திங்கள், 15 மார்ச், 2021

நடைபெறவிருப்பது வெறும் அரசியல் போராட்டமல்ல - சித்தாந்தப் போராட்டமே!தி.மு.க. தலைவர் வெளியிட்ட சிறப்பான தொலைநோக்குத் திட்டம்!


 தமிழ்நாட்டிலும் - புதுவையிலும் தி.மு.க. -காங்கிரஸ் அணிகளை வெற்றி பெறச் செய்வீர்!

திராவிடர் கழகப் பொதுக்குழுவில் தமிழர் தலைவர் முழக்கம்

கும்பகோணம், மார்ச் 15   நடக்க இருக்கும் சட்டப் பேரவைத் தேர்தல் என்பது - சமூகநீதி, மதச்சார் பின்மை கொள்கை உடைய தி.மு.க. அணிக்கும் - இவற்றிற்கு எதிரான பா.ஜ.க. - அ.தி.மு.க.வுக்கும் இடையில் நடக்கும் சித்தாந்தப் போராட்டமே - இதில், தி.மு.க., காங்கிரஸ், இடதுசாரி அணிகள் வெற்றி பெற உழைப்போம் என்று  முழங்கினார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

கும்பகோணம்: திராவிடர் கழகப் பொதுக்குழு

கடந்த 13.3.2021 அன்று கும்பகோணத்தில் நடைபெற்ற திராவிடர் கழகப் பொதுக்குழுவில்  முதல் தீர்மானத்தை முன்மொழிந்து தமிழர் தலைவர் திராவிடர் கழகத்  தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.

அவரது உரை வருமாறு:

பேரன்பிற்கும், பெருமதிப்பிற்கும் உரிய தோழர் களே! திராவிடர் கழகத்தினுடைய பொதுக்குழு முதன்முறையாக குடந்தை மாநகரில் நடைபெறுகிறது என்கிற பெருமை யைப் பெற்றதோடு, சிறப்பான வகையில் ஏற்பாடு செய்து,  அதற்கு ஏராளமான ஒத்துழைப்பைக் கொடுத்துக் கொண்டிருக்கக் கூடிய நம்முடைய மாவட்ட, மண்டல கிளைகள் சார்ந்த தோழர்களின் பெயர்களை சொன்னால் நேரமாகும் என்பதற்காக, அவ்வளவு பேரையும் நல்ல அளவிற்கு ஒருங்கிணைத்து ஏற்பாடு செய்து  வரவேற்புரையாற்றிய நம்முடைய மாவட்ட தலைவர் வழக்குரைஞர்  கு.நிம்மதி அவர்களே,

இந்தக் கூட்டத்தினுடைய தலைவர் மானமிகு செயலவைத் தலைவர் அருமை சகோதரர்

சு.அறிவுக்கரசு அவர்களே,

கழகத் துணைத் தலைவர் உள்பட இயக்கத்தி னுடைய முக்கிய பொறுப்பாளர்களே, மகளிரணி, இளைஞரணி, மாணவர் கழகம், வழக்குரைஞரணி, தொழிலாளரணி, மருத்துவரணி, வேளாண்மைத் துறை - விவசாய அணி  என்று பல்வேறு துறைகளி லிருந்து இங்கே பொதுக்குழுவிற்கு வந்திருக்கக் கூடிய அருமைப் பெரியோர்களே, நண்பர்களே!

நம் நெஞ்சங்கள் மகிழ்ச்சியால்,

அன்பால் நிரம்பி இருக்கிறது

இந்த அரங்கம் நிரம்பியிருக்கிறது. நம் நெஞ்சங்கள் அதைவிட மகிழ்ச்சியோடு, ஒருவருக்கொருவர் சந்திக்கின்றபொழுது, மகிழ்ச்சியால், அன்பால் நிரம்பி இருக்கிறது.

கடமை சிறப்பாக முன்மொழிந்து,வழிமொழிந்து நம்மையெல்லாம் கடமையாற்று என்று கட்டளை யிடுகிறது.

எனவே, மிகப்பெரிய ஒரு சோதனை காலத்தில், இயல்பாக இருக்க முடியவில்லை. மீண்டும் கரோனா என்ற தொற்று நோய் வந்துவிடுமோ என்கிற அச் சத்திலேதான், கட்டுப்பாடோடு நாம் அனைவரையும் சந்திக்கக்கூடிய இந்தக் காலகட்டத்தில்,  தேர்தல் வருகின்ற ஏப்ரல் 6 ஆம் தேதி அன்றைக்கு நடைபெறவிருக்கிறது.

கடந்த 10 ஆண்டுகாலமாக தமிழகம் பட்ட அவதியிலிருந்து ஒரு விடியலை நோக்கி நாம் போய்க் கொண்டிருக்கின்றோம் என்ற பெருமைக்குரிய ஒரு காலகட்டத்தை அடைவதற்கு ஒரு தீர்வு ஏற்படுகின்ற நாளாகத்தான் நாம் அந்தத் தேர்தல் நாளைப் பார்க்கிறோம்.

234 இடங்களும் நம்முடைய இடங்கள்

திராவிடர் கழகம் தேர்தலில் நிற்காத ஓர் இயக்கம்; திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணியில், தாய்க்கழகம் என்கிற முறையில், அது இணைந்திருந்தாலும்கூட, மற்ற கூட்டணித் தோழர் கள் பேச்சுவார்த்தை என்று வரும்பொழுது, ‘‘எங் களுக்கு எவ்வளவு இடங்கள்? எவ்வளவு இடங்கள்?'' என்றெல்லாம் கேட்டார்கள். இடங்கள் கேட்காத ஒரே இயக்கம் நம்முடைய இயக்கம்தான்.

அதற்கு ஒரே  ஒரு காரணம் உண்டு. என்ன அந்த காரணம் என்றால், 234 இடங்களும் நம்முடைய இடங்கள்.

எனவே, நாம் கேட்கவேண்டிய அவசியமே இல்லை - நாம் பெறவேண்டிய அவசியமே இல்லை. நாம் மக்களை ஆயத்தப்படவேண்டிய வைக்க  அவசியத்தில் இருக்கிறோம்.

எனவேதான், 234 தொகுதிகளிலும் வெற்றி பெறவேண்டும் என்கிற அந்த உணர்வோடு, நாம் கடமை செய்யக்கூடிய அந்த உணர்வை தாய்க் கழகமான திராவிடர் கழகம் ஏற்றிருக்கிறது.

லட்சியங்களைக் காப்பாற்றக்கூடிய

ஒரு போர்க்களம் தேர்தல் களம்!

நம்மைப் பொறுத்தவரையில்,  தேர்தலை ஒரு அரசியல் வாய்ப்பாக நினைக்கவில்லை. ஒரு போர்க் களமாக - கொள்கைப் போர்க்களாக - லட்சியங்களைக் காப்பாற்றக்கூடிய ஒரு போர்க்களமாக நாம் பார்க் கிறோம்.

அந்தப் போர்க்களம் இந்தக் காலகட்டத்தில், மிகக் கடுமையான ஒரு போர்க் களம். நேர்மையான எதிரிகள் இல்லாமல், சூழ்ச்சியையும், தந்திரத்தையும், வாய்மையைக் கைவிட்டு, பொய்மையை முதலிட்டு, செய்யக்கூடிய ஒன்றாக அமைந்திருக்கிறது.

எனவேதான், இந்தக் காலகட்டத்தில் மிக முக் கியமான வேண்டுகோளை மக்களுக்கு, தமிழ்நாட்டு வாக்காளப் பெருமக்களுக்கு வைக்கக் கடமைப்பட்டு இருக்கிறோம்.

பொதுவாக, அடுத்த தலைமுறையினுடைய வாழ் வைப்பற்றி கவலைப்படுகின்ற இயக்கம் திராவிடர் கழகம்.

மக்களுடைய வாழ்க்கை, அதுவும் குறிப்பாக, காலங்காலமாக அடிமைப்பட்ட மக்கள், உரிமைகள் மறுக்கப்பட்ட மக்கள், போராடிப் பெற்ற வெற்றிகள் எல்லாம் பொய்யாய், பழங்கதையாய் கனவாகப் போய் விடுமோ என்கிற கவலையோடு நாம் இந்தத் தேர்தலைப் பார்க்கிறோம்.

நம்முடைய பார்வைக்கும், நம்முடைய கவலைக் கும் தேர்தலிலே வேட்பாளர்களாக 234 தொகுதி களிலும் இருக்கின்றவர்களைவிட, நமக்கு அதிகம்.

நோயாளியைக் காப்பாற்றவேண்டும் என்ற எண்ணம், நோயாளிகளுடைய உற்றார் உறவினர் களுக்கும், படுத்திருக்கின்ற நோயாளிக்கு இருப் பதைவிட, நோயாளிக்குச் சிகிச்சை கொடுக்கிறாரே மருத்துவர் அவருக்கு அதிகமாக உண்டு. அந்த இடத்தில் நாம் இருக்கிறோம்.

இங்கே வந்திருக்கின்ற ஒவ்வொரும், ஒவ்வொரு கருஞ்சட்டைத் தோழரும், இதைப் பார்த்துக் கொண்டிருக்கின்ற இன உணர்வாளர்கள் ஒவ் வொருவரும் - கட்சியில்லை, ஜாதியில்லை, மத மில்லை - லட்சியம் ஒன்றுதான் நம்மை இணைக்கிறது என்று சொல்லக்கூடிய அளவில், மிகத் தெளிவாக இணைய வேண்டிய நேரம்.

எனவேதான், இந்தப் பொதுக்குழுவில், ஒரு பெரிய தீர்மானம் மிகவும் விளக்கமானது. இதற்கு மேலே இந்தத் தீர்மானமே ஒரு தன்னிலை விளக்கத்தை உள்ளடக்கமாகக் கொண்டிருக்கின்ற தீர்மானத்தை- நிரம்பியிருக்கிற அவையில் சிறப்பாக நிறைவேற்றி, குடந்தை  வரலாறு படைத்திருக்கிறது.

குடந்தை, பல திருப்பங்களை உருவாக்கி இருக்கிறது. மாணவர் கழகத்தை உருவாக்கியது  குடந்தைதான். இந்தக் குடந்தையில்தான் பல்வேறு சூழல்களில் வெற்றி பெற்றிருக்கிறோம்.

லட்சியங்களில் ஒருபோதும் சமரசம் செய்துகொள்ள மாட்டோம்!

நாம், தனி மனிதர் யாருக்கும் விரோதிகள் அல்ல. அவர்களுடைய லட்சியங்கள்தான் நமக்கு விரோ திகள். நட்பில் நாம் எப்பொழுதும் சமரசம் செய்து கொள்ளத் தயாராக இருக்கிறோம். லட்சியங்களில் ஒருபோதும் சமரசம் செய்துகொள்ள மாட்டோம் என்பதும் நமக்கு முக்கியம்.

கொள்கை வேறு - கூட்டணி வேறு என்று சொல்லுகின்றவர்களை நாம் மதிக்கமாட்டோம்.

கொள்கையும் ஒன்றுதான் -அதற்காகத்தான் இந்தக் கூட்டணி என்று சொல்கின்றவர்கள்தான் நமக்கு ஆயுதங்கள். அடையாளம் காட்டப்படவேண் டியவர்கள்.

அந்த வகையில் நண்பர்களே, இந்தத் தீர் மானத்தை, இந்த மாபெரும் அவையின் முன், செய்தி யாளர்கள்,  ஊடகவியலாளர் நண்பர்கள் அனைவரின் முன்னிலையிலும், அரசாங்கத்தின் காதுகளுக்கும் சரியாகப் போய்ச் சேரக்கூடிய வகையிலே, இந்தத் தீர்மானத்தை நான் முன்மொழிகிறேன்.

வேட்பாளர்களைவிட,

நமக்கு அதிகமான அக்கறையும், கவலையும் உண்டு!

நீங்கள் அனைவரும் கடைசியாக எழுந்து நின்று, இந்தத் தீர்மானத்தை ஏற்கிறோம் என்று மனப்பூர்வமாகச் சொன்னால், இந்தத் தீர்மானத் திற்காக மற்ற வேலைகளையெல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு, வருகின்ற 6 ஆம் தேதிவரையில் தொடர்ந்து இதற்காகப் பணியாற்றுவது - வேட்பாளர்களைவிட, நமக்கு அதிகமான அக்கறையும், கவலையும் உண்டு என்ற உணர் வோடு நாம் பணியாற்றக் கடமைப்பட்டு இருக்கின்றோம் தோழர்களே!

பொதுக்குழுவில் தமிழர் தலைவரால் முன்மொழியப்பட்ட தீர்மானம்!

‘‘தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் ஆறாம் தேதி நடைபெற உள்ள 16 ஆவது சட்டப்பேரவைத் தேர்தலில், தி.மு.க. தலைமையில் காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய ஓர் அணியும், அ.இ.அ.தி.மு.க. தலைமையின்கீழ் பா.ஜ.க. உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய மற்றொரு அணியும் போட்டியிடுகின்றன.

‘‘போட்டியிடும் இரண்டு முக்கிய கூட்டணிகளில் தி.மு.க. தலைமையில் உள்ள முக்கிய மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி - கொள்கை லட்சியங்களால் உருவான கூட்டணி. மற்றொன்று அ.தி.மு.க.வின் தலைமை என்றாலும், பா.ஜ.க.வின் ஆணையை ஏற்று செயல்படும் கூட்டணி; கொள்கைக்கும், கூட்டணிக்கும் சம்பந்தமில்லை என்று பகிரங்கமாகவே சொல்வதற்கு வெட்கப்படாத ஒரு கூட்டணி.

வேறு சில அணிகளும் உண்டு என்றாலும், அவை கவனத்துக்கு உரியவையல்ல. மறைமுகமாக பா.ஜ.க. - அ.தி.மு.க. கூட்டணிக்கு வலிமை சேர்க்கவே உருவாக் கப்பட்ட கூட்டணியாகும்!

தி.மு.க. அணியைப் பொறுத்தவரையில் மதச் சார்பின்மை சமூகநீதி, சமதர்மம், சமத்துவம் பாலியல் நீதி, மாநில சுயாட்சி, மொழி, பண்பாட்டுப் பாதுகாப்பு, சமூக சீர்திருத்தம் ஆகிய முற்போக்குக் கோட்பாடுகளைக் கொண்ட அணியாகும்.

ஊழலற்ற - கருத்துரிமைக்குத் தங்கு தடையற்ற - அனைவருக்கும் அனைத்தும் என்ற சீரிய நோக்கோடு வளர்ச்சித் திட்டங்களை வகுத்து, மக்கள் நலக் கண்ணோட்டத்தோடு தேர்தல் களம் காணும் அணிதான் தி.மு.க. தலைமையிலான லட்சியக் கூட்டணியாகும்.

திராவிட முகமூடி!

அ.இ.அ.தி.மு.க. தலைமையில், பா.ஜ.க.வை உள்ளடக்கிய அணி என்று கூறப்பட்டாலும், அந்த அணியில் ஆதிக்கம் செலுத்தக் கூடியது மத்தியில் ஆளும் பா.ஜ.க. தலைமையிலான அணியே என்பது வெளிப்படையாகவே தெரிகிறது.

அண்ணாவின் பெயரையும், ‘திராவிட' என்ற கலாச்சாரப் பண்பாட்டுப் பெயரையும் கட்சியிலும் அண்ணாவின் உருவத்தைக் கொடியிலும் தாங்கியுள்ள அண்ணா தி.மு.க. - அதற்கு முற்றிலும் முரண்பாடான பா.ஜ.க.வுடன் முற்றிலும் இணைந்து செயல்படுவதும், அதன் அதிகாரத்துக்கும், கட்டளைக்கும் அடிபணிந்து செயல்படுவதும் எல்லோரும் அறிந்த வேதனையான உண்மையாகும்.

இந்திய அரசமைப்புச் சட்டத்தில் உறுதி செய்யப் பட்டுள்ள சமூகநீதி, மதச்சார்பின்மை, சோசலிசம், மாநில உரிமைகள் என்பவைகளுக்கு முற்றிலும் விரோதமான சித்தாந்தத்தையும், செயல்முறையையும் தனது இரத்த வோட்டமாகக் கொண்டு நொடிதோறும் நொடிதோறும் அதே சிந்தனையோடும், செயல்பாட்டோடும் இயங்கக் கூடியது ஆர்.எஸ்.எஸ்.சின் அரசியல் பிரிவான பாரதீய ஜனதா கட்சியாகும்.

தேர்தல் களத்தில் ‘லேடியா - மோடியா?' என்று சவால் விட்ட செல்வி  ஜெயலலிதா அம்மையாரின் ஆட்சியை அமைக்கப் போகிறேன் என்று மூச்சுக்கு முன்னூறு தடவை கூறிக் கொண்டிருக்கும் அ.இ. அ.தி.மு.க. அந்த வகையிலும் சுயநலம், பதவி வெறி, மடியில் கனம் இவற்றின் காரணமாக அக்கட்சியின் இரட்டைத் தலைமைச் சிக்கல், அக்கட்சிக்கே துரோகம் இழைக்கும் வேலையில் அ.இ.அ.தி.மு.க. செயல்பட்டு வருவதை அடையாளம் காண வேண்டும் என்று தமிழ்நாட்டு வாக்காளப் பெருமக்களை இப்பொதுக்குழுக் கேட்டுக் கொள்கிறது.

மாநில  சுயாட்சி, இருமொழிக் கொள்கை, தமிழ் உணர்வு, பண்பாடு, சமூகநீதி, மதச்சார்பின்மை, சமத் துவம்  பெண்ணுரிமை, மனிதநேயம் ஆகியவற்றில் அறிஞர் அண்ணாவின் ஆணித்தரமான லட்சிய நிலைப்பாடுகளைத் தூர எறிந்து, ‘‘ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே மதம், ஒரே கலாச்சாரம்'' என்ற கோட்பாடு உடைய ஆர்.எஸ்.எசை தாய் நிறுவனமாகக் கொண்ட பா.ஜ.க.வுடன் கூட்டணி என்பதையும் கடந்து பா.ஜ.க.வுக்கு அடிமை முறிச் சீட்டு எழுதிக் கொடுக்காத குறை என்கிற அளவுக்கு அ.இ.அ.தி.மு.க. ஆட்சி எல்லா வகைகளிலும் தோல்வியுற்றுச் சீரழிந்து கிடப்பதை இப்பொதுக்குழு தமிழ்ப் பெருமக்களுக்கு அடையாளம் காட்டுகிறது.

செம்மொழி நிறுவனத்தை சிதைத்தவர்கள்!

தமிழ் அடையாளம் காட்டி, தமிழ்நாட்டில் கால் பதிய வைக்கும் பா.ஜ.க. - முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் முயற்சியால் வந்த செம்மொழி நிறுவனத்தை சிதைத்து வருவதை மறந்துவிட முடியாது. தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர், திருவள்ளுவர், எம்.ஜி.ஆர். சிலை களை அவமதிக்கும் காவிகளான குற்றவாளிகள்மீது நடவடிக்கை எடுக்கத் தவறிய - தவறி வருகிற தமிழக அரசை மன்னிக்கவே முடியாது - கூடாது.

மாநில சுயாட்சிஎன்ற சுய உரிமைக் கொள்கையைக் கைவிட்டதால், மத்திய அரசிடமிருந்து - உரிமையுடன் கூடிய ஜி.எஸ்.டி.மூலம் பெறவேண்டிய நிதியைப் பெறுவதிலும், இயற்கைப் பேரிடர் காலங்களில் கிடைக்க வேண்டிய நிதியைப் பெறுவதிலும் பெருந்தோல்வியைக் கண்டும் வருவதால், தமிழ்நாட்டின் பொருளாதாரம் மிகவும் சீர்குலைந்துள்ளது.

தி.மு.க.  ஆட்சிக் காலத்தில் வெறும் 60 ஆயிரம் கோடி ரூபாயாக இருந்த கடன் தொகை அ.இ.அ.தி.மு.க. ஆட்சியில்   5.78 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்து விட்டது. ஒவ்வொரு குடிமகன் தலையிலும் ரூ.62 ஆயிரம் கடன் என்ற பரிதாப நிலைதான் தமிழ்நாட்டின் பொருளாதார நிலை! எதிலும் ஊழல் - ஊழல்  - நிர்வாகச் சீர்கேடு - சீர்கேடு இவற்றின் ஒட்டுமொத்த வடிவமே அ.தி.மு.க. ஆட்சி!

சமூகநீதிக்கு எதிரான ‘நீட்'

சமூகநீதியில் இந்தியத் துணைக் கண்டத்திற்கே வழிகாட்டும் - திராவிட இயக்கத்தின், தனித்தன்மை வார்ப்பான சமூகநீதிக் கொள்கையிலும், பா.ஜ.க.வின் சமூகநீதிக்கு எதிரான செயல்பாட்டினை எதிர்த்து வெற்றி பெறும் வலிமையை இழந்து தவிக்கிறது தமிழக அ.தி.மு.க. ஆட்சி.

சமூக நீதிக்கு எதிரான ‘நீட்' கூடாது என்று தமிழ்நாட்டு மக்களின் ஒட்டுமொத்த உணர்வின் அடிப்படையில் தமிழ்நாடு சட்டப்பேரவையில் இரு மசோதாக்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டும், தனது இணை பிரியாக் கூட்டணி கட்சியான ஆளும் பா.ஜ.க. அரசிடமிருந்து ஒப்புதல் பெற முடியாத நிலையில், ஒடுக்கப்பட்ட மக்களின், கிராமப்புற மக்களின், ஏழை, எளிய முதல் தலைமுறையாகப் படிக்கும் மக்களின் தலையில் பேரிடி விழுந்த நிலைக்குத் தள்ளப்பட்டு விட்டது!

அரசமைப்புச் சட்டத்துக்கும், நீதிமன்ற தீர்ப்பு களுக்கும் முற்றிலும் விரோதமாக மத்திய உயர்ஜாதி பா.ஜ.க. ஆட்சியால் கொண்டு வரப்பட்ட, ‘‘பொரு ளாதாரத்தில் நலிந்த உயர்ஜாதியினருக்கு 10 விழுக்காடு இட ஒதுக்கீடு'' என்பதை ஏற்கமாட்டோம் என்று ஒரு பக்கத்தில் சொல்லிக் கொண்டு,  இன்னொரு பக்கத்தில் அண்ணா பல்கலைக் கழகம் மற்றும் தமிழ்நாட்டில் உள்ள தமிழ்நாடு அரசுக்கு உட்பட்ட சில பல்கலைக் கழகங்களில் குறிப்பிட்ட பாடங்களில் அந்த 10 விழுக்காடு இட ஒதுக்கீட்டை அனுமதித்ததைவிட துரோகமும், மத்திய பா.ஜ.க. - அரசுக்கு நடுநடுங்கும் கோழைத்தனமும், தமிழ்நாட்டு மக்களால் எந்த வகையிலும் மன் னிக்கவேப்பட முடியாததாகும்.

மருத்துவக் கல்வியிலும் அகில இந்திய ஒதுக்கீட்டில் பிற்படுத்தப்பட்டோருக்குச் சட்டப்படி கிடைக்கவேண்டிய இட ஒதுக்கீட்டையும் கோட்டை விட்டிருக்கிறது அ.தி.மு.க. அரசு.

தமிழ்நாடு தேர்வாணையம் நடத்தும் தேர்வில் வெளிமாநிலங்களைச் சேர்ந்தவர்களும் போட்டியிட்டு வேலை வாய்ப்பைப் பெறலாம் என்ற மாபெரும் துரோகத்தைச் செய்திருப்பது அ.தி.மு.க. ஆட்சியே!

புதிய தேசியக் கல்விக் கொள்கை என்னும் பெயரால் இந்தி, சமஸ்கிருதத் திணிப்பு, குலக்கல்வித் திட்டம், பட்டப் படிப்புக்கும் நுழைவுத் தேர்வு இவற்றைக் கொண்டுவரும் பா.ஜ.க.வுடன் இணைந்து கூட்டுச் சேர்ந்து தேர்தலில் போட்டியிடும் துரோகமும், அவலமும் இன்னொரு பக்கம்!

ரூபாய் மதிப்பு இழப்பின் விளைவு!

‘ரூபாய் மதிப்பு இழப்பு' என்பதன்மூலம் இந்தியாவில் மிகப்பெரிய பொருளாதாரச் சீரழிவு, சிறு, குறு, நடுத்தரத் தொழில்கள் பெரும் அளவு பாதிப்பு, வேலையிழப்பு அதிகரிப்பு, மாநில அரசின் அதிகாரத்துக்கு உள்பட்ட விவசாயத் துறையில் மத்திய பா.ஜ.க. அரசு தலையிட்டு, தன்னிச்சையாக விவசாயிகளின் தலையில் மரண அடியைக் கொடுக்கும் வகையில் இயற்றப்பட்ட மூன்று சட்டங்கள் - அந்தச் சட்டங்கள் நிறைவேற்றப்பட துணை போன அ.இ.அ.தி.மு.க.வின் நிலைப்பாடு - காவிரியின் குறுக்கே மேகதாது அணையினைக் கட்ட கருநாடகத்துக்கு அனுமதி அளிக்கும் மத்திய பா.ஜ.க. அரசுடன் கூட்டணி.

தமிழ்நாட்டு மக்களின் உணர்வுக்கும், உரிமைக்கும் எதிரான வகையில் மீத்தேன், ஹைட்ரோ கார்பன், ஸ்டெர்லைட் ஆலை திறப்பு, எட்டுவழிச் சாலை போன்ற திட்டங்களை மத்திய அரசு முரட்டுத்தனமாக செயல்படத் துடிக்கும் முனைப்பு. அதனைத் தடுக்க முடியாத அ.தி.மு.க. அரசின் பரிதாபம்.

மோடியின் வாக்குறுதி எங்கே?

ஆண்டுக்கு இரண்டு கோடி பேருக்கு வேலை வாய்ப்புத் தருவதாகப் பொய்யான மத்திய மோடி அரசின் வாக்குறுதி,  இலட்சக்கணக்கான இளைஞர்கள் வேலையின்றித் தவிக்கும் ஒரு காலகட்டத்தில், அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை 58-லிருந்து 60 ஆக உயர்த்துவதென்பது தமிழ்நாடு அரசின் ஏமாற்றுத்தனம் (ஓய்வு பெறும் பணியாளர்களுக்கு அளிக்கப்படவேண்டிய கிராஜூட்டி போன்ற தொகையைக் கொடுக்க இயலாத பொருளாதார நெருக்கடியே காரணம் ஆகும்).

10 ஆண்டுகள் ஆட்சி அதிகாரத்தில் இருந்தும் சாதிக்க முடியாதவற்றை தேர்தல் நெருங்கும் நேரத்தில் வாக்காளர்களுக்கு அள்ளி வீசும் அ.தி.மு.க.வின் புதிய வாக்குறுதிகள் அசல் ஏமாற்றுத் தந்திரமே! வாக்காளப் பெருமக்கள் ஏமாறக் கூடாது.

இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகவுரையில் உறுதி செய்யப்பட்ட சோசலிசம் என்பதற்கு நேர் விரோதமாக அரசுத் துறைகளைக் கார்ப்பரேட்டுகளுக்குத் தாரை வார்ப்பது - அதன்மூலம் இட ஒதுக்கீட்டிற்கே இடமில்லாமல் செய்வது இன்னோரன்ன செயல்பாடுகளால் மத்திய பா.ஜ.க. அரசு மக்கள்முன் மிகப்பெரிய தோல்வியைக் கண்டு இருக்கிறது. அதன் தவறான அனைத்து நடவடிக்கைகளுக்கும் கண்ணை மூடிக்கொண்டு துணை போவது தமிழ்நாட்டை ஆளும் அ.இ.அ.தி.மு.க. அரசே!

இந்த நிலையில், அ.இ.அ.தி.மு.க. அதனோடு கூட்டுச் சேர்ந்த பா.ஜ.க. உள்ளிட்ட கட்சிகளையும் நடக்க இருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் படுதோல்வியை அடையச் செய்யவேண்டும் என்று தமிழக வாக்காளப் பெருமக்களை இப்பொதுக்குழு ஒருமனதாகக் கேட்டுக் கொள்கிறது. அ.தி.மு.க. வெற்றி பெற்றால் ஆட்சியில், அமைச்சரவையில் பா.ஜ.க. பங்கு ஏற்கும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ள கருத்து அபாயகரமானது என்பதை தமிழ்ப் பெருமக்கள் உணரவேண்டும்.

தனது கடந்த கால ஆட்சியின்போது அளப்பரிய சாதனைகளை நாட்டு மக்களுக்குச் செய்து வரலாறு படைத்தது தி.மு.க. ஆட்சியேயாகும்.

தி.மு.க. தலைவரின் தொலைநோக்குத் திட்டங்கள்

மேலும் பத்தாண்டு நோக்கு என்ற முறையில், தி.மு.க. தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களால் கடந்த 7 ஆம் தேதி திருச்சி சிறுகனூரில் அறிவிக்கப்பட்ட தொலைநோக்கு திட்டங்கள் என்பது - இந்தியத் துணைக் கண்டத்திற்கே வழிகாட்டக் கூடிய உன்னதமான மக்கள் வளர்ச்சிக் கண்ணோட்டத்தில் அறிவிக்கப்பட்ட- மிகவும் வரவேற்கத்தக்க ஒன்றாகும்.

எதிர்க்கட்சியாகவும் கடந்த 10 ஆண்டுகாலம் தி.மு.க. மிகச் சிறந்த முறையில் பணியாற்றி இருக்கிறது. தமிழ்நாட்டு உரிமைகளுக்காக ஏராளமான களங்களை அமைத்துப் போராடிப் போராடி புத்தெழுச்சியை ஏற்படுத்தியிருப்பதும் தி.மு.க.வே!

அதன் தலைமையில் அமைந்துள்ள காங்கிரஸ், இடதுசாரிகள் மற்றும் பல்வேறு முற்போக்குக் கட்சிகள், அமைப்புகள் மதச்சார்பின்மையிலும், சமூகநீதியிலும், தமிழ்நாட்டு மக்களின் வளர்ச்சியிலும் அக்கறையும், ஆர்வமும் கொண்ட ஜனநாயக முற்பாக்குச் சக்திகள் என்பதால், நடக்க இருக்கும் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் தி.மு.க. தலைமையிலான கூட்டணியை மிகப்பெரிய அளவில் வெற்றி பெறச் செய்வதற்கு  தமிழ்நாட்டு வாக்காளப் பெருமக்கள் பேராதரவைத் தருமாறு திராவிடர் கழகப் பொதுக்குழு கனிவுடன் கேட்டுக்கொள்கிறது.

நடக்கவிருக்கும் தேர்தல் என்பது வெறும் பொருளாதாரப் பிரச்சினையை மய்யப்படுத்துவது மட்டுமல்ல; அதைவிட முக்கியமாக காலங்காலமாய்ப் போராடிப் பெற்ற சமூகநீதிக் காப்பு - மதச்சார்பின்மையைக் காக்கும் ஓர் அணி  - மதச்சார்பு - சமூக அநீதி எனும் மற்றொரு அணி என்ற இந்த இரு அணிகளுக்கிடையிலான சித்தாந்தப் போராட்டம் என்பதையும் மனதிற்கொள்ள வேண்டும் என்றும், சமதர்ம, சமூகநீதி, மதச்சார்பின்மை - நாட்டு வளர்ச்சி உள்ளிட்ட கொள்கை வெற்றி பெற தி.மு.க. அணிக்கே வாக்காளிக்க வேண்டுமாய் இப்பொதுக்குழு கேட்டுக்கொள்கிறது.

மண்ணின் மைந்தர்களான மக்களை மத ரீதியாக, ஜாதி ரீதியாக பிரித்து, சிறுபான்மையினர் குடியுரிமையின்றியும் வாழவேண்டும் என்ற கொள்கையுடைய ஆர்.எஸ்.எஸ். - சங் பரிவார் - பா.ஜ.க. உள்ளிட்ட  வெறுப்பை வளர்க்கும் சக்திகளான இந்தப் பிற்போக்குச் சக்திகள், கட்சிகள் தமிழ் மண்ணில் தலையெடுக்க அனுமதிக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருக்க வேண்டுமாயும் இவற்றிற்குத் துணை போகும் அ.இ.அ.தி.மு.க.வையும் அதன் கூட்டணியையும் படுதோல்வியுறச் செய்யவேண்டும்; அதற்கு ‘ஆக்கப்பூர்வ மாற்று தி.மு.க. கூட்டணியே' என்பது அதன் கொள்கை திட்டங்களே சான்றாகும். தி.மு.க. அணியின் வெற்றி என்பது வெகுமக்கள் நலவாழ்வின் வெற்றி என்பதையும் மனதிற்கொண்டு வாக்களிக்குமாறு இப்பொதுக்குழு தமிழக வாக்காளப் பெருமக்களை முக்கியமாகக் கேட்டுக் கொள்கிறது.

ஆட்சி மாற்றம் தேவை என்பது வெறும் காட்சி மாற்றத்திற்காக அல்ல; நம் இனத்தின் மீட்சிக்கான மாற்றாக - விடியலாக அமையவேண்டும் என்ற பொறுப்புணர்ச்சி காரணமாகவே இந்த வேண்டுகோளை வாக்காளப் பெருமக்கள் முன் வைக்கிறோம்.

வெல்லட்டும் திராவிடம்!

புதுச்சேரி மாநிலத்தில்...

அடுத்து இன்னொரு பகுதி தீர்மானத்தில்,

பக்கத்தில் இருக்கின்ற புதுச்சேரியில் நான்கே முக்கால் ஆண்டுகாலம் நடைபெற்ற ஒரு நிலையான நல்லாட்சியைக் குறுக்கு வழியில் கவிழ்த்த பா.ஜ.க.வுக்கும் நீண்ட காலம் பதவிகளை அனுபவித்துவிட்டுக் கடைசி நேரத்தில், முதுகில் குத்தி கட்சிக்குத் துரோகம் இழைத்தவர்களுக்கும் தக்க பாடம் கற்பிக்கும் வகையில் புதுச்சேரி மாநிலத்தில் காங்கிரஸ் - தி.மு.க. கூட்டணியைப் பெரு வெற்றி பெறச் செய்யவேண்டுமாய் புதுச்சேரி மாநில வாக்காளப் பெருமக்களை இப்பொதுக்குழு கனிவுடன் கேட்டுக்கொள்கிறது.''

தீர்மானத்தை இந்த அவையில்  அனைவரின் முன்பும் இதை நான் முன்மொழிவதில் மகிழ்ச்சியடைகிறேன்.

வெற்றிக் கரவொலியாக அமையவேண்டும்!

அடுத்து, வெற்றிக் களத்திலே சந்திக்கக் கூடிய ஒரு வாய்ப்பை இந்தத் தீர்மானம் நமக்கு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானமாக நிறைவேறியிருக்கிறது.

உங்களின் கரவொலியின்மூலமாக இதனை நீங்கள் வழிமொழிகிறீர்கள் என்று ஏற்றுக்கொள்கிறோம்.  இதனுடைய ஒலி வெற்றிக் கரவொலியாக அமையவேண்டும். 

நன்றி, வணக்கம்!

இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் திராவிடர் கழகப் பொதுக்குழு தீர்மானத்தை முன்மொழிந்து உரையாற்றினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக