வெள்ளி, 20 ஜூலை, 2018

திரும்பிய பக்கமெல்லாம் கோவில்கள் உள்ள குடந்தையில் திரும்பிய பக்கமெல்லாம் திராவிட மாணவர்கள் எழுச்சிக் கண்டு மகிழ்கிறோம்

மாணவர்களே உங்களை நம்பித்தான் போராட்டங்கள் இருக்கின்றன


அதேநேரத்தில் உங்கள் படிப்பை முடித்துவிட்டுப் போராட முன்வாருங்கள்!

குடந்தை திராவிட மாணவர் கழக  பவள விழா மாநாட்டில் தமிழர் தலைவர் அழைப்பு


குடந்தை, ஜூலை 13-    மாணவர்களை நம்பித்தான் பல போராட் டங்களை நடத்தவிருக்கிறோம் என்றாலும், மாணவர் படிப்பை முடித்துவிட்டுத்தான் போராட்டத்திற்கு வரவேண்டும் என்றார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

8.7.2018 அன்று மாலை குடந்தையில் நடைபெற்ற திராவிட  மாணவர் கழக பவள விழா மாநில மாநாட்டில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்:

அவரது உரை வருமாறு:

1916 ஆம் ஆண்டு கால்கோள் வைக்கப்பட்ட திராவிடர் இயக்கம்

மிகுந்த மகிழ்ச்சியோடு குடந்தை ஒரு வரலாறு படைத் திருக்கிறது என்பதற்கு அடையாளம்; ஒரு பண்பாட்டுப் படை யெடுப்பிலிருந்து திராவிடர்களை, தமிழர்களை, ஒடுக்கப்பட்ட மக்களை, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களை அந்த மக்களுடைய இளையர்கள், இப்பொழுதெல்லாம் முன்பு

போல, மனுதர்மத்தைப் பின்பற்றாமல், மனித தர்மத்தை ஏற்கக்கூடிய அளவிற்கு, திராவிடர் இயக்கம் 1916 ஆம் ஆண்டு கால்கோள் வைக்கப்பட்ட திராவிடர் இயக்கம். அது பல வகைகளிலும் பரிணாமப்படி வளர்ச்சி அடைந்து, பிறகு சமூகநீதிக்காகப் போராடுகின்ற அதனுடைய தளம் - மேலும் அறிவாசான் தந்தை பெரியார் அவர்களாலே விரிவாக்கப்பட்டு, 1926 ஆம் ஆண்டில் சுயமரியாதை இயக்கமாக அது மேலும் சிறப்படைந்து, சுயமரியாதை இயக்கம் தீவிரமான ஜாதி ஒழிப்பு இயக்கம், பெண்ணடிமை ஒழிப்பு இயக்கம், பகுத்தறிவு இயக்கம் என்ற பெருமையோடு வளர்ந்த நேரத்தில், அரசியலுக்குச் சென்றால், அங்கே தேர்தல் அரசியலில் மேடு- பள்ளங்கள் உண்டு; வெற்றி - தோல்விகள் உண்டு என்ற அடிப்படையில், எவ்வளவோ தமிழர்களுக்கு, திராவிடர்களுக்கு, அன்றைய பார்ப்பனரல்லாத மக்கள் என்று அறியப்பட்ட திராவிடர்களுக்கு ஏராளமான நன்மைகளை செய்து குவித்தும்கூட, திராவிடர் இயக்கம் என்று நம்மால் அழைக்கப்படக்கூடிய ஜஸ்டீஸ் கட்சி - நீதிக்கட்சி என்ற அந்த இயக்கம் இருக்கிறதே - எந்த மக்களுக்காக அந்த இயக்கம் பாடுபட்டதோ அந்த மக்களுக்கு நன்றி உணர்ச்சி என்பது எளிதாகக் கிடையாது என்பதற்கு அடையாளம் - நண்பர்களை எதிரிகளாகப் பார்ப்பது; எதிரிகளை நண்பர்களாகக் கருதி ஏமாறுவது; இது இந்த இனத்திற்குக் கைவந்த ஒரு கலை.

அப்படிப்பட்ட விளைவு காரணமாக, அது ஒவ்வொரு முறையும் தேய்ந்தது; 1920 ஆம் ஆண்டுகளில் இருந்து 1926 ஆம் ஆண்டு வரையில் அந்த இயக்கம் - திராவிடர் இயக்கம் - நீதிக்கட்சி - தென்னிந்திய நல உரிமைச் சங்கம் மிகப்பெரிய சாதனைகளை அந்த ஆறாண்டு காலங்களில் சமூகப் புரட்சியை செய்து காட்டியது.

நீதிக்கட்சி தோல்வியை நோக்கிச் சென்றது

அதற்குப் பிறகு அந்த இயக்கம், அதனுடைய வழமை போல இயக்கத்திற்கு மக்கள் ஆதரவு இருந்தாலும், இயக்கத்திற் குள்ளேயே கோளாறு ஏற்பட்டு, இவர் வந்தால், நாம் அமைச்சராக முடியாது; எனவே, அவரைத் தோற்கடிக்கவேண்டும் என்று இவரும், இவர் வந்தால், நமக்கு அந்த வாய்ப்பு இருக்காது என்று எதிரியைத் தோற்கடிப்பதற்குப் பதிலாக அவரைத் தோற்கடிக்கவேண்டும் என்று இன்னொருவரும் மாறி மாறி அவர்கள் நடந்துகொண்ட காரணத்தாலும், விபீஷணர்கள் ஆழ்வார்களாக்கப்பட்ட இராமாயணத்தை இந்த நாட்டில் மிகப்பெரிய காவியம் என்று கருதுகின்ற காரணத்தினாலும், அந்த நீதிக்கட்சி தோல்வியை நோக்கிச் சென்றது.

தலைமைப் பொறுப்பை ஏற்பதற்கு

யாரும் தயாராக இல்லாத நேரத்தில்...


1928 ஆம் ஆண்டில், அதற்குரிய பலம் இல்லை. ஆனாலும், அரசாங்கத்தில், தனது ஆதரவை கொடுத்து, தனக்குரிய ஒரு ஆட்சியை - நிலை நிறுத்தக்கூடிய அளவிற்கு, அதனுடைய எண்ணிக்கை குறைந்தது - இது அரசியல் வரலாறு. நாளும் குறைந்துகொண்டே வந்தது. பதவிக்காக அரசியலுக்கு வருகின்றவர்கள் ஓடிப்போய் விட்டார்கள். கட்சியைக் காப்பாற்றவேண்டும்; கட்சிக்கு சோதனை ஏற்பட்டு இருக்கின்ற நேரத்தில், அரசியல் கட்சிகளைக் காப்பாற்றவேண்டும் என்று அவர்கள் நினைக்காத காலத்தில், மிகப்பெரிய அளவிற்கு அங்கே யார் இதை எடுத்துச் செய்வது என்ற நிலையில், அந்தப் பொறுப்பை ஏற்பதற்கு யாரும் தயாராக இல்லாத நேரத்தில், ஒரே ஒருவரைத்தான் அத்தனைக் கண்களும் தேடின. அவர்தான் அறிவாசான் தந்தை பெரியார் அவர்கள்.

வெற்றி வரும்பொழுது எல்லோரும் போட்டி போடு வார்கள்; தோல்வி வரும்பொழுது யாருமே முன்னால் வரமாட்டார்கள். தோல்வி வந்தவுடன், பெரியார் பொறுப் பேற்றார்.

எப்படி அவர் பெரியார்? இளைஞர்களுக்கு இந்த வரலாறு தெரியவேண்டும்; இளம் மாணவர்களுக்குப் புரியவேண்டும் என்பதற்காக இதிலிருந்து ஆரம்பிக்கிறேன்.

சுயமரியாதை இயக்கத்தினுடைய நிறுவன தலைவர் தந்தை பெரியார் - அன்றைக்கு ஈ.வெ.ராமசாமி என்று அழைக்கப்பட்ட அவர்தான் கண்களுக்குத் தென்பட்டார். உடனே அவரை தலைவராக ஒருமுகமாகத் தேர்ந்தெடுக்கிறார்கள். பெரியார் அவர்களுக்கு வேறு வழியில்லை - இன்னுங்கேட்டால், பெரியார் அவர்கள் சிறைச்சாலையில் இருக்கிறார். இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டதினால், அவர் சிறைச்சாலையில் இருக்கிறார். சிறைச்சாலையில் இருக்கிறவரிடம், இந்தப் பொறுப்பை வெளியில் இருப்பவர்கள் தேர்ந்தெடுத்துக் கொடுக் கிறார்கள்.

இந்தக் காலகட்டத்தை நீங்கள் நன்றாக எண்ணிப்பார்க்க வேண்டும். அப்போது, இப்படியெல்லாம் நினைத்துக் கொண் டிருந்தார்களே என்பதற்காக, ஒரு பெரிய வாய்ப்பு - பெரியார் அந்தப் பதவியை ஏற்றுக்கொண்டு சொன்னார்.

எல்லோரும் என்ன சொல்வார்கள், ‘‘நம்முடைய இயக்கம் தோல்வி அடைந்திருக்கிறது; அடுத்த முறை நாம் வெற்றி பெறுவோம்; ஆகையால், நீங்கள் எல்லாம் நம்பிக்கையோடு இருங்கள்’’ என்றுதான் சொல்வார்கள்.

பழைய ஜஸ்டீஸ் கட்சித் தலைவர்கள், தேர்தலில் நின்ற வர்கள், தேர்தலில் நிற்பதற்கு இடம் கிடைக்காதவர்கள், தோல் வியுற்றதை உள்ளுக்குள் வரவேற்று - வெளியில் ஒப்புக்காக அழுதவர்கள் இப்படியெல்லாம் இருக்கக்கூடிய எல்லோரும் ஒன்று சேர்ந்த நேரத்தில், பெரியார் அவர்கள் பொறுப்பேற்றார்.

இன்றைய இளைஞர்களுக்கு இந்த இயக்கம் எப்படிப்பட்ட இயக்கம்? இந்தத் தலைமை எப்படிப்பட்டது? பெரியார் அவர்கள் எப்படிப்பட்ட தலைவர், வேறுபட்ட ஒரு தனித்தன்மை வாய்ந்த தலைவர் என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும் என்பதற்காகத்தான் இதிலிருந்து நான் ஆரம்பிக்கிறேன்.

பெரியார் பேசுகிறார்!

அப்பொழுது அய்யா சொன்னார், ‘‘என்னை நீங்கள் தேர்ந்தெடுத்து விட்டீர்கள். நீங்கள் தேர்ந்தெடுத்ததினால், நான் அந்தப் பதவியை ஏற்றுக்கொள்கிறேன், வேறு வழியில்லாமல். ஆனால், எனக்கு முன் உரையாற்றியவர்கள் எல்லாம் தோல்வி அடைந்துவிட்டோமே என்று வருத்தப்பட்டார்கள்; ஆனால், நான் வருத்தப்படவே இல்லை. இதைவிட இன்னும் மோசமான தோல்வி வந்திருக்கவேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை; அப்பொழுதுதான் உங்களுக்கெல்லாம் புத்தி வரும். இந்தத் தோல்வி வந்தால்தான், நம்மாள்களுக்குப் புத்தி வரும்.

இரட்டை நிலையால்தான்


நீங்கள் எல்லாம் தோற்றீர்கள்

ஏனென்றால், நீங்கள் இதுவரையில் என்ன சொன்னீர்கள், பார்ப்பானைப் பொறுத்தவரையில், உத்தியோகத்திற்கு வரக்கூடாது என்றீர்கள்; கல்விக்கு வரக்கூடாது என்று சொன்னீர்கள்; அவர்களுடைய எண்ணிக்கை 3 சதவிகிதம் என்று. அதை சொல்லிவிட்டு, பார்ப்பனர்களுக்கு எதிராக, பார்ப்பனீயத்திற்கு எதிராக நாங்கள் கொடி பிடித்தோம் என்று சொன்னதோடு நிறுத்திக்கொண்டு, வீட்டிற்குள் சென்றதும், அவர்களை அழைத்து அவர்களுடைய காலில் வீழ்ந்தீர்கள்; அவர்தான் திதி கொடுக்கவேண்டும் என்றீர்கள்; அவர்தான் கருமாதி நடத்தவேண்டும் என்றீர்கள்; அவர்தான் கல்யாணம் நடத்தவேண்டும் என்று சொன்னீர்கள்.

ஆக, இங்கே ஒரு நிலை - அங்கே ஒரு நிலை என்று இருந்தீர்களே - இந்த இரட்டை நிலையால்தான் நீங்கள் எல்லாம் தோற்றீர்கள்.

இந்தக் கொள்கையை ஒழுங்காக சொல்லவேண்டுமானால், என்னுடைய வழிக்கு விடுங்கள். அப்பொழுதுதான், மக்கள் இயக்கமாக இது வளரும் என்று சொல்லித்தான், 1944 ஆம் ஆண்டு திராவிடர் கழகம் அன்று பெயர் பெற்றது - நீதிக்கட்சி, சுயமரியாதை இயக்கம் இரண்டிற்கும் தலைவராக தந்தை பெரியார் அவர்கள் வந்த காரணத்தினால். அந்தக் காலகட்டத்தில், பேரறிஞர் அண்ணா போன்றவர்கள் நல்ல தளபதிகளாக மாணவப் பருவத்திலிருந்து அவருக்குக் கிடைத் தார்கள்.

இளைஞர்களைத் தட்டிக் கொடுக்கும்

ஒரு நல்ல தலைமை!

எதிர்பாராமல், திருப்பூருக்குச் செல்கிறார்; அங்கே ஒரு இளைஞர் மிக ஆவேசமாக, ஆழமாகப் பேசுகிறார்.

அவரிடம், தந்தை பெரியார் அவர்கள், என்ன செய்யப் போகிறீர்கள் என்று கேட்கிறார்.

அந்த இளைஞரும், நானும் அதுபற்றித்தான் யோசனை செய்து கொண்டிருக்கிறேன் என்கிறார்.

அப்படியென்றால், இங்கே வந்துவிடுங்கள் என்று தந்தை பெரியார் அவர்கள் அழைக்கின்றார்.

இளைஞர்களைத் தட்டிக் கொடுத்து, அவர்களைப் பயன் படுத்துகின்ற அந்த புத்திசாலித்தனமும் ஒரு நல்ல தலைமைக்கு உண்டு. அந்த அடிப்படையில், தந்தை பெரியார் அவர்கள் அதற்கு வழியும் காட்டினார்.

அப்படிப் பிறந்தது இந்த இயக்கம். 1944 ஆம் ஆண்டில், அதிகாரபூர்வமாக திராவிடர் கழகம் என்று வந்தது.

ஆங்கிலப் பத்திரிகைகளுக்குத்தான் செல்வாக்கு இருந்தது

இன்னுங்கேட்டால், நியாயமாக நீதிக்கட்சிக்கே திராவிடர் கழகம் என்று பெயர் வந்திருக்கவேண்டும்; ஏனென்றால், ஜஸ்டிஸ் பெயரில் பத்திரிகை  வந்துவிட்டது.

ஜஸ்டிஸ் கட்சி, ஜஸ்டிஸ் கட்சி என்று சொன்னார்களே, அந்த ஜஸ்டிஸ் என்ற பெயர், தென்னிந்திய நல உரிமைச் சங்கம் நடத்திய ஆங்கில நாளிதழாகும்.

எனவே, ஜஸ்டிஸ் கட்சி, ஜஸ்டிஸ் கட்சி என்று பாப்புலர் ஆவதற்காக, மக்களிடம், வெகுஜனப் பெயராக அதனை வைத்திருந்தார்கள். அதேநேரத்தில், தமிழில், தெலுங்கில் பத்திரிகை; ஏனென்றால், பெரும்பாலும் ஆங்கிலம் படித்தவர்கள்தான் தலைவர்களாக இருந்தார்கள். ஆங்கி லப் பத்திரிகைகளுக்குத்தான் செல்வாக்கு இருந்தது; வெள் ளைக்காரன் படிக்கவேண்டும் -அதுதான் மிக முக்கியம்.

ஆகவே, ஜஸ்டிஸ் கட்சி என்ற கருத்தை உண்டாக்கினார்கள் என்று சொன்னால், ஜஸ்டிஸ் கட்சி என்று பெயர் வந்ததே தவிர - தமிழ்ப் பத்திரிகை ஒன்றை ஆரம்பித்தார்கள் - ஆந்திரப் பத்திரிகைக்கு ஆந்திரப் பிரகாசினி; தமிழ்ப் பத்திரிகைக்கு திராவிடன் என்று பெயர் வைத்தார்கள்.

‘திராவிடன்’ என்ற பெயரில் பத்திரிகை

இன்றைய ‘விடுதலை’ அச்சகத்திற்கு மூதாதையர் எது என்றால், திராவிடன் அச்சகம்தான். ‘திராவிடன்’ என்ற பெயரில் பத்திரிகையை ஆரம்பித்தார்கள்.

பெரியார்தான் கேட்டார்,  ‘‘நியாயமாக பயன்படுத்தி  இருக்க வேண்டும் என்றால், பார்ப்பனரல்லாதவர், பார்ப்பனரல்லாதவர் என்று சொல்கிறீர்களே, 3 பேர் அல்லாதவர் நாங்கள் என்று ஏன் சொல்லவேண்டும். இது கேவலம் அல்லவா? என்று சொல்லிவிட்டு, நமக்கென்ன பெயருக்குப் பஞ்சமா? என்று சொல்லி,

‘திராவிடன்’ என்று பெயர் வைத்திருக்கலாம். இதுதான் கலாச்சாரம்; அதுதான் பண்பாடு; அதுதான் நாகரிகம் என்றார். அந்தப் பெயரை சொல்லாமல், ஜஸ்டிஸ் கட்சி, ஜஸ்டிஸ் கட்சி என்று சொன்னார்கள், அந்தத் தவறை 1944 இல் திருத்திய பெருமை அறிவாசான் தந்தை பெரியார் அவர்களுக்கு உண்டு. அவர் திராவிடர் கழகம் என்று பெயர் வைத்தார்.

திராவிடர் என்று சொன்னால், பார்ப்பான் உள்ளே நுழைய முடியாது. தமிழன் என்று சொன்னால், மிக எளிதாக உள்ளே நுழைந்துவிடுவான். இதுதான் மிக முக்கியம். மிகவும் அழகான பார்முலா.

திராவிடர் கழகம் பிறப்பதற்கு முன்பே பிறந்தது திராவிட மாணவர் கழகம்!

அதேபோன்று, திராவிட மாணவர் கழகம். இந்த அமைப்பு இன்றைக்குப் பவள விழா கொண்டாடுகிற இந்தக் காலகட்டத்தில், திராவிட மாணவர் கழகத்தின் ஒரு வேடிக்கையான வரலாறு என்னவென்றால், திராவிட மாணவர் கழகம், திராவிடர் கழகத்தில் ஓர் அங்கம். ஆனால், திராவிடர் கழகம் பிறப்பதற்கு ஒரு ஆண்டுக்கு முன்பே 1943 ஆம் ஆண்டிலேயே பிறந்தது திராவிட மாணவர் கழகம்.

திராவிடர் கழகம் 1944 ஆம் ஆண்டு பிறந்தது. அந்த வகையில் நண்பர்களே, இம்மாநாட்டில் கலந்துகொண்டிருக்கக்கூடிய கழகத் துணைத் தலைவர், கழகப் பொருளாளர், மாணவர் கழகப் பொறுப்பாளர் பிரின்சு என்னாரெசு பெரியார் மற்றும் பொறுப்பாளர்கள், மேடையில் வீற்றிருப்பவர்கள், திராவிடர் கழக மாநில அமைப்பாளர் குணசேகரன் போன்றவர்கள்; இன்னும் ஏராளமாக வந்திருக்கின்ற புதிய இளைஞர்கள். எனக்கு அறிமுகம் இல்லாத பல இளைஞர்கள் - எனக்கு அறிமுகம் இல்லாத ஒருவரை என்னிடம் அறிமுகப்படுத்தி, இவர்தான் இந்த மாவட்டத் தலைவர் என்றார்கள். பரவாயில்லை என்று நினைத்து, நானும் தலையை ஆட்டிவிட்டேன்.

தெளிவாக இருக்கிறார்கள் நம் பிள்ளைகள்; ஆட மாட் டார்கள், அசைய மாட்டார்கள்.

இவ்வளவு இளைஞர்கள் ஊர்வலத்தில்  வருவதைப் பார்த்ததேயில்லை!

நம்முடைய தோழமை கட்சிகளைச் சார்ந்த சில முக்கி யஸ்தர்கள் என்னைப் பார்த்து பேசிக் கொண்டிருந்தார்கள். அப் போது அவர்கள், இதுபோன்று குடந்தை நகரத்திற்கு இவ்வளவு இளைஞர்கள் ஊர்வலத்தில்  வருவதைப் பார்த்ததேயில்லை. அற்புதமான இளைஞர்கள், எவ்வளவு கட்டுப்பாடாக இந்தப் பேரணியை நடத்தியிருக்கிறீர்கள் என்று சொன்னார்கள்.

அப்படிப்பட்ட அற்புதமான இந்த மாநாட்டிற்கு வந்திருக் கக்கூடிய நம்முடைய இளைஞர்கள், மாணவர்களுக்கு என்னு டைய அன்பான வரவேற்பை - கொஞ்சம் காலதாமதம் ஆனா லும்கூட, உங்களை வரவேற்கிறேன். ஊருக்கு வழியனுப் பக்கூடிய நேரத்தில், உங்களை வரவேற்கிறேன்.

படிப்பை விட்டுவிட்டு வாருங்கள் என்று சொல்லமாட்டோம்; படித்துவிட்டு வாருங்கள் என்று சொல்கிறோம்!

ஏனென்றால், வரவேற்பை எப்பொழுது வேண்டுமானாலும் சொல்லலாம்; ஏனென்றால், இந்த வரவேற்று, நிரந்தரமானது; ஏனென்றால், இந்த வரவேற்பு, ஒரு அச்சார வரவேற்பு. எதற்காக என்றால், அடுத்த தடவை உங்களை நம்பித்தான் போராட்டத்தை அறிவிக்க இருக்கிறோம். படிப்பை விட்டுவிட்டு வாருங்கள் என்று சொல்லமாட்டோம்; படித்துவிட்டு வாருங்கள் என்று சொல்கிறோம்.

நம்முடைய இளைஞர்கள் மிகவும் அற்புதமான இளை ஞர்கள். மற்றவர்களுக்குக் கிடைக்க முடியாத கொள்கைத் தங்கங்கள் - எங்கள் சிங்கக் குட்டிகள்.

குழப்பங்களை அவர்களிடம் விளைவிக்க முடியாது. ஏனென்றால், அவர்கள் தேர்ந்தெடுத்ததே, இந்தக் கசப்பு மருந்தைத் தேர்ந்தெடுத்து இருக்கிறார்கள். திராவிட மாணவர் கழகம் போராட்ட உணர்வில் வெடித்து  உருவான ஒரு அமைப்பு. இந்த அமைப்பினை யார் யார் உருவாக்கினார்கள்  என்று நீங்கள் தெரிந்துகொள்வதற்காகத்தான் இங்கே திறக்கப்பட்ட படங்கள்.

தவமணி ராசன்!

தவமணி ராசன் - அவரைப் பார்த்தீர்களேயானால், ஒரு ஒல்லியான உருவம்; சட்டை இருக்கும், அதில் பொத்தான் இருக்காது; அப்படியே பொத்தான் இருந்தாலும், அதைப் போட்டிருக்கமாட்டார். தலைமுடி இருக்கும்; அதை சீவி இருக்கமாட்டார். ‘என்னடா’ என்றுதான் எல்லோரையும் அழைப்பார். அவ்வளவு நெருக்கம்! எல்லோரையும், கலைஞர், நாவலர், பேராசிரியர் போன்றவர்களை - அவர்களையே அப்படி என்றால், நாங்கள் எம்மாத்திரம் - வயதில் நாங்கள் சிறியவர்கள்.

எங்கள் வீட்டிற்கு வருவார் அவர், என்னுடைய வாழ்விணையர் மோகனா அம்மையாரிடம், ‘‘என்னம்மா, அவன் எங்கே போய்விட்டான்? இருக்கானா? இல்லையா?’’ என்று கேட்பார்.

இதைக் கேட்ட என் பிள்ளைகளுக்கு ஆச்சரியம்; யாரோ ஒரு ஆள் வந்து இப்படி கேட்கிறாரே, நம்முடைய அப்பாவை என்று அவர்களுக்குக் கோபம்கூட வரும்.

பிறகு, என்னுடைய துணைவியார் அவர்களிடம் விளக்கம் சொல்வார்.

தவமணி ராசன் அவர்கள், ‘‘என்னம்மா, இட்லி இருக்கிறதா? இரண்டு இட்லி வை’’ என்று சொல்லிவிட்டு, சாப்பிட்டதும், சரி, ‘‘அவன் வரவில்லை, நீண்ட நேரம் ஆகிவிட்டது. நான் ஒழியறேன்’’ என்று சொல்வார். ஒரே ஒரு பைதான் வைத்திருப்பார்.

போகிறேன் என்று சொல்லவே மாட்டார்; அவருடைய பெட் வேர்ட் என்னவென்றால், ‘‘நான் ஒழியறேன்’’ என்று சொல்வதுதான். நான் கருணானந்தம் வீட்டிற்குச் செல்கிறேன் என்று சொல்லிவிட்டுப் போவார். அவ்வளவு எளிமை; எங்கே வேண்டுமானாலும் படுத்துக்கொள்வார்; எந்தப் பணியையும் செய்வார் அவர்.

கருணானந்தம் - கோபால்சாமி!

அதேபோன்றவர், கருணானந்தம் அவர்கள். அடுத்த படியாக, கோபால்சாமி அவர்கள். இந்தக் குடந்தையில் உள்ள உப்புக்காரத் தெருவைச் சேர்ந்தவர். அங்கிருந்து நிறைய பேர் வந்திருக்கிறார்கள். நான் மாணவனாக இருந்தபொழுது, நிறைய கூட்டங்களில் உரையாற்றியிருக்கிறேன்.

அவருடைய பெயர் கோபால்சாமி- அவருடைய புனைப் பெயர் செங்குட்டுவன்.

மாணவர் கழகத்தில் அவர்கள் இருந்தார்கள்; ஒவ்வொரு மாவட்டத்தில் உள்ளவர்களுக்குப் பயிற்சி கொடுத்து அனுப்பினார்கள்.

தென்னார்க்காடு மாவட்டத்திற்கு 1944 ஆம் ஆண்டு வந்தார்கள். அப்பொழுது எனக்கு 11 வயது. கோபால்சாமி அவர்கள், என்னிடம் நன்றாக விளையாடுவார்; வாய்யா, நீ கொஞ்சம் குண்டாக இருக்கிறாய்; நீ நடக்கவேண்டாம்; நானே உன்னை தூக்கிக்கொள்கிறேன் என்று சொல்லி, அவருடைய முதுகில் ஏற்றிக்கொண்டு, உப்பு மூட்டை சுமக்கிறேன் என்று வேடிக்கையாக சொல்வார். கலகலப்பான ஒரு கூட்டம் அது.

லட்சுமணன்!

அதற்குப் பிறகு லட்சுமணன் அவர்கள்; மண்டல் கமிசன் அமலான நேரத்தில், அவர்தான் நாடாளுமன்றத்தின் துணை சபாநாயகராக இருந்தவர்.

அதேபோன்று இராமதாசு என்பவர். இந்த இயக்கம் இப்படி வளர்ந்த இயக்கமாகும். எல்லா நண்பர்களையும் எனக்கு நன்றாகத் தெரியும்.

கொள்கையைப்பற்றி மட்டும்தான் கவலைப்படுவார்கள்

அவர்கள் எல்லாம் திண்ணையில் படுத்திருப்பார்கள்; அடுத்த வேளை சாப்பாட்டைப்பற்றி கவலைப்பட மாட்டார்கள்.  ஏனென்றால், அந்தத் தியாக உணர்வு இருக்கிறதே - கொள்கை வெறி என்று சொன்னால், அந்தக் கொள்கையைப்பற்றி மட்டும்தான் கவலைப்படுவார்களே தவிர, வேறு எதைப்பற்றியும் அவர்கள் கவலைப்பட்டது கிடையாது.

இந்த இயக்கம் சாதாரணமாக வளர்ந்த இயக்கமல்ல; இந்த இயக்கத்தைப் பொறுத்தவரையில், மிக முக்கியமாக கவனிக்கவேண்டிய ஒரு செய்தி என்னவென்றால்,

இந்த மேடையைப் பார்த்தீர்களேயானால், எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. நான் மேடையில் இருந்து கவனித்துக் கொண்டிருந்தேன்; இந்தப் பக்கம் இவ்வளவு பெரிய கூட்டம்; அந்தப் பக்கம் அவ்வளவுப் பெரிய கூட்டம்.  ஒரு சில கூட்டங்களில், கொஞ்சம் நேரம் இருப் பார்கள்; பிறகு கலைந்துவிடுவார்கள். ஆனால், இந்தக் கூட்டத்தைப் பாருங்கள், நாங்கள் முடிக்கின்றவரையில் யாரும் எழுந்து போக மாட்டார்கள். குடும்பம் குடும்பமாக இங்கே வந்திருக்கிறார்கள்; பொதுமக்கள், சான்றோர்கள், குடந்தை நகர மக்கள் வந்திருக்கிறார்கள் என்றால், இந்த மேடை அவ்வளவு பலமாகக் கட்டப்பட்டு இருக்கிறது. இளைஞர்களுக்குத் தெரிய வேண்டும் இந்த வரலாறு.

காந்தி காங்கேயன் பார்க்!

அந்தக் காலத்தில் இந்தப் பகுதியில் கூட்டம் போடும்பொழுது, காந்தி காங்கேயன் பார்க் என்று இருக்கும். அங்கேதான் அய்யா, அண்ணா முக்கியமான தலைவர்கள் எல்லாம் உரையாற்றுவார்கள்.

இந்த ஊரில் மூன்று பெருந்தலைவர்கள் - திராவிட இயக்கத்திற்கு அடித்தளமிட்டவர்கள்.

கே.கே.நீலமேகம் - வி.சின்னத்தம்பி - பி.ஆர்.பொன்னு சாமி சேர்வை இம்மூவரும் குடந்தையில் மும்மூர்த்திகள்.

மும்மூர்த்தி பிராண்டு சுருட்டு!

இன்னொரு வேடிக்கை என்னவென்றால், கே.கே.நீலமேகம், அவர்கள் சுருட்டுக் கம்பெனி நடத்தினார். அந்தக் கம்பெனிக்குப் பெயர் மும்மூர்த்தி பிராண்டு சுருட்டு என்பதுதான்.

அந்தக் காலத்தில் அவரைக் கேள்வி கேட்டார்கள், ‘‘நீ இவ்வளவு தூரம் சுயமரியாதைப்பற்றி பேசிவிட்டு, உன்னு டைய சுருட்டுக் கம்பெனிக்கு மும்மூர்த்திகள் என்று பெயர் வைத்திருக்கிறாயே’’ என்று.

அது எந்தக் காலத்திலேயோ யாரோ வைத்தார்கள்; அந்தக் கம்பெனியை இவர் வாங்கி தொடர்ந்து நடத்தினார்.

ஆனால், நம்முடைய ஆட்கள் அந்தக் கேள்விக்கு எப்படி பதில் சொல்வார்கள் என்றால், ‘‘டேய், உங்களுடைய மும்மூர்த்திகளை எல்லோரும் வாங்கி ஊதி ஊதித் தள்ளுவதற்காகத்தான்’’ என்று சொல்வார்கள்.

அதற்கடுத்த கட்டத்திற்கு வரும்பொழுது, ஆர்.பி.சுந்தரம் அவர்கள். அவருடைய மகன் ஆர்.பி.ஸ்டாலின் அவர்கள். மாணவத் தலைவராக இருந்தவர்.

யானை கோவிந்தராசன்!

தவமணிராசனுக்குப் பதிலாக, யானை கோவிந்தராசன் - கொஞ்சம் ‘மொத்தமாக’ இருப்பார். இவர்களையெல்லாம் பார்த்தீர்களேயானால், கல்லூரி மாணவர்களா என்று சந்தேகப்படக் கூடிய அளவிற்கு இருப்பார்கள்.

டி.மாரிமுத்து அவர்கள், மாரிமுத்து கொத்தனார் என்று சொன்னால்தான், இந்த ஊரில் பல பேருக்குத் தெரியும். அதுபோலவே, அய்யா டி.கணபதி அவர்கள். நம்முடைய அன்பழகன் அவர்களுடைய தந்தை.

இவர்கள் எல்லாம் அரசியல் சட்டத்தை எரித்துவிட்டு,  3 ஆண்டு, ஓராண்டு என்று  சிறைச்சாலைத் தண்டனை பெற்றதால், உடல்நலக் குறைவுற்று அதனால், தங்களுடைய ஆயுளைக் குறைத்துக் கொண்டவர்கள்.

ஆர்.பி. சுந்தரம்

ஆர்.பி.எஸ். அவர்களும், கணபதியும் மைத்துனர்கள். இரண்டு பேரும் மிகவும் நெருக்கமானவர்கள். ஆர்.பி. சுந்தரம் அவர்கள், அந்தக் காலத்திலேயே சுயமரியாதைத் திருமணம் செய்தவர். அவருடைய துணைவியார் பெயர் மோகனாம்பாள். இப்படி ஒரு பெரிய பாரம்பரியம்.

உப்புக்காரத் தெருவில் சாமிநாதன் அவர்கள். அரு.ரெங்கநாதன் அவர்கள். பழைய ஆட்களில் இவர்தான் இன்றைக்கு 96 வயதில் இங்கே இருந்து கொண்டிருப்பவர். அதேபோன்று பழைய பட்டீசுவரம் அய்யாசாமி அவர்கள். இங்கே ஜி.என்.சாமியைப்பற்றி சொன்னார்கள்.

திருநாகேசுவரம் ரமணி

தாராசுரம் நமக்கு ஒரு பெரிய கோட்டையாகும். ஆண்டுதோறும் அய்யா, அண்ணா, கலைஞர், நாவலர், பேராசிரியர்  எல்லோரும் அங்கே உரையாற்றி இருக்கிறார்கள். ஆண்டுவிழாவினை அங்கே நாங்கள் கொண்டாடுவோம்.

இன்றைக்கு இங்கே இளங்கோவன் வந்திருக்கிறார். திருநாகேசுவரம் ரமணி, இங்கே நிம்மதி வந்திருக்கிறார். திருநாகேசுவரத்தை என்னால் மறக்கவே முடியாது. மாணவர்களாக இருந்த நாங்கள் அங்கே பிரச்சாரத்திற்குச் சென்றிருந்தோம்.

அந்த ஊரில் நிறைய காங்கிரசுகாரர்கள்தான் இருப் பார்கள்; செங்குந்த முதலியார்கள் நிறைய இருப்பார்கள். கதர்தான் அணிந்திருப்பார்கள். அங்கே கருப்புச் சட்டைக் காரர்கள் கூட்டம் போடுகிறார்கள் என்றால், ரமணி ஒரு வரைத் தவிர அங்கே ஆதரவு கிடையாது. அவர் சினிமாவில் ஸ்டெண்ட் மாஸ்டராக இருந்தவர்.

என்னை, தில்லை வில்லாளன், இன்னும் சில நண்பர்கள் எல்லோரையும் பெரியார் அனுப்பி வைத்தார் அங்கே கூட்டத்தில் உரையாற்றுவதற்காக. நாங்கள் ஓட்டலில் வாங்கித்தான் சாப்பிட்டாகவேண்டும். அந்த ஊரில் உள்ள காங்கிரசுகாரர்கள் எல்லாம் சேர்ந்து, எங்களுக்கு உணவு கொடுக்கக்கூடாது என்று அங்கே இருந்த உணவுக் கடைகளையெல்லாம் மூடச் சொல்லி விட்டார்கள்.

இதனைப் பார்த்து எங்களுக்குக் கரம் கொடுத்தவர் அந்தக் காலத்தில் ஒரு இசுலாமியத் தோழர். அவர்தான், எங்கள் வீட்டிற்கு வாருங்கள், பிரியாணி போடுகிறோம் என்றார். நாங்கள் எல்லாம் அங்கே தங்கி, அவருடைய வீட்டில் சாப்பிட்டோம்.

குழுவாகக் கிளம்பி வந்த தோழர்கள்!

அன்றைக்கு கூட்டம் நடைபெறுவதற்கு முன்பாகவே,  புலே பாய் தேசாய் இறந்துவிட்டார் என்று தமுக்கடிக்கிறார்கள்.

இதைக் கேள்விப்பட்ட தாராசுரத்தில் இருக்கக்கூடிய தோழர்கள் ரயிலில் வந்துவிட்டார்கள் ஒரு குரூப்பாக. என்.எஸ்.வாசன், எஸ்.எஸ்.வாசன், ஜி.என்.சாமி போன்ற தோழர்கள் எல்லோரும் அங்கே வந்துவிட்டார்கள்.

நான் மேஜைமீது ஏறி நின்று கூட்டத்தில் உரையாற் றும்பொழுது, கல்லைத் தூக்கி எறிந்தார்கள்; அந்தக் கல் என்மீது படாமல், தில்லை வில்லாளன் முகத்தின்மீது பட்டு காயமேற்பட்டது.

அடுத்த நாள் மாநாடு நடைபெறவிருக்கிறது. நாங்கள் எல்லாம் நடந்தே இங்கே வந்தோம். இப்படி இந்தப் பகுதி களில் எல்லாம் எதிர்ப்புகள் இருந்த ஊர்களில், இன்றைக்குப் பார்த்தீர்களேயானால், திருநாகேசுவரம் நமக்கு மிகப்பெரிய கோட்டையாக இருக்கிறது. இப்படி ஒரு வரலாற்றை மிகப்பெரிய அளவிற்கு உருவாக்கிய பகுதி இந்தப் பகுதி.

கோவில் நகரம் என்று சொல்லும் கும்பகோணத்தில் திராவிட மாணவர் கழக ஊர்வலம்!

அதுமட்டுமல்ல நண்பர்களே, இந்தக் குடந்தைக்கே, நாம்தான் பகுத்தறிவைப் பேசி இங்கே வந்திருக்கிறோம். இந்த நகரத்திற்கு வருபவர்கள் எல்லாம் பக்தர்கள்தான். 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் விழாவில் மகாமக குளத்தில் குளிப்பார்கள். நம் கோ.சி.மணி அவர்கள் அமைச்சராக இருந்தபொழுது, நகராட்சித் துறையில் நிறைய பணிகளைச் செய்தார். 12 ஆண்டுகளாக செய்த பாவங்களைக் கரைத்துவிட்டுச் செல்வதற்காகத்தான் இந்தக் குடந்தை நகருக்கு வருவார்கள்.

ஒரு முக்கியமான தகவலை உங்களுக்குச் சொல்கிறேன்.

மராத்தி மன்னர்கள் பிராமணர்களுக்கு உயரிய இடம் வழங்கியிருந்தனர். பிராமணர் குடியிருக்க அக்கிரகாரங்கள் நிறுவப்பட்டதை மோடி ஆவணங்கள் குறிப்பிட்டுள்ளன.

திரிபுவனம் சத்திரத்திற்குப் பக்கத்தில் புதிய அக்கிரகாரம் உண்டு பண்ண புஞ்சை நிலம் ஆறு வேலியும், மரத்தடி நிலம் இரண்டு வேலியும் வழங்கப்பட்டுள்ளது.

கும்பகோணத்தில் புதிய அக்கிரகாரம் ஒன்று கட்டப்பட்டு தானமாக வழங்கப்பட்டுள்ளது.

இரண்டாவது சிவாஜி மன்னனுக்குப் புத்திரப் பேறு வேண்டி கும்பகோணம் அக்கிரகாரத்தில் ஜபம், பாராயணம், ஹோமம், பிராமண போஜனம் ஆகியன செய்விக்கப்பட்டன. அத்துடன் அவர்கள் நீராட, காவிரியில் படித்துறையும் கட்டிக் கொடுக்கப்பட்டது.

கும்பகோணம் சத்திரத்தில் நூறு பிராமணர்களுக்கு உணவளிக்கவும், நல்ல நாள்களில் அக்கிரகாரத்திலுள்ள ஒவ்வொரு வீட்டிற்கும் பணம் வழங்கவும் தேப் பெருமா நல்லூர் என்ற கிராமம் சர்வமானியமாகக் கொடுக்கப் பட்டுள்ளது.

ஆக, இப்படியெல்லாம் மூடநம்பிக்கை இருக்கின்ற இந்த நகரத்தில், பாவங்களைப் போக்குகின்ற பக்தி நகரமான இந்த நகரத்தில், திரும்பிய பக்கமெல்லாம் கோவில்கள் இருக்கின்ற இடத்தில், திராவிட மாணவர் கழகத்தினரின் ஊர்வலம் இன்றைக்கு நடைபெற்றது இருக்கிறதே - அதுவும் பெரியார் உடலால் மறைந்து, உள்ளத்தால், கொள்கையால் நிறைந்து வரலாறு படைத்துக் கொண்டிருக்கிறார் என்பதற்கு அடையாளமாக - அய்யா மறைந்து 45 ஆண்டுகாலம் ஆகி யிருக்கிறது.

(தொடரும்)

- விடுதலை நாளேடு, 13.7.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக