திங்கள், 7 மே, 2018

முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் வீரபத்திரனின் உழைப்பு இந்த இயக்கத்திற்குத் தேவை! தேவை!!

நமது இயக்கத்தினுடைய அசையும் சொத்துகள் - பெரியார் தொண்டர்கள் அசையா சொத்துகள் - நமது இலட்சியங்கள்!


முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் வீரபத்திரனின் உழைப்பு இந்த இயக்கத்திற்குத் தேவை! தேவை!!


ஆர்.டி.வீரபத்திரன் அவர்களின்  80 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவில் தமிழர் தலைவர் ஆசிரியர்




சென்னை, மே 5  வீரபத்திரன் அவர்கள் மேலும் பல்லாண்டு காலம் வாழ்ந்து, எங்களுக்கு, இயக்கத்திற்கு உறுதுணையாக இருங்கள்; உங்களுடைய உழைப்பு இந்த இயக்கத்திற்குத் தேவை! தேவை!!  என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விளக்கம் அளித்தார்.

13.4.2018 அன்று ஆர்.டி.வீரபத்திரன் அவர்களின் 80 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவில், திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார். அவரது உரை வருமாறு:

80 வயது நிறைந்த இளைஞர்

மகிழ்ச்சியோடும், எழுச்சியோடும் நடைபெறக்கூடிய முதுபெரும் பெரியார் பெருந்தொண்டராக, சீரிய கொள்கைப் போராளியாகத் திகழ்ந்து கொண்டிருக்கக்கூடிய 80 வயது நிறைந்த இளைஞரான அருமைத் தோழர் மானமிகு வீரபத்திரன் அவர்களுடைய பிறந்த நாள் விழாவிற்குத் தலைமை ஏற்றிருக்கக்கூடிய வீரபத்திரன் அவர்களுடைய அண்ணார் பெரியவர் அய்யா குப்புசாமி அவர்களே,

முன்னிலை ஏற்றிருக்கக்கூடிய அருமை நண்பர்கள் நித்தி யானந்தம் அவர்களே, சுந்தரம் அவர்களே, தனசேகரன் அவர்களே,

வரவேற்புரையாற்றிய வீரபத்திரன் அவருடைய அன்புச் செல்வன் தோழர் கதிரவன் அவர்களே,

இந்நிகழ்வில் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கியுள்ள கழகத் துணைத் தலைவர் மானமிகு கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களே,

கழகப் பொதுச்செயலாளர் மானமிகு அன்புராஜ் அவர்களே, கழகப் பிரச்சார செயலாளர் வழக்குரைஞர் மானமிகு அருள் மொழி அவர்களே,

இந்நிகழ்வில் கலந்து சிறப்பிக்கின்ற திராவிட முன்னேற்றக் கழகத்தின் நீலாங்கரை ஊராட்சி மன்றத்தின் முன்னாள் தலைவரும், சீரிய செயல்வீரரும், கொள்கை வீரருமான தோழர் அருமைச் சகோதரர் எட்டியப்பன் அவர்களே,  பிரச்சாரகர் பெரியார் செல்வன் அவர்களே, கருநாடக மாநில கழகத் தலைவராக இருக்கக் கூடிய அருமை நண்பர் ஜானகிராமன் அவர்களே, கருநாடக மாநில கழகத் தோழர்களே,  அங்கிருந்து வந்திருக்கக் கூடிய முதுபெரும் தோழர் 97 வயது முடிந்து, 98 வயது தொடங்க விருக்கக்கூடிய எங்கள் தோழர் இளைஞர் நாடக வித்தகர் வேலு அவர்களே,

கருநாடக மாநில செயலாளர் தோழர் முல்லைக்கோ அவர் களே, பெருமதிப்பிற்குரிய சிந்தனையாளர் அய்யா ரத்தினம் அவர்களே, தமிழ்ச்சங்கத்தினுடைய பொறுப்பாளர்களே, இயக்கப் பொறுப்பாளர்களே, காலத்தைக் கருதி நான் ஒவ் வொருவரையும் தனித்தனியே விளிக்க வாய்ப்பில்லை என்ப தற்குப் பொருத்தருளவேண்டும்.

குறிப்பாக சொல்லவேண்டுமானால், நம்முடைய பெருமதிப் பிற்குரிய சோழிங்கநல்லூர் சட்டமன்ற தி.மு.க. உறுப்பினர் அருமை சகோதரர் அரவிந்த் ரமேஷ் அவர்களே, காங்கிரசு இயக்கத்தைச் சார்ந்த கேசவப் பெருமாள் அவர் களே, சி.அய்.டி. என்.சி.யூ. தலைவர் அய்யா தோழர் ராமன் அவர்களே,

ஆந்திர நாத்திக சமாஜத்தைச் சேர்ந்த தோழர்களே, குறிப் பாக சாரய்யா அவர்களே, அவருடைய குழுவினர்களே, அருமை தாய்மார்களே, பெரியோர்களே, வீரபத்திரன் அவர் களுடைய அன்புச்செல்வங்களே, பேரக் குழந்தைகளே, நண்பர்களே உங்கள் எல்லோருக்கும் என்னுடைய அன்பான வணக்கத்தினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இயக்கக் குடும்பத்தின் முக்கிய பொறுப்பாளன் என்கிற முறையில் வருக! வருக!! வருக!!!

இந்த நிகழ்ச்சி ஒரு நல்ல கொள்கைக் குடும்ப விழா நிகழ்ச்சியாகும். இது நம்முடைய குடும்பம். இந்தக் குடும்பத்தில், எந்த விழாவாக இருந்தாலும், நாங்கள் வந்து நடத்துகிறோம் என்று சொன்னால், முதலாவதாக உங்கள் அனைவரையும், இயக்கக் குடும்பத்தின் முக்கிய பொறுப்பாளன் என்கிற முறையில் வருக! வருக!! வருக!!! என நான் வரவேற்கக் கடமைப்பட்டு இருக்கிறேன்.

ஏனென்றால், இது இயக்கக் குடும்பம். ஆங்கிலத்தில் ஒரு சொல்லாடல் உண்டு. ரத்தம் தண்ணீரைவிட கெட்டியா னது. மேலைநாட்டவர்கள் அதைத்தான் சொல்லிக் கொண்டி ருந்தார்கள். அறிவாசான் தந்தை பெரியார் அவர்கள்தான், இதைவிட ஒரு படி மேலே போய் ஒன்றை உருவாக்கினார்கள். அதைத்தான் நாங்களும் எங்கும் சொல்லிக் கொண்டிருக்கிறோம்.

தண்ணீரைவிட ரத்தம் கெட்டியானது; ஆனால், ரத்தத்தை விட, கொள்கை உறவு என்பது இருக்கிறதே, அது பிரிக்க முடியாத அளவிற்கு மிகவும் கெட்டியானது.

கருப்புச் சட்டை அணியாத கட்சிக்காரர்களே இல்லை

இப்பொழுது கருஞ்சட்டை என்று சொல்வதைக்கூட, நிதானமாக சொல்லவேண்டும். ஏனென்றால், கருப்புச் சட்டை அணியாத கட்சிக்காரர்களே இல்லை என்ற நிலைதான் இன்று. எல்லாக் கட்சியினரும் கருப்புச் சட்டையைத் தைத்து வைத்துக் கொண்டிருக்கின்றனர்.

ஒருவருக்கு மூச்சுத் திணறினால், உடனே ஆக்சிஜன் குழாயை அவருக்குப் பொருத்துவார்கள். அதுபோல, எல்லாக் கட்சிக்காரர்களும், போராட்டம்,  நியாயம், நீதி இவைகளைக் கேட்பதற்கு, கருப்புச்சட்டையை அணிந்துதான் கேட்கிறார்கள். நேற்று தமிழ்நாடே கருப்பு மயமாக இருந்தது.

அய்யிரண்டும் திசை முகத்தும் தன்புகழை வைப்பவன் என்று இராவணனுக்குச் சொன்னார் புரட்சிக்கவிஞர் அவர்கள்.

அய்யிரண்டும் திசை முகத்தும் - பத்து திசை என்றார். அதனால்தான், பத்து தலை என்று தவறாகச் சொன்னார்கள். பத்து திசையிலும் அவன் புகழ் போற்றும் - இராவணன்- அது போலத்தான் இந்த இயக்கம், இந்தக் கொள்கைகள்.

அப்படிப்பட்ட சூழ்நிலையில், இன்றைக்கு என்ன வாய்ப்பு என்று சொன்னால், மேலே கருப்பு, கீழே கருப்பு, பறப்பதும் கருப்பு என்றுதான் நேற்றைய நிலை (மோடி சென்னைக்கு வந்தபோது) இருந்தது.

எங்கள் இயக்கத்தினுடைய அற்புதமான சொத்துக்களில் ஒன்று!

நம்முடைய அருமை முதுபெரும் பெரியார் பெருந் தொண்டர் லட்சிய வீரர் ஆர்.டி.வீரபத்திரன் அவர்கள் எங்கள் இயக்கத்தினுடைய அற்புதமான சொத்துக்களில் ஒன்று.

பல பேர் சொல்வார்கள், பெரியார் நிறைய சொத்துகளை விட்டுச் சென்றிருக்கிறார் போலிருக்கிறதே - பெரியார் எவ்வளவு சொத்து வைத்திருக்கிறார் என்று.

நாங்கள் சொல்கிறோம், ஆமாம்; நிறைய சொத்துகளை விட்டுச் சென்றிருக்கிறார். ஏராளமான அசையா சொத்துகளும் நிறைய இருக்கிறது; அசையும் சொத்துகளும் நிறைய இருக்கிறது.

அப்படியானால், எத்தனை கோடி ரூபாய் சொத்து இருக்கும்? ஒரு ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேலிருக்குமா? என்று ரூபாயில் கணக்குப் போடுவார்கள்.

அசையும் சொத்துகள் - அசையா சொத்துகள்!

தனசேகரன் இன்கம்டாக்ஸ் துறையைச் சார்ந்தவர், அவர் போல இருப்பவர்கள், கணக்குப் பார்த்து குறிப்பெடுப்பார்கள். ஆனால், நண்பர்களே, எங்களுடைய கணிப்பில், பெரியார் தொண்டர்களுடைய கணிப்பில், சுயமரியாதை வீரர்களுடைய திட்டத்தில், அசையும் சொத்து என்பது, இதோ இங்கே கருஞ்சட்டை வீரர்கள் இருக்கிறார்களே, கொள்கை வீரர்கள், இந்தக் கொள்கை லட்சிய வீரர்கள்தான், பெரியார் விட்டுச் சென்ற அசையும் சொத்துக்கள்.

அசையா சொத்துகள், எங்களுடைய லட்சியங்கள். யாராலும் அசைக்க முடியாத சொத்துக்கள்.

அப்படிப்பட்ட அசையும் சொத்துகளில் ஒரு சொத்துக்கு, இன்றைக்கு 80 வயதாகிறது. இந்த வயது குறிக்கோள் இருக்கிறதே, அது அவருடைய பிறந்த நாளைக் கணக்குப் போட்டால், 80 வயது. அவர் வேலை செய்வதைக் கணக்குப் போட்டால், 20 வயதுதான்.

பிறந்த நாள் மலர் ஒரு அற்புதமான கொள்கை ஆவணம்

வீரபத்திரன் அவர்கள் எத்தனையோ தடைகளைத் தாண்டியிருக்கிறார். நம்முடைய வழக்குரைஞர் சுந்தரம், தனசேகரன் ஆகியோர் முயற்சி எடுத்து பிறந்த நாள் விழா மலர் வெளியிட்டிருக்கிறார்கள். இந்த மலர் ஒரு அற்புதமான கொள்கை ஆவணம். அதற்காக அவர்களைப் பாராட்டுகிறேன்.

வீட்டிலிருந்து புறப்படுவதற்கு முன்பு, காலையில் அறிவாலயத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டம்; பிறகு ஆளுநர் சந்திப்பு - பிறகு அலுவலகம் என்று தொடர் நிகழ்வுகள் இருந்தது. இப்படி இருந்தாலும், ஏதாவது புத்தகம் கொடுத்தால், அதனைப் படிக்காமல் நான் வருவது கிடையாது, அது இயல்பானது. இந்தப் பிறந்த நாள் மலரை அவசர அவசரமாகப் புரட்டிப் பார்த்தேன்.

ஏற்கெனவே நம்முடைய கவிஞர் அவர்கள், வீரபத்திரன் அவர்களைப் பேட்டி கண்டு, விடுதலை ஞாயிறுமலரில், அற்புதமான படங்களோடு வெளியிட்டிருக்கிறார்.

இளைஞர்கள் அவர்களுடைய வாழ்க்கை வரலாற்றைப் படிக்கவேண்டும்

எனக்கே பல செய்திகள் நினைவில்லை. இந்த மலரைப் படித்தவுடன்தான் ஞாபகத்திற்கு வருகிறது. வி.பி.சிங் அவர்களிடம் இவரை அறிமுகப்படுத்துகிறோம், அதனை யெல்லாம் இவர் நினைவு கூர்கிறார். நாங்கள் அதைத் தொகுத்து வைக்கவில்லை. இவர் மிகவும் கெட்டிக்காரர், எல்லாவற்றையும் தொகுத்து வைத்திருக்கிறார். அதனை ஆவணப்படுத்தியிருக்கிறார். இப்படிப்பட்ட இந்த மலரைப் பார்க்கின்றபொழுது, ஒவ்வொரு இளைஞரும், எங்களுடைய இயக்கத்தவர்களுக்கு மட்டுமல்ல, பொதுவாக, இளைஞர்கள் என்பவர்கள், அவர்களுடைய வாழ்க்கை வரலாற்றைப் படிக்கவேண்டும்.

ஒரு சுயமரியாதைக்காரர், ஒரு பெரியார் பெருந்தொண்டர், ஒரு முரட்டுக்கொள்கைவாதி; எதற்காகவும் சமரசம் செய்து கொள்ளத் தெரியாத ஒரு லட்சியவாதி. அப்படிப்பட்ட ஒருவர் எப்படி வாழ்ந்திருக்கிறார்? எப்படியெல்லாம் பல கட்டங்களைத் தாண்டியிருக்கிறார்? என்பதை நீங்கள் நினைத்துப் பார்க்க வேண்டும்.

நான்காம் வகுப்புவரைதான் அவருடைய படிப்பு. பெரியார் என்ன படித்தாரோ அதைத்தான் நானும் படிப்பேன், அதற்குமேல் நான் படிக்கமாட்டேன் என்று உறுதியாக இருந்திருக்கிறார்.

நாங்கள் எல்லாம் படித்து பட்டம் வாங்கினவர்கள் என்றுதான் பெயர். எங்களுக்குப் பெரிய தடையே என்னன்றால், இந்தப் படிப்புதான் தடை. படிப்பு ஒரு பக்கத்தில் ஒரு அணை; ஒரு பெரிய கருவி என்பது உண்மை.

ஆனால், படித்தவர்களான எங்களுக்கு ஒரு வட்டத்திற் குள்ளேயேதான் சிந்திக்க முடியும். பெரியார் ஒப்பற்ற சுய சிந்த னையாளராக, உலகத்தின் பகுத்தறிவு பகலவனாக வந்ததற்குக் காரணமே, நான்காவது வரைதான் படித்திருக்கிறார் என்பதே - அதற்குமேல் அவர் படிக்கவில்லை. கல்லூரிக்குப் போயிருந்தார் என்றால், அவர் பெரியாராக ஆகியிருக்கமாட்டார். அவர் வக்கீலாகவோ, டாக்டராகவோ, பொறியாளராகவோ ஆகியிருப் பார். நமக்குப் பெரியாராக கிடைத்திருக்கமாட்டார். அதனால் நான், எல்லோரும் படிக்காமல் இருக்கவேண்டும் என்று சொல்கிறாரே, என்று தவறாக நினைக்கக்கூடாது. ஒரு பெரியார் தான் அப்படி இருந்தார்.

ஒப்பாரும் மிக்காரும் இல்லாத ஒரு தலைவராகத் தந்தை பெரியார் அவர்கள் வளர்ந்ததற்குக் காரணம், சுயசிந்தனை. தன்னை ஆளாக்கிக் கொண்டார்.

பன்மொழிப் புலவரான வீரபத்திரன்!

அதேபோன்று, பெரியார் பெருந்தொண்டர்களில், நம்மு டைய வீரபத்திரன் அவர்கள். இவர் முதலில் எவ்வளவோ கஷ்டப்பட்டு இருக்கிறார். வீட்டை விட்டு ஓடிப்போனார்; ரயிலில் ஏறிச் சென்றார். இப்பொழுது இவர் பன்மொழிப் புலவராக இருக்கிறார். திராவிட நாட்டையே வலம் வருகிறார். நாங்கள்கூட திராவிட நாட்டை அவ்வளவாக வலம் வரவில்லை.

கருநாடகத்தில் வீரபத்திரர்; ஆந்திராவில் வீரபத்திரன்; தெலுங்கில் பாக்கியாச்சாரி. தெலுங்கு பேசுவார்; கன்னடம் பேசுவார். நாங்கள் விஜயவாடாவிற்குச் சென்றால், வீரபத்திரன் அவர்களைத்தான் அழைத்துச் செல்வோம். ஆகவே, அப்படிப்பட்ட உணர்வாளர் அவர்.

அவ்வளவு வாய்ப்புகளையும் சுயமாக உருவாக்கிக் கொண்டவர்.

யார், வாழ்க்கையில் மிகுந்த தொல்லைகளை, துன்பங்களை இளமையில் அனுபவிக்கிறார்களோ, அவர்கள் பின்னாளில் மிகப்பெரிய இன்பத்தை அடையக்கூடிய வாய்ப்பு உண்டு.

நீங்கள் தள்ளலாம்; கொள்ளலாம், அது உங்களுடைய உரிமை

சங்கடங்களை, தடைகளைப் பார்த்து சலித்துவிடக்கூடாது. உழைப்பு, கடுமையான உழைப்புதான் அவர் இந்த நிலைக்கு வரக்காரணம். நாங்கள் தலையெழுத்து என்ற ஒன்றை நம்புவது கிடையாது. இங்கே பலதரப்பு மக்கள் வந்திருக்கிறார்கள். அவர்கள் இந்தக் கருத்தை ஏற்றுக்கொள்ளவேண்டும் என்பது முக்கியமல்ல; கேளுங்கள், இவற்றை நீங்கள் தள்ளலாம்; கொள்ளலாம், அது உங்களுடைய உரிமை.

அந்த அடிப்படையில் பார்க்கும்பொழுது, பெரியார் கொள்கை ஏன் உயர்ந்தது? என்றால், நம்பிக்கையாளர்கள் என்ன சொல்வார்கள், எதுவும் நம் கைகளில் இல்லீங்க; மேலே கையைக் காட்டி, அவன் விட்ட வழி என்பார்கள்.

பிரபலமான டாக்டர்கள், பெரிய கெட்டிக்கார டாக்டர்களிடம், என்ன டாக்டர் நோயாளி எப்படி இருக்கிறார் என்று அவருடைய உறவினர் கேட்டால்,

அந்த டாக்டர் என்ன சொல்வார், நான் செய்வதையெல்லாம் செய்துவிட்டேன். இனிமேல் கடவுள் விட்ட வழிதான் என்று சொல்வார்.

நாங்கள் வேடிக்கையாக, நகைச்சுவைக்காக சொல்வது என்னவென்றால்,

மருத்துவமனையில் நோயாளி குணமடைந்து வெளியே வரும்பொழுது, பீஸ் கொடுக்காமல் வெளியே வரவேண்டும்.

அப்படி வரும்பொழுது, பீஸ் கொடுங்கள் என்று டாக்டர் கேட்டால்,

எல்லாம் அவன்தானே செய்தான்; அவனிடமே நான் பீஸ் கொடுத்து விடுகிறேன் என்று சொன்னால், டாக்டர் விட்டுவிடுவாரா? பீஸை வைத்துவிட்டுப் போ என்றுதானே சொல்வார்!

பீஸ் வேண்டும் என்கிறபோது, இவர். பயன்படாத நேரத்தில் மேலே இருக்கிறவன். காரணம் வேறொன்றும் இல்லை. தோல்வியை ஏற்றுக்கொள்ள பக்குவம் இல்லாததுதான்.

அந்த எண்ணம் - இரட்டை வாழ்க்கை - சுயமரியாதைக் காரர்களுக்கு, திராவிடர் கழகத்துக்காரர்களுக்குக் கிடையாது.

வீரபத்திரன் அவர்கள் மூட்டைத் தூக்கி சம்பாதித்திருக்கிறார். சைக்கிள் ரிக்ஷா ஓட்டியிருக்கிறார் ஆந்திராவில்.

இப்படி படிப்படியாக உயர்ந்து, வளர்ந்து அவரே ஒரு பொது வான வாழ்க்கையை அமைத்துக் கொண்டார்.

பகுத்தறிவாளர்களுக்கும், மற்றவர்களுக்கும் உள்ள வித்தியாசம்!

இவ்வளவு வறுமையில் இருந்து, உழைப்பினால் பயன்பெற்று வசதி வந்தது; வசதி வந்ததும் நண்பர்கள் சேருவார்கள். அது கொடுப்பதற்காக அல்ல; கெடுப்பதற்காக.

அதுபோன்று வந்த நேரத்தில், நான் தவறான பழக்க வழக்கங்களில் ஈடுபடவேண்டி இருந்தது என்று வெளிப் படையாக சொல்கிறார். இதுதான் பகுத்தறிவாளர்களுக்கும், மற்றவர்களுக்கும் உள்ள வித்தியாசம்.

தவறு என்று நினைக்கின்ற காரியத்தை செய்யக்கூடாது; அப்படி செய்தால், அதற்குரிய தண்டனை என்னவோ அதனை அனுபவிப்பதற்கும் நாங்கள் தயாராக இருக்கிறோம் என்று சொல்லி, தங்களைத் திருத்திக் கொள்ளவேண்டும்.

சுயமரியாதைக் கொள்கையின் அடிப்படையே, திருந்து அல்லது  திருத்து என்பதுதான்.

நாங்கள் சொல்வதைக் கேட்டு, நீங்கள் திருந்தவேண்டும்; நாங்கள் தவறாக சொன்னோம் என்றால், நீங்கள் எங்களைத் திருத்தவேண்டும். நாங்கள் திறந்த மனதோடு இருக்கிறோம். இதுதான் பெரியார் அவர்களுடைய கொள்கை.

வாழ்க்கை நெறிதான் மிகவும் முக்கியமானது

அந்த வகையில், வீரபத்திரன் அவர்களுடைய வாழ்க்கை என்பது, ஏராளமான முள், கல், பாறை இவை அத்தனையும் கடந்து, கொள்கை வீரராகத் திகழ்கிறார். எப்பொழுது அவர் முழு வாழ்க்கையைப் பெறக்கூடிய அளவிற்கு வருகிறார், பக்குவம் பெறுகிறார் என்றால், எப்பொழுது அவர் பெரியார் கொள்கையை தேர்ந்தெடுத்தாரோ, அந்த நொடியில் இருந்து அவர் பக்குவம் பெறுகிறார். அந்த வாழ்க்கை நெறிதான் மிகவும் முக்கியமானது.

சுயமரியாதை வாழ்வு சுக வாழ்வு! அந்த சுகவாழ்வினை இன்றைக்கு வீரபத்திரன் அவர்கள் அனுபவித்துக் கொண்டி ருக்கிறார். அவர் மட்டுமல்ல, அவருடைய பிள்ளைகள், பேரப் பிள்ளைகள். தம்மின் தம்மக்கள் அறிவுடைமை - இவரைவிட, இவருடைய பிள்ளைகள் மிகவும் கெட்டிக்காரர்கள். மகன், மருமகள் மிகவும் நன்றாக இருக்கிறார்கள்.

இந்த நேரத்தில் வீரபத்திரன் அவர்களை எவ்வளவு பாராட் டுகிறோமோ, அதைவிட ஒருபடி அதிகமான பாராட்டுக் குரியவர்கள், மறைந்தும், மறையாமலும் நம் நெஞ்சங்களில் நிறைந்திருக்கிற கஸ்தூரி அம்மையார் அவர்களாவார்கள். எனக்கு அந்த அம்மையாரை நன்கு தெரியும்; எங்கள் வீட்டிற்கு வந்து, என்னுடைய துணைவியாரிடம் நன்றாகப் பழகுபவர்.

துணைவியார் மறைவுற்றார் என்பதினால், வீரபத்திரன் அவர்கள் மனம் உடைந்துபோகவில்லை. பொதுவாழ்க்கைக்குத் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.

அன்னை நாகம்மையார் மறைவும்; பெரியாரின் எழுத்தும்!

நாகம்மையார் அவர்கள் மறைந்தவுடன் அய்யா அவர்கள் எழுதினார்.

என் காதல் போயிற்றா? அன்பு போயிற்றா? என்றெல்லாம் எழுதிவிட்டு, கடைசியில்,

சரி, நாகம்மையார் மறைந்துவிட்டார். அதற்குப் பிறகு, எனக்கு இருந்த பிக்கல்கள் எல்லாம் தீர்ந்து போய்விட்டது; நான் இன்னும் தாராளமாகப் பொதுத் தொண்டில் ஈடுபடுவதற்கு வாய்ப்பு வந்துவிட்டது என்று எழுதுகிறார்.

அதுபோன்று, வீரபத்திரன் அவர்கள் இந்த இயக்கம், கொள்கை என்று வந்ததினால், முழுக்க முழுக்க கொள்கை வீரராக அவர் திகழ்ந்து, இன்றைக்குப் பல பேரை உருவாக்கி இருக்கிறார். தனசேகரன் அவர்கள் கருப்புச் சட்டை அணிந்து கொண்டு இந்தக் கொள்கையைச் சொல்கிறார் என்றால், நம் முடைய வீரபத்திரன் அவர்கள் செதுக்கியதால்தான்; இது போன்று பல பேரை செதுக்கியிருக்கிறார் அவர்.

வீரபத்திரன் ஒரு எடுத்துக்காட்டு!

பெரியாரை கொள்கைகள் என்னோடு சரிங்க என்று சொல்லக்கூடாது; நம்முடைய பிள்ளைகளை அடுத்துக் கொண்டு வரவேண்டும். மதம் எப்படி வளர்ந்தது? குடும்பம் குடும்பமாகப் போகிறார்கள்; பெண்களை அழைத்துக் கொண்டு போகிறார்கள். அதனால்தான், மதம் வளர்ந்தது. அதுபோல, இந்தக் கொள்கை என்பது ஆயிரங்காலத்துப் பயிர். பெரியார் கொள்கையைப் பின்பற்றவேண்டும் - அப்படிப் பின்பற்றுகிறவர்கள் தாழமாட்டார்கள்; வீழமாட்டார்கள்; எழு வார்கள்; உயருவார்கள் என்பதற்கு வீரபத்திரன் அவர்கள் ஒரு அற்புதமான எடுத்துக்காட்டு. அதனால்தான், அவருக்கு இந்த விழா!

இந்தக் கொள்கையை ஏற்றவர்கள் ஒருக்காலும் கீழே விழமாட்டார்கள்; இந்த இயக்கத்தில், நாங்கள் எல்லாம் மதிக்கின்ற அளவிற்கு இருக்கிறார். அவருடைய துணைவியார் இறந்தபொழுதுகூட, நாங்கள் சாதாரணமாக சொல்லியதைக்கூட, கட்டளை போன்று எடுத்துக்கொள்ளக்கூடியவர்.

இயக்கத் தோழர்களின் சலிப்பில்லாத உழைப்பு - ஒத்துழைப்பு

இன்றைக்குத் தந்தை பெரியார் உருவமாக இல்லாமல், நம்மோடு நடமாடாமல், தத்துவ ரீதியாக இருக்கிறார் உலகம் முழுவதும். அவர் மறைந்து 45 ஆண்டுகள் ஆகிவிட்டன; ஆனால், அவர் வாழ்ந்த காலத்தைவிட, இப்பொழுதுதான் உலகம் முழுவதும் பெரியார், பெரியார் என்று அந்த ஒலி முழக்கம் கேட்டுக்கொண்டிருக்கிறது என்றால், இதற்கு யார் காரணம்? இதுபோன்ற இயக்கத் தோழர்களின் சலிப்பில்லாத உழைப்பு - ஒத்துழைப்பு.

ஒரு இயக்கத்தில் மூன்று வகையானவர்கள் உண்டு.

ஒன்று, கொள்கை ரீதியாக இருக்கக்கூடியவர்கள் - தலைமை, பொறுப்பில் இருக்கக்கூடியவர்கள்.

ரத்த ஓட்டம் போன்றவர்கள்; ரத்தம் ஓட்டத்தைப் பிரிக்க முடியாது

இரண்டாவது, அந்தக் கொள்கையைப் பிரச்சாரம் செய்யக் கூடிய பேச்சாளர்கள். அவர்கள் இந்தக் கொள்கையைப் பரப்பக்கூடியவர்கள். அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்றால்,  அணி (நகையணி) போன்றவர்கள், எப்படி என்றால், நன்றாகப் பேசுகிறார்; மிகவும் சிறப்பாகப் பேசுகிறார்;  மிகவும் அற்புதமான பேச்சு; பலரை ஈர்க்கக்கூடிய பேச்சு; உங்களுடைய பேச்சைக் கேட்டுத்தான், இந்த இயக்கத்திற்கு வந்தேன் என்று சொல்லக்கூடிய அளவிற்கு, ஜொலிக்கக்கூடிய அணி - அவர்கள் பேச்சாளர்கள், விரிவுரையாளர்கள் எல்லாம். இவை உடம்பிற்கு மேல் உள்ளது. எப்பொழுது வேண்டுமானாலும் கழற்றி வைக்கலாம்; எப்பொழுது வேண்டுமானாலும் அணிந்துகொள்ளலாம்.  சில நேரங்களில் காணாமற்போகும்; சிலர் திருடிக் கொண்டும் செல்வர். எல்லா நேரங்களிலும் அது பயன்படாது.

ஆனால், வீரபத்திரன்களைப் போன்று இருக்கக்கூடிய செயல்வீரர்கள் இருக்கிறார்களே இயக்கத்தில், அவர்கள் ரத்த ஓட்டம் போன்றவர்கள். ரத்தம் ஓட்டத்தைப் பிரிக்க முடியாது.

தந்தை பெரியாரின் பச்சைக் கல் மோதிரத்திற்கு...

பல இயக்கங்களில் இருந்து பிரிந்து போகிறார்களே, அதற்கு என்ன காரணம்? அணி - அந்த அணிகூட, நகையணிகூட யாரிடம் இருந்தது என்பது வரையில்தான் பெருமை. மோதி ரத்தை எல்லோரும் அணிந்துகொள்கிறார்கள்; ஆனால், பெரியாரிடம் இருந்த பச்சைக் கல் மோதிரத்திற்கு இருந்த மரியாதை, வேறு எந்தப் பச்சைக் கல் மோதிரத்திற்காவது - அதிர்ஷ்டக் கல்லுக்காவது உண்டா? கிடையவே கிடையாது.

காரணம், அந்த மோதிரத்தினுடைய தன்மை என்ன? அந்த மோதிரம் இருந்த விரல்களுடைய பெருமை - அதனை நினைத்துப் பார்க்கவேண்டும்.

இன்றைக்கு அந்த மோதிரம் யாரிடம் இருக்கிறது என்றால், பெரியார் மோதிரத்தை நான் வைத்திருக்கிறேன் என்று சத்தியராஜ் சொன்னாரே, அது மிகப்பெரிய பெருமை என்று அவரே சொல்கிறார் அல்லவா?

ஒரு இயக்கத் தோழர்கள் எப்படி இருக்கவேண்டும்?

மிக நீண்ட காலத்திற்கு முன் புத்தர் அவர்கள், ஒரு இயக்கத்தை வளர்க்கவேண்டும் என்றால், இயக்கத் தோழர்கள் எப்படி இருக்கவேண்டும்? என்று ஒரு வரையறைத் திட்டத்தைச் சொன்னார். ஆனால், பல பேர் அதை சடங்காக்கி விட்டார்கள். அய்யா அவர்கள்தான் அதற்கு அழகாக விளக்கம் சொன்னார்.

புத்தம் சரணம் கச்சாமி

தம்மம் சரணம் கச்சாமி

சங்கம் சரணம் கச்சாமி

இதற்கு என்ன விளக்கம் என்னவென்றால்,

புத்தம் சரணம் கச்சாமி என்பது,  நீ யாரைத் தலைவனாக ஏற்றுக் கொண்டிருக்கிறாயோ, அவனிடத்தில் உண்மையாக நடந்து உறுதியோடு பின்பற்று என்பதாகும்.

அதுபோலவே தம்மம் சரணம் கச்சாமி என்பதற்குப் பொருள், நீ ஏற்றுக் கொண்டுள்ள கொள்கைகளை உண்மையான முறை யில் கடைப்பிடித்து வர வேண்டும். அந்தக் கொள்கைக்கு மாறாக நடக்கக் கூடாது உறுதியோடு அவைகளைப் பின்பற்ற வேண்டும் என்பதுதான்.

மூன்றாவதாக சங்கம் சரணம் கச்சாமி என்றால், அந்த அமைப்பிற்கு எந்தவித இழுக்கும் வராத வண்ணம்  நடந்து கொள்ள வேண்டும். அமைப்பின் பெருமையை நீ கருத வேண்டும் என்பதுதானேயொழிய வேறில்லை. ஆகவே இந்த மூன்றுக்கும் அர்த்தம் (பொருள்) என்ன வென்றால்,

நீ உன் தலைவனை மதி! பின்பற்று

உன்னுடைய கொள்கைகளை உறுதியாக இரு!

உன் இயக்கத்திற்கு மரியாதை செய்து பாதுகாத்து வா என்பதாகும் (துரோகம் நினைக்காதே).

ஒரு இலட்சியத் தொண்டன் என்பதற்கு அடையாளம்!

இந்த மூன்றிலும் நான் என்னை ஒப்படைத்துவிட்டேன் என்று சொல்வது இருக்கிறதே, அதுதான் முழுமையான ஒரு இலட்சியத் தொண்டன் என்பதற்கு அடையாளம். அப்படிப்பட்ட ஒரு அற்புதமானவர்தான் 80 வயதை விழாவை எட்டிப் பார்க்கக்கூடிய நம்முடைய வீரபத்திரன் அவர்களாவார்கள். அதற்காகத்தான் அவர்களுக்கு இந்தப் பாராட்டு விழா!

அடுத்ததாக, அவருடைய நூறாண்டு விழாவினை பெங்க ளூரில்தான் நடத்தவேண்டும்; பெங்களூரில் நடத்துவது போன்றே, சென்னை பெரியார் திடலில் நடத்துவோம், அதி லொன்றும் சந்தேகமேயில்லை. யாதும் ஊரே, யாவரும் கேளிர் நமக்கு.

90 நிச்சயம்; 100 லட்சியம்! நான் அவரிடம் சொன்னேன், உங்களுடைய நூற்றாண்டு விழாவினை நான் வந்து நடத்தவேண்டும் என்று சொன்னவுடன்,

அவர், நிச்சயமாக அய்யா என்று சொல்லிவிட்டு, 90 நிச்சயம்; 100 லட்சியம்! என்றார்.

அப்படி அவர் சொன்னதும், எனக்கும் ஒரு நம்பிக்கை வந்தது. இவருடைய நூற்றாண்டு விழாவில், நாம் பாராட்டலாம் என்று.

ஆகவே, இந்த உற்சாகம், இந்த ஊக்கம், இந்த சிறப்பு - இந்தக் கொள்கையைக் கடைபிடிக்க கடைபிடிக்க, இந்தக் கொள்கை வளர வளர நமக்கு நிச்சயமாக தன்மான வாழ்வுதான்.

நான் 20 வயது, 25 வயது இளைஞனைப் போல் உழைப்பேன்!

ஒருவருக்கு பிசியாலாஜிக்கல் ஏஜ் என்பது ஒன்று; இஸ்டாரிக்கல் ஏஜ் என்பது ஒன்று. பிசியாலாஜிக்கல் ஏஜ் என்பது உடல் உறுப்புகளைப் பொருத்தது. அதற்கு ஒரு வயது உண்டு. நாம் என்னதான் வேகமாக இருந்தாலும், நம் உடல் உறுப்புகளுக்கு ஒரு தன்மை உண்டு - ஒரு வயது உண்டு. ஆனால், சைக்காலஜிக்கல் ஏஜ் - மனோதத்துவமான ஒரு வயது இருக்கிறதே - அது 80 ஆனால் என்ன? 90 வயதானால் என்ன? நான் 20 வயது, 25 வயது இளைஞனைப் போல் உழைப்பேன் என்கிற மனோதத்துவம்.

தந்தை பெரியாரின் விளக்கம்!

ஆகவேதான், தந்தை பெரியார் அவர்கள் சொன்னார்,

நான் இளைஞர் என்று ஒருவரை சொல்லுவது என்பது வயதைப் பொருத்ததல்ல; பின் எதைப் பொருத்தது என்றால், இயக்கத்தில் அவர் கொள்கின்ற ஈடுபாட்டைப் பொருத்தது. அதை வைத்துத்தான் முடிவு செய்வேன் என்று சொன்னார்.

அந்த வகையில், அருமை வீரபத்திரன் அவர்களே, நீங்கள் நல்ல அளவிற்கு மேலும் சிறப்பாக வாழுங்கள். எதைப்பற்றியும் கவலைப்படாதீர்கள். உங்களுக்கு கஸ்தூரி அம்மா இல்லை என்று சொன்னாலும், உங்களுடைய பேரப் பிள்ளைகள் அத்துணை பேரும் சிறப்பாக இருக்கிறார்கள். உங்கள் மகன், உங்கள் மகள்கள் இந்த ரத்த உறவுகளைவிட, இன்னும் சிறப்பான உறவுகள் இந்தக் கொள்கை உறவுகள் இன்னும் அவர்கள் பெரிதாக இருக்கிறார்கள்.

வீரபத்திரனுக்கு இன்னொரு பிளஸ் பாயிண்ட்!

இதைத் தாண்டி அவருக்கு இன்னொரு பிளஸ் பாயிண்ட் இருக்கிறது. அது என்னவென்றால், அவரோடு பணியாற்றியவர்கள் இருக்கிறார்களே, அவர்கள் எல்லாம் இங்கே வந்திருக்கிறார்கள். அந்த இளைஞர்கள் எல்லோரும் இன்றைக்கு ஒன்று சேர்ந்திருக்கிறார்கள். ஒருவருடைய வாழ்க்கை முதுமையை நோக்கிச் செல்கிறபொழுது, யார் நிறைய நண்பர்கள் வட்டத்தை வைத்திருக்கிறார்களோ, நிறைய தோழர்களை யார் சந்திக்கிறார்களோ, அவர்களுடைய ஆயுள் என்பது இருக்கிறதே நீளும். அது நீளுவதின் ரகசியம் நல்ல நட்பு வட்டம்தான்!

கொள்கை உறவுகளை சம்பாதித்திருக்கிறார்

வைதீகர்கள் இதைத்தான் கொடுத்து வைத்தவர்கள் என்று சொல்வார்கள். நாம் எங்கேயும் கொடுக்கவேண்டிய அவசியமில்லை. அந்த அளவிற்கு உழைத்து சம்பாதித்திருக்கிறார். அவர் சம்பாதித்தது வெறும் பொருள்களையல்ல. அவர் சம்பாதித்தது நட்பை சம்பாதித்திருக்கிறார்; கொள்கை உறவுகளை சம்பாதித்திருக்கிறார். அந்தக் கொள்கையில் உறுதியாக இருக்கவேண்டும் என்கிற உறுதியைப் பெற்றிருக்கிறார்.

உங்களுடைய உழைப்பு இந்த இயக்கத்திற்குத் தேவை! தேவை!!

எனவே, வீரபத்திரன் அவர்கள் மேலும் பல்லாண்டு காலம் வாழ்ந்து, எங்களுக்கு, இயக்கத்திற்கு உறுதுணையாக இருங்கள்; உங்களுடைய உழைப்பு இந்த இயக்கத்திற்குத் தேவை! தேவை!! என்று கூறி, என்னுரையை முடிக்கின்றேன்.

நன்றி, வணக்கம்!

வாழ்க பெரியார்! வளர்க பகுத்தறிவு!!

- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.

-  விடுதலை நாளேடு, 5.5.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக