வியாழன், 24 ஜனவரி, 2019

சென்னையில் கனிமொழி எம்.பி. உரை!

வாழ்நாளெல்லாம் நமக்காக உழைத்த தந்தை பெரியாருக்கு நாம் செய்யும் கைமாறாக மதச் சார்பற்ற அடையாளத்தைக் காத்திட அணிதிரள்வோம்!




சென்னை, ஜன. 21- “மதச்சார்பற்ற அடையாளத்தைக் காப்பாற்ற, ஜனநாயகத்தைக் காப்பாற்ற பெரியார் வழியில் திரள வேண்டும்“ என கனிமொழி எம்.பி. குறிப்பிட்டார்.

தந்தை பெரியாரின் 45 ஆம் ஆண்டு நினைவு தினப் பொதுக்கூட்டம் டிசம்பர் 24 - ஆம் தேதி சைதாப்பேட்டையில் தென்சென்னை மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் நடந்தது. இதில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர்

கி.வீரமணி, இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு, திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், பிரசாரக்குழு செயலாளர் அருள்மொழி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் தி.மு.க. மகளிரணிச் செயலாளரும், மாநிலங்களவை தி.மு.க. குழுத் தலைவருமான கனிமொழி சிறப்புரையாற்றினார்.

கனிமொழி எம்.பி. ஆற்றிய உரை வருமாறு:-

இன்று பெரியாரின் நினைவு நாளை கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். கொண்டாடிக் கொண்டிருக்கிறோம் என்ற வார்த்தையில் தவறில்லை என்று நினைக்கிறேன்.

ஏனெனில் இன்றும் கொண்டாடப்பட வேண்டிய கருத்தியலுக்கு சொந்தக் காரர் தந்தை பெரியார். இந்த சமூகத்தைக் காப்பதற்கு இந்த சமூகம் என்று சொல் லும்போது ஒட்டுமொத்த மனித சமூகத்தையும், இறை நம்பிக்கை உடையவர்கள் மொழியில் சொல்வதானால் ரட்சிக்கக் கூடியவர் பெரியார்.

எதிரிக்கும் சேர்த்துப் போராடியவர் பெரியார்!


அவர் யாரையும் தன் எதிரியாக கருதியதில்லை . தான் யாருக்கு எதிராக கருத்து களை வைக்கிறாரோ, யாரை எதிர்த்துப் போராடுகிறாரோ அவர் களைக் கூட வெறுக்காத ஒரு தலைவர் பெரியார். நான் எதிரிக்கும் சேர்த்துதான் போராடுகிறேன் என்பதை உணர்ந்து கொண்ட தலைவர் பெரியார். திராவிட இயக்கம், திராவிட முன்னேற்றக் கழகம் இந்துக்களுக்கு எதிரான இயக்கம் என்று மறுபடியும் மறுபடியும் சிலர் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். கடவுள் நம்பிக்கை என்ற விஷயத்துக்கு நாம் பிறகு வருவோம்.

பிறப்பால் யாரையும் கொச்சைப்படுத்தாதீர்!


எந்த மதத்தைச் சார்ந்தவராக இருந்தாலும் பிறப்பால் உன்னைக் கொச்சைப் படுத்தக்கூடாது. உன் பிறப்பால் உன்னை சிறுமைப்படுத்தி யாரிடமும் நிற்க வைக்கக் கூடாது. ஜாதியின் பெயரால் ஒடுக்கப் பட்டவர்கள் ஒதுக்கப்பட்டவர்கள் இந்துக்கள் இல்லையா? அவர்கள் கோயிலுக்குப் போக வேண்டும் என்று போராடினார் பெரியார். பெரியாருக்கு கோயிலுக்குப் போக வேண்டும் என்று தேவையில்லை. கலைஞருக்கு கோயிலுக்குப் போக வேண்டும் என்று தேவையில்லை.

ஆசிரியருக்கு கோயிலுக்குப் போக வேண்டும் என்று தேவையில்லை. அய்யா நல்லகண்ணு அவர்களுக்கு கோயிலுக்குப் போக வேண்டும் என்று தேவையில்லை. தாங்கள் நம்பாவிட்டாலும் நம்பக் கூடியவர்களின் உரிமைக்காக நின்று போராடிய இயக்கம் திராவிட இயக்கம். கோயிலுக்குப் போகிறவர்களை யாரும் பிறப்பின் அடிப்படையில் தடுக்கக் கூடாது என்று போராடியவர் பெரியார்.

ஆனால் இன்று இருக்கக் கூடிய அரசியல் நிலை என்ன என்பதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். இந்தியாவிலே நீங்கள் எந்த ஊருக்குச் சென்றாலும் அங்கே ஒருவரின் பெயரைக் கேட்டால் அதில் அவரது ஜாதியின் பெயரும் இருக்கும்.

தமிழ்நாட்டில்தான் ஜாதியைக் கண்டுபிடிக்க முடியாது!


ஆனால் தமிழ்நாட்டில் மட்டும்தான் ஒருவரது பெய¬ர் வைத்து ஜாதியைக் கண்டுபிடிக்க முடியாது. ஊர் என்ன, தெரு என்ன என்று பல ஆராய்ச்சிகளுக்குப் பிறகுதான் அவர்களது ஜாதி யைப் பற்றி அறிய முடியும். ஏனென்றால் தமிழன் ஜாதியை வெளியே சொல்லிக் கொள்வதை அவமானமாக நினைக்கச் செய்தவர் தந்தை பெரியார்.

ஆர்.எஸ்.எஸ். விதைக்க முயலும் ஜாதி அடையாளம்!


ஆனால் இன்று ஜாதிப் பெய¬ர் போட்டுக் கொள்வது, ஜாதி இயக்கங்களை சார்ந்திருப்பது, ஜாதியை வெளிப் படையாக சொல்லிக் கொள்வது என்ற நிலைமையை இம்மண்ணிலே விதைக்க ஆர்.எஸ்.எஸ், போன்ற இயக்கங்கள் துணிந்துவிட்டன.

அதேநேரம், ஜாதி என்பது நிதர்சனம், ஜாதியை அழிக்க முடியாது, அதைப் புரிந்துகொண்டு பேச வேண்டும் என்ற அறிவுரைகள் அரசியல்வாதிகளுக்கு சொல்லப்படுகிறது.

ஆனால் நான் ஒன்றே ஒன்றை இந்த மேடையில் இருந்து சொல்லிக் கொள்கிறேன். ஜாதி நிதர்சனம் என்பது எங்களுக்கும் தெரியும், ஜாதி இருக்கிறது என்பது எங்களுக்கும் தெரியும் ஆனால் அதை உடைப்பதற்கும், ஒழிப்பதற்கும் தான் அரசியலுக்கு வந்தோம். இதுதான் திராவிட இயக்கம்.

வியக்க வைக்கிறது டி.என்.ஏ. டெஸ்ட்!


அறிவியல் வளர்ச்சியில் என்னை வியக்க வைத்தது டி.என்.ஏ. டெஸ்ட்தான். இந்த சோதனையால் உங்கள் ஜீனாலஜி என்ன, நீங்கள் எங்கிருந்து வந்தீர்கள், உங்கள் ரத்தத்தில் என்னென்ன இனங்களுடைய கலப்பு இருக்கிறது என்பதை எல்லாம் கண்டறிந்து சொல் கிறார்கள். இங்கே சில குழுக்களைச் சேர்ந்தவர்கள் பேசுகிறார்கள், தான் யாராக இருக்க விரும்புகிறேன், தான் யாரையெல்லாம் வெறுக்கிறேன் என்றெல்லாம் சொல்கிறவர்கள் டி.என்.ஏ. டெஸ்ட் முடிவுகள் வந்த பிறகு அதிர்ச்சிக்கு உள்ளாகி உறைந்து போகிறார்கள்.

எனக்கு ஒரு ஆசை.. ஜாதி, ஜாதி, ஜாதி என்று பேசிக் கொண்டிருக்கிறார்களே ஜாதி சங்க தலைவர்கள். அவர்களுக் கெல்லாம் ஒரு டி.என்.ஏ. டெஸ்ட் எடுத்துப் பார்க்க வேண்டும். உண்மையில் உங்களுக்குள் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஜீன் எவ்வளவு இருக்கிறது, மற்ற வெளி நாட்டு இனங்களைச் சேர்ந்த ஜீன் எவ்வளவு இருக்கிறது என்று அப்போதுதான் தெரியும்.

ஜாதி என்பதெல்லாம் ஜோக்! அதை உடைத்தெறி!


ஏனென்றால் மனித இனம் என்பது எத்தனையோ காலங்களை, எத்தனையோ விஷயங்களைக் கடந்து வந்திருக்கிறது. இந்த வரலாற்றையெல்லாம் பின்னோக்கிப் பார்த்தால் ஜாதி என்பது ஜோக். ஆனால் இன்னும் பல பேர் அதை பிடித்துக் கொண்டிருக்கிறோம். இதைத்தான் தந்தை பெரியார் உடைக்க நினைத்தார்.

மற்றவர் வலியை உணர வேண்டும்!


தந்தை பெரியார் கண்ட கனவு தன்னுடைய வலியை மட்டும் உணராமல் இன்னொருவரின் வலியையும் தன்னுடைய வலியாக உணர வேண்டிய சமுதாயம் உருவாக வேண்டும் என்று சொன்னார். பிறருக்கு நேரும் துன்பத்தை தனக்கு நேர்வது போல வலியை உணர வேண்டும் என்று பெரியார் சொன்னார். இதைத்தான் உலகத்தில் மனித நேயம் என்கிறார்கள்.

தலைவர் கலைஞர் சொன்னார், மனித உரிமையே சுயமரியாதை!


மனித உரிமைகள் பற்றி தலைவர் கலைஞரிடம் ஒருமுறை செய்தியாளர்கள் கேட்டபோது, ‘நீங்கள் இன்று பேசிக் கொண்டிருக்கும் மனித உரிமையைத் தான் திராவிட இயக்கமும், பெரியாரும் சுயமரியாதை’ என்று சொன்னார்கள் என்று குறிப்பிட்டார்.

யாரும் யாரையும் மோசமாக நடத்தக் கூடாது!


யாரும் யாரையும் குறைத்து மதிப்பிடக் கூடாது, மோசமாக நடத்தக் கூடாது, ஒதுக்கி வைக்கக் கூடாது, பெண், ஆண் என்ற வித்தியாசம் பார்க்கக் கூடாது. இதுதான் நம் கனவு சமூகம். ஒருவர் இன்னொருவரால் மோசமாக நடத்தப்படும் போது நாம் தட்டிக் கேட்கிறோம். இது எப்படி ஒரு மதத்துக்கு எதிரானதாக இருக்கும்? அது எந்த மதமாக இருக்கட்டும். எந்த மதத்துக்கும் நாம் எதிராக இல்லை. மனிதர்களை ஒடுக்கும்போது, மனிதர்களை அடக்கும் போது, மனிதர்களை மனிதர்களாக நடத்தாதபோது நாம் கேள்வி கேட்கிறோம். இதுதான் திராவிட இயக்கம், இதுதான் பெரியார்.

இதை விட்டுக் கொடுத்துவிட்டு, மனித நேயத்தை விட்டுக் கொடுத்து விட்டு எல்லாரையும் உள்ளடக்கிய சமுதாயம் உருவாக முடியாது. அதை நாம் மனித சமுதாயம் என்று கூற முடியாது. மனிதமே இல்லாத ஒரு மனித சமுதாயத்தை உருவாக்கும் ஒரு சூழலை நோக்கி இந்த சமூகம் நகர்ந்துகொண்டிருக்கிறது என்றால் அது மிகையில்லை.

திணிக்க நினைப்பதை ஏற்க முடியாது!


“’நீங்கள் என்ன உணவு உண்ணுகிறீர்கள், என்ன கருத்துகளைச் சொல்கிறீர்கள், உங்கள் வழிபாட்டு முறை என்ன? நீ இந்துவாக இருக்கலாம். ஆனால் நான் வழிபடக் கூடிய வழிபாட்டு முறையைக் கொண்டுவந்து உன் மேல் திணிப்பேன். என்னுடைய மொழியைக் கொண்டுவந்து உன் மேல் திணிப்பேன். ஆனால் நீ என்னை எதிர்த்து கேள்வி கேட்க முடியாது. ஜாதி இருக்கிறது, அதை நீ கொண்டாட வேண்டும். ஏற்றுக் கொள்ள வேண்டும். அதை நான் அரசியலாக்கி உன்னைப் பிரித்துப்பார்ப்பேன். இங்கே உரையாடலே இருக்கக் கூடாது” இதுதான் இன்றைய நிலைமை.

நாம் பெரியாரின் நினைவு நாளை போற்றிக் கொண்டிருக்கிறோம். கொஞ்ச நேரத்துக்கு முன் நான் இங்கே வந்த போது என் கையில் பெரியார் சிலையை ஆசிரியர் தந்தபோது, யாரோ “நமசிவாய நமசிவாய” என்று அருகே பிரசங்கத்தில் சொல்லிக் கொண்டிருந்தார்கள். இது தான் இந்தியா. இதுதான் ஆரோக்கியமான சமூகம். நாங்கள் யாருடைய உரிமையையும் பறிக்கவில்லை. உங்கள் கருத்தை சொல்லக் கூடிய உரிமை உங்களுக்கு இருப்பது போலவே, என் கருத்தை சொல்லக் கூடிய உரிமையும் எனக்கு இருக்க வேண்டும். இந்த உரையாடல் தொடர வேண்டும்.

அப்படிப்பட்ட சமூகத்தை, நாட்டை உருவாக்க வேண்டும் என்பதுதான் எங்களுடைய எதிர்பார்ப்பு, எங்களுடைய உழைப்பு, அதை நோக்கித்தான் எங்களுடைய பயணம். இதை யாரும் தடுக்க முடியாது. அது ஆளுங்கட்சியாக இருந் தாலும், ஆர்.எஸ்.எஸ். ஆக இருந்தாலும் சரி, யாரும் தடுக்க முடியாது. அவர்களுக்கு பல முகங்கள் இருக்கின்றன.

பெண் கோவிலுக்குள் போகக் கூடாதா?


ஆண் கோயிலுக்குள் போக வேண்டும், பெண் போகக் கூடாது என்று ஏன் சொல்ல வேண்டும்? ஒரு காலத்தில் இருந்த தடைகளையெல்லாம் கடந்து தான் பல மதங்கள் உண்டாகியிருக்கின்றன. ஆனால் இந்த நூற்றாண்டில் இப் போது கோயிலுக்குள் பெண்கள் போகக் கூடாது என்று ஆட்சியிலே இருக்கக் கூடிய ஒரு கட்சி போராட்டம் நடத்துகிறது என்றால், இதைவிட வெட்கக்கேடு வேறு என்ன இருக்க முடியும்?

பெண்களுடைய ஓட்டு வேண்டுமா? பெண்களுடைய ஓட்டு வேண்டும்னு கெஞ்சிக் கூத்தாடி வாங்கிக் கொண்டு போகிறீர்களே? அப்புறம் பெண்கள் கோயிலுக்குள் செல்லக் கூடாது என்று சொல்லும் தகுதி உங்களுக்கு எப்படி வந்தது?

பெண்களுக்கு கோயிலுக்குள் செல்லும் தகுதி இல்லையென்று சொல்பவர் கள் பெண்களிடம் ஏன் வந்து ஓட்டு கேட்கிறீர்கள்?

பெண்களுக்கான இட ஒதுக்கீடு: பி.ஜே.பி.யின் பதில் என்ன?


‘2014 ஆம் ஆண்டு பி.ஜே.பி. தேர்தல் அறிக்கையிலே, பெண்களுக்கான 33 சதவிகிதம் இட ஒதுக்கீடு கொண்டுவரப் படும்‘ என்று சொன்னார்கள். ஆனால் ஆட்சிக்கு வந்து இன்று வரையிலே, பெண்கள் இட ஒதுக்கீடுபற்றி, நாடாளு மன்றத்தில் ‘லிஸ்ட் ஆஃப் பிசினஸ்’ என்ற பட்டியலில் கூட கொண்டுவர் தைரியம் இல்லாத இயக்கம்தான் பி.ஜே.பி. பணமதிப்பிழப்போ, ஜி.எஸ்.டி. யோ பல மாநிலங்களில் சாதாரண தொழில்களை எந்த அளவுக்குக் கடுமையாக பாதித்திருக்கிறது. பணமதிப்பிழப்பில் இருந்து மக்களால் இன்னும் மீண்டு வரமுடியவில்லை. எத்தனை தொழிலாளர்கள் வேலை இழந்து கொண்டிருக்கிறார்கள். வளர்ச்சி வளர்ச்சி என்று சொல்லியே பதவிக்கு வந்த மோடி அவர்கள் இன்று என்ன செய்து கொண்டிருக்கிறார்? எத்தனை பேருக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கினார்கள்? பொருளாதாரத்தில் சீரழிவை நோக்கி நாம் பின்னடைந்து கொண்டிருக்கிறோம்.

மக்களை பிளவுபடுத்தும் பி.ஜே.பி. ஆட்சி!


இப்படி மக்களை பிளவுபடுத்தி, எந்த அளவுக்கு அவர்களை மூட நம்பிக்கை களுக்கு அழுத்தி மூழ்கடிக்க முடியுமோ அதையெல்லாம் செய்து கொண்டிருக் கிறது இந்த ஆட்சி. தனக்கு இருக்கக் கூடிய பண பலம், ஆட்சி பலம் இது அத்தனையும் பயன்படுத்தி மக்களுடைய கருத்துகளை முடக்கக் கூடிய, இளைஞர்களின் சிந்தனைகளை முடக்கக் கூடிய, அரசியல் கட்சிகளை எல்லாம் அழித்து விட வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டிருக்கக் கூடிய, மாநில உரிமை களை ஒழித்துவிட்டு, மாநில அடையாளங்களை எல்லாம் அழித்து விட்டு தான் மட்டும் இந்தியாவிலே ஆட்சியில் இருக்க வேண்டும் என்பதற்காக அவர்கள் எந்த விலையையும் கொடுக்கத் தயாராக இருக் கிறார்கள். நம்மிடம் இருந்து எடுக்கவும் தயாராக இருக்கிறார்கள் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

உங்களுக்கு கடவுள் நம்பிக்கை இருக்கலாம், இல்லாமல் இருக்கலாம். ஆனால் உங்கள் அடையாளத்தை, உரிமையை காப்பாற்ற வேண்டும் என்றால் இந்த நாட்டில் அரசிய லில் ஜனநாயகத்தைக் காப்பாற்ற வேண்டுமென்றால் பெரியாரின் நினைவுநாளிலே தந்தை பெரியாரின் வழியிலே அணி திரள்வோம்.

நாட்டை ஒற்றைத் தலைமையின் கீழ் ஒ«ர் சிந்தனைக்குள் கொண்டுவரத் துடிக்கும் சக்திகளை விரட்டியடிப்போம். மனிதனை மனிதாக நடத்தக்கூடிய ஒரு சமுதாயத்தை உருவாக்குவோம். அதுவே வாழ்நாளெல்லாம் நமக்காக உழைத்த பெரியாருக்கு நாம் செய்யும் கைமாறு!

இவ்வாறு கனிமொழி எம்.பி. உரையாற்றினார்.

-  விடுதலை நாளேடு, 21.1.19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக