வெள்ளி, 13 அக்டோபர், 2023

திராவிட இயக்கக் கொள்கை வீரர் ஏ.வி.பி.ஆசைத்தம்பி நூற்றாண்டு விழா: தமிழர் தலைவர் விளக்கவுரை!


 ‘‘மதவெறி காந்தியாரைக் கொன்றது- ஆரிய ஸநாதனம் அவரைக் கொன்றது'' 

என்று எழுதியதால் ஏ.வி.பி.ஆசைத்தம்பி கைது செய்யப்பட்டார்!

சிறைச்சாலையில் அவரது தலை மொட்டையடிக்கப்பட்டதால் அன்றைய காலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது!

11

சென்னை, அக்.13 ‘‘மதவெறி காந்தியாரைக் கொன்றது. ஆரிய ஸநாதனம் அவரைக் கொன்றது. மதச்சார்பற்ற ஒரு நிலை வரவேண்டும்; சமூகநீதி வரவேண்டும் என்று சொன்னதினால்தான் காந்தியார் கொல்லப்பட்டார்’’ என்று எழுதியதற்காக ஏ.வி.பி.ஆசைத்தம்பி தண்டிக்கப் பட்டு மொட்டையடிக்கப்பட்டதால் ஒரு பெரிய பரபரப்பு ஏற்பட்டது என்றார்  திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

ஏ.வி.பி.ஆசைத்தம்பி நூற்றாண்டு விழா

கடந்த 1.10.2023 அன்று மாலை சென்னை பெரியார் திடலில் உள்ள நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றத்தில் நடைபெற்ற திராவிட இயக்கக் கொள்கை வீரர் ஏ.வி.பி.ஆசைத்தம்பியின் நூற்றாண்டு விழாவில்  திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்  சிறப்புரையாற்றினார்.

அவரது சிறப்புரை வருமாறு:

திராவிடர் கழகம் உறவோடும், உரிமையோடும் 

கொண்டாடக்கூடிய விழா!

மிகுந்த மகிழ்ச்சியோடும், எழுச்சியோடும் நடைபெறக்கூடிய திராவிட இயக்க லட்சிய வீரர், கொள்கை வீரர், மறைந்தும் மறையாமல் நம் நெஞ்சங்களில் நிறைந்தவராக என்றைக்கும் இருக்கக் கூடிய அய்யா ஏ.வி.பி.ஆசைத்தம்பி அவர் களுடைய நூற்றாண்டு விழாவை - தாய்க்கழகமான, அவர் எங்கிருந்து பொதுவாழ்க்கையைத் தொடங் கினார்களோ, அந்த இயக்கமான திராவிடர் கழகம் உறவோடும், உரிமையோடும் கொண்டாடுகிறது.

இந்நிகழ்ச்சிக்கு வருகை தந்து, சிறப்பாக நினை வுரையை ஆற்றியுள்ள திராவிட முன்னேற்றக் கழகத் தின் செய்தித் தொடர்புக் குழுத் தலைவரும், மேனாள் நாடாளுமன்ற உறுப்பினருமான அன்புச்சகோதரர் டி.கே.எஸ்.இளங்கோவன் அவர்களே,

அறிமுக உரையாற்றிய கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களே, வரவேற்புரையாற் றிய கழகப் பொருளாளர் வீ.குமரேசன் அவர்களே,

கொள்கை உறவு முறைத் தொடர்பை ஏற்படுத்திக் கொண்ட, ஆசைத்தம்பி குடும்பத்தினர்!

இந்நிகழ்ச்சியில் ஒரு பெரிய மகிழ்ச்சி என்ன வென்றால், இதுவரையில் நமக்குத் தொடர்பில்லாமல் இருந்து, இன்றைக்குக் கொள்கை உறவு முறைத் தொடர்பை ஏற்படுத்திக் கொண்ட, ஆசைத்தம்பி அவர் களுடைய குடும்பம் என்பது நம்முடைய குடும்பம், வேறு அல்ல. அந்தக் குடும்பத்தோடு, நம்முடைய சகோதரர் ஏ.வி.பி.ஏ.சவுந்தரபாண்டியன் அவர்களும், அதேபோல, அய்யா தங்கசாமி அவர்களும் - அவரு டைய குடும்ப உறவுகளும் இங்கே வந்திருக்கின்றனர்.

ஏ.வி.பி.ஆசைத்தம்பி அவர்களுடைய தங்கை மகன்கள் மோகன், ஜெய்சிங் ஆகிய நண்பர்கள், பேரப் பிள்ளைகள், குழந்தைகளையெல்லாம் சந்திக்கின்ற பொழுது எல்லையற்ற மகிழ்ச்சியடைகின்றோம்.

கொள்கைக்கு அப்பாற்பட்டு அவர்கள் போகவில்லை

இதுவரையில் காணாதவர்களைக் காணுகிறோம் - காணாமல் போனார்கள் என்று நான் சொல்லமாட்டேன் - ஏனென்றால், அவர்கள் இந்தக் கொள்கை உணர்வோடு இருக்கிறார்கள்; தொடர்புகள் இல்லாமல் இருந்திருக்கிறது. கொள்கைக்கு அப்பாற்பட்டு அவர்கள் போகவில்லை.

இந்த நூற்றாண்டு விழா இந்தத் தொடர்புக்கு மிக அருமையாகப் பயன்பட்டு இருக்கிறது. இங்கே வந் திருக்கின்ற அவருடைய குடும்பத்தாருக்கும், மற்ற நண்பர்களுக்கும், சான்றோர்களுக்கும் என்னுடைய வணக்கத்தினை முதற்கண் தெரிவித்துக் கொள்கிறேன், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

விருதுநகர் போன்ற பகுதிகளில் பொதுவாக, ‘உறவின்முறை' என்ற ஒரு வார்த்தையை சொல்வார்கள்.

அதுபோல, ‘உறவின் முறை'தான் இது. ரத்த சம்பந்த மான உறவு என்பது ஒன்று. அதைவிட மிக ஆழமானது கொள்கை உறவு. அந்தக் கொள்கை உறவினால்தான், இந்த நூற்றாண்டு விழாவினை நாங்கள் இயல்பாகக் கொண்டாடுகிறோம்.

இணைப்புப் பாலத்தை ஏற்படுத்துவதற்கு காரணமாக இருந்த இல.திருப்பதி!

தலைமைக் கழகத்தின் மிக முக்கியமான அமைப் பாளராக இருந்து, செயல்வீரராக இருக்கக்கூடிய துடிப்பு மிக்க இல.திருப்பதி அவர்கள், அவர்களனைவரையும் தொடர்பு கொள்வதற்கு முழுக் காரணமாக அமைந்தார். அவரை பாராட்டுகிறோம், நன்றி செலுத்துகிறோம். எங்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. அப்படி ஒரு கொள்கை உறவு - இந்த இணைப்புப் பாலத்தை ஏற்படுத்துவதற்கு அவர் காரணமாக இருந்தார்கள்.

ஏனென்றால், இது காலங்காலமாக இருக்கின்ற உறவு. இங்கே உரையாற்றிய தோழர்கள் அனைவரும் அய்யா ஆசைத்தம்பி அவர்களைப்பற்றி சொன்னார்கள்.

ஆசைத்தம்பியின் தந்தையார் 

அய்யா ஏ.வி.பழனியப்பன்

அதைவிட இன்னொரு தகவலை சொல்லு கிறேன் - எத்தனை தலைமுறைகளைத் தாண்டி இந்த உறவு இருக்கிறது என்பதற்குச் சான்றானது. ஆசைத்தம்பி அவர்களுடைய தந்தையார் அய்யா ஏ.வி.பழனியப்பன் அவர்களை நான் அறிவேன்.

அய்யா தந்தை பெரியார் அவர்களுடைய இயக்கத்திற்கு விருதுநகரில் அவர் தலைவர்.

‘‘விருதுநகர் நாடார் சமையல்’’ 

அன்றைய காலகட்டத்தில், திராவிடர் கழகம் சார்பில் மாநாடுகள் இரண்டு நாள்கள் நடைபெறும். அப்பொழுது தந்தை பெரியார் ஒரு புரட்சி செய்தார். அதுபோன்று நடைபெறும் மாநாடுகளில், ‘‘விருதுநகர் நாடார் சமையல்'' என்று மாநாடு அழைப்பிதழில் போட்டிருப்பார்.

ஏனென்றால், அன்றைய காலகட்டம் ஜாதியைப் பார்த்துக் கொண்டிருந்த காலகட்டம். இளைய தலை முறையினர் இதைத் தெரிந்துகொள்ளவேண்டும்.

விருதுநகர் பழனியப்பன் அவர்களைத்தான் தந்தை பெரியார் அவர்கள் தொடர்புகொண்டு, ‘‘மாநாட்டிற்கு 2000-த்திற்கும் மேற்பட்டோர் வருவார்கள்; சமையற் காரர்களையும், அதற்குரிய ஏற்பாடுகளையும் பார்த்துக் கொள்ளவேண்டியது உங்கள் பொறுப்பு'' என்று கடிதம் எழுதுவார்.

பழனியப்பன் அவர்களும், ‘‘நான் பார்த்துக் கொள் கிறேன்'' என்று கடிதம் எழுதுவார் தந்தை பெரியார் அவர்களுக்கு.

ஒரு பாரம்பரியமிக்க குடும்பம்!

ஆசைத்தம்பிபற்றி மட்டும்தான் நாம் பேசுகிறோம். அவருடைய தந்தையார் காலத்தில் இருந்தே அந்தக் குடும்பம் இந்த இயக்கத்தில் இருக்கக்கூடிய, ஒரு பாரம்பரிய மிக்க சூழல்.

ஒடுக்கப்பட்ட சமுதாயத்திலிருந்து இன்றைக்கு அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ்., அதிகாரிகள் வந்திருக்கிறார்கள். நல்ல சிமெண்ட் சாலை வந்தாயிற்று; போக்குவரத்திற்கு இடையூறின்றி செல்ல அண்ணா மேம்பாலம், கத்திபாரா மேம்பாலம் போன்ற மேம்பாலங்கள் அமைந்திட தி.மு.க. ஆட்சியில், டி.ஆர்.பாலு அவர்கள் ஒன்றிய அமைச்சராக இருந்து பொதுமக்களுக்கு வசதியாக அத்திட்டங்களை அமைத்துக் கொடுத்தார்கள்.

அன்றைய காலகட்டத்தில் சாலைப் போக்குவரத்திற்கு எவ்வளவு இடையூறு இருந்தன; இன்றைக்கு இவ்வளவு வசதியாகப் போகிறார்களே என்று மேற்சொன்ன இரண் டையும் பார்க்கக் கூடியவர்களுக்குத்தான், சாலை யினுடைய பெருமை தெரியும்.

அடித்தளம் அமைத்தவர்தான் நூற்றாண்டு விழா நாயகர் ஏ.வி.பி.ஆசைத்தம்பி

12
ஆகவே, இதை அத்தனையும் செய்தவர்கள் யாரோ, அவர்களை நினைத்துப் பார்க்கவேண்டும். அதற்கு அடித்தளம் அமைத்தவர்கள்தான் நூற்றாண்டு விழா நாயகர் ஏ.வி.பி.ஆசைத்தம்பி போன்றவர்கள்.

இந்த இயக்கத்திற்கு அந்தளவிற்குப் பாடுபட்டவர்கள் அவர்கள். இன்றைக்கு அவர்கள் கட்டிய மேடையில்தான் நாம் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கின்றோம்.

இந்தக் கொள்கையைக் கண்டு எவ்வளவு வெறுப் படைந்திருந்தால், அவருடைய தலையை மொட்டை யடிக்கக் கூடிய அளவிற்கு இன எதிரிகள் வந்திருப் பார்கள்.

அண்ணா அவர்கள் ஒரு கட்டுரையை எழுதினார். ‘விடுதலை'யில் குத்தூசி குருசாமி அவர்கள் மிகப்பெரிய அளவிற்கு ஒரு கட்டுரையை எழுதியிருக்கிறார்.

கலைஞர் அதைவிட மிக அழகாகச் சொன்னார்.

என்ன தவறு செய்தார் அவர். கிரிமினல் குற்றம் செய்தாரா? என்றால் இல்லை.

அன்றைக்கு இந்தக் கொள்கையைச் சொல்லுவதற்குத் துணிவு வேண்டும்!

இன்றைக்கு இந்தக் கொள்கையைச் சொல் வதற்கு எல்லோரும் வருவார்கள். ஆனால், அன் றைக்கு இந்தக் கொள்கையைச் சொல்லுவதற்குத் துணிவு வேண்டும். ஆசைத்தம்பி துணிந்து இயக்கப் பணிகளைச் செய்தார்.

விருதுநகரில் வி.வி.ராமசாமி அவர்களை எல் லோருக்கும் தெரியும். அவர், ஆசைத்தம்பியைவிட மூத்தவர். ஆனாலும், அவருக்கே யோசனை சொல்லக்கூடிய அளவிற்கு இருந்தவர். தன்னு டைய கருத்தை மாற்றிக் கொள்ளமாட்டார் ஆசைத்தம்பி அவர்கள்.

இதோ என் கைகளில் இருப்பது ‘திராவிட நாடு' பத்திரிகை. அண்ணா அவர்கள், 1942 ஆம் ஆண்டு ‘திராவிட நாடு' பத்திரிகையைத் தொடங்கினார். 1943 ஆம் ஆண்டு ‘திராவிட நாடு' இதழில் எழுதியிருக்கிறார்.

1939-40 ஆம் ஆண்டு நீதிக்கட்சிக்கு அய்யா தந்தை பெரியார் அவர்கள் தலைவராகிறார். அந்தக் கட்சி தோல்வியடைந்த பிறகு, அதற்கு ஒரு புதிய வலிமையை உண்டாக்கவேண்டும் என்பதற்காக தலைமையேற்றார்.

ஜஸ்டிஸ் கட்சிக்குப் 

புதிய அமைப்பு வேண்டும்

20 வயதுடைய ஏ.வி.பி. ஆசைத்தம்பி போன்றவர்கள் கருத்துச் சொல்கிறார்கள்.

ஜஸ்டிஸ் கட்சிக்குப் புதிய அமைப்பு வேண்டும்: ஏ.வி.பி.ஆசைத்தம்பி எழுதுகிறார் 8.8.1943 ஆம் ஆண்டு.

அந்தக் காலகட்டத்தில்தான் என்னுடைய ஆசிரியர் திராவிடமணி அவர்கள் பத்து வயதில் என்னை மேடை ஏற்றுகிறார்.

1944 ஆம் ஆண்டு சேலம் மாநாடு - திராவிடர் கழகத்திற்குப் பெயர் மாறுகிறது.

மக்கள் இயக்கமாக 

இந்த இயக்கத்தை மாற்றவேண்டும்!

அப்படிப்பட்ட காலகட்டத்தில் அவர் சொல்கிறார், ‘‘பணக்காரர்கள், பதவியாளர்கள் எல்லாம் நீதிக்கட்சியில் இருந்துகொண்டு குறுக்கே இருக்காதீர்கள். மக்கள் இயக்கமாக இந்த இயக்கத்தை மாற்றவேண்டும்'' என்று.

அந்தக் கருத்தோட்டத்தை இதுபோன்ற இளைஞர் களை வைத்துத்தான், தந்தை பெரியார் எழுதி, ‘‘அண்ணா துரை தீர்மானம்'' என்று அடுத்த ஆண்டு நடைபெற்ற சேலம் மாநாட்டில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

அந்த இயக்கமே அந்தக் கொள்கையை உண் டாக்குகிறது.

திராவிட இயக்கம் அன்றுமுதல் இன்றுவரை வெற்றி பெறுவதற்கு அடிப்படை

இளைஞர்கள்  தந்தை பெரியார் எப்படி யோசித்தார் என்பதை எண்ணிப்பார்க்கவேண்டும். பெரியார் எப்படி யோசித்தாரோ, அதுபோன்று இளைஞர்கள் யோசிக் கிறார்கள். தலைமுறை இடைவெளி இல்லை. இதுதான் திராவிட இயக்கம் அன்றுமுதல் இன்றுவரை வெற்றி பெறுவதற்கு அதுதான் அடிப்படை.

ஆசைத்தம்பி அவர்களுடைய எழுத்து, ஆற்றல் என்பது மிகவும் சிறப்பானது.

ஆசைத்தம்பி அவர்கள் கூட்டத்தில் உரையாற்றும் பொழுது,  தொலைதூரத்தில் இருந்து கேட்பவர்களுக்குத் தந்தை பெரியார் உரையாற்றுவதுபோன்று இருக்கும். அதனால்தான் ‘‘வாலிபப் பெரியார்'' என்று அவரை அழைப்பார்கள். தொலைதூரத்தில் இருப்பவர்கள் இவருடைய உரையை கேட்டால், பெரியார் பேசுகிறாரா? ஆசைத்தம்பி பேசுகிறாரா? என்று சந்தேகம் வருவது போன்று, நிறுத்தி, நிதானமாக, அய்யா எப்படி பேசு வார்களோ, அதேபோன்று பேசுவார்.

அவருடைய எண்ணம், சிந்தனைகள் மிகப்பெரிய அளவிற்கு ஒரு மாற்றத்தை உருவாக்கின, சமுதாயத் தினுடைய எண்ணத்தினை, கருத்தினை வேகமாக மறுமலர்ச்சி அடையச் செய்வதற்கு  பகுத்தறிவு, புரட்சிக் கூறுகளை எடுத்துச் சொல்லி, ஒரு பெரிய மாறுதலை உண்டாக்கினார்.

ஆசைத்தம்பி நடத்திய ‘தனியரசு’ இதழ்!

எந்தக் கருத்தாக இருந்தாலும், அதைப்பற்றி துணிச்சலாகச் சொல்லக் கூடியவர். எப்படி கலைஞர் அவர்கள் ‘முரசொலி'யை ஆரம்பித்தாரோ, அதுபோன்று ஆசைதம்பி அவர்கள் ஒரு வாரப் பத்திரிகையைத் தொடங்கினர். பின்னாளில் அதனை நாளிதழாக மாற்றினார். ‘தனியரசு' என்ற பெயரில்.

எல்லா கருத்தையும் அவர் தெளிவாக எடுத்துச் சொல்லக் கூடிய அளவிற்கு வந்தபோது, அவருடைய எழுத்து வன்மை - அண்ணா, கலைஞர் வரிசையில் பார்த்தீர்களேயானால், அவர்கள் பேச்சாளர்களாக மட்டும் இருக்கமாட்டார்கள்; நல்ல எழுத்தாளர்களாகவும் இருப்பார்கள்.

திரைப்படத் துறையிலும் சாதித்தவர் ஆசைத்தம்பி!

திரைப்படத் துறைக்கும் போய் இவர் சாதித்தார் என்பதைத்தான் இங்கே சொன்னார்கள். ‘சர்வாதிகாரி' திரைப்படத்தில் இவர் எழுதிய மிக முக்கியமான வசனங்கள் இன்றைக்கும் நிறைய பேருக்கு அந்த வசனங்கள் பொருந்தும். அரண்மனை நாய்கள் அதிகமாகக் குரைத்துக் கொண்டிருக்கின்றார்கள்.

அவர் எழுதிய வசனங்களில் எவ்வளவு துடிப்பு இருக்கிறது என்பதற்கு பல உதாரணங்கள் உண்டு.

நான் திரைப்படங்களை அதிகமாகப் பார்ப்பவன் இல்லை. ஆசைத்தம்பி வசனம் எழுதியிருக்கிறார் என்ப தால், அந்தத் திரைப்படத்திற்குச் சென்றோம் நாங்கள்.

நான் திராவிடர் கழகத்தில் இருக்கின்றவன்; அவர் தி.மு.க.  பிரிந்த நேரத்தில், அவ்வியக்கத்தில் இருந்தார். ஆனாலும் நாங்கள் ஒற்றுமையாக, நண்பர்களாகத்தான் இருப்போம்.

எல்லா துறைகளிலும் வெற்றிகரமாக பணியாற்றியவர் ஆசைத்தம்பி அவர்கள்.  தி.மு.க. பிரிந்திருந்தாலும், தி.க.வும், தி.மு.க.வும் இரட்டைக் குழல் துப்பாக்கிகள்தான்.

‘காந்தியார் சாந்தி அடைய!’

‘முரசொலி' ஆசிரியராகவும், ‘கலைஞர் தொலைக் காட்சி' ஆசிரியராகவும் இருக்கக்கூடிய திருமாவேலன் அவர்கள் சில ஆண்டுகளுக்கு முன்பு எழுதிய புத்தகத்தில் அற்புதமாகப் பதிவு செய்திருக்கிறார். இது ஏற்கெனவே ஒரு சிறிய புத்தகமாக ‘காந்தியார் சாந்தி அடைய’  என்ற தலைப்பில் வெளிவந்திருக்கிறது.

இதற்காகத்தான் அவரை கைது செய்தார்கள்; இதற்காகத்தான் அவர் தலையை மொட்டையடித்தார்கள் சிறைச்சாலையில்.

அவர் அப்படி என்ன தவறு செய்தார்?

கோட்சே என்ற பார்ப்பனர் காந்தியாரைச் சுட்டுக் கொன்றார் என்று எழுதினார்.

அவர் எழுதியதில், எந்தவிதமான தவறும் கிடையாது. 

துறையூர் நடராஜா பிரசில் அச்சடிக்கப்பட்டு எரி மலைப் பதிப்பகம் சார்பில் அந்த சிறிய நூலை வெளி யிட்டவர் கலியபெருமாள் ஆவார்.

இந்தப் புத்தகத்தில் உள்ள படத்தைப் பாருங்கள் - ஆசைத்தம்பி, புத்தகத்தை அச்சிட்டு வெளியிட்ட கலியபெருமாள், தங்கவேலு மற்றும் இன்னொருவர். 

அன்றைக்கு அவ்வளவு பெரிய கொடுமையை, அன்றைய ஆட்சி செய்தது.

தண்டிக்கப்பட்டு, மொட்டையடிக்கப்பட்டார்!

‘‘மதவெறி காந்தியாரைக் கொன்றது. ஆரிய ஸநாதனம் அவரைக் கொன்றது. மதச்சார்பற்ற ஒரு நிலை வரவேண்டும்; சமூகநீதி வரவேண்டும் என்று சொன்ன தினால்தான் காந்தியார் கொல்லப்பட்டார்'' என்று பழைய வரலாற்றை எழுதியிருக்கிறார்.

அதற்காகத்தான் அவர் தண்டிக்கப்பட்டார் என்றதும், அண்ணா அவர்கள் மிகக் கடுமையாக எடுத்துச் சொன்ன தோடு மட்டுமல்லாமல், கட்டுரை, கடிதம் எழுதினார்.  அந்தக் காலத்தில், ஆசைத்தம்பியின் மொட்டை என்பது ஒரு பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.

மூன்று பேர் கைது!

‘‘ஆசைத்தம்பிக்கு 6 மாத சிறைத்தண்டனை, 500 ரூபாய் அபராதம். புத்தகத்தை அச்சிட்டு வெளியிட்ட கலியபெருமாள், இறந்துபோன தோழர் து.வி.நாராயணன் எழுதிய ‘அழியட்டுமே, திராவிடம்' என்ற நூலை வெளி யிட்டதற்காக தங்கவேலு ஆகியோருக்கு மூன்று மாத சிறைத்தண்டனை, 500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

என்.வி.நடராஜன்

19.7.1950 ஆம் நாள், ஆசைத்தம்பி கைது செய்யப்பட்டு, முசிறி சப்-ஜெயிலில்  மூவரும் அடைக்கப்பட்டதும், திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய தலைமை நிலையம் சார்பில், என்.வி.நடராஜன் திருச்சி சென்றார்.

அன்பில் தர்மலிங்கம், சாம்பு, வானமாமலை, துறையூர் கழக முத்து ஆகியோர் ஆலோசனை செய்த பின், என்.வி.நடராஜன், 21 ஆம் தேதி சிறைக்குச் சென்று, ஆசைத்தம்பி, கலியபெருமாள், தங்கவேலு ஆகிய மூன்று பேரையும் சந்தித்துப் பேசினார்.

அதற்குப் பிறகு விருதுநகரில் கூட்டம் நடக்கிறது. அங் கிருந்து ஆசைத்தம்பியின் சொந்த ஊரான விருது நகருக்கு என்.வி.நடராஜன் சென்றார்.

22 ஆம் தேதி மாலை 4 மணிக்கு விருதுநகர் தி.மு.க. வின் நிர்வாகிகள் கூட்டம் என்.வி.என். தலைமையில் நடந்தது. ஆசைத்தம்பியின் மீதான வழக்கு நடத்த, 5 பேர் கொண்ட கமிட்டி அமைக்கப்பட்டது. அதற்கு செயலாளராக இளஞ்செழியனும், பொருளாளராக அய்யாசாமியும் நியமிக்கப்பட்டனர். வழக்கு நிதியாக 50 ரூபாய் அண்ணா கொடுத்தனுப்பினார்.''

(தொடரும்)


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக