செவ்வாய், 24 ஜூலை, 2018

அக்ரகாரக் கோட்டையிலே....

வானம்பாடி



கும்பகோணம், பார்ப்பனர்கள் ஆக்கிரமித்துக் கொண்ட தமிழர் பூமி.

உழவும் கலையும் சங்கமிக்கும் எழில் நகரம்.

அரசியல் அதிர்வுகள் அலசப்படும் ஸ்தலம்.

திராவிட மாணவர் கழகத்தின் தாய்வீடு.

2018 ஜூலை 8 திராவிட மாணவர் கழக பவள விழா மாநில மாநாடு.

கும்பகோணம், கருஞ்சட்டைக் கடலால் களைகட்டியது.

75 ஆண்டுகளுக்கு முன்னால் உதயமானது திராவிட மாணவர் கழகம்.

வித்து விழுந்தது எப்படி?

அழுத்தம் உள்ள இடத்தில் வெடிப்பு நிகழும் என்பது அறிவியல்.

தனித்தனித் தண்ணீர் பானைகள் கல்லூரி விடுதிக்குள்.

இஃது அறிவு வளரும் இடமா? அநியாயம் தழைக்கும் மனுவின் கூடமா?

மாணவர் சம்பந்தம் 'பிராமணாள்' பானையிலிருந்த தண்ணீரைக் குடித்துவிட்டார்.

'குற்றம் புரிந்தாய்!', 'தண்டத்தொகை கட்டு' என்று தாண்டவம் ஆடினார் விடுதிக்காப்பாளர் கணேச அய்யர்.

'அபராதம் கட்டாதே! போர் தொடங்குவோம்' என்று முழங்கினார் தவமணிராசன்.

இச்சம்பவம் திராவிட மாணவர் கழகம் உருவாக வித்தாயிற்று.

தொடக்க விழா நடைபெற்ற நாள் 1.12.1943. விழாத் தலைமைத் தமிழ்ப்பேராசிரியர் இரா.சானகிராமன். சிறப் புரை அறிஞர் அண்ணா .

1943 இல் தொடங்கப்பட்ட திராவிட மாணவர் கழகத்திற்கு 2018 இல் பவள விழா.

பவள விழா மாநில மாநாட்டை நடத்தி உணர்வு எழுப்புகிறார் தமிழர் தலைவர். அவரின் ஒவ்வொரு செயலுக்குப் பின்னால் ஓராயிரம் காரணங்கள் இருக்கும்.

புதிய குலக் கல்வித் திட்டத்ததைப் புகுத்திட சதி ஆலோசனை நடைபெற்று வரும் நேரம்.

'நீட்' எனும் தடையால் தமிழின மாணவர்கள் புறக்கணிக்கப்படும் கொடூரம்.

கல்வித்துறையில் இந்துத்வா கொள்கைகளை திணிக்கத் திட்டமிடும் தருணம்.

கல்வித்துறை மோடி ஆட்சியில் காவி மயமானது என்று எதிர்காலம் அழும்.

பாடங்களைத் தேர்வு செய்யும் குழுவின் தலைவர் ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தவாதி தீனாநாத் பத்ரா என்பது அறிவுக்கு நேர்ந்த சோகம்.

புராண, இதிகாச கட்டுக் கதைகளை வரலாறாக பதிவு செய்திட ஆர்.எஸ்.எஸ்.காரர் சுதர்சன்ராவ் இந்திய வர லாற்று ஆய்வுக் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டிருக் கின்றார் என்ற செய்தியால் சரித்திரம் சாகும்.

இந்தச் சூழ்நிலையில்தான் தமிழர் தலைவர் திராவிட மாணவர் கழக பவள விழா மாநில மாநாட்டை நடத்து கின்றார்.

இயக்க வரலாற்றில் இஃது இணையற்ற மாநாடு.

காலை 10.00 மணிக்குக் கருத்தரங்கம் தொடங்கியது.

கருத்தரங்கின் தலைப்பு காலத்திற்குப் பொருத்தமானது.

'திராவிட மாணவர்களின் கல்வி உரிமையும் - கடமையும்' எனும் தலைப்பில் கருத்து மழை.

 

திராவிடர் கழக செயலவைத் தலைவர் சு. அறிவுக்கரசு ஏராளமானத் தகவல்களை அடுக்கிக் கொண்டே இருந்தார். நேர நெருக்கடி அவர்தம் நாவினைக் கட்டிப்போட்டது.

'இனமான ஏடுகளின் நோக்கமும் தாக்கமும்' என்பது தலைப்பு.

பொழிவு நிகழ்த்தியவர் கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ்.

அவர் தம் உரை அறிவியல் அடிப்படையில் அமைந் திருந்தது. வெற்றுச் சொற்கள் இல்லை. தலைப்பைத் தாண்டிப் போகவும் இல்லை.

தமிழ் இதழ்களைப் பட்டியலிட்டார். அதில் வரும் செய்திகளைப் பகுத்து அட்டவணை அமைத்தார்.

விடுதலை தரத்தில் விஞ்சி நிற்பதை விளக்கினார்.

விளம்பரங்கள் கிடைக்காமையை விளக்கியபோது குரலிலே வருத்தம் இழையோடியது.

'விடுதலை' ஏடு தோன்றியதைச் சரியாகக் குறிப்பிட்டார்.

நடந்து வந்த பாதையை நடுநிலையோடு வெளிப் படுத்தினார்.

'விடுதலை' சந்தித்த சோதனையை ஆதாரத்துடன் பதிவு செய்தார்.

'விடுதலை' வெளியிட்ட செய்தியால் விளைந்த நன்மைகளைப் பட்டியலிட்டார்.

ஒவ்வொருநாளும் புதுப்பொலிவுடன் 'விடுதலை' மலர்வதை பெருமிதத்துடன் எடுத்துரைத்தார்.

இதழ் பரவ இயக்கத் தோழர்கள் இடையறாது உழைக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.

அன்புராஜ் உரை நிகழ்த்தும் போது, உணவுக் கூடத்தில் இனிப்பு, காரம் வழங்கப்படுகிறது. தோழர்கள் அங்குச் சென்று பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவிப்பு செய் தார்கள். ஆனாலும் கூட்டம் கலையவில்லை. தோழர்களை நாடி மண்டபத்திற்குள் இனிப்பு வழங்க வேண்டியதாயிற்று.

மாநாட்டில் நடைபெற்ற கவியரங்கம் மண்டபத்தை நிமிரச் செய்தது.

பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற மாநிலத் தலைவர் வா. நேரு கவியரங்கை கம்பீரமாக நடத்தினார்.

கவிஞர்கள் திவ்யபாரதி, சந்தீப், தமிழருவி , இவர்களின் கவித்திறனை வியப்பதா? வெளிப்படுத்தும் ஆற்றலை கண்டு திகைப்பதா? பிஞ்சு வயதிலே அய்யாவின் முதிர்ந்த கருத்துகளை உள்ளக்கிடங்கில் பதித்துக் கொண்ட பாங்கைப் பாராட்டுவதா? கவியரங்கம் மண்டபத்தைக் குளிர்வித்தது.

நண்பகல் 1.00 மணிக்குத் தமிழர் தலைவர் மாநாட்டுச் சிறப்புரை நிகழ்த்தினார்.

தண்ணீர்ப்பானைப் பிரச்சினையால்தான் திராவிட மாணவர் கழகம் உருவாயிற்று என்ற வரலாற்றைச் சொல்லித் தம் உரையைத் தொடங்கிய தமிழர் தலைவர், தந்தை பெரியார் வாழ்க்கையிலும், தண்ணீர் குடிக்கும் பிரச்சினையால்தான் ஜாதி ஒழிப்பு சிந்தனைத் தோன்றியதை அழகுற இணைத்துப் படம் பிடித்துக்காட்டினார்.

திராவிடர் கழக வரலாற்றில் தண்ணீருக்குத் தனிச்சிறப்பான இடம் உண்டு.

பூமியில் மூன்றில் இரண்டு பகுதி தண்ணீர் தான். வாழும் உயிர்களை வடிவமைத்தது தண்ணீர்தான். மனிதன் உடலில் 65 விழுக்காடு தண்ணீர் தான். உடலில் ஓடும் ரத்தம் 51/2 லிட்டர். மனிதன் வாழ்நாளில் 66 ஆயிரம் லிட்டர் தண்ணீர் குடிக்கின்றான். நீரின்றி அமையாது உலகு.

'பிராமணப்பானை' உடைக்கப்பட்டதைத் தமிழர் தலைவர் கூறுகிறார். 'வெறும் பானை அல்ல. கீழ் ஜாதிக் காரர்களுக்குக் கல்வியைத் தராதே' என்ற மனுசாஸ்திர சட்டம் எழுதி வைத்த ஏகாதிபத்தியத்தின் முதுகெலும்பு உடைக்கப்பட்டது' என்றார்.

தமிழர் தலைவர் அவர்கள் தந்தை பெரியாரின் சில மேற்கோள்களை எடுத்துக்காட்டினார். அந்த மேற்கோள் களை வைரம் என்பதா? வைடூரியம் என்பதா? முத்து என்பதா? மாணிக்கம் என்பதா? பவளம் என்பதா? ஒவ் வொரு சொல்லும் சிலிர்க்கச் செய்தது.

'கோழைகளையும், தன்நல வீணர்களையும் எள் உரு வாக்குங்கள்' என்றார் பெரியார். புரியாமல் குழம்பினேன். ஆசிரியர் விளக்கம் கொடுத்தார். வியப்பின் உச்சிக்குச் சென்றேன்.

மாணவர்கள் நல்ல சோல்ஜர்கள்: ராணுவத்தின் ஜெனரல்கள் அல்ல. எத்துணை ஆழமான கருத்து. ஆரியர் - திராவிடர் பெரியார் விளக்கம் மாணவர்கள் கற்க வேண்டிய பாடமல்லவா?

ஆரிய பண்பாடு - திராவிட பண்பாடு எதிர் எதிரானது என்பதற்கான பட்டியல் மறுக்க முடியாத அறிவுப் பொக்கிஷமல்லவா?

தமிழர் தலைவரின் சிந்தையில் கருத்துக்கள் ஊறிவருகின்றன. எல்லாவற்றையும் மாணவர்களிடத்திலே கொட்டிட வேண்டும் என்று ஆர்வத்துடன் பேசுகின்றார். கடிகாரம் கட்டுப்படுத்துகிறது. மாலையில் பேசுகிறேன் என்று நிறைவு செய்கின்றார்.

மாலையில் திராவிட மாணவச் செல்வங்கள் உறுதி மொழி ஏற்றார்கள்.

இந்த உறுதிமொழிகள் மானுடத்தை நேசிக்கும் ஒவ்வொருவரும் ஏற்க வேண்டிய உறுதிமொழிகள் ஆகும்.

நாடு நலம் பெற, சமூகம் செழிக்க, தன்னம்பிக்கைத் தோன்ற, பண்பாளராக பரிமளிக்க இந்த உறுதிமொழிகள் அடித்தளம் என்பதில் அய்யமில்லை .

பேரணி தொடங்கிற்று. குதிரை பூட்டிய வண்டியில் தமிழர் தலைவர்.

வழி நெடுகிலும் மக்கள் வெள்ளம், எங்கும் உற்சாகம்.

பேரணி என்பது ஒரு பிரச்சார உத்தி.

கருத்துக்களை மக்களின் இதயத்தில் பதிக்கும் ஆயுதம்.

இயக்க வலிமையை உணர்த்தும் போர்த்தந்திரம்.

கட்டுப்பாட்டை காவல் துறையினர் மூலம் அரசாங்க செவிக்கு ஊதும் போர்முறை.

எண்ணங்களுக்கு வடிவம் கொடுத்து அரசாங்கத்தை நிர்பந்திக்கும் செயல்பாடு.

திராவிட மாணவர்கள் கழக பவள விழா மாநில மாநாட்டில் சுயமரியாதைச் சுடரொளிகள் தவமணி ராசன், கவிஞர் கருணானந்தம், பூண்டி கோபால்சாமி, கோ.லெட்சுமணன் ஆகியோர் உருவப் படங்களை திராவிடர் கழகத் துணைத்தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் திறந்து வைத்தார்.

திராவிடர் கழக மாநாடுகளில் நிறைவேற்றப்படும் தீர்மானங்கள் எதிர்காலத்தில் சட்டங்களாக உருப் பெற்றிருக்கின்றன என்பது வரலாறு.

திராவிட மாணவர் கழக பவள விழா மாநாட்டில் பத்தொன்பது தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கல்வியை மாநிலப் பட்டியலுக்குக் கொண்டு வருக.

மாணவர்கள் கல்வியில் கவனம் செலுத்த வேண்டும்.

மாணவர்களிடம் கட்டுப்பாடு அவசியம்.

எல்லாவகையான நுழைவுத் தேர்வுகளையும் ரத்து செய்க.

தீண்டாமை ஒழிப்பு கோயில் கருவறையிலிருந்து தொடங்கட்டும்.

சமூகநீதி காக்கப்பட வேண்டும்.

மதச் சார்பின்மை வேண்டும்

மனப்பாடக் கல்விமுறை கூடாது.

தீர்மானங்கள் பலத்த கரவொலிக்கு மத்தியில் நிறை வேறின.

விழிப்புணர்வுப் பிரச்சாரப் பெரும் பயணம் இரண்டு கட்டங்களாக நடைபெறும் என அறிவித்தார்.

மாநாட்டுக்குத் தலைமை வகித்த திராவிட மாணவர் கழக மாநில செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார் தலைமையுரையில், திராவிட மாணவர் கழகம் தோன்றிய டிசம்பர் முதல் தேதியை திராவிட மாணவர் கழக நாளாக அறிவிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.

தமிழர் தலைவர், அதனை ஏற்றுக் கொள்வதாக கூறியதோடு, அதில் அருமையானதொரு திருத்தத்தையும் செய்தார். வெறும் திராவிட மாணவர் தினம் அல்ல. 'திராவிட மாணவர் போராட்டதினம்' என்று பலத்த ஆரவாரத்திற்கிடையே அறிவித்தார்.

கும்பகோணம் கருஞ்சட்டை கடலால் நிறைந்திருந்தது.

அக்ரகாரக் கோட்டை பெரியார் பூமியானது ; அய்யாவின் கருத்துக்கள் மணம் பரப்பியது.

மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

- விடுதலை நாளேடு, 13.7.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக