வெள்ளி, 5 மே, 2023

மு.சண்முகப்பிரியன் பிறந்தநாள் மகிழ்வாக நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு நன்கொடை!

 

தமிழர் தலைவரிடம் நன்கொடை

 சென்னை மண்டல இளைஞரணி அமைப்பாளர் 

14

மு.சண்முகப்பிரியன்  தனது பிறந்தநாள் மகிழ்வாக தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை  சந்தித்து,  நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூபாய் 500/- நன்கொடை வழங்கினார். உடன் தோழர் விஜித்ரா, பெரியார் பிஞ்சு ராவணப்பிரியன். (29.4.2023,பெரியார் திடல்).


புதன், 3 மே, 2023

சட்டமன்றம், நாடாளுமன்றம், நிர்வாகத் துறைகளைவிட நீதித் துறையில்தான் இட ஒதுக்கீடு மிக முக்கியமாகத் தேவை!

  

 சமூகநீதி என்பது பிச்சையல்ல - சலுகை அல்ல - நமது உரிமை!

சென்னை ஆர்ப்பாட்டத்தில் தமிழர் தலைவர் முழக்கம்!

13

சென்னை, பிப்.16 சட்டமன்றம்,  நாடாளுமன்றம் - நிர்வாகத் துறை இவற்றைவிட இட ஒதுக்கீடு எதற்கு மிக முக்கியமாகத் தேவை என்றால், நீதித் துறையில்தான் இட ஒதுக்கீடு தேவை. ஏனென்றால், அதற்கு மிக எளிய விடை -  இந்த மேற்கண்ட இரண்டு துறைகளும் செய்யக்கூடியவற்றை சரியா? தவறா? என்று முடிவு செய்து - சிவப்பு மையினால் கோடு போட்டு அது செல்லுமா, செல்லாதா? என்று கூறும் சக்தி வாய்ந்த இடத்தில் நீதிமன்றங்கள் இருக்கின்றன என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

சமூகநீதிகோரி ஆர்ப்பாட்டம்!

கடந்த 11.2.2023 அன்று முற்பகல் 11 மணியளவில் சென்னை வள்ளுவர்கோட்டம் அருகே  உச்ச - உயர்நீதிமன்றங்களில் உயர்ஜாதி பார்ப்பன ஆதிக்கமா? தகுதி இருந்தும் ஒடுக்கப்பட்ட சமூக நீதிபதிகள் புறக் கணிக்கப்படுவது ஏன்?  என சமூகநீதி கோரி திராவிடர் கழகம் நடத்திய ஆர்ப்பாட்டத்தில்   திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி சிறப்புரையாற்றினார்.

அவரது சிறப்புரை வருமாறு:

சமூக அநீதிக் கொடியை இறக்கிவிட்டு - சமூகநீதிக் கொடியை ஏற்றவேண்டிய காலம் நெருங்கிவிட்டது!

மிகக் குறுகிய காலத்தில், உயர்நீதிமன்றம், உச்சநீதி மன்றம் ஆகியவற்றில் சமூக நீதி கொடி பறக்கவேண்டும்; இங்கே சமூகநீதிக்கு இடமில்லாத, சமூக அநீதிக் கொடி பறந்துகொண்டிருக்கின்றது. அந்த சமூக அநீதிக் கொடியை இறக்கிவிட்டு, சமூக நீதிக் கொடியை ஏற்றவேண்டிய நாள் நெருங்கிவிட்டது என்பதற்கு அடையாளமாகத்தான், அண்மையில் நடந்த பல்வேறு நியமனங்கள்; அந்த நியமனங்களுக்குள் ஏற்பட்டி ருக்கின்ற பல்வேறு போட்டிகள்; அங்கே நிகழ்ந்துள்ள உயர்ஜாதி ஆதிக்க நிலை; நம்மவர்களுக்குக் கதவு சாத்தப்படக் கூடிய ஒரு பேராபத்து - இவற்றையெல்லாம் விளக்கி, தமிழ்நாடு முழுவதும் இன்றைக்குத் திராவிடர் கழகமும், அதேபோல, கழகத்தினுடைய மூன்றாவது குழலாக எப்பொழுதுமே இருக்கக்கூடிய நம்முடைய எழுச்சித் தமிழர் தலைமையில் இயங்கக்கூடிய விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பும், அதேபோல நம்முடைய இடதுசாரி தோழர்கள் கொள்கைப் பயணத் தோழர்கள் என்பதில், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எப்போதும் நம்மில் ஒருவராக இருக்கக்கூடியவர்கள் என்பதற்கு அடையாளமாக இடதுசாரிகளின் சார்பாக இங்கே உரையாற்றிய நம்மு டைய மாநில துணைச் செயலாளர் வீரபாண்டியன் அவர்களே,

இந்நிகழ்வில் எனக்கு முன் உரையாற்றிய கழகத் துணைத் தலைவர் அவர்களே, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மத்திய சென்னை மாவட்ட செயலாளர் செல்வம் அவர்களே,

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளரும், சீரிய கொள்கையாளருமான அருமைத் தோழர் தழிழரசன் அவர்களே,

திராவிடர் கழகப் பொருளாளர் குமரேசன் அவர் களே, கழக வெளியுறவுச் செயலாளர் கோ.கருணாநிதி அவர்களே,

இந்நிகழ்வில் கலந்துகொண்டு வரவேற்புரையாற்றிய திராவிடர் கழக வழக்குரைஞரணி தலைவர் சென்னை உயர்நீதிமன்ற வழக்குரைஞர் த.வீரசேகரன் அவர்களே,

திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் ஜெயக்குமார் அவர்களே, மாநில அமைப்பாளர் குணசேகரன் அவர்களே, அமைப்புச் செயலாளர் பன்னீர்செல்வம் அவர்களே,

வழக்குரைஞரணி மாநில துணைத் தலைவர் வழக்குரைஞர் ராஜசேகரன் அவர்களே, மாநில துணைத் தலைவர் வழக்குரைஞர் திருப்பூர் பாண்டியன் அவர் களே, வழக்குரைஞர் நம்பியூர் சென்னியப்பன் அவர் களே, தம்பி பிரபாகரன் அவர்களே, மணியம்மை அவர்களே, சண்முகப்பிரியன் அவர்களே,  தளபதி பாண்டியன் அவர்களே, சுரேஷ் அவர்களே, துரை அருண் அவர்களே,  திராவிடர் கழகத் துணைப் பொதுச் செயலாளர் ச.இன்பக்கனி அவர்களே,

திராவிட மாணவர் கழக மாநில செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார் அவர்களே,  மாநில இளைஞரணி செயலாளர் சேகர் அவர்களே,

மற்றும் இங்கு பல்வேறு அமைப்புகளிலிருந்து வந்தி ருக்கக் கூடிய அருமை நண்பர்களே, போராட்டக் களத்தில் இருக்கக்கூடிய அருமைப் போராளிகளான சக தோழர்களே, ஊடகச் செய்தியாளர்களான அருமை நண்பர்களே உங்கள் அனைவருக்கும் வணக்கத்தினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

விரிவாக விளக்கமாக இன்றைய நிலையை மிகத் துல்லியமாகப் படம்பிடித்துக் காட்டியிருக்கிறார்கள்

தோழர்களே, இங்கே உரையாற்றியவர்களின் உரையில், குறிப்பாக தோழர் வீரபாண்டியன் அவர்களும் சரி, எழுச்சித் தமிழர் அவர்களும், கழகத் துணைத் தலைவர் அவர்களும் விரிவாக விளக்கமாக இன்றைய நிலையை மிகத் துல்லியமாகப் படம்பிடித்துக் காட்டியிருக்கிறார்கள்.

உச்ச, உயர்நீதிமன்றங்களில் சமூகநீதி தேவை என்ப தற்கு இப்படி ஒரு போராட்டம் நாடெங்கும் நடை பெறுவதற்காக வெட்கப்படவேண்டியவர்கள் உயர்நீதி மன்றத்திலும், உச்சநீதிமன்றத்திலும் இருக்கக்கூடிய நீதிபதிகள்தான்; அல்லது அவர்களை நியமிக்கின்ற அதிகாரம் கொண்டவர்கள்தான் என்பதை நான் மெத்தப் பணிவன்போடு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

சமூகநீதி என்பது பிச்சையல்ல - 

சலுகை அல்ல - நமது உரிமை!

ஏனென்றால், நிச்சயமாக சமூகநீதி என்பது பிச்சை யல்ல; சமூகநீதி என்பது நாம் ஏதோ முறை தவறி, வழிதவறி, அரசமைப்புச் சட்டத்தில் இல்லாத ஒன்றை, நீங்கள் எங்களுக்குக் கொடுங்கள் என்று கேட்பதற்கு, நாம் பாத்திரம் ஏந்திக் கொண்டு போகவில்லை.

அரசமைப்புச் சட்டத்தின்மீதுதான் இவர்கள் பிரமாணம் எடுத்துப் பதவிக்குப் போகிறார்கள். அந்த அரசமைப்புச் சட்டத்தில் பதவிப் பிரமாணம் எடுக்கும் பொழுது, பீடிகையில் உள்ளது என்ன?

அந்தப் பீடிகையை புரட்சியாளர் அம்பேத்கர் அவர்கள் கஷ்டப்பட்டு உருவாக்கினார். அந்த ஒன்றுக்காவது அவர் தன்னுடைய முழு சுதந்திரத்தையும், தன்னுடைய முழு ஆற்றலையும் பயன்படுத்தினார்.

WE, THE PEOPLE OF INDIA, having solemnly resolved to constitute India into a SOVEREIGN SOCIALIST SECULAR DEMOCRATIC REPUBLIC and to secure to all its citizens:

JUSTICE, social, economic and political; LIBERTY of thought, expression, belief, faith and worship;

EQUALITY of status and of opportunity;

and to promote among them all FRATERNITY assuring the dignity of the individual and the unity and integrity of the Nation

எல்லாக் குடிமக்களுக்கும் நியாயங்கள், நீதி என்கிற வார்த்தையைப் போட்டுவிட்டு, சமூகநீதிக்கு முன் னுரிமை; இரண்டாவது பொருளாதார நீதி; மூன்றாவது அரசியல் நீதி.

எனவே, இது மாற்றப்பட முடியாத அரசமைப்புச் சட்டத்தினுடைய அடிக்கட்டுமானமாகும்.

எந்த அரசாங்கமாக இருந்தாலும், இதை செய்தே தீரவேண்டும் என்பது கட்டளை. அது வேண்டுகோள் அல்ல.

எனவேதான், நாம் சமூகநீதியை, உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றங்களில் நமக்குத் தேவை என்று போராடு கின்றோம் என்று சொன்னால், அந்தப் போராட்டத்திற்கு அவசியம் இல்லாமலேயே அதனை செய்திருக்க வேண்டும். ஆனால், பார்ப்பனியத்திற்கு இதயம் கிடையாது; பார்ப்பனியத்திற்கும், மனிதாபிமானத்திற்கும் சம்பந்தம் கிடையாது. ஆரியத்திற்கும், நியாயத்திற்கும், நியதிக்கும் சம்பந்தம் கிடையாது.

அதைத்தான் மனோன்மணியம் சுந்தரனார் அழகாகச் சொன்னார் - மனுவாதி ஒரு குலத்துக்கொரு நீதி என்று.

‘திராவிட மாடல்’ ஆட்சியினுடைய 

முதல் கட்டம்தான் - வகுப்புவாரி உரிமை

நம்முடைய தலைவர்கள் போராடி, நீதிக் கட்சிக் காலத்திலிருந்து போராடி, திராவிட ஆட்சிக் காலத்திலிருந்து போராடி - இந்தியாவில் மற்ற மாநிலங்களில் இல்லாத காலத்தில், முதல் முறையாக, 1928 இல் திராவிடர் ஆட்சிதான் - ‘திராவிட மாடல்’ ஆட்சியினுடைய முதல் கட்டம் தான் - வகுப்புவாரி உரிமை என்பதைக் கொடுத்தது.

அதில்கூட பார்ப்பனர்களை நாம் வஞ்சிக்க வில்லை; பார்ப்பனர்களுக்கு இடம் கிடையாது என்று சொல்லவில்லை; உயர்ஜாதிக்காரர்களுக்கு இடம் கிடையாது என்று சொல்லவில்லை. நீங்கள் எந்த அளவு அனுபவிக்கிறீர்களோ, அதைவிட பல மடங்கு கொடுக்கிறோம் என்று சொல்லி, வகுப்புவாரி உரிமை என்ற அந்தக் கம்யூனல் ஜி.ஓ.வில் நண்பர்களே, மூன்று சதவிகித பார்ப்பனர்களுக்கு 16 சதவிகிதம் கொடுத்தார்கள்; 5 மடங்கு அதிகம் கொடுத்தார்கள்.

அதை எதிர்த்து ஏன் அவர்கள் வழக்குத் தொடுத்தார்கள்; அதுவும் ஒரு பொய்ப் பிர மாணத்தை ஒரு பார்ப்பன அம்மையார், நீதிமன் றத்தில் தாக்கல் செய்தார். அதற்காக அவர்மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்; ஆனால், அதைப் பற்றியெல்லாம் கவலைப்படவில்லை; அவர் களுக்கெல்லாம் சட்டம் வளைந்து கொடுக்கிறது. நம்மை மாதிரி இருப்பவர்கள்தான் மிலேச்சர்கள்; நாம்தான் சூத்திரர்கள்; நாம்தான் பஞ்சமர்கள்; நாம்தான் அடித்தளத்தில் இருக்கக்கூடியவர்கள்; ஆகவே, நாமெல்லாம் சண்டாளர்கள் - எனவே, நமக்குத்தான் தண்டனை உண்டே தவிர, அவர்களுக்கெல்லாம் கிடையாது.

அந்த கம்யூனல் ஜி.ஓ. வழக்கில், நூற்றுக்கு நூறு எங்களுக்கு வழங்கவேண்டும்; மற்றவர்களுக்குக் கொடுக்கக் கூடாது. காரணம் என்ன? சூத்திரர்கள் படிக்கக் கூடாது; எந்த ஜாதிப் பெண்களாக இருந்தாலும், பெண்கள் படிக்கக்கூடாது என்று சொன்னதினால்தான், பெரியார் போராடினார்.

முதல் அரசமைப்புச் சட்டத் திருத்தம் செய்து வழிகாட்டியது தமிழ்நாடு

அன்றைக்கு முதல் முறையாக அரசமைப்புச் சட்டம் திருத்தப்பட்டதினால்தான், தமிழ்நாட்டிலே மட்டும் இருந்த சமூகநீதி, கேட்காமலேயே வடபுல மாநிலங் களுக்கும், இந்தியா முழுவதும் உள்ள மாநிலங்களுக்கும் கிடைக்கக்கூடிய வகையில், முதல் அரசமைப்புச் சட்டத் திருத்தம் செய்து வழிகாட்டியது தமிழ்நாடு.

இதை சகோதரர் எழுச்சித் தமிழர் அவர்கள் இங்கே சொன்னார்கள்.

தமிழ்நாடுதான் கலங்கரை விளக்கம். தமிழ்நாடுதான் எதையும் முதலில் சொல்லக்கூடிய ஆற்றலும், முன்னோக்கும் கொண்டது.

அதைத்தான் தந்தை பெரியார் செய்தார். அவருக்கு ஒரு உறுப்பினர்கூட கிடையாது நாடாளுமன்றத்தில்.

நல்ல வாய்ப்பாக, ஜனநாயகவாதி பிரதமராக நேரு இருந்தார்; நல்ல வாய்ப்பாக சட்ட அமைச்சராக நம்முடைய புரட்சியாளர் டாக்டர் அம்பேத்கர் இருந்ததி னால், அரசமைப்புச் சட்ட முதல் திருத்தம் வந்தது.

தமிழ்நாட்டில்தான் 69 சதவிகித இட ஒதுக்கீடு, இந்தியாவிலேயே 9 ஆவது அட்டவணைப் பாதுகாப்பில்...

மற்ற இடங்களில் சமூகநீதி வந்திருக்கிறது. கல்வியில் இட ஒதுக்கீடு வந்திருக்கிறது. இன்னுங்கேட்டால், தமிழ் நாட்டில்தான் 69 சதவிகித இட ஒதுக்கீடு, இந்தியாவிலேயே 9 ஆவது அட்டவணைப் பாதுகாப்போடு இருக்கிறது.

இப்பொழுது மற்ற மாநிலங்களில் உள்ளவர்கள் எங்களுக்கு 9 ஆவது அட்டவணை பாதுகாப்பு வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

அண்டை மாநிலமான கருநாடக மாநிலத்தில் நடைபெறப் போகும் தேர்தலில், இதைச் சொல்லியாவது வாக்கு வாங்கலாமா? என்று பிஜேபியினர் தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறார்கள்.

எல்லாவற்றிற்கும் முன்னோடி நாம்தான்!

இப்பொழுதுதான் ஷெட்யூல் காஸ்டுக்கு 15 சதவிகிதம், 16 சதவிகிதம் கொடுக்கலாமா? என்று யோசித்துக் கொண்டிருக்கிறார்கள். தமிழ்நாட்டில் எத்த னையோ ஆண்டுகளுக்கு முன்பாக அவர்களுக்கு 18 சதவிகிதத்தைக் கொடுத்திருக்கிறோம்; எல்லாவற்றிற்கும் முன்னோடி நாம்தான்.

ஆனால், கல்வியில் இட ஒதுக்கீடு; வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு - எந்த அளவிற்கு செயல்பாட்டில் இருக்கிறது என்பது அது ஒரு தனி விவாதத்திற்குரியது. உதாரணமாக, மண்டல் அறிக்கையின்படி 27 சதவிகித இட ஒதுக்கீடு கொடுக்கவேண்டும் என்று நாம் போராடினோம். ஏட்டுச் சுரைக்காயாக 27 சதவிகிதம் என்று எழுதி, உத்தரவு போட்டிருக்கிறார்கள்.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் கேட்டால், வெறும் 11 சதவிகிதத்திலிருந்து 14 சதவிகிதம்தான் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினருக்கே கூட. மீதி 14 சதவிகிதம் யாருக்கு? உயர்ஜாதிக்காரர்களுக்குத்தான். இந்தத் தகவலை ஒன்றிய அரசே கொடுத்திருக்கிறது - தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில்.

எனவே, இது ஒரு பக்கத்தில் இருந்தாலும் நண்பர் களே, அங்கெல்லாம் இட ஒதுக்கீடு இருந்தாலும்கூட - ஜனநாயகத்தைப் பொறுத்தவரையில், 18 வயதுள்ள வர்களுக்கு வாக்குரிமை இருப்பதினால் வருகிறார்கள்.

மிக முக்கியமாகத் தேவை - நீதித் துறையில்தான் இட ஒதுக்கீடு தேவை

சட்டமன்றம்,  நாடாளுமன்றம் - நிர்வாகத் துறை இவற்றைவிட இட ஒதுக்கீடு எதற்கு மிக முக்கிய மாகத் தேவை என்றால், நீதித் துறையில்தான் இட ஒதுக்கீடு தேவை. ஏனென்றால், அதற்கு மிக எளிய விடை -  இந்த மேற்கண்ட இரண்டு துறைகளும் செய்யக்கூடியவற்றை சரியா? தவறா? என்று முடிவு செய்து - சிவப்பு மையினால் கோடு போட்டு அது செல்லுமா, செல்லாதா? என்று கூறும் சக்தி வாய்ந்த இடத்தில் நீதிமன்றங்கள் இருக்கின்றன.

நாம் அரும்பாடுபட்டு, ஆட்சியை உருவாக்கி, எல்லாவற்றையும் செய்தால், அவற்றை எதிர்த்து சிலர் நீதிமன்றத்திற்குச் செல்லும்பொழுது, தீர்ப்பு பல நேரங்களில் அவர்களுக்குச் சாதகமாக இருக்கிறது.

சாலையின் ஓரமாக இருக்கின்ற குடிசைகள்  போக்குவரத்திற்கு இடையூறாக இருக்கிறது எடுக்க வேண்டும் என்றால், பரவாயில்லை அகற்றி விடுங்கள் என்று சொல்கிறார்கள்.

சமமாக அல்லவா நீதி வழங்கவேண்டும்!

நடு சாலையில், பெரிய கல்லை வைத்து, அது கோவில் என்று சொல்லும்பொழுது, அது போக்கு வரத்திற்கு இடையூறாக இருக்கிறது; அதை அகற்ற வேண்டும் என்றால், ‘‘அய்யய்யோ அது கோவில், அதை இடிக்கக் கூடாது’’ என்று சொல்கிறார்கள்.

இதுதான் நீதியா? இரண்டிற்கும் சமமாக அல்லவா நீதி வழங்கவேண்டும்.

ஆகவேதான்,  நீதித் துறையில் இட ஒதுக்கீடு என்பது மிகமிக முக்கியம். ஏனென்றால், நிர்வாகத் துறையும், நாடாளுமன்றம், சட்டமன்றமும் கொண்டு வருகின்ற சட்டமும், போடுகின்ற ஆணையும் செல்லுமா? செல் லாதா? என்பதை முடிவு செய்யக்கூடிய சர்வ சக்தி வாய்ந்தது நீதிமன்றம்.

(தொடரும்)

சென்னை ஆர்ப்பாட்டத்தில் தமிழர் தலைவர் கேள்வி! (வள்ளுவர் கோட்டம்-11.2.2023)

   

நம்மவர்களுக்கு உச்சநீதிமன்றக் கதவு திறப்பதில்லை!

எங்கள் சமுதாயத்தில் வழக்குரைஞர்களுக்குப் பஞ்சமா? ஆற்றலாளர்களுக்குப் பஞ்சமா?

7

சென்னை, பிப்.17 நம்மவர்களுக்கு உச்சநீதிமன்றக் கதவு திறப்பதில்லை எங்கள் சமுதாயத்தில் வழக்குரைஞர் களுக்குப்  பஞ்சமா? ஆற்றலாளர்களுக்குப் பஞ்சமா? என்று வினா எழுப்பினார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

சமூகநீதிகோரி ஆர்ப்பாட்டம்!

கடந்த 11.2.2023 அன்று முற்பகல் 11 மணியளவில் சென்னை வள்ளுவர்கோட்டம் அருகே  உச்ச - உயர்நீதிமன்றங்களில் உயர்ஜாதி பார்ப்பன ஆதிக்கமா? தகுதி இருந்தும் ஒடுக்கப்பட்ட சமூக நீதிபதிகள் புறக் கணிக்கப்படுவது ஏன்?  என சமூகநீதி கோரி திராவிடர் கழகம் நடத்திய ஆர்ப்பாட்டத்தில்   திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி சிறப்புரையாற்றினார்.

அவரது சிறப்புரையின் நேற்றையத் தொடர்ச்சி வருமாறு:

மக்களின் கடைசி நம்பிக்கைதான் உச்சநீதிமன்றம்!

மக்களுக்கு நீதி கிடைக்கவில்லை என்றால் என்ன அர்த்தம்?

மக்களின் கடைசி நம்பிக்கைதான் உச்சநீதிமன்றம். தந்தை பெரியார் அவருக்கே உரித்தான முறையில் சொல்வார்; உச்சநீதிமன்றத்தினுடைய தீர்ப்புதான் எல்லோரையும் கட்டுப்படுத்தவேண்டிய தீர்ப்பு. அந்தத் தீர்ப்பையும் மாற்றலாம் என்பது வேறு. ஆனால், அந்தத் தீர்ப்புதான் இறுதியானது.

அதற்கு மேல் அப்பீல் செய்வதற்கு கோர்ட்டு இல்லை!

ஒருமுறை தந்தை பெரியார் சொன்னார், ‘‘கடைசி அறிவாளி அங்கேதான் இருக்கிறான் என்று அர்த்தம் இல்லை; ஆனால், ஏன் அதற்குக் கட்டுப்படுகிறோம் என்றால், அதற்கு மேல் அப்பீல் செய்வதற்கு கோர்ட்டு இல்லை’’ என்றார்.

அந்த நீதிபதிகள்தான் முடிவு செய்கிறார்கள். அதைத்தான் இங்கே சகோதரர் சுட்டிக்காட்டினார்.

உச்சநீதிமன்றத்தில் மொத்தம் 34 நீதிபதிகள். 29 நீதிபதிகள் இருந்தார்கள்; கொலீஜியம் முறையை வைத்துக்கொண்டு, நீதிபதி நியமனங்களை செய்தார்கள். இப்பொழுது கொலீஜியத்திற்கும், ஒன்றிய அரசுக்கும் மோதல் இருக்கிறது; அந்தப் பிரச்சினைக்குள் நாம் போகவேண்டிய  அவசியமில்லை.

உயர்நீதிமன்றத்திற்கு நீதிபதிகளை தேர்ந்தெடுக் கிறார்கள்; அவர்களுக்கு சம்பளம், மற்ற வசதிகள் போன்றவற்றை கொடுப்பது யார்? மாநில அரசு? மாநில அரசு நிதி அளிக்கிறது; அந்த நிதி யாருடையது? பெரும்பாலான மக்கள் வரிப் பணம்தான்.

ஆனால், மாநில அரசுக்கு நீதிபதிகளை யார் நியமனம் செய்வது?

நீதிபதிகளின் நியமனத்தில் மாநில  அரசின் ஒப்புதல் பெறவேண்டும் என்றுதான் அரசமைப்புச் சட்டத்தில் இருந்தது. அதை அப்படியே எடுத்துவிட்டார்கள். கன்கரண்ட் என்றால், ஒத்திசைவு. அதற்குப் பதிலாக, கன்சல்ட் என்ற வார்த்தையைப் போட்டார்கள்; இப் பொழுது அதுவும் போய்விட்டது.

நாடாளுமன்றத்திலும் சொன்னார்கள், இங்கேயும் விளக்கிச் சொல்லப்பட்டது. 

இட ஒதுக்கீடு இல்லையா? என்று கேட்டால், உச்சநீதிமன்றத்தில், உயர்நீதிமன்றங்களில் இட ஒதுக்கீடு கிடையாது என்று சொல்கிறார்கள்.

சட்டம் மக்களுக்காகவா? அல்லது மக்கள் சட்டத் திற்காகவா?

நாம் தவறான முறையில் கேட்கவில்லை; சட்டப் பூர்வமான முறையில் கேட்கிறோம்.

ஒரு சிறிய உதாரணம், சமூகநீதி, இட ஒதுக்கீடு மாவட்ட நீதிபதிகள் தேர்ந்தெடுக்கும் வரையில் இருக்கிறது.

அப்படியென்றால், உச்ச, உயர்நீதிமன்றங்களுக்குத் தேர்ந்தெடுக்கப்படும் நீதிபதிகளுக்கு தகுதி, திறமை பார்க்கவேண்டாமா?

தகுதி, திறமை உள்ளவர்கள்தானே மாவட்ட நீதிபதிகளாக வருகிறார்கள்? வழக்குரைஞர்களில் இருந்து சில பேர்; நீதிபதிகளில் கொஞ்சம் பேரை தேர்ந் தெடுத்துத்தானே உயர்நீதிமன்றங்களுக்கும், உச்சநீதி மன்றத்திற்கும் அனுப்புகிறார்கள்; அப்படியென்றால், அதில் சமூகநீதி இருக்கவேண்டும் அல்லவா!

இரண்டாவது கேள்வி என்னவென்றால்,  ஒரே நேரத்தில் இவருக்கு ஒரு நீதி; அவருக்கு ஒரு நீதி; அதுதான் மனுநீதி. ஒரு குலத்துக்கொரு நீதி போன்று.

நாங்கள் பதில் சொல்வதற்குத் தயாராக இருக்கிறோம்

மாவட்ட நீதிபதி வரையில் இட ஒதுக்கீடு உண்டு. உயர்நீதிமன்ற நீதிபதி நியமனங்களில் இட ஒதுக்கீடு கூடாது என்று அரசமைப்புச் சட்டத்தை எடுத்துக் காட்டட்டும் பார்க்கலாமே! அல்லது அரசமைப்புச் சட்டத்தின் இந்தப் பிரிவின்கீழ் இட ஒதுக்கீடு கொடுக்க முடியாது என்று சொல்லட்டுமே! அதற்கு நாங்கள் பதில் சொல்வதற்குத் தயாராக இருக்கிறோம்.

இவர்களே உருவாக்கிக் கொண்டதுதான் இது. பெரியார்தான் கேட்பார், தலைக்கு ஒரு சீயக்காய்; தாடிக்கொரு சீயக்காயா? என்று.

இதுவரையில் உண்டு; அதற்குமேல் கிடையாது என்று அரசமைப்புச் சட்டத்தில் எந்த இடத்திலும் கிடையாது.

ஆகவே, அவர்கள் உருவாக்கிக் கொண்டதுதான் இது. எனவேதான் கேட்கிறோம், உயர்நீதிமன்றத்தில் ஏன் எங்களுடைய பங்களிப்பு இல்லை என்று.

ஜனநாயகம் என்று சொன்னால், சமூகநீதி அனை வருக்கும். அந்த சமூகநீதி இன்றைக்கு உச்ச, உயர்நீதி மன்றங்களில் இல்லாததினால்தான், உச்சநீதிமன்றத்தில் உள்ள நீதிபதிகள் 34 இடங்களில், 32  இடங்களை நிரப்பிவிட்டார்கள்.

ஒரே ஒரு ஆள் ஷெட்யூல்ட் காஸ்ட் சமுதாயத்தைச் சேர்ந்தவர் இருக்கிறாரா?

எங்கள் ஆட்களுக்குத் தகுதியில்லையா?

யாரை வேண்டுமானாலும் நீதிபதியாக போட முடியுமா? என்று நம்மாளே - விபீஷணர்களே கேள்வி கேட்கிறார்கள்.

‘‘ஏங்க, யாரை வேண்டுமானாலும் நீதிபதியாக போடலாமா?’’ என்று.

யாரை வேண்டுமானாலும் நீதிபதியாக நியமிக்கச் சொல்லவில்லை; தெருவில் போறவரை நீதிபதியாக ஆக்கவேண்டும் என்று சொல்லவில்லை.

ஓர் உதாரணத்திற்குச் சொல்கிறேன்; இங்கே இருந்த மணிக்குமார் என்ற மூத்த நீதிபதி கேரள மாநில உயர்நீதிமன்றத்திற்குத் தலைமை நீதிபதியாக போனார்; பல ஆண்டுகளாக தலைமை நீதிபதியாக இருக்கிறார்;  இன்னமும் இருக்கிறார்; தலைமை நீதிபதிகளைத்தான் உச்சநீதிமன்ற நீதிபதிகளாகத் தேர்ந்தெடுக்கிறார்கள். அப்படியென்றால், இவருடைய பெயரை ஏன் உச்சநீதி மன்ற நீதிபதியாவதற்குப் பரிந்துரைக்கவில்லை. மற்றவர் கள் பெயர்கள் போயிருக்கிறதே?

என்மீது வழக்குத் தொடர்ந்தாலும் பரவாயில்லை!

சீனியாரிட்டி முறையில்தான் நாங்கள் நீதிபதிகளை நியமித்தோம் என்று சொல்ல முடியுமா? அந்த முறையில்தான் நீதிபதிகளை நியமித்தோம் என்று சொல்ல முடியுமா?

என்மீது வழக்குப் போடட்டும்; இன்னும் பச்சையாக அம்பலப்படுத்துவதற்குத் தயாராக இருக்கிறோம். துணிந்துதான் பேசுகிறோம்.

முடிவு செய்துவிட்டு போர்க் களத்திற்கு  வந்து விட்டால், துப்பாக்கி வைத்துக்கொண்டு, அப்படி இப்படி பார்த்துக் கொண்டு நிற்க முடியுமா?

துப்பாக்கிக் குண்டு நம்மீது பாய்ந்தாலும் பரவாயில்லை என்று நிற்பவன்தான் போர் வீரன். அந்தப் போர்க் களத்தை நோக்கி வந்திருக்கிறவர்கள்தான் இங்கே வந்திருப்போர்.

நம்முடைய சமுதாயத்தைச் சார்ந்தவர்கள், ஒடுக் கப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், சிறுபான்மையினர் ஆகிய சமுதாயத் தைச் சேர்ந்தவர்கள் நீதிபதிகளாக ஆவதைத் தடுக்க  ஓர் ஆயுதம் வைத்திருக்கிறார்கள்.

அது என்னவென்றால், சீனியாரிட்டியாம். அதற்குப் பிறகு தகுதி, திறமையாம்?

சீனியாரிட்டி என்று பார்த்தால், தமிழ்நாட்டிலிருந்து உயர்நீதிமன்றத்திலிருந்து இரண்டு பேர் போனார்கள்.

உதாரணத்திற்குச் சொல்கிறேன், ஏதோ ஒரு கற்பனையாக நான் இதைப் பேசவில்லை.

தமிழ்நாட்டிலிருந்து மூத்த நீதிபதிகளை, தலைமை நீதிபதிகளைத்தான் உச்சநீதிமன்ற நீதிபதியாக தேர்ந் தெடுக்கிறார்கள்.

இங்கே இருந்த சுதாகர் இராமலிங்கம் என்பவரை மணிப்பூர் உயர்நீதிமன்றத்திற்கு மாற்றுகிறார்கள். 

கிறித்துவ சமுதாயத்தைச் சார்ந்த பால் வசந்தகுமார்

அதேபோன்று காஷ்மீர் நீதிமன்றத்திற்கு நீதிபதியாக போகமாட்டோம் என்று பல நீதிபதிகள் மறுப்புத் தெரிவித்து வந்தார்கள். அந்த இடத்திற்கு இங்கே இருந்து பால் வசந்தகுமார் என்பவர் கிறித்துவ சமுதாயத்தைச் சார்ந்த பிற்படுத்தப்பட்டவர்.

அவர் அங்கு சென்று, காஷ்மீர் உயர்நீதிமன்றத்திற்குத் தலைமை நீதிபதியாக சிறப்பாகப் பணியாற்றினார்.

இந்த இரண்டு பேரும் உச்சநீதிமன்ற நீதிபதிகளாக ஆகியிருக்கவேண்டும்.

நியாயத்தைத்தான் நான் சொல்கிறேன். மற்றவர்கள் மறுத்த இடத்திற்கு, இவர்கள் நீதிபதிகளாகச் சென்றனர்.

நீதிபதி மணிக்குமார் அவர்கள் 13 ஆவது இடத்தில் இருந்த நிலையில், 23 ஆவது வரிசையில் இருந்த இந்த ஊர் அய்யர் டபக்கென்று மேலே வந்து உட்கார்ந்து விட்டார்.

தனிப்பட்ட முறையில் யார்மீதும் எங்களுக்கு விருப்பு வெறுப்பு கிடையாது. ஆனால், நியாயங்களைப்பற்றி பேசும்பொழுது கண்டிப்பாக அதைக் கண்டிப்போம்.

உச்சநீதிமன்ற கதவு திறப்பதில்லை!

நம்மவர்கள் உயிரைப் பிடித்துக்கொண்டு, வட மாநிலங்களுக்குச் சென்று ஆபத்தான இடங்களுக்குச் சென்று பணியாற்றினாலும்கூட, உச்சநீதிமன்ற நீதிபதி களாக ஆகின்ற வாய்ப்பு  கிடையாது. உச்சநீதிமன்ற கதவு திறப்பதில்லை.

உச்சநீதிமன்றத்தில் உள்ள 34 பணியிடங்களும் நிரப்பப்பட்டன. அதில் 30 இடங்களில் உயர்ஜாதி சமூகத் தைச் சேர்ந்தவர்கள் உள்ளனர். யாருடைய வரிப் பணத்தை அவர்கள் சம்பளமாகப் பெறுகிறார்கள். அதைத்தான் சகோதரர் எழுச்சித் தமிழர் இங்கே சொன்னார்.

இப்பொழுது உச்சநீதிமன்றத்தில் உயர்ஜாதி சமூகத் தைச் சேர்ந்தவர்கள் 30 பேர் நீதிபதிகளாக இருக்கிறார்கள். யாருடைய  வரிப் பணம்? நியாயம் வேண்டாமா?

அவர்களுடைய தீர்ப்பு எப்படி இருக்கிறது என்பது மிகத் தெளிவாகத் தெரியுமே?

வன்னியர்களுக்கோ, மற்றவர்களுக்கோ உள் பிரிவு இட ஒதுக்கீடு சட்டம் வருகிறது என்று சொன் னால், அது செல்லுமா? செல்லாதா? என்று அந்த வழக்கு உச்சநீதிமன்றத்திற்குச் சென்றவுடன்,  அங்கே இருக்கும் நீதிபதிகள் என்ன கேட் கிறார்கள்?

புள்ளி விவரம் திரட்டியிருக்கிறீர்களா?

இதற்கு முன்பு ஏதாவது கணக்கு எடுத்திருக்கிறீர்களா?

கணக்கே எடுக்கவில்லை என்றால், எப்படி இந்த வழக்கைத் தொடுத்திருக்கிறீர்கள்? என்று கேட்கிறார்கள்; சரிதான்.

அவர்களுக்கு வசதியாக இருந்தால், எதை வேண்டுமானாலும் கண்டு கொள்ளாமல் விடுவார்கள்

ஆனால், அதேபோன்றதுதானே உயர்ஜாதியில் பொருளாதாரத்தில் நலிந்தோருக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு. அதற்கு ஏதாவது கேள்வி கேட்டார்களா?

அவர்களுக்கு வசதியாக இருந்தால், எதை வேண்டு மானாலும் கண்டு கொள்ளாமல் விடுவார்கள்; மற்றவர் களை கீழே தள்ளவேண்டுமானால், அதற்குரிய கணக்குகளை கேட்போம் என்பதா?

இதுதானே மனுநீதி.

அந்த மனுநீதிக்கு முற்றுப்புள்ளி வைக்கவில்லை என்றால், ஜனநாயகம் தழைக்குமா? மக்களாட்சி தழைக்குமா?

எனவேதான் தோழர்களே, அனைவருக்கும் அனைத்தும் என்பதுதான் சமூகநீதி.

மற்றவர்களுக்குக் கொடுக்காதே என்று நாங்கள் சொல்லவில்லை. மற்றவர்களை விட்டுவிடுங்கள் என்று நாங்கள் சொல்லவில்லை.

‘‘அனைவருக்கும் அனைத்தும்’’ - இந்த அனை வருக்கும் அனைத்தும் இருக்கிறதா? என்பதுதான் இப்போதைய கேள்வி.

ஆகவேதான், நீதிமன்றங்களில் நீதிபதிகள் நியமனங்களில் இட ஒதுக்கீடு வேண்டும் என்று கேட்கிறோம்.

பா.ஜ.க.  நாடாளுமன்ற உறுப்பினர் சுஷில் மோடியின் கேள்வி!

உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனம் குறித்து கணக்கெடுத்தோம் என்றால், இதற்கான பிரச்சினையில், பீகாரைச் சேர்ந்த பா.ஜ.க.  நாடாளுமன்ற உறுப்பினர் சுஷில் மோடி கேள்வி கேட்டார்.

நீதிமன்ற நீதிபதிகள் நியமனங்களில் கடந்த 5 ஆண்டுகளில் சமூகநீதி எப்படி இருக்கிறது? என்று.

அதற்கான பதிலலை அத்துறை அமைச்சர் சொல்கிறார்,

Last 5 years, 79% of new High Court judges all from upper caste. 

இந்தியா முழுக்க உள்ள உயர்நீதிமன்றங்களில், 79 சதவிகிதம் உயர்ஜாதியைச் சேர்ந்த பார்ப்பனர்கள்தான்.

எங்கள் சமுதாயத்தில் வழக்குரைஞர்களுக்குப் பஞ்சமா? ஆற்றலாளர்களுக்குப் பஞ்சமா?

இது என்ன நியாயம்? சிந்திக்கவேண்டாமா?

ஒரு காலத்தில் படிக்கக் கூடாது என்று சொன் னீர்கள்; மீறி படித்தோம்.

எங்கள் சமுதாயத்தில் வழக்குரைஞர்களுக்குப் பஞ்சமா? ஆற்றலாளர்களுக்குப் பஞ்சமா? இன்னுங்கேட்டால், நீதிபதிகள்மேல் வழக்கு வந்தது அல்லது அந்த நீதிபகளின்மீது புகார்கள் வந்தன என்று சொன்னால், உயர்ஜாதியைச் சேர்ந்த நீதிபதிகள்தான் ஊழல் செய்திருக்கிறார்கள் என்று புகார் வந்திருக்கிறதே தவிர, ஒடுக்கப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த நீதிபதி தவறு செய்தார் என்று இதுவரையில் புகார் கிடையாது.

இதுகுறித்து பேசவேண்டுமானால், மணிக் கணக்கில் பேசிக் கொண்டிருக்கலாம்.

தந்தை பெரியாரின்  ‘‘நீதி கெட்டது யாரால்?’’

தந்தை பெரியார் அவர்கள், ‘‘நீதி கெட்டது யாரால்?’’ என்ற தலைப்பில் ஒரு புத்தகத்தை எழுதியிருக்கிறார்; அதை வாங்கிப் படித்தால் உங்களுக்கு இன்னும் தெளிவாக பல உண்மைகள் புரியும்.

ஆகவே, பீகாரைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் எழுப்பிய கேள்விக்கு அத்துறை அமைச்சர் இவ்வாறு பதில் சொல்லியிருக்கிறார்:

Last 5 years, 79% of new High Court judges all from upper caste.

The Ministry’s Department of Justice is learnt to have made a presentation in this regard before the panel headed by BJP MP Sushil Modi.

இதற்கு முன்பு இரண்டு தலைமை நீதிபதிகளுக்கு சமூகநீதி வாய்ப்புக் கொடுக்கவில்லை என்பதைப்பற்றி நாங்கள் சொல்லியிருக்கின்றோம். 

எங்கே சமூகநீதி?

பேச்சு அளவில் மட்டும்தான்!

நடைமுறையில் வரும்பொழுது, அப்படி நடப்பது இல்லை.

தகுதி திறமைக்கான போராட்டம்தான்.

பிச்சையல்ல - சலுகையல்ல - உரிமைப்படி கொடுங்கள் என்று கேட்பதற்குத்தான் இந்தப் போராட்டம்!

எந்த நீதிபதிகள்மீதும் தனிப்பட்ட விரோதமல்ல - அல்லது எங்களுடைய சொந்தக்காரர்களுக்கு நீதிபதி பதவியை கொடுங்கள் என்று கேட்பதல்ல.

முழுக்க முழுக்க தகுதியுள்ள ஒடுக்கப்பட்ட சமு தாயத்தைச் சார்ந்தவர்களுக்கு பிச்சையல்ல - சலுகை யல்ல - உரிமைப்படி கொடுங்கள் என்று கேட்பதற்குத் தான் இந்தப் போராட்டம்!

இது ஒரு தொடக்கம் - இது முடிவல்ல!

தமிழ்நாடு முழுவதும் இப்போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

ஆகவேதான், இந்த நிலையில், நீங்கள் எல்லாம் இங்கே வந்து சிறப்பிக்கக் கூடிய இந்த வாய்ப்பு.

சென்னை உயர்நீதிமன்றத்திற்கு நீதிபதியாக நியமிப் பதற்கு முன்பே ஒருவர்மீது புகார்கள், வழக்கு. இதை யெல்லாம் தாண்டி அவர் நீதிபதியாக பதவியேற்றுக் கொண்டார்.

அவர்களுடைய தந்திரம் என்னவென்றால், பார்ப் பனரல்லாதாருக்கும்தான் வாய்ப்புக் கொடுத்திருக்கி றோமே, பிறகு ஏன் அந்த நீதிபதியை பதவியேற்கக் கூடாது என்று சொல்கிறீர்கள்? என்று தந்திரமாக கேட்கின்றனர்.

நம்முடைய ஆட்களும் புரியாமல் என்ன கேட் கிறார்கள்;  ஏங்க இப்படியெல்லாம் செய்யுறீங்க? என்று.

முழுக்க முழுக்க ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி., உணர்வாளராக இருக்கிறாரா? என்றுதான் பார்க்கிறார்கள்!

இப்பொழுது ஒன்றியத்தில் நடைபெறுகின்ற பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். ஆட்சியில், எதை முக்கியமாகப் பார்க் கிறார்கள் என்றால், ஒருவர் பார்ப்பனராக இருக்கிறாரா? என்பதுகூட முக்கியமல்ல; முழுக்க முழுக்க ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி., உணர்வாளராக இருக்கிறாரா? என்பதுதான் மிகவும் முக்கியம்.

இதுகுறித்து யாராவது நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினால், அவர்களுக்கே உறுத்துவதால்தான், நல்ல விஷயங்களை யார் சொன்னாலும், அதை அவைக் குறிப்பிலிருந்து நீக்கி விடுகிறார்கள்.

ஏனென்றால், நிகழ்காலத்தில் மட்டுமல்ல, எதிர் காலத்தில்கூட இது தெரியக்கூடாது.

எனவேதான் நண்பர்களே, இந்தப் போராட்டம் என்பது மிகவும் தேவை.

நாம் எடுத்த எந்தக் காரியமும் தோற்றுப் போனதே கிடையாது. வெற்றி வேண்டுமானால், கொஞ்சம் தள்ளி வரும்!

தந்தை பெரியார், ஒரு வரதராசுலுவைக் கொண்டு வந்தார். நாம் சோர்ந்து போக வேண்டிய அவசியமில்லை. இதுவரையில், நாம் எடுத்த எந்தக் காரியமும் தோற்றுப் போனதே கிடையாது. வெற்றி வேண்டுமானால், கொஞ்சம் தள்ளி வரும்.

அது அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆக வேண்டும் பிரச்சினையாக இருந்தாலும் சரி, மண்டல் அறிக்கையாக இருந்தாலும் சரி.

சமூகநீதிக் காவலர் பிரதமர் வி.பி.சிங்கின் உறுதி!

மண்டலைப்பற்றி நம்முடைய சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் அவர்கள் சொல்லும்பொழுது, ‘‘சமூகநீதிக்காக ஒருமுறை அல்ல 9 முறைகூட பிரதமர் பதவியை இழக்கத் தயாராக இருக்கிறேன்’’ என்று.

அப்பொழுதுதான் மண்டலுக்கும் - கமண்டலுக்கும் போட்டி என்ற அளவிற்கு வந்தது.

இன்றைக்கு ஒரு மாறுதல் ஏற்பட்டு இருக்கிறது. இன்றைக்கு நம்முடைய பிள்ளைகள் வரக்கூடிய அள விற்கு வந்திருக்கிறது. தொடர்ந்து போராடவேண்டும்.

தொடர்ந்து போராடினால்தான் உரிமை கிடைக்குமே தவிர, நாம் வாயை மூடிக்கொண்டு சும்மா இருந்து, ‘‘எல்லாம் பகவான் விட்ட வழி’’ என்று இருந்தால், அது ‘‘பகவான் விட்ட வழியாக இருக்காது; பார்ப்பான் விட்ட வழியாகத்தான் போகுமே தவிர’’ வேறு இருக்காது.

அதற்கான போராட்டம் தமிழ்நாடு முழுவதும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மேலும் இது தொடரும்.

கழகத் துணைத் தலைவர் அவர்கள் சொன்னார்களே, ‘‘இங்கே பேசிவிட்டு, நாங்கள் தப்பித்துப் போகவேண்டும் என்று நினைக்கவில்லை; இதற்காக தண்டைன கொடுத்தாலும் பரவாயில்லை’’ என்று.

பெரியார் சொன்னார், ‘‘பார்ப்பனர்கள் நீதிபதியாய், நிர்வாகத்தவராய் இருக்கும் நாடு கடும் புலி வாழும் காடேயாகும். புலி மேலே பாய்ந்தால், நாங்கள் புலி வேட்டை ஆடுகிறோம்; புலியை தனிப்பட்ட முறையில் அல்ல - புலி ஆதிக்கம் செய்ய நினைத்தால், அதை அழிப்போம்; கடிபட்டால் நாங்கள் சாகத் தயாராக இருக்கிறோம்’’ என்றார்.

குறுகிய காலத்தில் போராட்டத்தை ஏற்பாடு செய்தவர்களுக்கு நன்றி!

இப்படித் துணிந்தால்தான், வருங்கால சமுதாயமாவது நீதிக்கும், நேர்மைக்கும் ஆட்பட்டு, தங்களுடைய உரிமையை நிலை நிறுத்த முடியும். இவ்வளவு குறுகிய காலத்தில் ஏற்பாடு செய்யப்பட்டு, இவ்வளவு சிறப்பாக ஏற்பாடு செய்தவர்களுக்கு நன்றி தெரிவித்து, இந்தப் போராட்டம் தொடரும் என்று கூறி,  என்னுரையை முடிக்கின்றேன்.

வாழ்க சமூகநீதி!

வளர்க நம்முடைய உரிமை வேட்கை உணர்வு!

தோழமைக் கட்சிகளுக்கும் மனமார்ந்த உளப்பூர்வமான நன்றி!

குறுகிய காலத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட இப் போராட்டத்திற்கு வந்த நம்முடைய எழுச்சித் தமிழர் அவர்களுக்கும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சார்ந்த வீரபாண்டியன் அவர்களுக்கும் என்னுடைய மன மார்ந்த உளப்பூர்வமான நன்றியைத் தெரிவித்து விடைபெறுகிறேன்.

நன்றி, வணக்கம்!

- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலை வர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.

"ஓபிசி வாய்ஸ்" மாத இதழ் வெளியீட்டு விழாவில் தமிழர் தலைவர் வழிகாட்டும் உரை!

  

இது வெறும் காகிதம் அல்ல, ஆயுதம்! 

அதைப் பயன்படுத்தி அனைவரும் வளர வேண்டும்!

4

சென்னை, மே 2- "ஓபிசி வாய்ஸ்" மாத இதழ் வெளியீட்டு விழாவில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.  வீரமணி அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார்.

"ஓ.பி.சி வாய்ஸ்" மாத இதழ் வெளியீடு!

எம்பவர் (Empower)  அறக்கட்டளை சார்பாக, சென்னை இராயப்பேட்டையில் உள்ள இந்திய அலுவலர்கள் சங்கக் கட்டடத்தில், 1.5.2023 அன்று மாலை 6.30 மணி அளவில், AIOB சார்பில், "ஓபிசி வாய்ஸ்" மாத இதழ் வெளியீட்டு விழா,  அமைப்பின் தலைவர் கோ. கருணாநிதி தலைமையில் நடைபெற்றது. பொதுச் செயலாளர் எஸ்.நடராஜன் அனைவரையும் வரவேற்று பேசினார். 

மேனாள் நாடாளுமன்ற உறுப்பினர் டி.கே.எஸ். இளங்கோவன், சட்டமன்ற உறுப்பினர் எழிலன் நாகநாதன், மூத்த பத்திரிகையாளர் கோவி.லெனின், யூனியன் வங்கியின் சென்னை மண்டல பொது மேலாளர் ஆர்.விஸ்வேஸ்வரன், கூட்டமைப்பின் துணைத் தலைவர் வி.என்.புருசோத்தமன் (நெய்வேலி - என்எல்சி ஓபிசி சங்கம்) ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

சமூக நீதியை வென்றெடுக்க வேண்டும்!

முன்னதாக "ஓ.பி.சி.  வாய்ஸ்" மாத இதழை திராவிடர் கழகத்தின் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் வெளியிட, யூனியன் வங்கியின் சென்னை மண்டல பொது மேலாளர் விஸ்வேஸ்வரன் முதல் இதழை பெற்றுக் கொண்டார். இதழினை வெளியிட்டுப் பேசிய ஆசிரியர் அவர்கள், 'இது Voice of voiceless'  என்று கவித்துவமாக இதழை உருவகப்படுத்தினார். மேலும் அவர், ‘தேவையான நேரத்தில் தேவையான ஒன்று வெளியிடப்பட்டிருக்கிறது' என்றும்  பாராட்டி னார். தொடர்ந்து, இதழை நடத்துவதில் உள்ள சிக்கல்களைப் பற்றிக்  குறிப்பிட்டார். இதைப் பற்றி தந்தை பெரியார், 'ஒருவருக்கு யானையை பரிசாக கொடுத்தது போல, பத்திரிகை நடத்துவது அவ்வளவு சிரமம்' என்று நகைச்சுவை ததும்ப சொன்னதை சுட்டிக்காட்டி, யானையைக் கட்டி தீனி போடுவதைப் போல ஒரு பத்திரிகை நடத்துவது என்பதை உடனடி யாகப் புரிய வைத்தார். ‘ஆனாலும் இங்கே, 1000 பிரதிகள் அச்சடிக்க முடிவு செய்து, நீங்கள் கொடுத்த ஆதரவினால் 2500 பிரதிகள் அச்சடிக்கப்பட்டுள்ளதைக் காணும் போது,  இந்த இதழ் உங்கள் ஆதரவுடன் நிச்சயம் வெற்றி பெறும் என்பதை வெளியீட்டு விழாவிலேயே நீங்கள் காட்டியிருக்கிறீர்கள்' என்று பார்வையாளர்களாக இருப்பவர்களையும் பாராட்டி னார். 

தொடர்ந்து அவர் பேசும்போது, 'இது வெறும் காகிதம் அல்ல, ஆயுதம்! இதைப் பயன்படுத்தி அனைவரும் வளர வேண்டும்! என்றும், ‘அந்த ஆயுதத்தை பயன்படுத்தி இந்த அமைப்பு இந்தியா முழுமைக்கும் சமூக நீதியை வென்றெடுக்கவேண்டும்' என்றும் வாழ்த்தி விடை பெற்றுக் கொண்டார்.

கலந்துகொண்டு சிறப்பித்தவர்கள்!

7
நிகழ்வில் தென்சென்னை கழக மாவட்ட தலைவர்  இரா. வில்வநாதன், செயலாளர் செ.ர.பார்த்தசாரதி, மு.சண் முகப்பிரியன், கொடுங்கையூர் கோ.தங்கமணி, தங்க.தனலட்சுமி, வழக்குரைஞர்கள்  ஆ.வீரமர்த்தினி, த.கனிமொழி, சோ.சுரேஷ், திராவிட மாணவர் கழக மாநில செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு  பெரியார், ஆவடி மாவட்ட அமைப்பாளர் உடுமலை வடிவேல், கமலேஷ் மற்றும் யூனியன் வங்கி அதிகாரிகள், அலுவலர்கள், பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித் தனர்.

கூட்டமைப்பின் துணைப் பொதுச் செயலாளர் எம்.பாக்யராஜ் நன்றி கூறினார்.

செவ்வாய், 2 மே, 2023

சென்னை மாநிலக் கல்லூரியில் தமிழறிஞர் அவ்வை நடராசன் அவர்களின் படத்தை திறந்து வைத்து நினைவேந்தல் உரை

  

சென்னை மாநிலக் கல்லூரியில் தமிழறிஞர் அவ்வை நடராசன் படத்தினை தமிழர் தலைவர் திறந்து வைத்தார்

23

சென்னை மாநிலக் கல்லூரியில் மேனாள் மாணவர் சங்கம் சார்பில் இன்று (24.4.2023) நடைபெற்ற தமிழறிஞர் அவ்வை நடராசன் அவர்களின் பிறந்த நாள் விழாவில் திராவிடர் கழகத் தலைவர், ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் அவ்வை நடராசன் அவர்களின் படத்தை திறந்து வைத்து நினைவேந்தல் உரையாற்றினார். இந்நிகழ்வில் வி.ஜி. சந்தோஷ,ம், சாரதா நம்பி ஆரூரான்,  தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் ந.அவ்வை அருள்,  சென்னை மாநில கல்லூரி முதல்வர் முனைவர் இரா. இராமன், மேனாள் நாடாளுமன்ற உறுப்பினர் தி.கோ.சீ. இளங்கோவன், திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன், பிரச்சாரச் செயலாளர் அ. அருள்மொழி, மற்றும் பலர் பங்கேற்று சிறப்பித்தனர்.