இயக்க வரலாறான தன் வரலாறு(233) : திருப்பந் தந்த திருச்சி மாநாடுகள்!
7 மற்றும் 8.1.1989 ஆகிய இரண்டு நாள்கள் திருச்சி பெரியார் நகரில் திராவிடர் கழக மாநில மாநாடும், சமூகநீதி மாநாடும் வெகு சிறப்பாக நடைபெற்றது. கழகக் குடும்பத்தினர் குடும்பம் குடும்பமாகத் திரண்டு வாருங்கள் என்று விடுத்த வேண்டுகோளை மதித்து எளிய கருஞ்சட்டைத் தோழர்கள் உள்பட அனைவரும் வந்து லட்சக்கணக்கில் கூடியிருந்தனர்.
மிகப் பெரிய மாநாட்டுப் பந்தல், சுமார் 17 ஏக்கர் பரப்பளவு கொண்ட வளாகமாம். கழகத் தோழர்களும், ஆதரவாளர்களும் சுமார் 2 லட்சத்திற்கு மேல் கூடியிருந்தனர். முதல் மாநாட்டில் மகளிர் அமைப்புச் சார்பில் ‘ஜாதி ஒழிப்பு’ என்னும் தலைப்பில் ராங்கியம் சரசுவதிராசன் அவர்கள் தலைமையில் கருத்தரங்கம் நடைபெற்றது. மாநாட்டில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில், ‘அகில இந்திய நீதித்துறை’ முறைக்கு கடும் எதிர்ப்பு, அடிப்படை உரிமைகளில் வேலைவாய்ப்பிற்கு இடம், பார்ப்பன நிருவாகத்தால் நாடு நாசம், தமிழர்களின் விழிப்புணர்வுக்குக் கண்காணிப்பு, தமிழக பெட்ரோலுக்கு ‘ராயல்டி’, தென்னகத்திற்கு கனரகத் தொழிற்சாலை, காவிரி பிரச்சனை தொடர்ந்து புறக்கணிக்கப்படுவது, விவசாயிகளின் வரி தரா போராட்டம் உள்ளிட்ட தீர்மானங்கள் கழக மாநில மாநாட்டில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன. மாநாட்டில் நான் சிறப்புரை ஆற்றினேன்.
இரண்டாவது நாள் சமூகநீதி மாநாட்டில் உரையாற்றும்போது, ஒடுக்கப்பட்ட சமுதாயத்திற்காக, ஆதிதிராவிடர் சமுதாயத்திற்காக, பிற்படுத்தப்பட்ட சமுதாயத்திற்காக பாரபட்சம் இல்லாமல் பாடுபடக்கூடிய எல்லோரையும் ஓர் நிலையிலே வைத்து ஒரு குடும்பமாகக் கருதக்கூடிய இயக்கம் என்று சொன்னால் அது இந்த இயக்கம்தான் என்பதை யாவரும் மறந்துவிடக் கூடாது என்றும், சமூகநீதிக்கு ஆபத்து எந்த ரூபத்திலே வந்தாலும் அதை சந்திக்கத் தயாராவீர் என்றும் எடுத்துரைத்தேன்.
சமூகநீதி மாநாட்டில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில், மக்கள் தொகைக்கு ஏற்ப இடஒதுக்கீடு, பிற்படுத்தப்பட்டோருக்கு உரிய 50 விழுக்காடு, ஒதுக்கீட்டை மேலும் உயர்த்துக! கலப்பு மணத் தம்பதியர் பிள்ளைகட்கு தனி ஒதுக்கீடு, இடஒதுக்கீட்டிற்காக பொருளாதார அளவுகோல் கூடவே கூடாது, மண்டல் குழு பரிந்துரையை நிறைவேற்ற தாமதித்தால் மாபெரும் கிளர்ச்சி நடத்துதல் போன்ற தீர்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன.
மாநாட்டில் பங்கேற்றவர்கள் அய்யா நீதிபதி வேணுகோபால், மேற்கு வங்க அமைச்சர் மாண்புமிகு மண்டல், முன்னாள் குஜராத் ஆளுநர் கே.கே.விசுவநாதன், கேரளாவைச் சார்ந்த பிரதாப் சிங், பெரியார் சிந்தனை பட்டயச் சான்றிதழ் அளிப்பு விழாவில் கலந்துகொண்ட பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் மாரிமுத்து, அமெரிக்காவில் வாழும் ஈழத்தமிழர் ராஜரத்தினம் தம்பதிகள், பெரியார் முதுபெரும் சுயமரியாதை வீரர் (நீலாவதி) ராமசுப்பிரமணியன், மாவீரன் நெடுமாறன், அவரது பொதுச் செயலர் எம்.கே.டி.சுப்பிரமணியம், இனமான இயக்குநர் குகநாதன் மற்றும் ஒடுக்கப்பட்ட பல்வேறு சமூகத்தினர் அனைவரும் நமது கழகத்தின் மாநாடுகளில் கலந்துகொண்டனர்.
-உண்மை இதழ், 1-15.9.2019


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக