வெள்ளி, 19 மார்ச், 2021

குருசாமி, அசோக்குமார் மறைவு

கனடா, அமெரிக்கா ஆகிய இரு நாடுகளில் நமது தொழில்நுட்பக் கல்லூரிகளுடன் இணைப்பு ஏற்படுத்தும் திட்டங்கள் வெற்றிகரமான வகையில் நிறைவேறின என்ற மகிழ்ச்சியோடு தாயகம் திரும்பினோம்.

குருசாமி

சென்னை விமான நிலையத்திலிருந்து நாங்கள் திரும்பியபோது, ஏராளமான கழகக் குடும்பத்தினரின் பாசமழையில் நனைந்தேன் என்றாலும், 23.7.1995 அன்று நண்பர் குருசாமி மறைவு என்கிற பேரிடி தலையில் விழுந்தது!

நேரே அங்கு சென்று இறுதி மரியாதை செலுத்திக் கொண்டிருந்தபோதே, மற்றொரு மின்னல்தாக்கி நம் கண்களைப் பறித்ததுபோல, வார்த்தைகளால் வடிக்க முடியாத சோக நிகழ்ச்சியை ஓடிவந்து கூறினார்கள்.

விமான நிலையத்தில் நம்மை வரவேற்றுவிட்டு, தனது இரண்டு சக்கர வண்டியில் திரும்பிக் கொண்டிருந்த அயன்புரம் கழகத் தலைவர் அசோக்குமார் விபத்துக்குள்ளாகி சாவின் கோரப் பிடிக்கு ஆளானார் என்கிற செய்தி ஆயிரம் ஆயிரம் சம்மட்டிகளால் நம் இதயத்தைத் தாக்கி சுக்கல் நூறாக்கியது போன்ற நிலைக்கு ஆளானேன்.

அசோக்குமார்

அவரது குடும்பமே திராவிட இயக்க குடும்பம். அவரது தந்தையார் அப்பகுதி தி.மு.கழகத்தில் முக்கியப் பொறுப்பாளர்களில் ஒருவர். அவரது திருமணத்தை ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்  நடத்தி வைத்தேன் என்ற நினைவு என்னை மேலும் துன்பத் தீயில் தள்ளியது!

கொள்கை ஆர்வத்தில் என்றும் குறையாத ஆர்வம் படைத்தவர். ஏன், வெறிபிடித்த வேங்கைபோல் எப்போதும் இருப்பார். கழகப் பணிகளை பம்பரமாகச் சுழன்று செய்வார். கட்டுப்பாட்டில் ஒப்பற்ற ஓர் இராணுவ வீரர்! போராட்டங்களில் ஈடுபட்டுப் பூரித்தவர்!

அவரது இழப்பு என்னை வாட்டுகிறது வதைக்கிறது!

இரண்டு பெரும் இழப்புகள் _ அதுவும் ஒரே நேரத்தில். அவரது அன்பு வாழ்க்கைத் துணைவியார், அவரது பெற்றோர்கள், உடன்பிறந்தோர், உற்றார் உறவினர்களுக்கு எப்படி ஆறுதல் கூறுவது!

இதற்கு மேலும் என்னால் எழுத முடியவில்லை. வீர வணக்கம்! வீர வணக்கம்! குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து ‘விடுதலை’யில் அறிக்கை வெளியிட்டோம். அந்த அறிக்கையில்,

நமது பெரியார் கலையகத்தின் இயக்குநரும், முதுபெரும் பெரியார் பெருந்தொண்டரும், சுயமரியாதைக் கொள்கையிலும், உணர்விலும் சொக்கத்தங்கமாகத் திகழ்ந்தவரும், சுமார் 38 ஆண்டுகாலமாக நம்மிடம் மாறாத நட்புக் கொண்டவரும், பிரபல ஓவியர் _ புகைப்பட வல்லுநருமான தோழர் மா.குருசாமி அவர்கள் மாரடைப்பால், 23.7.1995 அன்று விடியற்காலை சுமார் 3:00 மணி அளவில் இயற்கை எய்தினார் என்கிற தகவல் அறிவிக்கப்பட்டபோது. நெருப்பில் விழுந்த நிலை எனக்கு ஏற்பட்டது! துன்ப துயரச் சூறாவளி என்னைத் தாக்கியது!

1957இல் எனது திருமணத்தை அய்யா அவர்கள் உறுதிப்படுத்திய காலகட்டத்தில் எனது சுற்றுப் பயணத்தின்போது, நன்னிலம் வட்டம் ஏனங்குடியில் முதன்முதலாக தோழர் குருசாமி அவர்களை நண்பர்கள் தங்கவேலு, திருவேங்கடம் ஆகியோருடன் சந்தித்தேன்.

அன்று முதல் அவரது நட்பு வளர்பிறையானது; அவரது மூச்சு, பேச்செல்லாம் கழகம்! பிறகு அவர் குடும்ப நலத்துறையில் அரசு தலைமை ஓவியராக (Chief Artist) பணியில் சேர்ந்த நிலையிலும், அஞ்சாது _ அயராது தான் ஒரு கருப்புச் சட்டைக்காரர் என்பதைக் காட்டத் தவறியதே இல்லை.

நமது அறிவு ஆசான் தலைவர் தந்தை பெரியார் _ அன்னை மணியம்மையார் அவர்களால் பெரிதும் விரும்பப்பட்ட தோழர், படப்பிடிப்பாளர். இயக்கத்தின் தலைமைக்கு அவர் இறுதிவரை விசுவாசி. கடமை தவறாத கருஞ்சட்டை இராணுவ வீரன்.

ஒவ்வொரு ‘விடுதலை’ மலரும், நாள்காட்டி, கழக டைரிகளும் அவரது ஆற்றலின் சான்றுகள்! சென்னை அய்யா நினைவகம் அவரது கடும் உழைப்பால் உருவானது!

புகைப்படக் காட்சிமூலம் உலகம் முழுவதும் அய்யாவின் பெருமையைப் பறைசாற்ற வேண்டுமென்றே உழைத்தவர்.

எனது எண்ணங்களை அவரிடம் கூறுவேன். அதற்கு வண்ணங்கள் கொடுத்து வெற்றியடையச் செய்யும் விற்பன்னர், அம்மேதை!

அவரைக் கடந்த சில ஆண்டுகள் இருதய நோய் தாக்கிய நிலையில்கூட, அவர் பெரியார் திடலில் வந்து தனது கடமையை அமைதி வழியில் ஆற்ற அவர் என்றும் தவறாதவர்.

அரசுப் பணியில் எத்தனையோ சோதனைகள் அவருக்கு! அய்யாவுக்குப் படம் எடுத்தார் என்று நெருக்கடி காலத்தில் குற்றம் சாட்டப்பட்டபோது மறுக்கவில்லை.

அவர் சிறப்பு இயக்குநராகி, பெரியார் திடலில் ‘பெரியார் கலையகம்’ கண்டார்! கடுமையாக உழைத்தே கண்மூடினார்!

கழகப் பொறுப்பாளர்கள் அனைவருடனும் அன்பு பூண்டவர். பாசப் பிணைப்புடன் செயல்பட்டவர். விமானத்திலிருந்து இறங்கிய உடனே என் கண்கள் குளமாகின! நேரே அவர் இல்லம் சென்று கருப்பு மெழுகுவத்திக்கு இறுதி மரியாதை, வீர வணக்கத்தைச் செலுத்தினேன். மயான பூமிவரை சென்றேன். அவர் உடல் எரிந்தது _ நம் அனைவர் உள்ளங்களைப் போல. அவரது துணைவியார் _ சகோதரி மாஸ்கோ _ சுயமரியாதைக் குடும்பமானதால் அந்தக் காலத்திலேயே ‘மாஸ்கோ’ என்று பெயர் சூட்டப்பட்டவர். மகன்கள் நெப்போலியன், கவுதமன், மைத்துனர் எழிலன், அவருடைய தொண்ணூறு வயதைத் தாண்டிய மாமியார் ஆகியோரைக் கண்டு ஆறுதல் கூற முடியாமல் தவித்தேன்!

என் செய்வது! பகுத்தறிவுவாதிகள் எதனையும் ஏற்றே பழக்கப்பட வேண்டியவர்கள்தானே!

நண்பர் குருசாமி, பெரியார் திடலில், பெரியார் கலையகத்தின் மூலம் நிரந்தரமாக வாழ்வார் என்பது தானே நம் எல்லோருக்கும் ஒரே ஆறுதல்! வீரவணக்கம்! குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் என்று அறிக்கை வெளியிட்டோம்.

- அய்யாவின் அடிச்சுவட்டில் கட்டுரையின் ஒரு பகுதி,

- உண்மை இதழ், 1-15.2.21


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக