செவ்வாய், 23 மார்ச், 2021

லக்னோவில் பெரியார் மேளா

உத்தரப்பிரதேச மாநிலத் தலைநகரான லக்னோவில் 1995, செப்டம்பர் 16, 17, 18 தேதிகளில் மிகப் பெரிய அளவில் “பெரியார் மேளா’’ நடத்த அம்மாநில பகுஜன் சமாஜ் அரசு அறிவித்தது. லக்னோவில் உள்ள மற்ற சமூக மாற்றப் பூங்காவில் தந்தை பெரியார், டாக்டர் அம்பேத்கர், நாராயண குரு, சாகு மகராஜ், ஜோதிபாபுலே ஆகியோரின் சிலைகள் திறப்பும் நடைபெற்றது. இதற்கு முழுக் காரணம் கன்ஷிராம் அவர்களே!

பார்ப்பன ஆர்.எஸ்.எஸ். சக்திகளின் எதிர்ப்பையும் மீறி, பல்வேறு விமர்சனங்களையும் பொருள் படுத்தாது சமூகநீதிப் போராளி கன்ஷிராம் அவர்களும், அம்மாநில முதல்வர் மாயாவதி அவர்கள் வரலாற்றுச் சிறப்பு மிக்க விழாவை ஆட்சி கவிழ்ந்தாலும் கவலை இல்லை என்று அறிவித்து, பணி செய்து வருவது பாராட்டுக்குரியது. அவர்களின் அழைப்பினை ஏற்று 14.9.1995 அன்று தனி ரயில் மூலம் கழகக் குடும்பத்தினர், முதியவர்களும், இளைஞர்களும், மகளிரும், குழந்தைகளும் என குடும்பம் குடும்பமாக பெரியார் திடலில் இருந்து ரயில் நிலையம் நோக்கி வந்தனர். அவர்களை வழியனுப்ப ரயில் நிலையம் சென்று வாழ்த்தி உரையாற்றுகையில், “லக்னோ பெரியார் மேளாவிலும், தந்தை பெரியார் பிறந்த நாள் விழாக்களிலும் கலந்துகொள்ள குடும்பம் குடும்பமாகத் திரண்டு வந்திருப்பதைப் பார்த்து பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். கன்ஷிராம் அவர்கள் என்னுடன் தொலைபேசியில் பேசியபோது, “பெரியார் கொள்கை காவிரி நதிக்கரையிலிருந்து கங்கை நதிக்கரைக்குப் பரவுவதில் மகிழ்ச்சி அடைகிறோம். திராவிடர் கழகத்தினர் கலந்து கொள்ளுவது எங்களுக்கு உற்சாகம் அளிக்கக் கூடியது’’ என்றார்.

லக்னோ விழாவிற்கு பிறகு 19ஆம் தேதி டில்லியில் நடக்கும் விழாவும் மிகச் சிறப்பானதாக இருக்கும். கழகத் தோழர்களே, உங்களுக்கு வேண்டிய உதவிகளைச் செய்ய உங்களுடன் கழகப் பொறுப்பாளர்களும் வருகின்றனர். வைக்கத்திலே அய்யா விழாவுக்கு சென்றபோது கடைப்பிடித்த அதே கட்டுப்பாட்டோடு பயணம் செய்து வாருங்கள். உங்களை லக்னோவில் சந்திப்பேன்’’ எனக் கூறி கழகத் தோழர்களை வழியனுப்பி வைத்தோம். அங்கிருந்த பகுஜன் சமாஜ் கட்சித் தோழர்களும் தனி ரயிலில் புறப்பட்டனர். அவர்களையும் வாழ்த்தி, கொடியசைத்து வழியனுப்பினேன்.

உத்தரப்பிரதேசம் லக்னோவில் 17.9.1995 அன்று நடந்த பெரியார் மேளாவில் லட்சோபலட்சம் மக்கள் குவிந்தனர். லக்னோவில் ‘டாலிபாக்’ பகுதியில் தங்கியிருந்த கழகக் குடும்பத்தினரை சந்திக்க காலை 11:00 மணியளவில் பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் கன்சிராம் தனது கட்சியினருடன் விருந்தினர் மாளிகைக்கு வந்தபோது, அவருடன் வந்த கட்சியினர், “பிதா பெரியார்கி ஜிந்தாபாத்! நேதாஜி வீரமணிகி ஜிந்தாபாத்! கன்சிராம்கி ஜிந்தாபாத்! எனும் முழக்கங்களை தோழர்கள் விண்ணதிர முழக்கமிட, கன்சிராம் அவர்கள் வரவேற்றும், அங்கிருந்த ‘அய்யா’ படத்திற்கு மாலை அணிவித்தும் மரியாதை செலுத்தினார். நமது பெரியார் சமூகக் காப்பு அணியினரின் அணிவகுப்பு மரியாதையையும் ஏற்றுக் கொண்டார்.

அதனைத் தொடர்ந்து, கழகத் தோழர்கள் கைகளில் கழகக் கொடிகளை ஏந்தி பேரணியாகப் புறப்பட்டனர். மக்கள் பிற பகுதிகளிலிருந்தும் ஊர்வலமாக வந்தனர். பேரணி ‘பேகம் அஸ்ரத்’ மகால் பூங்காவில் அமைக்கப்பட்டிருந்த மாபெரும் திடலை சென்றடைந்தது. பிற்பகல் 2:45 மணியளவில் ‘பெரியார் மேளா’ துவங்கியது. விழாவைத் தொடங்கி வைத்து உரையாற்றுகையில்,

“தந்தை பெரியார் ஒரு பிறவிப் போராட்ட வீரர். தென்னகத்தில் பிறந்த தந்தை பெரியாரின் விழாவை இங்கு கொண்டாடுவதன் மூலம் ‘உண்மையான சமுதாய ஒருமைப்பாடு’ ஏற்பட்டிருக்கிறது. வர்ணாசிரம அதர்மத்தின் பெயரால் ஏற்படுத்தப்பட்டிருந்த பிறவி ஏற்றத்தாழ்வை ஒழிக்கப் பாடுபட்டவர் பெரியார். காசியில் சம்பூர்ணானந்த் சிலையை பாபு ஜெகஜீவன்ராம் அவர்கள் திறந்தபோது, தீட்டாகிவிட்டது என உயர் ஜாதிப் பார்ப்பனர்கள் கங்கை நீரை ஊற்றிக் கழுவினர். அதைக் கண்டித்துக் குரல் கொடுத்தது திராவிடர் கழகம். வடநாடு அயோத்தி ராமனை மட்டுமே அறிந்திருந்தது. இப்போது ஈரோட்டு ராமசாமியையும், கன்சிராமையும் அறிந்திருப்பது வரவேற்கத்தக்கது’’ எனப் பல கருத்துகளை எடுத்துக் கூறினேன். அந்த ஆங்கில உரையை ‘டாக்டர் பிரிஜ்லால் வர்மா’ இந்தியில் மொழிபெயர்த்துக் கூறியதை மக்கள் உணர்ச்சி பொங்க கைதட்டி ஆரவாரம் செய்து மகிழ்ச்சியைக் காட்டினர்.

மாநில முதல்வர் மாண்புமிகு மாயாவதி உரையாற்றுகையில், “எதிர்ப்புகளைக் கண்டு எங்கள் அரசாங்கம் அஞ்சாது, பெரியாருக்குச் சிலை வைப்பதில் நாங்கள் பின்வாங்க மாட்டோம். காந்திக்கும், நேருவுக்கும் விழா எடுக்கும்போது, ஒடுக்கப்பட்ட மக்களுக்காகப் போராடிய தந்தை பெரியாருக்கு ஏன் சிலை வைக்கக் கூடாது? எங்கள் அரசாங்கம் பெரியார், அம்பேத்கர் கொள்கைகளைப் பின்பற்றி நடக்கும்’’ என்று குறிப்பிட்டார்.

நிறைவுரையாற்றிய பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் கன்சிராம் அவர்கள், “தந்தை பெரியார் சிலையை நிறுவுவதில் எவ்வளவு எதிர்ப்பு வந்தாலும் பின்வாங்க மாட்டோம். பெரியார் அம்பேத்கரின் கொள்கைகள்தான் வெகுமக்களின் உரிமைகளை ஈட்டித் தரமுடியும். அம்பேத்கர் வாழ்ந்த காலத்தில் அவரை தேசத் துரோகி என்றவர்கள் இப்போது, “பாரத ரத்னா’’ என்று போற்றுகிறார்கள். அதேபோல், இப்போது ‘பெரியார் மேளா’வைத் தூற்றுபவர்கள் நாளை வேறு மாதிரி பேசுவார்கள். இது அவர்கள் வழக்கம். நான் சாவதற்குள் பெரியார் சிலையை அமைத்துவிட்டுத்தான் சாவேன்!’’ என்றார்.

விழாவினை சிறப்பாக நடத்தியமைக்காக மாநில முதல்வருக்கும், கட்சியின் தலைவர் கன்சிராம் அவர்களுக்கும், சிவகங்கை ராமலக்குமி சண்முகநாதன் அம்மையாருக்கும் பொன்னாடை போர்த்தி, ‘அய்யா’ படம் பொறித்த நினைவுப் பரிசினை வழங்கி உரையாற்றினேன். வடபுலத்திலிருந்து கலந்துகொண்ட அனைத்துத் தலைவர்களுக்கும் நன்றி கூறினேன். இந்த ‘பெரியார் மேளா’ எல்லோர் மனதிலும் புதிய எழுச்சியை உருவாக்கியது.

- அய்யாவின் அடிச்சுவட்டில் கட்டுரையின் ஒரு பகுதி

-உண்மை இதழ், 1-15.3.21

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக