கழக அமைப்பு முறையில் இளைஞர்களுக்கு வாய்ப்பு!
ஜாதிவாரிக் கணக்கெடுப்புத் தேவை! தேவை!!
நீதித்துறையிலும், தனியார்த் துறையிலும் இட ஒதுக்கீடு அவசியம்!
திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழுவின் தீர்மானங்கள்
இன்று (6.9.2022) சென்னை பெரியார் திடலில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்களின் தலைமையில் நடைபெற்ற திராவிடர் கழகத் தலைமை சிறப்புச் செயற்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்.
தீர்மானங்கள் வருமாறு:
இரங்கல் தீர்மானம்: 1
புதுக்கோட்டை மாவட்ட திராவிடர் கழக மேனாள் தலைவர் - முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் இரா.புட்பநாதன், காளாப்பூர் பெரிபெருமாள், அமெரிக்க வானொலி ஆறுமுகம் பேச்சிமுத்து, மலேசிய திராவிடர் கழக முன்னோடி சுங்கைப் பட்டாணி வடிவேல், திருச்சி - திருவெறும்பூர் சுரேஷ் ஆகியோரின் மறைவிற்கு இச்செயற்குழு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது.
இவர்களைப் பிரிந்து வாடும் குடும்பத்தினருக்கும், உற்றார் உறவினர்களுக்கும் ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறது.
தீர்மானம் எண்: 2
மகிழ்ச்சி - பாராட்டு!
88 ஆண்டு கால ‘விடுதலை' ஏட்டின் வரலாற்றில், 60 ஆண்டுகாலம் ஆசிரியராகப் பணியாற்றி உலக சாதனை புரிந்த நமது ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்களுக்கு இச்செயற்குழு பாராட்டுகளைத் தெரிவித்து, மகிழ்ச்சி அடைகிறது.
தீர்மானம் எண்: 3
தங்களை அர்ப்பணித்துக்கொண்ட தோழர்களுக்கு...
மதுரையில் சீரும் சிறப்புடனும் நடைபெற்ற திராவிடர் கழகப் பொதுக் குழுக் கூட்டத்தில் 60 ஆண்டு ‘விடுதலை' ஆசிரியருக்கு 60 ஆயிரம் சந்தாக்களை அளிப்பது என்ற தீர்மானத்தின் அடிப்படையில் கழகப் பொறுப்பாளர்கள், தோழர்கள் தங்களை அர்ப்பணித்துக் கொண்டு, கடும் உழைப்பில் ஈடுபட்டு, ‘விடுதலை' சந்தா சேர்க்கும் பணியில் ஈடுபட்டு கடுமையாக உழைத்த உழைப்புத் தேனீக்களாகிய அத்தனைப் பேருக்கும் இச்செயற்குழுக் கூட்டம் தனது பாராட்டுதலையும், வாழ்த்துகளையும், நன்றியையும் தெரிவித்துக் கொளகிறது.
தீர்மானம் எண்: 4
டிசம்பர் 2 ஆம் தேதிக்குள்....
இன்று (6.9.2022) மாலை சென்னை பெரியார் திடலில் நடைபெறவிருக்கும் ‘விடுதலை' சந்தா அளிப்பு என்பதை முதல் தவணையாகக் கருதி, தமிழர் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்களின் 90 ஆம் ஆண்டு பிறந்த நாளான வரும் டிசம்பர் 2 ஆம் தேதிக்குள், ‘விடுதலை' சந்தா சேர்க்கும் பணியில் ஈடுபட்டு, இரண்டாவது தவணையாக நமது இலக்கை முற்றாக நிறைவேற்றும் வகையில் செயல் பணியில் தொடர்ந்து ஈடுபடுவது என்று தீர்மானிக்கப்படுகிறது.
தீர்மானம் எண்: 5
கிராமப்புறங்களை மய்யப்படுத்தி பிரச்சாரம்
திராவிடர் கழகப் பிரச்சார திட்டம் என்பது முக்கியமாகக் கிராமப்புறங்களை மய்யப்படுத்தி, அதற்கான திட்டங்களை வகுத்துச் செயல் படுவது என்று தீர்மானிக்கப்படுகிறது.
தீர்மானம்: 6
பயிற்சிப் பட்டறைகள்
1. சொற்பொழிவுப் பயிற்சி, 2. களப் பணி பயிற்சி 3. எழுத்துப் பயிற்சிக்கான பயிற்சிப் பட்டறைகளை நடத்தி, இயக்கத்திற்கு அடுத்த தலைமுறையினரை இந்த வகையில் உருவாக்கும் அதிமுக்கியத்துவம் வாய்ந்த இத்திட்டத்தை தக்க வகையில் வகுத்து செயல்படுவது என்று தீர்மானிக்கப்படுகிறது.
சிறப்புத் தீர்மானம்
தந்தை பெரியார் 144 ஆம் ஆண்டு பிறந்த நாளான செப்டம்பர்17 ஆம் தேதியன்று தமிழ்நாடெங்கும் மிகச் சிறப்புடன் கொண்டாடுவது என்று தீர்மானிக்கப்படுகிறது.
பட ஊர்வலம், ஒலிபெருக்கி வழியில் பெரியார் உரை, இசைப் பாடல்கள் என்கிற வகையில், பெரும் கொள்கைப் பிரச்சார விழாவாக நடத்தவேண்டுமாய் கழகத்தினர் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
தீர்மானம் எண் : 7
இளைஞர்களுக்கு உரிய முக்கியத்துவம்!
இயக்க நிர்வாகிகள் பொறுப்பேற்கும் நியமனத்தில் இளைஞர்களுக்கு உரிய அளவு முக்கியத்துவம் கொடுப்பது என்று தீர்மானிக்கப்படுகிறது.
தீர்மானம் எண் : 8
கழகம் இல்லாத பகுதிகளே இருக்கக்கூடாது
கழக மகளிரணி, மகளிர் பாசறை, இளைஞரணி, மாணவர் கழக அமைப்புகளை ஒன்றிய அளவில் கட்டுவது என்றும், கழகம் இல்லாத பகுதிகளே இருக்கக் கூடாது; கழகக் கொடி பறக்காத கிராமமோ, நகரமோ இல்லை என்கிற வகையில், பொதுச்செயலாளர்கள், அமைப்புச் செயலாளர்கள், மண்டல, மாவட்டக் கழகப் பொறுப்பாளர்கள் மற்றும் நிர்வாகிகள் தீவிரமாகச் செயல்படவேண்டும் என்றும் இச்சிறப்புச் செயற்குழு கேட்டுக் கொள்கிறது.
தீர்மானம்: 9
‘விடுதலை' உரிய நேரத்தில் கிடைக்க உரிய வகையில் செயல்படவேண்டும்!
‘விடுதலை' உள்ளிட்ட இயக்க ஏடுகள், இதழ்களின் சந்தாதாரர்களுக்கு உரிய நேரத்தில் அவை கிடைக்கின்றனவா என்பதைக் கண்காணித்து, விநியோகத்தில் குறைபாடுகள் இருக்குமேயானால், அதனை உடனடியாக தலைமைக் கழகம், அஞ்சலகம் பார்வைக்குக் கொண்டு சென்று உரிய வகையில் தீர்வு காணப்படவேண்டும் என்று கழகத் தோழர்களை இச்செயற்குழு கேட்டுக் கொள்கிறது.
தீர்மானம்: 10
ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்திடுக!
பிரிட்டிஷார் ஆட்சியில் 1931 ஆம் ஆண்டு இந்தியாவில் அனைத்து ஜாதியினர் மற்றும் மதத்தினர் பற்றிய கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. ‘சுதந்திர இந்தியாவில்' எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் தவிர்த்து, ஏனைய ஜாதியினர் குறித்து எந்த கணக்கெடுப்பும் நடத்தப்படவில்லை.
இட ஒதுக்கீடு குறித்த வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் ஒவ்வொரு முறையும் இடஒதுக்கீடு செயல்படுத்தப்பட வேண்டிய சமூகங்களின் அளவிடக்கூடிய தரவுகளை மாநிலங்கள் அளிக்கவேண்டும் என்று நீதிமன்றங்கள் அடிக்கடி வலியுறுத்துகின்றன.
ஒன்றிய அரசு ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்தாத பட்சத்தில், ‘அளவிடக்கூடிய தரவு’ (ஹீuணீஸீtவீயீவீணீதீறீமீ பீணீtணீ) என்ற இந்த சட்டப்பூர்வ தேவையை எப்படி நிறைவேற்ற முடியும்?
2018 ஆம் ஆண்டு அன்றைய ஒன்றிய உள்துறை அமைச்சர் திரு.ராஜ்நாத் சிங் அவர்கள், தற்போதைய மக்கள் தொகைக் கணக்கெடுப்பில், ஓபிசி ஜாதிகளின் தரவுகளும் சேகரிக்கப்படும் என்று தெரிவித்தார். இப்போது ஏன் அரசாங்கம் பின்வாங்க வேண்டும்? நாடாளுமன்றத்தில் அதிகாரிகளோ, அமைச்சர்களோ கூறும் காரணங்கள் நம்பும்படியாக இல்லை.
தெலங்கானா, மகாராட்டிரா, ஒடிசா மற்றும் பீகார் மாநில சட்டப்பேரவைகள், ஓபிசி பிரிவினர் உள்ளிட்ட ஜாதி வாரியான மக்கள் தொகைக் கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று ஒன்றிய அரசைக் கோரி தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளன, மேலும் சில மாநிலங்களில் தரவுகள் இல்லாத காரணத்தால் உள்ளாட்சித் தேர்தலில் ஓபிசி பிரிவினருக்கான இட ஒதுக்கீட்டை நீதிமன்றம் தடை செய்துள்ளது.
ஓபிசி, எஸ்.சி., மற்றும் எஸ்.டி. சமூகங்களுக்குப் அளிக்கப்படும் எந்தவொரு இடஒதுக்கீடும் சட்டரீதியான தடைகளால் பாதிக்கப்படாமல் இருக்க, ஓபிசி பிரிவினர் பற்றிய எண்ணிக்கை மிக அவசியம். வளர்ச்சி அடைந்த நாடான அமெரிக்காவில் நிலவும் இனவெறியைக் கருத்தில் கொண்டு அது குறித்த தரவுகளை மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் 2020 ஆம் ஆண்டு வரை அமெரிக்க அரசு நடத்தியுள்ளது.
அனைத்து ஜாதிகளின் எண்ணிக்கை பற்றிய தரவுகள் கிடைக்காத வரையில், சமூகத்தில் பின்தள்ளப்பட்ட நிலையைக் கண்டறிந்து, மக்கள் நலன் சார்ந்த நடவடிக்கைகளையும் அரசு மேற்கொள்ள முடியாது என்பதைக் கருத்தில் கொண்டு ஒன்றிய அரசு வரும் மக்கள் தொகை கணக்கெடுப்பில் ஜாதிவாரியான கணக்கெடுப்பு நடத்திட உரிய நடவடிக்கையை எடுத்திட கழகத்தின் தலைமைச் செயற்குழு வலியுறுத்துகிறது.
தீர்மானம்: 11
பொதுத்துறை நிறுவனங்களைத் தனியார் மயமாக்காதே!
‘சுதந்திர' இந்தியாவின் முதல் அய்ந்தாண்டு திட்டத்தில் நாடு முழுவதும் அரசு பொதுத்துறை நிறுவனங்களை உருவாக்கி நாட்டின் வளர்ச்சிக்கு வித்திடப்பட்டது.
அரசின் பொதுத்துறை நிறுவனங்கள் - இரயில்வே, காப்பீட்டுக் கழகம், வங்கிகளும், அனைத்துச் சாமான்ய மக்களின் மேம்பாட்டுக்கு தங்களின் பங்களிப்பை செய்து வருகின்றன.
சமூக நீதி அடிப்படையில் ஓபிசி, எஸ்.சி., எஸ்.டி. என அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் வேலை வாய்ப்பு வழங்கப்பட்டு முன்னேற்றம் கண்டுள்ளது.
இந்நிலையில், பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்கும் முடிவை ஒன்றிய அரசு வேகமாக செயல்படுத்தி வருவது நாட்டின் வளர்ச்சிக்கும் சமூக நீதிக்கும் எதிரானதாகும். இதனை ஒன்றிய அரசு உடனே கைவிட வேண்டும் என்று இச்செயற்குழு வலியுறுத்துகிறது.
தீர்மானம்: 12
தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் உடனடியாக நியமிக்கப்பட வேண்டும்!
1993 சட்டத்தின்படி உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின் எதிரொலியாக ஒன்றிய அரசில் தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் துவங்கப்பட்டது. ஆனால் ஆணையத்திற்கு இதர ஆணையங்களைப் போல் (எஸ்.சி., எஸ்.டி) அரசமைப்புச் சட்ட அதிகாரம் வழங்கப்பட வில்லை. 2017 ஆம் ஆண்டுதான் இதற்கான சட்டம் (அரசமைப்பு திருத்த மசோதா 102) நாடாளுமன்றம் நிறைவேற்றியது. சட்டம் இயற்றப்பட்டாலும், 2019 ஆம் ஆண்டுதான் ஆணையத்திற்குத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டார்கள். அவர்களின் பதவிக் காலம் பிப்ரவரி 2022 இல் முடிவடைந்து விட்டது. ஆறு மாதங்கள் கடந்தும், இன்னமும் ஆணையம் செயல்படாத நிலையில் ஓபிசி பிரிவினருக்கான குறைகள் தீர்க்கப்படாமல் உள்ளன. ஒன்றிய அரசு மேலும் காலம் தாமதிக்காமல் தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு உடன் தலைவர், துணைத் தலைவர் மற்றும் உறுப்பினர்களை நியமிக்க வேண்டும் என ஒன்றிய அரசை தலைமைச் செயற்குழு வலியுறுத்துகிறது.
தீர்மானம்: 13
உயர்ஜாதியினருக்கு பொருளாதார அடிப்படையிலான 10% இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட வேண்டும்
உயர்ஜாதியினரில் பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினர்க்கு, அரசின் கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் 10 விழுக்காடு ஒதுக்கீடு அளித்திட வகைசெய்யும் சட்டத்தை ஒன்றிய அரசு நிறைவேற்றியுள்ளது. இந்த சட்டம் இந்திய அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படை கட்டமைப்புக்கு எதிரானதாகும். இந்த சட்டத்தை ஒன்றிய அரசு திரும்பப்பெற வேண்டும்.
உயர்ஜாதி பிரிவினரில் வசதி படைத்தவர், அல்லாதவர் எவருக்கும், எந்த காலத்திலும், கல்வி உள்ளிட்ட எந்த உரிமையும் மறுக்கப்படவில்லை. தீண்டாமை போன்ற சமுக இழிவுகளுக்கும் ஆட்படவில்லை.
அரசு அதிகாரத்தில் 75 விழுக்காட்டிற்கும் அதிகமாக உள்ள உயர்ஜாதியினர்க்கு, மேலும் 10 விழுக்காடு இடஒதுக்கீடு தருவது என்பது, சமுக நீதிக்கொள்கையின் தத்துவத்தையே கேலிக்குரியதாக்குகிறது.
சமுகநீதிக்காக வாழ்நாள் முழுவதும் பாடுபட்ட தந்தை பெரியார், அரசமைப்புச் சட்டத்தில் இடஒதுக்கீடு கொள்கை இடம் பெறச் செய்த பாபாசாகிப் அம்பேத்கர் ஆகியோர் வகுத்து தந்த சமுக நீதிக் கொள்கையை முற்றிலுமாக நீக்கிடும் ஓர் திட்டம்தான் அரசு அதிகாரத்தில் உள்ளவர்கள் பிறப்பித்துள்ள இந்த சட்டம்.
உயர்ஜாதியினர்க்கு 10 விழுக்காடு இடஒதுக்கீடு சட்டத்தை எதிர்த்து அனைத்து சமூக அமைப்புகளும் நீதிமன்றத்திலும், வீதிமன்றத்திலும் போராட வேண்டும் என இச்செயற்குழு வேண்டுகோள் விடுக்கிறது.
தீர்மானம்: 14
நீதித்துறையில், தனியார் துறையில் இட ஒதுக்கீடு அவசியம்!
உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றங்களில் தற்போது இட ஒதுக்கீடு இல்லை.மாவட்ட நீதிமன்றம் என்ற அளவில் மட்டுமே உள்ளது. உச்சநீதிமன்றத்தில் தற்போது உள்ள 34 நீதிபதிகளில், எஸ்.சி. பிரிவினர் 2, ஓபிசி -1. மீதம் 31 நீதிபதிகளும் உயர்ஜாதிக்காரர்கள். இந்தியாவில் அனைத்து உயர்நீதிமன்றங்களிலும் உயர்ஜாதியினரின் ஆதிக்கம் தான் நிலவுகிறது. அந்த வகையில், உயர்நீதிமன்றங்களில் இட ஒதுக்கீடு தேவை. சமூகநீதி தேவை என்பதை வலியுறுத்தி தொடர் பிரச்சாரம், போராட்டம் நடத்துவது என்றும், ஒத்தக் கருத்துள்ளவர்களை இணைத்தும், முதற்கட்டமாக தென் மாநிலங்களில் இதற்கான கட்டமைப்பை உருவாக்குவது என்றும் இச்செயற்குழு தீர்மானிக்கிறது.
அதே போன்று, ஒன்றிய பாஜக ஆட்சியில் பொதுத்துறை நிறுவனங்கள் எல்லாம் தனியார்துறையாக மாற்றப்பட்டு வருகிறது. இது சமூக நீதியைப் பாதிக்கிறது.
எனவே, தனியார்த்துறைகளிலும் இட ஒதுக்கீடுக்கு வகை செய்யும் சட்டம் ஒன்றை உடனடியாக இயற்றவேண்டுமாய் ஒன்றிய அரசை இச்செயற்குழு வலியுறுத்துகிறது.
மேற்குறிப்பிட்டஉரிமைகளை நிலைநிறுத்த பிரச்சாரங்களையும் போராட்டங்களையும் நடத்திட அனைத்து அரசியல் சமூக அழைப்புகளுக்கும் இச்செயற்குழு அழைப்பு விடுக்கிறது.
தீர்மானம்: 15
ஓபிசி சான்றிதழ் பெறுவதற்கு தடையாக உள்ள தமிழக அரசின் அரசாணையை திரும்பப் பெறுக
ஒன்றிய அரசின் கல்வி நிலையங்களிலும் வேலை வாய்ப்புகளிலும் பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீடு பெறுவதற்கு இதுவரை நடைமுறையில் இருந்த அரசாணையின் படி (ஜூலை 5, 2021 வரை), வருமான வரம்பை வரையறுக்க சம்பள வருமானம், விவசாய வருமானம் கணக்கில் எடுத்துக் கொள்ளக் கூடாது என தெளிவாக குறிப்பிடப்பட்டது. இதன் காரணமாக அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் பிற்படுத்தப்பட்டோர் ‘ஓபிசி சான்றிதழ்’ பெறுவது எளிதாக இருந்தது.
இந்நிலையில் அரசின் பிற்படுத்தப்பட்டோர் நலத் துறையின் 24.8.2021 தேதியிட்ட ஆணையில், “பொதுத்துறை நிறுவனங்கள்” மற்றும் குரூப் ‘பி’ பதவியில் பணியாற்றும் பிற்படுத்தப்பட்டோர் அனைவரும் ‘கிரிமிலேயர்’ என வரையறைப்படுத்தப்பட்டுள்ளனர். இதன் காரணமாக அரசு மற்றும் பொதுத்துறையில் பணியாற்றும் அனைத்து பிற்படுத்தப்பட்டோரும் ‘ஓபிசி சான்றிதழ்’ பெற இயலாமல், ஒன்றிய அரசின் கல்வி நிலையங்களிலும், அரசுத் துறையில் சேருவதற்கு பெரும் தடை ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசின் சமூக நீதிக் கொள்கைக்கு எதிரான 24.8.2021 அரசாணையை உடன் திரும்பப் பெற தலைமைச் செயற்குழு சமூக நீதிக்கான சரித்திர நாயகரான தமிழ்நாடு முதலமைச்சரை வற்புறுத்துகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக