திங்கள், 20 மே, 2019

மாநில மகளிரணி, மகளிர் பாசறை கலந்துரையாடல் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள்!

திராவிடர் கழக மகளிரணி, மகளிர் பாசறைக்குப் புதிய பொறுப்பாளர்கள்


மாநில அளவில் சுற்றுப்பயணம்  செய்து மாவட்ட அளவில் புதிய பொறுப்பாளர்கள் நியமனம், பிரச்சாரம், குடும்பக் கலந்துரையாடல் நடத்திட முடிவு


ஜாதி மறுப்புத் திருமண இணையர்களுக்குப் பிறந்த குழந்தைகளுக்கு தாயின் ஜாதியை எடுத்துக்கொள்ளலாம் என்ற நீதிமன்றத் தீர்ப்புக்கு வரவேற்பு
சென்னை, மே 15 திராவிடர் கழக மாநில மகளிரணி மற்றும் மகளிர் பாசறைக்குப் புதிய பொறுப்பாளர்கள் நியமனம் மற்றும் செயல்பாடுகள் குறித்து முக்கிய முடிவுகள் தீர்மானிக்கப்பட்டன.

திராவிடர் கழக மகளிரணி மகளிர் பாசறையின் மாநிலக் கலந்துரையாடல் கூட்டம் சென்னை பெரியார் திடலில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்களின் தலைமையில் இன்று (15.5.2019) புதன்கிழமை காலை 11 மணிக்கு நடைபெற்றது.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:

தீர்மானம் எண் 1:

இரங்கல் தீர்மானம்


திராவிடர் கழகத்தின் பொருளாளராக, மகளிரணி, மகளிர் பாசறைகளுக்கு வழிகாட்டியாக இருந்து அரும்பணியாற்றிய திராவிடர் கழகப் பொருளாளர் டாக்டர் பிறைநுதல் செல்வி அவர்களின் மறைவிற்கு இக்கூட்டம் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது.

தீர்மானம் எண் 2:

மகளிர் பணிகள்


பெண்கள் மற்றும் மாணவிகள் தொடர்பான முக்கிய பிரச்சினைகளை மய்யப்படுத்தி, துண்டறிக்கைகள் வெளியிடுவது, பிரச்சாரம் செய்வது, தேவைப்படும் சமயத்தில் போராட்டங்களில் ஈடுபடுவது என்று தீர்மானிக்கப்படுகிறது.

தீர்மானம் எண் 3:

மகளிரணி - மகளிர் பாசறைக்குப் புதிய பொறுப்பாளர்கள்


திராவிடர் கழக மகளிரணி, மகளிர் பாசறை செயல்பாடுகளை ஊக்குவித்து மாநிலம் தழுவிய அளவில் பலம் வாய்ந்த அணிகளாகக் கட்டமைப்பது என்றும், அதற்கு முழுமையான அளவில் நேரம் ஒதுக்கிப் பணியாற்றிட மாநிலப் பொறுப்புகளுக்குக் கீழ்க்கண்டவர்களை நியமிப்பது என்றும் தீர்மானிக்கப் படுகிறது.

மகளிரணி மாநில செயலாளர்:


தகடூர் தமிழ்ச்செல்வி


மகளிரணி மாநில அமைப்பாளர்:


பேராசிரியர் கண்மணி, தேவக்கோட்டை


மாநில மகளிர் பாசறை மாநில செயலாளர்:


வழக்குரைஞர் மணியம்மை


மாநில மகளிர் பாசறை மாநில அமைப்பாளர்:


சட்டக்கல்லூரி மாணவி மதிவதனி


சென்னை மண்டல மகளிரணி தலைவர்:


தங்க.தனலட்சுமி


சென்னை மண்டல மகளிரணி  செயலாளர்:


ஓவியா
தீர்மானம் எண் 4:

அன்னை மணியம்மையார் நூற்றாண்டு விழாவை வெகுசிறப்பாக நடத்த முழு ஒத்துழைப்புத் தருதல்


அன்னை மணியம்மையார் நூற்றாண்டு விழாவை கழக மகளிரணி, மகளிர் பாசறையினர் முன்னின்று சிறப்பாக நடத்துவதற்கு முழு ஒத்துழைப்பு அளிப்பது என்று தீர்மானிக்கப்படுகிறது.

தீர்மானம் எண் 5:

குடும்பங்களுக்கிடையே கொள்கை உறவைப் பலப்படுத்துக!


மாவட்டம் தோறும் சென்று மகளிரைச் சந்தித்து கலந்துரையாடி பொறுப்பாளர்களைப் புதிதாக நிய மித்து, மகளிர் அணி மற்றும் பாசறையின் பணிகளை மேம்படுத்துவது என்று தீர்மானிக்கப்படுகிறது. குடும்பக் கலந்துரையாடல் கூட்டங்களை நடத்தி, குடும்பங்களுக் கிடையே கொள்கை உறவைப் பலப்படுத்துவது என்றும் தீர்மானிக்கப்படுகிறது.

தீர்மானம் எண் 6:

ஜாதி மறுப்புத் திருமணத்தில் பிறந்த குழந்தைக்கு தாயின் ஜாதியைப் பயன்படுத்தலாம் என்ற வரவேற்கத்தக்க தீர்ப்பு


தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப் பட்டியைச் சேர்ந்த அற்புதராஜ் - இளவரசி ஆகியோர் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அசோக் குமார், கங்குலி மற்றும் நீதிபதி ஜோதிமணி ஆகியோர் அடங்கிய அமர்வு - ஜாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டவர்களின் குழந்தைகள் தந்தையின் ஜாதியைச் சேர்ந்தவர்களாகத்தான் கருதப்படுவர் என்று தீர்ப்பு வழங்கியது (2008, டிசம்பர்).

இந்தத் தீர்ப்பை மாற்றவேண்டும் என்று திராவிடர் கழக மகளிர் அணி மாநாடுகளில் தொடர்ந்து தீர்மானங் களை நிறைவேற்றி வலியுறுத்தி வந்துள்ளோம்.

அதற்கு வெற்றி கிடைக்கும் வகையில், மகாராட்டிர மாநிலத்தைச் சேர்ந்த பட்வாய்க் என்ற எம்.பி.பி.எஸ். படிக்கும் மாணவி தொடர்ந்த மேல்முறையீட்டில் - மும்பை உயர்நீதிமன்றத்தின் நாக்பூர் கிளை  நீதிபதிகள் சுனில் சுக்ரே, புஷ்பா கனேடிவாலா ஆகிய நீதிபதிகள் அடங்கிய அமர்வு தெரிவித்துள்ள தீர்ப்பு (21.4.2019) வரவேற்கத்தகுந்த சிறப்பான ஒன்றாகும்.

இந்தியாவில் ஆணாதிக்க சமுக அமைப்பு உள்ளது. இப்போது மாறி வருகிறது. நமது அரசமைப்புச் சட்டம் கூட சமத்துவம், நீதி மற்றும் சகோதரத்துவம் அடிப்படையில்தான் உள்ளது. ஆண் மற்றும் பெண்ணை நாம் சமமாகவே பாவிக்கிறோம். எனவே, ஜாதி கலப்பு தம்பதியினருக்குப் பிறந்த குழந்தைகள் தனது தாயாரின் ஜாதியையும்  பயன்படுத்தலாம்" என்று தீர்ப்பு வழங்கி இருப்பது தந்தை பெரியார் கொள்கைக்கு, திராவிடர் கழகத்திற்குக் கிடைத்த மாபெரும் வெற்றி என்று இக் கூட்டம் கருதி மகிழ்கிறது.

தீர்மானம் 7:

சட்டமன்றங்களிலும், நாடாளுமன்றத்திலும் பெண்களுக்கு 33 விழுக்காடு இட ஒதுக்கீடு தேவை


சட்டப்பேரவைகளிலும், நாடாளுமன்றத்திலும் பெண்களுக்கு  33 சதவிகித இட ஒதுக்கீடுபற்றி திருத்தம் ஒன்றை மாநிலங்களவை உறுப்பினர் தோழர் டி.கே.ரெங்கராஜன் (சி.பி.எம்.) கொண்டு வந்தபோது (7.2.2018) அத்திருத்தத்துக்கு எதிராக பி.ஜே.பி.யுடன் சேர்ந்து அ.தி.மு.க. உறுப்பினர்களும் வாக்களித்ததை இக்கூட்டம் வன்மையாகக் கண்டிக்கிறது.

1996 முதல் நிலுவையில் இருந்துவரும் இந்த சட்ட முன்வடிவை விரைவில் நிறைவேற்றுமாறு இக்கூட்டம் வலியுறுத்துகிறது.

- விடுதலை நாளேடு, 15.5.19

'தொய்வின்றி - தொடர்புகளோடு பணியாற்றுவோம்!'

மகளிரணி, மகளிர் பாசறைக் கூட்டத்தில் மகளிர் தெரிவித்த கருத்துகள் - ஆலோசனைகள்

1) மாநிலப் பொறுப்பாளர்கள் மாவட்டந்தோறும் சுற்றுப்பயணம் செய்து புதிய பொறுப்பாளர்களை நியமனம் செய்ய வேண்டும்.

2) குடும்பக் கலந்துரையாடல் கூட்டங்களை நடத்திட வேண்டும்.

3) ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு மகளிர் இல் லத்திலும் கலந்துரையாடல் நடத்தப்பட வேண்டும். (வருடத்தில் 10 கூட்டங்கள் நடக்க வாய்ப்பு உண்டே!)

4) மாணவிகளுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டு, அவர்கள் மூலமாகக் கல்லூரிகள், பல்கலைக்கழக மாணவர்களைச் சந்தித்து கலந்துரையாட வேண்டும்.

5) கதை சொல்லிகள் உருவாக்கப்பட்டு குழந்தைகளிடம் பகுத்தறிவுக் கருத்துகளை ஊட்ட வேண்டும். அப்படி சொல்லிக் கொடுத்தால் நம் பிள்ளைகள் பள்ளிகளில் அந்தக் கருத்துக்களை தங்களோடு படிக்கும் பிள்ளைகளிடம் கூறுவர். 6) மாணவிகளுக்கு தற்காப்புப் பயிற்சி அளிக்கப்பட வேண்டும்.

7) திருமணம் சுயமரியாதை முறையில் நடை பெற்றால் கூட மரணத்தின்போது மூடநம்பிக்கை களைத் திணித்து விட சிலர் குறியாக இருப்பார்கள், அதை தடுக்கப்பட வேண்டும்.

(திருவாரூர் மாவட்ட மகளிரணி தலைவர் மகேஸ்வரி கூறியதாவது எங்கள் பகுதியில் பாடைகளை மகளிரே தூக்கிச் செல்லுகிறோம். மூடநம்பிக்கைக்குச் சிறிது கூட இடம் தருவதில்லை என்றார். பலத்த கரஒலி!)

8) வீட்டில் பெரியார் கருத்துகளையும், கழக செயல்பாடுகளையும் பற்றிப்பேச வேண்டும். வீட்டில் பேசினால்தான் பிள்ளைகளுக்கு நம் கருத்துப் போய்ச்சேரும். இந்தப் பணியை நாம் செய்யாவிடில் இந்தத் தலைமுறையோடு நம் குடும்பங்களிலிருந்து கொள்கை வெளியேறி விடும்.

9) மகளிரிடம் கொள்கை சென்றடையாவிட்டால் குடும்பங்களிலோ, மக்களிடமோ கொள்கை போய்ச் சேராது.

10) கலை நிகழ்ச்சிகள், தெரு நாடகப் பயிற்சிகள் அளிக்கப்பட வேண்டும்.

11) பெண்களுக்கென்று தனியாக பெரியாரியல் பயிற்சிப் பட்டறைகள் நடத்தப்பட வேண்டும்.

12) கழகக்குடும்பத்தின் பிள்ளைகளை பெரியார் பிஞ்சு பழகு முகாமுக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

13) முகநூலில் கருத்துகளைத் தெரிவிக்க கழக மகளிரணியினர் முன்வரவேண்டும். கேவலமாக நம்மைத் தாக்கிப் பதிவு செய்வார்கள்; அவர்களின் நோக்கம் நம்மை முக நூலிலிருந்து வெளியேற்றுவதே - அதற்கு நாம் இடம் கொடுக்கக் கூடாது. அவர்கள் போலவே ஆபாசமாக பதிவு செய்யாமல், நமது கருத்து களைப் பதிவு செய்ய வேண்டும். படிப் பவர்கள் உண்மையை உணர்ந்து கொள்வார்கள்.

14) சிறிய சிறிய துண்டறிக்கைகளை வெளியிட வேண்டும் - வீட்டுக்கு வீடு கழக மகளிரணியினர் நேரில் சென்று கொடுக்க வேண்டும்.

15) நம் பிள்ளைகளுக்கு வாசிப்புப் பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும்.

16) கிராமப்புறப் பிரச்சாரம் தேவை. பெண்கள் பிரச்சாரம் செய்தால் கிராமத்து பெண்கள் வெளியில் வந்து காது கொடுத்துக் கேட்பார்கள். மகளிர் பாசறைப் பெண்களுக்கு பறையிசை கற்று கொடுத்து, கிராமப் பிரச்சாரத்தில் அவர்களைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

17) நமது அமைப்புகளுக்குள் தொடர்பு துண்டிக்கப்பட்டால் தொடர்பு பணியில் தொய்வு ஏற்பட்டுவிடும். கைப்பேசி காலத்தில் தொடர்புகள் எளிதே!

18) சுயமரியாதைத் திருமண நிலையக் கிளைகளை மாவட்டந்தோறும் ஏற்படுத்துவதால் பலதரப்பட்ட பொது மக்களின் தொடர்புகள் நமக்குக் கிடைக்கும்; அதன் வழி நம் இயக்கமும், கொள்கையும் பெரும் அளவில் பொது மக்களிடம் போய்ச்சேரும்.

19) பெண்களுக்கான உடல்நலம் பேணும் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட வேண்டும்.

20) மகளிர் தொடர்பான சமுகப் பிரச்சினை களைக் கையில் எடுத்துக்கொண்டு களத்துக்கு வந்து போராட வேண்டும்.

இவ்வாறு சிறப்பான கருத்துகளையும், திட்டங் களையும் ஆர்வத்துடன் எடுத்து வைத்தனர்.

கருத்துரைகள் - ஆலோசனைகள் வழங்கிய கழக மகளிர்

திராவிடர் கழக மாநில மகளிரணி, மகளிர் பாசறை ஆகியவற்றின் பொறுப்பாளர்கள் கூட்டம், சென்னை பெரியார் திடலில் நேற்று (15.5.2019) முற்பகல் 11 மணிக்குக் கூடியது. குமரி முதல் திருத்தணி வரை உள்ள அனைத்து மாவட்டங்களிலிருந்து மகளிர் அணி, மகளிர் பாசறை பொறுப்பாளர்கள் 150க்கும் மேற்பட்டவர்கள் வருகை தந்தனர்.

மகளிர் அணி, மகளிர் பாசறையை தமிழ்நாடு தழுவிய அளவில் வலுவாக உருவாக்குவதற்கான ஆலோசனைகள், இவ்வமைப்பினர் ஆற்ற வேண்டிய பணிகள் குறித்து விரிவாக எடுத்து வைத்தனர்.

திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் கூட்டத்திற்கு தலைமை வகித்தார். பெரியார் பிஞ்சு செ.சி.காவியன் கடவுள் மறுப்பு கூறினார். திராவிடர் கழக துணைப் பொதுச் செயலாளர் பொறியாளர் ச.இன்பக்கனி வரவேற்புரையாற்றினார். திராவிடர் கழக துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் தொடக்கவுரை ஆற்றினார். இக்கூட்டத்தின் நோக்கத்தையும் எடுத்துரைத்தார்.

தொடர்ந்து கழகப் பிரச்சாரச் செயலாளர் வழக்குரைஞர் அருள்மொழி, தஞ்சை கலைச்செல்வி, கோ.செந்தமிழ்ச்செல்வி, தகடூர் தமிழ்ச்செல்வி, சுயமரியாதைத் திருமண நிலைய இயக்குநர் பசும்பொன் செந்தில்குமாரி, கும்முடிப்பூண்டி செல்வி, திருச்சி அம்புஜம், குடியாத்தம் தேன்மொழி, கூடுவாஞ்சேரி நூர்ஜகான், வாலாஜாபாத் ரேவதி, திருச்சி சங்கீதா,  வடலூர் ரமா பிரபா, திருப்பத்தூர் கவிதா, ஈரோடு இராசேசுவரி, ஆவடி வனிதா, கும்முடிப்பூண்டி இராணி, பண்ருட்டி முனியம்மாள், லால்குடி குழந்தைதெரசா, திருச்சி சாந்தி, புதுச்சேரி விலாசினி, கோவை செல்வி, தேவக்கோட்டை பேராசிரியர் கண்மணி, ஒசூர் செல்வி, திருச்சி ரெஜினா பால்ராஜ், இசபெல்லா, மத்தூர் இந்திராகாந்தி, எண்ணூர் தென்னரசி, வேலூர் லதா, தஞ்சை வள்ளியம்மை, கோவை யாழினி, திருவாரூர் மாவட்டம் மகேஸ்வரி, வேலூர் ஓவியா ஆகியோர் உரைக்குப் பிறகு மாநில மகளிர் பாசறை செயலாளர் வழக்குரைஞர் மணியம்மை நன்றி கூற பிற்பகல் 2.40 மணியளவில் கலந்துரையாடல் சிறப்பாக நிறைவுற்றது.

தனித் தன்மையான கருத்துக்கள்

* கல்லூரி படிப்பு முடிந்தவுடனேயே பெண்களுக்கு திருமணம் செய்யக்கூடாது, குறைந்தது ஒரு ஆண்டு கழித்தோ அல்லது சொந்தமாக சம்பாதிக்கும் நிலை உறுதியான பிறகே திருமணம் நடக்க வேண்டும்.

* கோயில் திருவிழாக்களை ஆர்.எஸ்.எஸ்.காரர்களே முன்னின்று நடத்துவது போல ஒரு தோற்றத்தை ஏற்படுத்தி வருகின்றனர். பக்தியின் மூலம் தங்கள் அமைப்பை பொதுமக்களிடம் கொண்டு செல்லுகிறார்கள். இதனைத் தடுத்து நிறுத்த வேண்டும்.

*  பசு கோமாதா பிரச்சாரம், விளக்கு பூஜை என்ற பெயரால் பெண்களை ஒன்று திரட்டுதல் போன்ற வேலைகளில் இந்துத்துவா காவிக் காரர்கள் தீவிரமாக இறங்குகிறார்கள். இதனை அம்பலப்படுத்த வேண்டும்.

*  கழகக் குடும்பங்கள் அந்தந்தப் பகுதிகளில் ஒருங்கிணைந்து வாட்ஸ் அப் குரூப்களை உண்டாக்கிக் கொள்ள வேண்டும். அதனை விரிவாக்கிக் கொண்டே போகலாம்.

*  வீட்டுப் பணிகளில் வாழ்விணையர்கள் பணிகளைப் பகிர்ந்து கொள்ள வேண்டும். அந்த மனநிலை ஏற்பட்டால் வெளி உலகிலும் பாலியல் சமத்துவம் ஏற்படும் - அந்த நிலை ஏற்பட்டால் பாலியல் தொடர்பான வன்மங்களும் குறையும் என்பது போன்ற தனித் தன்மையான கருத்துக்களையும் மகளிர் எடுத்து வைத்தனர்.

திராவிடர் கழக மாநில மகளிரணி, மகளிர் பாசறை கலந்துரையாடலில் பங்கேற்றோர் (சென்னை பெரியார் திடல், 15.5.2019)

திராவிடர் கழக மகளிரணி மகளிர் பாசறையின் மாநிலக் கலந்துரையாடல் கூட்டம் சென்னை பெரியார் திடலில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்களின் தலைமையில் நேற்று (15.5.2019) புதன்கிழமை காலை 11 மணிக்கு நடைபெற்றது.

- விடுதலை நாளேடு, 16.5.19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக