தொழிலாளர்களின் அவலம் தீருமா?
மருத்துவர் செ.ர. பார்த்தசாரதி
தொழிலாளர் நலச் சட்டங்கள் பல இருந்தும் இந்தியாவில் தொழிலாளர்கள் வதைக்கப்படுகிறார்கள். எந்த அரசும் தொழிலாளர்கள் படும் கொடுமைகளைக் களைய முன்வருவதில்லை.
பல தொழில் நிறுவனங்கள் தொழிலாளர்களை சட்டவிரோதமாக நடத்துகின்றன. தொழிலாளர்களுக்கு கொடுக்க வேண்டிய பல உரிமைகளை கொடுக்க மறுக்கின்றன.
'தொழிற்சாலைகள் ஆய்வாளர் மற்றும் தொழிலாளர் ஆணையாளர் களே கண்டும் காணாமல் இருக்கின்றனர். சட்ட விரோதமாக எந்த ஒரு ஒப்பந்தமும் நிறுவனத்திற்கும் தொழிலாளர்களுக்கும் இடையே ஏற்பட முடியாது.
ஆனால் தொழிலாளர் ஆணையாளரோ சட்ட விரோதமாக ஒப்பந்தத்தில் இருந்தாலும் எதையும் கண்டு கொள்ளாமல் ஒப்பந்தத்தை நடத்தி வைக்கிறார்.
தொழிலாளர்களுக்கு உள்ள உரிமைகளை, சட்டங்களைப் பற்றி யாரும் (எந்த அலுவலரும்) அவர்களுக்கு தெரிய படுத்துவதில்லை. இந்த போக்கு முதலாளிகளுக்கு பக்கபலமாக (சாதகமாக) அமைந்து விடுகிறது.
தொழில் தகராறுகள் சட்டம் 1947, அத்தியாயம் -VA, 25B பிரிவுப்படி: ஓர் ஆண்டில் 240 நாள்கள் (அல்லது) 6 மாதங்களில் 120 நாள்கள் ஒரு தொழிலாளி வேலை செய்திருந்தால் அந்த தொழிலாளியை அந்த நிறுவனத்தில் நிரந்தரம் செய்ய வேண்டும்.
ஆனால் எந்த நிறுவனமும் இதை கடைபிடிப்பதில்லை. அவர்களாக நினைத்தால், தொழிலாளர்கள் அவர்களை கெஞ்சி கூத்தாடினால் பல ஆண்டுகள் கழித்து சிலரை நிரந்தரம் செய்கின்றனர்; சிலரை நிரந்தரம் செய்யாமல் விட்டு விடுகின்றனர். (சில நிறுவனங்களில் பலர் சுமார் 10 ஆண்டுகளாக வேலை செய்தும் நிரந்தரம் செய்யப்படாமல் உள்ளனர்).
மாதங்களுக்கு ஒருமுறை சில நிறுவனங்கள் சட் டத்தை ஏய்ப்பதற்காக 3 மாதங்களுக்கு ஒரு முறை 'பிரேக்' என்ற பெயரில் சில நாள்களுக்கு (சுமார் 3 நாள்) வேலை தராமல் இடைநிறுத்தம் செய்துவிட்டு, புதியவர் போல் மீண்டும் சேர்த்துக் கொள்கின்றனர். இதனால் தொழிலாளரின் தொடர்ச்சி(சர்வீஸ்) வேலை தடை செய்யப்படுகிறது.
இப்பொழுது பல நிறுவனங்கள் வேறு ஒரு முறையை கையாளத் துவங்கியுள்ளன. அது தான் ஒப்பந்த தொழிலாளர் முறை என்பது.
ஒப்பந்தம் எடுத்துள்ள ஒப்பந்ததாரர் எந்த தொழிலாளிக்கும் தொடர்ச்சியாக வேலை கொடுப்பதில்லை. ஆட்களை மாற்றி அந்த நிறுவனத்தில் ஒருவாரம், இந்த நிறுவனத்தில் ஒருவாரம் என்று வேலை கொடுக்கிறார். தொழிலாளர்களுக்கு (இ.எஸ்.அய்.) 'தொழிலாளர் ஈட்டுறுதி திட்ட' வசதியோ. (பி.எப்) 'தொழிலாளர்: காப்புறுதி திட்ட' வசதியோ செய்து தருவது இல்லை. சில ஒப்பந்ததாரர்கள் இ.எஸ்.அய்.க்கு கட்ட பணத்தை பிடித்தாலும், 'இ.எஸ்.அய்.க்கான அட்டையை தொழிலாளர்களிடம் தராமல் தானே வைத்துக் கொள்கின்றனர். தொழிலாளர்களிடம் எந்த ஆதாரமும் கிடைத்துவிடக் கூடாது என்பதில் அவ்வளவு விழிப்பு!
"ஒப்பந்த தொழிலாளர்' முறையை ஒழிக்க மாநில அரசுகள் சட்டம் இயற்ற வேண்டும்' என்று உச்சநீதிமன்றம் தீர்ப்புக் கூறியும் எந்த மாநில அரசும் இது குறித்து இதுவரை எந்த நடவடிக்கையும் எடுத்ததாகத் தெரியவில்லை.
ஏன் என்றால்; தனியார் நிறுவனங்களை விட, அரசுத் துறை களே மோசமாக செயல்படுவது தான்!
அரசுத் துறைகள் பலவற்றில் பல ஆண்டுகளாக தொழிலாளர்கள் பணிபுரிந்தும் நிரந்தரம் செய்யப்படாமலேயே இருக்கின்றனர். அரசே சட்டத்தை மீறும்போது தனியார் நிறுவனங்கள் மீறாமல் இருக்குமா?
அரசே சட்டத்தை மீறுகிறது என்பதற்கு எடுத்துக்காட்டாக 'விடுதலை' நாளேடு 18.3.98-ல் தீட்டிய தலையங்கம் செய்தியையே எடுத்துக் கொள்ளலாம்.
தமிழ்நாடு அரசு தலைமைச் செயலகத்தில் உதவியாளர் பணிக்கு 1996-ல் தேர்வு நடத்தப்பட்டு 214 பேர் (1997 செப்டம்பரில்) தேர்வு செய்யப்பட்டனர். ஆனால் 1998 'மார்ச்' வரை அவர்களுக்கு வேலை தராததற்கு காரணம்; அதே பணியில் ஏற்கனவே பலர் வேலை செய்து வருவது தான். ஏற்கனவே அவர்கள் வேறு யாரையும் தேர்வு செய்யக்கூடாது' என்று தடை ஆணை பெற்றிருப்பதும் தான்.
ஏற்கனவே வேலை செய்து வரும் தொழிலாளர்கள் தங்களை நிரந்தரம் செய்யுமாறு நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனர்; இவர்கள் சுமார் 5, 6 ஆண்டுகளாக தற்காலிக ஊழியர்கள் என்ற அடிப்படையில் சேர்த்துக் கொள்ளப்பட்டு வேலை செய்து வருகின்றனர்.
பல ஆண்டுகள் கழித்து நீதிமன்றம் அவர்களை நிரந்தரம் செய்யுமாறு ஆணையிட்டது.
ஆனால் அரசு, அவர்களை உடனே நிரந்தரம் செய்யாமல்; 'காலியிடம் குறைவாகத்தான் உள்ளது. ஆகையால் அவ்வப்போது பணியிடங்கள் காலி ஏற்படும்போது நிரந்தரம் செய்கிறோம்' என்று நீதிமன்றத்திடம் உறுதிமொழி கொடுத்தது.
ஜெ. ஜெயலலிதா அவர்கள் முதல்வராக இருந்தபோது ஒரு முறை, அவர் ஆட்சி கலைக்கப்பட இருப்பதாக வதந்தி வேகமாக பரவியது. அப்பொழுது சில தேங்கிக் கிடந்த கோப்புகளில் கையொப்பமிட்டார். அதில் ஒன்று தலைமைச் செயலக உதவி பணியாளர் குறித்தது. இதனால் ஒரு குறிப்பிட்ட பணியாளர்கள் நிரந்தரப் பணிக்கு ஆணை பெற்றனர்.
மேலும் பலர் நிரந்தரப் பணி ஆணைக்கு காத்துக் கொண்டுள்ளனர்.
இதில் ஒரு விந்தை என்ன வென்றால், பணியிடம் காலியில்லை என்று அரசு நீதிமன்றத்திடம் சொல்லியிருப்பது தான். நீதிமன்றத்தை அணுகிய அத்தனை தொழிலாளருமே தலைமைச் செயலகத்தில் உதவியாளர்களாக தான் இன்று வரை வேலை செய்து வருகின்றனர். ஆனால் தற்காலிக ஊழியர்கள் என்ற பட்டியலில் அவர்களுக்கு வேலை கொடுக்கப்பட்டு வேலை செய்து வருகின்றனர்..
இதிலிருந்து 'வேலைக்கான காலியிடம் இருந்தும், அவர்களை காலியிடங்களில் நிரந்தரம் செய்யாமல், தற்காலிக ஊழியர்களாகவே வைத்திருந்து, ஊதியத்தை குறைவாக கொடுத்து நாட்களை கடத்த நினைக்கிறது அரசாங்கம்' என்பது தெளிவாகத் தெரிகிறது..
இது ஒரு பக்கமிருக்க, புதிதாக ஏன் பணியாளர்களை தேர்வு செய்து அவர்களையும் அலைய விட வேண்டும்?
இவை 'அரசு அலுவலர்களின் முறைகேடான செயல்' என்றால் அரசு என்ன செய்து கொண்டிருக்கிறது.
அரசு உடனடியாக ஒரு குழு அமைத்து; அனைத்து தொழிற்சாலைகளுக்கும் அவர்களை அனுப்பி, சட்ட மீறல்கள் எங்கு நடந்தாலும் (அரசுத் துறை உட்பட) அவற்றை களைய ஆவன செய்ய வேண்டும்.
1. ஒப்பந்தத் தொழிலாளர் முறையை ஒழிக்க சட்டம் இயற்ற வேண்டும்.
2. அரசு மற்றும் தனியார் துறை (தொழிற்சாலைகள்) நிறுவனங்களால் சட்டவிரோதமாக ஒரு ஆண்டில் 240 நாள்களுக்கும் மேல் வேலை செய்தும் நிரந்தரம் செய்யப்படாமல் இருப்பவர்களை நிரந்தரம் செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும்.
3. சட்டத்தை ஏய்க்கும் வகையில் காலியிடம் இருந்தும் தொடர்ச்சியாக வேலை தராமல்; விட்டு விட்டு மற்றும் வேறு ஆட்களை மாற்றியும் வேலை தரும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுத்து அங்குள்ள தொழிலாளர்களை நிரந்தரம் செய்ய வழிவகை காண வேண்டும்.
இப்படிக்கு
செ.ர.பார்த்தசாரதி
( தென்சென்னை மாவட்ட திராவிடர் கழக துணைச் செயலாளர்)
- விடுதலை ஞாயிறு மலர், 31.5.98, பக்கம் 6,7