திங்கள், 20 மே, 2019

ஆக. 27 இல் சேலத்தில் திராவிடர் கழக பவள விழா மாநாடு மகளிருக்கென்று போதிய நேரம் அளிக்கப்படும்!

மகளிர் பணிகள் வீறுகொண்டு எழட்டும் - எதிர்ப்புகள் நொறுங்கட்டும்!


கழக மகளிரணி, மகளிர் பாசறை மாநில  கலந்துரையாடலில் தமிழர் தலைவரின் வழிகாட்டும் உரை


தொகுப்பு: மின்சாரம்




சென்னை, மே 16  எதிர்ப்புகள் எழ எழத்தான் நம் பணிகள் வீறுகொண்டு எழும். மகளிர் பங்கு சிறப்பாகத் தொடரட்டும் என்றார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

சென்னையில் நேற்று (15.5.2019) முற்பகல் பெரியார் திடலில் நடைபெற்ற திராவிடர் கழக மகளிரணி, மகளிர் பாசறைக் கூட்டத்தில் உரையாற்றுகையில் அவர் குறிப் பிட்டதாவது:

தமிழர் தலைவர் உரையின் வீச்சுகள்


தமிழ்நாடு தழுவிய அளவில் அனைத்து மாவட்டங்களி லிருந்தும் வருகை தந்திருப்பது மகிழ்ச்சியை அளிக்கிறது.

***


ஆறு மாதங்களுக்கு ஒருமுறை இத்தகு கூட்டங்கள் நடத்தப்படவேண்டும்.

***


நீங்கள் பேசவேண்டும்; நாங்கள் கேட்கவேண்டும்


இத்தகு கூட்டங்களில் மகளிராகிய நீங்கள் பேச வேண்டும் - நாங்கள் கேட்கவேண்டும்; பெண்கள் பேச்சை ஆண்கள் கேட்க ஆரம்பித்தால், குடும்பமும், நாடும் சிறந்தோங்கும்.

***


மகளிரணி, மகளிர் பாசறை அணிகளைப் பலப் படுத்தவேண்டும்.

பொறுப்பாளர்கள் மாதம் ஒருமுறை வீடுகளுக்குச் சென்று சந்திக்கவேண்டும்.

5 பேர் இருந்தால் ஒரு கிளை என்று ஆரம்பித்துவிடலாம்.

***


ஏச்சுகளைக் கண்டு அஞ்சாதீர்!


முகநூலில் திட்டி எழுதினால், அதனை அலட்சியப் படுத்துங்கள். நம் நாட்டுப் பொது வாழ்வில் இவை எல்லாம் இயல்புதான். அன்னை மணியம்மையார் சந்திக்காத வசவுகளா? இழிவுகளா? நமது தலைவர் அம்மாவை நினைவுக்குக் கொண்டு வாருங்கள் - சரியாகிவிடும்!

***


கழகத்திற்குப் பெண் பேச்சாளர்கள் தேவை. பெண் களுக்குப் பேச்சுப் பயிற்சி - கொள்கை விளக்கப் பயிற்சி அளிக்கப்படும்.

***


திராவிடர் கழகம், பொதுவுடைமைக் கட்சி, ஆர்.எஸ்.எஸ்., இம்மூன்றும் 1925 ஆம் ஆண்டில் ஒரே காலகட்டத்தில் தோற்றுவிக்கப்பட்டவை.

***


திராவிடர் கழகமும் - ஆர்.எஸ்.எசும் நேரிடையாக எதிர் எதிர் சித்தாந்தங்களைக் கொண்டவை.

***


அவர்கள் ஜாதி பாதுகாக்கப்படவேண்டும் என்பவர்கள் - நாமோ ஜாதி மறுப்பாளர்கள், ஒழிப்பாளர்கள்.

***


அவர்களின் கொள்கை பெண்ணடிமை - நமது கொள்கையோ பெண்ணுரிமை.

ஆர்.எஸ்.எஸில் பெண்களைச் சேர்ப்பதில்லை. அதுதோன்றி 11 ஆண்டுகளுக்குப் பிறகுதான் ஆர்.எஸ்.எஸில் பெண்கள் அமைப்புத் தோன்றியது.

***


குழந்தை ஒரு பிரச்சினையா?


குழந்தை இல்லாவிட்டால், அது ஒன்றும் குறையில்லை. பெற்ற குழந்தைக்கும், வளர்ப்புக் குழந்தைக்கும் என்ன வேறுபாடு? நம் மனதைப் பொறுத்ததுதான்.

நாயைக் கொஞ்சுகிறான், தனக்குப் பிறக்காத குழந் தையைக் கொஞ்சக்கூடாதா? என்று கேட்டவர் பெரியார்.

***


பெரியார் செய்த புரட்சி


1908 ஆம் ஆண்டிலேயே தனது வீட்டில் சிறு வயதிலேயே கணவனை இழந்த பெண்ணுக்கு மறுமணம் செய்து வைத்துப் புரட்சியைச் செய்தவர் பெரியார்.

***


தம் வீட்டுப் பெண்களைப் பொது வாழ்க்கைக்குக் கொண்டு வந்தவரும் அவரே!

***


பெண்ணுரிமை என்று வரும்போது திருவள்ளு வரைக்கூட விட்டு வைக்காதவர் பெரியார்.

***


பெண்களுக்கு நகைகள் எதற்கு? வீண் அலங்காரம் எதற்கு? மக்கள் தொகையில் சரி பகுதியாக உள்ள பெண்களை ஒதுக்கலாமா? அது சமுதாய வளர்ச்சிக்குக் கேடல்லவா? பெண் அடிமை என்பது மனித சமுக அழிவு என்பதை நாம் நினைக்காததாலேயே, வளர்ச்சி பெறவேண்டிய மனித சமுகம் பகுத்தறிவு இருந்தும் நாள்தோறும் தேய்ந்து கொண்டே வருகிறது (- தந்தை பெரியார், குடிஅரசு', 16.6.1935).

***


அது என்ன ஹவுஸ் ஒய்ஃப்? ஹவுசுக்கு எதற்கு ஒய்ஃப்?

***


மகளிருக்கான மருத்துவ உதவிப் பணிகள் தொடங்கப்படும், அது முக்கியமே!

***


பொறுப்புகளை மாற்றுவது எல்லோருக்குமே பயிற்சி தேவை என்பதற்காகத்தான். மற்றபடி பணிகளை சிறப்பாகவே செய்துள்ளனர்.

***


ஆகஸ்டு 27 இல் சேலத்தில் கழகத்தின் பவள விழா மாநாடு


சேலத்தில் திராவிடர் கழகத்தின் பவள விழா வரும் ஆகஸ்டு 27 அன்று நடக்கவுள்ளது. இரு நாள்கள் நடைபெறக் கூடிய அம்மாநாட்டில் மகளிருக்கென்று போதிய நேரம் ஒதுக்கப்படும்.

***


எதிர்ப்புகள் நமக்கு உரமூட்டும்


அன்னை மணியம்மையார் நூற்றாண்டையொட்டி கருத்தரங்குகள் மாவட்டந்தோறும் நடைபெறவேண்டும். ***

எதிர்ப்புகள் வரட்டும், அதுவே நம் எழுச்சிக்கு உரமூட்டும். அடிக்க அடிக்கவே பந்து எழும்பும்!

***


வீட்டுக்கு வீடு பெரியார் பிஞ்சு வாங்கப்படவேண்டும்; நம் பிள்ளைகளுக்குத் தலைசிறந்த கருத்துப் பயிற்சி இது.

***


மாவட்டங்களில் நான் சுற்றுப்பயணம் வரும்போது மகளிர்க்கு நேரம் ஒதுக்கப்படும்.

***


ஒரு முக்கிய காலகட்டத்தில் நம் இயக்கப் பணிகள் வீறுகொண்டு நடைபெற வேண்டும், நடைபெறட்டும்! கழகத் தலைவரின் உரையில் தெறித்த வழிகாட்டும் முத்துகள் இவை!

பாரத புண்ணிய பூமியின்' இலட்சணம் இதுதான்!


பாருக்குள்ளே நல்ல நாடு எங்கள் பாரத நாடு' என்று பாதாம்பால் சாப்பிட்டு சாரீரத்தைத் தூக்கிப் பாடுவதில் ஒன்றும் குறைவில்லை.


உலகில் பெண்களுக்கு எதிராக வன்முறைகள் தாண்டவமாடும் நாடுகளின் வரிசையில் இந்தப் பாரத புண்ணிய பூமி'க்கான மகத்தான இடம் என்ன தெரியுமா? முதலிடம்! முதலிடம்!! முதலிடம்!!!


அமெரிக்க ஆய்வு நிறுவனம் 20.6.2018 அன்று வெளியிட்ட புள்ளி விவரம் என்ன கூறுகிறது?


நாள்தோறும் போர்ப் பீரங்கிகள் வெடித்துச் சிதறும் ஆப்கானிஸ்தான் மற்றும் சிரியா நாடுகளில்கூட பெண்கள் இந்தளவு சீரழிக்கப்படவில்லை.


கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் இந்தியாவில் 2,78,886 பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவானதில் தண் டனை பெற்றவர்கள் 30 விழுக்காட்டுக்கும் குறைவே!


சட்டமன்றத்தில் அமர்ந்து கைப்பேசியில் ஆபாசப் படங்கள் பார்த்ததிலும் அறநெறி பேசும் பா.ஜ.க.வுக்குத்தான் முதலிடம். அந்தக் கூத்து  கருநாடக மாநில சட்டப்பேரவையில் நடந்தது. 3 பேர் மாட்டிக் கொண்டனர். இவர்களாவது சட்டமன்ற உறுப்பினர்கள். அமைச்சர்களே ஆபாசப் படம் பார்த்த கதை தெரியுமா? குஜராத் பா.ஜ.க. அமைச்சர்கள் இருவர்தான் அந்தக் கேடு கெட்டவர்கள்.


***


543 உறுப்பினர்களைக் கொண்ட இந்திய நாடாளு மன்றத்தில் பெண் உறுப்பினர்கள் வெறும் 62 பேர்களே! (11 விழுக்காடு).


பின்தங்கிய நாடுகள் என்று கருதப்படுகின்ற ருவாண்டா, பொலிவியா, செஷல்ஸ், நமீபியா, பாகிஸ் தான், ஆப்கானிஸ்தான், ஈராக் போன்ற நாடுகளில்கூட பெண்களின் விழுக்காடு அதிகமே!


உலக அளவில் எடுத்துக்கொண்டால், நாடாளு மன்றத்தில் பெண் உறுப்பினர்கள் 22.4%, அய்ரோப்பாவில் 25.2%


ஆப்பிரிக்காவில் 22.6%


ஆசியாவில் 19%


அரேபிய நாடுகளில் 18%


இந்தியாவிலோ வெறும் 11%


இந்திய சட்டப்பேரவைகளிலும், நாடாளுமன்றத் திலும் பெண்களுக்கான இட ஒதுக்கீடு 30 விழுக்காடு அளிக்கப்பட வேண்டும் என்ற சட்ட முன்வடிவு 1996 முதல் நிலுவையில் உள்ளது என்பது வெட்கக்கேடே!


இதில் 'பாரத மாதா' என்ற பட்டப் பெயர் கிரீடம் வேறு!


நேற்று (15.5.2019) சென்னையில் நடைபெற்ற திராவிடர் கழக மகளிரணி, மகளிர் பாசறை மாநிலக் கலந்துரையாடல் கூட்டத்தில் இதுகுறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டதும் குறிப்பிடத்தக்கதாகும்.


-  விடுதலை நாளேடு, 16.5.19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக