பதவிக்காகவும் - பணத்திற்காகவும் இளைஞர்களை அழைக்கவில்லை
உங்களுடைய பிள்ளைகளின் எதிர்கால மான வாழ்க்கைக்காகத்தான் எங்கள் அழைப்பு!
பொன்னேரி, மே 17 பதவிக்காகவும், பணத்திற்காகவும் இளை ஞர்களை அழைக்கவில்லை; உங்களுடைய பிள்ளைகளின் எதிர்கால மான வாழ்க்கைக்காகத்தான் எங்கள் அழைப்பு என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
12.5.2018 அன்று மாலை சென்னை மண்டல திராவிடர் கழக இளைஞரணி சார்பில் பொன்னேரியில் நடைபெற்ற இளைஞர் எழுச்சி மாநாட்டில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.
அவரது உரையின் நேற்றையத் தொடர்ச்சி வருமாறு:
நெருக்கடி காலகட்டத்தை சந்தித்துவிட்டு வந்தவர்கள் நாங்கள்!
நெருக்கடி காலத்தில், இனிமேல் உயிரோடு போக மாட்டீர்கள் என்று சொன்ன அந்த நெருக்கடி காலகட்டத்தை சந்தித்துவிட்டு வந்தவர்கள் உங்கள்முன் நிற்கும் நாங்கள்.
நாங்கள் என்ன வாய்நீளம் பேசுகிறவர்களா? எத்தனை பயல்களைப் பார்த்திருக்கிறோம். கொஞ்ச நாள்களுக்குமுன் ஆண்டாளுக்காக வைரமுத்துவை மிரட்டினார்கள் என்று சொன்னார்கள். அப்படி மிரட்டியவர்கள் எல்லாம் இன்றைக்கு எங்கே இருக்கிறான்? ஓடி ஒளிந்துகொண்டிருக்கிறார்கள். போலீஸ் தேடுகிறது, தேடுகிறது, தேடிக்கொண்டே இருக்கிறது.
எங்கள் தோழர்கள் அப்படியில்லையே! தந்தை பெரியார் காலத்திலிருந்து இன்றுவரையில் நாங்கள் எங்கேயாவது ஜாமீனில் வந்திருக்கிறோமோ? குறைந்தபட்சம். இப்பொழுது தான் வக்கீல்கள் எல்லாம் சேர்ந்து முன்ஜாமீன் என்று வைத் திருக்கிறார்கள்.
முன்ஜாமீன் கோருகிறாராம்; ஜாமீனில் என்ன முன்ஜாமீன், பின் ஜாமீன்? முன்ஜாமீன் கேட்டு, அது கிடைக்கவில்லை என்றால், ஓடி ஒளிந்து கொள்ளும் பயல்கள் எல்லாம் வீரம் பேசுகிறான் இந்த நாட்டில், பெரியாரைப்பற்றி பேசுகிறான்.
எங்களுடைய இயக்கத்தைப் பார்; எங்களுடைய இளைஞர்களைப் பார்!
பெரியார் சிறைப் பறவையாக இருந்தவர்; பெரியார் தொண்டர்கள் தூக்குத் தண்டனை என்றாலும், நாங்கள் ஏற்போம். அதில் எதாவது சந்தேகம் இருந்தால், எங்களுடைய இயக்கத்தைப் பார்; எங்களுடைய இளைஞர்களைப் பார்!
ஜாதியைக் காப்பாற்றுகின்ற அரசியல் சட்டத்தைக் கொளுத்துங்கள் என்று ஆணையிட்டார் தந்தை பெரியார். பத்தாயிரம் பேர் கொளுத்தினார்கள். யாருடைய ஆட்சியில்? நாங்கள் ஆதரித்த காமராஜர் ஆட்சியில். வடநாட்டுக்காரனை எதிர்த்து நாங்கள் நிற்கிறோம்; மத்திய அரசினுடைய ஆதிக்கத்தை எதிர்த்து நிற்கிறோம். ஜாதியை ஒழிப்பதற்காக, சர்வபரி தியாகம் செய்வதற்குத் தயாராக இருக்கிறோம் என்று சொல்லக்கூடிய அந்த உணர்வைக் காட்டியிருக்கிறோம் என்பதுதான் முக்கியம்.
எங்களுக்காகவே தண்டனைச் சட்டத்தைக் கொண்டு வந்தார்கள்!
அரசியல் சட்டத்தைக் கொளுத்தும் வரையில், அதற்குரிய தண்டனைச் சட்டம் கிடையாது. அதற்காகவே அவசர அவசரமாக ஒரு சட்டத்தைக் கொண்டு வந்தார்கள். இந்த இயக்கத்திற்காக எத்தனை சட்டம் வந்தது தெரியுமா? அரசியல் சட்ட நகலைக் கொளுத்தினால் மூன்றாண்டு கடுங்காவல் தண்டனைச் சட்டத்தைக் கொண்டு வந்தார்கள்.
