கடந்த 6ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற திராவிடர் கழக சிறப்புத் தலைமைச் செயற்குழுக் கூட்டத்தில் கழக அமைப்புத் தொடர்பாகவும், பிரச்சாரம் தொடர்பாகவும் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தீர்மானம்: 6 பயிற்சிப் பட்டறைகள்
1. சொற்பொழிவுப் பயிற்சி, 2. களப் பணி பயிற்சி 3. எழுத்துப் பயிற்சிக்கான பயிற்சிப் பட்டறைகளை நடத்தி, இயக்கத்திற்கு அடுத்த தலைமுறையினரை இந்த வகையில் உருவாக்கும் அதி முக்கியத்துவம் வாய்ந்த இத்திட்டத்தை தக்க வகையில் வகுத்து செயல்படுவது என்று தீர்மானிக்கப்படுகிறது.
தீர்மானம் எண் : 7 இளைஞர்களுக்கு உரிய முக்கியத்துவம்!
இயக்க நிர்வாகிகள் பொறுப்பேற்கும் நியமனத்தில் இளைஞர் களுக்கு உரிய அளவு முக்கியத்துவம் கொடுப்பது என்று தீர் மானிக்கப்படுகிறது.
தீர்மானம் எண் : 8 கழகம் இல்லாத பகுதிகளே இருக்கக்கூடாது
கழக மகளிரணி, மகளிர் பாசறை, இளைஞரணி, மாணவர் கழக அமைப்புகளை ஒன்றிய அளவில் கட்டுவது என்றும், கழகம் இல்லாத பகுதிகளே இருக்கக் கூடாது; கழகக் கொடி பறக்காத கிராமமோ, நகரமோ இல்லை என்கிற வகையில், பொதுச் செயலாளர்கள், அமைப்புச் செயலாளர்கள், மண்டல, மாவட்டக் கழகப் பொறுப்பாளர்கள் மற்றும் நிர்வாகிகள் தீவிரமாகச் செயல் படவேண்டும் என்றும் இச்சிறப்புச் செயற்குழு கேட்டுக் கொள்கிறது.
தீர்மானம்: 9
‘விடுதலை' உரிய நேரத்தில் கிடைக்க உரிய வகையில் செயல்படவேண்டும்!
‘விடுதலை' உள்ளிட்ட இயக்க ஏடுகள், இதழ்களின் சந்தா தாரர்களுக்கு உரிய நேரத்தில் அவை கிடைக்கின்றனவா என்பதைக் கண்காணித்து, விநியோகத்தில் குறைபாடுகள் இருக்குமேயானால், அதனை உடனடியாக தலைமைக் கழகம், அஞ்சலகப் பார்வைக்குக் கொண்டு சென்று உரிய வகையில் தீர்வு காணப்படவேண்டும் என்று கழகத் தோழர்களை இச்செயற்குழு கேட்டுக் கொள்கிறது என்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்தியாவில் மட்டுமல்ல; உலகளவிலும்கூட அரசியல் கலப்பு இல்லாமல் சமூக மாற்றத்தை முன்னிறுத்திப் பாடுபடுகிற ஒரே இயக்கம் திராவிடர் கழகம் மட்டுமே!
தந்தை பெரியார் இந்த இயக்கத்தைத் தொடங்கிய நேரத்தில் "என்னை நம்பியே இந்த இயக்கத்தைத் தொடங்கினேன்" என்ற தன்னம்பிக்கையோடு தொடங்கினார்.
அமைப்பு முறைகள் என்பது பற்றிக் கூட அவர் கவலைப் பட்டதில்லை. 'குடிஅரசு' என்ற வார இதழும் அதன் முகவர்களும் வாசகர்களும் மட்டுமே இயக்கத்தினராக கருதப்பட்டார்கள்.
பிரச்சாரம்! பிரச்சாரம்!! பிரச்சாரம்!!! இதன் மூலமாகவே தமிழ்நாட்டின் மூலை முடுக்குகளிலெல்லாம் கருத்து மழையைப் பொழிந்து கொண்டே இருந்தார்.
அவர் உரையைக் கேட்க வேண்டும் என்று வந்தவர்களைவிட கூட்டத்தை நடத்த விடாமல் கலவரம் ஏற்படுத்த வந்தவர்களே அதிகம்!
அதைப்பற்றியெல்லாம் கிஞ்சிற்றும் கவலைப்பட்ட தில்லை - சின்னாளப்பட்டியில் தந்தை பெரியார் பேசிக் கொண்டிருந்தபோது சரமாரியாகக் கற்கள் வீசப்பட்டன. தோளில் போட்டிருந்த சால்வையை எடுத்து முண்டாசு கட்டிக் கொண்டு கணீர் கணீர் என்று பேசினார். கூட்டம் கேட்க வந்தவர்களைப் பார்த்து "நீங்கள் என் பேச்சைக் கேட்க விரும்பினால், நீங்களும் முண்டாசு கட்டிக் கொள்ளுங்கள் - கல் வீச்சுக்கு அஞ்சுபவர்கள் கூட்டத்தைவிட்டு வெளியேறிவிடலாம்!" என்று சொன்ன துணிவு அய்யாவைத் தவிர வேறு யாருக்கு வரும்?
செய்யாறையடுத்த வாழ்குடை என்னும் ஊரில் ஒரு திருமணத்தில் அய்ந்தரை மணி நேரம் பேசினார் என்றால் நம்ப முடிகிறதா? மயிலாடுதுறையில் பொதுக் கூட்டத்தில் நான்கு மணி நேரம் உரையாற்றி இருக்கிறார்.
எதிர்ப்பு நெருப்புக் கட்டிகளை தன் சொற்பொழிவு மழையால் அணைத்தார். அப்படி வளர்க்கப்பட்ட இயக்கம் இன்றைக்கு இந்தியாவிற்கே வழிகாட்டும் மாநிலமாக தலை தூக்கி வீறு நடைபோடுகிறது.
ஒரு சனாதன பாசிச சக்தி இந்திய ஆட்சி அதிகாரப் பீடத்தில் அமர்ந்து, ஆரிய பாசிசத்தை நிலை நிறுத்த அனைத்து வழிகளிலும் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது.
இதனைத் தத்துவ ரீதியாக எதிர் கொண்டு வீழ்த்தும் சித்தாந்தத்தையும் சக்தியையும் கொண்டது திராவிடர் கழகமே!
எதிரிகளிடத்தில் இருக்கும் - ஆட்சி அதிகாரம், பண பலம், பத்திரிகைப் பலம், எளிதாக விலை போகும் விபீஷணர்களின் பலம் என்ற முறையில், தமிழ்நாட்டைக் குறி வைக்கிறார்கள்.
இந்த நிலையில் திராவிடர் கழகத்தின் அமைப்பு முறையிலும் பிரச்சாரத்திலும் காலத்துக்கேற்ற மாற்றங்கள் தேவைப்படுகின்றன.
'நம் கையில் இருக்கும் ஆயுதத்தை முடிவு செய்வது எதிரிகையில் உள்ள ஆயுதமே' என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
முதியவர்கள் வழிகாட்ட இளைஞர்கள் முக்கிய பொறுப்பு களுக்குக் கொண்டு வரப்பட வேண்டும். கிராமங்கள் உள்படக் கிளைக் கழகங்கள் தொடங்கப்படவேண்டும். கழகக் கொடி பறக்காத கிராமமோ நகரமோ இருக்கக் கூடாது - எதிரிகள் பார்த்து மலைக்க வேண்டும்.
நமக்கு இருக்கும் மிகப் பெரிய பலமே தந்தை பெரியார் விட்டுச் சென்ற சித்தாந்தமே! இதற்கு முன் எந்த சக்தியும் முகம் கொடுக்க முடியாது.
பலூன் போன்ற பெரிய உருவத்துடன் எதிரிகள் தோன்றலாம். நாம் குண்டூசி போன்றவர்கள் - இதன் முனைபட்டால் போதும் சிதறிவிடும்.
அந்த அடிப்படையில் சொற்பொழிவுப் பயிற்சி, எழுத்துப் பயிற்சி, களப்பணிப் பயிற்சிகள் திட்டமிட்ட வகையில் தொடங்கப் படும்.
அப்பயிற்சிப் பட்டறைகளில் இளைஞர்களை மாணவர் களை (இருபாலர்களையும்தான்) கொண்டு வர வேண்டிய பொறுப்பு ஒவ்வொரு கழகத் தோழருக்கும் உண்டு என்பதை நினைவில் வையுங்கள். இப்பொழுதே இவற்றிற்கான முயற்சியில் ஈடுபடுங்கள்! முக்கியம்! முக்கியம்!! முக்கியம்!!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக