புதன், 12 செப்டம்பர், 2018

ஆதித்தமிழர் பேரவையின் சார்பில் நடைபெற்ற தொடர் முழக்கப் போராட்டத்தில் தமிழர் தலைவர்



சென்னை, ஆக.2 வாதாட வேண்டிய நேரத்தில் வாதாட வேண்டும்; வாதாடுவது தோற்றால்தான் போராடவேண்டும். திராவிடர் கழகம் எப்பொழுதும் உங்களுக்கு உறுதுணையாக இருக்கும் என்பது மட்டுமல்ல, நீங்கள் அழைத்தால், திரா விடர் கழகம் அனைவரையும் ஒருங்கிணைக்கக் கூடிய அமைப்பாகவும் இருக்கும்    என்றார் திராவிடர் கழகத் தலை வர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

தொடரும் மலக்குழி மரணங்களைத் தடுக்க ‘‘பேண்டிக்கூட் ரோபோ''வைப் பயன்படுத்தக் கோரி கடந்த 30.7.2018 அன்று  சென்னையில் ஆதித்தமிழர் பேரவையின் சார்பில் நடை பெற்ற தொடர் முழக்கப் போராட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.

அவரது உரை வருமாறு:

ஆதித்தமிழர்பேரவையின்போராளிகளானஅன்புச் சகோதரர்களே, இருபால் தோழர்களே உங்கள் அனைவருக் கும் என்னுடைய அன்பான வணக்கத்தினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஜனநாயக அரசியலில் ஏற்கத்தக்கதல்ல; வியக்கத்தக்கது

இந்தக் கோரிக்கை மனுக்கள் என்பதை தமிழகத்தினுடைய எல்லா தலைவர்களுக்கும் கொடுத்திருக்கிறார்கள். கோரிக்கை இல்லாமலேயே நிறைவேற்றப்படவேண்டி ஒரு நாகரிகமான மனிதநேயப் பிரச்சினை ஒன்று உண்டென்றால், அதுதான் இந்த 2018 ஆம் ஆண்டு முடிந்து இன்னும் சில மாதங்களில் 2019 ஆம் ஆண்டு தொடங்கவிருக்கிறது, ஒரு தேர்தல் வரப்போகிறது, மோடியினுடைய அய்ந்தாண்டு கால ஆட்சியில், நான்கரை ஆண்டுகாலம் ஓடிவிட்டது என்று சொல்லக்கூடிய இந்தக் காலகட்டத்திலே, இன்னமும் நாம் கோரிக்கை மனு கொடுத்துக் கொண்டிருப்பதே ஒரு நாகரிகமான ஜனநாயக அரசியலில் ஏற்கத்தக்கதல்ல; வியக் கத்தக்கது. கண்டிக்கத்தக்கது என்பதைவிட, வியக்கத்தக்கது.

ஏனென்றால், வெளிநாட்டுக்காரர்கள் எல்லாம் இங்கே வந்து பார்த்தால், இந்த நாட்டின் தலைநகரில் நம்முடைய தோழன், காலையிலிருந்து உழைக்கின்ற பாட்டாளித் தோழன், அந்தத் தோழன் தலையில் மலத்தை சுமந்து கொண்டு போனால், இன்னும் மலக்குழியில் இறங்கியவர் இறந்தார் என்கிற செய்தி வருவதைப் படித்தால், இதைவிட மிக அநாகரிகமான ஒரு நாடு வேறு எதுவென்று யோசிப்பார்கள்.

போராட்டமோ தொடர் முழக்கமோ இல்லாமலே...

எனவேதான், அவர்களுடைய நலம் கருதி, உங்கள் நலம் பிறகு இருக்கட்டும்; அவர்களுடைய நாகரிகத்தைக் கருதி, மனிதநேயத்தைக் கருதி, இந்தியாவினுடைய பெருமையைக் கருதி, செய்யவேண்டிய முதல் காரியம், இதை ஒழித்து, இயந்திரத்தின் மூலமாக செய்யவேண்டும் என்கிற கோரிக்கைக்காக, இவ்வளவு பெரிய போராட்டத்தை நடத்தவேண்டிய அவசியமோ, தொடர் முழக்கமோ இல்லாமலே, ஆட்சியாளர்களே செய்திருக்கவேண்டும்.

இன்னுங்கேட்டால், “மங்கி பாத்’’, “மங்கி பாத்’’ என்று எங்கு பார்த்தாலும் சொல்கிறார்கள். நமக்கு மங்கியைத் தெரியும்; ஆனால், பாத்தைத் தெரியாது. ஆனால், அது இந்தியில் இருக்கின்ற காரணத்தினால், “மனதின் குரல்’’ என்று மொழி பெயர்த்திருக்கிறார்கள்.

பிரதமர் மோடி அவர்கள் நேற்றுகூட நான்காண்டு சாதனைகள் என்னவென்று பேசும்பொழுது, ஏராளமான கழிப்பறைகளைக் கட்டியிருக்கிறோம் நாங்கள் என்றார்.

நாம் எல்லாவற்றையும் கண்ணை மூடிக்கொண்டு எதிர்ப்பவர்கள் அல்ல!

அந்தக் கழிப்பறை திட்டம்கூட, ஏற்கெனவே அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் உருவாக்கத் திட்டம். அந்தத் திட்டத்தை இவர்கள் விரிவுபடுத்தியிருக்கிறார்கள் என்பதே உண்மை. அதேநேரத்தில், அந்தத் திட்டத்திற்காக கொஞ்சம் அதிகப் பணத்தைக் கொடுத்திருக்கிறார்கள், வீட்டிலே கழிப்பறை கட்டுவதற்காக என்பதும் உண்மை. அதனை நாம் குறை சொல்லவில்லை. அவர்கள் செய்த உருப்படியான காரியம் இது. நாம் எல்லாவற்றையும் கண்ணை மூடிக்கொண்டு எதிர்ப்பவர்கள் அல்ல.

அதேநேரத்தில் ஒன்று முக்கியம், கழிப்பறை கட்டுவதன் அவசியம் என்ன? மலத்தை மனிதன் சுமக்கக்கூடாது; மனிதக் கழிவுகள் இயந்திரத்தின்மூலம் அகற்றப்படவேண்டும் என்ற அளவில், அறிவியல் ரீதியாக அதனைக் கண்டு பிடித்திருக்கிறார்கள்.

ரயிலில் நாம் பயணம் செய்யும்பொழுது, அங்கே ஒரு போர்டு இருக்கும்; இது பயோ டாய்லெட், ஜாக்கிரதையாக இதனை பயன்படுத்தவேண்டும் என்று.

இன்னுங்கொஞ்சம் வளர்ச்சியடைந்தால், ஜப்பானியர் டாய்லெட் என்று பார்த்தால், ஜப்பானியர்கள், கழுவுவதற் குக்கூட கைகளைப் பயன்படுத்தவேண்டாம்; அந்த இயந்திரமே சுத்தப்படுத்திவிடும் என்று சொல்லக்கூடிய அளவிற்கு, ஜப்பானிய அமைப்புகள், அங்கே கழிப்பறை களில் உருவாக்கக்கூடிய அளவிற்கு, அவ்வளவு தொழில் நுட்பத்தோடு செய்துகொண்டிருக்கின்ற இந்தக் கால கட்டத்தில்,

ஜப்பானிய பிரதமரை நம்முடைய இந்தியப் பிரதமர் கட்டித் தழுவுகிறார்; எல்லோரையும் கட்டித் தழுவியே அவருக்குப் பழக்கம். ஆகவே, அப்படி அவர் கட்டித் தழுவும்போது, குறைந்தபட்சம் அதுபோன்றவற்றை செய்ய லாம் என்று கேட்கலாம்.

அதைவிட, என்னரும் சகோதர, சகோதரிகள் இங்கே அமர்ந்திருக்கிறார்களே, இவர்கள் எல்லோரும் எதற்காக தங்களுடைய தலையில் மலக்கூடையை சுமக்கவேண்டும்? அதுமட்டுமல்ல, மலக்குழியில் இறங்கி, மூச்சுத் திணறி இறந்தவர்கள் எத்தனை ஆயிரக்கணக்கான சகோதரர்கள். அது என்ன எங்கள் மக்களுக்கு மட்டும் காப்பி ரைட்டா? அவர்கள் தலையில் எழுதியிருக்கிறார்களா? என்பதை தயவு செய்து எண்ணிப்பார்க்கவேண்டும்.

எனவேதான், தந்தை பெரியார் அவர்கள், நீண்ட காலத்திற்கு முன்பு சொன்னார், இந்தக் கோரிக்கையை முதன்முதலில் ஜாதி ஒழிப்புத் திட்டம், தீண்டாமை ஒழிப்புத் திட்டம் என்று சொல்லும்பொழுது,

முதலில் பாம்பே லெட்ரின் என்று ஒரு பெயர் சொன் னார்கள்; அதற்குப் பிறகு கழிப்பறைகள் வந்த பிறகு,

தந்தை பெரியார் அவர்கள் ஒரு பொதுக்கூட்டத்தில் பேசும்பொழுது,

மனிதன், சகோதரன் உழைக்கின்றவன் அவன் எதற்கு மலக்கூடையை தலையில் தூக்கவேண்டும். அவர்கள் சொன்னதுபோன்று, கொஞ்சம் மலம் உடலில் பட்டுவிட்டால், நீ எவ்வளவு துடிக்கிறாய்? கையைக் கழுவவேண்டும் என்று நினைக்கிறாய்? ஆனால், என்னுடைய சகோதரனை தொடக்கூடாது என்று நீ சொல்கிறாயே! அவனுடைய பணி எவ்வளவு முக்கியமானது என்று தந்தை பெரியார் சொல்லும்பொழுது, ஒன்றை சொன்னார்.

ணிssமீஸீtவீணீறீ ஷிமீக்ஷீஸ்வீநீமீ

ஆங்கிலத்தில் ஒன்றை சொல்வார்கள், ணிssமீஸீtவீணீறீ ஷிமீக்ஷீஸ்வீநீமீ என்று. மிக அத்தியாவசிய பணி என்றால், கோட்டையில் உட்கார்ந்துகொண்டு எழுதுவது  ணிssமீஸீtவீணீறீ ஷிமீக்ஷீஸ்வீநீமீ  அல்ல. நீங்கள் செய்வதுதான் அத்தியாவசியப் பணியாகும். இதில் யாருக்காவது சந்தேகம் இருந்தால், ஒரு பத்து நாள்கள் அந்தப் பணியை நம்முடைய தோழர்கள் செய்யாமல் இருந்து பாருங்கள்.

மாமருத்துவர்கள்தான்

எங்களுடைய பாட்டாளி தொழிலாளர்கள்

இங்கே உரையாற்றிய சத்யா மிக அழகாக சொன்னார். கடந்த இரண்டு ஆண்டுகளுக்குமுன்பு மிகப்பெரிய அளவிற்கு இங்கே வெள்ளம் வந்தது. வெள்ளம் வடிந்ததும், குப்பைகளும், மரக்கிளைகளும் மலைபோல் குவிந்திருந்தது ஒரு பக்கம்; இன்னொரு பக்கம் தண்ணீரோடு மலம் எல்லாம் கலந்து ஆங்காங்கே இருந்தன. அதனை சீர்செய்வதற்கு வெளிநாட்டு நிபுணர்கள் வரவழைக்கப்படவில்லை. எங்கள் பாட்டாளி தோழர்கள்தான் லாரிகளில் அழைத்துவரப்பட்டு, அவர்கள் நேரம் காலம் பார்க்காமல் உழைத்து, தொற்று நோய்கள் பரவாமல் தடுத்த  மாமருத்துவர்கள்தான், தொழி லாளிகளாக இருக்கக்கூடிய எங்களுடைய பாட்டாளி வர்க்கம்.

இதைத்தான் நீண்ட நாள்களுக்குமுன்பு அய்யா தந்தை பெரியார் அவர்கள் எளிய மொழியில் சொன்னார்.

எதற்காக மனிதன் மலத்தை மனிதனே சுமக்கவேண்டும்? தோழர்கள் இந்தப் பணியை செய்யக்கூடாது; நீங்கள் அதனை நிறுத்துங்கள் என்று வேகமாகப் பேசினார்.

உடனே ஒருவர் துண்டு சீட்டு எழுதிக் கொடுத்தார். அதில், அவர்கள் அந்தப் பணிகளை நிறுத்திவிட்டால், என்னாகும்? ஊரே நாறுமே! அவர்களை நீங்கள் தூண்டிவிடுகிறீர்களே என்று அதில் இருந்தது.

அந்தச் சீட்டைப் படித்துப் பார்த்துவிட்டு சொன்னார், ‘‘அவனவன் வெளிக்கிப் போகிறான் அல்லவா, அவனவன் வாரட்டும்; ஏன் இன்னொருவன் வாரவேண்டும்; நீயே வாரு - அப்பொழுதுதான் உனக்கு அந்த அக்கறை தெரியும்!

அவன் எப்படி வாருவது என்று கேட்கிறீர்களா?

ஏன், குழந்தை வெளிக்கி போகும்போது, அம்மா வார வில்லையா? அதனை தீட்டு என்று நினைக்கிறார்களா?

ஏன் இதற்காக

ஒரு ஜாதி இருக்கவேண்டும்?

ஏன் இதற்காக ஒரு ஜாதி இருக்கவேண்டும்; இதற்கு ஒரு அமைப்பு இருக்கவேண்டும். ஆகவே, அதனை முதலில் ஒழித்தால்தான், மனித நாகரிகம் காப்பாற்றப்படும் என்று மிகத்தெளிவாக முழங்கியவர் தந்தை பெரியார் அவர்கள்.

எனவே, இன்றைக்கு இயந்திரம் வந்தாகிவிட்டது.

இவர்களுடைய கோரிக்கையில் முதல் கோரிக்கையில் என்ன வலியுறுத்துகிறார்கள் என்றால்,

கேரள அரசு அறிமுகம் செய்துள்ள கழிவகற்றும் இயந்திரம், ‘‘பேண்டிக்கூட் ரோபோவை'' தமிழகத்திலும் பயன்படுத்தவேண்டும் என்று கையால் மலம் அள்ளும் தடைச்சட்டம் 2013 முழுமையாக நடைமுறைப்படுத்த தமிழக அரசை வலியுறுத்தியும், சென்னை ஜூலை 30 ஆம் தேதி இந்த ஆர்ப்பாட்டம் என்று அந்தக் கோரிக்கையில் குறிப்பிட்டுள்ளார்கள்.

தோழர்களே, இன்னொரு மகிழ்ச்சியான செய்தியை உங்களுக்குச் சொல்கிறேன்.

முதலமைச்சரை நாம் சந்திக்கவேண்டும் என்று ஆதித் தமிழர் நிறுவன தலைவர் அதியமானிடம் நான் சொன்னேன்.

இந்தக் கோரிக்கையை வலியுறுத்துவதற்கு நாம் எல்லாம் ஒன்று சேர்ந்து - முதலமைச்சர் அவர்களை சந்திப்பதற்கு ஒரு தேதியை கேட்போம்.

விசுவநாதன் அவர்கள் இங்கே சொன்னார், நாமெல்லாம் ஒரு ஊர்வலமாகச் சென்று அதனை செய்யவேண்டும் என்று.

ஆனால், ஊர்வலத்தைக் காரணமாகக் காட்டி, சில நேரங்களில் காவல்துறையினர் அனுமதி மறுத்துவிடுவார்கள்.

முதலமைச்சரிடம்

வேண்டுகோள் விடுப்போம்

தமிழ்நாட்டில் யார் யார் முற்போக்குச் சிந்தனை உள்ளவர்களோ, யார் யார் இந்தக் கருத்துக்கு உடன்பட்டவர்களோ, அத்தனை தலைவர்களும் முதலமைச்சரை இந்த விஷயமாக பார்க்க விரும்புகிறோம் என்று வேண்டுகோள் விடுப்போம்.

நீங்கள், எங்களை நேர்காணலுக்கு அனுமதியுங்கள். நேரிடையாக உங்களிடம் இந்தக் கோரிக்கை மனுவை கொடுக்கவேண்டும் என்று தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களிடம் நான் பேசுகிறேன். அதேபோல, மற்ற தலைவர்களிடமும் தெளிவாக எடுத்துச் சொல்கிறேன். திராவிட முன்னேற்றக் கழகம், காங்கிரசு பேரியக்கம், இந்திய யூனியன் முசுலீம் லீக், சட்டமன்றத்தில் இடம்பெறாத நம்மைப் போன்ற அமைப்புகளின் பிரதிநிதிகள் அனைவரும் சென்று, முதலமைச்சரை, துணை முதலமைச்சரை சந்திக்கலாம்.

முதலில் வாதாடவேண்டும்; வாதாடுவது தோற்றால்தான் போராடவேண்டும்!

நம்முடைய கோரிக்கையை வலியுறுத்தலாம். வாதாட வேண்டிய நேரத்தில் வாதாடவேண்டும்; வாதாடுவது தோற் றால்தான் போராடவேண்டும் என்ற அளவில், தெளிவாக இருக்கவேண்டிய அளவில், நாம் ஜனநாயக ரீதியாக அவர்களிடத்தில் செல்லவேண்டும்.

இதில் இன்னொரு செய்தி, கேரளாவில் கண்டுபிடிக்கப் பட்டு, அங்கே அறிமுகப்படுத்தப்பட்ட கழிவகற்றும் இயந் திரம் என்று இந்த பதாகையில் போட்டிருக்கிறார்கள்.

உங்களுக்கு எல்லோருக்கும் ஒரு அரிய தகவலை நான் சொல்கிறேன்.

உங்களில் எத்தனை பேருக்கு இந்தத் தகவல் தெரியுமா என்பது எனக்குத் தெரியாது. தந்தை பெரியார் அவர்கள் கையொப்பம் போடுவதற்குக்கூட நாலணா வாங்கியவர். எல்லாவற்றுக்கும் காசு என்று சொல்வார். இவ்வளவு பணத் தாசை பிடித்தவரா பெரியார் என்று அந்தக் காலத்தில் இளை ஞர்கள் நினைப்பார்கள்.

மேடையில், அவருக்குப் போடப்படும் மாலையை ஏலத்தில் விடச் சொல்லி, அதனைப் பணமாக்குங்கள் என்பார். இரண்டணாவிற்கு ஏலம் கேட்டாலும், அதனைக் கொடுத்துவிடுவார். ஏனென்றால், காய்ந்து போகும் மாலைக்கு இரண்டணா வந்தாலும் பரவாயில்லை என்று நினைப்பார்.

அப்படி சிக்கனமாக சேர்த்த பணத்தைத்தான் தந்தை பெரியார் அவர்கள், அதைப் பகுத்தறிவுக் கூடங்களாக, பல்கலைக் கழகங்களாக, ஆதரவற்ற குழந்தைகள் விடுதி களாக, முதியோர் இல்லங்களாக, பள்ளிக்கூடங்களாக, மருத் துவமனைகளாக இன்றைக்கும் மனிதநேய பணி செய்து கொண்டிருக்கிறார்.

பெரியார் மணியம்மை நிகர்நிலைப் பல்கலைக் கழக மாணவர்கள்

அதில் ஒன்றுதான், தஞ்சையில் இருக்கக்கூடிய பெரியார் மணியம்மை நிகர்நிலைப் பல்கலைக் கழகம். அந்தப் பல்கலைக் கழகம் நிறுவி 28 ஆண்டுகள் ஆகின்றன. அதற்குமுன் அது கல்லூரியாக இருந்தது. இன்றைக்கு அது பல்கலைக் கழகம்.

அந்தப் பல்கலைக் கழகத்தில், நம்முடைய இயந்திரவியல் மாணவர்களுக்குக் கொடுக்கப்பட்ட முக்கிய செயல் திட்டத்தில்,  நாங்கள் இதைக் கொடுத்திருக்கிறோம். ‘‘கழிவ கற்றும் இயந்திரம் வடிவமைக்கும் பணியில் மாணவர்கள் ஈடுபட்டுள்ளார்கள்; வெற்றிகரமாக அந்த இயந்திரத்தைக் கண்டுபிடித்துவிட்டார்கள்.’’

நாம் கேரளாவிற்குச் செல்லவேண்டிய அவசியமில்லை. இது மிக மலிவாகக் கிடைக்கக்கூடிய அளவிற்கு இதனை செய்திருக்கிறார்கள். ஏனென்றால், நமக்கு லாப நோக்கமோ, வியாபாரமோ கிடையாது.

நம் பிள்ளைகள் யாரும் தகுதி, திறமை குறைந்தவர்கள் இல்லை

இந்த இயந்திரத்தை வெளிநாட்டிலிருந்து  வரவழைக்கக் கூடிய அவசியமில்லை. நம் பிள்ளைகளுடைய ஆய்வு களிலேயே அது கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது. நம் பிள்ளைகள் யாரும் தகுதி, திறமை குறைந்தவர்கள் இல்லை. எல்லோரும் ஆற்றல் உள்ளவர்கள்.

கும்பகோணத்தில் களம் இறக்கப்பட்டுள்ள பெருச்சாளி என்ற இயந்திரத்தின் குறைகளை பெரியார் மணியம்மை பல்கலைக் கழக இயந்திரவியல் மாணவர்கள் நிவர்த்தி செய்துவிட்டார்கள் என்று சொன்னால், அது இன்னும் மலிவு விலையில் கிடைக்கும். அரசாங்கத்திற்குப் பணம் மிச்சம்; உள்ளாட்சித் துறை அமைப்புகளுக்கும் பணம் மிச்சம். ஆகவே, அதனை செய்வதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம்.

இதையும் அரசாங்கத்திற்கு நாங்கள் தெரியப்படுத்தி, அவர்களுக்கு டெமான்ஸ்ட்ரேசன் வேண்டுமென்றால், அதனை செய்யக்கூடிய அளவிற்கு இருக்கிறோம்.

எங்களுடைய பல்கலைக் கழகத்தினுடைய மூன்று வாக்கியமே,

tலீவீஸீளீ  - வீஸீஸீஷீஸ்ணீtமீ - tக்ஷீணீஸீsயீஷீக்ஷீனீ

சிந்தித்துப் பார் - புத்தாக்கம் செய் - சமூகத்தை மாற்று.

அதற்கு இது மிகவும் பொருத்தமான பணி - இந்த இயந்திரம். இதை நாம் செய்யவேண்டும் என்பதை மிகத் தெளிவாக எடுத்துச் சொல்கின்றோம்.

இறுதியில் ஒரு வேண்டுகோள் தலைவர்களுக்கு.

இந்தத் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை டாக்டர் பாபா சாகேப் அண்ணல் அம்பேத்கர் அவர்கள் சொன்னதுபோல,

ஜாதி, வர்ணாசிரம தர்மம் என்பது, வெறும் பேதம் மட்டுமல்ல, ஆண்களுக்கும் - பெண்களுக்கும் பேதம் வைத்துவிட்டான்.

உயர்ஜாதிகள் என்று வரும்பொழுது, படிக்கட்டு ஜாதி முறை போன்று வைத்துவிட்டான்.

மூன்று பெரிய பிரிவுகளை

உண்டாக்கிவிட்டார்கள்

அதுபோன்று வைத்துவிட்டதால் என்னாயிற்று, தாழ்த் தப்பட்ட சகோதரர்கள், ஆதிதிராவிட சகோதரர்கள் மத்தியில் பார்த்தீர்களேயானால், மூன்று பெரிய பிரிவுகளை உண்டாக்கிவிட்டார்கள்.

உழைக்கின்ற மக்கள் ஒன்று சேர்ந்துவிடக்கூடாது என்பதற்காகத்தான் பிரித்து பிரித்து வைத்தார்கள். பிரித்தாளக் கூடிய சூழ்ச்சி என்பதை வெள்ளைக்காரர்கள் கொண்டுவரவில்லை; அதற்குப் பதிலாக இந்தக் கொள்ளைக் காரர்கள்தான் கொண்டு வந்தது என்பதை நன்றாக நீங்கள் நினைத்துப் பாருங்கள்.

அதில், ஜாதி, வருணாசிரம தர்மம் ஒருவன் முகத்தில் பிறந்தவன், இன்னொருவன் தோளில் பிறந்தவன், இன் னொருவன் துடையில் பிறந்தவன், இன்னொருவன் காலில் பிறந்தவன் என்று சொல்லி, அதற்கும் கீழே பஞ்சமன் அய்ந்தாம் ஜாதி என்று சொன்னான். அதையாவது ஒன்றாக ஆக்கினார்களா, அதில் கொண்டு போய் மூன்று பேரை வைத்தார்கள். மூன்று பேரும் சண்டை போட்டுக் கொள்ளும் அளவிற்கு ஆக்கி வைத்திருக்கிறார்கள்.

நம் சமுதாயத்திலிருந்தே ஆட்களைப் பிடிக்கிறார்கள்

இந்த நேரத்தில் நான் தோழர்களுக்குச் சொல்லிக் கொள் வது என்னவென்றால், தயவு செய்து, இட ஒதுக்கீட்டை ஒழிக்கவேண்டும் என்பதற்காக வடக்கே இருந்து அவர்கள் வருகிறார்கள்; அதற்காக இந்த சமுதாயத்திலிருந்தே அதற்காக ஆட்களைப் பிடிக்கிறார்கள்.

ஒரு பிள்ளையாரை வைத்தால் ரூ.5 ஆயிரம் கொடுக் கிறேன் என்றவுடன், நம்மாளுக்கும் ஒன்றும் புரியாமல், சரி, சரி என்கிறார்கள். அதற்காக சில தலைவர்களும், சில பிரிவுகளும் தங்களை விற்றுக்கொண்டார்கள்.

தமிழ்நாட்டை - பெரியார் பூமியை காவி பூமியாக மாற்றிக் காட்டுவோம் என்று சொல்வதற்கு அடிப்படை என்னவென்றால், இங்கே இருக்கின்றவர்களைப் பிரித்து ஆளக்கூடியது; இங்கே இருக்கிற சமூகத்தைப் பிரிப்பது - இங்கே இருப்பவர்களுக்கு ஆசை காட்டுவது - இங்கே இருப்பவர்களை விலைக்கு வாங்கவது. சில பேர் தயாராக இருக்கிறார்கள், தன்னை விற்றுக்கொள்வதற்கு. ஒவ்வொரு சீசனில் ஒவ்வொருவருக்கு விற்றுக்கொள்கிறவர்கள் அவர்கள். அப்படிப்பட்ட ஒரு காலகட்டம் இருக்கிறது.

எங்களின் அன்பான வேண்டுகோள்!

எனவேதான், இந்த நேரத்தில் எல்லோருக்கும் உழைக்கக்கூடிய ஒரு இயக்கம்; பதவிக்குப் போகாத ஒரு இயக்கம்; நாம் எல்லோரும் ஒன்று என்று சொல்லக்கூடிய ஒரு இயக்கம் - அறிவாசான் தந்தை பெரியார் அவர்களால் உருவாக்கப்பட்ட இந்த சமுதாய புரட்சி இயக்கமான திராவிடர் கழகத்தின் சார்பில், எங்களின் அன்பான வேண்டுகோள் என்னவென்றால்,

ஒடுக்கப்பட்ட சமுதாய மக்களே, நீங்கள் பிரிந்து, பிரிந்து ஜாதியால் பிளக்கப்பட்டு இருக்கிறீர்கள். தயவு செய்து உங்கள் உரிமைகளை நீங்கள் வலியுறுத்தவேண்டுமானால், நாம் அனைவரும் சேர்ந்து வலியுறுத்தும்போதும், குறைந்தபட்சம் நீங்கள் அனைவரும் ஒன்று சேரவேண்டும், அதுதான் மிகவும் முக்கியம்.

நம்முடைய தோழர் அதியமான் அவர்கள் மிகவும் தெளிவானவர்.

‘‘தூய்மைத் தொழிலாளர்களின் மறுவாழ்வுக்காக'' என்று எழுதினார். தொழிலாளர்களை அருந்ததியர் என்று கோட்டாவில் பெயர் இருக்கிறது. பாலபாரதி அம்மையாரும், தோழர்களும் சொன்னார்கள். அன்றைக்குக் கலைஞர் அவர்களிடம் இதை வலியுறுத்தி சொன்னோம்.

கலைஞர் ஆட்சியில் இருந்திருந்தால் ஒரு நொடிப் பொழுதில் நிறைவேற்றியிருப்பார்!

இன்றைக்கு அவர் உடல்நலம் பெற்று மீண்டு வருவார்; அதிலொன்றும் சந்தேகமில்லை. அவர் முதலமைச்சராக இருந்திருந்தால், இதுபோன்ற கோரிக்கை, மனு என்று கொடுக்கவேண்டிய அவசியம் கிடையாது. தொடர் முழக்கக் கூட்டம் இல்லாமல், ஒரு நொடிப் பொழுதில் நம்முடைய கோரிக்கையை நிறைவேற்றியிருப்பார்.

இட ஒதுக்கீடு கொடுத்தாகவேண்டும் என்றார்; கொடுக்க முடியாது சட்டப்படி என்றார்கள்.

நாங்கள் எல்லாம்கூட சொன்னோம், இதில் சட்டம் குறுக்கிடாது; ஏற்கெனவே 69 சதவிகிதம் இருக்கிறது என்று சொன்ன பிறகு,

அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டினார். அந்தக் கூட்டத்திலேயே ஒருவர் வீராவேசமாக இட ஒதுக்கீடு கொடுக்கக்கூடாது என்று பேசினார்.

அதை எதிர்த்துப் பேசியது - அந்த அம்மையார் சொன்னதுபோல, நான்தான் வேகமாக ஆரம்பித்தேன்.

நான் சொன்னேன், உங்களுக்கு விருப்பம் இருந்தால், இதற்கு உடன்பட்டால் இங்கே இருங்கள் என்றேன்.

இல்லை, நான் வெளியேறுவேன் என்றார்.

தாராளமாக வெளியேறலாம் என்றேன்.

முதலமைச்சர் கலைஞர் அவர்கள் என்னை பார்த்தார், ‘‘என்னடா இப்படி சொல்கிறாரே'' என்று.

அவர் பல இடங்களுக்கு இப்படி வெளியேறி, வெளியேறி வந்தவர்.

ஆகவேதான், நம்முடைய சமுதாயத்தைப் பொறுத்தவரையில், நான் அனைத்து சகோதரர்களுக்கும் சொல்கிறேன்.

ஆதி என்கிற இரண்டு எழுத்து

வெட்டி எறியப்படும்

பெரியாரிடம் கேட்டார்கள்,

திராவிட நாடு திராவிடர்களுக்கு ஆனால், ஆதிதிராவிடர்களுக்கு என்ன லாபம்? என்று கேட்டார்கள்.

ஆதிதிராவிடர்களுக்கு ஒன்றும் லாபம் கிடையாது.

எல்லோரும் அசந்து போய் பார்த்தார்கள்.

நட்டம் தான் என்றார் பெரியார்.

என்ன நட்டம் என்றால், ஆதி என்கிற இரண்டு எழுத்து வெட்டி எறியப்படும் என்றார்.

ஆதிதிராவிடர், மீதி திராவிடர் என்றால் என்ன? ஒரே திராவிடர்தான், அதிலொன்றும் சந்தேகமில்லை. மனிதர்களுக்குள் வித்தியாசமே இருக்கக்கூடாது.

எல்லாருக்கும் எல்லாமும்

அனைவருக்கும் அனைத்தும்

என்பதுதான் மிக முக்கியம்.

எனவேதான், இந்தத் தொழிலாளர் வர்க்கத்தில், இவ்வளவு கேவலமாக மூச்சுத் திணறி இறப்பது; மலக்குழியில் இறங்குவது; மலத்தைத் தலையில் சுமப்பது போன்ற ஒரு இழிவான நிலை இருக்கக்கூடாது; இருக்கவிடமாட்டோம்.

திராவிடர் கழகம் அனைவரையும் ஒருங்கிணைக்கக் கூடிய அமைப்பாகவும் இருக்கும்!

அதற்கான போராட்டத்திற்கு நீங்கள் செய்கின்ற முயற்சி எல்லாவற்றிற்கும் திராவிடர் கழகம் எப்பொழுதும் உங்களுக்கு உறுதுணையாக இருக்கும் என்பது மட்டுமல்ல, நீங்கள் அழைத்தால், திராவிடர் கழகம் அனைவரையும் ஒருங்கிணைக்கக் கூடிய அமைப்பாகவும் இருக்கும். நிச்சயமாக இந்தப் பணியை செய்வோம்.

ஏனென்றால், நம்முடைய நாட்டில், அரசியலால் பிரிந்திருக்கிறார்கள்; கட்சியினால் பிரிந்திருக்கிறார்கள்; ஜாதியினால் பிரிந்திருக்கிறார்கள்; மதங்களினால் பிரிந்திருக்கிறார்கள். எந்தப் பிரிவும் இருக்கக்கூடாது. சமூகப் புரட்சி என்று சொன்னால், அனைவரும் உறவினர் என்கிற அந்த உணர்வோடு நாம் போராடுவோம்; அதற்கு வேண்டிய ஆயத்தங்களை செய்வோம்!

விரைவில் முதலமைச்சர் அவர்களை சந்தித்து இந்தக் கோரிக்கையை நாம் கொடுப்போம். கால அவகாசத்தையும் அதற்காகக் கொடுப்போம். அந்தக் காலகட்டத்திற்குள்ளாக இயந்திர மயத்திற்கு அவர்கள் வரவேண்டும்.

இயந்திரத்தை இயக்கக்கூடிய அளவிற்குப்

பயிற்சி கொடுக்கவேண்டும்!

இன்னொரு கோரிக்கையையும் வைக்கவேண்டும்; அது என்னவென்று சொன்னால், இயந்திரங்களை புகுத்தினால் மட்டும் போதாது; இத்தனை தொழிலாளர்த் தோழர்கள் இருக்கிறார்கள் அல்லவா, அவர்கள் அனைவருக்கும் அந்த இயந்திரத்தை இயக்கக்கூடிய அளவிற்கு அவர்களுக்குப் பயிற்சி கொடுத்து அவர்களுக்கு அந்தப் பணியை வழங்கவேண்டும்.

இது ஒன்றும் பெரிய கஷ்டமல்ல; நம் ஆட்களைவிட புத்திசாலி வேறு யாரும் கிடையாது, இயல்பாகவே.

ஜாதி தொழில் போன்று

ஆக்கிவிடக்கூடாது

அப்படிப்பட்டவர்களுக்கு, சிறிது காலம் பயிற்சி கொடுத்து, அவர்களையே அப்ரண்டீசாக்கி, அவ்வளவு பேருக்கும் நல்ல சம்பளத்தைக் கொடுக்கலாம். இவர்களே அந்தப் பணியை செய்யக்கூடிய அளவிற்கு வரலாம். புதிதாக ஆட்களும் வரலாம். ஆனால், இதை ஜாதி தொழில் போன்று ஆக்கிவிடக்கூடாது.

குலக்கல்வித் திட்டத்தை எதிர்த்த இயக்கம் - அழித்த இயக்கம் இது.

இதை எதற்காக சொல்கிறோம் என்றால், ஒரு தத்துவத்திற்காக சொல்கிறோம் - இயந்திரத்தை இயக்குவதற்குப் பயிற்சி கொடுக்கவேண்டும் - வேலை வாய்ப்பு கொடுக்கவேண்டும் என்பதற்காக - வாய்ப்பு மறுக்கப்படக்கூடாது என்பதற்காகத்தான் நாம் இதனை சொல்கிறோம்.

ஆனால், அருமைத் தோழர்களே, உங்கள் பிள்ளைகளை நீங்கள் நன்றாகப் படிக்க வைக்கவேண்டும்; அவர்கள் பொறியாளர்களாக வரவேண்டும்; மருத்துவர்களாக வரவேண்டும்; வழக்குரைஞர்களாக வரவேண்டும்; நீதிபதிகளாக வரவேண்டும்; அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ்., அதிகாரிகளாக வரவேண்டும்.

அதானல், இது பாரம்பரியத் தொழில் என்று இருக்கவேண்டிய அவசியம் கிடையாது. யாருக்கு அவசியம் இருக்கிறதோ, அவர்கள் அந்த இயந்திரத்தை இயக்கக்கூடிய அளவிற்கு வரட்டும்.

ஜாதியை ஒழிப்போம் - சமதர்மத்தை நிலைநாட்டுவோம்!

எனவேதான், ஜாதியை ஒழிப்போம் - சமதர்மத்தை நிலைநாட்டுவோம் - சம வாய்ப்பை உருவாக்குவோம் - சமூகநீதிக் கொடி தலைதாழாமல் பறக்கக்கூடிய அளவிற்கு இருப்போம்.

இந்தக் கொடிகள் எல்லாம் சமூகநீதிக் கொடியின் பல்வேறு பரிமாணங்கள் - ஆகவே, இவைகளையெல்லாம் நாம் வற்புறுத்தி வெற்றி பெறுவோம் என்று சொல்லி, வாய்ப்பளித்த உங்களுக்கு நன்றி கூறி,

திராவிடர் கழகம் உங்களோடு இருக்கும்; உங்களில் ஒருவராக நாங்கள் இருப்போம்!

எப்பொழுதும் திராவிடர் கழகம் உங்களோடு இருக்கும்; உங்களில் ஒருவராக நாங்கள் இருப்போம் என்று சொல்லி விடைபெறுகிறேன்.

வாழ்க பெரியார்! வாழ்க அம்பேத்கர்! வளர்க சமூகநீதி!

நன்றி, வணக்கம்!

- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.

 

-  விடுதலை நாளேடு, 2.8.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக