திங்கள், 3 செப்டம்பர், 2018

முகிலன் - மஞ்சு (ஈழத் தமிழ்ப்பெண்) வாழ்க்கை இணைநல ஒப்பந்த விழாவில் தமிழர் தலைவர் உரை

நாடும் நிலமும் நம்மை பிரிக்காது - பண்பாடும், மனிதநேயமும் இணைக்கும்


முகிலன் - மஞ்சு (ஈழத் தமிழ்ப்பெண்) வாழ்க்கை இணைநல ஒப்பந்த விழாவில் தமிழர் தலைவர் உரை




சென்னை, ஆக. 26-   நாடும், நிலமும் நம்மை பிரிக்காது - பண்பாடும், மனிதநேயமுமே நம்மை இணைக்கும் என்றார்  திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.  12.8.2018 அன்று சென்னை வடபழனியில் உள்ள நாகி ரெட்டி ஹாலில் கோ.முகிலன் - செ.மஞ்சு ஆகியோரின் வாழ்க்கை இணையேற்பு விழாவினை நடத்தி வைத்து திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் வாழ்த்துரையாற்றினார்:

அவரது உரை வருமாறு:

கோ.முகிலன் - செ.மஞ்சு


மகிழ்ச்சியோடும், மனநிறைவோடும் நடைபெறக்கூடிய அன்புச்செல்வர்கள் முகிலன் - மஞ்சு ஆகியோருடைய வாழ்க்கை இணையேற்பு விழா நிகழ்ச்சிக்கு நம் அனைவரையும் வரவேற்ற தென்சென்னை மாவட்ட திராவிடர் கழக துணைத் தலைவரும், இந்தக் குடும்பத்திற்கு உரியவருமான அன்பிற்குரிய அருமைத் தோழர் செங்குட்டுவன் அவர்களே, பெரியோர்களே, தாய்மார்களே, கழகத் தோழர்களே, மன்றம் கண்டிடும் மணமக்களே, மணமக்களின் பெற்றோர்களே, உற்றார் உறவினர்களே உங்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பான வணக்கத்தினைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தக் குடும்பத்து மணவிழாவில் கலந்துகொள்வதில் மிகுந்த வாய்ப்பும், பெருமையும் எங்களுக்கு உண்டு.

காரணம், இந்த மணவிழா என்பது இங்கே நண்பர்கள் சொன்னதைப்போல, குறிப்பாக நம்முடைய குணசேகரன் அவர்களும், அய்யா பக்தவச்சலம் அவர்களும் சுட்டிக்காட் டியதைப்போல, தென்னமநாடு பெரியார் நாடு என்று நாங்கள் அழைக்கின்ற ஒரத்தநாட்டிற்குச் சென்றபொழுதெல்லாம், அதைப் பார்த்துவிட்டுச் செல்லக்கூடிய நிலையில், அந்தப் பகுதியில் இயக்கத் தோழர்கள் குடும்பம் குடும்பமாக இருப் பார்கள்.

அப்படிப்பட்ட சூழ்நிலையில்தான், அதிலே ஒரு குடும்பம் பெரியார் குடும்பங்கள், சுயமரியாதை உணர்வாளர்களுடைய குடும்பங்கள் நிறைந்துள்ளன என்பதற்கு அடையாளம் - இங்கே வந்தபொழுது ஒன்றை நினைவூட்டினார்கள்.

அய்யா பண்டரிநாதன் - புலவர் கோலப்பன்


தென்னமநாட்டின் சுயமரியாதை வீரர்களாகத் திகழ்ந்த அய்யா பண்டரிநாதன் அவர்கள், புலவர் கோலப்பன் ஆகி யோர்.

பண்டரிநாதன் மணவிழாவிற்கு, தென்னமநாட்டில் பெரியார் தலைமையேற்று ஆற்றிய உரை, பெரியார் களஞ்சியத்தில் பதிவாகி இருக்கிறது. ஆகவே, தென்னமநாடு இயக்க வரலாற்றிலேயே ஒரு பெரிய சமுதாயப் புரட்சியை செய்யக் கூடிய ஒரு அற்புதமான பகுதிகளில் ஒன்று.

அந்தக் குடும்பத்தைச் சார்ந்தவர்கள்தான் மணமகனது பெற்றோர்களாக இருக்கக்கூடிய சி.கோவிந்தராசு - கவுசல்யா ஆகியோர். இது நம்முடைய குடும்பம்.

இதில் ஒரு பெரிய சிறப்பு என்னவென்றால், சமுதாயப் புரட்சி - ஒரு துளி ரத்தம்கூட சிந்தாமல், அறிவாசான் தந்தை பெரியார் அவர்களால் வெற்றி பெற்றிருக்கிறது என்பதற்கு அடையாளம் இந்த மணமக்கள் - இந்த மணவிழாவாகும். இதனை நன்றாக ஒவ்வொருவரும் புரிந்துகொள்ளவேண்டும்.

ஒரு நூற்றாண்டுக்கு முன்னால்....


ஒரு காலத்தில் நாம் பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட சமு தாயத்தைச் சார்ந்தவர்கள். படிக்கக்கூடாதவர்கள் என்று கருதப்பட்டவர்கள், ஒரு நூற்றாண்டுக்கு முன்னால்.

இந்த ஒரு நூற்றாண்டில் பெரியார் என்ன செய்தார்? இந்தக் கருப்புச் சட்டைக்காரர்கள் என்ன செய்தார்கள்? திராவிடர் கழகம் என்ன செய்தது? என்பது - நம்முடைய ஈழத் தமிழர்களுக்கு - இலங்கைத் தமிழர்கள் என்கிற சொல், என்னுடைய வாயிலிருந்து அவ்வளவு சுலபத்தில் வராது - ஈழத் தமிழர்கள் என்றுதான் சொல்லக்கூடிய அளவிற்கு, அந்த உரிமை அவர்களுக்கு உண்டு என்று ஒரு எடுத்துக்காட்டாகச் சொல்லக்கூடியவர்கள்.

அப்படிப்பட்டவர்களுக்கு இது தெரியவேண்டும் என்பதற் காகச் சொல்கிறேன். மனுதர்மம் இந்த நாட்டை ஆண்டதினுடைய விளைவு, மிகப்பெரும்பான்மையான மக்கள், உழைக்கக்கூடிய மக்கள், பாடுபடக்கூடிய மக்கள், அறிவுள்ள மக்கள் பேதத்திற்குத் தள்ளப்பட்டார்கள் - பேதத்தை ஏற்றார்கள் - அதன் விளைவு பேதத்தை ஏற்கவேண்டிய கட்டாயம் அவர்களுக்கு வந்தது.

அதனுடைய விளைவாக அந்தத் தத்துவம் - அதன்படி, எதைக் கொடுத்தாலும், கீழ்ஜாதிக்காரனுக்கு, சூத்திரனுக்குக் கல்வியைக் கொடுக்காதே என்றார்கள்.

அருள்கூர்ந்து நினைத்துப் பார்க்கவேண்டும் நீங்கள் - என்ன இந்தத் திருமணத்தில் சடங்குகள் இல்லை, சம்பிரதாயங்கள் இல்லை, பிரச்சாரத்தைப்பற்றி அருள்மொழி பேசினாரே, பூங்குன்றன் பேசினாரே, அய்யா இளங்கோவன் அவர்கள் விளக்கமாக சொன்னாரே - என்னுடைய அருமைச் சகோதரர்கள் எத்தனையோ இன்னல்களையெல்லாம் கடந்து, அவைகளையெல்லாம் தாண்டி இன்றைக்குக் கனடா நாட்டிற்குச் சென்று ஒரு தனி அமைப்பை உருவாக்கக்கூடிய அளவிற்கு, அங்கேயும் தம்முடைய தமிழ்ப் பண்பாட்டை மறக்காமல் காப்பாற்றிக் கொண்டிருக்கக்கூடிய நம்முடைய சகோதர, சகோதரிகள், நம்முடைய உடன்பிறப்புகள், அவர்கள் தெரிந்துகொள்ளவேண்டும் என்பதற்காகத்தான் நான் இந்தக் கருத்தைச் சொல்கிறேன்.

பெண்கள் எப்பொழுதுமே படிக்கக்கூடாது, இதுதான் மனுதர்மம்


ஆண்களே படிக்கக்கூடாது; ஆண்களே படிக்கக்கூடாது என்றால், பெண்கள் எப்பொழுதுமே படிக்கக்கூடாது, இதுதான் மனுதர்மம்.

பழைய திருமணம், வைதீகத் திருமணம், புரோகிதத் திருமணம், இந்து மத சடங்கு, சம்பிரதாய திருமணம் என்று சொன்னால், எங்களுக்கொன்றும் அறிவுள்ள நிகழ்வுகள்மீது கோபமில்லை. எது அறிவார்ந்ததோ அதனை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம், அவ்வளவுதான், நாங்கள் பகுத்தறிவுவாதிகள்.

மானிடத்தினுடைய சரி பகுதி பெண்கள். அருள்மொழி அவர்கள் சொன்னதைப்போல, மாவீரர்களைக் கொண்டாடு கிறோம் என்றால், பெண்கள் வீராங்கனைகளாகக் களத்தில் நின்று, அவர்களை களத்திற்கு அனுப்புவதற்குத் தயாராக இருந்து, இன்னல்களை ஏற்ற தாய்மார்கள் அங்கே இருந்ததுதான் அடிப்படையானது என்பதைச் சுட்டிக்காட்டினார். இப்படி எல்லாத் துறைகளிலும் பெண்கள் இருந்தார்கள் நண்பர்களே!

நீங்கள் நினைத்துப் பார்க்கவேண்டும், பண்பாட்டுப் படை யெடுப்பின் காரணமாக, மிகப்பெரும்பாலான மக்களுக்கு படிப்பு மறுக்கப்பட்டது, தடை செய்யப்பட்டது.

வாழ்வுரிமையே பெண்களுக்கு இல்லாத அளவிற்கு...


மக்கள் தொகையில் சரி பகுதியாக இருக்கின்ற பெண்களுக்கு - அவர்கள் எந்த ஜாதிப் பெண்களாக இருந்தாலும், உயர்ஜாதி, தாழ்ந்த ஜாதி என்கிற பேதம் கிடையாது. அந்தப் பெண்கள் படிக்கவே கூடாது. இன்னுங்கேட்டால், ஏன் படிக்கக்கூடாது? படிக்கக்கூடாது என்பது மட்டுமல்ல, அவர்களுக்கு எந்த உரிமையும் கிடையாது. இன்னும் ஒருபடி மேலே சென்று சொல்லவேண்டுமானால், சொத்துரிமை கிடையாது, படிப்புரிமை கிடையாது என்பதையெல்லாம் தாண்டி, வாழ்வுரிமையே அவர்களுக்கு இல்லாத அளவிற்கு அவர்கள் அடிமைகள்.

அடிமைகளாக இருக்கக்கூடியவர்களுக்கு எந்த உரிமையும் கிடையாது என்பதுதான் அவர்களுடைய தத்துவம். அதைத் தான் மனுதர்மம் சனாதன தர்மமாக நாட்டில் வைத்து, சடங்குகள், சம்பிரதாயங்கள், திருமணங்கள், நிகழ்வுகள் இவை அத்தனையும் நடந்தது. பெண்களையே, பொருள்களாகத்தான் கருதினார்கள்.

இங்கே நாம் பார்க்கிறோம், எவ்வளவு பெரிய மகிழ்ச்சி ஏற்படுகிறது. இவை அத்தனையும் ஒரு நூறாண்டு காலம் உழைத்ததின் பலன்.

பண்பாட்டுப் படையெடுப்பு கலாச்சாரம் பெயரிலும் நுழைந்துவிட்டது


நம்முடைய அய்யா கோவிந்தராசு அவர்களுடைய செல்வன் மணமகன் முகிலன்.

இதுபோன்ற பெயரைக் கேட்பதே மிகவும் அபூர்வமாக இருக்கிறது. ஏனென்றால், வாயில் நுழையாத அளவிற்கு பண்பாட்டுப் படையெடுப்பு கலாச்சாரம் பெயரிலும் நுழைந்துவிட்டது.

முகிலன் அவர்கள் பி.இ. படித்து, எம்.எஸ். படித்து, கனடா நாட்டில்  பணி புரிகிறார்.

அதேபோன்று யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று நம்முடைய அருட்தந்தையார் சிறப்பாக சொன்னார்.

பண்பாடும், மனிதநேயமும் நம்மை இணைக்கும்!


அதை நடைமுறைப்படுத்தக் கூடிய அளவிற்கு இந்த மணமக்கள் நிரூபித்துக் கொண்டிருக்கிறார்கள்.


நாடு நம்மை பிரிக்காது


நிலம் நம்மை பிரிக்காது


பண்பாடு நம்மை இணைக்கும்


மனிதநேயம் நம்மை இணைக்கும்


மணமக்கள் இருவரும் ஒருவரை ஒருவர் நேசித்து, இன்றைக்கு வாழ்விணையர்களாக ஆகியிருக்கிறார்கள்.


மணமகளாக இருக்கின்ற மஞ்சு அவர்கள், பி.ஏ. படித்து கனடாவில் உள்ள ராயல் வங்கியில், அக்கவுண்ட் மேனேஜராக இருக்கிறார் என்றால், ஒரு நூறாண்டுகளுக்கு முன் இந்த வாய்ப்பு இங்கே உண்டா?


நம்மைவிட, இலங்கையில் படிப்பிற்கு முன்னுரிமை கொடுத்தார்கள், படித்தார்கள் என்பது ஓரளவிற்கு உண்மை.


ஆனால், இந்த சமுதாயத்தில்,  இந்த மாறுதல்களைப் பார்க்க முடியாது நூறாண்டுகளுக்கு முன்பு.


அறிவிலே நமக்கொன்றும் குறைவில்லை; வாய்ப்புக் குறைவு


ஏன்? வாய்ப்புக் கொடுத்தால்தான், அவர்கள் படிக்க முடியும். அறிவிலே நமக்கொன்றும் குறைவில்லை. வாய்ப்புக் குறைவு - தடுக்கப்பட்டோம் - படிப்பு மறுக்கப்பட்டது.

அந்த மறுப்பைத் தூக்கி எறிந்து, எல்லோருக்கும் எல்லாம்

அனைவருக்கும் அனைத்தும் என்று செய்த ஆசான்தான் தந்தை பெரியார் - அந்த இயக்கம்தான் இந்த இயக்கம்.

இன்றைக்கு எங்களுக்குப் பெருமையாக இருக்கிறது. இவ்வளவுக்கும் ஆயுதத்தை எடுக்கவில்லை. அவர்கள் சொல் லியதுபோல, அரசியலில் பெரிய பதவிக்குப் பெரியார் போய் செய்யவில்லை. மக்கள் மத்தியில், சங்கடத்தை ஏற்றுக்கொண்டு இடைவிடாத பிரச்சாரத்தை செய்தார்கள், மிகப்பெரிய அள விற்கு.

சுயமரியாதைத் திருமண மேடையை வாய்ப்பாகப் பயன்படுத்தினார் கலைஞர்


பிரச்சாரம் செய்யும்பொழுதுகூட, நெருக்கடி காலத்தில் பேச்சுரிமை இல்லாத இந்த நாட்டில்கூட, நம்முடைய கலைஞர் அவர்கள் மறைந்தும் மறையாமல் நம் நெஞ்சங் களில் நிறைந்திருக்கின்ற தலைவர் வெளியில் இருந்தார். நாங்கள் எல்லாம் சிறைச்சாலையில் மிசா கைதிகளாக இருந்த நேரத்தில், ஒரே ஒரு மேடைதான் சுதந்திரமாக இந்தக் கருத்துகளைப் பரப்பக்கூடிய மேடையாக இருந்தது. அதுதான் இந்த சுயமரியாதைத் திருமண மேடை. அவருடைய கெட்டிக்காரத்தனம் இந்த மேடையையே அவர்கள் ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்தினார்.

ஆக, இவ்வளவு பெரிய மாறுதல்களும் இன்றைக்கு வந்தி ருக்கிறது. இங்கே அருள்மொழி அவர்கள் சொன்னார்கள், சங்க இலக்கியத்தில் குறுந்தொகையிலிருந்து ஒரு பாட்டைச் சொன்னார்கள்,

"யாயும் ஞாயும் யாராகியரோ

எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்

யானும் நீயும் எவ்வழி அறிதும்

செம்புலப் பெயல் நீர்போல

அன்புடை நெஞ்சந்தாங் கலந்தனவே"

இருவரும் காதலர்களாக, ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டவர்களாக இருந்தார்கள்.

இதில் மிகவும் பாராட்டவேண்டிய செய்தி என்னவென்றால், மணமகளின் தாயைப் பாராட்டவேண்டும்; அவருடைய சகோதரர்களைப் பாராட்டவேண்டும்; அந்தக் குடும்பத்தை நாங்கள் இயக்கத்தின் சார்பில் வாழ்த்துகிறோம், பாராட்டுகிறோம்.

அதேபோன்று, அய்யா கோவிந்தராசு அவர்கள், பண் பட்ட தன்மான உணர்வு படைத்தவர், தந்தை பெரியார் அவர்களுடைய கொள்கைகளில் ஈடுபாடு கொண்டவர். ஆகவே, அவருடைய மகன் முகிலன் அவர்களை நன்றாகப் படிக்க வைத்து, எல்லா பணிகளையும் இன்றைக்குச் செய்து சிறப்பாக வாழ்கிறார்கள்.

இந்தப் பகுத்தறிவு கருத்து ஊடுருவாமல், அவர் ஆசிரியராக மட்டுமே இருந்திருந்தால் என்னாயிருக்கும்? தயவு செய்து நீங்கள் நினைத்துப் பார்க்கவேண்டும்.

வெளிநாட்டிலிருந்த நம்முடைய முகிலன் அவர்கள், அவரிடம் பகுத்தறிவு கருத்து, பெரியாருடைய கருத்து, சிந்தனை இவைகளெல்லாம் ஊடுருவாமல் இருந்திருந்தால், அல்லது அந்தக் கருத்தை வாழ்க்கை முறையாக ஏற்காதவராக இருந்திருந்தால் என்னாகும்?

அவர் குறுந்தொகையை பள்ளிக்கூடத்தில் மாணவர்களுக் குச் சொல்லிக் கொடுத்திருப்பார். குறுந்தொகையினுடைய பதவுரை, கருத்துரை, பொழிப்புரை இவையெல்லாம் மிக அழகாக விளக்கிச் சொல்லக்கூடிய அருமையான ஆசிரியராக இருந்திருப்பார். ஆனால், அவருடைய மகன்,

அய்யா நீங்கள் குறுந்தொகை பாடலைச் சொன்னீர்கள்,

யாயும் ஞாயும் யாராகியரோ

என்று.

பெரியார் கொள்கையினுடைய வெற்றி


ஆகவே, அதன்படியே நான் அந்தப் பாடத்தை மட்டும் படிக்கவில்லை. அதையே கடைபிடிக்கின்ற அளவிற்கு ஒரு பெண்ணையும் விரும்பியிருக்கிறேன். அவர் வேற்று மதத்தைச் சார்ந்தது அல்லது வேற்று நாட்டைச் சார்ந்தது என்று சொன்னால்,

கோவிந்தராசு அவர்கள் பழைமைவாதியாக இருந்தால், சனாதனத்தில் ஊறிப் போயிருந்தவராக இருந்திருந்தால், என்னதான் குறுந்தொகைக்கு பதவுரை, கருத்துரை சொன்னாலும், அவர் அசந்து போய், அய்யய்யோ இப்படி செய்துவிட்டாயே! நான் வருந்தொகை பெருந்தொகையாக  இருக்கும் என்றல்லவா காத்துக் கொண்டிருந்தேன் - குறுந்தொகை வகுப்புக்கு மட்டுமே தவிர, அது வாழ்க்கைக்கு கிடையாது என்று சொல்லக்கூடிய பலராய் இல்லாமல், இன்றைக்கு அவரே முன்னின்று, இரு குடும்பத்துக்காரர்களும் முன்னின்று இந்த மணவிழாவினை நடத்துகின்றார்களே, அதுதான் இந்தக் கொள்கையினுடைய வெற்றி என்பது - பலமான, அடித்தளமான அஸ்திவாரத்தைக் கொண்டது என்பதற்கு அடையாளமாகும்.

ஒரு ஆயுதத்தை எடுக்காமல், அறிவாயுதத்தை மட்டுமே எடுத்தார் தந்தை பெரியார் அவர்கள்.

இந்த மணவிழாவில், எந்தவிதமான சடங்கு சம்பிரதாயங் களும் இல்லாமல், புகையில்லாமல், புகைச்சல் இல்லாமல் மணமக்கள் மிகவும் மகிழ்ச்சியாக அமர்ந்திருக்கிறார்கள்.

இன்னுங்கேட்டால், இந்த மாறுதல்களினால் நாம் மகிழ்ச் சியடைய வேண்டும் என்பதற்காகத்தான் இவ்வளவு நேரம் பேசிக் கொண்டிருக்கிறேன். இல்லையானால், பேசவேண்டிய அவசியமே இருக்காது. மக்களுக்கு இன்னும் கொஞ்சம் சந்தேகம் இருக்கின்ற காரணத்தினால்தான் இவ்வளவு நேரம் பேசவேண்டி இருக்கிறது.

நாங்கள் பேசுவது உங்களுக்காக - மணமக்களுக்காக அல்ல. அவர்களுக்கு இருக்கிற மனநிலையில், நம்முடைய பேச்சு போய் சேருகிறதா என்பது தெரியாது.

ஜெர்மனி நாட்டில் நடைபெற்ற சுயமரியாதைத் திருமணம்


உங்களுக்கு ஒரு அனுபவத்தைச் சொல்கிறேன்,

ஒரு நான்கு ஆண்டுகளுக்குமுன்பாக, ஜெர்மனி நாட்டில் இருக்கக்கூடிய கொலோன் பல்கலைக் கழகத்திற்கு எங்களை அழைத்திருந்தார்கள். அந்த அழைப்பினை ஏற்று, பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்தின் வேந்தர் என்கிற முறையில், சில ஆய்வுச் சொற்பொழிவுகளை நடத்துவதற்காக  நான் சென்றிருந்தேன்.

அந்தப் பல்கலைக் கழகப் பேராசிரியர் நாங்கள் செல் வதற்குமுன் என்னிடம் தொலைப்பேசியில் தொடர்பு கொண்டார். ஏற்பாடுகளை எல்லாம் நாங்கள் செய்து முடித்துவிட்டோம் என்றெல்லாம் சொல்லிவிட்டு, இன்னொரு அனுமதியை உங்களிடம் கேட்கிறார்கள், ஈழத்தைச் சார்ந்த இருவர், அவர்கள் சுயமரியாதைத் திருமண முறையில்தான் மணம் செய்துகொள்ளவேண்டும் என்பதில் இருவருமே உறுதியாக இருக்கிறார்கள். மணமகன், மணமகள் இருவரும் வெவ்வேறு மதத்தைச் சார்ந்தவர்கள். அப்படி இருந்தாலும், சுயமரியாதைத் திருமணத்தை உங்கள் தலைமையில்தான் நடத்திக்கொள்ளவேண்டும் என்று சொல்கிறார்கள். அதற்கு நேரம் ஒதுக்கித் தர முடியுமா? உங்களிடம் அனுமதி கேட்கச் சொன்னார்கள்'' என்று கேட்டார்.

எங்களுக்கு மகிழ்ச்சிதரக்கூடிய செய்தி. நான் அந்த மணவிழாவினை நடத்தி வைக்கிறேன் என்று சொன்னேன்.

அந்த மணவிழாவிற்கு, மணமக்களுடைய பெற்றோர்களும் வந்திருந்தார்கள்.

ஈழத்துப் பெண்களுடைய நிலை என்பதைப்பற்றி இங்கே சொன்னாரே அருள்மொழி அவர்கள், அவருடைய அண்ணியே ஈழத்தைச் சார்ந்தவர்தான்.

எதைச் செய்கிறோமோ, அதைப் பேசுவோம்;


எதைப் பேசுகிறோமோ அதைச் செய்வோம்


எனவே, நாங்கள் எதைச் செய்கிறோமோ, அதைப் பேசு வோம்; எதைப் பேசுகிறோமோ அதைச் செய்வோம். இதுதான் மிக முக்கியமான ஒரு சிறப்பான நிலைப்பாடு.

ஆகவே, இந்த மணவிழா என்பது மிகவுச் சிறப்பான மணவிழா. இது மதச்சார்பற்ற திருமணம்.

நம்முடைய அருட்தந்தையார் அவர்கள், கடவுள் நம் பிக்கை, கடவுளை வைத்தெல்லாம் வாழ்த்தினார்.  கடவுள் மறுப்பினுடைய சிறப்புகளையெல்லாம் இங்கே செங்குட்டுவன் சொன்னார்.

இந்த  இரண்டும் ஒருவிதமான வேற்றுமையில் ஒற்றுமை காணக்கூடிய அளவிற்கு இருக்கிறது - இந்த மேடையில்தான் முடியுமே தவிர, வேறு எந்த மேடையிலும் முடியாது.

எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்

மெய்ப் பொருள் காண்பதறிவு

எங்களுக்கு மதம் முக்கியமல்ல; மனம் முக்கியம்!

இன்னுங்கேட்டால், இதுவே வைதீகத் திருமணமாக நடந்திருந்தால், ஒரு கிறித்துவப் பாதிரியார் மேடையில் இங்கே ஏறியிருக்க முடியுமா? என்றால், ஏறியிருக்க முடியாது.

எங்களுக்கு மதம் முக்கியமல்ல; மனம் முக்கியம்.  மனம், ஒன்றிப்போன மனம் மிகவும் முக்கியம்.

இதைத்தான் புரட்சிக்கவிஞர் அவர்கள்,

ஒருமனதாயினர் தோழி

திருமண மக்கள் நன்கு வாழி!

என்று வாழ்த்தினார்.

எனவே, இரண்டு மனங்கள், இரண்டுபேரும் ஒருவராக ஆகக்கூடிய அந்த சூழல் வந்திருக்கிறது.

தந்தை பெரியார் அன்றே சொன்னார்


எனவே, இது ஒரு சிறப்பான வெற்றி. ஒரு காலத்தில் சுயமரியாதை இயக்கத்தை உருவாக்கிய தந்தை பெரியார் சொன்னார்,


இன்றைக்கு என்னுடைய இந்த இயக்கம் இங்கே மட்டும் இருப்பதுபோன்று தோன்றலாம்; ஆனால், எதிர்காலத்தில் உலகளாவிய இயக்கமாக இருக்கும்; இந்தக் கொள்கை உலகளாவிய அளவிற்கு வெற்றி பெறும் என்று சொன்னார்கள்.


அதற்கு எடுத்துக்காட்டுத்தான் இந்த அருமையான மணமக்கள், இந்த சிறப்பான திருமணம்.


எனவேதான், இந்த உணர்வுகளை அடிப்படையாக வைத்துப் பார்க்கும்பொழுது, இருசாராருடைய பெற்றோர்களையும், குறிப்பாக ஈழத்துப் பெருமக்களையும் நாங்கள் பாராட்டுகிறோம்.

மணமக்களுக்கு அறிவுரை என்பதை நாங்கள் சொல்வ தில்லை. ஏனென்றால், இளைஞர்கள் அறிவுரை கேட்பதை விரும்பவில்லை. இவர்களுக்கு அறிவுரை என்பது தேவையும் இல்லை.

அறிவியல் என்பது வாழ்வியலுக்குப் பயன்படவேண்டும்!

ஆகவே, வேண்டுகோளாகத்தான் நாங்கள் சில விஷயங் களைச் சொல்வோம்.

அதில் முதல் வேண்டுகோள், நீங்கள் தலைசிறந்த பகுத்தறி வாளர்களாக வாழுங்கள். அறிவியல் சிந்தனைகளோடு வாழுங்கள்; அறிவியல் படிப்புக்காக மட்டுமல்ல, அது வாழ்வி யலுக்குப் பயன்படவேண்டும், அதுதான் மிகவும் முக்கியம்.

இங்கே அருள்மொழி பேசி முடித்துவிட்டு வந்தவுடன், நான் அவரிடம் சொன்னேன், 9 மணிக்குப் பிறகு தொலைக்காட்சிப் பெட்டியை திறங்கள் என்று சொன்னார்கள்; அதற்குப் பிறகுதானே அது மிகவும் ஆபத்தானதாக இருக்கிறதே. அதற்கு முன்புவரை மனிதர்கள் நடமாடுகிறார்கள்; 9 மணிக்குப் பிறகு பார்த்தால், தொலைக்காட்சிக்குப் பேய் பிடித்து விடுகிறது. இதுவரையில் மனிதர்களுக்கு மட்டும்தான் பேய் பிடித்தது. இப்பொழுது தொலைக்காட்சியைத் திறந்தால், பேய் வருகிறது, திடீரென்று பாம்பு வருகிறது - பாம்பு மனிதனாகிறது. கிராபிக்ஸ் டெக்னாலஜியைக் கண்டுபிடித்தவரைத் தேடிக் கொண்டிருக்கிறோம் நாங்கள்.

அறிவியலை எப்படி மூடநம்பிக்கைக்குப் பயன்படுத்தலாம் என்பதில் முதல் பரிசு!


உலக நாடுகளுக்கும், நம்முடைய நாட்டிற்கும் வேறுபாடு என்னவென்றால், வெளிநாட்டுக்காரன் அறிவியல் கருவிகளைக் கண்டுபிடித்தால், அதை எப்படி மூடநம்பிக்கைக்குப் பயன் படுத்தலாம் என்பதில் முதல் பரிசு வாங்குகிற ஆளாக இருக் கிறார்கள். மூடநம்பிக்கைகளைப் பயன்படுத்துவதற்கு அறிவி யல் கருவிகளை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

ஆகவே, மணமக்களாகிய நீங்கள் அறிவியல் சிந்தனை உள்ளவர்களாக வாழவேண்டும். அது பெரியாருக்காக அல்ல; எங்களுக்காக அல்ல.

மருந்து சாப்பிடுகிறோம், அது என்ன மருத்துவருக்காகவா? அல்லது மருந்துக் கடைக்காரர்களுக்கு வியாபாரம் ஆகவேண்டும் என்பதற்காகவா? இல்லை. நம்முடைய நோய் தீரவேண்டும் என்பதற்காகத்தான்.

கலங்கரை விளக்கமாக இருப்பது பகுத்தறிவுதான்!


அதுபோன்று, நம்முடைய அறியாமை. நாம் தடுமாறுகின்ற நேரத்தில், சரியான கலங்கரை விளக்கமாக இருக்கப் போவது பகுத்தறிவுதான். ஆகவே, பகுத்தறிவு சிந்தனையோடு உங்களு டைய வாழ்க்கையை எளிமையோடு வாழுங்கள்.

பெரியாருடைய சகாப்தத்திற்கு முன் இல்லறம் என்பதற்கு அடுத்ததாக என்ன சொல்வார்கள் என்றால், துறவறம் என்று. திருமண நிகழ்வுகளில்கூட, மத சடங்குகளோடு நடப்பதில், காசிக்கு யாத்திரை போவது - குடை பிடித்துக்கொண்டு மண மகன் போவது - மீண்டும் அவரை அழைத்துக்கொண்டு வருவது போன்ற நிகழ்வுகளை வைத்திருப்பார்கள். இல்லறம் - துறவறம் என்று. ஆனால், தந்தை பெரியார்தான் அதை மாற்றினார்.

இல்லறத்திற்கு அடுத்து துறவறமல்ல - தொண்டறம் என்பதை அருமையாக சொன்னார்.

மனிதன் தானாகவும் பிறக்கவில்லை

தனக்காகவும் பிறக்கவில்லை.

சமுதாயத்தில் நாம் ஒரு அங்கம். யார் யாரெல்லாம் உங்களுக்கு உதவினார்களோ, அவர்களுக்கு உதவுங்கள், மற்றவர்களுக்கும் உதவுங்கள். அதன்மூலமாக நீங்கள் வாழ்வில் உயருங்கள். இதுதான் தொண்டறம்.

இல்லறத்தோடு தொண்டறத்தையும் செய்யுங்கள்!


எனவே, அந்தத் தொண்டறத்தைச் செய்யக்கூடிய செம்மல்களாக, இல்லறத்தோடு தொண்டறம் என்பதை நீங்கள் தொடர்ந்து செய்யுங்கள்.

அதைவிட முன்னுரிமை கொடுக்கவேண்டிய செய்தி ஒன்று உண்டு. அது என்னவென்றால், எல்லா மணவிழாக்களிலும் இதை நாங்கள் வலியுறுத்துவோம்.

உங்களுடைய பெற்றோரிடம் நன்றி காட்ட மறக்காதீர்கள்; பாசம் காட்ட மறக்காதீர்கள். ஏனென்றால், நம்முடைய நாட்டில் படிப்பு அதிகமாகிறது; பதவிகள் பெருகுகிறது. ஆனால், பாசம் குறைகிறது. நம் கருத்துள்ள பிள்ளைகள் அப்படியில்லை. இந்தக் கருத்து மக்களுக்குத் தெரியவேண்டும் என்பதற்காகத்தான் இதை சொல்கிறோம்.

இல்லத்தின் பெயரோ அன்னை இல்லம்; அன்னையோ முதியோர் இல்லத்தில்!


ஒரு எடுத்துக்காட்டை இங்கே சொன்னார்கள்,

சிறப்பான முறையில் ஒருவர் வீடு கட்டி, அந்த வீட்டுத் திறப்பு விழாவிற்கான அழைப்பிதழைக் கொடுத்தார். இல்லத் திறப்பு விழா அன்று, நண்பர்களிடம் இல்லத்தில் உள்ள அனைத்து அறைகளையும் சுற்றிக் காட்டுகிறார். அந்த இல்லத்திற்குப் பெயர் அன்னை இல்லம் என்று பெயர் வைத்திருக்கிறார். தன்னுடைய தாயின் மீது எவ்வளவு அன்பு இருந்தால், அன்னை இல்லம் என்று பெயர் வைத்திருக்கிறாரே என்று அனைவரும் வியந்தார்கள். ஒரு நண்பர் அவரைப் பார்த்து, சரி, உங்களுடைய தாய் எங்கே, நாங்கள் அவரைப் பார்க்கவேண்டும் என்று அவரிடம் கேட்டார்.

உடனே அவர், என் தாய் முதியோர் இல்லத்தில் இருக்கிறார் என்று சொன்னார்.

வீட்டிற்குப் பெயர் அன்னை இல்லம்; ஆனால், அன்னை இருப்பது முதியோர் இல்லம் என்று சொல்கின்ற நிலை இன்றைக்கு நாட்டில் இருக்கிறது. குழந்தைகள் இல்லம் பெருகுவதைவிட, முதியோர் இல்லம் பெருகிக் கொண்டிருக்கின்ற ஒரு அவலம் இந்த நாட்டில் இருக்கிறது. ஆனால், பகுத்தறிவாளர்கள் குடும்பத்தைப் பொருத்தவரையில் அப்படி இல்லை என்பதை, எங்கள் அருள்மொழி அவர்கள் இங்கே தெளிவாகச் சொன்னார்.

பெற்றோர்களிடம்  பாசம் காட்ட மறவாதீர்!


எங்களுக்குக் கடமைகள் மிக முக்கியம். எனவேதான், நீங்கள் எவ்வளவு உயர்ந்தாலும், உங்களுடைய வாழ்நாளில், மற்றவர்களை குறிப்பாக பெற்றோர்களை, அவர்கள் காட்டிய தியாகத்தை, அவர்கள் உங்களுக்காகப் பட்ட வேதனைகளை, துன்பங்களையெல்லாம் நினைத்துப் பாருங்கள். உங்களிடமிருந்து அவர்கள் பணத்தையோ, மற்றவற்றையோ எதிர்பார்க்க மாட்டார்கள். அன்பை, மரியாதையை, பாசத்தை எதிர்பார்ப்பார்கள். அதை மறக்காமல் நீங்கள் செய்யுங்கள்.

அதோடு, நீங்கள் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து வாழ கற்றக்கொண்டால், உங்களைவிட வெற்றிகரமானவர்கள் வேறு யாரும் இருக்க முடியாது.

அறிஞர் அண்ணா அவர்கள் மிக அழகாகச் சொன்னார்,

விட்டுக் கொடுக்கிறவர்கள் கெட்டுப் போவதில்லை

கெட்டுப் போகிறவர்கள் விட்டுக் கொடுப்பதில்லை.

ஆகவே, தன்முனைப்பு என்பதைக் கொஞ்சம் தள்ளி வையுங்கள்.

இறுதியாக ஒன்றைச் சொல்லி முடிக்கிறேன்.

தேர்வில் வெற்றி பெற்றவர்கள், தோல்வியுற்றவர்கள் என்று உண்டு.

இருவரில் யார் தோற்பது என்பதில் முந்திக் கொள்ளுங்கள்


அதேபோல, தேர்தலில் வெற்றி பெற்றவர்கள், தோல்வியுற்றவர்கள் என்று இரண்டு வகை உண்டு.

ஆனால், வாழ்க்கை என்பது அதற்கு நேர் வித்தியாசமானது. உங்கள் இரண்டு பேருக்குமிடையே போட்டி என்று வந்தால், யார் முதலில் தோற்பது என்பதில்தான் உங்களுக்கு உண்மையான வெற்றி. அதை நீங்கள் வாழ்நாளில் காட்டுங்கள்.

அதனால் உங்கள் வாழ்க்கை மிகச் சிறப்பாக அமையும் என்று சொல்லி, நீங்கள் எல்லா வகையிலும் மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக வாழவேண்டும்.

தம்மின் தம்மக்கள் அறிவுடைமை என்று சொல்லக்கூடிய அளவிற்கு நீங்கள் சிறந்து விளங்குங்கள்.

தொண்டறச் செம்மல்களாக வாழுங்கள்


இன உணர்வோடு, பகுத்தறிவோடு, எளிமையான வாழ்க்கையோடு தொண்டறச் செம்மல்களாக வாழுங்கள் என்று சொல்லி, இந்த வாய்ப்பை அளித்த அனைவருக்கும் நன்றி கூறி,

குறிப்பாக ஈழத்து சகோதரிகளுக்கும், அருட்தந்தையார் அவர்களுக்கும் தெளிவாக எங்களுடைய நன்றியை, பாராட்டை தெரிவித்து, மணமக்கள் வாழ்க, பெரியார் வாழ்க! வருக சுயமரியாதை உலகு! என்று கூறி என்னுரையை முடிக்கிறேன்.

நன்றி, வணக்கம்!

- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.

- விடுதலை நாளேடு, 26.8.18

வாழ்க்கை இணைநல ஒப்பந்த விழா



தஞ்சை மாவட்டம் உரத்தநாடு, தென்னமநாடு சி.கோவிந்தராசு - சு.கவுசல்யா ஆகியோரின் மகன் பொறியாளர் கோ.முகிலனுக்கும் , கனடா ஓன்டாரியோ பெடாலி கிரசென்டை சேர்ந்த நினைவில் வாழும் செல்வநாயகம் - -ரெஜினா ஆகியோரின் மகள் செ.மஞ்சுவிற்கும் வாழ்க்கை இணைநல ஒப்பந்த விழாவினை தமிழர் தலைவர் ஆசிரியர்  நடத்தி வைத்தார். உடன்: மணமக்களின் பெற்றோர் மற்றும் முக்கிய பிரமுகர்கள். (12.8.2018, வடபழனி)

- விடுதலை நாளேடு, 25.8.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக