செவ்வாய், 31 ஜூலை, 2018

வீணர்களுக்குப் பதில் எழுதும் நேரத்தில் பத்து திராவிட மாணவர்கaளைச் சேருங்கள்!

 


குடந்தையில் உரிமை முழக்கம், சமத்துவ சங்கநாதம் முழங்கிற்று 1943இல் திராவிட மாணவரிடையே!


அக்காலத்தில் குடந்தை அரசினர் கலை அறிவியல் கல்லூரி ஒன்றுதான் மூன்று, நான்கு மாவட்டங்களுக்கும் பொதுவான மக்கள் கல்லூரி. என்றாலும், அக்கல்வி நீரோடையில் பார்ப்பன முதலைகளே அதிகம் - ஆசிரிய -மாணவர்கள் எண்ணிக்கையிலும்!


சமூகநீதிக் கொடியை ஏந்தி, சரித்திரம் படைக்கின்றனர்


இன்றோ நிலைமை வேறு! ஒடுக்கப்பட்ட சமூக மாணவர்கள் சமூகநீதிக் கொடியை ஏந்தி, சரித்திரம் படைக்கின்றனர்!


ராமானுஜங்கள்’ படித்த கல்லூரியில், படித்து உயர்நீதிமன்ற நீதிபதியாகி வரலாற்றுத் தீர்ப்புகளை வழங்கிய ஜஸ்டீஸ் சிங்காரவேலு போன்ற மாணவப் பருவத்தில் (பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தவர்) கல்லூரியில் சமூகநீதிக்கான உரிமைப் போர் நிகழ்த்தி, பேராசிரியர்களையே தன் பக்கம் உள்ள நியாயத்தால் ஈர்த்தவர்களைக் கண்ட அமைதிப் புரட்சியை’ கண்டுள்ள கல்லூரியாக அது மாறியது.


இன எதிரிகளை மருளச் செய்துள்ளது!


1943இல் தவமணிராசன்களாலும், செங்குட்டுவன்களாலும், கருணானந்தங்களாலும் (இன்னும் பலருண்டு) _ தந்தை பெரியாரிடம் அனுமதி பெற்று, பிறந்த திராவிட மாணவர் கழகத்தின் பவள விழா (75 ஆம் ஆண்டு) மாநாடு - இளம் இருபால் மாணவ வீரர்கள், வீராங்கனைகளின் வீறுநடை பேரணியையும் உள்ளடக்கி, இன எதிரிகளை மருளச் செய்துள்ளது!


கடமையாற்ற வந்த காவல்துறை அதிகாரிகளே தங்கள் மூக்கின்மேல் விரலை வைத்தார்கள்!


என்ன ஆச்சரியம்! இப்பெருங்கூட்டத்தில் ஒருவர்கூட புகை பிடிக்கவில்லை; ‘டாஸ்மாக்’ கடைகள் பக்கமே போகாமல், அக்கடைகள் வெறிச்சோடிக்  கிடந்தனவே. “இப்படி ஒரு கட்டுப்பாடான இயக்கமா?’’ என்று வியந்து நம் தோழர்களைப் பாராட்டினர்!


பெரியோர் முதல் சிறியவர்கள், இளைஞர்கள், மாணவர்கள், பெண்கள், தாய்மார்கள், பொதுமக்கள் உள்பட எவரும் கடைசிவரை கலையவே இல்லாது, கருத்துடன், கவனமாக இறுதிவரை நிகழ்ச்சிகளைச் சுவைத்து முடித்து, ஒரு சிறு அசம்பாவிதத்திற்குக்கூட இடமின்றி திரும்பி, சரித்திரம் படைத்தனரே என்று கட்டுப்பாடு கண்டு மகிழ்ந்தனர் காவல்துறையினரும்!


இளையர்களின் எழுச்சியின் மாட்சி


பேரணியில் மாணவர்கள் அணிவகுத்து நின்ற கண்கொள்ளாக் காட்சி - பெரியாரின் இராணுவம் எப்படிப்பட்ட இளையர்களின் எழுச்சியின் மாட்சி என்று பறை சாற்றிற்று!


இதன் பெருமையும், பேரணி தொடங்கும்முன்பு மாணவர்கள் எடுத்த சூளுரைகள், - 10 உறுதிமொழிகள் - வேறெங்கும் காண முடியாத புரட்சியின் பூபாளம்! புத்தாக் கத்தின் செறிவு - காவிகளின் சரிவு; எதிர்ப்பின் முறிவு; முடிவு!


இம்மாணவர்களையொட்டித் திரண்ட பல்லாயிரம் கருஞ்சட்டை பழைய வாலிபர்களும், பெரியார் மொழியில் “பழைய வாலிபர்களும்’’ - முதியவர்கள் என்ற சொற்றொடரை 1938 இல் கூட அய்யா பயன்படுத்தாமல் இப்படிக் குறிப்பிட்டுள்ளார். அணிவகுப்பின் அடுத்த பகுதியாக, தோள் கொடுக்கும் தோழர்களாயினர்! என்னே காட்சி! எத்தகைய மாட்சி!!


விதைக்காமல் விளையும் கழனியல்ல திராவிடம்!  அது ஆரியம்!


உழைக்காமல் பெற்ற வெற்றி அல்ல இது! கடும் உழைப்பின் விளைச்சல் - இது திராவிடம்!


எழுதிட ஏராளம் உண்டு!


திராவிட மாணவர் கழகச் செயலாளர் தோழர் பிரின்சு என்னாரெசு பெரியார், திராவிடர் கழக மாநில அமைப்பாளர் உரத்தநாடு குணசேகரன், விபத்தில் சிக்கி மருத்துவமனையில் இருந்த நிலையிலும், ஓய்வெடுக்காது உழைத்த செந்தூரப்பாண்டியன், பாரதிதாசன் பல்கலைக் கழக பிஎச்.டி., ஆய்வு மாணவர் அஜிதன் தலைமையில் குழுவினர் மற்றும் மாணவ கழக கூட்டுச் செயலாளர் சட்டக் கல்லூரி மாணவி மதிவதனி போன்ற பலரின் தலைமையில் வசூல் குழுவினர் போன்ற இளவட்டங்களின் ஈடற்ற உழைப்பும் குடந்தை மாவட்ட திராவிடர் கழக, பகுத்தறிவாளர் கழகத்தவரின் ஒருங்கிணைந்த ஒத்துழைப்பும் (மாவட்டத் தலைவர் கவுதமன் தலைமையில்) இந்த வெற்றிகளின் அறுவடையாகும்!


தோழர் ஆடிட்டர் குடந்தை சண்முகம், தோழர்களுக்கு அருமையான ஊக்க மாத்திரை வழங்கிய உயர்தனித் தோழர்!


இப்படி எழுதிட ஏராள பேர் உண்டு; மற்றவர்கள் இதில் அடக்கம் என்றே கருதுக!


பாராட்டி மகிழ்கிறோம்!


கடைவீதி வசூல், பேருந்துகளின் பிரச்சாரத்துடன் கூடிய வசூல் என்று சேர்த்து, மாநாடும் நடத்தி 4 லட்சம் ரூபாய் பண முடிப்பும் (மிச்சப்படுத்தி) தலைமைக் கழகத்திடம் வழங்கிய, திராவிட மாணவர் கழகக் குடும்பத்தினரின் பொறுப்புணர்வை பாராட்டி மகிழ்கிறோம்!


நமது திராவிட மாணவர் கழகப் பவள விழா - குடந்தை மாநாடு - எம்மைப் போன்ற பல ‘‘பழைய வாலிபர்களை’’ - புதிய வாலிபர்களாக - இளையர்களாக மாற்றிக் காட்டிய வித்தை - ஒரு விந்தை என்றே சொல்லவேண்டும்!


இந்த கொள்கை வீச்சின் ஒளி சிலருக்குக் கண் கூசுவதால், அதை மறைத்து, இதை மக்களிடம் திசை திருப்பவே சாரட்டு வண்டியின் சக்கரத்தினைப்’பற்றிப் பேசுகிறார்கள்.


அரைவேக்காடுகளை அலட்சியப்படுத்துங்கள்!


அருள்கூர்ந்து அவர்களுக்குப் பதில் சொல்லி, நமது பொன்னான நேரத்தை - கடமையாற்றிடும் காலத்தை - வீணாக்கவேண்டாம்!


பற்பல நேரங்களில் திட்டமிட்டே நம்மை திசை திருப்ப நினைக்கும் இந்த எதிரிகளை - அரைவேக்காடுகளை’ அலட்சியப்படுத்துங்கள்!


நாணேற்றிய வில் வீரனுக்கு இலக்கு மட்டுமே தெரிய வேண்டும்; வேறு எதிலும் குறி திரும்பக் கூடாது என்பதை மறவாதீர் பெரியாரின் இராணுவக் கட்டுப்பாட்டு வீரர்களே!


பெரியாரை சுவாசிப்போம்!


பெருவாழ்வு பெறுவோம்!!


பதில் எழுதும் நேரத்தில் பத்து பேர்களை இந்த திராவிட மாணவர் அமைப்பிற்கு அழைத்துவர உழையுங்கள்!


- கி.வீரமணி,


ஆசிரியர், ‘உண்மை’


- உண்மை இதழ், 16-31.7.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக