சென்னை, ஆக.19- திராவிட மாணவர் கழக சந்திப்புக் கூட்டம் சென்னை பெரியார் திடலில் 17.08.2024 அன்று காலை 11.30 மணிக்கு தொடங்கி எழுச்சியுடன் நடைபெற்றது.
கூட்டத்தில் திராவிட மாணவர் கழக மாநிலச் செயலாளர் இரா.செந்தூரபாண்டியன் தலைமை ஏற்று உரையாற்றினார். மேலும் இக்கூட் டத்தில் திராவிடர் கழக துணை பொதுச் செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் அவர்கள் கூட்டத்தின் நோக்கத்தை விளக்கி சிறப்புரையாற்றினார்.
கூட்டத்தில் வடசென்னை மாவட்ட இளைஞரணி தலைவர் பார்த்திபன், திராவிட மாணவர் கழக மாநில துணைச் செயலாளர் தொண்டறம், பல்கலைக் கழக திராவிட மாணவர் கழக மாநில அமைப்பாளர் அறிவுச்சுடர் ஆகியோர் முன்னிலையேற்றனர்.
கூட்டத்தில் சென்னையில் படிக்கும் கல்லூரி மாணவர்கள் கவனிக்கோ இளந்திரையன்,பாரதி, சஞ்சய், யாழ்ஒளி, வெங்கடேஷ், அபினா சுருதி, நிலவரசி மற்றும் சென்னகிருஷ்ணன் ஆகிய தோழர் கள் பங்கேற்று சிறப்பித்தனர்.
கூட்டத்தின் இறுதியில் சட்டக் கல்லூரி திராவிட மாணவர் கழக மாநில அமைப்பாளர் நாகை மு.இளமாறன் அனைவருக்கும் நன்றி கூறினார்.
கூட்டத்தில், பட்டுக்கோட்டை அருகே சிளம்பவேளங்காடு கிராமத்தைச் சேர்ந்த மாணவர் தனுஷ் (20) இரண்டு முறை நீட் தேர்வு எழுதியும் தோல்வி அடைந்ததால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்பது பேரதிர்ச்சியை தருகிறது. இன்னும் எத்தனை மாணவர்களை இழக்கப் போகிறோம்? இதற்கு பிறகு நீட்டினால் ஒரு மாணவர் உயிரிழந்து விடக் கூடாது, சமூக நீதியும், கல்வி உரிமையும் பறிக்கப்படக்கூடாது, என்ற நோக்கில் நீட்டை ஒழிக்கப் போராடுவோம்.
உயிரிழந்த மாணவர் தனுஷ் அவர்களின் இழப்பிற்கு ஆழ்ந்த இரங்கலையும், அவரை இழந்து வாடும் பெற்றோருக்கு ஆறுதலையும் இக்கூட்டம் தெரிவித்துக் கொள்கிறது எனவும்,
செப்.17 உலகத் தலைவர், அறிவுலக ஆசான் தந்தை பெரியார் அவர்களின் 146 ஆம் ஆண்டு பிறந்தநாள் – சமூக நீதி நாள் விழாவினைத் திராவிட மாணவர் கழகம் சார்பில் பள்ளிக் கல்லூரிகளில் மாணவர்கள் மத்தியில் எழுச்சியோடு கொண்டாடுவது என்றும், பள்ளி கல்லூரி வாயில்களில் திராவிடர் கழக இலட்சியக் கொடியினை ஏற்றி, தந்தை பெரியார் அவர்களின் படத்தினை வைத்து மாணவர்களுக்கு இனிப்புகள் வழங்கிக் கொண்டாடுவது என்றும், மாணவர்கள் மத்தியில் துண்டறிக்கைப் பிரச்சாரத்தைச் செய்வது எனவும்,
2024 – 2025 ஆண்டில் திராவிட மாணவர் கழகத்தை அனைத்து பள்ளி, கல்லூரிகளில் வலுப்படுத்துவது எனவும், கும்பகோணத்தில் நடைபெற்ற திராவிடர் கழகப் பொதுக்குழுவின் தீர்மானங்களை செயல்படுத்துவதெனவும், கல்வியை காவி மயமாக்கிட ஒன்றிய மதவாத பாஜக அரசு துடித்துக் கொண்டிருக்கிறது. பள்ளி, கல்லூரி பாடத்திட்டங்களில் இந்துத்துவ கருத்துக்களை திணிக்கும் ஒன்றிய மதவாத பாஜக அரசை இக்கூட்டம் வன்மையாகக் கண்டிக்கிறது.
மூடநம்பிக்கை ஒழிப்பு – பெண்ணுரிமை பாதுகாப்பு (ம) இந்திய அரசியல் சட்டப் பிரிவு 51A(h) விளக்கி திராவிட மாணவர் கழகம் சார்பில் கல்லூரி, பள்ளி மாணவர்கள் மத்தியில் தொடர் பிரச்சாரக் கூட்டத்தை நடத்து வது எனவும்,சமூகநீதிக்கு எதிரான நீட் தேர்வினை முழுமையாக இந்திய அளவில் ரத்து செய்ய ஒன்றிய அரசை வலியுறுத்தியும், தமிழ்நாட்டின் நீட் விலக்கு மசோதாவிற்கு குடியரசுத் தலைவர் உடனடியாக ஒப்புதல் வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் திராவிட மாணவர் கழகம் சார்பில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் வழிகாட்டுதலோடு தொடர்ந்து அடுத்த கட்டப் போராட்டத்தில் ஈடுபடுவது எனவும்,
தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங் களில் தமிழ்நாடு அரசின் உயர்கல்வி துறையை மீறி பல்கலைக்கழக வேந்தர் என்ற பெயரில் பல்கலைக்கழக செயல் பாடுகளில் ஆளுநர் தலையிடுவதும், இந்துத்துவ ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி. கருத்துகளை மாணவர்கள் மத்தியில் திணிக்கச் செய்வதும் கண்டிக்கத்தக்கது.
தமிழ்நாடு அரசின் பல்கலைக்கழகங்களின் செயல்பாட்டை சரியாக வழிநடத்த பல்கலைக்கழகங்களின் வேந்தர் பொறுப்பில் தமிழ்நாடு அரசின் முதலமைச்சரே இருக்க வேண்டும் என்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்ட மசோதாவிற்கு ஒப்புதல் வழங்காமல் ஆளுநர் காலம் கடத்துவது அரசியல் சட்டத்திற்கு எதிரானது. இந்தப் போக்கு ஏற்கத்தக் கதல்ல. கொல்லைப்புற வழியில் ஆளுநர் மாளிகை மூலம் உயர்கல்வித்துறையை கபளீகரம் செய்யத் துடிக்கும் ஆளுநரின் போக்கை இக்கூட்டம் வன்மையாக கண்டிக்கிறது. தேவை எனில் கழகத் தலைவர், தமிழர் தலைவர், ஆசிரியர் வழிகாட்டுதலுடன் போராட்டத்தில் ஈடுபடவும் திராவிட மாணவர் கழகம் தயார் என உறுதியேற்கிறது எனவும் முடிவு செய்யப்பட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக