்கும் ஏற்பாடு செய்யலாம் என்று கூறினார்.

குடும்பத்தினரைக் கழக உறுப்பினர்களாக்குக!


கழகத் தோழர்கள் உறுப்பினர் சேர்க்கையைத் தங்கள் குடும்பத்திலிருந்து தொடங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்ட கழகத் தலைவர் - கழக நிகழ்ச்சிகளுக்குக் குடும்பத்தினரை, பெண்களை, பிள்ளைகளை அழைத்து வரவேண்டும் என்று கேட்டுக் கொண்டார். கழகக் குடும்பங்களில் இருந்து கலந்துரையாடல்களை நடத்தி, கழகக் குடும்பங்களுக்கிடையே நல்லுறவைப் பேண வேண்டும் என்ற யோசனையையும் தெரிவித்தார்.

சேலத்தில் திராவிடர் கழகப் பவள விழா மாநாடு


திராவிடர் கழகம் பிறந்த அதே சேலத்தில் வரும் ஆகஸ்ட் 27 அன்று திராவிடர் கழகப் பவள விழா மாநாடு பற்றியும் கழகத் தலைவர் விவரித்துக் கூறினார்.

தி.மு.க. தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின், ம.தி.மு.க. பொதுச் செயலாளர் திராவிட இயக்கப் போர்வாள் வைகோ, இந்திய யூனியன் முசுலிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர்மொய்தீன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் எம்.பி., இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் தோழர் இரா.முத்தரசன், திராவிட இயக்கத் தமிழர் பேரவைப் பொதுச் செயலாளர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் ஆகியோர் மாலை நேரப் பொது மாநாட்டில் உரையாற்றுவார்கள்.

திராவிடர் கழகப் பவள விழா மாநாடு 27.8.2019 காலை 10 மணிக்குத் தொடங்கும். காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை பல அரங்குகள் இடம்பெறும். கழக முன்னணியினர் பங்கேற்பார்கள்.

மாலை 4 மணிக்குத் தொடங்கும் எழுச்சிமிகு பேரணி மாலை 6.30 மணி அளவில் நிறைவு பெறும்.

திராவிடர் கழகத் தலைவர் தலைமையில் நடை பெறும் பொது மாநாட்டில் தலைவர்கள் பங்கேற்பார்கள். அரிய தீர்மானங்கள் நிறைவேற்றப்படும்.

மாநாட்டுக்கு முன் ஒரு வார காலம் சேலத்தின் சுற்று வட்டார பகுதிகளிலும், மாவட்டங்களிலும் மாநாடு குறித்து தெருமுனைப் பிரச்சாரக் கூட்டங்கள் நடத்தப்படும்.

இப்பொழுதே தோழர்களால் தமிழ்நாடு முழுவதும் சுவர் எழுத்துப் பிரச்சாரம் தொடங்கப்பட வேண்டும். என்றெல்லாம் கூறிய கழகத் தலைவர் அவர்கள் இயக்கத்திற்கு 25 வயது முதல் 30 வயது வரை உள்ளவர்களைத் தேர்வு செய்து முக்கியப் பொறுப்புகள் அளிக்கப்பட்டு அடுத்தக் கட்ட பொறுப்புகளுக்குத் தயார் செய்யப்படுவார்கள் என்றும் கூறினார்.

கருத்துத் தெரிவித்தவர்கள்


திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் துரை.சந்திர சேகரன் தீர்மானங்களை முன்மொழிந்து கருத்துகளை எடுத்துக் கூறினார்.

தொடர்ந்து பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ், பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமார், மாநில அமைப்பாளர் இரா.குணசேகரன், வெளியுறவுச் செயலாளர் கோ.கருணாநிதி, துணைப் பொதுச் செயலாளர் பொறியாளர் ச.இன்பக்கனி, மாநில மகளிரணி செயலாளர் தகடூர் தமிழ்ச்செல்வி, அமைப்பாளர் பேராசிரியர் கண்மணி, மகளிர்ப் பாசறை அமைப்பாளர்,  சட்டக் கல்லூரி மாணவி மதிவதனி, தென்மாவட்ட பிரச்சாரக் குழுத் தலைவர் மதுரை தே.எடிசன்ராஜா, அமைப்புச் செயலாளர் மதுரை செல்வம், ஈரோடு சண்முகம், சேலம் இளவழகன், மண்டல செயலாளர் வெற்றிவேந்தன், பெரியார் சமுகக் காப்பு அணியின் ஒருங்கிணைப்பாளர் சுரேஷ், கோபி இராசமாணிக்கம், விழுப்புரம் மண்டலத் தலைவர் க.மு.தாஸ், மாநில இளைஞரணி செயலாளர் இளந்திரையன், மாநில மாணவர் கழக செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார் ஆகியோர் கருத்துகளை எடுத்துக் கூறினர்.

சென்னை மண்டல மகளிரணி செயலாளர் ரெ.ஓவியா  நன்றி கூறிட பிற்பகல் 2 மணிக்கு தலைமைச் செயற்குழுக் கூட்டம் நிறைவுற்றது.

காலை 10 மணிக்குத் தொடங்கப்பட்ட திராவிடர் கழக தலைமைச் செயற்குழுக் கூட்டம் 4 மணி நேரம் நடைபெற்றது இதுவே முதல் தடவையாகும்.

- விடுதலை நாளேடு, 30. 6 .19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக