செவ்வாய், 15 மே, 2018

பொன்னேரி - மண்டல இளைஞரணி மாநாட்டில் அரிய 12 தீர்மானங்கள்

* நீட் தேர்வு அறவே வேண்டாம்


* கல்விக் கடனைக் கண்டிப்பாக வழங்குக!

* தாழ்த்தப்பட்டவருக்கான உதவித் தொகையைக் குறைக்காதே!

* காவிரி உரிமை: அற வழியில்லாத போராட்டங்களுக்குத் தூண்ட வேண்டாம்!

பொன்னேரி - மண்டல இளைஞரணி மாநாட்டில் அரிய 12 தீர்மானங்கள்
பொன்னேரி மாநாட்டில் கழகப் பொதுச் செயலாளர் இரா. ஜெயக்குமார் தீர்மானங்களை முன்மொழித்தார் (12.5.2018).


பொன்னேரி மே 13- தமிழ்நாடு, உரிமை, சமூகநீதி, இளைஞர் நலம் உள்ளிட்ட 12 முக்கிய தீர்மானங்கள் பொன்னேரியில் நேற்று (12..5.2018) நடைபெற்ற சென்னை மண்டல இளைஞரணி மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன.


தீர்மானம் 1:


நீட் தேர்வை நீக்குக!


காலம்காலமாகக் கல்வி உரிமை மறுக்கப்பட்ட தாழ்த்தப் பட்ட, பிற்படுத்தப்பட்டவர்களுக்குக் கல்வி வாய்ப்பு அளிக்கப் பட வேண்டும் என்ற அடிப்படையில் உருவானது தான் சமூகநீதிக் கொள்கை. இந்தியாவில் இதற்கான வித்தினை ஊன்றி வளர்த்தது திராவிட இயக்கம்தான்.

இதன் காரணமாக ஒடுக்கப்பட்ட மக்கள் மத்தியில் கல்வி வளர்ச்சி படிப்படியாக மேம்பட்டு வருகிறது.

ஆனாலும் ஆண்டாண்டுக் காலமாக கல்வியில் ஏகபோக ஆதிக்கம் பெற்றிருந்த பார்ப்பனர்கள் இந்தச் சமூகநீதி வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போட்டு வருகின்றனர்.

தந்தை பெரியார் தலைமையில் நமது இயக்கம் இதனை எதிர்த்து அவ்வப்போது நடத்திய மக்கள் எழுச்சிப் போராட் டங்களினால் அந்த முட்டுக் கட்டைகள் தகர்க்கப்பட்டன. ஆனாலும் அவ்வப்போது இடர்ப்பாடுகளும் தொடர்ந்து கொண்டேதான் உள்ளன.

சமூகநீதிக்கு எதிரான போக்குகளுக்கு நீதிமன்றங்களும் துணை போகின்றன என்பது கசப்பான உண்மையாகும்.

அந்த வகையில் இப்பொழுது திணிக்கப்பட்டுள்ள நீட் எனும் அகில இந்திய நுழைவுத் தேர்வு என்பது மருத்துவத் துறையில் ஒடுக்கப்பட்ட சமுதாய மக்களை நுழைய விடாமல் தடுக்கும் மிகப் பெரிய கதவடைப்பாகும்.

இந்தியா முழுவதும் பல்வேறு கல்வி முறைகள் இருக்கும் நிலையில், குறிப்பிட்ட சி.பி.எஸ்.இ. கல்வித் திட்டத்தின் அடிப் படையில் சி.பி.எஸ்.இ. நிர்வாகமே நீட் தேர்வை நடத்துவது என்பது மிகப் பெரிய சதியும் மோசடியுமாகையால் நீட்டை ரத்து செய்ய வேண்டும் என்று மத்திய அரசை இம்மாநாடு வலியுறுத்துகிறது. தமிழ்நாடு சட்டப்பேரவையில் நீட் விலக்குக் கோரி நிறைவேற்றப்பட்ட இரு மசோதாக்களுக்கும் ஒப்புதல் அளித்திட வேண்டும் என்றும் மத்திய அரசினை இம்மாநாடு வலியுறுத்துகிறது. நீட் தேர்வு என்பது தொடக்கம் முதலே பல்வேறு மோசடிகளையும், குழப்பங்களையும், குறை பாடுகளையும் கொண்டுள்ளது என்பதையும் இம்மாநாடு சுட்டிக்காட்டுகிறது.

சமூகநீதியில் அக்கறை உள்ள அத்தனைக் கட்சிகளும் அமைப்புகளும், தலைவர்களும் ஓரணியில் எழுந்து நின்று மிகப் பெரிய அளவுக்கு மக்கள் வெள்ளம் கரைபுரண்டு எரிமலையாகக் கிளர்ந்தெழுந்து களம் அமைத்துப் போராடி வெற்றி பெற இம்மாநாடு அழைப்பு விடுக்கின்றது.

உயிரனைய இப்பிரச்சினைக்காக தொடக்கம் முதல் தொய்வின்றிக் குரல் கொடுப்பது - டில்லி வரை சென்று போராடுவது என்கிற நிலைப்பாட்டில் உறுதியாக உள்ள திராவிடர் கழகம் இதற்கு முதலிடம் கொடுக்கிறது என்பதை யும் இம்மாநாடு அறிவித்துக்கொள்கிறது.

இதற்கு ஒரே நிரந்தரத் தீர்வு - மீண்டும் கல்வியை மாநிலப் பட்டியலுக்கே கொண்டுவர அரிய முயற்சி முன்னெடுக்கப் படுதல் வேண்டும்.

தீர்மானம் 2:


கல்விக்குக் கடன் வழங்குவதில் தாராளத்தன்மை தேவை!


கல்விக் கடன் வழங்குவதில் தாராள நோக்கு  - போக்கு இருக்க வேண்டும் என்று நிதித்துறையும், ரிசர்வ் வங்கியும் அறிவுறுத்தியும், வங்கிகள் கடன் கொடுக்காததற்கு என் னென்ன முட்டுக் கட்டைகளைப் போட முடியுமோ, அவற்றை யெல்லாம் ஏற்படுத்தி, கடன் அளிப்பதைப் பெரும்பாலும் தவிர்த்து வருகின்றன.


இதன் காரணமாக ஏழை எளிய மக்கள் கல்வியில் தலையெடுக்க முடியாமல் முறியடிக்கப்படுகிறார்கள். இது மாண வர்கள் சம்பந்தப்பட்ட தடை மட்டுமல்ல, ஒட்டு மொத்தமாக சமுதாயத்துக்கும் நாட்டுக்கும் ஏற்படுத்தும் மிகப் பெரிய தடை என்பதால், கல்விக் கடன் கொடுப்பதில் ஆர்வம் காட்டாத வங்கி அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக் கைகளை எடுத்து, கல்வி ஓடையை ஏழை எளிய மக்கள் பக்கம் திறந்துவிட தேவையான அனைத்து நடவடிக்கை களையும் அவசரமாக மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய அரசை இம்மாநாடு வலியுறுத்துகிறது. இன்றேல் திராவிடர் கழகம் ஆங்காங்கு இதனை வலியுறுத்திடும் முயற்சிகளை மேற்கொள்ளுதல் தவிர்க்க முடியாததாகிவிடும்.

தீர்மானம் 3:


தாழ்த்தப்பட்டவர்களுக்கான உதவித் தொகைக் குறைப்பு கண்டிக்கத்தக்கது!


2012ஆம் ஆண்டு அரசாணையின்படி பொறியியல் படிக்கும் தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த உதவித் தொகையான ரூ.85 ஆயிரத்திலிருந்து  - ரூ.50 ஆயிரமாகக் குறைத்து, தமிழ்நாடு அரசு 2017இல் பிறப்பித்த அரசாணையை ரத்து செய்து 2012ஆம் ஆண்டு ஆணையைச் செயல்படுத்துமாறு தமிழ்நாடு அரசை இம்மாநாடு வலி யுறுத்துகிறது. தமிழ்நாடு அரசின் புதிய ஆணையால் தாழ்த் தப்பட்ட சமுதாய மாணவர்கள் இடையிலேயே கல்லூரிப் படிப்பை விட்டு விலகும் நிலை ஏற்பட்டுள்ளதையும் இம் மாநாடு சுட்டிக்காட்டுகிறது. முட்டுக்கட்டைகளைத் தகர்த்து உரியது செய்ய தமிழ்நாடு அரசு உடனடியாக முன்வர வேண்டும் என்று இம்மாநாடு வலியுறுத்துகிறது.

தீர்மானம் 4:


வேலைவாய்ப்பின்மை என்னும் அபாயம்!


கல்வி ஒரு பக்கம் வளர்ந்துவரும் அதேவேளையில், வேலைவாய்ப்பு என்பது பெரிதும் அரிதாகவே இருந்து வருகிறது. இதன் காரணமாக இளைஞர்களின் எண்ணங்களும், செயல்பாடுகளும் விபரீதமான திசைநோக்கிப் பயணிக்கும் அபாயம் இருக்கிறது என்பதையும் முக்கியமாக கவனத்தில் கொண்டும், சமுதாய, பொருளாதார நோக்கில் வேலைவாய்ப்பு என்பது மிகவும் அவசியம் என்பதாலும், குடும்பங்களின் கட்டமைப்புக்கு அடித்தளம் என்பதாலும் வேலைவாய்ப்புடன் கூடிய தொழிலகங்களை உருவாக்குவதில் மத்திய, மாநில அரசுகள் முக்கிய கவனம் செலுத்த வேண்டும் என்று இம்மாநாடு வலியுறுத்துகிறது.

தனியார் துறைகள் வளர்ந்து வரும் இக்கால கட்டத்தில் அத்துறைகளிலும் இடஒதுக்கீடு செயல்படுத்தப்பட உரிய வகையில் சட்டம் இயற்றப்பட வேண்டும் என்றும் இம்மாநாடு மத்திய அரசை வலியுறுத்துகிறது. ஆண்டு ஒன்றுக்கு 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்படும் என்ற நரேந்திர மோடியின் காற்றில் பறந்த வாக்குறுதியையும் இந்த நேரத்தில் மக்களுக்கு இம்மாநாடு நினைவூட்டுகிறது.

தீர்மானம் 5:


யூ.ஜி.சி.யின் சட்ட விரோத நடவடிக்கை!
அரசுக் கல்லூரிகளில் பேராசிரியர், இணைப் பேராசிரியர் பணி இடங்களுக்கான நியமனங்களில் பிற்படுத்தப்பட்டோ ருக்கான இடஒதுக்கீடு கூடாது என்ற யூ.ஜி.சி.யின் அறிக்கை சட்டவிரோதமான தன்னிச்சையான செயலாகும். யூ.ஜி.சி.யின் இந்தச் சுற்றறிக்கையைப் புறக்கணிப்பதோடு, சட்ட விரோத மாக நடந்து கொண்டுள்ள யூ.ஜி.சி.யின் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று இம்மாநாடு வலி யுறுத்துகிறது.


தீர்மானம் 6:


நுகர்வுக் கலாச்சாரமும் இளைஞர் - மாணவர் உலகமும்


மாணவர்கள் ஒரு போட்டி உலகில் சஞ்சரிக்கிறோம் என்பதைக் கருத்தில் கொண்டு, கல்வியில் முதன்மையான கவனம் செலுத்துவதை முக்கியக் கடமையாகக் கொள்ள வேண்டும் என்று இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது. கார்ப்ப ரேட்டுகள் கவர்ச்சிகரமான விளம்பரங்களால் கட்டவிழ்த்து விடும் நுகர்வுக் கலாச்சார வலையில் வீழாமல், முன்னேற்றத் தையே குறிக்கோளாக பகுத்தறிவுத் துணை கொண்டு தன்னம் பிக்கையோடு, உழைத்திட வேண்டும் என்று இம்மாநாடு இளைஞர்களுக்கு - மாணவர்களுக்கு வழிகாட்டுகிறது.

தீர்மானம் 7:


இந்தித் திணிப்புக்கு எதிர்ப்பு


நாட்டுடமையாக்கப்பட்ட வங்கிகளில் பணம் செலுத்தும் படிவங்களில் இடம் பெற்ற தமிழ் நீக்கப்பட்டு, அந்த இடங் களில் எல்லாம் இந்தி திணிக்கப்பட்டுள்ளது. வானொலியில் ஒழிக்கப்பட்டிருந்த ஆகாஷ்வாணி மறுபடியும் ஒலிக்கத் தொடங்கியுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசுப் பணி மனைகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு பல வகைகளிலும் இந்தி கட்டாயப்படுத்தப்பட்டு வருகிறது.

தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளுக்கு மாறாக மத்திய அரசு மொழி வெறியோடு செயல்பட்டால் விபரீத விளைவு ஏற்படும் என்று இம்மாநாடு எச்சரிக்கிறது.

தீர்மானம் 8:


மாணவர்கள்  - இளைஞர்கள் கடமை - ஜாதி மறுப்புத்  திருமணம் முக்கியம்


அதிகபட்சமாகக் கல்வியில் கவனம் செலுத்தி, அடுத்தக் கட்டமாக பொருளாதாரத்திலும் சொந்தக் காலில் நிற்கும் ஒரு நிலையை உறுதிப்படுத்திக் கொண்டு, ஜாதி மறுப்பு  - மத மறுப்பை மனதிற் கொண்டு வாழ்வு இணையரை தேர்வு செய்வதில் கவனம் செலுத்துமாறு இம்மாநாடு இருபால் இளைஞர்களையும் கேட்டுக்கொள்கிறது.

விதவையர், விவாகரத்து பெற்றோரின் மறுவாழ்வுக்குக் கரம் நீட்டும் மனப்பான்மையையும் இளைஞர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது. குறிப்பாக திராவிடர் கழக இளைஞர்கள் கொள்கை ரீதியாக இதனை ஒரு முக்கியக் கடமையாகக் கருத வேண்டும் என்றும் இம்மாநாடு வலியுறுத்துகிறது.

தீர்மானம் 9:


(அ) சமூக வலைதளங்கள் - ஓர் எச்சரிக்கை
(அ) சமூக வலைதளங்கள் அறிவியல் வளர்ச்சியில் வரவேற்கத்தக்கவை என்றாலும், அவற்றை அவசியத்திற்கு - தேவைக்கு மட்டுமே பயன்படுத்திக் கொள்ள வேண்டுமே தவிர, அதுதான் உலகம் என்று சதா மூழ்கிக் கிடப்பது காலத் தையும், கருத்தையும், வாழ்வையும் சிதறடிக்கக் கூடியது என்ற எச்சரிக்கையை இம்மாநாடு விடுக்கிறது.

(ஆ)  கைப்பேசிகளை குழந்தைகளிடம் கொடுத்து, அந்தப் பிஞ்சு உள்ளங்களில் நஞ்சைக் கலக்க வகை செய்ய வேண்டாம் என்று பெற்றோர்களையும், குடும்பத்தினரையும் மிகுந்த பொறுப்புணர்வோடு இம்மாநாடு வலியுறுத்துகிறது. உளவியல் ரீதியாகக் குழந்தைகளிடம் பாதிப்பை ஏற்படுத்தும் என்ற மருத்துவ ரீதியான எச்சரிக்கையைக் கவனத்தில் கொள்வது அவசியம் என்பதை இம்மாநாடு தெரிவித்துக் கொள்கிறது.

தீர்மானம் 10:


காவிரி நீர் உரிமை


தமிழ்நாட்டுக்கு சட்டப்படி  - நியாயப்படி கிடைக்க வேண்டிய காவிரி நீர் தொடர்ந்து மறுக்கப்பட்டு வருகிறது.

மத்திய அரசு, மாநில அரசு, நீதிமன்றம் எல்லாம் கூட்டுச் சேர்ந்து தமிழ்நாட்டை வஞ்சித்து வருவதால், கட்சிகளைக் கடந்து ஓரணியில் திரண்டு நமது உரிமையை மீட்க வீதிக்கு வந்து போராட முன்வர வேண்டும் என்று ஒட்டுமொத்த தமிழின மக்களையும் இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.

அறவழிப் போராட்டங்களைத் தாண்டியும் சிந்திக்கும் ஒரு மனோநிலையின் பக்கம் மக்களைத் தள்ளிட வேண்டாம் என்று மத்திய, மாநில அரசுகளை இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது. அதேபோல மீத்தேன் பிரச்சினை, நியூட்ரினோ, ஹைட்ரோகார்பன், ஸ்டர்லைட் போன்ற பிரச்சினைகளில் தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளை உதாசீனம் செய்யும் மத்திய அரசின் போக்கிற்கு இம்மாநாடு வன்மையான கண் டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது. விரும்பாத வெகுமக்கள் மீது திணிக்கும் ஒரு வகையான இந்த வன்முறைப் போக் கினைக் கைவிட வேண்டும் என்றும் இம்மாநாடு மத்திய அரசை வலியுறுத்துகிறது. இவற்றையெல்லாம் வெறும் பார் வையாளராக மட்டும் இருந்து வேடிக்கை பார்க்கும் தமிழ்நாடு அரசின் விசித்திரப் போக்குக் கண்டிக்கத்தக்கதாகும்.

தீர்மானம் 11:


மதவாத ஆட்சியை வீழ்த்துவோம்!


மக்கள் நலன் அரசு என்பதை மறந்து மக்கள் வளர்ச்சித் திசையில் கவனம் செலுத்தாது இந்து ராஜ்ஜியம் அமைக்கும் திசையில் பயணிக்கும் - இந்திய அரசமைப்புச் சட்டத்தின் மதச்சார்பின்மைக்கு விரோதமாகவும்  - பார்ப்பனர், கார்ப் பரேட் கூட்டணியாகச் செயல்படும் பா.ஜ.க. ஆட்சியை வீழ்த் துவதில் குறிப்பாக இளைஞர்கள் முக்கியப் பங்கு வகிக்குமாறு இந்த இளைஞர்கள் மாநாடு ஒட்டுமொத்த இளைஞர்களையும் உரிமையோடு கேட்டுக்கொள்கிறது.

தீர்மானம் 12:


திராவிட இயக்க ஆட்சிக்கு மாற்று என்பதில் உள்ள அபாயம் - எச்சரிக்கை!


திராவிட இயக்க ஆட்சிக்கு மாற்று என்று சொல்லுவதன் பின்னணியில் சமூகநீதி,  இனநலம், ஜாதி ஒழிப்பு, சமதர்மம், சமத்துவம், மதச்சார்பின்மை இவற்றிற்கு எதிரான நோக்கும் - போக்கும் இருப்பதை விழிப்பாக உணர்ந்து, பார்ப்பனீயத் துக்குத் துணை போகும் அந்தப் பிற்போக்குச் சக்திகளை தலையெடுக்க விடாமல் தரைமட்டமாக்குவதே நமது முழு முதற் கடமை என்பதையும், பார்ப்பனர் அல்லாத வெகு மக்கள் உணர்ந்து திராவிட இயக்கச் சித்தாந்தங்களை உள்வாங்கிக் கொண்டு தீவிரமாகச் செயல்பட வேண்டும் என்று இளைஞர்களை, மாணவர்களை இம்மாநாடு வலி யுறுத்திக் கேட்டுக் கொள்கிறது
- விடுதலை நாளேடு, 13.5.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக