வெள்ளி, 13 அக்டோபர், 2023

நியூஸ் க்ளிக்' மற்றும் ஊடகங்களின்மீது பா.ஜ.க. அரசின் அடாவடித்தனத்தைக் கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் கண்டன உரை

 ஒன்றிய பி.ஜே.பி. அரசால் பறிக்கப்படுவது பத்திரிகை சுதந்திரம்!

பலியாவதோ, ஜனநாயகக் கோட்பாடுகள்!

கருத்துச் சுதந்திரத்திற்கு விரோதமான ஒன்றிய அரசை மக்களிடம் அம்பலப்படுத்துவோம்!

2

சென்னை, அக்.12 ஒன்றிய பி.ஜே.பி. அரசில் பறிக்கப் படுவது பத்திரிகை சுதந்திரம்! பலியாவதோ, ஜனநாயகக் கோட்பாடுகள்; கருத்துச் சுதந்திரத்திற்கு விரோதமான ஒன்றிய அரசை மக்களிடம் அம்பலப்படுத்துவோம்  என்றார்ப திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு 

கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம்!

நேற்று (11.10.2023) மாலை 6 மணிக்கு சென்னை தங்கசாலையில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில், ‘நியூஸ் க்ளிக்' மற்றும் ஊடகங்கள்மீது பா.ஜ.க. அரசின் அடாவடித்தனத்தைக் கண்டித்து சி.பி.அய்.(எம்) மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் கழகத் தலை வர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.

அவரது உரை வருமாறு:

‘‘பறிக்கப்படும் பத்திரிகை சுதந்திரம்- 

பலியாகும் ஜனநாயகம்!’’

மிகுந்த எழுச்சியோடு நடைபெறக்கூடிய - ‘‘பறிக்கப்படும் பத்திரிகை சுதந்திரம் - பலியாகும் ஜனநாயகம்'' என்ற சுருக்கென்று தைக்கக்கூடிய, புரியக்கூடிய தலைப்பில் ‘நியூஸ்க்ளிக்' மற்றும் ஊடகங்கள்மீது பா.ஜ.க. என்ற பாசிச அரசின் அடாவடித்தனத்தைக் கண்டித்து நடைபெறக்கூடிய இந்த ஆர்ப்பாட்டத்திற்குத் தலைமையேற்று இருக் கக் கூடிய மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் அருமைத் தோழர் கே.பாலகிருஷ்ணன் அவர்களே, இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில துணை செயலாளர் தோழர் வீரபாண்டியன் அவர்களே,

திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் இங்கே வந்திருக்கக் கூடிய மேனாள் நாடாளுமன்ற உறுப் பினரும், தி.மு.க. தலைமைச் செய்தித் தொடர்பாளருமான அன்பிற்குரிய சகோதரர் டி.கே.எஸ்.இளங்கோவன் அவர்களே,

இவ்வார்ப்பாட்டத்தில் கலந்துகொண்டிருக்கக் கூடிய அருமைத் தோழர்கள் வி.சி.க. இளஞ்சிறுத்தைகள் எழுச்சிப் பாசறை இளம் செகுவாரே அவர்களே,

மனிதநேய மக்கள் கட்சித் தலைவரும், சட்டப் பேரவை உறுப்பினருமான பேராசிரியர் எம்.எச்.ஜவாஹி ருல்லா அவர்களே, அனைத்துக் கட்சிப் பொறுப்பாளர் களே, தோழர்களே, சகோதரர்களே, உங்கள் அனை வருக்கும் அன்பான வணக்கத்தினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த ஆர்ப்பாட்டத்தின் நோக்கத்தை எனக்குமுன் தோழர் பாலகிருஷ்ணன் அவர்களும், நண்பர் வீரபாண்டியன், அகமது ஆகியோர் மிகத் தெளிவாகச் சொல்லியிருக்கிறார்கள்.

தோல்வியை எதிர்கொள்ளக்கூடிய 

மனநிலை இல்லாமல்தான்...

ஒன்றிய அரசின் இந்தப் போக்கு என்பது எதனால்? அவர்களுடைய தோல்வி ஒவ்வொரு நாளும் உறுதியாகிறது என்பதால், ‘இந்தியா' கூட் டணி என்ற ஒன்று அமைந்துவிட்டது என்றவுடன், அடுக்கடுக்கான தோல்வியை அவர்கள் சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதால், அந்தத் தோல் வியை எதிர்கொள்ளக்கூடிய மனநிலை இல்லாமல், யார் யாரெல்லாம் உண்மையைச் சொல்லுகிறார் களோ, அவர்களுக்கெல்லாம் தெளிவாகப் பதில் சொல்ல முடியாத காரணத்தால், கருத்திற்கு கருத்துச் சொல்ல முடியாத காரணத்தினால், மக்கள் மத்தியில் உண்மைகள் சென்று சேரக்கூடாது என்ற ஒரு நிலையில், யார் யாரெல்லாம் உண்மைகளை வெளிச்சத்திற்குக் கொண்டு வருகிறார்களோ, அத்தகைய ஜனநாயகத்தின் நான்காவது தூணான பத்திரிகையாளர்களைக் குறி வைக்கிறார்கள்.

எப்பொழுது ஆட்சி பத்திரிகையாளர்களைக் குறி வைக்கிறதோ, அன்றைக்கே அதனுடைய முடிவுரையை அது எழுதுகிறது என்று அதற்குப் பொருள் - இதுதான் வரலாறு.

பத்திரிகையாளர்கள் உண்மையைச் சொல்லுகிறவர்கள். அவர்கள் எந்தக் கட்சியையும் சாராதவர்கள்!

வரலாற்றில் இதுவரையில் மாற்றப்பட்ட, வீட்டிற்கு அனுப்பப்பட்ட, குழிதோண்டி புதைக்கப்பட்ட ஆட்சிகள் இருக்கின்றன என்றால், அவர்களுடைய கடைசி அத்தி யாயம் எதில் இருக்கிறது என்றால், பத்திரிகையாளர்களைக் குறி வைத்ததுதான். ஏனென்றால், பத்திரிகையாளர்கள் உண்மையைச் சொல்லுகிறவர்கள். அவர்கள் எந்தக் கட்சியையும் சார்ந்தவர்கள் அல்ல.

குறிப்பாகச் சொல்லவேண்டுமானால், இந்திய அரசமைப்புச் சட்டத்தில், மிகப் பிரபலமான நடிகராக இருக்கின்ற மோடி அவர்கள் என்ன செய்தார்? இரண்டாம் முறை பதவியேற்றுக் கொள்ளும்பொழுது, பிரதமர் மோடி பதவிப் பிரமாண உறுதிமொழியைப் படித்துவிட்டு, மேடையிலிருந்து கீழே இறங்கி, ஒரு கல்லை கட்டிப் பிடித்து, குனிந்து வணங்கிவிட்டு வந்தார். அந்தக் கல்லில் என்ன எழுதியிருந்தது என்றால், ‘‘இந்திய அரசமைப்புச் சட்டம்'' என்று. இந்தக் காட்சியை அனைவரும் தொலைக்காட்சிகளில் பார்த்திருக்கலாம்.

இந்திய அரசமைப்புச் சட்டத்தையே நாசப்படுத்துகிறார்- அதைத் தடுப்பதற்காகத்தான் இந்தக் கூட்டம்!

‘‘அடடா, இந்திய அரசமைப்புச் சட்டத்தின்மேல் பிரதமருக்கு அதீத அக்கறை இருப்பதால், அதை வணங் கியிருப்பார்'' என்று எல்லோரும் நினைத்தி:ருப்பார்கள். ஆனால், அவர் மிகப்பெரிய நடிப்பினுடைய உச்சகட் டத்திற்குப் போனவர். இந்திய அரசமைப்புச் சட்டத்தை இன்றைக்கு மிதிக்கிறார், துவைக்கிறார், அழிக்கிறார் - கரையான் புற்றெடுப்பதைப்போல, இந்திய அரசமைப்புச் சட்டத்தையே நாசப்படுத்துகிறார். அதைத் தடுப்பதற் காகத்தான் இந்தக் கூட்டம்.

வெறும் பத்திரிகையாளர்களைக் காப்பாற்றுவதற்காக மட்டுமல்ல - வெறும் ஜனநாயகத்தைக் காப்பாற்றுவது மட்டுமல்ல நண்பர்களே - இந்திய அரசமைப்புச் சட்டத்தைக் காப்பாற்றுவதற்காகத்தான்!

யாரிடத்தில் அதிகாரம் இருக்கிறது? 

‘‘We the People...'' என்று ஆரம்பிக்கக் கூடிய இந்திய அரசமைப்புச் சட்ட முகப்புரையில், யாரிடத்தில் இறையாண்மை இருக்கிறது? யாரிடத்தில் அதிகாரம் இருக்கிறது? வீரபாண்டியன் அவர்கள் சுட்டிக்காட்டி யதைப்போல, ஆட்சியாளர்களிடத்தில் இல்லை, நாடாளுமன்றத்திலோ, சட்டமன்றங்களிலோ இல்லை. மக்கள் மத்தியில்தான் இருக்கிறது.

ஆகவேதான், அந்த மக்களுக்கு விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துவதற்காகத்தான் - போதிய செய்திகளை அவர்களுக்குச் சொல்வதற்குத்தான் - ஜனநாயகத்தின் நான்காவது தூணான ஊடகங்கள்.

அந்த ஊடகங்களுடைய கழுத்தைத் திருகினால், குரல் வளையை நெரித்தால் அதை நாம் பார்த்துக் கொண்டிருக்க முடியுமா?

நல்ல வாய்ப்பாக, தமிழ்நாட்டில் ஒரு ஆட்சி - ‘திராவிட மாடல் ஆட்சி' நடைபெறுகின்ற காரணத்தி னால், நாமெல்லாம் வெளியே இருந்து பேசிக் கொண் டிருக்கின்றோம். இதுவே டில்லியாகவோ, மற்ற மாநிலங்களாகவோ இருந்திருந்தால் என்னாகியிருக்கும்? 

இப்படிப்பட்ட உரிமை கிடைத்திருக்குமா? அதைத் தான் தோழர் பாலகிருஷ்ணன் அவர்கள் அருமையாக எடுத்துச் சொன்னார்கள்.

ஒன்றிய பாசிச பா.ஜ.க. அரசை வீட்டிற்கு அனுப்புகின்ற நிலை வரும்!

தமிழ்நாட்டில் இருப்பதுபோல, இந்த சுதந்திர நிலை நாடு முழுவதும் நிச்சயம் வரும் - இந்தியா கூட்டணி வெல்லும்!  ஒன்றியத்தில் இருக்கின்ற பாசிச பா.ஜ.க. அரசை வீட்டிற்கு அனுப்புகின்ற நிலை வரும்.

பத்திரிகை சுதந்திரம் என்பது பிச்சையல்ல - கருத்துச் சுதந்திரம்!

ஒரே ஒரு செய்தியைச் சொல்லுகிறேன் - வழக்கு நடக்கிறது - நியூஸ்க்ளிக் என்கிற ஒரே ஒரு பத்திரி கைக்காக மட்டும் நாம் போராடவில்லை. பத்திரிகை சுதந்திரம் என்பது பிச்சையல்ல - கருத்துச் சுதந்திரம் என்பது இந்திய அரசமைப்புச் சட்டம் நமக்குத் தந்துள்ள உரிமை - அது நம்மோடு இருக்கக் கூடியது.

அந்த அரசமைப்புச் சட்டத்தில் இருக்கக் கூடிய அடிப்படை உரிமைகள் இருக்கிறதே, அவற்றை எந்த அரசு வந்தாலும், ஒருபோதும் பறிக்க முடியாது.

ஆனால், மோடி அரசு அதைப்பற்றிக் கொஞ்சம்கூட கவலைப்படவில்லை.

ஏனென்றால், எப்படி கடவுள்களையெல்லாம் வணங்கிவிட்டு,  அதனை வெளிநாடுகளுக்கு திருட்டுத் தனமாக தூக்கிச் செல்லுகின்ற பக்தர்கள் இருக் கிறார்களோ, அதுபோல, அரசமைப்புச் சட்டத்தை வணங்கிவிட்டு, முழுக்க முழுக்க அதைப் பறிமுதல் செய்யக்கூடிய முதல் ஆளாகத்தான் மோடி அரசு இருக்கிறது; பா.ஜ.க. அரசு இருக்கிறது; ஆர்.எஸ்.எஸ். அரசு இருக்கிறது. அதனுடைய அண்மைக்கால நிகழ்வுதான் இது.

பத்திரிகையாளர்கள்மீது தொடர்ந்து ஏவுகணைகள் வீசப்படுகின்றன. திரிசூலங்களை அவர்கள் வைத் திருக்கிறார்கள்.

யார் யாரெல்லாம் எதிர்க்கட்சியில் இருக்கிறார்களோ, அவர்களுக்கெல்லாம் சி.பி.அய். சோதனை - அமலாக் கத்துறை சோதனை வரும் - வருமான வரித்துறை சோதனை வரும்.

ஜனநாயகத்திற்கு விரோதமாக மட்டுமல்ல, உச்சநீதிமன்றத்தினுடைய தீர்ப்புக்கும் விரோதமாக...

நியூஸ் க்ளிக் வழக்கில், உச்சநீதிமன்றத்தினுடைய தீர்ப்புக்கு விரோதமாக, அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமாக மட்டுமல்ல, ஜனநாயகத்திற்கு விரோதமாக மட்டுமல்ல, உச்சநீதிமன்றத்தினுடைய தீர்ப்புக்கும் விரோதமாக, அரசமைப்புச் சட்ட நெறிமுறைகளுக்கும் விரோதமாக - பகிரங்கமாக, நிர்வாணத் தன்மையில் வரக்கூடிய அளவில் இருக்கிறது என்பதற்கு அடை யாளம்தான் இந்தச் செய்தி.

மூத்த வழக்குரைஞர் கபில்சிபலின் வாதம்!

மூத்த வழக்குரைஞர் கபில்சிபல் உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்கில் கூறியதாவது:

‘‘அரசாங்க வழக்குரைஞர் சொன்ன குற்றச்சாட்டில் ஆதாரமில்லை. பொய்யைத் தவிர வேறு கிடையாது. இங்கே சொல்லப்பட்ட தகவல்கள் எதுவுமே உண்மை யல்ல. ஒரு காசுகூட சீனாவிலிருந்து வரவில்லை. இவர்மீது சாட்டப்படும் குற்றச்சாட்டில் துளியும் உண்மை யில்லை. கலப்படமில்லாத பொய்யைச் சொல்கிறார்கள்.''

பெரியார் மொழியில் சொல்லவேண்டுமானால், ‘‘ஜமுக்காளத்தில் வடிக்கட்டிய பொய்.''

மேலும் கபில்சிபல் தொடர்கிறார்,

‘‘சட்டப்படி நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று சொன்னால்கூட, சட்ட முறைகளைப் பின்பற்ற வேண்டாமா?'' என்று கேள்வி எழுப்பினார்.

நாமெல்லாம் வழக்குரைஞர்கள், சட்டம் படித்தவர்கள் - இதை உலகம் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறது.

‘‘எதற்காகக் கைது செய்யப்படுகிறோம் என்ற காரணத்தை கைது செய்யப்படுபவரிடம் சொல்லி, அவரைக் கைது செய்யவேண்டும்.''

ஒன்றிய அரசுக்கு வேண்டாதவர்கள் சிறைச்சாலைக்குள் இருக்கவேண்டும் என்பதுதான் அவர்களுடைய குறிக்கோள்!

ஆனால், அதுபோன்ற நடைமுறை பாசிச பா.ஜ.க. ஒன்றிய அரசில் கிடையாது. அவர்கள் நினைத்தால், அவர்களுக்கு வேண்டாதவர்கள் சிறைச்சாலைக்குள் இருக்கவேண்டும் என்பதுதான் அவர்களுடைய குறிக்கோள்.

இங்கே நமது அகமது மற்றும் நண்பர்கள் உரை யாற்றியபொழுது சொன்னார்கள்; ‘இந்தியா' கூட்டணி ஆட்சி வந்தவுடன், பிரதமர் மோடியை கைலாசத்திற்கு அனுப்புவோம் என்று சொன்னார். அதற்காக நாளைக்கு அவர்மீது வழக்கு வரும்.

அகமது அவர்கள் எந்தக் கைலாசத்தை சொல்லியிருப்பார் என்றால், நித்தியானந்தா இருப்பாரே, அந்தக் கைலாசத்தைத்தான் சொல்லியிருப்பார்.

அவரை கைலாசத்திற்கு அனுப்பவேண்டாம் - மக்கள் வீட்டிற்கு அனுப்புவார்கள் என்பதுதான் மிகவும் முக்கியம்.

இங்கே காங்கிரஸ் தலைவர் சொன்னதுபோன்று, பிரதமர் அடுத்த ஆண்டு கொடியேற்றுவேன் என்று சொன்னதின்படி வேண்டுமானால், வீட்டில் ஏற்றலாம் அவர்.

இப்படிப்பட்ட  ஒரு சூழ்நிலையில், இவ்வளவு பெரிய அநியாயங்கள் ஒரு பத்திரிகைக்கு நடக்கிறது என்று நினைக்காதீர்கள். எங்கோ டில்லியில் நடக்கிறது என்று நினைக்காதீர்கள். யாருக்கோ ஒரு பத்திரிகையாளருக்கு என்று நினைக்காதீர்கள்? ஒரு 'நக்கீரன்' கோபாலுக்கு ஆபத்து என்று சொன்னால், அத்துணை பத்திரிகை யாளர்களும் எழுந்து நின்றால்தான், பத்திரிகை சுதந்திரம் காப்பாற்றப்படும். ஒரு தனி நபருக்கு என்பது அல்ல.

அதுபோலத்தான், எங்கோ நடக்கிறது? யாருக்கோ நடக்கிறது? நமக்கென்ன கவலை என்று இருக்கக் கூடாது.

ஒரு தெருவின் கோடியில் உள்ள ஒரு வீட்டில் நெருப்புப் பிடித்தால், அதுபற்றி கவலைப்படமாட்டேன், என் வீட்டிற்கு அந்த நெருப்பு வராது என்று சொன்னால், அவரை விட அறிவுக் குறைந்தவர் வேறு யார் இருக்க முடியும்? எச்சரிக்கையாக இருக்கவேண்டும் அல்லவா!

தமிழ்நாடு முழுக்கக் கொண்டு செல்லவேண்டும். நாட்டு மக்களுக்கு விளக்கிச் சொல்லவேண்டும்!

எனவேதான் நண்பர்களே, இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தினை சரியான காலகட்டத்தில் ஏற்பாடு செய்த நம்முடைய மார்க்சிஸ்டு கட்சித் தோழர்களை நான் வெகுவாகப் பாராட்டுகிறேன். இதை ஓர் இயக்கமாக தமிழ்நாடு முழுக்கக் கொண்டு செல்லவேண்டும். நாட்டு மக்களுக்கு விளக்கிச் சொல்லவேண்டும்.

இன்றைக்கு உச்சநீதிமன்றமே 

சுட்டிக்காட்டுகிறது!

ஏனென்றால், எல்லாத் துறைகளிலும் கைவைத்திருக் கிறார்கள்; நீதித்துறையைப் பாருங்கள்- அறிவிக்கப்படாத நெருக்கடி காலம் - நெருக்கடி காலத்தில்கூட வெளிப் படையாகச் சொல்லி நீதித்துறை உரிமைகளைப் பறித்தார்கள். ஒரு பக்கமாக சாய்ந்திருக்கிறது நீதித்துறை என்று சொன்னார்கள்.

ஆனால், இன்றைக்கு ஒரு பக்கத்தில் ஜனநாயகத்தை - அரசமைப்புச் சட்டத்தைக் கும்பிடுவதுபோன்று நடித்துக்கொண்டு இன்றைக்கு மீண்டும் அவர்கள் எப்படி வந்துகொண்டிருக்கின்றார்கள் என்று சொன்னால் நண்பர்களே, மிகப்பெரிய அளவிற்கு அதைப் பறித்துக் கொண்டிருக்கக் கூடிய அளவிற்கு, வேக வேகமாக அத்துமீறி சென்று, அரசமைப்புச் சட்ட நடைமுறை களையெல்லாம் தூக்கி எறிந்துவருவதை, இன்றைக்கு உச்சநீதிமன்றமே சுட்டிக்காட்டுகிறது.

உச்சநீதிமன்றத்தினுடைய கண்டனத்திற்கு ஆளான ஓர் ஒன்றிய அரசு!

நீதிபதிகளை நியமிக்கும்படி நாங்கள் அனுப்பிய பரிந்துரையை செய்ய நீங்கள் தயாராக இல்லை என்று உச்சநீதிமன்றம் ஒன்றிய அரசினுடைய செயல்பாட்டைக் கண்டித்திருக்கிறது என்றால், இந்திய வரலாற்றிலேயே, உச்சநீதிமன்றத்தினுடைய கண்டனத்திற்கு ஆளான ஓர் ஒன்றிய அரசு, ஜனநாயக வரலாற்றில் வேறு உண்டா என்று எண்ணிப் பாருங்கள் நண்பர்களே!

எனவே, அவர்கள் அரசமைப்புச் சட்டத்தை மதிக்க வில்லை; ஜனநாயகத்தை மதிக்கவில்லை; உச்சநீதி மன்றம் போன்ற நீதிமன்றங்களை மதிக்கவில்லை; ஊடகங்களை மதிக்கவில்லை; மக்களை மதிக்கவில்லை.

எனவேதான், அவர்களை எங்கே அனுப்பவேண் டுமோ, அங்கே அனுப்பவேண்டிய அவசியம் இருக்கிறது.

நரி ஒருபோதும் சைவமாகாது!

அவர்கள் மாறிவிட்டார்கள் அல்லது திருந்திவிட் டார்கள் - அவர்கள் பல வாய்ப்புகளைத் தற்போது செய்கிறார்கள் என்று நினைக்காதீர்கள்; நரி ஒருபோதும் சைவமாகாது. அதை நன்றாக நீங்கள் நினைவில் வைத்துக்கொண்டு, நரியை எங்கே அனுப்பவேண்டுமோ, அங்கே அனுப்புங்கள். நரித்தனத்திற்கு இடமில்லை.

நியூஸ்க்ளிக் என்பவர் ஒரு தனி நபர் என்று நினைக்காதீர்கள்; இந்தியா  அவருடைய பின்னால் இருக்கிறது. ‘இந்தியா' கூட்டணி மட்டுமல்ல, இந்திய மக்கள் இருக்கிறார்கள்.

யார் யார் உணர்ச்சிப்பூர்வமாக நியாயத்திற்குப் போராடுகிறார்களோ, அவர்கள் எல்லாம் அவர் பின்னால் இருக்கிறார்கள். நீதிக்குப் போராடுகிறவர்கள் அவர் பின்னால் இருக்கிறார்கள்.

இறுதியில் சிரிப்பவர்கள்தான் அறிவாளி - 

நடுவில் சிரிப்பவன் புத்திசாலி அல்ல!

இறுதியில் சிரிப்பவர்கள்தான் அறிவாளி; நாம் இறுதியில் சிரிக்க இருக்கிறோம். நடுவில் சிரிப்பவன் புத்திசாலி அல்ல என்பது ஓர் ஆங்கிலப் பழமொழி.

அதை விரைவில் பா.ஜ.க. உணரும்; உணர வைப்போம். இன்னும் 6 மாதங்கள் அல்லது அதைவிட குறைந்த காலகட்டம்தான்.

ஏற்கெனவே, லடாக்கில் நடைபெற்ற தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெறவில்லை. எங்கும் அவர்களுக்குத் தோல்வி முகம்தான். அந்தத் தோல்வியினுடைய உச்சக் கட்ட பயத்தினால், என்ன செய்வதென்று தெரியாமல், அவர்கள் ஏதேதோ செய்துகொண்டிருக்கிறார்கள்.

அவர்களுக்கு வரலாறு ஒரு குப்பைத் தொட்டியை அடையாளம் வைத்திருக்கிறது!

கடைசி கட்டத்தில் பல பேர் இப்படித்தான் நிலை தடுமாறி இருக்கிறார்கள். ஆகவே, அவர்களுக்கு வரலாறு ஒரு குப்பைத் தொட்டியை அடையாளம் வைத்திருக்கிறது. அந்தக் குப்பைத் தொட்டியில்தான் இப்படிப்பட்ட பாசிசம் போய் விழுந்திருக்கிறது. இதுதான் பழைய வரலாறு. அவர்களைத் தூக்கி எறிவதற்கு, மக்கள் முன், ஒவ்வொரு தெருவிலும், ஒவ்வொரு வீட்டிலும், ஒவ்வொரு திண்ணையிலும் பிரச்சாரம் செய்வோம்.

 ஜனநாயகத்தைக் காப்பாற்றுவோம்!

நாட்டைக் காப்பாற்றுவோம்!

இந்தியாவைக் காப்பாற்றுவோம்!

இந்தியாவைக் காப்பாற்ற ‘இந்தியா' கூட்டணியை வெற்றி பெற வைப்போம்!

அதுதான் மிகவும் முக்கியம்!

இப்பொழுது யார் ‘‘Anti India'' என்று சொன்னால், யார் யாரெல்லாம் பா.ஜ.க. அணியோ, அவர்கள் எல்லாம் ‘‘Anti India''

அவர்கள்தான் ‘‘Anti India'' வாக இருக்கிறார்கள்; 

நாம்தான் இந்தியா - 

நாம்தான் வெற்றி பெறக் கூடியவர்கள்!

எனவே, நாம்தான் இந்தியா - நாம்தான் வெற்றி பெறக் கூடியவர்கள். நாம்தான் மக்களுக்காக இருக்கக் கூடியவர்கள் என்பதைக் காட்டுவதற்கு இந்த அற்புத மான வாய்ப்பை உருவாக்கிய தோழர்களுக்கு நன்றி!

போராடுவோம், வெற்றி பெறுவோம்!

வெற்றி பெறுகின்ற வரையில் போராடுவோம்!!

பத்திரிகை சுதந்திரம் கிள்ளுக்கீரையல்ல -

எங்கள் உயிர்மூச்சு!

பத்திரிகையாளர்கள் தனியல்ல - 

நாங்கள் இருக்கிறோம், திரண்டிருக்கிறோம்!

நாங்கள் சிறைச்சாலைக்குச் செல்வதற்கும், அடக்குமுறைகளை ஏற்பதற்கும்கூடத் தயாராக இருக்கிறோம்!

உங்களுக்குப் பாதுகாப்பு கவசங்களாக இருக்கிறோம்; உங்களுக்காக நாங்கள் சிறைச்சாலைக்குச் செல்வதற்கும், அடக்குமுறைகளை ஏற்பதற்கும்கூடத் தயாராக இருக் கிறோம் என்று கூறி விடைபெறுகிறேன்.

நன்றி, நன்றி, வணக்கம்!

இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் கண்டன உரையாற்றினார்.

--------++++++++------+++++++------+++++-----


திராவிட இயக்கக் கொள்கை வீரர் ஏ.வி.பி.ஆசைத்தம்பி நூற்றாண்டு விழா: தமிழர் தலைவர் விளக்கவுரை!


 ‘‘மதவெறி காந்தியாரைக் கொன்றது- ஆரிய ஸநாதனம் அவரைக் கொன்றது'' 

என்று எழுதியதால் ஏ.வி.பி.ஆசைத்தம்பி கைது செய்யப்பட்டார்!

சிறைச்சாலையில் அவரது தலை மொட்டையடிக்கப்பட்டதால் அன்றைய காலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது!

11

சென்னை, அக்.13 ‘‘மதவெறி காந்தியாரைக் கொன்றது. ஆரிய ஸநாதனம் அவரைக் கொன்றது. மதச்சார்பற்ற ஒரு நிலை வரவேண்டும்; சமூகநீதி வரவேண்டும் என்று சொன்னதினால்தான் காந்தியார் கொல்லப்பட்டார்’’ என்று எழுதியதற்காக ஏ.வி.பி.ஆசைத்தம்பி தண்டிக்கப் பட்டு மொட்டையடிக்கப்பட்டதால் ஒரு பெரிய பரபரப்பு ஏற்பட்டது என்றார்  திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

ஏ.வி.பி.ஆசைத்தம்பி நூற்றாண்டு விழா

கடந்த 1.10.2023 அன்று மாலை சென்னை பெரியார் திடலில் உள்ள நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றத்தில் நடைபெற்ற திராவிட இயக்கக் கொள்கை வீரர் ஏ.வி.பி.ஆசைத்தம்பியின் நூற்றாண்டு விழாவில்  திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்  சிறப்புரையாற்றினார்.

அவரது சிறப்புரை வருமாறு:

திராவிடர் கழகம் உறவோடும், உரிமையோடும் 

கொண்டாடக்கூடிய விழா!

மிகுந்த மகிழ்ச்சியோடும், எழுச்சியோடும் நடைபெறக்கூடிய திராவிட இயக்க லட்சிய வீரர், கொள்கை வீரர், மறைந்தும் மறையாமல் நம் நெஞ்சங்களில் நிறைந்தவராக என்றைக்கும் இருக்கக் கூடிய அய்யா ஏ.வி.பி.ஆசைத்தம்பி அவர் களுடைய நூற்றாண்டு விழாவை - தாய்க்கழகமான, அவர் எங்கிருந்து பொதுவாழ்க்கையைத் தொடங் கினார்களோ, அந்த இயக்கமான திராவிடர் கழகம் உறவோடும், உரிமையோடும் கொண்டாடுகிறது.

இந்நிகழ்ச்சிக்கு வருகை தந்து, சிறப்பாக நினை வுரையை ஆற்றியுள்ள திராவிட முன்னேற்றக் கழகத் தின் செய்தித் தொடர்புக் குழுத் தலைவரும், மேனாள் நாடாளுமன்ற உறுப்பினருமான அன்புச்சகோதரர் டி.கே.எஸ்.இளங்கோவன் அவர்களே,

அறிமுக உரையாற்றிய கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களே, வரவேற்புரையாற் றிய கழகப் பொருளாளர் வீ.குமரேசன் அவர்களே,

கொள்கை உறவு முறைத் தொடர்பை ஏற்படுத்திக் கொண்ட, ஆசைத்தம்பி குடும்பத்தினர்!

இந்நிகழ்ச்சியில் ஒரு பெரிய மகிழ்ச்சி என்ன வென்றால், இதுவரையில் நமக்குத் தொடர்பில்லாமல் இருந்து, இன்றைக்குக் கொள்கை உறவு முறைத் தொடர்பை ஏற்படுத்திக் கொண்ட, ஆசைத்தம்பி அவர் களுடைய குடும்பம் என்பது நம்முடைய குடும்பம், வேறு அல்ல. அந்தக் குடும்பத்தோடு, நம்முடைய சகோதரர் ஏ.வி.பி.ஏ.சவுந்தரபாண்டியன் அவர்களும், அதேபோல, அய்யா தங்கசாமி அவர்களும் - அவரு டைய குடும்ப உறவுகளும் இங்கே வந்திருக்கின்றனர்.

ஏ.வி.பி.ஆசைத்தம்பி அவர்களுடைய தங்கை மகன்கள் மோகன், ஜெய்சிங் ஆகிய நண்பர்கள், பேரப் பிள்ளைகள், குழந்தைகளையெல்லாம் சந்திக்கின்ற பொழுது எல்லையற்ற மகிழ்ச்சியடைகின்றோம்.

கொள்கைக்கு அப்பாற்பட்டு அவர்கள் போகவில்லை

இதுவரையில் காணாதவர்களைக் காணுகிறோம் - காணாமல் போனார்கள் என்று நான் சொல்லமாட்டேன் - ஏனென்றால், அவர்கள் இந்தக் கொள்கை உணர்வோடு இருக்கிறார்கள்; தொடர்புகள் இல்லாமல் இருந்திருக்கிறது. கொள்கைக்கு அப்பாற்பட்டு அவர்கள் போகவில்லை.

இந்த நூற்றாண்டு விழா இந்தத் தொடர்புக்கு மிக அருமையாகப் பயன்பட்டு இருக்கிறது. இங்கே வந் திருக்கின்ற அவருடைய குடும்பத்தாருக்கும், மற்ற நண்பர்களுக்கும், சான்றோர்களுக்கும் என்னுடைய வணக்கத்தினை முதற்கண் தெரிவித்துக் கொள்கிறேன், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

விருதுநகர் போன்ற பகுதிகளில் பொதுவாக, ‘உறவின்முறை' என்ற ஒரு வார்த்தையை சொல்வார்கள்.

அதுபோல, ‘உறவின் முறை'தான் இது. ரத்த சம்பந்த மான உறவு என்பது ஒன்று. அதைவிட மிக ஆழமானது கொள்கை உறவு. அந்தக் கொள்கை உறவினால்தான், இந்த நூற்றாண்டு விழாவினை நாங்கள் இயல்பாகக் கொண்டாடுகிறோம்.

இணைப்புப் பாலத்தை ஏற்படுத்துவதற்கு காரணமாக இருந்த இல.திருப்பதி!

தலைமைக் கழகத்தின் மிக முக்கியமான அமைப் பாளராக இருந்து, செயல்வீரராக இருக்கக்கூடிய துடிப்பு மிக்க இல.திருப்பதி அவர்கள், அவர்களனைவரையும் தொடர்பு கொள்வதற்கு முழுக் காரணமாக அமைந்தார். அவரை பாராட்டுகிறோம், நன்றி செலுத்துகிறோம். எங்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. அப்படி ஒரு கொள்கை உறவு - இந்த இணைப்புப் பாலத்தை ஏற்படுத்துவதற்கு அவர் காரணமாக இருந்தார்கள்.

ஏனென்றால், இது காலங்காலமாக இருக்கின்ற உறவு. இங்கே உரையாற்றிய தோழர்கள் அனைவரும் அய்யா ஆசைத்தம்பி அவர்களைப்பற்றி சொன்னார்கள்.

ஆசைத்தம்பியின் தந்தையார் 

அய்யா ஏ.வி.பழனியப்பன்

அதைவிட இன்னொரு தகவலை சொல்லு கிறேன் - எத்தனை தலைமுறைகளைத் தாண்டி இந்த உறவு இருக்கிறது என்பதற்குச் சான்றானது. ஆசைத்தம்பி அவர்களுடைய தந்தையார் அய்யா ஏ.வி.பழனியப்பன் அவர்களை நான் அறிவேன்.

அய்யா தந்தை பெரியார் அவர்களுடைய இயக்கத்திற்கு விருதுநகரில் அவர் தலைவர்.

‘‘விருதுநகர் நாடார் சமையல்’’ 

அன்றைய காலகட்டத்தில், திராவிடர் கழகம் சார்பில் மாநாடுகள் இரண்டு நாள்கள் நடைபெறும். அப்பொழுது தந்தை பெரியார் ஒரு புரட்சி செய்தார். அதுபோன்று நடைபெறும் மாநாடுகளில், ‘‘விருதுநகர் நாடார் சமையல்'' என்று மாநாடு அழைப்பிதழில் போட்டிருப்பார்.

ஏனென்றால், அன்றைய காலகட்டம் ஜாதியைப் பார்த்துக் கொண்டிருந்த காலகட்டம். இளைய தலை முறையினர் இதைத் தெரிந்துகொள்ளவேண்டும்.

விருதுநகர் பழனியப்பன் அவர்களைத்தான் தந்தை பெரியார் அவர்கள் தொடர்புகொண்டு, ‘‘மாநாட்டிற்கு 2000-த்திற்கும் மேற்பட்டோர் வருவார்கள்; சமையற் காரர்களையும், அதற்குரிய ஏற்பாடுகளையும் பார்த்துக் கொள்ளவேண்டியது உங்கள் பொறுப்பு'' என்று கடிதம் எழுதுவார்.

பழனியப்பன் அவர்களும், ‘‘நான் பார்த்துக் கொள் கிறேன்'' என்று கடிதம் எழுதுவார் தந்தை பெரியார் அவர்களுக்கு.

ஒரு பாரம்பரியமிக்க குடும்பம்!

ஆசைத்தம்பிபற்றி மட்டும்தான் நாம் பேசுகிறோம். அவருடைய தந்தையார் காலத்தில் இருந்தே அந்தக் குடும்பம் இந்த இயக்கத்தில் இருக்கக்கூடிய, ஒரு பாரம்பரிய மிக்க சூழல்.

ஒடுக்கப்பட்ட சமுதாயத்திலிருந்து இன்றைக்கு அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ்., அதிகாரிகள் வந்திருக்கிறார்கள். நல்ல சிமெண்ட் சாலை வந்தாயிற்று; போக்குவரத்திற்கு இடையூறின்றி செல்ல அண்ணா மேம்பாலம், கத்திபாரா மேம்பாலம் போன்ற மேம்பாலங்கள் அமைந்திட தி.மு.க. ஆட்சியில், டி.ஆர்.பாலு அவர்கள் ஒன்றிய அமைச்சராக இருந்து பொதுமக்களுக்கு வசதியாக அத்திட்டங்களை அமைத்துக் கொடுத்தார்கள்.

அன்றைய காலகட்டத்தில் சாலைப் போக்குவரத்திற்கு எவ்வளவு இடையூறு இருந்தன; இன்றைக்கு இவ்வளவு வசதியாகப் போகிறார்களே என்று மேற்சொன்ன இரண் டையும் பார்க்கக் கூடியவர்களுக்குத்தான், சாலை யினுடைய பெருமை தெரியும்.

அடித்தளம் அமைத்தவர்தான் நூற்றாண்டு விழா நாயகர் ஏ.வி.பி.ஆசைத்தம்பி

12
ஆகவே, இதை அத்தனையும் செய்தவர்கள் யாரோ, அவர்களை நினைத்துப் பார்க்கவேண்டும். அதற்கு அடித்தளம் அமைத்தவர்கள்தான் நூற்றாண்டு விழா நாயகர் ஏ.வி.பி.ஆசைத்தம்பி போன்றவர்கள்.

இந்த இயக்கத்திற்கு அந்தளவிற்குப் பாடுபட்டவர்கள் அவர்கள். இன்றைக்கு அவர்கள் கட்டிய மேடையில்தான் நாம் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கின்றோம்.

இந்தக் கொள்கையைக் கண்டு எவ்வளவு வெறுப் படைந்திருந்தால், அவருடைய தலையை மொட்டை யடிக்கக் கூடிய அளவிற்கு இன எதிரிகள் வந்திருப் பார்கள்.

அண்ணா அவர்கள் ஒரு கட்டுரையை எழுதினார். ‘விடுதலை'யில் குத்தூசி குருசாமி அவர்கள் மிகப்பெரிய அளவிற்கு ஒரு கட்டுரையை எழுதியிருக்கிறார்.

கலைஞர் அதைவிட மிக அழகாகச் சொன்னார்.

என்ன தவறு செய்தார் அவர். கிரிமினல் குற்றம் செய்தாரா? என்றால் இல்லை.

அன்றைக்கு இந்தக் கொள்கையைச் சொல்லுவதற்குத் துணிவு வேண்டும்!

இன்றைக்கு இந்தக் கொள்கையைச் சொல் வதற்கு எல்லோரும் வருவார்கள். ஆனால், அன் றைக்கு இந்தக் கொள்கையைச் சொல்லுவதற்குத் துணிவு வேண்டும். ஆசைத்தம்பி துணிந்து இயக்கப் பணிகளைச் செய்தார்.

விருதுநகரில் வி.வி.ராமசாமி அவர்களை எல் லோருக்கும் தெரியும். அவர், ஆசைத்தம்பியைவிட மூத்தவர். ஆனாலும், அவருக்கே யோசனை சொல்லக்கூடிய அளவிற்கு இருந்தவர். தன்னு டைய கருத்தை மாற்றிக் கொள்ளமாட்டார் ஆசைத்தம்பி அவர்கள்.

இதோ என் கைகளில் இருப்பது ‘திராவிட நாடு' பத்திரிகை. அண்ணா அவர்கள், 1942 ஆம் ஆண்டு ‘திராவிட நாடு' பத்திரிகையைத் தொடங்கினார். 1943 ஆம் ஆண்டு ‘திராவிட நாடு' இதழில் எழுதியிருக்கிறார்.

1939-40 ஆம் ஆண்டு நீதிக்கட்சிக்கு அய்யா தந்தை பெரியார் அவர்கள் தலைவராகிறார். அந்தக் கட்சி தோல்வியடைந்த பிறகு, அதற்கு ஒரு புதிய வலிமையை உண்டாக்கவேண்டும் என்பதற்காக தலைமையேற்றார்.

ஜஸ்டிஸ் கட்சிக்குப் 

புதிய அமைப்பு வேண்டும்

20 வயதுடைய ஏ.வி.பி. ஆசைத்தம்பி போன்றவர்கள் கருத்துச் சொல்கிறார்கள்.

ஜஸ்டிஸ் கட்சிக்குப் புதிய அமைப்பு வேண்டும்: ஏ.வி.பி.ஆசைத்தம்பி எழுதுகிறார் 8.8.1943 ஆம் ஆண்டு.

அந்தக் காலகட்டத்தில்தான் என்னுடைய ஆசிரியர் திராவிடமணி அவர்கள் பத்து வயதில் என்னை மேடை ஏற்றுகிறார்.

1944 ஆம் ஆண்டு சேலம் மாநாடு - திராவிடர் கழகத்திற்குப் பெயர் மாறுகிறது.

மக்கள் இயக்கமாக 

இந்த இயக்கத்தை மாற்றவேண்டும்!

அப்படிப்பட்ட காலகட்டத்தில் அவர் சொல்கிறார், ‘‘பணக்காரர்கள், பதவியாளர்கள் எல்லாம் நீதிக்கட்சியில் இருந்துகொண்டு குறுக்கே இருக்காதீர்கள். மக்கள் இயக்கமாக இந்த இயக்கத்தை மாற்றவேண்டும்'' என்று.

அந்தக் கருத்தோட்டத்தை இதுபோன்ற இளைஞர் களை வைத்துத்தான், தந்தை பெரியார் எழுதி, ‘‘அண்ணா துரை தீர்மானம்'' என்று அடுத்த ஆண்டு நடைபெற்ற சேலம் மாநாட்டில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

அந்த இயக்கமே அந்தக் கொள்கையை உண் டாக்குகிறது.

திராவிட இயக்கம் அன்றுமுதல் இன்றுவரை வெற்றி பெறுவதற்கு அடிப்படை

இளைஞர்கள்  தந்தை பெரியார் எப்படி யோசித்தார் என்பதை எண்ணிப்பார்க்கவேண்டும். பெரியார் எப்படி யோசித்தாரோ, அதுபோன்று இளைஞர்கள் யோசிக் கிறார்கள். தலைமுறை இடைவெளி இல்லை. இதுதான் திராவிட இயக்கம் அன்றுமுதல் இன்றுவரை வெற்றி பெறுவதற்கு அதுதான் அடிப்படை.

ஆசைத்தம்பி அவர்களுடைய எழுத்து, ஆற்றல் என்பது மிகவும் சிறப்பானது.

ஆசைத்தம்பி அவர்கள் கூட்டத்தில் உரையாற்றும் பொழுது,  தொலைதூரத்தில் இருந்து கேட்பவர்களுக்குத் தந்தை பெரியார் உரையாற்றுவதுபோன்று இருக்கும். அதனால்தான் ‘‘வாலிபப் பெரியார்'' என்று அவரை அழைப்பார்கள். தொலைதூரத்தில் இருப்பவர்கள் இவருடைய உரையை கேட்டால், பெரியார் பேசுகிறாரா? ஆசைத்தம்பி பேசுகிறாரா? என்று சந்தேகம் வருவது போன்று, நிறுத்தி, நிதானமாக, அய்யா எப்படி பேசு வார்களோ, அதேபோன்று பேசுவார்.

அவருடைய எண்ணம், சிந்தனைகள் மிகப்பெரிய அளவிற்கு ஒரு மாற்றத்தை உருவாக்கின, சமுதாயத் தினுடைய எண்ணத்தினை, கருத்தினை வேகமாக மறுமலர்ச்சி அடையச் செய்வதற்கு  பகுத்தறிவு, புரட்சிக் கூறுகளை எடுத்துச் சொல்லி, ஒரு பெரிய மாறுதலை உண்டாக்கினார்.

ஆசைத்தம்பி நடத்திய ‘தனியரசு’ இதழ்!

எந்தக் கருத்தாக இருந்தாலும், அதைப்பற்றி துணிச்சலாகச் சொல்லக் கூடியவர். எப்படி கலைஞர் அவர்கள் ‘முரசொலி'யை ஆரம்பித்தாரோ, அதுபோன்று ஆசைதம்பி அவர்கள் ஒரு வாரப் பத்திரிகையைத் தொடங்கினர். பின்னாளில் அதனை நாளிதழாக மாற்றினார். ‘தனியரசு' என்ற பெயரில்.

எல்லா கருத்தையும் அவர் தெளிவாக எடுத்துச் சொல்லக் கூடிய அளவிற்கு வந்தபோது, அவருடைய எழுத்து வன்மை - அண்ணா, கலைஞர் வரிசையில் பார்த்தீர்களேயானால், அவர்கள் பேச்சாளர்களாக மட்டும் இருக்கமாட்டார்கள்; நல்ல எழுத்தாளர்களாகவும் இருப்பார்கள்.

திரைப்படத் துறையிலும் சாதித்தவர் ஆசைத்தம்பி!

திரைப்படத் துறைக்கும் போய் இவர் சாதித்தார் என்பதைத்தான் இங்கே சொன்னார்கள். ‘சர்வாதிகாரி' திரைப்படத்தில் இவர் எழுதிய மிக முக்கியமான வசனங்கள் இன்றைக்கும் நிறைய பேருக்கு அந்த வசனங்கள் பொருந்தும். அரண்மனை நாய்கள் அதிகமாகக் குரைத்துக் கொண்டிருக்கின்றார்கள்.

அவர் எழுதிய வசனங்களில் எவ்வளவு துடிப்பு இருக்கிறது என்பதற்கு பல உதாரணங்கள் உண்டு.

நான் திரைப்படங்களை அதிகமாகப் பார்ப்பவன் இல்லை. ஆசைத்தம்பி வசனம் எழுதியிருக்கிறார் என்ப தால், அந்தத் திரைப்படத்திற்குச் சென்றோம் நாங்கள்.

நான் திராவிடர் கழகத்தில் இருக்கின்றவன்; அவர் தி.மு.க.  பிரிந்த நேரத்தில், அவ்வியக்கத்தில் இருந்தார். ஆனாலும் நாங்கள் ஒற்றுமையாக, நண்பர்களாகத்தான் இருப்போம்.

எல்லா துறைகளிலும் வெற்றிகரமாக பணியாற்றியவர் ஆசைத்தம்பி அவர்கள்.  தி.மு.க. பிரிந்திருந்தாலும், தி.க.வும், தி.மு.க.வும் இரட்டைக் குழல் துப்பாக்கிகள்தான்.

‘காந்தியார் சாந்தி அடைய!’

‘முரசொலி' ஆசிரியராகவும், ‘கலைஞர் தொலைக் காட்சி' ஆசிரியராகவும் இருக்கக்கூடிய திருமாவேலன் அவர்கள் சில ஆண்டுகளுக்கு முன்பு எழுதிய புத்தகத்தில் அற்புதமாகப் பதிவு செய்திருக்கிறார். இது ஏற்கெனவே ஒரு சிறிய புத்தகமாக ‘காந்தியார் சாந்தி அடைய’  என்ற தலைப்பில் வெளிவந்திருக்கிறது.

இதற்காகத்தான் அவரை கைது செய்தார்கள்; இதற்காகத்தான் அவர் தலையை மொட்டையடித்தார்கள் சிறைச்சாலையில்.

அவர் அப்படி என்ன தவறு செய்தார்?

கோட்சே என்ற பார்ப்பனர் காந்தியாரைச் சுட்டுக் கொன்றார் என்று எழுதினார்.

அவர் எழுதியதில், எந்தவிதமான தவறும் கிடையாது. 

துறையூர் நடராஜா பிரசில் அச்சடிக்கப்பட்டு எரி மலைப் பதிப்பகம் சார்பில் அந்த சிறிய நூலை வெளி யிட்டவர் கலியபெருமாள் ஆவார்.

இந்தப் புத்தகத்தில் உள்ள படத்தைப் பாருங்கள் - ஆசைத்தம்பி, புத்தகத்தை அச்சிட்டு வெளியிட்ட கலியபெருமாள், தங்கவேலு மற்றும் இன்னொருவர். 

அன்றைக்கு அவ்வளவு பெரிய கொடுமையை, அன்றைய ஆட்சி செய்தது.

தண்டிக்கப்பட்டு, மொட்டையடிக்கப்பட்டார்!

‘‘மதவெறி காந்தியாரைக் கொன்றது. ஆரிய ஸநாதனம் அவரைக் கொன்றது. மதச்சார்பற்ற ஒரு நிலை வரவேண்டும்; சமூகநீதி வரவேண்டும் என்று சொன்ன தினால்தான் காந்தியார் கொல்லப்பட்டார்'' என்று பழைய வரலாற்றை எழுதியிருக்கிறார்.

அதற்காகத்தான் அவர் தண்டிக்கப்பட்டார் என்றதும், அண்ணா அவர்கள் மிகக் கடுமையாக எடுத்துச் சொன்ன தோடு மட்டுமல்லாமல், கட்டுரை, கடிதம் எழுதினார்.  அந்தக் காலத்தில், ஆசைத்தம்பியின் மொட்டை என்பது ஒரு பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.

மூன்று பேர் கைது!

‘‘ஆசைத்தம்பிக்கு 6 மாத சிறைத்தண்டனை, 500 ரூபாய் அபராதம். புத்தகத்தை அச்சிட்டு வெளியிட்ட கலியபெருமாள், இறந்துபோன தோழர் து.வி.நாராயணன் எழுதிய ‘அழியட்டுமே, திராவிடம்' என்ற நூலை வெளி யிட்டதற்காக தங்கவேலு ஆகியோருக்கு மூன்று மாத சிறைத்தண்டனை, 500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

என்.வி.நடராஜன்

19.7.1950 ஆம் நாள், ஆசைத்தம்பி கைது செய்யப்பட்டு, முசிறி சப்-ஜெயிலில்  மூவரும் அடைக்கப்பட்டதும், திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய தலைமை நிலையம் சார்பில், என்.வி.நடராஜன் திருச்சி சென்றார்.

அன்பில் தர்மலிங்கம், சாம்பு, வானமாமலை, துறையூர் கழக முத்து ஆகியோர் ஆலோசனை செய்த பின், என்.வி.நடராஜன், 21 ஆம் தேதி சிறைக்குச் சென்று, ஆசைத்தம்பி, கலியபெருமாள், தங்கவேலு ஆகிய மூன்று பேரையும் சந்தித்துப் பேசினார்.

அதற்குப் பிறகு விருதுநகரில் கூட்டம் நடக்கிறது. அங் கிருந்து ஆசைத்தம்பியின் சொந்த ஊரான விருது நகருக்கு என்.வி.நடராஜன் சென்றார்.

22 ஆம் தேதி மாலை 4 மணிக்கு விருதுநகர் தி.மு.க. வின் நிர்வாகிகள் கூட்டம் என்.வி.என். தலைமையில் நடந்தது. ஆசைத்தம்பியின் மீதான வழக்கு நடத்த, 5 பேர் கொண்ட கமிட்டி அமைக்கப்பட்டது. அதற்கு செயலாளராக இளஞ்செழியனும், பொருளாளராக அய்யாசாமியும் நியமிக்கப்பட்டனர். வழக்கு நிதியாக 50 ரூபாய் அண்ணா கொடுத்தனுப்பினார்.''

(தொடரும்)


திங்கள், 9 அக்டோபர், 2023

ஒன்றிய அரசைக் கண்டித்து திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி தலைமையில் மாபெரும் ஆர்ப்பாட்டம்


2

,................-++++++++++++++.......................


மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்! சென்னையில் செய்தியாளர்களுக்குத் தமிழர் தலைவர் பேட்டி(10 லட்சம் பேருக்கு 100 பேர்தான் மருத்துவக் கல்லூரியில் சேர்க்கப்பட வேண்டுமா?)


* 10 லட்சம் பேருக்கு 100 பேர்தான் மருத்துவக் கல்லூரியில் சேர்க்கப்பட வேண்டுமாம்!

* அப்படி என்றால் இந்த இலக்கைத் தாண்டிய தமிழ்நாட்டின் கல்லூரிகளை மூடப் போகிறார்களா?

* மாநில அரசுக்குத் தடை போட ஒன்றிய அரசுக்கு உரிமை உண்டா?

* நடக்கவிருக்கும் மக்களவைத் தேர்தலில் பிஜேபியைத் தோற்கடிப்பதுதான் ஒரே தீர்வு!

28

சென்னை, அக்.9   10 லட்சம் பேருக்கு மருத்துவக் கல்லூரியில் 100 மாணவர்களை மட்டும்தான் சேர்க்க வேண்டும் என்கிறது ஒன்றிய பிஜேபி அரசு. அப்படி என்றால் இந்த இலக்கை விஞ்சிய தமிழ்நாட்டில் உள்ள மருத்துவக் கல்லூரிகளை மூடப் போகிறதா? இதற்கெல்லாம் ஒரே முடிவு ஒன்றிய பிஜேபி ஆட் சியை வரும் தேர்தலில் வீழ்த்துவதுதான் என்றார் திராவிடர் கழகத் தலைவர்.  

இன்று (9.10.2023) சென்னை மாவட்ட ஆட் சியர் அலுவலகம் முன்பு, 10 லட்சம் பேருக்கு 100 மாணவர் கள்தான் மருத்துவக் கல்லூரியில் சேர வேண்டும்; புதிய மருத்துவக் கல்லூரிகளைத் தொடங் கக் கூடாது என்ற ஒன்றிய அரசின் அறிவிப்புகளைக் கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் முடிவில்  திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்  செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.

அப்பேட்டியின் விவரம் வருமாறு:

அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமான 

ஒன்றிய அரசின் தொடரும் அடாத செயல்கள்!

மத்தியில் இருக்கக்கூடிய ஒன்றிய ஆர்.எஸ்.எஸ். பா.ஜ.க. அரசு - மோடி அரசு எல்லா வகை யிலும் நம்முடைய ஒடுக்கப்பட்ட சமுதாய மக்க ளுடைய கல்விக் கண்களைக் குத்துவதிலும், அவர் களுடைய மருத்துவக் கனவைச் சிதைப்பதிலும் - மாநிலங்களுடைய உரிமைகளைப் பறிப்பது போன்ற தொடர் செயல்களில், அடாத செயல்களில் அரச மைப்புச் சட்ட விரோத நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டுக்கொண்டு வருகிறார்கள்.

தொடக்கத்திலேயே ‘நீட்' தேர்வின் கொடுமைகள்பற்றி சுட்டிக்காட்டினோம்!

அதனுடைய ஒரு புதிய அம்சமாக, இப்பொழுது குலத் தொழில் கல்வியை கிராமங்களில் அவர்கள் ''விஸ்வகர்மா யோஜனா'' என்ற பெயரால் புதுப்பித்து, 18 வயது நிரம்பியவர்கள் ஜாதித் தொழிலை செய்ய வேண்டும் என்று ஒரு பக்கத்தில் சொல்லிக் கொண்டு, இன்னொரு பக்கத்தில் மருத்துவப் படிப்பிற்கு நீட் தேர்வு என்று கொண்டு வந்ததின் விளைவாக, மத்திய பிரதேசம், ராஜஸ்தான் போன்ற வடமாநிலங்களில்கூட மாணவச் செல்வங்கள் தற்கொலை செய்துகொள்ளக் கூடிய அளவிற்கு இருந்தும், ஒன்றிய அரசு கண் திறக்கவில்லை; பெற்றோர்கள் வேதனையோடு இருக்கிறார்கள்.

நீட் தேர்வின் கொடுமையை தமிழ்நாட்டில் ஆரம்பக் கட்டத்திலேயே நாங்கள் சுட்டிக்காட்டினோம்.

 10 லட்சம் பேருக்கு 100 பேர்தான் மருத்துவக் கல்லூரியில் சேர்க்கப்படவேண்டுமாம்!

 மருத்துவக் கல்லூரியைப் புதிதாகத் தொடங்காதே - 10 லட்சம் பேருக்கு 100 பேர்தான் மருத்துவக் கல்லூரியில் சேர்க்கப்படவேண்டும் என்று சொல்லுகின்ற உரிமையை அவர்களுக்கு யார் கொடுத்தது?

ஒரு மாநிலத்தில் எத்தனை மருத்துவக் கல்லூரிகள் இருக்க வேண்டும் எப்படி திட்டமிடப்பட வேண்டும்? என்று சொல்வது அரசமைப்புச் சட்டப்படி மாநிலங் களுக்குள்ள உரிமையாக இருக்கிறது. அந்த உரிமையை ஒன்றிய அரசு அறவே பறித்து, இனிமேல் மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்கக்கூடாது என்று சொன்னால், என்ன அர்த்தம்?

தமிழ்நாட்டில்தான் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு மருத்துவக் கல்லூரி!

இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் அதிகமான மருத்துவக் கல்லூரிகள் இருக்கின்றன. நம்முடைய மாநிலத் திலிருந்துதான் ஆண்டிற்கு 11 ஆயிரம் பேர் மருத்துவப் படிப்பை முடித்து மருத்துவராகிறார்கள்.  54 ஆயிரம் பேர் அரசு மருத்துவக் கல்லூரியில் படிக் கிறார்கள். கலைஞர் அவர்களுடைய காலத்தில் எடுத்த கொள்கை முடிவுப்படி, ஒவ்வொரு மாவட்டத்திலும் அரசு மருத்துவக் கல்லூரி தொடங்கப்பட்டு, ஏராளமான மருத்துவர்களைத் தயார்படுத்திக் கொண்டி ருக்கிறார்கள்.

மக்கள் விரோத ஆட்சி வேறு இருக்க முடியாது!

இன்றைய காலகட்டத்தில் மருத்துவர்களுடைய பணி என்பது குறையவில்லை. காரணம், புதிய புதிய நோய்கள் வந்துகொண்டிருக்கின்றன. கரோனா தொற்று, கரோனா வைரசின் புதிய புதிய உருமாறுதல்கள் என்று வந்துகொண்டிருக்கின்ற நேரத்தில், மருத்துவர்களின் தேவையும், மருத்துவக் கட்டமைப்பினுடைய விரைந்த செயலும் அதிகமாக வேண்டிய நேரத்தில், அந்தக் கட்டமைப்பையே சிதைக்கவேண்டும் என்று ஒன்றிய மோடி அரசு திட்டமிடுகிறது என்றால், இதைவிட ஒரு மக்கள் விரோத ஆட்சி வேறு இருக்க முடியாது.

2024 இல் நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலில் சரியான பாடத்தை 

மக்கள் கற்றுக்கொடுப்பார்கள்!

29

எனவே, ஒன்றிய மக்கள் விரோத ஆட்சியை எவ்வளவு விரைவில் நாம் அகற்றுகிறோமோ, அவ்வள வுக்கவ்வளவு நாட்டிற்கு நல்லது!

2024 ஆம் ஆண்டு நடைபெறவிருக்கின்ற நாடாளு மன்றத் தேர்தல், ஒரு சரியான ஜனநாயகப் பாடத்தை அவர்களுக்குக் கொடுக்கும்.

இப்பொழுதே பா.ஜ.க. தென் மாநிலங்களில் இருந்து விரட்டப்பட்டு விட்டது. தற்போது காஷ்மீரில் நடந்த தேர்தல் முடிவுகளில் படுதோல்வியை பா.ஜ.க. சந்தித் திருக்கிறது.

'இந்தியா' கூட்டணிதான் 

வெற்றி பெறப் போகிறது!

இதுவரையிலும் அவர்கள் எந்த இடத்திலும் வெற்றி பெறவில்லை. எப்பொழுது நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றாலும், 'இந்தியா' கூட்டணிதான் வெற்றி பெறப் போகிறது.

ஒன்றிய அரசினை எதிர்த்து, தனித்தனியே போராட்டம் நடத்துவதைவிட, ஒரே அம்சமாக ஒன்றிய ஆட்சியை மாற்றி அமைத்தால், காட்சிகள் மாறும்; மீட்சிகள் வரும் என்ற நிலையை உருவாக்குவதற்காகத்தான், மக்க ளுக்குத் தெளிவுபடுத்தவேண்டும் என்பதற்குத்தான் இந்தப் போராட்டம். இது ஒரு தொடக்கமே தவிர, முடிவு அல்ல!

எல்லாவற்றிற்கும் முதலில் 

பெரியார் மண்தான் வழிகாட்டும்! 

இவ்வார்ப்பாட்டம் இன்றைக்குத் தமிழ்நாடு முழுவதும் நடைபெறுகிறது. இது இந்தியா முழுவதும் நடைபெறும். எல்லாவற்றிற்கும் முதலில் பெரியார் மண்தான் வழிகாட்டும்! பெரியாரின் நுண்ணாடிதான் இந்தக் கிருமிகளை அடையாளம் காட்டும்.

ஆகவேதான், இந்தப் போராட்டத்தின்படி மருத்துவக் கல்லூரி என்பது மக்கள் நல்வாழ்வுக்காக - மக்கள் உயிர் வாழ்வதற்காக! எனவே, அதுபோன்ற கல்லூரிகளைத் தொடங்கக்கூடாது என்று சொல்லுகின்ற ஒரு ஒன்றிய அரசு இருக்கிறது என்றால், அந்த அரசு மக்களைக் காப்பாற்றுவதற்கா? அல்லது மக்கள் மடிவதற்கா? என்ற கேள்வி எழுகிறது.

நல்ல அளவிற்கு, குடும்பக் கட்டுப்பாடு திட் டத்தை செயல்படுத்தினால், அரசாங்கத்தின் கொள் கையை செயல்படுத்தினால், அதற்காகப் பரிசு கொடுக்கவேண்டுமே தவிர, தண்டனையைக் கொடுக்கக் கூடாது.

அவர்களின் கணக்குப்படி தமிழ்நாட்டில் 

பாதி மருத்துவக் கல்லூரிகளை மூடவேண்டும்!

புதிதாக மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்கக் கூடாது; 10 லட்சம் பேருக்கு 100 பேர்தான் மருத்துவக் கல்லூரியில் சேரவேண்டும் என்று சொன்னால், அதற்கு என்ன அர்த்தம்?

அவர்களுடைய கணக்குப்படி பார்த்தால், தமிழ் நாட்டில் இருக்கின்ற கல்லூரிகளில், பாதி கல்லூரிகளை மூடவேண்டும். மருத்துவக் கல்லூரிகளை மூடப் போகிறார்களா? 

இந்த ஆபத்தை மக்கள் நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும்.  மீண்டும் ஒன்றியத்தில் இவர்களையே ஆள விட்டால், முழுக்க முழுக்க மருத்துவக் கல்லூரிகளே இருக்காது.

''ஆன்மிக மருத்துவத்தை 

உண்டாக்கப் போகிறார்களாம்!''

இப்பொழுது அவர்கள் என்ன சொல்லுகிறார்கள் என்றால், ''ஆன்மிக மருத்துவத்தை உண்டாக்கப் போகிறார்களாம்.''

அது என்ன ஆன்மிகம்?

மந்திரவாதிகளை அழைத்து வந்து, உடல்நிலை சரியில்லை என்றால், ''மந்திரம் ஓதினால் போதும் 'ஓம் ரீம்' என்று கூறினால் போதும் யாகம் நடத்தினால் போதும் சரியாகிவிடும்'' என்கிற ஆபத்து இருக்கிறது.

நிச்சயம் நாம் வெல்வோம்! 

மனிதநேயத்தைக் காப்போம்!!

ஆகவே, அதையெல்லாம் எதிர்த்துப் போராட வேண்டிய அவசியம் இருக்கிறது. இது போன்ற ஆபத்துகளையெல்லாம் விளக்கிச் சொல்லுவதற்காகத் தான் இந்தப் போராட்டம்!

நிச்சயம் நாம் வெல்வோம்!

மனிதநேயத்தைக் காப்போம்!

மக்களுக்காக ஆட்சி இருக்கவேண்டுமே தவிர, ஆட்சிக்காக மக்கள் ஒருபோதும் அவதிப்படக் கூடாது.

எனவேதான், எவ்வளவு சீக்கிரம் மக்கள் விரோத மோடி ஆட்சியை அகற்ற முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் அதனைச் செய்யவேண்டும்.

அதற்கான காரணங்களும் நாளும், நாளும் வளர்ந்துகொண்டே இருக்கின்றன.

நன்றி, வணக்கம்!

- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி செய்தியாளர்களிடையே கூறினார்.

மாநில அரசுக்குத் தடை போடும் ஒன்றிய பிஜேபி அரசைக் கண்டித்து திராவிடர் கழகம் நடத்திய மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் சென்னையில் தமிழர் தலைவர் பங்கேற்றார்


 10 லட்சம் மக்களுக்கு 100 பேர் தான் மருத்துவக் கல்லூரியில் சேர்க்கப்பட வேண்டுமாம்!

7

சென்னை, அக். 9- 10 லட்சம் மக்களுக்கு 100 பேர் தான் மருத்துவக் கல்லூரியில் சேர்க்கப்பட வேண்டும் என்ற ஒன்றிய பிஜேபி அரசின் அபாய அறிவிப்பை கண்டித்து திராவிடர் கழகம் சார்பில் இன்று (9.10.2023) தமிழ்நாடு முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் நடைபெற்ற பெருந்திரள் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு தமிழர் தலைவர் தலைமையேற்று கண்டன உரையாற்றினார்.

"தேசிய மருத்துவ ஆணையம் புதிய வழிகாட்டு முறை" என்ற பெயரில் ஓர் அபாய அறிவிப்பை ஒன்றிய அரசிதழில் ஆகஸ்ட் 16ஆம் நாள் வெளியிட்டுள்ளது.

அதில் இளநிலை மருத்துவக் கல்விக்கான தேசிய மருத்துவ ஆணையத்தின் புதிய விதிமுறைகளில், 10 லட்சம் மக்கள் தொகைக்கு அதிகபட்சமாக 100 மருத்துவ மாணவர் சேர்க்கை இடங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும் என்றும், அதற்கும் கூடுதலான மருத்துவ மாணவர் சேர்க்கை இடங்கள் உள்ள மாநிலங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகளோ, மருத்துவ மாணவர் சேர்க்கை இடங்களோ அனுமதிக்கப்படாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு முதல் நடைமுறைக்கு வரும் இந்த விதிமுறைகள் தமிழ்நாடு போன்ற வளர்ந்த மாநிலங்களையே பாதிக்கும்.

10 ஆண்டுகளுக்கு 2011ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி தமிழ்நாட்டின் மக்கள் தொகை 7. 23 கோடி ஆகும். 2021ஆம் ஆண்டில் இது 7.64 கோடியாக இருக்கும் என்று கணக்கிடப் பட்டிருக்கிறது.

இந்த மக்கள் தொகைக்கு தமிழ்நாட்டில் அதிக அளவாக 7,640 மாணவர் சேர்க்கை இடங்கள் மட்டுமே இருக்க முடியும். ஆனால், தமிழ்நாட்டில் இன்றைய நிலையில், 11,600 மருத்துவ மாணவர் சேர்க்கை இடங்கள் உள்ளன. அதனால், இன்னும் பல பத்தாண்டுகளுக்கு தமிழ்நாட்டில் புதிய மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்க முடியாது. அதுமட்டுமின்றி, இப் போது இருக்கும் மருத்துவக் கல்லூரிகளில் கூடுதல் இடங் களையும் ஏற்படுத்த முடியாது. உலகில் மக்கள் தொகைக்கு இணையாக அதிக மருத்துவர்க ளைக் கொண்ட நாடு கியூபா தான். 2019ஆம் ஆண்டு கணக் கெடுப்பின்படி அங்கு 110 பேருக்கு ஒரு மருத்துவர் இருக்கிறார்.

கத்தார் நாட்டில் 125 பேருக்கு ஒரு மருத்துவர் இருக்கிறார். அதற்காக அந்த நாடுகளில் புதிய மருத்துவக் கல்லூரிகளைத் திறக் கத் தடை விதிக்கப்படவில்லை. அவ்வாறு இருக்கும் போது தமிழ்நாட்டில் 253 பேருக்கு ஒரு மருத்துவர் இருப் பதைக் காரணம் காட்டி மருத்துவக் கல்லூரி களுக்கு தடை விதிப்பது அநீதி. மாநிலத்தில் மருத்துவக் கல்லூரிகளை திறக்க அனுமதிக்கலாமா, வேண்டாமா? என்ப தைத் தீர்மானிக்கும் அதிகாரம் மாநில அரசுக்குத் தான் உண்டு. தேசிய மருத்துவ ஆணையத்திற்கு அந்த அதிகாரம் கிடையாது.

எனவே ஒன்றிய அரசின் இந்தப் போக்கை கண்டித்தும், மாநில  அரசுகள் இதனை தடுத்து நிறுத்த வேண்டும்! என் பதை வலியுறுத்தியும் இன்று (9.10.2023) தமிழ்நாடெங்கும் மாவட்ட தலைநகரங்களில் திராவிடர் கழகம் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சென்னையில் தமிழர் தலைவர் பங்கேற்பு

10 லட்சம் மக்களுக்கு 100 பேர்தான் மருத்துவக் கல்லூரியில் சேர்க்கப்பட வேண்டும் என மாநில அரசுக்குத் தடை போடும் ஒன்றிய பா.ஜ.க. அரசை கண்டித்து  இன்று (9.10.2023) காலை 11 மணியளவில் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்ற மாபெரும் ஆர்ப்பாட்டத்திற்கு தலை மைக் கழகப் பொறுப்பாளர்கள் பொதுச் செயலாளர் வீ.அன்பு ராஜ், பொருளாளர் வீ.குமரேசன், துணைப் பொதுச் செயலா ளர்கள் பொறியாளர் ச.இன்பக்கனி, ச.பிரின்சு என்னாரெசு பெரியார், வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி, தலைமைக் கழக அமைப்பாளர் வி.பன்னீர் செல்வம், தே.செ.கோபால், திராவிட மகளிர் பாசறை மாநில செயலாளர் வழக்குரைஞர் பா.மணியம்மை, மாவட்டத் தலைவர்கள்: எண்ணூர் வெ.மு. மோகன், ஆவடி வெ.கார்வேந்தன், புழல் த.ஆனந்தன், மாவட்டச் செயலாளர்கள்: சு.அன்புச்செல்வன், தே.ஒளிவண் ணன், செ.ர.பார்த்தசாரதி, அ.விஜய் உத்தமன்ராஜ், கோ.நாத்தி கன், ஜெ.பாஸ்கரன், க.இளவரசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முன்னதாக வடசென்னை மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் தளபதி பாண்டியன் வரவேற்புரையாற்றினார். திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் ஆர்ப்பாட்ட விளக்க தொடக்கவுரையாற்றினார். திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் ஆர்ப்பாட்டத்திற்கு தலைமையேற்று கண்டன உரை நிகழ்த்தினார். நிறைவாக தென்சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன் நன்றி கூறினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பகுத்தறிவாளர் கழக மாநில தலைவர் இரா.தமிழ்ச்செல்வன், பொதுச் செயலாளர் 

ஆ.வெங்கடேசன் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

முன்னதாக ஆர்ப்பாட்டத்தில் ஒன்றியே அரசே! ஒன்றிய அரசே! பறிக்காதே பறிக்காதே! தமிழ்நாட்டு மாணவர்களின் மருத்துவக் கனவை பறிக்காதே!

தடை செய்யாதே தடை செய்யாதே! மருத்துவக் கல்வி வளர்ச்சியைத் தடை செய்யாதே!

கண்டிக்கின்றோம் கண்டிக்கின்றோம்! தமிழ்நாட்டில் புதிய மருத்துவக் கல்லுரிகள் திறப்பதற்கு தடை விதிக்கும் ஒன்றிய பிஜேபி அரசைக் கண்டிக்கின்றோம்!

பழிவாங்காதே பழிவாங்காதே! தமிழ்நாட்டு மக்களைப் பழிவாங்காதே! ஒன்றிய பிஜேபி அரசே பழிவாங்காதே! மோடி அரசே பழிவாங்காதே! போன்ற ஒலி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

நமது முதலமைச்சர். அரிய பிரகடனங்களை அறி வித்தார் - மகிழ்கிறோம், மகிழ்கிறோம் - பூரிப்புக்குப் பஞ்சமில்லை என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை

அரிய பிரகடனங்களை அறிவித்தார் - மகிழ்கிறோம், மகிழ்கிறோம் - தாயின் பூரிப்புக்குப் பஞ்சமில்லை!

 அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை - தந்தை பெரியார் நெஞ்சில் தைத்த முள்ளை எடுக்க முடியவில்லையே என்று ஆதங்கப்பட்டார் கலைஞர்

இன்று அந்த முள்ளை எடுத்து சாதனை படைத்தார் நமது முதலமைச்சர்! 

தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கை

1

அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை - தந்தை பெரியார் நெஞ்சில் தைத்த முள்ளை எடுக்க முடியவில்லையே என்று ஆதங்கப்பட்டார் கலைஞர்; இன்று அந்த முள்ளை எடுத்து சாதனை படைத்தார் நமது முதலமைச்சர். அரிய பிரகடனங்களை அறி வித்தார் - மகிழ்கிறோம், மகிழ்கிறோம் - பூரிப்புக்குப் பஞ்சமில்லை என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத் துள்ளார். 

அவரது அறிக்கை வருமாறு:

56 ஆண்டுகளுக்குமுன் ஆட்சியை அமைக்க மக்கள் இட்ட ஆணையை ஏற்று அழைக்கப்பட்ட தந்தை பெரியாரின் தலைமகன் அறிஞர் அண்ணா - திருச்சிக்குச் சென்று, தனது தாய்க்கழகத் தலைவரான தந்தை பெரியாரைச் சந்தித்து ஆட்சி வெற்றிக்கனியை அவர்தம் காலடியில் வைத்து, ‘எங்களை வழிநடத்துங்கள் அய்யா' என்று கேட்டு, தந்தை - தாய்க்கழகம் வாழ்த்திட, மகிழ்ச்சியில் திளைத்தார் அண்ணா (2.3.1967).

18 ஆண்டுகால நீண்ட இடைவெளி, 18 நிமிடங் களிலேயே காணாமற்போயிற்று; தந்தையின் வாழ்த்தும், தாய்க்கழகத்தின் பூரிப்பும் நிரந்தரமாகி, நிலைத்த வரலாற்றைத் தந்தது! தருகிறது!! தொடர்கிறது!!!

அண்ணாவுக்குப் பின் கலைஞர்தான் முதலமைச்சராகவேண்டும் என்று 

ஆணையிட்டார் தந்தை பெரியார்

முதலமைச்சர் அண்ணா மறைவு என்ற கொடுந் துயரத்திற்குப் பின், கலைஞர்தான் அப்பொறுப்பிற்குப் பொருத்தமானவர் என்பதை தனது அனுபவ ஞானத்தால் அளந்தறிந்த தந்தை, ஆணையிட்டார் அவருக்கு! கலைஞர் பொறுப்பேற்று அண்ணாவின் முப்பெரும் சாதனைகளின் அடிக்கட்டுமானத்தை மேலும் பல மடங்கு விரிவான ஆட்சிச் சாதனைகளாக்கி, சமூகப் புரட்சி, ஜாதி, தீண்டாமை, பெண்ணடிமை ஒழிக்கும் சட்டத் திட்டங்கள்மூலம், தனிச் சரித்திரம் படைத்துத் தரணி புகழ் பெருமை பெற்று வாழுகிறார்! வாழ்த்தப் படுகிறார்!!

‘‘மானமிகு சுயமரியாதைக்காரர்''தம் மகுடத்தின் மதிப்பே இதில்தான் அடங்கியுள்ளது என்றாக்கி, தனது ‘ஞானத்தந்தை' நெஞ்சில் தைத்த முள்ளையெடுத்தார் சட்டப் போராட்டத்தின்மூலம்!

‘‘தமிழ்நாடு வெற்றிடம் அல்ல - கற்றிடம்!''

கலைஞர் மறைவிற்குப்பின்,  ‘‘தமிழ்நாடு வெற்றிடம் அல்ல; கற்றிடம்'' என்று பார் புகழ் கட்சி, ஆட்சி இரண்டு பொறுப்புகளையும் அடக்கத்தோடும், ஆழ்ந்த அனுபவ அறிஞர்கள் துணையோடும் வரலாற்றின் வைர வரிகளை நாளும் எழுதிக் கொண்டுள்ளார் நமது சமூக நீதிக்கான சரித்திர நாயகர்!

திராவிடர் ஆட்சியாம் நீதிக்கட்சியை - நீட்சியாக்கிய அண்ணாவை, திருச்சிக்குத் தாய்க்கழகம் அழைத்தது 17, செப்டம்பர் 1967 இல்!

தந்தையும், தனயனும் உவகைப் பெருக்கோடு ஊர் வலத்திலும் பவனி வந்து, தாய்க்கழகத்தின் பாசத்தைப் பெருமதிப்புடன் ஏற்றார்.

தி.க. - தி.மு.க. - இரட்டைக் குழல் துப்பாக்கி - இன எதிரிகளைக் கலக்கியது; அரசியலைக் குலுக்கியது! ஆரியம் ஏமாந்தது!!

அன்று கலைஞரை 

தஞ்சைக்கு அழைத்தோம்!

அண்ணாவிற்குப் பிறகு அவரது அரசியல் பணியைத் தொய்வின்றித் தொடர்ந்த நம் கலைஞரை, அவர்தம் செயற்கரிய சட்டச் சாதனையை - ஆதிதிராவிடர் உள்பட அனைத்து ஜாதியினரும் நுழைய முடியாத நீண்ட ஸநாதனத்தினைப் புரட்டிப் போட்ட ஒரு சட்டப் போராட்டம், வெற்றி கண்டதைப் பாராட்டி, அய்யா, அன்னை ஆகியோரின் மறைவிற்குப் பிறகு, எளியவர் களாக எங்களைப் போன்றோரைக் கொண்ட தாய்க் கழகத்தின்  அழைப்பையும் தட்டாமல் ஏற்று, தாய் வீட்டின் பாச மழையில் நனைந்து, உள்ளத்தின் உவகைதனை கவிதையாக்கி மலை உச்சியிலிருந்து பாடுகிறேன் என்று பாடி மகிழ்ந்தார்! (12.6.2006).

பெரியார் ஆட்சி, அண்ணா - கலைஞர்மூலம் மட்டுமல்ல, தன்மூலமும் தொடருகிறது என்று காட்டிய நம் தளபதியின் தன்னிகரற்ற ஆட்சியின் சாதனையைப் பாராட்டி, உச்சிமோந்து உயர்தனிப் பாசத்துடன் அழைத்தோம், அதே தஞ்சைக்கு!

இன்று கலைஞரின் வழிவந்த முதலமைச்சரும் எங்கள் அழைப்பை ஏற்று தஞ்சை வந்தார்!

2023 அக்டோபர் 6 இல் அழைப்பை ஏற்று, தாய் வீட்டுக்குத் தரணி புகழ் பரணியோடு,

எம்மவர்

வந்தார்

கண்டார்,

மகிழ்ந்தார் - மகிழ வைத்தார்!

தந்தார் - வரலாற்றுப் பிரகடனங்களை!

எத்தனை எத்தனை இன்பம்!!

அத்தனையும் எழுதிட எப்படித்தான் முடியும்?

உயிரும், உடலும் ஒன்றுக்கு ஒன்று

உறவாடத்தான் முடியுமே தவிர,

கட்டிப் பிடித்து பாசம் காட்ட முடியுமா?

காரணம் - என்றும்

ஒட்டியிருப்பதே அவ்விரண்டும்!

ஒன்றில்லை என்றால் மற்றதில்லை

உற்றாரும், உலகாரும் அறியவேண்டிய உண்மை இது

என்று பிரகடனப்படுத்தியது தஞ்சை விழா!

எங்கள் எல்லையற்ற பாசமிகு முதலமைச்சருக்குத் தாய்(க்கழகம்) எப்படி நன்றி கூற முடியும்?

மகிழ்ச்சிக் கண்ணீர் ஊற்றெடுத்த நிலையில்

துடைத்து நினைவலைகளில்

நீந்திக் களிப்பதைவிட?

பூரிப்புக்குப் பஞ்சமில்லை

திராவிடத்தின் தனிச் சிறப்பு - இப்படிப்பட்ட எங்கும் எவரும் பார்க்க முடியாத உறவாலும், தகர்க்க முடியாத உணர்வாலும், அது தனது எதிர்நீச்சல் பயணத்தை - தடைக்கற்களைத் தாண்டி, தனது தொடர் பயணத்தைத் தொடர்ந்து வெற்றி வாகை சூடிடவும் வரலாற்று வரிகளை நாளும் எழுதிடும் - எழுச்சி ஏற்படுத்தும்!

தாய்வீட்டில் கலைஞர் அன்று -

தாய் வீட்டில் வினைஞர்(நாளும்) இன்று!

பிறகென்ன பூரிப்புக்குப் பஞ்சம்?


கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
9.10.2023

ஞாயிறு, 1 அக்டோபர், 2023

ஆலந்தூர் பகுதியில் எழுச்சியுடன் நடைபெற்ற தந்தை பெரியார் பிறந்த நாள் நிகழ்ச்சிகள்


17

ஆலந்தூர், அக்.1- ஆலந்தூர் பகுதி கழக பொறுப்பாளர் க.சிவா ஏற்பாட்டில் 17.09.2023 முற்பகல் 10.30 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரை ஆலந்தூர் சவுரி தெரு மற்றும் மாதவபுரம் மேற்கு தெரு இணைவில் தந்தை பெரியாரின் விளம்பர திரை வைக்கப்பட்டு, நிகழ்ச்சி குறித்த சுவரொட்டிகள் ஒட்டப் பட்டு தந்தை பெரியாரின் பிறந்த நாள் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டி ருந்தது.

முன்னதாக பேண்ட் வாத்தியத்துடன் நிகழ்ச்சி தொடங்கியது. அலங்க ரித்து வைக்கப்பட்டிருந்த தந்தை பெரியாரின் படத் திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

திராவிடர் கழக கொடியை திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆலந்தூர் பகுதி செயலா ளர் மொழிப்போர் வீரர் ப.குணாளன்(ஆலந்தூர் மேனாள் மாமன்ற உறுப் பினர்) அவர்கள் ஏற்றி வைத்தார்.

கோல்டு டி.பிரகாஷ் (மாவட்ட இளைஞரணி அமைப்பாளர், தி.மு.க), ஆர்.டி.பூபாலன் (பொதுக்குழு உறுப் பினர், திமு.க.),

18

கலாநிதி குணாளன் (மாவட்ட மாணவர் அணி துணைச் செயலா ளர், தி.மு.க), கே.பாபு குமார் (மாவட்ட பிரதிநிதி, தி.மு.க, மேனாள் மாமன்ற உறுப்பினர்), இரா.கீர்த்திராஜ்(மாவட்ட பிரதிநிதி, தி.மு.க.), கே.பி.முரளி கிருஷ் ணன் (160ஆவது வட்டச் செயலாளர் தி.மு.க.), இ.உதயகுமார் (மாவட்ட மீனவர் அணி துணை அமைப்பாளர், தி.மு.க.), பி.எம்.பிருந்தாசிறீ (160ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர்) ஆர்.அற்புதராஜ் (இலக் கிய அணி,தி.மு.க.), எ.கதி ரவன்(மாணவர் அணி தி.மு.க.), எம்.கவி (மீனவர் அணி, தி.மு.க.), எஸ்.பாலாஜி (மாணவரணி தி.மு.க.) ஆகியோர் சிறப்பு அழைப்பாளர் களாக பங்கேற்றனர். 

தென் சென்னை மாவட்ட கழக தலைவர் இரா. வில்வநாதன், செய லாளர் செ.ர.பார்த்த சாரதி, துணைச் செயலா ளர் கோ.வீ. ராகவன் மற்றும் தென் சென்னை மாவட்ட இளைஞரணி செயலாளர் ந.மணிதுரை ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்ச்சி ஏற் பாடு செய்த அனைவரை யும் பாராட்டினர்.

150 பேருக்கு இனிப்பு (இலட்டு) வழங்கப்பட்டது. அதனுடன் தந்தை பெரியாரின் நூல்களும் வழங்கப்பட்டன.

பகல் 12 மணி அளவில் 150 பேருக்கு 'பிரிஞ்சி' உணவு வழங்கப்பட்டது.

ஒலிபெருக்கி மூலம் கழக பாடல்கள் ஒளிபரப்பப்பட்டன. கழகக் கொடிகளால் தோரணம் கட்டப்பட்டு வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.

இங்கு தந்தை பெரியாரின் பிறந்த நாள் நிகழ்ச்சி நடைபெறுவது முதல் முயற்சியாகும்.