ஞாயிறு, 6 ஜனவரி, 2019

திருச்சி கருஞ்சட்டைக் கடலின்முன் தமிழர் தலைவர் சங்கநாதம்

ஏகலைவன்களாகவும், சம்பூகனாகவும் இருக்கமாட்டோம்

கட்டை விரலைக் கேட்டால் தலையைக் கேட்கும் இளைஞர்கள் கிளர்ந்து எழுந்தனர்திருச்சி, ஜன.5 ஏகலைவனின் கட்டை விரலை குருதட்ச ணையாகக் கேட்டால், துரோணாச்சாரியார்களின் தலையைக் கேட்கும் இளைஞர்கள் எழுந்துவிட்டனர் - இனி உங்கள் ஜம்பம் பலிக்காது என்று  திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் திருச்சி கருஞ்சட்டை இளைஞர் கடலின்முன் சங்கநாதம் செய்தார்.
கருஞ்சட்டைப் பேரணி -மாநாடு

23.12.2018 அன்று திருச்சி கே.டி. திரையரங்கம் அருகில் தொடங்கிய கருஞ்சட்டைப் பேரணி உழவர் சந்தையில் நிறைவடைந்தது. அங்கே நடைபெற்ற தமிழின உரிமை மீட்பு மாநாட்டில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் எழுச்சியுரையாற்றினார். அவரது உரையின் நேற்றையத் தொடர்ச்சி வருமாறு:
திராவிடம், தமிழ் என்று சொன்னால், இதிலே சில பேரை பிரிப்பது - சிலரை விலைக்கு வாங்குவது என்பது இனி நடக்காது. இதில் எது நம்மைப் பிரிக்கிறதோ, அதைப்பற்றி கவலைப்படக்கூடாது என்று அறிவாசான் தந்தை பெரியார் அவர்கள் சொன்னார். பெரியாருடைய சிந்தனை எங்களை ஒன்று சேர்த்திருக்கிறது. எது நம்மை இணைக்கிறதோ, அதனை அகலப்படுத்துங்கள் - எது நம்மைப் பிரிக்கிறதோ அதனை அலட்சியப்படுத்துங்கள் என்று சொன்னார். பிரிப்பது என்பது இங்கே இல்லை - இணைப்பது என்பதுதான் இங்கே இருக்கிறது.
அய்யா அழகாகச் சொன்னார்,
மானமும் அறிவும் மனிதருக்கு அழகு''
அவருடைய பார்வை மனிதப் பார்வை - வெறும் ரத்தப் பரிசோதனை அல்ல.
ஜாதியைக் குழிதோண்டி புதைக்கவேண்டாமா?

ஜாதி, தீண்டாமை, தொடாமை, நெருங்காமை, பார்க்காமை என்பதெல்லாம் காட்டுமிராண்டித்தனம் அல்லவா! அவை இன்னமும் இருக்கலாமா? இன்னமும் கவுரவக் கொலை என்று பெயர் வைத்துக்கொண்டு, பெற்றக் குழந்தைகளைக் கொல்லுகிறீர்களே, வளர்த்த குழந்தைகளைக் கொல்லுகிறீர்களே, அவ்வளவு தூரம் ஜாதி வெறி பெற்றோர்களைக்கூட மிருகங்களாக்கி இருக்கிறதே, அந்த ஜாதியைக் குழிதோண்டி புதைக்க வேண்டாமா?
எங்களுடைய சகோதரன் அவன் மலம் தூக்குகிறான்; மலத்தை தலையில் சுமக்கிறான், அவன் கீழ்ஜாதி. எங்கள் தோழர்கள் உழைக்கிறார்கள் உங்களுக்காக, அவன் சூத்திர ஜாதி; அவன் பஞ்சம ஜாதி என்கிறீர்கள். எங்களுடைய பெண்கள் படிப்பதற்கு உரிமை இல்லை என்ற அளவில் வைத்திருந்தீர்கள்.
பெரியார் பிறந்திருக்காவிட்டால் என்கிற கேள்வியை கேட்டுக்கொள்ளுங்கள், உங்களுக்கு நன்றாகப் புரியும்.
பெரியாருடைய தொலைநோக்கு எப்படிப்பட்டது - தொண்டு செய்து பழுத்த பழம்
தூயதாடி மார்பில் விழும்
மண்டைச் சுரப்பை உலகு தொழும்
மனக்குகையில் சிறுத்தை எழும் - அவர்தாம்
பெரியார் பார்!
அய்யா அவர்கள் இங்கே உரையாற்றும்பொழுது ஒன்றை சொன்னார், யாரோ சில இணைய இளைஞர்கள் பெரியார் என்ன கிழித்துவிட்டார்? என்று சொல்கிறார்கள் என்பதற்குப் பதில் சொன்னார்கள்.
பெரியார் கிழிக்கவில்லையப்பா, ஏற்கெனவே கிழித்த தையெல்லாம் ஒன்றாகத் தைத்துக் கொண்டிருக்கிறார். அதைத் தைப்பதற்கே அவருக்கு நேரம் போதாது. கிழித்துக் கிழித்துப் பிரித்துப் போட்டவைகளையெல்லாம் பெரியார் இணைப்பார். பெரியார் என்ற சக்தி இணைக் கக்கூடிய சக்தி.
எந்த அளவிற்குப் பெரியாருடைய பார்வை - இன்றைய அரசாங்கம் தனக்குப் பின்னாலே எப்படி உருவாகும் என்று நினைக்கக்கூடிய அந்தப் பார்வை வந்திருக்கிறது என்பதற்கு ஒரே ஒரு செய்தி.
இந்து' நாளிதழின் நூற்றாண்டு விழா மலர்

இதோ என் கைகளில் இருப்பது, இந்து' நாளிதழின் நூற்றாண்டு விழா மலர். இன்றைய இளைய தலைமுறையினரும், தெரிந்து கொள்ள வாய்ப்பில்லாதவர்களும் தெரிந்துகொள்ள வேண்டும் - என்னுடைய கைகளில் இருக்கின்ற ஆதாரம், One hundred years of the Hindu இந்து' பத்திரிகையினுடைய நூற்றாண்டு மலர் இது. இப்பொழுது அதற்கு வயது 140. பெரியாருடைய வயதும், இந்து நாளிதழுனுடைய வயதும் ஒன்று.

அதில் உள்ள ஒரு முக்கியமான செய்தியை மட்டும் சொல்கிறேன்.
உங்களுக்கெல்லாம் தெரியும், சேரன்மாதேவி குருகுலம் - அங்கு நடந்த செய்திகள் அத்தனையும் உங்களுக்குத் தெரியும்.
40 ஆண்டுகளுக்கு முன்பு போட்ட புத்தகம் அது. இதை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த ஏ.வி.பி. ஆசைத்தம்பி நாடாளுமன்றத்தில் பதிவு செய்திருக்கிறார்.
A Social reform question which figured in the columns of The Hindu in  April, 1925, was the controversy over the functioning of the Tamil Gurukula Vidyalaya at Shermadevi  in Tinnevelly District conducted by V.V.S.Aiyer, onetime revolutionary and associate of Bharati. Dr.Varadarajulu Naidu and other non-Brahmin leaders had objected to non-Brahmin boys of the institution being asked to take their meals separately. The matter went to Gandhiji who advised interdining but employment of Brahmin cooks. Dr.Varadarajulu Naidu was not satisfied with this arrangement as he did not like the condition about employing Brahmin cooks. He asked for the return of money subscribed to the funds of the Gurukula.
In a letter published in The Hindu on April 15,  V.V.S. Aiyer said, that except in the case of two Brahmin boys in the case of all other Brahmin and non-Brahmin students there was common dining, and he made it clear that no Brahmin taken into the Gurukula thereafter would be given any exemption from the general mess.
இதன் தமிழாக்கம் வருமாறு:
சமூகப் புரட்சியின் ஒரு குரலாக ஏப்ரல் மாதம் 1925 இந்து' ஆங்கில இதழில் வெளியான ஒரு செய்தி முக்கியமானதாகவும் விவாதப்பொருளாகவும் மாறியது, சேரன்மாதேவியில் உள்ள தமிழ் குருகுல வித்யாலயா என்ற பள்ளியில் ஒரு தீண்டாமை கொடுமை அரங்கேறியது தொடர்பான செய்தியாகும். அந்தப் பள்ளியை நடத்தியவர் வ.வே.சு அய்யர்.  இதன் புரவலராக சுப்பிரமணிய பாரதி, டாக்டர் வரதராஜுலு நாயுடு போன்றோர் உள்ளனர். அந்தப் பள்ளியில் பார்ப்பனர் அல்லாத மாணவர்களுக்கு வெளியில் உள்ள திண்ணையில் வைத்து அவர்கள் கொண்டுவந்த இலையிலேயே உணவு உண்ணவும், அவர்களுக்கு பார்ப்பனர்கள் பரிமாறாமல் அவர்களே உணவை எடுத்துக் கொள்ளவும் கூறப்பட்டனர். அதே நேரத்தில் பார்ப்பனர்களுக்குத் தனி அறையில், பார்ப்பனர்களால் சுவையான உணவு பரிமாறப்பட்டது. இது தொடர்பாக காந்தியாரிடம் புகார் கூறப்பட்டது, உடனடியாக காந்தியார் பள்ளிக்குக் கொடுத்த நிதியை திருப்பிக் கொடுக்குமாறு கூறினார். இதற்கு விளக்கமளித்த வ.வே. சுவாமிநாத அய்யர், சில காரணங்களுக்காக இரண்டு பார்ப்பனர் மாணவர்களுக்கு மட்டுமே தனியாக உணவு படைக்கப்பட்டது. அதுவும் குறிப்பிட்ட நாளில் மட்டும்தான். மற்றபடி பார்ப்பனர் மற்றும் பார்ப்பனர் அல்லாதோர் ஒன்றாகவே ஒரே இடத்தில் அமர்ந்து உணவு உண்டு வருகின்றனர் என்று அக்கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.
காந்தியாரிடம் அந்தப் பிரச்சினை செல்கிறது; பழைய காந்தியார் - வருணாசிரம தர்ம காந்தியார் - பின்னாளில் மாறிய காந்தியார் - எனவேதான், கோட்சேவால் அந்தக் காந்தியாரை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
இந்தப் பிரச்சினை காந்தியாரிடம் சமாதானத்திற்காக வந்தது.
அப்பொழுது காந்தியார் என்ன சொல்கிறார் என்றால்,
அங்கேயும் ஜாதியைத்தானே கொண்டு வருகிறீர்கள். நான் ஒத்துக்கொள்ள முடியாது என்றார். இந்தத் தகராறு தீரவில்லை. காந்தியாருடைய சமரசமே தோல்வி அடைந்துவிட்டது.
1924 இல் சேலத்தில் பிரம்மாண்டமான மாநாடு

நம்மைப் போன்ற பலர் பிறக்காத காலத்தில், 1924 ஆம் ஆண்டு - பெரியார் அவர்கள் காங்கிரசு தலைவராக இருந்த நேரத்தில், பெரியார் அவர்கள் சுயமரியாதை இயக்கத்தின் தலைவராக இல்லாத போது - சேலத்தில் பிரம்மாண்டமான பொதுக்கூட்ட மாநாட்டில், அவர் பேசியது பதிவாகியிருக்கிறது இந்து பத்திரிகையில்.
Speaking at the public meeting at salem E.V.Ramasamy Naicker said, they must settle the Brahmin question even while the British Supremacy lasted, otherwise they would have to suffer under the tyranny of what he called ‘‘Brahmnocracy''.
இதன் தமிழாக்கம் வருமாறு:
இது தொடர்பாக சேலத்தில் நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் ஈ.வெ.ராமசாமி நாயக்கர் பேசும்போது, பார்ப் பனர்களின் ஆதிக்கம் மோசமானது, ஆங்கிலேயர்களின் அரசாங்கம் முடிவதற்குள் பார்ப்பனர்களின் அதி காரத்தை அடக்கவேண்டும். இல்லையென்றால். ஆங்கிலேயர்களிடமிருந்து நமக்கு கிடைக்கும் சுதந்திர குடியரசாக இருக்காது - டெமோக்கரசி' அது பார்ப்பனரின் ஆதிக்கம் அதாவது பிராமினோகரசி'யாக இருக்கும் என்று எச்சரித்தார்.
Brahmnocracy என்ற வார்த்தையைக் கண்டுபிடித்தார் பெரியார்!
பெரியார் திண்ணைப் பள்ளிக்கூடம்தான் போன வர். இங்கிலீசு மொழிக்கே ஒரு வார்த்தையைக் கண்டுபிடித்தது என்பதுதான் மிக முக்கியம். இதுவரை யில் நாம் Aristocracy, Democracy என்றுதான் கேள் விப்பட்டிருப்போம். பெரியாருடைய சிந்தனை பாருங்கள், ‘Brahmnocracy' என்ற வார்த்தையைக் கண்டுபிடித்தார்.
Democracy-க்கு என்ன  விளக்கம்? A Government of the People; for the People; by the People என்பதுதான்.
Brahmnocracy-க்கு  என்ன  விளக்கம்? A Govern ment of the Brahmins; for the Brahmins; by the Brahmins என்பதுதான்.
சுதந்திரம் வந்ததும் இதே நிலைதான். இவனிடமிருந்த அதிகாரம் அவனிடம் சென்றிருக்கிறது. அவனாவது கொஞ்சம் நியாயமாக நடப்பவன். ஆனால், அவனை விட இவன் மோசமானவனாயிற்றே. எதற்கோ பயந்துகொண்டு, எதிலோ காலை வைத்ததுபோல ஆகி விட்டதே என்று சொன்னார்.
எனவே கருஞ்சட்டைகளுக்கு வேலை இருக்கிறது; இந்தப் போராளிகளுக்கு இன்னும் வேலை இருக்கிறது.
இறுதியாக ஒன்றைச் சொல்லி முடிக்கின்றேன்.
உங்களைப் பார்த்து தேசத்தைக் காட்டிக் கொடுக் கிறவர்கள் - தேசத்திற்கு விரோதமாக பேசுகிறவர்கள் என்று சொல்கிறார்கள் - நாளைக்கு அவர்மீது வழக்கு - தேசத் துரோக வழக்கு!
இங்கே இருக்கின்றவர்கள் எல்லாம் தீவிரவாதிகளா?

சுதேசி, சுதேசி என்று வெள்ளைக்காரன் எதை உமிழ்ந்து போட்டானோ,  அதை எடுத்து வைத்துக் கொண்டு, இன்னமும் சட்டம், சட்டம் என்று அந்த சட்டங்களை நீங்கள் வைத்திருக்கிறீர்களே, இவர் என்ன பெரிய தீவிரவாதியா? இங்கே இருக்கின்றவர்கள் எல்லாம் தீவிரவாதிகளா?
மடங்களில் இருக்கின்றவர்கள் கொலை செய்து, ஜெயிலுக்கும், பெயிலுக்குமாக அலைந்துகொண்டு, பிறகு 89 பிறழ் சாட்சிகளால் வெளியே வந்த  சங்கராச்சாரிகள் எல்லாம் மகான்கள் இந்த நாட்டில்.
எங்கள் தோழர்களைப் பார்த்து, திருமுருகனைப் பார்த்து, இந்த அணியில் உள்ளவர்களைப் பார்த்து, தேசத் துரோகிகள், தேச விரோதிகள் என்று பேசுகிறார்களே, இதோ என் கைகளில் இருப்பது Shadow Armies: Fringe Organizations and Foot Soldiers of Hindutva, Dhirendra K. Jha. யிலீணீ என்பவர் எழுதியிருக்கிறார். அவர் ஒரு பார்ப்பனர்தான்.
அந்த நூலில் அவர்,
Four of these organisations – the Bajrang Dal, the Bhonsala Military School, the Hindu Aikya Vedi and the Rashtriya Sikh Sangat – are affiliated to the Rashtriya Swayamsevak Sangh (RSS). Others – the Sanatan Sanstha, the Hindu Yuva Vahini, the Sri Ram Sene and Abhinav Bharat
இந்த அமைப்புகளிலே சனாதன் சன்ஸ்தா அமைப்பு தான் தபோல்கரை கொலை செய்தது, கோவிந்த்  பன்சாராவை கொலை செய்தது, கவுரி லங்கேசை கொலை செய்தது. இந்திய ராணுவப் படையில் இருந்த துப்பாக்கி மருந்துகளை ஆர்.எஸ்.எஸ். அமைப்பு பயன்படுத் தியிருக்கிறது, இன்னமும் அந்த வழக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
இங்கே இருக்கிற எந்தத் தோழர்களோ அல்லது இந்த மேடையில் உள்ளவர்கள் யாராவது அதுபோன்ற குற்றங்கள் செய்தது உண்டா? தயவு செய்து எண்ணிப் பாருங்கள்.
56 அங்குல மார்பளவு என்று தன்னை வர்ணித்துக் கொண்ட பிரதமர் மோடி அவர்களே, உங்கள் அரசின்கீழ், இந்த ஆர்.எஸ்.எஸ்.  அமைப்பு எப்படி இருக்கிறது? என்று சொல்லுகின்ற நேரத்தில், ஒரு செய்தி.
இதில் பல அமைப்புகள் இருக்கிறது - அதிலே கொலை அமைப்புகள் இருப்பது மட்டுமல்ல, Bhonsala Military School என்று இருக்கக்கூடிய அமைப்பில், ராணுவத்தில் அமைக்கப்பட்ட இந்தப் பள்ளிக்கூடத்தில், மூஞ்சே என்பவர் இத்தாலி பாசிச, முசோலினியைச் சந்தித்து, அவரிடம் கருத்து கேட்டு, அதன்படி  படை களை அமைத்து, அதன்படி ஆர்.எஸ்.எசை நடத்திக் கொண்டிருக்கிறார் என்பதை இந்தப் புத்தகத்தில் ஆதாரத்தோடு, மூஞ்சேஸ் எழுதிய டைரியில் இருந்த குறிப்புகள் வெளியிடப்பட்டு இருக்கின்றன.
இவைகளுக்கு நடவடிக்கை உண்டா?
இதற்குப் பெயர் தீவிரவாதமா? பயங்கரவாதமா?
அல்லது இந்த மேடையில் இருக்கிறவர்கள் உரிமை கேட்டால், எங்கள் உரிமைகளைக் கேட்டால், நீட் தேர்வைக் கொண்டு வந்து எங்கள் பிள்ளைகளை சாகடிக்கிறீர்களே என்று கேட்டால், எங்கள் மொழிக்கு இடமில்லை என்று, சமஸ்கிருதத்தைத் திணிக்கிறீர்களே என்று கேட்டால், நாங்கள் குற்றவாளிகளா?
எது உங்களுடைய வேர் என்று நினைத்தீர்களோ - அங்கேயே ஆட்டம் கண்டிருக்கிறீர்கள்!

எனவேதான், நீங்கள் அச்சுறுத்தினால், உங் களுக்கு ஒரே விடை - மே மாதம் வருகின்ற அந்தத் தேர்தலில், நாங்கள் செய்யவேண்டியதை - இப்பொழுது இந்திப் பிரதேசமே செய்திருக்கிறது - எது உங்களுடைய வேர் என்று நினைத்தீர்களோ - அங்கேயே ஆட்டம் கண்டிருக்கிறீர்கள்.

அவர்கள் மட்டுமல்ல,  தமிழ்நாட்டில், அவர்க ளோடு கூட்டு சேர்ந்தால், அவர்களும் தமிழர் களுடைய இன விரோதிகளாவார்கள், அது யாராக இருந்தாலும்.

நன்றாக நினைத்துப் பாருங்கள், அவர்கள் விலைக்கு வாங்குவார்கள், பிரிப்பார்கள். ஈழத் தமிழர்களைக்கூட இன்றைக்குப் பிரித்துக் கொண்டி ருக்கலாம் என்று நினைக்கிறார்கள். எனவேதான், எச்சரிக்கையாக இருக்கவேண்டும். தமிழர்களே, எச்சரிக்கையாக இருங்கள்!

துரோணாச்சாரியார்களுடைய தலையை வாங்கக்கூடிய அளவிற்கு எங்கள் இளைஞர்கள் துணிவாக இருப்பார்கள்!

நாம் இராவணனைத்தான் பாராட்டுவோம் - தென்னிலங்கையைப் பார்க்கிறேன், அடடா, பூரிக்கிறது என்று புரட்சிக்கவிஞர் சொன்னதுபோல இராவண லீலா நடத்தியது தமிழ்நாடு. ராமனை ஒருபோதும் ஆதரிக்காது. ராமராஜ்ஜியத்திற்கு இங்கே இடமில்லை. ஒருபோதும் சம்பூகன்களாக நாங்கள் இருக்கமாட்டோம்; ஒருபோதும்  ஏகலைவன்களாக நாங்கள் இருக்கமாட்டோம். துரோ ணாச்சாரியார்கள் கட்டை விரலைக் கேட்டால், துரோ ணாச்சாரியார்களுடைய தலையை வாங்கக்கூடிய அளவிற்கு எங்கள் இளைஞர்கள் துணிவாக இருப் பார்கள். சம்பூகன்களிடம் வாலாட்டாதீர்.
தமிழ்நாட்டில் இராவண விழா நடைபெறும்!

அடுத்து நடக்கப் போவது கருஞ்சட்டைப் பேரணி மட்டுமல்ல - அதற்கடுத்து இராவண விழா நடைபெறும் - இந்தத் தமிழ்நாட்டில்.
இராவணன் என்பது அசுரன். அசுரன் என்பது குடிகாரன் அல்லாதவன். சுரா என்பது சுராபானம். அதனைக் குடிக்காதவர்கள் அசுரர்கள். எனவேதான், ஒழுக்கமுள்ளவர்களை உருவாக்குவோம்; கொள்கை உள்ளவர்களை உருவாக்குவோம். அதுதான் இந்தக் கருஞ்சட்டைப் பேரணி.
எனவே, தமிழர்களே! தமிழர்களே!! தமிழ் இனத்தைக் காப்பதற்காக நீங்கள் கைகொடுங்கள்! பெரியார் தன்னுடைய மூத்திரச் சட்டியைத் தூக்கிக்கொண்டு, இரண்டு பேரைப் பிடித்துக்கொண்டு யாருக்காகப் போராடினார்?
கடைசியாக 19 ஆம் தேதி, தியாகராயர் நகரில் நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றும்பொழுது  அம்மா' என்று முனகியபடியே  மரண சாசன உரையாற்றினார் தந்தை பெரியார். அவருடைய வலியைக்கூட பொறுத்துக்கொண்டு, உங்களை சூத்திரனாக விட்டுவிட்டுப் போகப் போகிறேனே என்று அழுதாரே, கலங்கினாரே அந்தப் பெரியாருடைய உணர்வுகளை நீங்கள் பெறுங்கள்! இந்தக் கூட்டம் அதற்கு ஒரு தொடக்கம்.
ஈரோட்டுக் கண்ணாடியால்தான் முடியும்

எனவே, எதுவும் நம்மைப் பிரிக்கக்கூடாது; எல்லாம் நம்மை இணைக்கும். நம்முடைய எதிரிகள் யார்? நம்முடைய நண்பர்கள் யார்? என்பதை அடையாளம் காணுவோம். முந்தைய எதிரிகள் நாணயமான எதிரிகள்; இப்பொழுதுள்ள எதிரிகள் நாணயம் கெட்ட எதிரிகள்; சூழ்ச்சி நிறைந்தவர்கள். எனவேதான், அந்த சூழ்ச்சி வலையை அறுத்தெறிய ஈரோட்டுக் கண்ணாடியால்தான் முடியும்.
அரசியல் அடிமைத்தனம் - கைவிலங்கு
பொருளாதார அடிமைத்தனம் - கால் விலங்கு
பண்பாட்டு அடிமைத்தனம் - மூளை விலங்கு
அந்த மூளை விலங்கை உடைக்கத்தான் ஈரோட்டு சம்மட்டி. அதற்குத்தான் கருஞ்சட்டை வீரர்கள் இங்கே திரண்டிருக்கிறார்கள்.
எனவே, நண்பர்களே! உங்களுடைய திரட்சி, உங்களுடைய ஒற்றுமை, உங்களுடைய பேரணி - பெரியார் என்பது வெறும் பிம்பம் அல்ல; பெரியார் சிலைக்கு செருப்பு மாலை போட்டவனே - அவனே நீதிமன்றத்திற்குச் சென்று பைத்தியக்காரன் என்று ஒப்புக்கொண்டிருக்கிறான். கீழ்ப்பாக்கத்திற்குச் சென்று சான்றிதழ் வாங்கி வெளியே வருகிறான்.
எனவே, பைத்தியக்காரர்களாக இருந்தாலும்கூட, காரியப் பைத்தியங்களை நாம் ஒருபோதும் அடையாளம் காணாமல் விட்டுவிட மாட்டோம் என்பதை எடுத்துச்சொல்லி,
இவ்வளவு சிறப்பான முயற்சிகளை செய்த தோழர் திருமுருகன் காந்தி அவர்களுக்கும், மற்ற நண்பர்களுக்கும் பாராட்டைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
கத்திரிக்கோல் நடுவிலே தலையை விட்டால், உங்கள் நிலை என்ன?

நாங்கள் பிரிந்திருந்தோம் - பிரிந்திருக்கிறோம் என்று தப்புக் கணக்குப் போட்டு ஏமாந்துவிடாதீர்கள். கத்திரிக் கோலினுடைய இரண்டு முனைகள் பிரிந்திருப்பதுபோன்றுதான் இருக்கும். கத்திரிக்கோல் நடுவிலே தலையை விட்டால், உங்கள் நிலை என்ன என்பதை நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள்!
நன்றி, வணக்கம்!
வாழ்க பெரியார்! வளர்க பகுத்தறிவு!! - இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் எழுச்சியுரையாற்றினார்.
- விடுதலை நாளேடு, 4.1.19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக