முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் உதவியாளராக பணியாற்றிய சண்முகநாதன் அவர்கள் நேற்று (21.12.2021) மறைந்தார். சென்னை தேனாம்பேட்டையில் அவரது இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு கழகத்தின் சார்பில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, மலர் மாலை வைத்து மரியாதை செலுத்தி குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். உடன் கழகத் துணைத்தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் ஆகியோர் இன்று (22.12.2021) காலை இறுதி மரியாதை செலுத்தினர். திராவிட மாணவர் கழக மாநிலச் செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், தென் சென்னை மாவட்டத்தலைவர் இரா.வில்வநாதன், மாவட்டச் செயலாளர் செ.ர.பார்த்தசாரதி, சென்னை மண்டல திராவிடர் கழக இளைஞரணி அமைப்பாளர் சோ.சுரேஷ் உள்ளிட்ட தோழர்கள் உடன் சென்றனர்.
கலைஞரின் நினைவிடத்தில் வைக்கப்பட்டுள்ள பேனாவின் முள்ளாக என்றைக்கும் வாழ்வார் சண்முகநாதன்!
- செய்தியாளர்களிடம் தமிழர் தலைவர்
மதுரை, டிச.22 முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களுடைய வேகத்திற்கு ஈடுகொடுப்பது என்பது சாதாரணமான காரியமல்ல; கலைஞரின் நினைவிடத்தில் அறிவுச்சுடர்போல் வைக்கப்பட்டுள்ள பேனாவின் முள்ளாக என்றைக்கும் வாழ்வார் சண்முகநாதன் என்று செய்தியாளர்களிடம் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் குறிப்பிட்டார்.
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் உதவியாளர் நேற்று (21.12.2021) மறைந்த சண்முகநாதன் உடலுக்கு இன்று (22.12.2021) இறுதி மரியாதை செலுத்திய திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களை சந்தித்தார்.
அவ்விவரம் வருமாறு:
உழைப்புத் தங்கமான
தோழர் சண்முகநாதன்
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களு டைய நிழலாகவும், அவர்களுடைய குறிப்பறிந்து எப்போது, எதை, எப்படி எவ்வண்ணம் செய்து முடிப்பதென்பதை அறிந்து, ஒரு அரை நூற்றாண்டு காலம், அவருக்கு ஒரு மிகப்பெரிய அங்கமாக ஆகியவர் நம்முடைய உழைப்புத் தங்கமான தோழர் சண்முகநாதன் அவர்கள்.
சண்முகநாதன் அவர்களுடைய உழைப்பு, கலைஞர் அவர்களுடைய வேகத்திற்கு ஈடு கொடுக்கின்ற தன்மையாகும். அவருடைய வேகமும், விவேகமும், யார் யாரிடம் எப்படி நடந்துகொள்ளவேண்டும் - கலைஞர் அவர்கள் எப்படியெல்லாம் உணர்வார் என்பதைப் புரிந்து, அவற்றையெல்லாம் மிகப்பெரிய அளவிற்குத் தெரிந்து செய்யக்கூடிய ஒருவராக அவர் இருந்தார்.
கலைஞருடைய வேகத்திற்கு ஈடுகொடுப்பது என்பது சாதாரணமான காரியமல்ல
கலைஞருக்காக அவர் செய்த தியாகங்களையும், கலைஞர் அவர்கள், சண்முகநாதனை தன்னுடைய பிள்ளைகளில் ஒருவரைப் போல் பாதுகாத்ததையும் அருகில் இருந்த நாங்கள் மிகத் தெளிவாக அறிவோம்.
50 ஆண்டுகாலம் கலைஞருடைய வேகத்திற்கு ஈடுகொடுத்ததென்பது சாதாரணமான காரியமல்ல. ஒப்பற்ற தொண்டு செய்தார்.
சில மாதங்களுக்கு முன்பு, கலைஞருடைய உதவியாளர் என்கின்ற முறையில், ஒரு புத்தகத்தை அவருக்குக் காணிக்கையாக்குகிறோம் என்று சொன்னபொழுது, அவருடைய உடல்நலம் குன்றியிருந்த நேரத்தில், அவர் ஒரு செய்தியை சொன்னார், ''நான் கலைஞருடைய கடிதங்கள் 9 தொகுதிகளை இதுவரை தொகுத்து வைத்துவிட்டேன். அது புத்தகமாக வெளிவரவிருக்கிறது. அது முடிந்தவுடன், நினை வலைகளை, நிறைய நிகழ்வுகளைப்பற்றி எழுத இருக்கிறேன்'' என்று சொன்னார்கள்.
அப்படிப்பட்டவரை இயற்கையின் கோணல்புத்தி நம்மிடமிருந்து பறித்து விட்டது. அவருடைய இழப்பு நமக்கு மிகப்பெரிய இழப்பு.
பேனாவின் முள்ளாக என்றைக்கும்
சண்முகநாதன் அவர்கள் திகழ்வார்கள்
கலைஞருடைய நினைவிடத்தில் ஒரு பேனா, அறிவுச்சுடர் போல வைக்கப்பட்டு இருக்கிறது, அந்த பேனாவின் முள்ளாக என்றைக்கும் சண்முகநாதன் அவர்கள் திகழ்வார்கள்.
எனவே, பேனாவைப் பார்க்கும் பொழுது, முள்ளில்லாத பேனாவாக இருக்க முடியாது. அந்த முள்ளாகவே என்றைக்கும் கலைஞர் அவர்களோடு வாழ்வார்கள். கலைஞர் அவர்களோடு, அவர்களுடைய வாழ்க்கை என்பது இணைந்த ஒன்று. அதை எவராலும் பிரிக்க முடியாது.
வலராற்றின் வைர வரிகள் - வரலாற்றினுடைய சிறப்புமிகுந்த பக்கங்கள்.
சண்முகநாதன் வாழ்ந்து கொண்டே இருப்பார்
கலைஞர் எழுத்தைப் படிக்கும் பொழுதெல்லாம், கலைஞருடைய உரைகளைப் படிக்கும்பொழுதெல்லாம் சண்முகநாதன் வாழ்ந்து கொண்டே இருப்பார்.
அவர் மறையவில்லை!
வாழ்க சண்முகநாதன்!
இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களிடையே கூறினார்.