புதன், 11 ஜூலை, 2018

குடந்தை மாநாட்டில் தமிழர் தலைவர் அறிவிப்பு (2)

ஆர.எஸ்.எஸ். வார இதழ் மீது சட்டப்படியான நடவடிக்கை

குடந்தை மாநாட்டில் தமிழர் தலைவர் அறிவிப்பு



நமது சிறப்புச் செய்தியாளர்

கும்பகோணம், ஜூலை 9  தமிழ்நாடு தழுவிய  அளவில் விழிப்புணர்வுப் பிரச்சாரப் பயணம் இரு கட்டங்களாக நடைபெறும் என்று அறிவித்தார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள். கழகத்தைக் கொச்சைப்படுத்தி செய்தி வெளியிடும் ஆர்.எஸ்.எஸ். வார இதழ் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவித்தார்.
திராவிட மாணவர் கழக பவள விழா மாநாடு (75 ஆம் ஆண்டு) நேற்று (8.7.2018) கும்பகோணத்தில் எழுச்சியுடன் நடைபெற்றது.
அதில் கழகத் தலைவர் உரையாற்றுகையில் குறிப்பிட்ட தாவது:
திராவிட இயக்கத்துக்கு என்று ஒரு நீண்ட வரலாறு உண்டு.
காங்கிரசிலிருந்து சமூகநீதியின் உரிமைக்காக காஞ்சிபுரம் மாநாட்டிலிருந்து 1925 இல் வெளியேறிய தந்தை பெரியார் சுயமரியாதை இயக்கம் கண்டார். அதன்மூலம் சமுதாயத்தில் மிகப்பெரிய புரட்சியை, மாற்றத்தை ஏற்படுத்தினார்.
டிசம்பர் ஒன்றாம் தேதி  திராவிட மாணவர் போராட்ட தினம்!

மாநாட்டுக்குத் தலைமை வகித்த திராவிட மாணவர் கழக மாநில செயலாளர் தோழர் பிரின்சு என்னாரெசு பெரியார் தனது தலைமை உரையில் ஒரு வேண்டுகோளை முன்வைத்தார்.

திராவிட மாணவர் கழகம் தோன்றிய டிசம்பர் முதல் தேதியை திராவிட மாணவர் கழக நாளாக அறிவிக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அதனை ஏற்றுக்கொள்கிறேன். வெறும் திராவிட மாணவர் தினம் அல்ல; திராவிட மாணவர் போராட்ட தினம்'' என்று அறிவிக்கப்படுகிறது. (பெருத்த ஆரவாரம், கரவொலி).

அதேநேரத்தில், அடுத்த டிசம்பர் முதல் தேதிக்கு முன்னதாக ஒவ்வொரு உயர்நிலை, மேனிலைப் பள்ளியிலும், கல்லூரியிலும், பல்கலைக் கழகத்திலும் திராவிட மாணவர் கழகம் அமைக்கப்பட வேண்டும். அப்படி அமைக்கப்பட்ட செய்தியை உடனுக்குடன் விடுதலை'க்கு அனுப்பவேண்டும்.''

- திராவிட மாணவர் கழக பவள விழா மாநாட்டில் திராவிடர் கழகத் தலைவர்
தோல்வி கண்ட கட்சிக்குத் தலைமை ஏற்றவர் பெரியார்

நீதிக்கட்சி ஆட்சியின் கல்வி, சமூகநீதி தொடர்பான சாதனைகளுக்காக ஆதரித்தார். இந்தி எதிர்ப்புப் போராட் டத்தில் தந்தை பெரியார் 1938 ஆம் ஆண்டில் சிறைத் தண்டனை ஏற்றார்.
தந்தை பெரியார் சிறையில் இருந்த அந்தத் தருணத்தில் நீதிக்கட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். வெற்றி பெறும்போது தலைமையேற்க யாரும் முன்வரு வார்கள். ஆனால், தேர்தலில் நீதிக்கட்சி தோற்ற நிலையில், அதன் தலைமைப் பொறுப்பை ஏற்றவர் தந்தை பெரியார். கல்வி, உத்தியோகங்களுக்காகவே பெரிதும் செயல்பட்ட நீதிக்கட்சியை, சமுதாய மாற்றத்துக்கான கொள்கைகளையும் உள்ளே புகுத்தி வரலாற்றில் திருப்பு முனையை விளைவித்த திராவிடர் கழகத்தைத் தோற்றுவித்தார்.
திராவிடர் கழகத்துக்கு மூத்தது திராவிட மாணவர் கழகம்



திராவிடர் கழகம் 1944 ஆம் ஆண்டு ஆகஸ்டில் சேலத்தில் தோற்றுவிக்கப்பட்டது என்றால்,  திராவிட மாணவர் கழகம் இதே குடந்தையிலே தாய்க்கழகமான திராவிடர் கழகம் தோன்றுவதற்கு எட்டு மாதங்களுக்கு முன்பே தோற்றுவிக்கப்பட்டது (பலத்த கரவொலி1).
தோற்றுநர்களை நினைவு கூர்வோம்!

திராவிட மாணவர் கழகத்தைத் தோற்றுவித்தவர்களுள் முக்கியமானவர்கள் தவமணி ராசன், கவிஞர் கருணானந் தம், பூண்டி கோபால்சாமி (செங்குட்டுவன்), கோ.லட்சும ணன், இராமதாசு போன்றவர்கள் ஆவார்கள். அவர்களின் இந்த வரலாற்றுப் பணிக்காக இந்நாளில் நினைவுகூர்கிறோம்!
இன்றைக்கு நடைபெற்ற இந்த மாநாடு - அதனையொட்டி நடைபெற்ற பேரணி இந்த இயக்கம் புது முறுக்கோடு எழுந்து நிற்கிறது என்பதற்கு அடையாளம். அதுவும் வைதீகப் புரியான இந்தக் கும்பகோணத்தில் இந்த எழுச்சி மாநாடும், பேரணியும் நடைபெற்றுள்ளன.
மாணவத் தோழர்களே, வருக! வருக!!

பாராட்டிப் போற்றிய பழைமை லோகம் ஈரோட்டுப் பூகம்பத்தால் இடியுது பார்!' என்றார் ஈரோட்டுக் குருகுலத் தில் இருந்த நமது முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள்.
அந்த உணர்வை இன்று குடந்தை ஏற்படுத்திவிட்டது. நமது கழக மாணவர்கள் மற்ற எந்தக் கட்சிக்கும் கிடைத்திராத கொள்கைச் சிங்கங்கள்- பத்தரை மாற்றுத் தங்கங்கள்!
தமிழ்நாட்டின் எல்லாப் பகுதிகளிலிருந்தும் திரண்டு வந்துள்ள மாணவத் தோழர்களே, உங்களை வருக! வருக!! என வரவேற்கிறேன் (பலத்த கரவொலி).
போராட்டக் கருவில் வெடித்த திராவிட மாணவர்கழகம்

நமது திராவிட மாணவர் கழகம் தோன்றியதே  போராட்டம் என்ற கருவிலிருந்துதான் - அதன் பிறப்பே போராட்டம்தான்.
பேரணி புறப்படுவதற்கு முன்னதாக கழக மாண வரணியினர் இருபாலரும் ஆயிரக்கணக்கில் அணிவகுத்து நின்றனர். அப்பொழுது அவர்கள்எடுத்துக்கொண்ட பத்து உறுதிமொழிகளும் எந்தக் கட்சியிலும், அமைப்பிலும் கேட்டிராத ஒன்றாகும். இதற்கு நிகரானது இதுதான்!
இந்த இயக்கத்தை வீழ்த்திட எந்த கொம்பனாலும் முடியாது. திராவிட இயக்கத்தைப் பலகீனப்படுத்தவும், கொச்சைப்படுத்தவும் சிலர் கிளம்பியுள்ளனர். அவற்றை யெல்லாம் எங்கள் மாணவர்கள், எங்கள் இளைஞர்கள் சந்திப்பார்கள் - முறியடிப்பார்கள்.
ஆர்.எஸ்.எஸ்.இதழ்மீது

சட்டப்படி நடவடிக்கை

விஜயபாரதம்' என்பது மூன்று முறை தடை செய்யப்பட்டஆர்.எஸ்.எஸின் வார இதழ். அதில் வந்த ஒரு செய்திபற்றி இங்கு எனக்கு முன் உரையாற்றிய கழகத்தின் துணைத் தலைவர் குறிப்பிட்டார்.
எங்கள் வீட்டுத் திருமணம் - பேரன் திருமணம் கடந்த ஜூன் 17 ஆம் தேதி  நடைபெற்றது. அதுபற்றி அந்த ஆர்.எஸ்.எஸ். இதழ் உண்மைக்கு மாறான தகவலை வெளியிட்டு உள்ளது. பொட்டு வைத்து, மாலையுடன், தாலியும்கட்டி அந்தத் திருமணம் நடைபெற்றதாகக்கூறி, உபதேசம் ஊருக்குத்தான் என்று தலைப்பிட்டு ஒரு செய்தியை வெளியிட்டுள்ளது.
இப்படி எல்லாம் உண்மைக்கு மாறானவற்றைப் பிரச் சாரம் செய்வதை அவர்கள் வாடிக்கையாகக் கொண்டுள் ளார்கள். இங்கே துணைத்தலைவர் ஒன்றைச் சொன்னார். இதுபோன்ற புரட்டுச் செய்திகளுக்கெல்லாம் ஒரு முடிவு கட்டப்படவேண்டும்  என்றும் கேட்டுக்கொண்டார்.
இந்த மாநாட்டின் வாயிலாகவே அறிவிக்கிறோம். ஆர்.எஸ்.எஸின் வார இதழான விஜயபாரதம்'மீது சட்டப் படியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துக் கொள்கிறேன் (பலத்த கரவொலி, ஆர்ப்பரிப்பு!)
இருகட்டங்களில் விழிப்புணர்வுப் பிரச்சாரம்



திராவிட மாணவர் கழக பவள விழா மாநில மாநாட்டில் தமிழர் தலைவர் உரையைக் கேட்கத் திரண்டிருந்தோரின் ஒரு பகுதி (குடந்தை, 8.7.2018)

இந்த மாநாட்டில் ஒரு முக்கிய அறிவிப்பு - கழகத்தின் அடுத்த செயல் திட்டமாக தீர்மானமாகவே அறிவிக்கப் பட்டுள்ளது. தமிழ்நாடு தழுவிய அளவில் இரு கட்டமாக விழிப் புணர்வுப் பிரச்சாரத்திற்கான திட்டம் அறிவிக்கப் பட்டுள்ளது.
முதற்கட்டமாக நாகர்கோவிலில் தொடங்கி விழுப்புரம் வரை (22.8.2018 முதல் 28.8.2018) நடைபெறும். இரண்டாம் கட்டமாக அரியலூரில் தொடங்கி சென்னை வரை (1.9.2018 முதல் 9.9.2018) நடைபெறும்.
இந்திய அரசமைப்புச் சட்டத்தில் ஒவ்வொரு குடிமகனின் கடமை என்று 51-ஏ(எச்) என்ற பிரிவு கூறுகிறது!
"அறிவியல் மனப்பான்மையை வளர்க்கவேண்டும்; எதையும் கேள்வி கேட்கும் உரிமை, சீர்திருத்தம் இவற்றை வளர்க்கப் பாடுபடவேண்டும் - அது ஒவ்வொரு குடி மகனின் கடமை" என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில்தான் இந்த இரண்டு கட்ட விழிப்புணர்வுப் பிரச்சாரப் பயணமாகும் என்று குறிப்பிட்டார் திராவிடர் கழகத் தலைவர்.
கழக மாணவர் பட்டாளம் எடுத்துக் கொண்ட உறுதி மொழிகள் பத்து!!
(கழகத் தலைவர் எடுத்துச் சொன்ன மாணவருக்கான பத்து உறுதி மொழிகளையும், கரங்களை நெஞ்சுக்கு நேரே நிமிர்த்தி மாணவர்கள் எடுத்துக்கொண்ட பத்து உறுதிமொழிகள்  இதோ).
பெரியாரை சுவாசிப்போம், பெரியாரை சுவாசிப்போம், பெரியாரை சுவாசிப்போம். பெரியாரால் பெருவாழ்வு பெறுவோம், பெரியாரை சுவாசிப்போம், பெரியாரை சுவாசிப்போம்!
திராவிடத்தின் எழுச்சியை உறுதி செய்யக்கூடிய வகையில், திராவிட மாணவர்களாகிய நாங்கள் இந்த உறுதிமொழிகளை ஏற்று, எங்கள் வாழ்நாளில் என்றும் தவறாமல் கடைப்பிடிப்போம்.
1. ஜாதிமறுப்புத் திருமணம், விதவை மறுமணம், மணவிலக்குப் பெற்றோரை மறுவாழ்வுத் திருமணம் செய்துகொள்வேன். வர(ன்)தட்சணை வாங்குவது சுயமரியாதை இழக்கும் கொத்தடிமை முயற்சி, என்னை நான் ஒருபோதும் விற்க மாட்டேன் என்று சூளுரைக்கிறேன்.
2. கடவுள், மதம், ஜாதி, சினிமா, மது, மருந்து என்ற பலவகைப் போதைகளும், மூடநம்பிக்கைகளும் என் வாழ்வை அண்டாத பெரு நெருப்பாகவே வாழ்வேன்.
3. சுற்றுச் சூழலைத் தூய்மையாக்குவதிலும், பொதுச்சொத்துகளுக்கு சேதம் ஏற்படாது காக்கும் பொழுது ஒழுக்கத்தை நிலைநாட்டவும் என்னையே நான் ஒரு சமூகக் காவலனாக ஆக்கிக் கொண்டு வாழ்வேன்.
4. நல்ல உடல் நலமே, நல்ல உள்ளத்திற்கான ஊற்றுக்கண். உளநலத்திற்கான ஊற்றுக்கண் என்பதை உணர்ந்து வாழ்வதுடன் ஊர் நலம், உலக நலம் ஓம்பும் மானுடத்தின் உண்மைத் தொண்டனாக என்னையே நான் அர்ப்பணித்துக் கொள்வேன்.
5. கடவுளை மற, மனிதனை நினை, என்று அறிவு ஆசான் தந்தைபெரியார் கூறிய வழிப்படியே மனிதநேய மாண்பாளனாகவே எனது வாழ்வை அமைத்து, சொல்வதைச் செய்வதும், செய்வதை மட்டுமே சொல்வதுமே சுயமரியாதை சுகவாழ்வு என்று நான் வாழ்ந்து காட்டுவேன்.
6. வேலை கேட்டு விண்ணப்பம் போட்டு அலுக்காமல், மற்றவருக்கு வேலை தரும் நிலைக்கு உயரும் வகையில் மிகுந்த தன்னம்பிக்கையுடன் கடும் உழைப்பையே எனது கடமையாகக் கருதி வாழ்வேன்.
7. எளிமை, சிக்கனம், பிற பாலரிடம் பண்புடன் பழகும் பான்மை இவைகளை என்றும் வளர்த்துக் கொள்வேன்.
இணையதளம், தொலைக்காட்சி, நுகர்வுக் கலாச்சாரம் இவைகளை உணவுக்கு உப்பு போல, தேவைக்கு மட்டுமே பயன்படுத்திக்கொள்வோம். இவற்றுக்கு ஒருபோதும் அடிமையாகோம். எங்கள் உரிய நேரத்தை இதற்கு, இந்த போதைக்கு பலியாகி நாங்கள் வீணடிக்க மாட்டோம். 8. பண்பாட்டுப் படையெடுப்புகளினால் பாழான எமது இனத்தின் மீட்புக்கான களப் பணியாளனாக என்றும் இருப்பேன்.
9. இளமை என்பது வளமைக்காக என்று நினைக்காமல் தொண்டுக்கான, அதுவும் சமுதாயத் தொண்டுக்கான வாய்ப்பே என்று கருதி என்றும் உழைப்பேன்.
10. மற்றவர் உன்னை எப்படி நடத்த வேண்டும் என்று நீ விரும்புகிறாயோ அப்படி நீ பிறரிடம் நடந்துகொள். அதுவே ஒழுக்கம் என்ற தந்தை பெரியார்தம் உயர் ஒழுக்கநெறியான மனிதநேயப் பண்புடன் என்றும் அதை சிந்தையில் ஏற்றுச் செயலாற்றி புதிய உலகினை உருவாக்கும் தூதுவனாக  என்னை நான் என்றும் மாற்றிக்கொண்டு எமது பகுத்தறிவு, சுயமரியாதை வாழ்வுப் பயணத்தை தொடர்வோம். எமது பணி சுயலாபத்திற்கு அல்ல. பொதுநலத்திற்காக, இன நலத்திற்காக, சமூக நலத்திற்காக, நாட்டு நலத்திற்காக.
வாழ்க பெரியார்! வளர்க பகுத்தறிவு!!
- விடுதலை நாளேடு, 9.7.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக