நாங்கள் தமிழுக்குப் பிறந்தவர்கள் -சமஸ்கிருதத்திற்குப் பிறந்த பேடிகள் அல்லர்!
பிரித்தாளும் தந்திரத்தைக் கையாளலாம் என்று நினைத்தவர்களுக்கு, மிகப்பெரிய ஏமாற்றம்!
திருச்சி, ஜன.4 பல கருத்தாலே இவர்கள் எல்லாம் பிரிந்திருப்பார்கள் - நாம் நம்முடைய ஆரிய விளை யாட்டை விளையாடிக் காட்டலாம் - பிரித்தாளும் தந்திரத்தைக் கையாளலாம் என்று நினைத்தவர்களுக்கு, மிகப்பெரிய ஏமாற்றத்தைக் கொடுத்து, நயவஞ்சக நரிகளே, உங்கள் கதை இனி நடக்காது என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் திருச்சிக் கருஞ்சட்டை இளைஞர் கடலின்முன் இனமான உரையாற்றினார்.
கருஞ்சட்டைப் பேரணி -மாநாடு
23.12.2018 அன்று திருச்சி கே.டி. திரையரங்கம் அருகில் தொடங்கிய கருஞ்சட்டைப் பேரணி உழவர் சந்தையில் நிறைவடைந்தது. அங்கே நடைபெற்ற தமிழின உரிமை மீட்பு மாநாட்டில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் எழுச்சியுரையாற்றினார்.
அவரது உரை வருமாறு:
பிரித்தாளும் தந்திரத்தைக் கையாளலாம் என்று நினைத்தவர்களுக்கு, மிகப்பெரிய ஏமாற்றம்
வரலாறு காணாத அளவு எந்த நகரத்தை - தான் பிறந்த ஊரைவிட்டுக்கூட - தன்னுடைய அடையாள மான ஈரோட்டைக்கூட மறந்து, பிரச்சாரம் செய்வதற்கு, தமிழ்நாட்டில் நடுநாயகமாக இருக்கின்ற நகரம் எது என்று தேர்ந்தெடுத்து - அதுதான் இந்த திருச்சி மாநகரம் என்பதைக் கண்டறிந்து - அறிவாசான் பகுத்தறிவுப் பகலவன், இந்த திருச்சி மாநகரில், தந்தை பெரியார் அவர்களுடைய, சமுதாயத்தின் புரட்சி வீரராக, தலைவராக, ஒரு எழுச்சி யுகத்தை உருவாக்கியவராக இருக்கக்கூடிய அந்த ஆசானுடைய நினைவு நாள் என்பது ஒரு வரலாற்றுக் குறிப்பு நாள். அது ஒரு வர லாற்றுக்கான குறிப்பே தவிர, மற்றபடி அவருடைய தத்துவம் என்பது மறக்கப்படுவதே இல்லாத ஒரு தத்துவம். அப்படிப்பட்ட அறிவாசான் தந்தை பெரியார் அவர்களுடைய நினைவைப் போற்றுகின்ற வகையில், ஒரு அற்புதமான கருஞ்சட்டைப் பேரணியை - பல கருத்தாலே இவர்கள் எல்லாம் பிரிந்திருப்பார்கள் - நாம் நம்முடைய ஆரிய விளையாட்டை விளையாடிக் காட்டலாம் - பிரித்தாளும் தந்திரத்தைக் கையாளலாம் என்று நினைத்தவர்களுக்கு, மிகப்பெரிய ஏமாற்றத்தைக் கொடுத்து, நயவஞ்சக நரிகளே, உங்கள் கதை இனி நடக்காது.
நீங்கள் எங்களைப் பிரித்தாண்டு கொண்டு காலங் காலமாக இருக்கிறீர்கள். எங்கள் குடும்பம் ஒன்று. இதில் பலருக்குப் பல பாத்திரம் உண்டு என்பதைக் காட்டக்கூடிய அளவில் - எல்லோரையும் ஒருங்கிணைக்கக்கூடிய அற்புதமான ஒரு சிறந்த முயற்சியை எடுத்து, பல்வேறு தொல்லைகளுக்கிடையில், காவல்துறை தொல்லை, உயர்நீதிமன்றத்திற்குச் சென்று அனுமதி வாங்கி, திருச்சியில் கடல் கிடையாது; கருஞ்சட்டைக் கடல் இருக்கின்றது என்று பெருமைப்படக்கூடிய அளவிற்கு, வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுத்திருக்கின்ற அன் பிற்கும் பாராட்டுதலுக்கும் உரிய அருமை சகோதரர், சமூகப் போராளி திருமுருகன் காந்தி அவர்களே,
அதேபோல, இம்மாநாட்டிற்குத் தலைமை தாங்கக் கூடிய இன உணர்வாளர், அன்பிற்குரிய அருமை நண்பர் மற்றொரு போராளி தோழர் பொழிலன் அவர்கள்,
முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் மானமிகு தோழர் ஆனைமுத்து அவர்களே,
பதவி எனக்கு முக்கியமல்ல,
நீதிதான் முக்கியம்!
அருமை பெரியார் பெருந்தொண்டர்கள், சமூகப் போராளிகள், சக போராளிகள் கொளத்தூர் மணி அவர்களே, கோவை இராமகிருஷ்ணன் அவர்களே, அரங்க.குணசேகரன் அவர்களே, நீதிபதி பதவியில் இருந்தாலும், கொள்கை என்று வருகின்ற நேரத்தில், பதவி எனக்கு முக்கியமல்ல, நீதிதான் முக்கியம் என்பதை தன்னுடைய நீதிபதி பதவிக்காலத்தில், என் றைக்கும் நிலைநாட்டி, இன்றைக்கும் துணையாக இருக்கக்கூடிய சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி அன்பிற்குரிய அய்யா நீதிபதி அரிபரந்தாமன் அவர்களே,
ஆய்வாளர் அய்யா தொ.பரமசிவன் அவர்களே, சமூகப் போராளி இரா.அதியமான் அவர்களே,
இங்கே உரையாற்றி விடைபெற்றுச் சென்ற திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் பொதுச்செயலாளர் போராளி பேராசிரியர் சுப.வீ. அவர்களே,
எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்
என்று சொல்லக்கூடிய உணர்வு
பொருளாதார அறிஞர் வேந்தன் அவர்களே, ஓவியா அவர்களே, நேரத்தின் நெருக்கடி கருதி, அனைவரையும் விளித்ததாக அன்போடு ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று பணிவன்புடன் கேட்டுக்கொண்டு, என்னுடைய உரையை நான் தொடங்குகிறேன்.
வெள்ளம்போல் தமிழர் கூட்டம்
வீரங்கொள்கூட்டம்; அன்னார்
உள்ளத்தால் ஒருவரே மற்
றுடலினால் பலராய்க் காண்பார்
என்று சொல்லக்கூடிய வண்ணம்,
இங்குள்ள தமிழர் ஒன்றாதல் கண்டே, எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார் என்று சொல்லக்கூடிய உணர்வு, இந்த மாநாட்டை சிறப்பாக எடுத்துக்காட்டி இருக்கிறது.
எத்தனை இடையூறுகள்? தந்தை பெரியார் இந்த சமுதாயத்தில் எதிர்நீச்சல் அடித்தவர். அவருடைய வாழ்நாள் முழுவதும் - தத்துவ ரீதியாக இன்றைக்கும் அவர்கள் மறையவில்லை. நம் நெஞ்சங்களில் நிறைந்தது மட்டுமல்ல, நம் ரத்த நாளங்களில் உறைந்திருக்கிறார் தந்தை பெரியார் அவர்கள்.
கனவு காணுகின்றவர்களின் எண்ணத்தை -
ஆழ குழிதோண்டிப் புதைக்கின்ற மாநாடுதான்!
அந்த உணர்வுகள்தான் எல்லாவற்றிற்கும் விடை. தமிழ்நாட்டில், கருஞ்சட்டைப் பேரணி என்று அவர்கள் உருவாக்கி, இன்றைக்குக் கருஞ்சட்டைகள் மட்டுமல்ல, வண்ணங்கள் எப்படி இருந்தாலும், எங்கள் எண்ணங்களுக்கெல்லாம் ஒருவர்தான்- தந்தை பெரியார் என்று சொல்லக்கூடிய அளவிற்கு, வண்ணங்களையும் இணைத்து, எண்ணங்களை ஒரே இடத்தில் கொண்டு வந்து நிறுத்தி, இன்றைய சூழல் - தமிழகத்தையே சுரண்டிக் கொண்டு - தமிழகத்தையே ஆண்டு கொண்டு - தமிழகத்தையே வஞ்சித்துக் கொண்டு - தமிழகத்தையே புரட்டிப் போட்டு - தமிழ்நாட்டை காவி மண்ணாக்கிவிடலாம் - பெரியார் மண்ணை என்று கனவு காணுகின்றவர்களின் எண்ணத்தை - ஆழ குழிதோண்டிப் புதைக்கின்ற மாநாடுதான் - இந்தத் தமிழின உரிமை மீட்பு மாநாடாகும்.
அதற்காகத்தான் இங்கே இத்தனை பேர் சேர்ந்திருக்கிறோம். இது ஒன்றும் வியப்பல்ல. முதலில் நாங்கள் யாருக்காவது நன்றி செலுத்தவேண்டுமானால், பெரியார் சிலையை உடைப்போம்; பெரியாரை அவ மானப்படுத்துவோம்; பெரியார் சிலைக்கு செருப்பு மாலை போடுவோம் என்றெல்லாம் சொல்லி, சும்மா இருந்தவர்களை கிளப்பிவிட்டு, இன்றைக்குப் புயலை அறுவடை செய்துகொண்டிருக்கிறார்கள்.
எங்கள் எல்லோரையும் ஒரே மேடையில் சேர்த்த நண்பர்களே, அடிக்கடி அப்படி பேசுங்கள்; அடிக்கடி அப்படி அறைகூவல் விடுங்கள். அதுதான் எங்களை இன்னும் இறுக்கமாக ஆக்கும். இது மாநாடல்ல - ஒரு போர்ப் படை பாசறை.
இங்கே வந்திருக்கின்றவர்கள் கோட்டைக்குள் போவதற்காக வந்திருப்பவர்கள் அல்ல. கோட்டைக்கு யாரை அனுப்பவேண்டுமோ, அவர்களை அனுப்பவும் தயாராக இருக்கக்கூடியவர்கள்.
சிறைச்சாலைக்குள்ளே போவதற்குத் தயாராக இருக்கின்ற போராளிகளுடைய கூட்டம்
ஆனால், இங்கே வந்திருப்பவர்கள் கோட்டைக் குள்ளே போவது முக்கியமல்ல - சிறைச்சாலைக்குள்ளே போவதற்குத் தயாராக இருக்கின்ற போராளிகளுடைய கூட்டம் இந்தக் கருஞ்சட்டைக் கூட்டம்.
அந்தக் கூட்டம் இன்றைக்கு ஒன்றுபட்டு இருக்கிறது. திருமுருகன் காந்தி என்றால், ஏதோ ஒரு சாதாரண இளைஞனா? மனித உரிமைகளுக்காக அவர், அய்க்கிய நாடுகளில் உரையாற்றிவிட்டு, ஒரு தமிழன், ஒரு இளைஞன் அந்த அளவிற்குப் பெருமை பெற்றிருக்கிறான் என்று வரும்பொழுது, வெட்க மில்லாமல், அவரை கைது செய்து சிறைச்சாலைக்குக் கொண்டு போனது இருக்கிறதே - இந்த மனித உரிமைப் பறிப்பைப் பார்த்துக்கொண்டு நாங்கள் எல்லாம் சும்மா உட்கார்ந்துகொண்டு இருப்போம் என்ற நினைப்பா?
பெரியார் என்ற ஆலமரத்தின் விழுதுகள்
அவர் தனி மனிதர் அல்ல; இங்கே இருக்கும் எவரும் தனி மனிதர் அல்ல. பெரியார் என்ற அந்தத் தத்துவத்தினுடைய கிளைகள்; பெரியார் என்ற ஆலமரத்தின் விழுதுகள். அந்த வேரை எந்தக் கொம்பனாலும் அசைத்துவிட முடியாது. நீ தோண்டி னால், அந்தக் குழி உனக்காகத்தான்.
அந்த அடிப்படையில் நண்பர்களே, இந்தக் கருஞ்சட்டைப் பணி சாதாரணமானதல்ல. எனக்கு அதிகமாக, காந்தியைத் தெரியாது; அந்தக் காந்தியையும் தெரியாது; இந்தக் காந்தியையும் தெரியாது. ஆனால், தெளிவாக ஒன்றைச் சொல்லுகிறேன், அந்தக் காந்தியை சுட்டவனும் ஆர்.எஸ்.எஸ். இந்தக் காந்தியை அழிக்கவேண்டும் என்று நினைப்பவனும் ஆர்.எஸ்.எஸ். கடைசியில் அழிந்து போகக்கூடியதும் ஆர்.எஸ்.எஸ்., பார்ப்பனியம். ஆகவே, திருமுருகன் காந்தியை ஒரு தனி நபராகப் பார்க்கவில்லை.
திருமுருகன் காந்தி அவர்கள், என்னை சென்னை பெரியார் திடலில் வந்து சந்தித்தபொழுது, நான் அவரிடம் கேட்டேன். அவருக்கு இந்த உணர்வு எப்படி வந்தது என்று.
அவருக்குப் பாரம்பரியமாக, ஆங்கிலத்தில் சொல் வார்களே, டி.என்.ஏ. என்று. அந்த மரபணு இந்தக் கருஞ் சட்டைப் பேரணியை உருவாக்கவேண்டும் என்று வந்தது.
அவருடைய தாத்தா ஈரோடு புலவர் ஆறுமுகமும், நானும், கலைஞர் அவர்களும் 1946 ஆம் ஆண்டில் மாணவர் சுற்றுப்பயணத்தில் தஞ்சை முழுவதும் சென்றவர்கள்.
எனவே, அவர் ஒரு தனி நபர் அல்ல. ஏதோ ஒரு நபர் அல்ல - ஊதித் தள்ளிவிடலாம், பொய் வழக்குப் போட்டுவிடலாம் என்று நினைக்காதீர்கள்.
காவல்துறை இதற்கு முன் இந்தப் பேரணிக்கும், மாநாட்டிற்கும் அனுமதி கொடுத்திருந்தால் எவ்வ ளவு நன்றாக இருந்திருக்கும். இவ்வளவு பெரிய பேரணி நடந்ததே - அந்தப் பேரணியில் ஒரு சிறு அசம்பாவிதம்கூட நடக்கக்கூடாது என்பதற்காகத்தான் எங்களைப் போன்றவர்கள் நடந்தே வந்தோம்.
நாங்கள் நடந்து காட்டுகிறவர்கள், எல்லாவற்றிலும். நடையில் மட்டுமல்ல, கொள்கையில் நடந்துகாட்டுகிற வர்கள்.
தமிழக அரசே, ஏன் இந்த அவமானத்தை நீங்கள் சுமந்தீர்கள்? ஒரு எடுபிடி அரசாக, டில்லிக்கு பொம்ம லாட்ட அரசாக இருக்கிறீர்களே, உங்களுக்கு வெட்க மில்லையா? நாளைக்கு எந்த முகத்தோடு, பெரியார் படத்திற்கு முன், பெரியார் சிலைக்கு - அவருடைய நினைவு நாள் என்று செல்லவிருக்கிறீர்களே, இது நியாயம்தானா? என்பதை எண்ணிப் பாருங்கள்.
அரசாங்கத்தினுடைய காதுகளைப் பிடித்துத் திருகி - தலையில் குட்டு வைத்து...
பெரியாருடைய கருஞ்சட்டைப் பேரணி, அதுவும் பெரியாருடைய தலைநகரத்தில் நடைபெறும் ஒரு பேரணிக்கு அனுமதி வழங்கவில்லை - அரசாங்கத் தினுடைய காதுகளைப் பிடித்துத் திருகி - தலையில் குட்டு வைத்து - அங்குள்ள நியாயாதிபதிகள், ஊர்வலத் திற்கு அனுமதி கொடுத்து - இப்பொழுது எங்களுக்குப் பாதுகாப்பு கொடுக்கிற காவல்துறைக்கு நீங்கள் இழிவை உண்டாக்கலாமா? என்று அரசைப் பார்த்துக் கேட்கிறோம்.
இந்த நாட்டு வரலாற்றிலேயே இதுபோன்ற சர்வ அடிமைகள் கிடைத்ததே கிடையாது. என்று தணியும் இந்த அடிமை மோகம்? கண்டிப்பாகத் தணியும் வரு கின்ற மே மாதம்.
இந்தக் கருஞ்சட்டை அணி என்று சொல்கின்ற நேரத்தில் நண்பர்களே, ஒன்றை உங்களுக்குச் சொல்ல வேண்டும். 1945 ஆம் ஆண்டு திருச்சியில் கூடிய திராவிடர் கழக மாநாட்டில்தான், கருப்புச் சட்டை படையை ஈ.வெ.கி.சம்பத் அவர்களையும், கவிஞர் கரு ணானந்தம் அவர்களையும் நியமித்து தந்தை பெரியார் அமைத்தார்.
இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு கருஞ்சட்டைப் படையை அமைத்திருக்கிறார்கள். கருப்பு என்று சொன்னால், சாதாரணமா? எங்கே போனாலும், என்ன சொன்னாலும், தொலைக்காட்சி நண்பர்களும் இங்கே வந்திருக்கிறார்கள் - விடாது கருப்பு - அது தொடரும்.
அன்றைக்கு இருந்த கருஞ்சட்டையின் எண்ணிக்கை என்ன? இன்றைக்கு இருக்கின்ற
கருஞ்சட்டையினுடைய பெருமை என்ன?
1946 ஆம் ஆண்டு மதுரையில் நடைபெற்ற கருஞ்சட்டைப் படை மாநாட்டுப் பந்தலை எரித்தார்கள். கருஞ்சட்டை மறைந்துவிட்டதா? அன்றைக்கு இருந்த கருஞ்சட்டையின் எண்ணிக்கை என்ன? இன்றைக்கு இருக்கின்ற கருஞ்சட்டையினுடைய பெருமை என்ன?
தொழிலுக்காக, தொழில் தர்மத்திற்காக, நீதிமன்றத் திற்காக கருப்புச் சட்டை அணிந்தவர் நம்முடைய நீதிபதி அரிபரந்தாமன் அவர்கள் - இன்றைக்கு அவர் கருஞ்சட்டை அணிந்து அமர்ந்திருக்கிறாரே, இதைவிட பெரியாருக்குக் கிடைத்த மிகப்பெரிய வெற்றி, பெரியாரின் தத்துவத்திற்குக் கிடைத்த பெரிய வெற்றி வேறு என்ன இருக்க முடியும்? என்பதை எண்ணிப் பாருங்கள்.
எனவேதான், கருஞ்சட்டை என்று சொன்னால், ஏதோ அது ஒரு நிறமல்ல. ஒரே ஒரு செய்தி, கருஞ்சட்டைக்கு விளக்கம் அதிகம் சொல்லவேண்டிய அவசியமில்லை.
போராட்டத்தினுடைய வடிவம் என்று சொன்னால், கருப்புச் சட்டை அணிந்துதான் போராடுகிறார்கள்
இன்றைக்கு நடைபெறும் எந்தப் போராட்டமாக இருந்தாலும், யார் போராடினாலும், எந்தக் கட்சியினர் போராடினாலும் தமிழ்நாட்டில், எல்லா கட்சிக்காரர்களும் கருப்புச் சட்டையைத் தைத்து வைத்துக் கொண்டிருக் கிறார்கள். அய்யப்பன் கோவிலுக்குப் போகிறவனை விடுங்கள் - அது டூப்ளிகேட் - அது தற்காலிகம். ஆனால், போராட்டத்தினுடைய வடிவம் என்று சொன்னால், கருப்புச் சட்டை அணிந்துதான் போராடுகிறார்கள். ஆளும் கட்சி உள்பட - முதலமைச்சரே கருப்புச் சட்டை அணிகிறார்.
அந்த அளவிற்கு கருப்புச் சட்டை என்பது ஒரு போர்க் குணம் - போர்ப் படையினுடைய தத்துவம். பெரியார் என்பவர் தனி மனிதரல்ல என்று அண்ணா சொன்னார். ஒரு சகாப்தம், ஒரு காலகட்டம், ஒரு திருப்பம் என்றார். அந்தத் திருப்பம் இப்பொழுது வந்திருக்கிறது.
அரசியலுக்குப் போகமாட்டோம்; ஆனால், இந்தக் கூட்டம் அரசியலை தீர்மானிக்கும், நிர்ணயிக்கும்
எனவே, இந்தக் கருஞ்சட்டை விளக்கம் என்பது போராட்டத்தினுடைய சின்னமாக, அனைவரும் அணிவது மட்டுமல்ல, அடிமைத்தனம் இழிவைக் குறிக்கும். சமூகநீதி, பகுத்தறிவு மட்டும் பேசும் என்று எதிர்பார்க்கக்கூடாது. கோவில் அர்ச்சகர் உரிமை - தமிழ் வழிபாட்டு உரிமைக்காகக் குரல் கொடுக்கும். இங்கே இருக்கிறவர்கள் இன உணர்வாளர்கள், எங்கள் மண், எங்கள் மொழி. இதில் எதற்கடா இன்னொரு மொழி என்பதை எண்ணிப் பார்க்கவேண்டாமா? எவ்வளவு பெரிய சூது நடந்து கொண்டிருக்கிறது. நாங்கள் அரசிய லுக்குப் போகமாட்டோம்; ஆனால், இந்தக் கூட்டம் அரசியலை தீர்மானிக்கும், நிர்ணயிக்கும் அதை மறந்துவிடாதீர்கள்.
வாக்கு வங்கி எங்கோ இருக்கிறது என்று அரசியல் வாதிகளே, நீங்கள் யாரையோ திருப்திப்படுத்தவேண்டும் என்று பயப்படாதீர்கள்! இதோ கருஞ்சட்டை அணி உங்களைக் காப்பாற்றுவதற்காக என்றைக்கும் துணை நிற்கும். காரணம், ‘‘கருப்புச் சட்டைக்காரன் காவலுக்குக் கெட்டிக்காரன்.''
எங்களை பிரிவினைவாதிகள் என்று அச்சுறுத்தாதீர்கள்
வஞ்சிக்கப்படுகிற தமிழ்நாட்டைப்பற்றி கேட்பதற்கு நாதி உண்டா? எவ்வளவு பெரிய புயல் தாக்கியிருக்கிறது இந்த டெல்டா பகுதிகளை - இந்த நாட்டினுடைய பிரதமராக இருக்கக்கூடிய ஒருவருக்கு, சினிமா நடிகை யின் திருமண வரவேற்பிற்கெல்லாம் போக முடிகிறது. ஆனால், இந்த மண்ணில், எங்கள் செல்வங்கள், எங்கள் மக்கள் வீடு இழந்து, வாசல் இழந்து, தொழில் இழந்து, வாழ்வாதாரத்தை இழந்து நிற்கிறார்களே, அவர்களைப் பார்த்து ஒரு ஆறுதல் வார்த்தை சொல்வதற்குக்கூட இந்த நாட்டின் பிரதமர் வரவில்லை என்றால், என்ன அர்த்தம்? தமிழ்நாட்டை அவர் தனியே பிரித்துக் கொடுத்துவிட்டார் என்று அர்த்தம். நாங்கள் பிரிக்க வில்லை - நீங்கள் பிரித்துவிட்டீர்கள். நீங்கள் பிரித்தால், அதனை நாங்கள் எடுத்துக்கொள்ளத் தயாராகத்தான் இருப்போம். எனவே, எங்களை பிரிவினைவாதிகள் என்று அச்சுறுத்தாதீர்கள்.
நாங்கள் தமிழுக்குப் பிறந்தவர்கள்; நாங்கள் என்ன சமஸ்கிருதத்திற்குப் பிறந்த பேடிகளா?
சில ஆங்கில ஏடுகள், கொஞ்சம் ஆங்கிலம் தெரிந்த காரணத்தினாலே, ‘ரா' போன்ற அமைப்புகள் - இங்கே இருக்கிறவர்களைப் பார்த்துப் பேசும்போது, விடுதலைப் புலிகளைப்பற்றி பேசுகிறார்களா? ஈழ விடுதலையைப்பற்றி பேசுகிறார்களா? அல்லது தமிழ் உணர்வு வேண்டும் என்று பேசுகிறார்களா? உடனே அவர்களை எல்லாம் தமிழ் வெறியர்கள் என்று சொல்கிறார்கள். ஏண்டா, நாங்கள் என்ன சமஸ்கிருதத்திற்குப் பிறந்த பேடிகளா? நாங்கள் தமிழுக்குப் பிறந்தவர்கள்.
எங்கள் ரத்தம் தமிழ் ரத்தம் - எங்கள் ரத்தம் திராவிடர் ரத்தம். இங்கே இருக்கின்ற அணிகளைத் தனித்தனியாக சொல்லவேண்டாம் - இதற்கு ஒரே ஒரு பெயர் சொல்லவேண்டுமானால், திராவிட தமிழ்ப் பேராயம் இங்கே கூடியிருக்கிறது. இனிமேல், இந்த அணியை சொல்லும்பொழுதெல்லாம், திராவிட தமிழ்ப் பேராயம் என்று அழைக்கவேண்டும்.
தீ அணைப்புப் படை போன்றது இந்த அணி. எனவே, இழந்த உரிமைகள் நிறைய - அவற்றைத் பெறுவதற்குத் தனித்தனியே போராடவேண்டிய அவசியமில்லை. ஒரே களத்தில் நின்று போராடுவோம்.
(தொடரும்)
- விடுதலை நாளேடு, 3.1.19
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக