செவ்வாய், 15 மே, 2018

பொன்னேரி மாநாட்டில் தமிழர் தலைவரின் இடிமுழக்கம்!

மத்திய காவி' ஆட்சியையும் - மாநில ஆவி' ஆட்சியையும் வீழ்த்துவோம்!

நீட்'டை ஒழிக்க - காவிரி உரிமையை மீட்க - இளைஞர்களுக்கு  வேலை வாய்ப்புக் கிட்ட - மதவாத ஆட்சியை வீழ்த்த - ஜாதியில்லாத - சாமியார் இல்லாத நாட்டை உருவாக்கிட


பொன்னேரி மாநாட்டில் தமிழர் தலைவரின் இடிமுழக்கம்!




நமது சிறப்புச் செய்தியாளர்


பொன்னேரி, மே 13 சமூகநீதியை காக்க, தமிழ்நாட்டின் உரிமைகளை மீட்க, பெண்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்த ஜாதியில்லாத, சாமியார்கள் இல்லாத நாட்டை உருவாக்கிட மத்திய காவி ஆட்சியையும், மாநில ஆவி' ஆட்சியையும் வீழ்த்துவோம் என்றார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர்கி.வீரமணி அவர்கள்.

என் ஆசானை நினைவு கூர்கிறேன்!'


நீண்ட நேரம் பேச எனக்கு வாய்ப்பில்லை; ஆனா லும், பேச்சைவிட செயல்கள்தான் முக்கியம் - அந்தக் கால கட்டத்தில்தான் நாடும் இருக்கிறது - நாமும் இருக்கிறோம்.

என் உரையைத் தொடங்குமுன் என்னை இந்த இயக்கத்துக்கு மாணவர் பருவத்தில் ஆற்றுப்படுத்தி, ஊக் கப்படுத்திய இந்தப் பொன்னேரியையடுத்த ஆசானப்புதூர் ஆ.திராவிடமணி அவர்களை நினைவுகூர்கிறேன் என்று தன் உரையைத் தொடங்கினார் கழகத் தலைவர்.

அதேபோல, இந்தப் பகுதியில் பகுத்தறிவாளர் கழகத்தை வளர்த்த ஆசிரியர் சந்திரராசு அவர்களின் தொண்டினையும், மலரும் நினைவுகளாக எடுத்துக்கூறி, முக்கிய கருத்துகளை அதிவேகத்தில் தெரிவித்தார்.

திராவிடர் கழகத்திற்கு வந்தால் என்ன கிடைக்கும்?


திராவிடர் கழகத்தைப் பொருத்தவரையில் இது ஒரு சமூகப் புரட்சி இயக்கமாகும். இந்த இயக்கத்துக்கு வந்தால் என்ன கிடைக்கும் என்று கேட்டால், முதலில் சொல்லுகிறேன் - என்ன கிடைக்காது என்பதை; சட்டமன்ற  பதவி கிடைக்காது - இன்னும் சொல்லப்போனால், ஊராட்சி மன்ற உறுப்பினர் பதவியும்கூடக் கிடைக்காது (பலத்த கைதட்டல்).

தயார்! தயார்!!


இளைஞர்களே, சட்டமன்ற பதவிக்கோ, குறைந்த பட்சம் ஊராட்சி மன்ற உறுப்பின ருக்கோ கூட உங்களை நாங்கள் அனுப்ப மாட்டோம். மாறாக, இன இழிவை ஒழிக்க, சமூகநீதியைக் காக்க, ஜாதியை ஒழிக்க, வஞ்சிக்கப்படும் தமிழ்நாட்டின் உரிமைகளை மீட்டிட போராட்டக் களத்திற்கு உங்களை அழைக்கிறோம் - தயார் தானா?'' - தமிழர் தலைவர்.
தயார்! தயார்!!'' - மக்கள் வெள்ளம் இடியோசையாக பதில் குரல்!.


தந்தை பெரியார் கூறுவார், எங்கள் தோழர்கள் துறவுக்கு மேலானாவர்கள், துறவிக்குக்கூட அடுத்த ஜென்மத்தில்

புண்ணியம் கிடைக்கவேண்டும், மோட்சம் கிடைக்கவேண்டும் என்ற ஆசை உண்டு; எங்களுக்கு அதிலும் நம்பிக்கை இல்லை - எனவே, எங்கள் தொண்டர்கள் துறவிக்கும் மேலானவர்கள் என்று தந்தை பெரியார் கூறியதை நினைவூட்டினார் தமிழர் தலைவர்.

(சென்னை மாநிலத்தில் முதலமைச்சராகப் பதவி ஏற்கும்படி இருமுறை தந்தை பெரியாருக்கு வெள்ளைக்காரன் காலத்தில் அழைப்பு வந்தும், அதனை நிராகரித்தவர் தந்தை பெரியார் என்பதை நினைவு கூர்க).

சமூக வலைதளங்களில் என்னைப்பற்றி...




இன்று சமூக வலைதளங்களில் ஒரு செய்தி பரவி வருகிறது. நான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளேன் என்பதுதான் அந்தச் செய்தி. வெளிநாடுகளில் இருந்தெல்லாம் தோழர்கள் பதற்றத்துடன் விசாரித்த வண்ணம் உள்ளனர். உண்மை என்ன? உங்கள் மத்தியில் நான் பேசிக் கொண்டிருக்கிறேன் (பலத்த கைதட்டல்!).

பொய்யான தகவல்களைப் பரப்பி அற்ப சந்தோஷப்படுவோருக்கு எனது அனுபதாபங்கள். மருத்துவமனைக்கு என்ன? சுடுகாடு செல்வதாக இருந்தாலும் அதற்காகக் கவலைப்படுபவர்கள் அல்லர் தந்தை பெரியாரின் தொண்டர்கள்.

அதேநேரத்தில், கடைசி மூச்சு அடங்கும்வரை எங்களின் சமூகப் புரட்சிப் பணி தொடர்ந்து கொண்டுதானிருக்கும் என்று ஓங்கி அடித்துக் கூறியபோது, மக்கள் கடல் ஆர்ப்பரித்தது.

எங்களுக்காகவே கொண்டுவரப்பட்ட சட்டங்கள்!''


ஜாதி ஒழிப்புதான் எங்கள் இலட்சியம். அந்த ஜாதியை ஒழிப்பதற்காக இந்திய அரசமைப்புச் சட்டத்தையே எரித்து மூன்றாண்டுவரை சிறைத் தண்டனை அனுபவித்தவர்கள் எங்கள் இயக்கத் தோழர்கள். 18 உயிர்களையும் பறிகொடுத்தோம். சட்டத்தை எரித்தால் என்ன தண்டனை என்று சட்டத்திலேயே இடமில்லை. எங்கள் போராட்டத்துக்காகவே மூன்றாண்டுகள்வரை கடுங்காவல் தண்டனை என்று புதிதாக சட்டத்தைக் கொண்டு வந்தார்கள். மூன்றாண்டுகள் என்ன? முப்பதாண்டுகள் தண்டனை என்றாலும், ஜாதி ஒழிப்புக்காக அதனை இன்முகத்துடன் ஏற்போம் என்று அறிக்கை வெளியிட்டவர் தந்தை பெரியார் (பலத்த கரவொலி).

அதேபோல, நாடகத் தடை சட்ட மசோதா ஒன்று, தந்தை பெரியார் கொள்கைகளை நாடகத்தின்மூலம் நடிவேகள் எம்.ஆர்.இராதா பரப்புகிறார் என்பதற்காகவே கொண்டுவரப்பட்டது. அந்தச் சட்டத்தினால் நடிகவேளின் பிரச்சாரத்தைத் தடுக்க முடிந்ததா?

பல்வேறு பிரச்சினைகள் நம்முன்னே! குறிப்பாக நீட்' தேர்வு. நீட்டே கூடாது- தமிழ்நாடு சட்டப்பேரவையில் நீட்' விலக்குக் கோரி இரு மசோதாக்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன. அவற்றிற்கு ஏன் மத்திய அரசு ஒப்புதல் தரவில்லை? அ.தி.மு.க. அரசு அதற்கான முயற்சிகளை ஏன் மேற்கொள்ளவில்லை?

மத்தியிலே ஒரு காவி ஆட்சி - மாநிலத்திலோ ஓர் ஆவி' ஆட்சி - இரண்டையும் வீட்டுக்கு அனுப்பினால்தான் நாட்டுக்கு விடிவுகாலம்!

நீட்' எழுத சிக்கிம் போகவேண்டுமா?


இப்பொழுது என்னவென்றால், நீட்' தேர்வு எழுதிட தமிழக மாணவர்கள் ராஜஸ்தான் செல்ல வேண்டுமாம் - எர்ணாகுளம் போகவேண்டுமாம்; ஏன்? சிக்கிம் போகவேண்டுமாம். சிக்கிம் எங்கே இருக்கிறதுஎன்று நமது கிராமப்புற மாணவர்களுக்குத் தெரியுமா? திட்டமிட்டே தமிழ்நாட்டைப் பழிவாங்குகிறார்கள்.

இப்பொழுது நமது அமைச்சர்கள் என்ன சொல்லுகிறார்கள் தெரியுமா? அடுத்தாண்டு முதல் நீட்' தேர்வு வெளி மாநிலங்களில் நடக்காமல் பார்த்துக் கொள்வோம் என்கின்றனர்.

நீட்டே கூடாது என்பதுதான் நமது நிலைப்பாடு!


நம்முன் இப்பொழுது இருக்கும் பிரச்சினை நீட்'  தேர்வு எங்கே நடத்துவது என்பதல்ல; நீட்'டே கூடாது என்பதுதான் நம் முன்னுள்ள பிரச்சினை! (பலத்த ஆரவாரம் - கரவொலி!)

நீட்டை ஒழித்துக்கட்ட, காவிரி உரிமையை மீட்க, இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புக்கான உத்தரவாதத்தைப் பெற்றிட, பெண்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட, மதவெறியை வீழ்த்த, மனிதநேயம் காப்பாற்றப்பட, சமூகநீதியை உயர்த்திப் பிடிக்க, ஜாதியில்லாத, சாமியார்கள் இல்லாத நாட்டை உருவாக்கிட நமது பயணம் தொடரும் - பணிகள் தொடரும் - போராட்டங்களும் தொடரும்! (மக்கள் வெள்ளமே தயார் தயார் என்று எழுச்சிக் குரல் கொடுத்தது) என்று தன் உரையை நிறைவு செய்தார் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள். (முழு உரை பின்னர்).
- விடுதலை நாளேடு, 13.5.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக