தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் ஆறாம் தேதி தமிழ்நாடு - 16ஆம் சட்டப் பேரவைக்கான பொதுத் தேர்தல் நடைபெற உள்ளது.

தி.மு.க. அணியில் மதச் சார்பின்மை முற்போக்குக் கட்சிகள் ஓர் அணியாகவும், அதிமுக தலைமையில் என்றாலும் முற்றிலும் பா.ஜ.க. கட்டுப்பாட்டுக்குப் பலியான அ.இ.அ.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகளும் இணைந்து இன்னொரு அணியாகவும்  தேர்தல் களத்தில் போட்டியிடுகின்றன. வேறு சில கூட்டணிகளும் உண்டு. என்றாலும் இந்த இரு கூட்டணிகள்தான் முக்கியமான அணிகள் என்பது கள யதார்த்த உண்மை.

மத்தியில் ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் பா.ஜ.க. என்பதை வெறும் அரசியல் கட்சியாகக் கருதிவிடக் கூடாது. அதன் தாய் நிறுவனமான ஆர்.எஸ்.எஸின் கொள்கையை மய்யமாகக் கொண்டு இயங்கும் அரசியல் அமைப்பு.

2014 முதல் இந்திய ஆட்சி அதிகாரம் அவர்களின் கைக்குப் போய் விட்டது. அரசமைப்புச் சட்டத்துக்கு விரோதமாகவே அதன் செயல்பாடுகள் இருந்து வருகின்றன.

குறிப்பாக அரசமைப்புச் சட்டத்தில் உறுதி செய்யப்பட்ட மதச் சார்பின்மை, சமூகநீதி, சோசலிசம் ஆகிய மூன்றுக்கும் நேர் எதிராகவே அதன் செயல்பாடுகள் இருந்து வருகின்றன.

450 ஆண்டு கால வரலாறு படைத்த சிறுபான்மையினரான இஸ்லாமியர்களின் வழிபாட்டுத் தலத்தை அயோத்தியில் 1992இல், அண்ணல் அம்பேத்கர் நினைவு நாளான டிசம்பர் 6ஆம் நாளைத் தேர்வு செய்து ஆர்.எஸ்.எஸ்., விசுவ ஹிந்து பரிஷத் உள்ளிட்ட சங்பரிவார், சாமியார்கள், பா.ஜ.க. முன்னணித் தலைவர்கள்  தலைமையில் திட்டமிட்டு இடித்துத் தரைமட்டமாக்கி விட்டனர். இந்தக் கலவரத்தின் அடிப்படையில் இந்து - முஸ்லிம் என்ற பிரச்சினையைப் பெரிதாக்கி, பெரும்பான்மை மக்களான இந்துக்களின் கட்சியாக தன்னை காட்டிக் கொண்டு வருகிறது. அதையே தன் அடிப்படையாகக் கொண்டு ஆட்சியதிகாரத்தையும் செலுத்தி வருவது கண்கூடு.

ஆட்சிக்கு வந்த நிலையில் இந்துத்துவக் கோட்பாட்டின் அடிப்படையில் பசுவதைத் தடை சட்டத்தை முன்னிலைப் படுத்தினர். பசு பாதுகாப்பு என்ற பெயரில் தாழ்த்தப்பட்டவர்கள் மீதான தாக்குதலைத் தொடுத்தனர். உ.பி.யில் ஒரு இஸ்லாமியத் தோழர் வீட்டில் உள்ள குளிர் சாதனப் பெட்டியில் மாட்டுக் கறி இருந்தது என்று கூறி, வீட்டு உரிமையாளரான முதியவரை அடித்தே கொன்றனர்.

குடியுரிமைச் சட்டம் என்ற பெயரால் இஸ்லாமியர்களை இரண்டாம் நிலைக் குடிகளாக அடையாளப்படுத்தி வெளியேற்றும் கொடுமையும் அரங்கேற்றப்படும் நிலை.

பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் தாழ்த்தப்பட்டோர் தாக்கப்படுவதும், பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படுவதும் சர்வ சாதாரணமாகி விட்டன.

இந்த அராஜகத்தை தமிழ்நாட்டிலும் திணித்து, தாங்கள் காலூன்றிட வேண்டும் என்பதுதான் பா.ஜ.க.வின் கணக்கு - திட்டம்.

ஆனால் தமிழ்நாடு தந்தைபெரியாராலும், அவர்கள் கண்ட திராவிட இயக்கத்தாலும் பக்குவப்படுத்தப்பட்ட சுயமரியாதை மண்ணாகவும், பகுத்தறிவுச் சிந்தனை வேரோடிய நிலமாகவும் இருக்கும் காரணத்தால், அவர்கள் போடும் கணக்கு ஈடேற முடியாத நிலையில்,  திராவிடம் என்ற பெயராலும், அண்ணா என்ற பெயராலும் நடமாடும் அண்ணா திமுக என்ற கட்சியை வசப்படுத்தி, அதன்மீது குதிரை சவாரி செய்து, காலூன்றிப் பார்க்கத் திட்டமிட்டுள்ளது. பொருத்தமாகத் தேர்தல் வாய்ப்பு ஏற்பட்டுள்ளதால் இதுதான் சரியான சந்தர்ப்பம் என்று கூறி - ஆளும் அ.இ.அ.தி.மு.க. அமைச்சர்களின் ஊழல்களை இலாவகமாகக் கையில் எடுத்துக் கொண்டு, அதைக் காட்டிக் காட்டியே அச்சுறுத்தி, அ.இ.அ.தி.மு.க.வை ஆட்டிப் படைக்கும் எஜமானனாகவே ஆகி விட்டது பா.ஜ.க.

தமிழ்நாட்டில் தி.மு.க., அ.இ.அ.தி.மு.க. என்ற நிலைப்பாட்டில் அ.இ.அ.தி.மு.க.வைக் கபளீகரம் செய்து, இரண்டாவது பெரிய கட்சியாக பா.ஜ.க. தமிழ்நாட்டில் பவனி வர வேண்டும் என்பது அவர்கள் போட்டுள்ள திட்டமாகும்.

இந்த நிலையில் தான் கும்பகோணத்தில் 13.3.2021 அன்று கூடிய திராவிடர் கழகப் பொதுக் குழுவில் தீர்மானமாக ஒன்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

நடக்க இருக்கும் தேர்தல் வெறும் அரசியல் போராட்டமல்ல - சித்தாந்தப் போராட்டம் என்று மிகவும் சரியாகவே அடையாளப்படுத்திக் காட்டியுள்ளது.

சமூக மதச் சார்பின்மை - சமூகநீதி என்பதற்கும் - இவைகளுக்கு எதிரான இன்னொரு கோட்பாடுகளுக்கும் இடையே நடக்கும் போராட்டம் என்பதைத் தீர்மானம் தெளிவுபடுத்தியுள்ளது.

1971இல் நடைபெற்ற தேர்தல் எப்படி மதவாதத்துக்கும், மதவாதஎதிர்ப்புக்கும் இடையிலான ஒன்றாக நடைபெற்று, இதுவரை தமிழக வரலாறு காணாத பெரு வெற்றியை தி.மு.க. பெற்றதோ, அத்தகைய வெற்றியை இந்தத் தேர்தலிலும் தி.மு.க. அணி பெற வேண்டும்.

பாசிச பா.ஜ.க. - அதன் எடுபிடியான அ.இ.அ.தி.மு.கவைத் தோற்கடித்து தி.மு.க. அணியை வெற்றி பெறச் செய்ய வேண்டும் - வெறும் ஆட்சி - காட்சி மாற்றமல்ல - மீட்சிக்கான நடவடிக்கைகள் என்பதைத் தமிழக வாக்காளப் பெரு மக்கள் உணர்ந்து செயல்பட வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறோம்.