நடிகவேள் எம்.ஆர்.இராதா, பெரியாருடைய கருத்தை வைத்து, இராமாயண நாடகத்தை போட்டார். சில பத்திரி கைகள் தவறாக கீமாயணம் என்று எழுதினார்கள். வால்மீகி இராமாயணம் உண்மை இராமாயணம் - அதை நாடகமாகப் போட்டார். அதற்காகவே நாடகத் தடைச் சட்டத்தைக் கொண்டு வந்தார்கள். இன்றைக்கு அந்தச் சட்டம் நீக்கப்பட்டு விட்டது.
அரசியல் சட்ட நகலைக் கொளுத்துங்கள் என்று அய்யா கையொப்பமிட்டு அறிக்கை வெளியிட்டார். தோழர்களும் தயார்! தயார்!! என்றார்கள். அதுதான் இந்த இயக்கத்தினுடைய வரலாறு.
எந்தக் கொம்பனும் இந்தத் திராவிட இயக்கத்தை அழித்து விடலாம் என்று நினைக்காதீர்கள்.
எனவேதான் நாங்கள் சொல்கிறோம், திக்கெட்டும் பாய்வோம்; திராவிடத்தைக் காப்போம். எப்படி காப்போம்? எங்களை நாங்கள் பணயம் வைத்துக் காப்போம்.
பெரியாரின் தனி மனித ராணுவம் - கட்டுப்பாடு மிகுந்த ஒரு ராணுவம்
ராணுவத்தில் சேர்ந்தவர், வீட்டுக்கு வந்தால்தானே நிலை! அதுபோல, பெரியாரின் தனி மனித ராணுவம் - கட்டுப்பாடு மிகுந்த ஒரு ராணுவம்.
பழைய வரலாற்றை இங்கே சொல்கிறேன் - ஏறத்தாழ 60 ஆண்டுகளுக்குமுன் நடைபெற்ற இந்தச் சம்பவம் - சென்ற நவம்பர் 26 ஆம் ஆண்டுதான் 60 ஆம் ஆண்டு விழா நடந்தது.
அரசியல் சட்ட நகலை எரித்தால் மூன்றாண்டு தண்டனை என்றவுடன், உடனே அய்யா அவர்கள் எழுதினார்,
மூன்றாண்டு என்ன? முப்பதாண்டு என்றாலும், தூக்கு மேடை என்றாலும், அந்தப் பணியை நாங்கள் செய்தே தீருவோம்; அதற்கு நீங்கள் தயாரா? என்று தோழர்களைப் பார்த்து கேட்டார்.
சிறைச்சாலைக்குள்ளும், வெளியேயும் 18 உயிர்கள் பறிபோயின!
தயார்! என்று 10 ஆயிரம் பேர் அரசியல் சட்ட நகலைக் கொளுத்தினார்கள். 3 ஆயிரம் பேர்தான் கைது செய்யப்பட்டனர். சிறைச்சாலைக்குள்ளும், வெளியேயும் 18 உயிர்கள் பறிபோயின. அதைக் காட்டி நாங்கள் பதவிக்குப் போனோமா? அதைக் காட்டி நாங்கள் ஏதாவது பெருமை பெற்றோமோ? எங்களுக்கு இன்றைக்கும் கவலைதானே இருக்கிறது - ஜாதிப் பாம்பை, தந்தை பெரியார் அவர்கள் அடித்து அடித்து விரட்டிய நேரத்தில், அது இன்றைக்குக் கோவில் கருவறையில் போய் நுழைந்து கொண்டிருக்கிறதே - நீட் தேர்வு உருவத்தில் வருகிறதே - காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காதே என்று சொல்லக்கூடிய நீதித்துறை உருவத்தில் பல்வேறு இடங்களில் அது பாய்ந்திருக்கிறதே - இதை அத்தனையும் எதிர்த்துப் போராடக்கூடிய இயக்கம், இந்த இயக்கத்தைத் தவிர வேறு இயக்கம் உண்டா? அருள்கூர்ந்து இளைஞர்களே, சிந்தியுங்கள்!
மான வாழ்வு பெறவேண்டாமா? மனிதர்க்கு அழகு மான மும், அறிவும் என்று தந்தை பெரியார் அவர்கள் சொன்னார்.
எனவே, மானத்தையும், அறிவையும் கொடுக்கின்ற இயக்கம் இந்த இயக்கம்.
பெரியாருக்கு கட்சி முக்கியமல்ல - கொள்கை முக்கியம்
வைக்கம் தெருக்களில் அன்றைக்கு ஆரம்பித்த போராட்டம், சேரன்மாதேவி குருகுலத்தில் ஏன் பார்ப்பனப் பிள்ளைகள் உள்ளே - பார்ப்பனரல்லாத கீழ்ஜாதி பிள்ளைகள் வெளியே - இதுதான் தேசியமா? என்று காங்கிரசில் இருக்கும் பொழுது கேட்டவர் தந்தை பெரியார்.
பெரியாருக்கு கட்சி முக்கியமல்ல - கொள்கை முக்கியம். எனவே, நான் என்றைக்கும் கட்சிக்காரனாக ஒருபோதும் இருந்ததில்லை. கொள்கைக்காரனாக இருக்கிறேன் என்று அவர்கள் சொன்னார்கள்.
எனவேதான், திருப்பூர் மாநாட்டில், 1922 ஆம் ஆண்டு, நம்மைப் போன்ற பலர் பிறக்காத காலத்தில், தந்தை பெரியார், காங்கிரசுகாரரான தந்தை பெரியார், காந்தியாருடைய சீடரான தந்தை பெரியார் பேசுகிறார், ஒரு பக்கம் ராஜ கோபாலாச்சாரியார் அமர்ந்திருக்கிறார், இன்னொரு பக்கம் திரு.வி.க., இன்னொரு பக்கம் டாக்டர் வரதராஜுலு நாயுடு, மற்றவர்கள் அமர்ந்திருக்க,
இராமாயணத்தையும் கொளுத்தவேண்டும்!
தந்தை பெரியார் பேசுகிறார், மனிதர்களுக்குள் என்ன பேதம்? பிராமணன் - சூத்திரன்; பார்ப்பான் - பறையன். மனிதன் எப்பொழுது உருவாவது? சுதந்திரம், சுயராஜ்ஜியம் என்றால், மனிதன் இருக்கவேண்டாமா? சமத்துவம் இருக்க வேண்டாமா? என்று வேகமாகக் கேட்டுவிட்டு, இதை ஒழிக்கவேண்டும் என்றால், வெறும் பேச்சினால் மட்டும் போதாது; இதற்கு எவையெல்லாம் முட்டுக்கொடுத்துக் கொண்டிருக்கிறதோ, அதை அத்தனையும் ஒழிக்கவேண்டும். அது கடவுளானாலும், மதமானாலும், சாஸ்திரமானாலும், சம்பிரதாயமானாலும் அவைகளை ஒழிக்கவேண்டும் என்று சொல்லிவிட்டு, இராமாயணத்தையும் கொளுத்தவேண்டும் என்று சொன்னார்.
சுயமரியாதை இயக்கம் தொடங்குவதற்கு முன்பே இதனை தந்தை பெரியார் வலியுறுத்தியிருக்கிறார். சோவியத் ரஷ்யாவிற்குச் செல்வதற்கு முன்பே, இன்றைக்கு காரல் மார்க்சின் 200 ஆம் ஆண்டு விழா கொண்டாடப்படுகிறது. இந்தியாவில், கம்யூனிஸ்ட் கட்சிகள் எல்லாம் 1925 ஆம் ஆண்டு பிறந்தது. குடிஅரசு இதழை 1925 ஆம் ஆண்டு தந்தை பெரியார் தொடங்கினார். அந்த பச்சை அட்டைக் குடிஅரசில், மார்க்ஸ், ஏங்கல்ஸ், கம்யூனிஸ்ட் கட்சியினுடைய மேனிபெஸ்டோ என்ற கொள்கை அறிக்கை இருக்கிறதே, அதனை ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழி பெயர்த்து வெளியிட்ட முதல் ஏடு இந்தியாவிலேயே குடிஅரசு ஏடுதான்.
இந்தியாவில் வேறு எந்த மொழியிலும் வரவில்லை. இதை எடுத்துதான் மற்ற மொழிகளுக்கு தேவைப்படுகிறது என்று சொல்லி, இந்து ராம் அவர்கள் ஒரு நண்பரின் மூலமாகக் கேட்டார். அதை நாங்கள் கொடுத்தோம்.
பிறவி பேதத்தை ஒழிப்பதுதான் தந்தை பெரியாரின் ஒரே குறிக்கோள்!
எதற்காக இதனை சொல்கிறோம் என்றால், எல்லா வற்றிற்கும் முன்னோடியாக தந்தை பெரியார் அவர்கள்தான் இருப்பார்கள். இந்த இயக்கம்தான் இருக்கும்.
ஜாதியை ஒழிக்கவேண்டும் - ஜாதியின் பெயரால், வர்க்கம், வருணாசிரமத்தைக் கடைபிடிக்கிறார்கள். மற்ற நாடுகளில் எல்லாம் ஏழை - பணக்காரன் மட்டும்தான். இந்த நாட்டில் மட்டும்தான், பிறவி பேதம்.
அந்தப் பிறவி பேதம் கூடாது என்று சொல்லுகின்ற நேரத்தில், அந்தப் பிறவி பேதத்தை ஒழிப்பதுதான் தந்தை பெரியாரின் ஒரே குறிக்கோள்.
கடவுள், பார்ப்பான் மற்ற விஷயங்களில் அவர் நுழைந்தார் என்றால், எதற்காக நுழைந்தார்? ஏன் இந்த இயக்கம் அதைப்பற்றி பேசுகிறது? இவையெல்லாம் பிறவி பேதத்தைக் காப்பாற்றுகிறது. எனவேதான், அதற்கு எது எது தடையாக இருக்கிறதோ, அவை எல்லாவற்றையும் நகர்த்தியாக வேண்டும் என்று சொல்லும்பொழுது, குறுக்கே வந்து விழுவதை எல்லாம் அகற்றாமல், நாம் எப்படி பயணம் செய்ய முடியும்?
ஆகவே, அந்த அடிப்படையில், கடவுளா? மதமா? என்று கேட்டார். அவருடைய அடிப்படை, ஜாதி ஒழிந்த ஒரு சமுதாயம் - சமத்துவம் நிறைந்த ஒரு சமுதாயம். பிறவி பேதம் கூடாது என்று சொன்னார். பிறவி பேதம் என்று சொல்லும்பொழுது, உயர்ஜாதி - தாழ்ந்த ஜாதி என்று சொல்வது மட்டும் பிறவி பேதமல்ல நண்பர்களே! அதைவிட மிக முக்கியமானது சமத்துவம் என்று வரக்கூடிய இந்தக் காலகட்டம் இருக்கிறதே, இதுதான் அடிப்படையானது.
எனவே, இதை மனதில் வைத்துக்கொண்டுதான், அன் றைக்குத் தொடங்கினார் பாருங்கள், வைக்கம் தெருக்களில் நாய் போகலாம், பன்றி போகலாம், கழுதை போகலாம் ஆனால், மனிதர்கள் போகக்கூடாது என்பதை எதிர்த்து சத்தியாகிரகத்தைத் செய்தார் அன்றைக்கு.
டில்லிக்கு சலாம் போடுகிற ஆட்சி இங்கே நடைபெறுகிறது!
நீதிக்கட்சி, திராவிடர் இயக்கம் அன்றைக்கே 1921 ஆம் ஆண்டே இரட்டைமலை சீனிவாசன் அவர்களிடம் நீதிக் கட்சித் தலைவர்கள் ஆதரவு கொடுத்துவிட்டார்கள். போராட்டமே இல்லாமல் அரசாங்கம் இங்கே நடக்கிறது. ஆனால், 1924 ஆம் ஆண்டு போராடுகிறார்கள், திருவி தாங்கூரில். அந்தப் போராட்டத்திற்கு மிகப்பெரிய அளவிற்குத் தலைமை தாங்கினார் தந்தை பெரியார் அவர்கள். அன்றைக்குத் தொடங்கியது. அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகவேண்டும் என்று, கருவறைக்குள் இருக்கக் கூடிய தடையை எதிர்த்துப் போராடிய நிலையில், கலைஞர் முதலமைச்சராக இருந்த காலத்தில், இரண்டு சட்டங்களைக் கொண்டு வந்தார். அந்த இரண்டு சட்டங்களும் செல்லும் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்த பிறகும், இன்றைக்கு அதை நடைமுறைப்படுத்த முடியாத ஆட்சி இங்கே இருக்கிறது. இதற்கு என்ன காரணம்? டில்லிக்கு சலாம் போடுகிற ஆட்சி இங்கே நடைபெறுகிறது. டில்லியின் பொம்மலாட்ட ஆட்சி இங்கே நடைபெறுகிறது. இல்லையானால், நீட் தேர்வு என்ற கழுத்து சுளுக்கு நமக்கு வந்திருக்குமா?
நீங்கள் நன்றாக நினைத்துப் பாருங்கள், திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி மட்டும் இருந்திருந்தால், இப்படி வரக்கூடிய வாய்ப்புகள் உண்டா?
மதச் சாயம், மதவெறி, ஜாதி வெறி, என்ன வேண்டு மானாலும் பேசுகிறார்கள். சுயமரியாதை உணர்வு வேண் டாமா? நீட் தேர்வை எழுதுவதற்குக்கூட நம் மாணவர்களுக்கு சங்கடங்களை ஏற்படுத்தினார்கள்.
எங்களுடைய உயிரைத் தியாகம் செய்தாவது நீட்டை ஒழித்துக்கட்டுவோம்!
இங்கே இருக்கும் மாணவர்களை, சிக்கிம், ராஜஸ்தான், அரியானா என்று வெளிமாநிலங்களுக்குச் சென்று தேர்வு எழுதவேண்டும் என்று சொன்னார்கள்.
இங்கே உள்ள பெற்றோர்கள், மற்றவர்கள் எல்லாம் என்ன கேட்கிறார்கள் என்றால், அடுத்த ஆண்டு இங்கேதான் நீட் தேர்வு இருக்கவேண்டும் என்கிறார்கள். முட்டாள்களே,
அடுத்த ஆண்டு நீட் தேர்வே இருக்கக்கூடாது என்கி றோம் நாங்கள். இருக்கக்கூடாது என்பதற்கு எங்களுடைய உயிரைத் தியாகம் செய்தாவது அதனை ஒழித்துக்கட்டுவோம்.
எங்களுக்கு எதற்கு நீட். இதை நன்றாக நீங்கள் புரிந்துகொள்ளவேண்டும். நாங்கள் என்ன சோதாக்களா? எம்.ஜி.ஆர். ஆட்சிக்காலத்தில் கொண்டு வந்த நுழைவுத் தேர்வை 21 ஆண்டுகாலமாக போராடி, ஒழித்துக்கட்டிய பெருமை திராவிடர் கழகத்திற்கும், திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும் உண்டு. அதற்கென்று ஒரு தனி சட்டத்தை நிறைவேற்றியது கலைஞர் அவர்களின் ஆட்சி. அந்த சட்டம் குடியரசுத் தலைவரின் ஒப்புதலோடு நிறைவேறியது.
அப்படி இருக்கும்பொழுது, நீ குறுக்கே வந்திருக்கிறாய்; காரணம், நீதிமன்றம் ஒத்து ஊதுகிறது. எல்லாவற்றிற்கும் உச்சநீதிமன்றம், உச்சநீதிமன்றம் என்கிறார்கள். காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க ஆறு வாரங் களுக்குமேல் கால அவகாசம் கொடுக்கமாட்டோம் என்று சொன்னார்களே, அதன்படி நடந்தகொண்டார்களா?
கருநாடகத் தேர்தலைக் காரணம் காட்டி, கால அவகாசம் கேட்டனர். இன்றைக்குத்தான் கருநாடகத் தேர்தல் முடிந்தது. தேர்தல் முடிந்ததும், வரைவுத் திட்டத்தைக் கொடுப்போம் என்றார்கள். அதனைப் பொறுத்துக் கொண்டிருக்கக் கூடிய ஓர் ஆட்சி.
தமிழக ஆட்சியாளர்களின் இரட்டைவேடம்!
அதேபோன்று நீட் தேர்வால் எத்தனை பேர் செத்தாலும், எத்தனை அனிதாக்கள் செத்தாலும் நீட் தேர்வை நாங்கள் ஒரு பக்கம் எதிர்க்கிறோம்; அதேவேளையில் நீட் தேர்விற்கு நாங்கள் பயிற்சி கொடுக்கிறோம் என்று சொல்கிறார்கள் ஆட்சியாளர்கள். இது என்ன இரட்டை வேடம்? நீட் தேர்வை எதிர்த்தால், அதற்கான எதிர்ப்பைக் காட்டவேண்டாமா?
நீட் தேர்வு பயிற்சிக்காக இங்கே மய்யங்களை ஆரம்பித்து, எதிர்ப்பு உணர்வை மழுங்க வைத்து, திசை திருப்புகின்ற வேலையில்தானே ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். காரணம், நம்முடைய பிள்ளைகள் டாக்டர்களாக வரக்கூடாது என்பதற்காகத்தானே!
நீதிக்கட்சி வருவதற்கு முன், நடேசனார் அவர்களுடைய பணியை செய்வதற்குமுன், பனகல் அரசர் வந்த காலத்தில், சமஸ்கிருதம் படித்தவர்கள்தானே டாக்டர்களாக வர முடியும். மருத்துவப் படிப்பிற்கே மனு போட முடியும். அதையே இன்றைக்கு நீட் என்று இன்னொரு முறையில் மாற்றிச் சொல்கிறார்கள். நமக்கு வலை விரிக்கிறார்கள்; கழுத்தில் சுருக்கு மாட்டுகிறார்கள். இதைக் கேட்பதற்கு நாதியில்லையே! இங்கே இருக்கிற அரசாங்கம் வெட்கப்படவேண்டாமா? நீட் தேர்வு வேண்டாம் என்று சொல்வது மிகவும் சுலபம். ஏனென்றால், அது பிச்சையோ, சலுகையோ அல்ல. இந்திய அரசியல் சட்டத்தில் இருக்கின்ற உரிமை.
மாநிலப் பட்டியலிருந்து மத்தியப் பட்டியலுக்கு கல்வி கொண்டு போகப்பட்டது. அது ஒத்திசைவுப் பட்டியல். மாநில அரசு ஒத்துக்கொண்டால்தான், சட்டமாக்க முடியும் என்கிற நிலை. இப்படியிருக்கும் நிலையில், நம்முடைய ஆதரவே இல்லாமல் சட்டம் கொண்டு வந்திருக்கிறார்கள். ஏனென்று கேட்டால், உங்களுக்கு விதி விலக்கு உண்டு; நீங்கள் விதிவிலக்குக் கோரலாம் என்கிறார்கள்.
கிராமப் புற மாணவர்களுக்கென்றே தனியாக இட ஒதுக்கீடு வைத்த மாநிலம் தமிழ்நாடு
கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்ற வுடன், அந்த கிராமப்புற மாணவர்களுக்கென்றே தனியாக ஒதுக்கீடு வைத்த மாநிலம் தமிழ்நாடு ஆயிற்றே - பெரியார் மண்ணாயிற்றே! இந்தியாவிலே வேறு எந்த மாநிலத்தில் 69 சதவிகித இட ஒதுக்கீடு என்பது இருக்கிறது. தமிழ்நாட்டில் மட்டும்தானே உண்டு. திராவிடம் செய்த காரியம் என்னவென்பதற்கு இதைவிட உதாரணம் வேறு என்ன வேண்டும்? எனவேதான், திராவிடத்தைக் காக்கவேண்டும்.
இங்கே ஊழல், அங்கே ஊழல் என்று சொன்னார்களே, 2ஜி ஊழல் என்று கற்பனை ஊழலைச் சொல்லி பூஜ்ஜியம் பூஜ்ஜியமாகப் போட்டுக் காட்டினார்கள். இன்றைக்கு வங்கிகளில் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்களை கடன் களாக வாங்கி, நீரவ் மோடி போன்றவர்கள் வெளிநாடுகளில் போய் வசதியாக அமர்ந்திருக்கிறார்கள். ஒரு லட்சம் கோடி ரூபாய் மோசடி என்று ரிசர்வ் வங்கி சொல்கிறது.
இந்த இயக்கத்தைத் தவிர வேறு நாதியுண்டா?
நம் பிள்ளைகளுக்குப் படிப்பதற்கு கடன் கொடுத்திருந் தால், படித்திருப்பார்கள். வேலை வாய்ப்பற்ற நம் பிள்ளை களுக்கு முதலீட்டுக்காகக் கடன் கொடுத்திருந்தால், அவர்கள் வேலை வாய்ப்பைப் பெற்றிருப்பார்கள். நம்முடைய விவ சாயிகள் டிராக்டர் வாங்குவதற்காக கடன் வாங்கி, டிராக்டர் வாங்குகிறார்கள். ஒரு தவணையைக் கட்டவில்லை என்ற வுடன், அந்த விவசாயியின் கழுத்தில் சுருக்குப் போட்டு இழுக்குகிறார்கள்; அவனை அவமானப்படுத்துகிறார்கள். அந்த அவமானம் தாளாமல், தூக்கில் தொங்கிவிடுகிறார். மான உணர்ச்சியுள்ள நம் விவசாயி.
வங்கிகளில் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்களை கடன் வாங்கிக்கொண்டு, மல்லையாக்கள் மிகவும் சவுக ரியமாக இருக்கிறார்கள்; வைர வியாபாரிகள் மிகவும் சவு கரியமாக இருக்கிறார்கள். இதைவிட வெட்கக்கேடு என்ன? இதையெல்லாம் சொல்வதற்கு, இந்த இயக்கத்தைத் தவிர வேறு நாதியுண்டா?
எனவேதான் நண்பர்களே! திராவிடத்தைக் காத்தாக வேண்டும்.
இன்றைக்கு நீட் தேர்வுக்கு ஒரே ஒரு பிரச்சினை. இரண்டு மசோதாக்களை எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்போடு ஒருமனதாக சட்டப்பேரவையில் நிறைவேற்றி, மத்திய அரசுக்கு அனுப்பி ஒன்றரை ஆண்டுகாலம் ஆகிறதே - ஒன்று, அந்த மசோதாக்களை நிராகரிக்கவேண்டும்; அல்லது ஒப்புதல் கொடுக்கவேண்டும். இந்த இரண்டையுமே செய்யவில்லையே!
இந்த ஆட்சி நீடிக்கவேண்டுமா?
அந்த மசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்துவிட்டால், நீட் தேர்வு எழுதவேண்டிய அவசியமே இருக்காதே, தமிழக மாணவர்களுக்கு. இதைக் கேட்கக்கூடிய முதுகெலும்பு இல்லாத ஒரு ஆட்சி தமிழகத்தில் இருக்கிறது என்றால், இந்த ஆட்சி நீடிக்கவேண்டுமா? எனவேதான், நீங்கள் தெளிவாகப் புரிந்துகொள்ளவேண்டும் நண்பர்களே!
பல்வேறு பிரச்சினைகளுக்குத் தீர்வு காணவேண்டும் என்றால், மத்தியில் இருக்கக்கூடிய காவி ஆட்சிக்கும் விடை கொடுத்தாகவேண்டும்; மாநிலத்தில் இருக்கின்ற ஆவி ஆட்சிக்கும் விடை கொடுத்தாகவேண்டும். அங்கே காவி - இங்கே ஆவி!
இந்த ஆவியிலேகூட பார்த்தீர்களேயானால், ஆவியைப் பங்குபோட்டுக்கொள்கிறார்கள்.பலியிடுவதற்காகஆட்டுக் கிடாவிற்கு மாலை போட்டு பூசாரி நிறுத்துவார் பாருங்கள்; அதுபோன்று, டில்லி பூசாரிக்கு முன்பு, இரண்டு பேர் மாலையைப் போட்டுக்கொண்டு நிற்கிற மாதிரி இருக்கிறார்கள். எங்கள் பிள்ளைகள் செத்துக் கொண்டிருக்கிறார்கள்; எங்களுடைய பெற்றோர்கள் எல்லாம் செத்துக் கொண்டிருக்கிறார்கள். வெட்கமாக இல்லையா! ஒரு பக்கம் அதுவும் திராவிடம் என்று சொல்லும்பொழுது எங்களுக்கு சங்கடமாக இருக்கிறது.
உண்மை திராவிடத்தைக் காப்பாற்றவேண்டும்; போலி திராவிடத்தையும் அடையாளம் காட்டவேண்டும்
ஒரு பக்கம் உண்மை திராவிடத்தைக் காப்பாற்றவேண்டும்; போலி திராவிடத்தையும் அடையாளம் காட்டவேண்டும். அதேநேரத்தில், காலிகள் உலாவுவதையும், காலிகள் காவி களாக மாறுவதைத் தடுக்கவேண்டும். இவை எல்லாவற் றையும் செய்யக்கூடிய இயக்கமாக இந்த இயக்கம் இருக்கும். எனவே, இளைஞர்களே, நீட்டை ஒழிப்பதற்கு, காவிரி மேலாண்மை வாரியத்தில், நமக்குள்ள உரிமையை அப்படியே குறையாமல் பெறுவதற்கு, தமிழ்நாட்டினுடைய எல்லா உரிமைகளையும் பாதுகாப்பதற்கு, உங்களுடைய வேலை வாய்ப்பிற்காக எங்கேயும் கையேந்தாமல், நம்முடைய இடத்திலேயே இருக்கின்ற வளங்களைப் பயன்படுத்தக் கூடிய திட்டத்திற்கு, நம்முடைய பெண்களின் பாதுகாப்பிற்கு,
மத அடிப்படையில் வன்புணர்ச்சிகள் நடைபெறுகின்றன
பெண்களுக்குப் பாதுகாப்பில்லை. மதவெறி, அதுவும் எவ்வளவு கொடுமையான நிலை. திட்டமிட்டு செய்கிறார்கள்; காமவெறி வந்து, அவன் வன்புணர்ச்சி செய்கிறான் என்பது ஒரு கட்டம். அது ஒரு சைக்கோ. ஆனால், காஷ்மீர் மற்ற இடங்களில் நடைபெற்ற நிகழ்வுகள் இருக்கிறதே, மத அடிப்படையில் வன்புணர்ச்சி செய்திருக்கிறான்.
மதம் மனிதனுக்குப் பிடிக்கக்கூடாது என்பது எவ்வளவு பெரிய உண்மை. மதவாதப் பேய் பிடியாதிருக்கவேண்டும் என்று வள்ளலார் சொன்னாரே!
மதத்தை வைத்து அரசியல் நடத்தாதே! இந்தியா மதச்சார்பற்ற நாடு. இவ்வளவு கொடுமைகள் நடந்தாலும், இதை அத்தனையும் தலைகீழாக்கி, வளர்ச்சி, வளர்ச்சி என்று சொல்கிறாரே மோடி!
இங்கே உரையாற்றும்பொழுது கழகப் பொதுச்செயலாளர் அன்புராஜ் அவர்களும், மற்றவர்களும் சொன்னார்களே,
நம்முடைய இளைஞர்கள், பெரியாரால், காமராஜரால், நீதிக்கட்சியினால், பேண்ட் அணிந்து கொண்டிருக்கிறார்களே, நம்முடைய இளைஞர்கள் கைகளில் செல்போன், டுவிட்டர், பேஸ் புக், வாட்ஸ் அப் என்று இருக்கிறது; எப்பொழுது பார்த்தாலும் அதைத் தட்டிக்கொண்டே இருக்கிறார்கள். இப்படிப்பட்ட வாய்ப்பை உருவாக்கிய இயக்கம் எந்த இயக்கம்? என்பதை நன்றாக நீங்கள் நினைத்துப் பார்க்க வேண்டும். அப்படிப்பட்ட ஒரு இயக்கத்தை, அறவே அழிக்கவேண்டும் என்று நினைக்கிறார்களே? நம்முடைய பிள்ளைகளின் எதிர்காலத்தை அழிக்கவேண்டும் என்று நினைக்கிறார்களே!
பெரியாரைப்பற்றி அவதூறு பேசியவர்கள் எல்லாம் இன்றைக்கு ஒளிந்து திரிகிறார்கள்
வளர்ச்சி! வளர்ச்சி! மாதம் மாதம் மன் கி பாத் - மனதின் குரல் என்று சொல்லி ஏமாற்றுகிறார்கள். நாங்கள் அதனை ஆரம்பத்திலேயே சொன்னோம் - முன்பே சொல்லுவதுதான் எங்களுடைய வேலை. எங்களுடைய தலைவரின் வேலையும் அதுதானே! ஆகஸ்ட் 15 துக்க நாள் என்றார் - இன்றைக்கு எல்லோரும் அழுது கொண்டிருக்கிறார்கள். தமிழ்நாட்டில் மோடி சந்தித்த கருப்புக் கொடிகளை இந்தியாவில் வேறு எங்கேயாவது சந்திப்பாரா? மேலே சென்றால், அங்கேயும் கருப்பு பலூன்களாக இருக்கிறது. இதுவரையில் எந்த ஒரு பிரதமராவது, தமிழ்நாட்டிற்கு வரும்பொழுது, சாலையில் செல்லாமல், சுவரை உடைத்துக் கொண்டு சென்றிருக்கிறார்களா? இதை நினைத்து பிரதமர் வெட்கப்படவேண்டாமா? இதுதான் தமிழ்நாடு - இந்தத் தமிழ்நாடு பெரியார் மண் - இனி பெரியார் சிலைமீது கை வைக்க முடியாது. பெரியாரைப்பற்றி அவதூறு பேசியவர் கள் எல்லாம் இன்றைக்கு ஓடி ஒளிந்து திரிகிறார்கள். பெரியா ரைப்பற்றி வீரம் பேசுகிறவர்கள் எல்லாம் இன்றைக்கு முன் ஜாமீன் கேட்டு, அதுவும் முடியாமல், யார் ஜாமீன் என்று தெரியாமல் இருக்கிறார்கள்.
உங்களுடைய பிள்ளைகளின்
எதிர்கால மான வாழ்க்கைக்கு
ஆகவே நண்பர்களே, நாங்கள் கோழைகள் அல்ல; எதையும் கொடுப்பதற்குத் தயாராக இருப்போம்; எதையும் இழப்பதற்குத் தயாராக இருப்பவர்கள்தான் இந்த இளைஞர் கூட்டம். இந்த இளைஞர் கூட்டத்தை வைத்து, நாங்கள் பதவிக்குப் போவதற்காகவோ, பணம் சேர்ப்பதற்காகவோ, பெருமை சேர்ப்பதற்காகவோ அல்ல - உங்களுடைய பிள்ளைகளின் எதிர்கால வாழ்விற்கு - உங்களுடைய பிள்ளைகளின் எதிர்கால உத்தியோகத்திற்கு, எல்லாவற்றிற்கும் மேலாக, உங்களுடைய பிள்ளைகளின் எதிர்கால மான வாழ்க்கைக்கு. மனிதன் என்றால், மானத்தோடு வாழவேண்டும். அவன் மற்றவர்களுக்கு தாசி புத்திரனாக இருக்கக்கூடாது. கேவலப்படுத்தப்படுபவனாக இருக்கக்கூடாது. மிருகத்தைத் தொழுகிறான், மனிதனை தொட மறுக்கிறானே என்று சொல்லப்படக் கூடிய அளவிற்கு, மிருகத்தைவிட கேவலமான ஒரு சமுதாயத்தைப் பெற்ற வனாக இருக்கக்கூடாது என்று சொல்லி, சுயமரியாதையை சொல்லிக் கொடுக்கிற இயக்கம் இந்த இயக்கம். எனவே, இளைஞர்களே, இந்த இயக்கத்திற்கு வாருங்கள், வாருங்கள் என்று கேட்டு, வாய்ப்பளித்த உங்களுக்கு நன்றி கூறி, என்னுரையை முடிக்கிறேன்.
நன்றி, வணக்கம்!
வாழ்க பெரியார்! வளர்க சுயமரியாதை!
திக்கெட்டும் பாய்வோம்! திராவிடத்தைக் காப்போம்!! இந்தப் பணி ஒரு தொடர் பணி! அது ஒரு நாளோடு முடியவில்லை. ஆயத்தமாவோம் என்று கூறி என்னுரையை முடிக்கிறேன்.
- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.
- விடுதலை நாளேடு, 17.5.18
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக