அரிய பிரகடனங்களை அறிவித்தார் - மகிழ்கிறோம், மகிழ்கிறோம் - தாயின் பூரிப்புக்குப் பஞ்சமில்லை!
அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை - தந்தை பெரியார் நெஞ்சில் தைத்த முள்ளை எடுக்க முடியவில்லையே என்று ஆதங்கப்பட்டார் கலைஞர்
இன்று அந்த முள்ளை எடுத்து சாதனை படைத்தார் நமது முதலமைச்சர்!
தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கை
அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை - தந்தை பெரியார் நெஞ்சில் தைத்த முள்ளை எடுக்க முடியவில்லையே என்று ஆதங்கப்பட்டார் கலைஞர்; இன்று அந்த முள்ளை எடுத்து சாதனை படைத்தார் நமது முதலமைச்சர். அரிய பிரகடனங்களை அறி வித்தார் - மகிழ்கிறோம், மகிழ்கிறோம் - பூரிப்புக்குப் பஞ்சமில்லை என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத் துள்ளார்.
அவரது அறிக்கை வருமாறு:
56 ஆண்டுகளுக்குமுன் ஆட்சியை அமைக்க மக்கள் இட்ட ஆணையை ஏற்று அழைக்கப்பட்ட தந்தை பெரியாரின் தலைமகன் அறிஞர் அண்ணா - திருச்சிக்குச் சென்று, தனது தாய்க்கழகத் தலைவரான தந்தை பெரியாரைச் சந்தித்து ஆட்சி வெற்றிக்கனியை அவர்தம் காலடியில் வைத்து, ‘எங்களை வழிநடத்துங்கள் அய்யா' என்று கேட்டு, தந்தை - தாய்க்கழகம் வாழ்த்திட, மகிழ்ச்சியில் திளைத்தார் அண்ணா (2.3.1967).
18 ஆண்டுகால நீண்ட இடைவெளி, 18 நிமிடங் களிலேயே காணாமற்போயிற்று; தந்தையின் வாழ்த்தும், தாய்க்கழகத்தின் பூரிப்பும் நிரந்தரமாகி, நிலைத்த வரலாற்றைத் தந்தது! தருகிறது!! தொடர்கிறது!!!
அண்ணாவுக்குப் பின் கலைஞர்தான் முதலமைச்சராகவேண்டும் என்று
ஆணையிட்டார் தந்தை பெரியார்
முதலமைச்சர் அண்ணா மறைவு என்ற கொடுந் துயரத்திற்குப் பின், கலைஞர்தான் அப்பொறுப்பிற்குப் பொருத்தமானவர் என்பதை தனது அனுபவ ஞானத்தால் அளந்தறிந்த தந்தை, ஆணையிட்டார் அவருக்கு! கலைஞர் பொறுப்பேற்று அண்ணாவின் முப்பெரும் சாதனைகளின் அடிக்கட்டுமானத்தை மேலும் பல மடங்கு விரிவான ஆட்சிச் சாதனைகளாக்கி, சமூகப் புரட்சி, ஜாதி, தீண்டாமை, பெண்ணடிமை ஒழிக்கும் சட்டத் திட்டங்கள்மூலம், தனிச் சரித்திரம் படைத்துத் தரணி புகழ் பெருமை பெற்று வாழுகிறார்! வாழ்த்தப் படுகிறார்!!
‘‘மானமிகு சுயமரியாதைக்காரர்''தம் மகுடத்தின் மதிப்பே இதில்தான் அடங்கியுள்ளது என்றாக்கி, தனது ‘ஞானத்தந்தை' நெஞ்சில் தைத்த முள்ளையெடுத்தார் சட்டப் போராட்டத்தின்மூலம்!
‘‘தமிழ்நாடு வெற்றிடம் அல்ல - கற்றிடம்!''
கலைஞர் மறைவிற்குப்பின், ‘‘தமிழ்நாடு வெற்றிடம் அல்ல; கற்றிடம்'' என்று பார் புகழ் கட்சி, ஆட்சி இரண்டு பொறுப்புகளையும் அடக்கத்தோடும், ஆழ்ந்த அனுபவ அறிஞர்கள் துணையோடும் வரலாற்றின் வைர வரிகளை நாளும் எழுதிக் கொண்டுள்ளார் நமது சமூக நீதிக்கான சரித்திர நாயகர்!
திராவிடர் ஆட்சியாம் நீதிக்கட்சியை - நீட்சியாக்கிய அண்ணாவை, திருச்சிக்குத் தாய்க்கழகம் அழைத்தது 17, செப்டம்பர் 1967 இல்!
தந்தையும், தனயனும் உவகைப் பெருக்கோடு ஊர் வலத்திலும் பவனி வந்து, தாய்க்கழகத்தின் பாசத்தைப் பெருமதிப்புடன் ஏற்றார்.
தி.க. - தி.மு.க. - இரட்டைக் குழல் துப்பாக்கி - இன எதிரிகளைக் கலக்கியது; அரசியலைக் குலுக்கியது! ஆரியம் ஏமாந்தது!!
அன்று கலைஞரை
தஞ்சைக்கு அழைத்தோம்!
அண்ணாவிற்குப் பிறகு அவரது அரசியல் பணியைத் தொய்வின்றித் தொடர்ந்த நம் கலைஞரை, அவர்தம் செயற்கரிய சட்டச் சாதனையை - ஆதிதிராவிடர் உள்பட அனைத்து ஜாதியினரும் நுழைய முடியாத நீண்ட ஸநாதனத்தினைப் புரட்டிப் போட்ட ஒரு சட்டப் போராட்டம், வெற்றி கண்டதைப் பாராட்டி, அய்யா, அன்னை ஆகியோரின் மறைவிற்குப் பிறகு, எளியவர் களாக எங்களைப் போன்றோரைக் கொண்ட தாய்க் கழகத்தின் அழைப்பையும் தட்டாமல் ஏற்று, தாய் வீட்டின் பாச மழையில் நனைந்து, உள்ளத்தின் உவகைதனை கவிதையாக்கி மலை உச்சியிலிருந்து பாடுகிறேன் என்று பாடி மகிழ்ந்தார்! (12.6.2006).
பெரியார் ஆட்சி, அண்ணா - கலைஞர்மூலம் மட்டுமல்ல, தன்மூலமும் தொடருகிறது என்று காட்டிய நம் தளபதியின் தன்னிகரற்ற ஆட்சியின் சாதனையைப் பாராட்டி, உச்சிமோந்து உயர்தனிப் பாசத்துடன் அழைத்தோம், அதே தஞ்சைக்கு!
இன்று கலைஞரின் வழிவந்த முதலமைச்சரும் எங்கள் அழைப்பை ஏற்று தஞ்சை வந்தார்!
2023 அக்டோபர் 6 இல் அழைப்பை ஏற்று, தாய் வீட்டுக்குத் தரணி புகழ் பரணியோடு,
எம்மவர்
வந்தார்
கண்டார்,
மகிழ்ந்தார் - மகிழ வைத்தார்!
தந்தார் - வரலாற்றுப் பிரகடனங்களை!
எத்தனை எத்தனை இன்பம்!!
அத்தனையும் எழுதிட எப்படித்தான் முடியும்?
உயிரும், உடலும் ஒன்றுக்கு ஒன்று
உறவாடத்தான் முடியுமே தவிர,
கட்டிப் பிடித்து பாசம் காட்ட முடியுமா?
காரணம் - என்றும்
ஒட்டியிருப்பதே அவ்விரண்டும்!
ஒன்றில்லை என்றால் மற்றதில்லை
உற்றாரும், உலகாரும் அறியவேண்டிய உண்மை இது
என்று பிரகடனப்படுத்தியது தஞ்சை விழா!
எங்கள் எல்லையற்ற பாசமிகு முதலமைச்சருக்குத் தாய்(க்கழகம்) எப்படி நன்றி கூற முடியும்?
மகிழ்ச்சிக் கண்ணீர் ஊற்றெடுத்த நிலையில்
துடைத்து நினைவலைகளில்
நீந்திக் களிப்பதைவிட?
பூரிப்புக்குப் பஞ்சமில்லை
திராவிடத்தின் தனிச் சிறப்பு - இப்படிப்பட்ட எங்கும் எவரும் பார்க்க முடியாத உறவாலும், தகர்க்க முடியாத உணர்வாலும், அது தனது எதிர்நீச்சல் பயணத்தை - தடைக்கற்களைத் தாண்டி, தனது தொடர் பயணத்தைத் தொடர்ந்து வெற்றி வாகை சூடிடவும் வரலாற்று வரிகளை நாளும் எழுதிடும் - எழுச்சி ஏற்படுத்தும்!
தாய்வீட்டில் கலைஞர் அன்று -
தாய் வீட்டில் வினைஞர்(நாளும்) இன்று!
பிறகென்ன பூரிப்புக்குப் பஞ்சம்?
9.10.2023
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக