(“பகுத்தறிவுப் போராளி” ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் ஆற்றிய உரையில் தெறித்த முத்துகள்)
கவிஞர் கலி.பூங்குன்றன்
சென்னை மாநிலக் கல்லூரி (தன்னாட்சி) தமிழ்த்துறையின் சார்பில் தந்தை பெரியார் நினைவுநாள் கருத்தரங்கம், கல்லூரியின் திருவள்ளுவர் அரங்கில் நேற்று (28.12.2021) முற்பகல் 11 மணிக்கு நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்கள் அழைக்கப்பட்டிருந்தார்.
நிகழ்ச்சிக்கு வருகை தந்த திராவிடர் கழகத் தலைவரை, கல்லூரி முதல்வர் முனைவர் இரா.இராமன் மற்றும் பல்வேறு துறைத் தலைவர்களும், என்.சி.சி. அமைப்பின் அணிவகுப்பு மரியாதையுடன் வரவேற்று அழைத்துச் சென்றனர்.
திருவள்ளுவர் அரங்கமே இருபால் மாணவர்களால் நிரம்பி வழிந்தது.
தமிழ்மொழி வாழ்த்துடன் நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. தமிழ்த்துறை இணைப் பேராசிரியர் க.சேக்மீரான் அனைவரையும் வரவேற்று உரையாற்றினார்.
நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கிய கல்லூரி முதல்வர் முனைவர் இராமன் அவர்கள் திராவிடர் கழகத் தலைவரின் சிறப்பு அம்சங்கள் பற்றி விரிவாகவே பேசினார்.
"மக்களைச் சந்தித்தலிலும் அதிக சுற்றுப்பயணம் செய்ததிலும் காந்தியார், பெரியார் ஆகியோருக்குப் பின் ஆசிரியர் அவர்கள் மூன்றாம் இடத்திற்கு வரக்கூடியவர்.
காரைக்குடியில் நடைபெற்ற மாநாட்டில் 12 வயதிலேயே கலந்து கொண்டு பேசியவர்.
டில்லி, விஜயவாடா பல்கலைக் கழகங்களுக்கெல்லாம் சென்று சிறப்பு சொற்பொழிவு ஆற்றியவர்.
இராகு காலத்தில் ஹால் டிக்கெட் வாங்கி சிறந்த முறையில் தேர்ச்சி பெற்றவர். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் “கோல்டு மெடல்” பெற்றவர். அத்தகைய பேரறிஞர் நம் கல்லூரிக்கு வந்திருப்பது நமக்குப் பெருமை அளிக்கக் கூடியதாகும்.
எனது சொந்த ஊர் - தந்தை பெரியார் கடவுள் மறுப்பு வாசகங்களை அறிவித்த விடயபுரத்தையடுத்த எருக்காட்டூராகும்; - எங்கள் ஊருக்குத் தந்தை பெரியார் அய்ந்து முறை வந்திருக்கிறார்" என்று கல்லூரி முதல்வர் குறிப்பிட்டார்.
மாணவர்கள் மத்தியில் திராவிடர் கழகத்தலைவர் ஒரு மணிநேரம் உரையாற்றினார். அந்த உரையில் தெறித்த கருத்துக் கற்கண்டுத் துண்டுகள் மட்டும் இங்கே....
* தந்தை பெரியார் நினைவுநாள் என்பது ஒரு வரலாற்றுக் குறிப்பு நாள். இது ஒரு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி.
* தந்தை பெரியார் தொண்டு நமக்குக் கிடைக்கா விட்டால் இந்தக் கல்லூரியில் இவ்வளவு இருபால் மாணவர்கள் படிக்க வந்திருக்க முடியுமா?
* அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பு எதற்கு என்று சொல்லப்பட்ட காலம் ஒன்று இருந்தது.
இந்தக் கல்லூரியில் 5000 மாணவர்கள் படிக்கிறார்கள் என்றால் இதில் பெண்கள் மட்டும் 2000க்கு மேல் என்கிற போது - இது எத்தகைய கல்விப்புரட்சி!
* இந்த அரங்கத்திற்கு வரும் வரை ஏராளமான படிக்கட்டுகளை கடந்துதான் வந்தோம். நம் சமுதாய மக்களும் அப்படித்தான் பல படிகளைத் தாண்டித்தான் இங்கே கல்வி கற்க வந்துள்ளனர்.
* இந்தக் கேலரியில் முதலில் வந்த மாணவர்கள், கடைசியாக வந்த மாணவர்கள் அனைவருக்கும் அமர இடம் கிடைத்திருக்கிறது - இதற்கும் பெயர்தான் சமூக நீதி என்பது. (பலத்த கரவொலி)
* இந்தக் கல்லூரிக்கு தந்தை பெரியார் வந்து கருத்துரை வழங்கி இருக்கிறார்.
* அவர் உடலால் மறைந்திருக்கலாம். உணர்வால், கொள்கையால் நிறைந்திருக்கிறார்.
* டாக்டருக்காக யாரும் மருந்து சாப்பிடுவதில்லை; அது போலவே பெரியாருக்காக அவர் சொன்ன கருத்துகளை ஏற்கத் தேவையில்லை. நோய் தீர்க்க டாக்டர் எழுதிக் கொடுத்த மருந்தை வாங்கி சாப்பிடுகிறோம். அது போல மனிதர்களிடம் பிடித்த அறியாமை நோயை, அடிமைச் சிந்தனை நோயைப் போக்கிக் கொள்வதற்காக தந்தை பெரியார் கருத்துகளை ஏற்றுக் கொள்கிறோம்.
மருந்து வாங்கும் போது, அதில் இடம் பெற்று இருக்கும் தகவலைப் படிக்கிறோம். எக்ஸ்பைரி டேட் (Expiry Date) போடப்பட்டு இருக்கும். அந்தத் தேதியில் காலாவதியாகி இருந்தால், அதைப் பயன்படுத்த மாட்டோம்.
அதுபோலத் தான் காலத்தால் காலாவதியான கருத்துக்களை நாம் ஏற்கக் கூடாது என்பதுதான் தந்தை பெரியாரின் கருத்து. (பலத்த கரவொலி)
ரொம்ப காலமாக நம்பி வந்தது, கடைப்பிடித்து வந்தது என்ற காரணத்துக்காக ஒன்றை ஏற்கலாமா? சமாதானம் சொல்லலாமா?
மாற்றம் என்பதுதான் மாறாதது! மாற்றத்தை ஏற்றுக் கொள்வதுதான் பகுத்தறிவு.
* எதையும் நம்புங்கள் நம்புங்கள், என்பார்கள்.
எதையும் நம்பாதே நம்பாதே என்பார் பெரியார்.
நம்பினால் நடராஜா, நம்பாவிட்டால் எமராஜா என்று சொல்லி வைத்து விட்டார்கள்.
குடியாத்தம் கல்லூரியில் தந்தை பெரியார் பேசும் போது, யார் சொன்னாலும் நம்பாதீர்கள் என்றார்.
முதல் வரிசையில் அமர்ந்திருந்த ஒரு மாணவன் ‘நீங்க சொல்லுவதை நம்பலாமா?’ என்று கேட்ட போது ‘நான் சொன்னாலும் நம்பாதே’ என்று பளிச்சென்று பதில் சொன்னார் (பலத்த கரவொலி)
தொடர்ச்சி 7ஆம் பக்கம் பார்க்க...
அதிகக் கூட்டங்களில் பேசியதிலும் சரி, கூட்டங்களில் கேள்விகளுக்கும் பதில் சொன்னதிலும் சரி தந்தை பெரியாரை மிஞ்சியவர்கள் யாரும் இல்லை.
* தந்தை பெரியார் தனிப்பட்ட முறையில் யாருக்கும் எதிரியல்ல. தத்துவத்தைப் பொறுத்துதான் எதிர்ப்பு.
அனைவருக்கும் அனைத்தும் என்பதுதான் தந்தை பெரியாரின் கொள்கை (பேதமற்ற இடம்தான் மேலான திருப்தியான இடம் என்றவரும் அவரே! உள்ளதைப் பங்கிட்டு உண்பது - உழைப்பைப் பங்கிட்டு செய்வது என்பதுதான் அவர்தம் சமத்துவ சமதர்ம தத்துவம்)
* “மானமும் அறிவும் மனிதர்க்கு அழகு” என்றார். ஒரு மனிதனைப் பார்த்துத் தொடக்கூடாது - நெருங்கக் கூடாது என்பது காட்டுமிராண்டித்தனம், கயமைத்தனம் அல்லவா? அவனுடைய சுயமரியாதைக்கு, மானவுணர்வுக்கு விரோதம் அல்லவா?
மனிதன் என்றால் சுயமரியாதை இருக்க வேண்டும் என்பது தான் தந்தை பெரியாரின் கொள்கை. அதனால் தான் அவர் ஏற்படுத்திய அமைப்புக்கு “சுயமரியாதை இயக்கம்“ என்று பெயர் சூட்டினார்.
* மனிதன் என்றால் தன்மானமும், தன்னம்பிக்கையும் இருக்க வேண்டும். “நம்மால் முடியாதது வேறு யாராலும் முடியாது, வேறு யாராலும் முடியாதது நம்மால் மட்டுமே முடியும்” என்ற உறுதியும், உழைப்பும் இருந்தால் வெற்றி உங்கள் காலடியில் வந்து விழும். (பலத்த கரவொலி)
* எதுவும் என் கையில் இல்லை என்றால் எப்படி எதையும் முடிவு செய்வாய்?
* எதுவும் நம் கையில் இல்லை - தலை எழுத்துப் படிதான் நடக்கும் என்றால் இந்த ஒலி பெருக்கியும், வீடியோவும் கேமிராவும் எவன் செயல்? முப்பத்து முக்கோடி தேவர் என்கிறார்களே, அவர்களுக்கு இவையெல்லாம் தெரியுமா? (பலத்த சிரிப்பு)
* காற்றை வாயு பகவான் என்கிறார்கள். இப்பொழுது வாயு பகவானை மின் விசிறி மூலம் கிடைக்கச் செய்து விட்டோமே! மெதுவாகக் கூடச் சுற்ற வைக்கலாம். வேகமாகவும் சுற்ற வைக்கலாம், வாயு பகவான் நாம் இழுத்த இழுப்புக்கு வந்து விட்டானே! இதற்கு என்ன பதில்?
* நூற்றாண்டு நிறைவு கண்ட மறைந்த நமது நாவலர் நெடுஞ்செழியன்தான் ஒன்றை அடிக்கடி சொல்லுவார்.
அந்தக் காலத்தில் நெருப்பை உண்டாக்க சிக்கி முக்கிக் கல்லுதான். அதைக் கண்டுபிடித்தவன் அந்தக் காலத்து தாமஸ் ஆல்வா எடிசன்தான், சந்தேகமில்லை.
சுடுகாட்டுக்குப் பிணத்தை எடுத்துச் சென்று பிணத்தை எரியூட்ட வேண்டும் என்றால் வீட்டிலிருந்தே நெருப்பை ஒரு சட்டியில் வைத்து, வாழை மட்டையையும் இணைத்து எடுத்துச் செல்லுவார்கள். அதுசரி.
இப்பொழுதுதான் மின் மயமான சுடுகாடு வந்து விட்டதே! இப்பொழுதும் அதே நெருப்புச் சட்டியைத் தூக்கிச் செல்லுகின்றானே (பலத்த சிரிப்பு, கைதட்டல்) என்பார் நாவலர் நெடுஞ்செழியன்.
பழையன கழிதலும், புதியன புகுதலும் என்பதுதானே அறிவு வளர்ச்சி.
* நேரத்தில் கூட இராகு காலம், என்கிறான். தேர்வுக்கு ஹால் டிக்கெட் வாங்குவதற்குக் கூட நல்ல நேரம் பார்க்கிறான்.
எங்களைப் போன்ற பகுத்தறிவு வாதிகளுக்கு வசதியாகப் போயிற்று. அந்த இராகு காலத்தில் சென்றால், கூட்டம் இருக்காது. உடனே பெற்றுக் கொள்ள முடியும் என்பதால் அந்த இராகு கால நேரம் தான் நமக்கு வசதியான நேரமாகும். இதற்குப் பெயர்தான் பகுத்தறிவு என்பது.
அப்படித்தான் ராகு காலத்தில் நாங்கள் சென்று குறைந்த நேரத்தில் பெற்று வருவோம்.
ஆனால் நாங்கள் எண்ணிக்கையில் கொஞ்சம் பேர்தான் இருப்போம். நோபல் பரிசு பெற்றவர்கள் எண்ணிக்கையில் கொஞ்சம்பேர்தானே! (பலத்த கரவொலி)
எம கண்டம் என்கிறான். ஆசியா கண்டம் - ஆப்பிரிக்கா கண்டம் இருக்கிது. எங்கிருக்கிறது எமகண்டம்? (பலத்த சிரிப்பு)
கையில் விலங்கு போட்டிருந்தாலும், காலில் விலங்கு போட்டிருந்தாலும் எளிதில் கழற்றி விடலாம். மூடநம்பிக்கை என்ற விலங்கை மூளையில் அல்லவா பூட்டி இருக்கிறான். அதை அவ்வளவு எளிதாக அகற்ற முடியுமா?
* இந்திய அரசமைப்புச் சட்டத்தில் அடிப்படைக் கடமைகள் (Fundamental Duties) என்ற பகுதி இருக்கிறது - அதில் 51-கி (லீ) என்ற பிரிவு இருக்கிறது. ஒவ்வொரு குடிமகனும் பின்பற்ற வேண்டிய உரிமைகளை அது வலியுறுத்துகிறது. Spirit of Enquiry - எதையும் ஏன், எப்படி எதற்கு என்று கேள்வி எழுப்பி, அதன் அடிப்படையில் உண்மையைத் தேட வேண்டும்.
Reform என்பது பற்றியும் அந்தப் பகுதியில் சொல்லப்பட்டுள்ளது. மாற்றம், சீர்திருத்தம் பற்றி வலியுறுத்தப்பட்டுள்ளது.
ஆனால் நம் நாட்டில் என்ன நடக்கிறது? சயின்ஸ் படிக்கிறான். சந்திரனை ராகு, கேது என்ற பாம்பு விழுங்குகிறது என்கிறார்களே (ஒன்பது கிரகங்களில் இந்த இரு கிரகங்களும் கிடையாது என்பதுதான் விஞ்ஞானம்)
* திராவிடர் கழகத்தின் சார்பில், பெரியார் நாட்காட்டியை வெளியிட்டுள்ளோம். அதிலும் நல்ல நேரம் என்ற போட்டு இருக்கிறோம்.
‘என்ன நீங்கள் கூடவா?’ என்று அவசரப்பட வேண்டாம். நல்ல நேரம் என்று போட்டு... 24 மணி நேரமும் என்று அச்சிட்டுள்ளோம். (பலத்த கரவொலி)
உண்மை என்னவென்றால் இழந்த பணத்தைக் கூட சம்பாதித்து விடலாம். ஆனால் இழந்த நேரத்தை, காலத்தை சம்பாதிக்க முடியுமா?
* வெளிநாட்டுக்காரர் ஒருவரைப் பார்த்து எப்படி இருக்கிறீர்கள் என்று கேட்டால் “ஓகே ஃபைன்” என்பான்.
நம் நாட்டு மக்களைப் பார்த்து எப்படி இருக்கிறீர்கள் என்று கேட்டுப் பாருங்கள்.
“ஏதோ இருக்கேன்”
“காலத்தைத் தள்ளிக் கொண்டு போறேன்” என்பான் (பலத்த சிரிப்பு).
அவனுக்குக் காலம் போதவில்லை, இங்கோ ஏதோ போதாத ‘காலம்’
இந்த மனப்பான்மை மாற்றத்திற்கான பகுத்தறிவு மருந்துதான் தந்தை பெரியார்.
* நாம் படிப்பது அறிவைப் பெருக்கிக் கொள்ளத்தான். நல்ல பண்பாட்டை வளர்த்துக் கொள்ளத்தான்.
இருபால் மாணவர்களும் சேர்ந்து படிக்க வேண்டும் என்பதுதான் தந்தை பெரியார் கருத்து. அதே நேரத்தில் பாலியல் தொல்லை என்பது போன்ற போக்குகளுக்கு இடம் கொடுக்கக் கூடாது. ஆசிரியர்களும் குற்றமற்ற எடுத்துக்காட்டானவர்களாகத் திகழ வேண்டும்.
ஒரு குடும்பம் போல மனம்விட்டுப் பேசிப் பழக வேண்டும்.
* அய்ரோப்பாவில் கம்யூனிசம் என்ற பேய் பிடித்து ஆட்டியதாக சொன்னதுண்டு.
இங்கே தி.க. என்ற ‘பேய்’ பிடித்து ஆட்டுகிறது என்று நகைச் சுவையாக திராவிடர் கழகத் தலைவர் சொன்னபோது வெடி சிரிப்பு!
* தந்தை பெரியார் கல்லூரிக்குச் செல்லவில்லை - பல்கலைக்கழகத்தில் படிக்கவில்லை. தப்பினார். சுயசிந்தனை சூரியனாக ஒளி வீசுகிறார்.
* அருமை மாணவச் செல்வங்களே, நீங்கள் காட்டிய உற்சாகத்தை எங்களால் மறக்கவே முடியாது. நேரம்போனதே தெரியாமல் ஒரு மணிநேரத்துக்குமேல் பேசிக்கொண்டு இருக்கிறோம் என்றார் திராவிடர் கழகத் தலைவர். (ஒரு மணி நேரமும் கலகலப்பும் கைதட்டலும், வெடிச் சிரிப்புமாக அறிவு மணம் கமழும் தோட்டமாக மாநிலக் கல்லூரி மிளிர்ந்தது.)
நிகழ்ச்சிக்கு தலைமை வகித்த கல்லூரி முதல்வர் இறுதியாகப் பேசும் போது, மேலும் மேலும் பல தகவல்களை திராவிடர் கழகத் தலைவர் பற்றி சிறப்பாக எடுத்துக் கூறிதோடு, ஆசிரியர் நம் கல்லூரி வளாகத்துக்கு வந்த போது அவர் பாதம் தொட்டு வணங்க வேண்டும் என்று நினைத்தேன் என்று குறிப்பிட்டார்.
முதல்வர் சொல்லி முடித்தவுடன் ‘மன்னிக்க வேண்டும்’ என்ற பீடிகையுடன் கழகத் தலைவர் கூறியதாவது, “முதல்வர் சொன்னதை நான் ஏற்கவில்லை. நீங்களும் இது போன்றவற்றை ஏற்கக் கூடாது என்று கேட்டுக் கொள்கிறேன்” என்றார். (பலத்த கரவொலி)
இறுதியாக நன்றி உரையை தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் முனைவர் கி.ஆதிநாராயணன் வழங்கினார்.
இக்கல்லூரியில் முதுகலையில் பெரியாரியல் பாடம் வைக்கப்பட்டுள்ளது என்று கூறியபோது அனைவரும் மகிழ்ந்து கைதட்டி வரவேற்றனர்.
கலந்து கொண்ட தோழர்கள்
இந்நிகழ்ச்சியில் திராவிடர் கழக துணைத் தலைவர் கலி.பூங்குன்றன், கழக வெளியுறவுத்துறை செயலாளர் கோ.கருணாநிதி, மாநில மாணவர் கழக செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், கழக அமைப்புச் செயலாளர் வி.பன்னீர்செல்வம், மாநில பெரியார் சமூகக் காப்பணி அமைப்பாளர் சுரேஷ், பகுத்தறிவாளர் கழக பொதுச் செயலாளர் வெங்கடேசன், சென்னை மண்டல கழக செயலாளர் தே.செ.கோபால், தென்சென்னை மாவட்ட திராவிடர் கழக தலைவர் இரா.வில்வநாதன், செயலாளர் செ.ர.பார்த்தசாரதி, கோ.வீ.இராகவன் மற்றும் கழகத் தோழர்கள் கலந்து கொண்டனர்.