ஞாயிறு, 15 செப்டம்பர், 2024

புதுக்கோட்டை திராவிடர் கழக இளைஞரணி மாநில மாநாடு (10.8.1996)

 

அய்யாவின் அடிச்சுவட்டில்…இயக்க வரலாறான தன் வரலாறு (271) (கட்டுரையின் ஒரு பகுதி)

ஜுன் 16-30 ,2021

உண்மை இதழ்

புதுக்கோட்டை திராவிடர் கழக இளைஞரணி மாநில மாநாட்டில் ஆசிரியருக்கு எடைக்கு எடை வெள்ளி வழங்கும் காட்சி

10.8.1996 அன்று திராவிடர் கழக இளைஞரணி மாநில மாநாடு புதுக்கோட்டையில் மிகுந்த எழுச்சியுடன் நடைபெற்றது. நகரமெங்கும் கழகக் கொடித் தோரணம்கூரையில் பொலிவுடன் சிறப்பாக அலங்கரிக்கப்பட்டு இருந்தது. தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலிருந்து மட்டுமின்றி, கர்நாடகம், மராட்டியம், ஆந்திரா மாநிலங்களிலிருந்தும் கழகக் குடும்பத்தினர் குவிந்தனர்.

மாநாட்டிற்கு வரவேற்கும் விதமாக புதுக்கோட்டை எல்லையில் 25 மோட்டார் சைக்கிள்களிலும், வேன்களிலும் ஏராளமான கழகத் தோழர்கள் வரவேற்று முழக்கமிட்டனர். மாநாட்டையொட்டி, அறிவியல் கண்காட்சி, புத்தக விற்பனை, கருத்தரங்கு, சுயமரியாதைச் சுடரொளிகள் படத்திறப்பு என விழாக் கோலம் பூண்டது.

புதுக்கோட்டையைக் குலுக்கும் வகையில் சிறப்பான பேரணி நடைபெற்றது. இளைஞரணி அணிவகுப்பு, மூடநம்பிக்கை ஒழிப்பு நிகழ்ச்சிகள் என சிறப்பான வகையில் மாவட்டப் பொறுப்பாளர்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஊர்வலம் _ கீழ ராஜவீதி, அண்ணாசாலை வழியாக வந்து இரவு 8:00 மணிக்கு மாநாட்டுப் பந்தலை அடைந்தது. அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் என்னை அமர வைத்து கழகத் தோழர்கள் பெரும் ஆரவாரத்துடன் அழைத்துச் சென்றனர்.

மாநாட்டு மேடையில் பெண்களின் அடிமைச் சின்னமெனும் தாலியை நீலமலை மாவட்ட தி.க. செயலாளர் கருணாகரன் அவர்களது துணைவியார் ஜோதி அவர்களும், நீலமலை மாவட்ட தி.க. இளைஞரணி செயலாளர் இரா.தாமோதரன் அவர்களது துணைவியார் மகேஸ்வரி அவர்களும் மேடையிலேயே  அகற்றினர்.

மாநாட்டில் நிறைவுரையாற்றுவதற்கு முன்பாக கழகத் தோழர்கள் பெரிய தராசினை மேடையின் மய்யப் பகுதியில் கொண்டு வந்து ஒரு தட்டில் என்னை அமர வைத்து எடைக்கு எடை வெள்ளி வழங்கும் நிகழ்வினை பெரும் மகிழ்ச்சியோடு நிகழ்த்தினர். புது வரலாறு படைத்த மாநாட்டில் உரையாற்றுகையில், “எனக்கு நீங்கள் எடைக்கு எடை வெள்ளி கொடுத்து என்னை பெருமைப்படுத்தினாலும், நான் அமர்ந்திருந்த பொழுது எனக்கு முன்னால் வைக்கப்பட்டிருந்த அய்யா, அம்மா படத்திற்கே அது காணிக்கை என்பதை நன்றியுணர்ச்சியோடு, அடக்கத்தோடு கூறிக் கொள்கிறேன். இங்கு எனக்கு மிகுந்த உணர்ச்சியும் நெகிழ்ச்சியும் ஏற்பட்டிருக்கின்றது.

இந்த இளைஞரணி மாநாட்டை நம்முடைய புதுக்கோட்டை மாவட்டத் திராவிடர் கழகத் தலைவர் புட்பநாதன் மற்றும் செயலாளர், இளைஞரணி செயலாளர் என அனைத்து பொறுப்பாளர்களும் மிகச் சிறப்பான அளவுக்குப் பணியாற்றி சிறப்பித்திருப்பதைக் காண முடிகிறது. நம்மைப் பற்றிப் பலர் குற்றம் சொன்ன காலத்திலும், நமது இயக்கம் என்ன சாதித்தது என்று கேட்க வந்த காலத்திலும் நாம் அவர்களை இலட்சியம் செய்து பதில் சொல்லிக் கொண்டிராமல் நமது இலட்சியத்திலேயே கவலை வைத்துக் கொண்டு, ‘நாம் அப்படித்தான் செய்வோம், இஷ்டமிருந்தால் பின்பற்றி வா, இல்லாவிட்டால் உன் வேலையைப் பார்த்துக் கொண்டு போ! அதன் பேரிலோ நமது கொள்கையின் பேரிலோ, நமது செய்கையின் பேரிலோ ஆதிக்கம் செலுத்த வேறு யாருக்கும் உரிமை இல்லை! என்று சொல்லிக் கொண்டு வந்த உறுதியான நிலைமையேதான் நல்லதோ, கெடுதியோ நமது இயக்கத்தின் தற்கால நிலைமைக்குக் காரணமாக இருந்து வருகிறது. தந்தை பெரியார் அவர்கள் இதனை தெளிவாகச் சொல்லியிருக்கின்றார்.

பொருளாளர் தஞ்சை கா.மா.குப்புசாமி அவர்களது சீரிய முயற்சியால் இந்த நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. நாம் எப்பொழுதுமே கொள்கை ரீதியாக இருப்போம். கொள்கை ரீதியாக இருந்தால் யாரோடும் இருப்போம். அந்தக் கொள்கையைச் செயல்படுத்தவில்லை என்றால் யாரைப் பற்றியும் கவலைப்பட மாட்டோம். இதை எப்பொழுது கையாண்டார்கள் என்பதே பல பேருக்குத் தெரியாது. இதை எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டும். நீ பெரியாரா என்று கேட்கலாம். நான் பெரியார் அல்ல; ஆனால், பெரியாருடைய காலடியில் இருந்த மண்ணுக்குரிய புத்திகூட இந்த நாட்டில் உள்ள மிகப் பெரிய அரசியல் தலைவர்களுக்கு அனுபவ சிந்தனை உடையது என்பதைச் சவால் விட்டு என்னால் கூற முடியும். ஆகவேதான், சொல்லுவது, சுட்டிக்காட்டுவது எங்களுடைய கடமை; எங்களுக்குரிய உரிமை. தமிழகத்தில் நாங்கள் எதற்கிருக்கின்றோம்? இந்த இனத்துக்குச் சோதனை வரும்பொழுது, சமூகநீதிக்குக் கேடு வரும்பொழுது, மதச்சார்பின்மைக்கு ஆபத்து வரும்பொழுது தற்கொலைப் பட்டாளமாக மாறுவோம், மாறித்தான் தீருவோம்!

கூடியிருக்கும் இளைஞர்களே, நீங்கள் என் மீது வைத்திருக்கின்ற நம்பிக்கைக்கு துரோகம் செய்யாமல் தந்தை பெரியார் அவர்களுடைய கொள்கையை இறுதிமூச்சு அடங்குகிறவரை செய்து கொண்டிருப்பேன். உங்களுடைய நம்பிக்கையைப்  பாழாக்க மாட்டேன்’’ என பல்வேறு கருத்துகளை இளைஞர்கள் மனத்தில் படும்படி எடுத்துக் கூறினேன். நெல்லையில் இருந்து சென்னை திரும்பி விடுதலையில் முக்கிய அறிக்கை ஒன்றை வெளியிட்டோம்.

_ கி.வீரமணி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக