புதன், 1 மே, 2019

நாடெங்கும் கூட்டமைப்பு இயக்கம் நடத்துவோம்! பொன்பரப்பியில் மறுவாக்கெடுப்பு நடத்துக!

 சமுகநீதிக்காக தொடங்கப்பட்டதாகக் கூறப்பட்ட பா.ம.க.   வெறும் ஜாதிய கட்சியாக, வன்முறைக் கட்சியாக மாறலாமா?
* ஜாதியை ஒழித்து சமத்துவம் படைப்போம்! மதவெறி மாய்த்து மனிதநேயம் காப்போம்!
கண்டன ஆர்ப்பாட்டத்தில் தமிழர் தலைவர் முழக்கம்!
சென்னை, ஏப்.24 பொன்பரப்பியில் வாக்களிக்க விடாமல் தடுத்து தலித் மக்கள்மீது வன்முறைத் தாக்குதலைத் தொடுத்து, அவர்களின் வீடுகளையெல்லாம் சூறை யாடிய போக்கைக் கண்டித்து மதச்சார்பற்ற முற் போக்குக் கூட்டணி சார்பில் விடுதலைச் சிறுத்தைகள் ஒருங்கிணைப்பில் சென்னை - வள்ளுவர் கோட்டம் அருகில் இன்று (24.4.2019) காலை 10.30 மணியளவில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.
அவரது உரை வருமாறு:
சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் விடுதலைச் சிறுத்தைகளின் கட்சித் தலைவர் எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் போட்டியிடுகிறார்.
அந்தத் தொகுதியில் பொன்பரப்பி என்ற கிராமத்தில் நடைபெற்ற வன்முறையின் பின்னணியில் பா.ம.க. இருந்திருக்கிறது என்பது பெரிதும் வருந்தத்தக்கது.
சமுகநீதிக்காக தோற்றுவிக்கப்பட்டதாகக் கூறப்பட்ட ஒரு கட்சி வெறும் ஜாதிய கட்சி என்ற கீழிறக்கத்துக்கு வன்முறைக் கட்சி என்ற நிலைக்கு ஆளாகலாமா? ஒரு இளம் தலைவரும் வாக்குச் சாவடிகளைக் கைப் பற்றவேண்டும் என்று பேசலாமா? ஒரு காலகட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியுடனும், சகோதரர் திருமாவளவனுடனும் இணைந்து பணியாற்றுவதாகக் கூறப்பட்ட அந்தக் காட்சி வெறும் நாடகம்தானா?
பொன்பரப்பியில் வன்முறையைச் செய்தவர்கள் யார் என்பதற்குப் பெரிய ஆய்வுகள் தேவையில்லை. யாருடைய வீடுகள் இடித்து நொறுக்கப்பட்டன?
இரு சக்கர வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன?
காயமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக் கப்பட்டவர்கள் யார்? என்பதை வைத்தே வன்முறையை நடத்தியவர்கள் யார் என்பது தெரியும். பெண்களை இழிவுபடுத்திப் பேசுவது எல்லாம் விரும்பத்தக்கதுதானா?
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சின்னமான பானைகளைப் போட்டு உடைத்தவர்கள் யார்?
தாழ்த்தப்பட்ட மக்கள் வாக்களிக்க முடியாமல் தடுக்கப்பட்டுள்ளார்கள். எனவே, தேர்தல் ஆணையம் பொன்பரப்பியில் மறுவாக்குப் பதிவுக்கு ஆணையிட வேண்டும்.
அரசியல் கட்சிகள் தங்களுக்குள் கூட்டணி வைத்துக் கொள்வதைப் புரிந்துகொள்ள முடிகிறது - தேர்தல் ஆணையத்தோடு கூட்டணி என்பது சரியானதுதானா? நியாயமானதுதானா? ஆட்சிகள் மாறினால் காட்சிகளும் மாறாதா? யாருக்கு வீழ்ச்சியாகும் என்று சிந்திக்க வேண்டாமா?
வன்முறை என்பது இருமுனையும் கூர்மை கொண்ட ஆயுதம் என்பதை வன்முறையாளர்கள் புரிந்துகொள்ளவேண்டும்.
சகோதரர் திருமாவளவனை ஆதரித்து ஜெயங் கொண்டத்திற்கு நான் பிரச்சாரத்திற்குச் சென்றேன். சமுக வலைதளங்களிலும் செய்திகளை உலவ விடுகிறார்கள். வீரமணி, நீ இங்கு பேசிவிட்டு உயிரோடு திரும்பிப் போக முடியாது'' என்பதுதான் அந்தச் செய்தி.
ஜெயங்கொண்டத்திற்குச் சென்று பேசினேன்; உயி ரோடுதான் திரும்பினேன். பொதுவாழ்க்கையில் வந்த எங்களுக்கு உயிர் வெல்லமல்ல.
ஆனாலும், இந்த அளவுக்கு ஒரு கட்சி போக வேண்டுமா? இந்தப் போக்கிலிருந்து அவர்கள் விடுபட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
ஜாதி ஒழிப்புக்காக அய்ந்தாண்டுகள் பிரச்சாரம் செய்து, போராட்டம் நடத்தி ஒரு நல்ல நிலையை உருவாக்கினால், அய்ந்தாண்டுகளுக்கு ஒருமுறை வரும் தேர்தல் ஜாதியை உயிர்ப்பித்து விடுகிறதே.
பா.ம.க.வோடு இந்து முன்னணிகளும் கைகோர்த்து இந்த வன்முறையில் ஈடுபட்டுள்ளார்கள். ஏற்கெனவே இந்தப் பகுதியில் நந்தினி என்னும் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த ஒரு பெண் பாலியில் வன் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப் படவில்லையா? அதனை எதிர்த்து திராவிடர் கழகம் போராட்டம் நடத்தவில்லையா? குற்றவாளிகள் தண் டிக்கப்படவில்லையே!
தேர்தல் முடியட்டும், "ஜாதியை ஒழிப்போம், சமத்துவம் படைப்போம்; மதவெறியை மாய்ப்போம், மனிதநேயம் காப்போம்!'' என்ற முழக்கம் வீதியெல்லாம் நாடெல்லாம் கேட்கச் செய்வோம். அனைத்துக் கட்சி யினரும் இணைந்து ஒரு கூட்டு இயக்கமாக - முயற்சியாக செயல்பட திராவிடர் கழகம் திட்டமிட்டுள்ளது.
அனைத்துக் கட்சியினரும் ஆதரவு தரவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்றார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
தலைவர்கள் கண்டன உரை
பொன்பரப்பியில் ஜனநாயகப் படுகொலை! வாக் களிக்க விடாமல் தடுத்து தலித் மக்கள்மீது கொலை வெறித் தாக்குதல்! ஜனநாயகத்தைப் பாதுகாக்க மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று (24.4.2019) காலை சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் நடைபெற்றது.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் தலைமையில் நடைபெற்ற இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, தி.மு.க. செய்தித் தொடர்பாளர் மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.எஸ்.இளங்கோவன், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி துணைத் தலைவர் ஆர்.தாமோதரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன், மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா, ம.தி.மு.க. தீர்மானக் குழுத் தலைவர் ஆவடி அந்திரிதாஸ், திராவிட இயக்க தமிழர் பேரவைத் தலைவர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன், திரைப்பட இயக்குநர் கரு.பழனியப்பன் ஆகியோர் இந்த ஆர்ப் பாட்டத்தில் பங்கேற்று கண்டன உரை நிகழ்த்தினர்.
பங்கேற்றோர்


திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், துணைப் பொதுச்செயலாளர் ச.இன்பக் கனி, தாம்பரம் மாவட்ட கழகத் தலைவர் ப.முத்தையன், பொழிசை கண்ணன், சோ.சுரேஷ், க.ச.க.இரணியன், சேகர், கோ.வீ.ராகவன், தென்சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன், பூவை.செல்வி, பூவை.மணிமாறன், வெங்கடேசன், தளபதி பாண்டியன், நித்யாகுமார், வடமணப்பாக்கம் வி.வெங்கட்ராமன், வெ.கார்வேந்தன், சு.மோகன்ராஜ், மா.குணசேகரன், தாம்பரம் சி.லட்சுமிபதி, பரசுராமன், பாலு, ராஜன், இயக்குநர் லெனின் பாரதி, மற்றும் பலர் திரளாகப் பங்கேற்றனர்.
- விடுதலை நாளேடு, 24.4.19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக