வெள்ளி, 13 அக்டோபர், 2023

நியூஸ் க்ளிக்' மற்றும் ஊடகங்களின்மீது பா.ஜ.க. அரசின் அடாவடித்தனத்தைக் கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் கண்டன உரை

 ஒன்றிய பி.ஜே.பி. அரசால் பறிக்கப்படுவது பத்திரிகை சுதந்திரம்!

பலியாவதோ, ஜனநாயகக் கோட்பாடுகள்!

கருத்துச் சுதந்திரத்திற்கு விரோதமான ஒன்றிய அரசை மக்களிடம் அம்பலப்படுத்துவோம்!

2

சென்னை, அக்.12 ஒன்றிய பி.ஜே.பி. அரசில் பறிக்கப் படுவது பத்திரிகை சுதந்திரம்! பலியாவதோ, ஜனநாயகக் கோட்பாடுகள்; கருத்துச் சுதந்திரத்திற்கு விரோதமான ஒன்றிய அரசை மக்களிடம் அம்பலப்படுத்துவோம்  என்றார்ப திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு 

கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம்!

நேற்று (11.10.2023) மாலை 6 மணிக்கு சென்னை தங்கசாலையில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில், ‘நியூஸ் க்ளிக்' மற்றும் ஊடகங்கள்மீது பா.ஜ.க. அரசின் அடாவடித்தனத்தைக் கண்டித்து சி.பி.அய்.(எம்) மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் கழகத் தலை வர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.

அவரது உரை வருமாறு:

‘‘பறிக்கப்படும் பத்திரிகை சுதந்திரம்- 

பலியாகும் ஜனநாயகம்!’’

மிகுந்த எழுச்சியோடு நடைபெறக்கூடிய - ‘‘பறிக்கப்படும் பத்திரிகை சுதந்திரம் - பலியாகும் ஜனநாயகம்'' என்ற சுருக்கென்று தைக்கக்கூடிய, புரியக்கூடிய தலைப்பில் ‘நியூஸ்க்ளிக்' மற்றும் ஊடகங்கள்மீது பா.ஜ.க. என்ற பாசிச அரசின் அடாவடித்தனத்தைக் கண்டித்து நடைபெறக்கூடிய இந்த ஆர்ப்பாட்டத்திற்குத் தலைமையேற்று இருக் கக் கூடிய மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் அருமைத் தோழர் கே.பாலகிருஷ்ணன் அவர்களே, இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில துணை செயலாளர் தோழர் வீரபாண்டியன் அவர்களே,

திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் இங்கே வந்திருக்கக் கூடிய மேனாள் நாடாளுமன்ற உறுப் பினரும், தி.மு.க. தலைமைச் செய்தித் தொடர்பாளருமான அன்பிற்குரிய சகோதரர் டி.கே.எஸ்.இளங்கோவன் அவர்களே,

இவ்வார்ப்பாட்டத்தில் கலந்துகொண்டிருக்கக் கூடிய அருமைத் தோழர்கள் வி.சி.க. இளஞ்சிறுத்தைகள் எழுச்சிப் பாசறை இளம் செகுவாரே அவர்களே,

மனிதநேய மக்கள் கட்சித் தலைவரும், சட்டப் பேரவை உறுப்பினருமான பேராசிரியர் எம்.எச்.ஜவாஹி ருல்லா அவர்களே, அனைத்துக் கட்சிப் பொறுப்பாளர் களே, தோழர்களே, சகோதரர்களே, உங்கள் அனை வருக்கும் அன்பான வணக்கத்தினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த ஆர்ப்பாட்டத்தின் நோக்கத்தை எனக்குமுன் தோழர் பாலகிருஷ்ணன் அவர்களும், நண்பர் வீரபாண்டியன், அகமது ஆகியோர் மிகத் தெளிவாகச் சொல்லியிருக்கிறார்கள்.

தோல்வியை எதிர்கொள்ளக்கூடிய 

மனநிலை இல்லாமல்தான்...

ஒன்றிய அரசின் இந்தப் போக்கு என்பது எதனால்? அவர்களுடைய தோல்வி ஒவ்வொரு நாளும் உறுதியாகிறது என்பதால், ‘இந்தியா' கூட் டணி என்ற ஒன்று அமைந்துவிட்டது என்றவுடன், அடுக்கடுக்கான தோல்வியை அவர்கள் சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதால், அந்தத் தோல் வியை எதிர்கொள்ளக்கூடிய மனநிலை இல்லாமல், யார் யாரெல்லாம் உண்மையைச் சொல்லுகிறார் களோ, அவர்களுக்கெல்லாம் தெளிவாகப் பதில் சொல்ல முடியாத காரணத்தால், கருத்திற்கு கருத்துச் சொல்ல முடியாத காரணத்தினால், மக்கள் மத்தியில் உண்மைகள் சென்று சேரக்கூடாது என்ற ஒரு நிலையில், யார் யாரெல்லாம் உண்மைகளை வெளிச்சத்திற்குக் கொண்டு வருகிறார்களோ, அத்தகைய ஜனநாயகத்தின் நான்காவது தூணான பத்திரிகையாளர்களைக் குறி வைக்கிறார்கள்.

எப்பொழுது ஆட்சி பத்திரிகையாளர்களைக் குறி வைக்கிறதோ, அன்றைக்கே அதனுடைய முடிவுரையை அது எழுதுகிறது என்று அதற்குப் பொருள் - இதுதான் வரலாறு.

பத்திரிகையாளர்கள் உண்மையைச் சொல்லுகிறவர்கள். அவர்கள் எந்தக் கட்சியையும் சாராதவர்கள்!

வரலாற்றில் இதுவரையில் மாற்றப்பட்ட, வீட்டிற்கு அனுப்பப்பட்ட, குழிதோண்டி புதைக்கப்பட்ட ஆட்சிகள் இருக்கின்றன என்றால், அவர்களுடைய கடைசி அத்தி யாயம் எதில் இருக்கிறது என்றால், பத்திரிகையாளர்களைக் குறி வைத்ததுதான். ஏனென்றால், பத்திரிகையாளர்கள் உண்மையைச் சொல்லுகிறவர்கள். அவர்கள் எந்தக் கட்சியையும் சார்ந்தவர்கள் அல்ல.

குறிப்பாகச் சொல்லவேண்டுமானால், இந்திய அரசமைப்புச் சட்டத்தில், மிகப் பிரபலமான நடிகராக இருக்கின்ற மோடி அவர்கள் என்ன செய்தார்? இரண்டாம் முறை பதவியேற்றுக் கொள்ளும்பொழுது, பிரதமர் மோடி பதவிப் பிரமாண உறுதிமொழியைப் படித்துவிட்டு, மேடையிலிருந்து கீழே இறங்கி, ஒரு கல்லை கட்டிப் பிடித்து, குனிந்து வணங்கிவிட்டு வந்தார். அந்தக் கல்லில் என்ன எழுதியிருந்தது என்றால், ‘‘இந்திய அரசமைப்புச் சட்டம்'' என்று. இந்தக் காட்சியை அனைவரும் தொலைக்காட்சிகளில் பார்த்திருக்கலாம்.

இந்திய அரசமைப்புச் சட்டத்தையே நாசப்படுத்துகிறார்- அதைத் தடுப்பதற்காகத்தான் இந்தக் கூட்டம்!

‘‘அடடா, இந்திய அரசமைப்புச் சட்டத்தின்மேல் பிரதமருக்கு அதீத அக்கறை இருப்பதால், அதை வணங் கியிருப்பார்'' என்று எல்லோரும் நினைத்தி:ருப்பார்கள். ஆனால், அவர் மிகப்பெரிய நடிப்பினுடைய உச்சகட் டத்திற்குப் போனவர். இந்திய அரசமைப்புச் சட்டத்தை இன்றைக்கு மிதிக்கிறார், துவைக்கிறார், அழிக்கிறார் - கரையான் புற்றெடுப்பதைப்போல, இந்திய அரசமைப்புச் சட்டத்தையே நாசப்படுத்துகிறார். அதைத் தடுப்பதற் காகத்தான் இந்தக் கூட்டம்.

வெறும் பத்திரிகையாளர்களைக் காப்பாற்றுவதற்காக மட்டுமல்ல - வெறும் ஜனநாயகத்தைக் காப்பாற்றுவது மட்டுமல்ல நண்பர்களே - இந்திய அரசமைப்புச் சட்டத்தைக் காப்பாற்றுவதற்காகத்தான்!

யாரிடத்தில் அதிகாரம் இருக்கிறது? 

‘‘We the People...'' என்று ஆரம்பிக்கக் கூடிய இந்திய அரசமைப்புச் சட்ட முகப்புரையில், யாரிடத்தில் இறையாண்மை இருக்கிறது? யாரிடத்தில் அதிகாரம் இருக்கிறது? வீரபாண்டியன் அவர்கள் சுட்டிக்காட்டி யதைப்போல, ஆட்சியாளர்களிடத்தில் இல்லை, நாடாளுமன்றத்திலோ, சட்டமன்றங்களிலோ இல்லை. மக்கள் மத்தியில்தான் இருக்கிறது.

ஆகவேதான், அந்த மக்களுக்கு விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துவதற்காகத்தான் - போதிய செய்திகளை அவர்களுக்குச் சொல்வதற்குத்தான் - ஜனநாயகத்தின் நான்காவது தூணான ஊடகங்கள்.

அந்த ஊடகங்களுடைய கழுத்தைத் திருகினால், குரல் வளையை நெரித்தால் அதை நாம் பார்த்துக் கொண்டிருக்க முடியுமா?

நல்ல வாய்ப்பாக, தமிழ்நாட்டில் ஒரு ஆட்சி - ‘திராவிட மாடல் ஆட்சி' நடைபெறுகின்ற காரணத்தி னால், நாமெல்லாம் வெளியே இருந்து பேசிக் கொண் டிருக்கின்றோம். இதுவே டில்லியாகவோ, மற்ற மாநிலங்களாகவோ இருந்திருந்தால் என்னாகியிருக்கும்? 

இப்படிப்பட்ட உரிமை கிடைத்திருக்குமா? அதைத் தான் தோழர் பாலகிருஷ்ணன் அவர்கள் அருமையாக எடுத்துச் சொன்னார்கள்.

ஒன்றிய பாசிச பா.ஜ.க. அரசை வீட்டிற்கு அனுப்புகின்ற நிலை வரும்!

தமிழ்நாட்டில் இருப்பதுபோல, இந்த சுதந்திர நிலை நாடு முழுவதும் நிச்சயம் வரும் - இந்தியா கூட்டணி வெல்லும்!  ஒன்றியத்தில் இருக்கின்ற பாசிச பா.ஜ.க. அரசை வீட்டிற்கு அனுப்புகின்ற நிலை வரும்.

பத்திரிகை சுதந்திரம் என்பது பிச்சையல்ல - கருத்துச் சுதந்திரம்!

ஒரே ஒரு செய்தியைச் சொல்லுகிறேன் - வழக்கு நடக்கிறது - நியூஸ்க்ளிக் என்கிற ஒரே ஒரு பத்திரி கைக்காக மட்டும் நாம் போராடவில்லை. பத்திரிகை சுதந்திரம் என்பது பிச்சையல்ல - கருத்துச் சுதந்திரம் என்பது இந்திய அரசமைப்புச் சட்டம் நமக்குத் தந்துள்ள உரிமை - அது நம்மோடு இருக்கக் கூடியது.

அந்த அரசமைப்புச் சட்டத்தில் இருக்கக் கூடிய அடிப்படை உரிமைகள் இருக்கிறதே, அவற்றை எந்த அரசு வந்தாலும், ஒருபோதும் பறிக்க முடியாது.

ஆனால், மோடி அரசு அதைப்பற்றிக் கொஞ்சம்கூட கவலைப்படவில்லை.

ஏனென்றால், எப்படி கடவுள்களையெல்லாம் வணங்கிவிட்டு,  அதனை வெளிநாடுகளுக்கு திருட்டுத் தனமாக தூக்கிச் செல்லுகின்ற பக்தர்கள் இருக் கிறார்களோ, அதுபோல, அரசமைப்புச் சட்டத்தை வணங்கிவிட்டு, முழுக்க முழுக்க அதைப் பறிமுதல் செய்யக்கூடிய முதல் ஆளாகத்தான் மோடி அரசு இருக்கிறது; பா.ஜ.க. அரசு இருக்கிறது; ஆர்.எஸ்.எஸ். அரசு இருக்கிறது. அதனுடைய அண்மைக்கால நிகழ்வுதான் இது.

பத்திரிகையாளர்கள்மீது தொடர்ந்து ஏவுகணைகள் வீசப்படுகின்றன. திரிசூலங்களை அவர்கள் வைத் திருக்கிறார்கள்.

யார் யாரெல்லாம் எதிர்க்கட்சியில் இருக்கிறார்களோ, அவர்களுக்கெல்லாம் சி.பி.அய். சோதனை - அமலாக் கத்துறை சோதனை வரும் - வருமான வரித்துறை சோதனை வரும்.

ஜனநாயகத்திற்கு விரோதமாக மட்டுமல்ல, உச்சநீதிமன்றத்தினுடைய தீர்ப்புக்கும் விரோதமாக...

நியூஸ் க்ளிக் வழக்கில், உச்சநீதிமன்றத்தினுடைய தீர்ப்புக்கு விரோதமாக, அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமாக மட்டுமல்ல, ஜனநாயகத்திற்கு விரோதமாக மட்டுமல்ல, உச்சநீதிமன்றத்தினுடைய தீர்ப்புக்கும் விரோதமாக, அரசமைப்புச் சட்ட நெறிமுறைகளுக்கும் விரோதமாக - பகிரங்கமாக, நிர்வாணத் தன்மையில் வரக்கூடிய அளவில் இருக்கிறது என்பதற்கு அடை யாளம்தான் இந்தச் செய்தி.

மூத்த வழக்குரைஞர் கபில்சிபலின் வாதம்!

மூத்த வழக்குரைஞர் கபில்சிபல் உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்கில் கூறியதாவது:

‘‘அரசாங்க வழக்குரைஞர் சொன்ன குற்றச்சாட்டில் ஆதாரமில்லை. பொய்யைத் தவிர வேறு கிடையாது. இங்கே சொல்லப்பட்ட தகவல்கள் எதுவுமே உண்மை யல்ல. ஒரு காசுகூட சீனாவிலிருந்து வரவில்லை. இவர்மீது சாட்டப்படும் குற்றச்சாட்டில் துளியும் உண்மை யில்லை. கலப்படமில்லாத பொய்யைச் சொல்கிறார்கள்.''

பெரியார் மொழியில் சொல்லவேண்டுமானால், ‘‘ஜமுக்காளத்தில் வடிக்கட்டிய பொய்.''

மேலும் கபில்சிபல் தொடர்கிறார்,

‘‘சட்டப்படி நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று சொன்னால்கூட, சட்ட முறைகளைப் பின்பற்ற வேண்டாமா?'' என்று கேள்வி எழுப்பினார்.

நாமெல்லாம் வழக்குரைஞர்கள், சட்டம் படித்தவர்கள் - இதை உலகம் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறது.

‘‘எதற்காகக் கைது செய்யப்படுகிறோம் என்ற காரணத்தை கைது செய்யப்படுபவரிடம் சொல்லி, அவரைக் கைது செய்யவேண்டும்.''

ஒன்றிய அரசுக்கு வேண்டாதவர்கள் சிறைச்சாலைக்குள் இருக்கவேண்டும் என்பதுதான் அவர்களுடைய குறிக்கோள்!

ஆனால், அதுபோன்ற நடைமுறை பாசிச பா.ஜ.க. ஒன்றிய அரசில் கிடையாது. அவர்கள் நினைத்தால், அவர்களுக்கு வேண்டாதவர்கள் சிறைச்சாலைக்குள் இருக்கவேண்டும் என்பதுதான் அவர்களுடைய குறிக்கோள்.

இங்கே நமது அகமது மற்றும் நண்பர்கள் உரை யாற்றியபொழுது சொன்னார்கள்; ‘இந்தியா' கூட்டணி ஆட்சி வந்தவுடன், பிரதமர் மோடியை கைலாசத்திற்கு அனுப்புவோம் என்று சொன்னார். அதற்காக நாளைக்கு அவர்மீது வழக்கு வரும்.

அகமது அவர்கள் எந்தக் கைலாசத்தை சொல்லியிருப்பார் என்றால், நித்தியானந்தா இருப்பாரே, அந்தக் கைலாசத்தைத்தான் சொல்லியிருப்பார்.

அவரை கைலாசத்திற்கு அனுப்பவேண்டாம் - மக்கள் வீட்டிற்கு அனுப்புவார்கள் என்பதுதான் மிகவும் முக்கியம்.

இங்கே காங்கிரஸ் தலைவர் சொன்னதுபோன்று, பிரதமர் அடுத்த ஆண்டு கொடியேற்றுவேன் என்று சொன்னதின்படி வேண்டுமானால், வீட்டில் ஏற்றலாம் அவர்.

இப்படிப்பட்ட  ஒரு சூழ்நிலையில், இவ்வளவு பெரிய அநியாயங்கள் ஒரு பத்திரிகைக்கு நடக்கிறது என்று நினைக்காதீர்கள். எங்கோ டில்லியில் நடக்கிறது என்று நினைக்காதீர்கள். யாருக்கோ ஒரு பத்திரிகையாளருக்கு என்று நினைக்காதீர்கள்? ஒரு 'நக்கீரன்' கோபாலுக்கு ஆபத்து என்று சொன்னால், அத்துணை பத்திரிகை யாளர்களும் எழுந்து நின்றால்தான், பத்திரிகை சுதந்திரம் காப்பாற்றப்படும். ஒரு தனி நபருக்கு என்பது அல்ல.

அதுபோலத்தான், எங்கோ நடக்கிறது? யாருக்கோ நடக்கிறது? நமக்கென்ன கவலை என்று இருக்கக் கூடாது.

ஒரு தெருவின் கோடியில் உள்ள ஒரு வீட்டில் நெருப்புப் பிடித்தால், அதுபற்றி கவலைப்படமாட்டேன், என் வீட்டிற்கு அந்த நெருப்பு வராது என்று சொன்னால், அவரை விட அறிவுக் குறைந்தவர் வேறு யார் இருக்க முடியும்? எச்சரிக்கையாக இருக்கவேண்டும் அல்லவா!

தமிழ்நாடு முழுக்கக் கொண்டு செல்லவேண்டும். நாட்டு மக்களுக்கு விளக்கிச் சொல்லவேண்டும்!

எனவேதான் நண்பர்களே, இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தினை சரியான காலகட்டத்தில் ஏற்பாடு செய்த நம்முடைய மார்க்சிஸ்டு கட்சித் தோழர்களை நான் வெகுவாகப் பாராட்டுகிறேன். இதை ஓர் இயக்கமாக தமிழ்நாடு முழுக்கக் கொண்டு செல்லவேண்டும். நாட்டு மக்களுக்கு விளக்கிச் சொல்லவேண்டும்.

இன்றைக்கு உச்சநீதிமன்றமே 

சுட்டிக்காட்டுகிறது!

ஏனென்றால், எல்லாத் துறைகளிலும் கைவைத்திருக் கிறார்கள்; நீதித்துறையைப் பாருங்கள்- அறிவிக்கப்படாத நெருக்கடி காலம் - நெருக்கடி காலத்தில்கூட வெளிப் படையாகச் சொல்லி நீதித்துறை உரிமைகளைப் பறித்தார்கள். ஒரு பக்கமாக சாய்ந்திருக்கிறது நீதித்துறை என்று சொன்னார்கள்.

ஆனால், இன்றைக்கு ஒரு பக்கத்தில் ஜனநாயகத்தை - அரசமைப்புச் சட்டத்தைக் கும்பிடுவதுபோன்று நடித்துக்கொண்டு இன்றைக்கு மீண்டும் அவர்கள் எப்படி வந்துகொண்டிருக்கின்றார்கள் என்று சொன்னால் நண்பர்களே, மிகப்பெரிய அளவிற்கு அதைப் பறித்துக் கொண்டிருக்கக் கூடிய அளவிற்கு, வேக வேகமாக அத்துமீறி சென்று, அரசமைப்புச் சட்ட நடைமுறை களையெல்லாம் தூக்கி எறிந்துவருவதை, இன்றைக்கு உச்சநீதிமன்றமே சுட்டிக்காட்டுகிறது.

உச்சநீதிமன்றத்தினுடைய கண்டனத்திற்கு ஆளான ஓர் ஒன்றிய அரசு!

நீதிபதிகளை நியமிக்கும்படி நாங்கள் அனுப்பிய பரிந்துரையை செய்ய நீங்கள் தயாராக இல்லை என்று உச்சநீதிமன்றம் ஒன்றிய அரசினுடைய செயல்பாட்டைக் கண்டித்திருக்கிறது என்றால், இந்திய வரலாற்றிலேயே, உச்சநீதிமன்றத்தினுடைய கண்டனத்திற்கு ஆளான ஓர் ஒன்றிய அரசு, ஜனநாயக வரலாற்றில் வேறு உண்டா என்று எண்ணிப் பாருங்கள் நண்பர்களே!

எனவே, அவர்கள் அரசமைப்புச் சட்டத்தை மதிக்க வில்லை; ஜனநாயகத்தை மதிக்கவில்லை; உச்சநீதி மன்றம் போன்ற நீதிமன்றங்களை மதிக்கவில்லை; ஊடகங்களை மதிக்கவில்லை; மக்களை மதிக்கவில்லை.

எனவேதான், அவர்களை எங்கே அனுப்பவேண் டுமோ, அங்கே அனுப்பவேண்டிய அவசியம் இருக்கிறது.

நரி ஒருபோதும் சைவமாகாது!

அவர்கள் மாறிவிட்டார்கள் அல்லது திருந்திவிட் டார்கள் - அவர்கள் பல வாய்ப்புகளைத் தற்போது செய்கிறார்கள் என்று நினைக்காதீர்கள்; நரி ஒருபோதும் சைவமாகாது. அதை நன்றாக நீங்கள் நினைவில் வைத்துக்கொண்டு, நரியை எங்கே அனுப்பவேண்டுமோ, அங்கே அனுப்புங்கள். நரித்தனத்திற்கு இடமில்லை.

நியூஸ்க்ளிக் என்பவர் ஒரு தனி நபர் என்று நினைக்காதீர்கள்; இந்தியா  அவருடைய பின்னால் இருக்கிறது. ‘இந்தியா' கூட்டணி மட்டுமல்ல, இந்திய மக்கள் இருக்கிறார்கள்.

யார் யார் உணர்ச்சிப்பூர்வமாக நியாயத்திற்குப் போராடுகிறார்களோ, அவர்கள் எல்லாம் அவர் பின்னால் இருக்கிறார்கள். நீதிக்குப் போராடுகிறவர்கள் அவர் பின்னால் இருக்கிறார்கள்.

இறுதியில் சிரிப்பவர்கள்தான் அறிவாளி - 

நடுவில் சிரிப்பவன் புத்திசாலி அல்ல!

இறுதியில் சிரிப்பவர்கள்தான் அறிவாளி; நாம் இறுதியில் சிரிக்க இருக்கிறோம். நடுவில் சிரிப்பவன் புத்திசாலி அல்ல என்பது ஓர் ஆங்கிலப் பழமொழி.

அதை விரைவில் பா.ஜ.க. உணரும்; உணர வைப்போம். இன்னும் 6 மாதங்கள் அல்லது அதைவிட குறைந்த காலகட்டம்தான்.

ஏற்கெனவே, லடாக்கில் நடைபெற்ற தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெறவில்லை. எங்கும் அவர்களுக்குத் தோல்வி முகம்தான். அந்தத் தோல்வியினுடைய உச்சக் கட்ட பயத்தினால், என்ன செய்வதென்று தெரியாமல், அவர்கள் ஏதேதோ செய்துகொண்டிருக்கிறார்கள்.

அவர்களுக்கு வரலாறு ஒரு குப்பைத் தொட்டியை அடையாளம் வைத்திருக்கிறது!

கடைசி கட்டத்தில் பல பேர் இப்படித்தான் நிலை தடுமாறி இருக்கிறார்கள். ஆகவே, அவர்களுக்கு வரலாறு ஒரு குப்பைத் தொட்டியை அடையாளம் வைத்திருக்கிறது. அந்தக் குப்பைத் தொட்டியில்தான் இப்படிப்பட்ட பாசிசம் போய் விழுந்திருக்கிறது. இதுதான் பழைய வரலாறு. அவர்களைத் தூக்கி எறிவதற்கு, மக்கள் முன், ஒவ்வொரு தெருவிலும், ஒவ்வொரு வீட்டிலும், ஒவ்வொரு திண்ணையிலும் பிரச்சாரம் செய்வோம்.

 ஜனநாயகத்தைக் காப்பாற்றுவோம்!

நாட்டைக் காப்பாற்றுவோம்!

இந்தியாவைக் காப்பாற்றுவோம்!

இந்தியாவைக் காப்பாற்ற ‘இந்தியா' கூட்டணியை வெற்றி பெற வைப்போம்!

அதுதான் மிகவும் முக்கியம்!

இப்பொழுது யார் ‘‘Anti India'' என்று சொன்னால், யார் யாரெல்லாம் பா.ஜ.க. அணியோ, அவர்கள் எல்லாம் ‘‘Anti India''

அவர்கள்தான் ‘‘Anti India'' வாக இருக்கிறார்கள்; 

நாம்தான் இந்தியா - 

நாம்தான் வெற்றி பெறக் கூடியவர்கள்!

எனவே, நாம்தான் இந்தியா - நாம்தான் வெற்றி பெறக் கூடியவர்கள். நாம்தான் மக்களுக்காக இருக்கக் கூடியவர்கள் என்பதைக் காட்டுவதற்கு இந்த அற்புத மான வாய்ப்பை உருவாக்கிய தோழர்களுக்கு நன்றி!

போராடுவோம், வெற்றி பெறுவோம்!

வெற்றி பெறுகின்ற வரையில் போராடுவோம்!!

பத்திரிகை சுதந்திரம் கிள்ளுக்கீரையல்ல -

எங்கள் உயிர்மூச்சு!

பத்திரிகையாளர்கள் தனியல்ல - 

நாங்கள் இருக்கிறோம், திரண்டிருக்கிறோம்!

நாங்கள் சிறைச்சாலைக்குச் செல்வதற்கும், அடக்குமுறைகளை ஏற்பதற்கும்கூடத் தயாராக இருக்கிறோம்!

உங்களுக்குப் பாதுகாப்பு கவசங்களாக இருக்கிறோம்; உங்களுக்காக நாங்கள் சிறைச்சாலைக்குச் செல்வதற்கும், அடக்குமுறைகளை ஏற்பதற்கும்கூடத் தயாராக இருக் கிறோம் என்று கூறி விடைபெறுகிறேன்.

நன்றி, நன்றி, வணக்கம்!

இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் கண்டன உரையாற்றினார்.

--------++++++++------+++++++------+++++-----


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக