புதன், 3 மே, 2023

சட்டமன்றம், நாடாளுமன்றம், நிர்வாகத் துறைகளைவிட நீதித் துறையில்தான் இட ஒதுக்கீடு மிக முக்கியமாகத் தேவை!

  

 சமூகநீதி என்பது பிச்சையல்ல - சலுகை அல்ல - நமது உரிமை!

சென்னை ஆர்ப்பாட்டத்தில் தமிழர் தலைவர் முழக்கம்!

13

சென்னை, பிப்.16 சட்டமன்றம்,  நாடாளுமன்றம் - நிர்வாகத் துறை இவற்றைவிட இட ஒதுக்கீடு எதற்கு மிக முக்கியமாகத் தேவை என்றால், நீதித் துறையில்தான் இட ஒதுக்கீடு தேவை. ஏனென்றால், அதற்கு மிக எளிய விடை -  இந்த மேற்கண்ட இரண்டு துறைகளும் செய்யக்கூடியவற்றை சரியா? தவறா? என்று முடிவு செய்து - சிவப்பு மையினால் கோடு போட்டு அது செல்லுமா, செல்லாதா? என்று கூறும் சக்தி வாய்ந்த இடத்தில் நீதிமன்றங்கள் இருக்கின்றன என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

சமூகநீதிகோரி ஆர்ப்பாட்டம்!

கடந்த 11.2.2023 அன்று முற்பகல் 11 மணியளவில் சென்னை வள்ளுவர்கோட்டம் அருகே  உச்ச - உயர்நீதிமன்றங்களில் உயர்ஜாதி பார்ப்பன ஆதிக்கமா? தகுதி இருந்தும் ஒடுக்கப்பட்ட சமூக நீதிபதிகள் புறக் கணிக்கப்படுவது ஏன்?  என சமூகநீதி கோரி திராவிடர் கழகம் நடத்திய ஆர்ப்பாட்டத்தில்   திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி சிறப்புரையாற்றினார்.

அவரது சிறப்புரை வருமாறு:

சமூக அநீதிக் கொடியை இறக்கிவிட்டு - சமூகநீதிக் கொடியை ஏற்றவேண்டிய காலம் நெருங்கிவிட்டது!

மிகக் குறுகிய காலத்தில், உயர்நீதிமன்றம், உச்சநீதி மன்றம் ஆகியவற்றில் சமூக நீதி கொடி பறக்கவேண்டும்; இங்கே சமூகநீதிக்கு இடமில்லாத, சமூக அநீதிக் கொடி பறந்துகொண்டிருக்கின்றது. அந்த சமூக அநீதிக் கொடியை இறக்கிவிட்டு, சமூக நீதிக் கொடியை ஏற்றவேண்டிய நாள் நெருங்கிவிட்டது என்பதற்கு அடையாளமாகத்தான், அண்மையில் நடந்த பல்வேறு நியமனங்கள்; அந்த நியமனங்களுக்குள் ஏற்பட்டி ருக்கின்ற பல்வேறு போட்டிகள்; அங்கே நிகழ்ந்துள்ள உயர்ஜாதி ஆதிக்க நிலை; நம்மவர்களுக்குக் கதவு சாத்தப்படக் கூடிய ஒரு பேராபத்து - இவற்றையெல்லாம் விளக்கி, தமிழ்நாடு முழுவதும் இன்றைக்குத் திராவிடர் கழகமும், அதேபோல, கழகத்தினுடைய மூன்றாவது குழலாக எப்பொழுதுமே இருக்கக்கூடிய நம்முடைய எழுச்சித் தமிழர் தலைமையில் இயங்கக்கூடிய விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பும், அதேபோல நம்முடைய இடதுசாரி தோழர்கள் கொள்கைப் பயணத் தோழர்கள் என்பதில், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எப்போதும் நம்மில் ஒருவராக இருக்கக்கூடியவர்கள் என்பதற்கு அடையாளமாக இடதுசாரிகளின் சார்பாக இங்கே உரையாற்றிய நம்மு டைய மாநில துணைச் செயலாளர் வீரபாண்டியன் அவர்களே,

இந்நிகழ்வில் எனக்கு முன் உரையாற்றிய கழகத் துணைத் தலைவர் அவர்களே, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மத்திய சென்னை மாவட்ட செயலாளர் செல்வம் அவர்களே,

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளரும், சீரிய கொள்கையாளருமான அருமைத் தோழர் தழிழரசன் அவர்களே,

திராவிடர் கழகப் பொருளாளர் குமரேசன் அவர் களே, கழக வெளியுறவுச் செயலாளர் கோ.கருணாநிதி அவர்களே,

இந்நிகழ்வில் கலந்துகொண்டு வரவேற்புரையாற்றிய திராவிடர் கழக வழக்குரைஞரணி தலைவர் சென்னை உயர்நீதிமன்ற வழக்குரைஞர் த.வீரசேகரன் அவர்களே,

திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் ஜெயக்குமார் அவர்களே, மாநில அமைப்பாளர் குணசேகரன் அவர்களே, அமைப்புச் செயலாளர் பன்னீர்செல்வம் அவர்களே,

வழக்குரைஞரணி மாநில துணைத் தலைவர் வழக்குரைஞர் ராஜசேகரன் அவர்களே, மாநில துணைத் தலைவர் வழக்குரைஞர் திருப்பூர் பாண்டியன் அவர் களே, வழக்குரைஞர் நம்பியூர் சென்னியப்பன் அவர் களே, தம்பி பிரபாகரன் அவர்களே, மணியம்மை அவர்களே, சண்முகப்பிரியன் அவர்களே,  தளபதி பாண்டியன் அவர்களே, சுரேஷ் அவர்களே, துரை அருண் அவர்களே,  திராவிடர் கழகத் துணைப் பொதுச் செயலாளர் ச.இன்பக்கனி அவர்களே,

திராவிட மாணவர் கழக மாநில செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார் அவர்களே,  மாநில இளைஞரணி செயலாளர் சேகர் அவர்களே,

மற்றும் இங்கு பல்வேறு அமைப்புகளிலிருந்து வந்தி ருக்கக் கூடிய அருமை நண்பர்களே, போராட்டக் களத்தில் இருக்கக்கூடிய அருமைப் போராளிகளான சக தோழர்களே, ஊடகச் செய்தியாளர்களான அருமை நண்பர்களே உங்கள் அனைவருக்கும் வணக்கத்தினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

விரிவாக விளக்கமாக இன்றைய நிலையை மிகத் துல்லியமாகப் படம்பிடித்துக் காட்டியிருக்கிறார்கள்

தோழர்களே, இங்கே உரையாற்றியவர்களின் உரையில், குறிப்பாக தோழர் வீரபாண்டியன் அவர்களும் சரி, எழுச்சித் தமிழர் அவர்களும், கழகத் துணைத் தலைவர் அவர்களும் விரிவாக விளக்கமாக இன்றைய நிலையை மிகத் துல்லியமாகப் படம்பிடித்துக் காட்டியிருக்கிறார்கள்.

உச்ச, உயர்நீதிமன்றங்களில் சமூகநீதி தேவை என்ப தற்கு இப்படி ஒரு போராட்டம் நாடெங்கும் நடை பெறுவதற்காக வெட்கப்படவேண்டியவர்கள் உயர்நீதி மன்றத்திலும், உச்சநீதிமன்றத்திலும் இருக்கக்கூடிய நீதிபதிகள்தான்; அல்லது அவர்களை நியமிக்கின்ற அதிகாரம் கொண்டவர்கள்தான் என்பதை நான் மெத்தப் பணிவன்போடு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

சமூகநீதி என்பது பிச்சையல்ல - 

சலுகை அல்ல - நமது உரிமை!

ஏனென்றால், நிச்சயமாக சமூகநீதி என்பது பிச்சை யல்ல; சமூகநீதி என்பது நாம் ஏதோ முறை தவறி, வழிதவறி, அரசமைப்புச் சட்டத்தில் இல்லாத ஒன்றை, நீங்கள் எங்களுக்குக் கொடுங்கள் என்று கேட்பதற்கு, நாம் பாத்திரம் ஏந்திக் கொண்டு போகவில்லை.

அரசமைப்புச் சட்டத்தின்மீதுதான் இவர்கள் பிரமாணம் எடுத்துப் பதவிக்குப் போகிறார்கள். அந்த அரசமைப்புச் சட்டத்தில் பதவிப் பிரமாணம் எடுக்கும் பொழுது, பீடிகையில் உள்ளது என்ன?

அந்தப் பீடிகையை புரட்சியாளர் அம்பேத்கர் அவர்கள் கஷ்டப்பட்டு உருவாக்கினார். அந்த ஒன்றுக்காவது அவர் தன்னுடைய முழு சுதந்திரத்தையும், தன்னுடைய முழு ஆற்றலையும் பயன்படுத்தினார்.

WE, THE PEOPLE OF INDIA, having solemnly resolved to constitute India into a SOVEREIGN SOCIALIST SECULAR DEMOCRATIC REPUBLIC and to secure to all its citizens:

JUSTICE, social, economic and political; LIBERTY of thought, expression, belief, faith and worship;

EQUALITY of status and of opportunity;

and to promote among them all FRATERNITY assuring the dignity of the individual and the unity and integrity of the Nation

எல்லாக் குடிமக்களுக்கும் நியாயங்கள், நீதி என்கிற வார்த்தையைப் போட்டுவிட்டு, சமூகநீதிக்கு முன் னுரிமை; இரண்டாவது பொருளாதார நீதி; மூன்றாவது அரசியல் நீதி.

எனவே, இது மாற்றப்பட முடியாத அரசமைப்புச் சட்டத்தினுடைய அடிக்கட்டுமானமாகும்.

எந்த அரசாங்கமாக இருந்தாலும், இதை செய்தே தீரவேண்டும் என்பது கட்டளை. அது வேண்டுகோள் அல்ல.

எனவேதான், நாம் சமூகநீதியை, உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றங்களில் நமக்குத் தேவை என்று போராடு கின்றோம் என்று சொன்னால், அந்தப் போராட்டத்திற்கு அவசியம் இல்லாமலேயே அதனை செய்திருக்க வேண்டும். ஆனால், பார்ப்பனியத்திற்கு இதயம் கிடையாது; பார்ப்பனியத்திற்கும், மனிதாபிமானத்திற்கும் சம்பந்தம் கிடையாது. ஆரியத்திற்கும், நியாயத்திற்கும், நியதிக்கும் சம்பந்தம் கிடையாது.

அதைத்தான் மனோன்மணியம் சுந்தரனார் அழகாகச் சொன்னார் - மனுவாதி ஒரு குலத்துக்கொரு நீதி என்று.

‘திராவிட மாடல்’ ஆட்சியினுடைய 

முதல் கட்டம்தான் - வகுப்புவாரி உரிமை

நம்முடைய தலைவர்கள் போராடி, நீதிக் கட்சிக் காலத்திலிருந்து போராடி, திராவிட ஆட்சிக் காலத்திலிருந்து போராடி - இந்தியாவில் மற்ற மாநிலங்களில் இல்லாத காலத்தில், முதல் முறையாக, 1928 இல் திராவிடர் ஆட்சிதான் - ‘திராவிட மாடல்’ ஆட்சியினுடைய முதல் கட்டம் தான் - வகுப்புவாரி உரிமை என்பதைக் கொடுத்தது.

அதில்கூட பார்ப்பனர்களை நாம் வஞ்சிக்க வில்லை; பார்ப்பனர்களுக்கு இடம் கிடையாது என்று சொல்லவில்லை; உயர்ஜாதிக்காரர்களுக்கு இடம் கிடையாது என்று சொல்லவில்லை. நீங்கள் எந்த அளவு அனுபவிக்கிறீர்களோ, அதைவிட பல மடங்கு கொடுக்கிறோம் என்று சொல்லி, வகுப்புவாரி உரிமை என்ற அந்தக் கம்யூனல் ஜி.ஓ.வில் நண்பர்களே, மூன்று சதவிகித பார்ப்பனர்களுக்கு 16 சதவிகிதம் கொடுத்தார்கள்; 5 மடங்கு அதிகம் கொடுத்தார்கள்.

அதை எதிர்த்து ஏன் அவர்கள் வழக்குத் தொடுத்தார்கள்; அதுவும் ஒரு பொய்ப் பிர மாணத்தை ஒரு பார்ப்பன அம்மையார், நீதிமன் றத்தில் தாக்கல் செய்தார். அதற்காக அவர்மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்; ஆனால், அதைப் பற்றியெல்லாம் கவலைப்படவில்லை; அவர் களுக்கெல்லாம் சட்டம் வளைந்து கொடுக்கிறது. நம்மை மாதிரி இருப்பவர்கள்தான் மிலேச்சர்கள்; நாம்தான் சூத்திரர்கள்; நாம்தான் பஞ்சமர்கள்; நாம்தான் அடித்தளத்தில் இருக்கக்கூடியவர்கள்; ஆகவே, நாமெல்லாம் சண்டாளர்கள் - எனவே, நமக்குத்தான் தண்டனை உண்டே தவிர, அவர்களுக்கெல்லாம் கிடையாது.

அந்த கம்யூனல் ஜி.ஓ. வழக்கில், நூற்றுக்கு நூறு எங்களுக்கு வழங்கவேண்டும்; மற்றவர்களுக்குக் கொடுக்கக் கூடாது. காரணம் என்ன? சூத்திரர்கள் படிக்கக் கூடாது; எந்த ஜாதிப் பெண்களாக இருந்தாலும், பெண்கள் படிக்கக்கூடாது என்று சொன்னதினால்தான், பெரியார் போராடினார்.

முதல் அரசமைப்புச் சட்டத் திருத்தம் செய்து வழிகாட்டியது தமிழ்நாடு

அன்றைக்கு முதல் முறையாக அரசமைப்புச் சட்டம் திருத்தப்பட்டதினால்தான், தமிழ்நாட்டிலே மட்டும் இருந்த சமூகநீதி, கேட்காமலேயே வடபுல மாநிலங் களுக்கும், இந்தியா முழுவதும் உள்ள மாநிலங்களுக்கும் கிடைக்கக்கூடிய வகையில், முதல் அரசமைப்புச் சட்டத் திருத்தம் செய்து வழிகாட்டியது தமிழ்நாடு.

இதை சகோதரர் எழுச்சித் தமிழர் அவர்கள் இங்கே சொன்னார்கள்.

தமிழ்நாடுதான் கலங்கரை விளக்கம். தமிழ்நாடுதான் எதையும் முதலில் சொல்லக்கூடிய ஆற்றலும், முன்னோக்கும் கொண்டது.

அதைத்தான் தந்தை பெரியார் செய்தார். அவருக்கு ஒரு உறுப்பினர்கூட கிடையாது நாடாளுமன்றத்தில்.

நல்ல வாய்ப்பாக, ஜனநாயகவாதி பிரதமராக நேரு இருந்தார்; நல்ல வாய்ப்பாக சட்ட அமைச்சராக நம்முடைய புரட்சியாளர் டாக்டர் அம்பேத்கர் இருந்ததி னால், அரசமைப்புச் சட்ட முதல் திருத்தம் வந்தது.

தமிழ்நாட்டில்தான் 69 சதவிகித இட ஒதுக்கீடு, இந்தியாவிலேயே 9 ஆவது அட்டவணைப் பாதுகாப்பில்...

மற்ற இடங்களில் சமூகநீதி வந்திருக்கிறது. கல்வியில் இட ஒதுக்கீடு வந்திருக்கிறது. இன்னுங்கேட்டால், தமிழ் நாட்டில்தான் 69 சதவிகித இட ஒதுக்கீடு, இந்தியாவிலேயே 9 ஆவது அட்டவணைப் பாதுகாப்போடு இருக்கிறது.

இப்பொழுது மற்ற மாநிலங்களில் உள்ளவர்கள் எங்களுக்கு 9 ஆவது அட்டவணை பாதுகாப்பு வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

அண்டை மாநிலமான கருநாடக மாநிலத்தில் நடைபெறப் போகும் தேர்தலில், இதைச் சொல்லியாவது வாக்கு வாங்கலாமா? என்று பிஜேபியினர் தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறார்கள்.

எல்லாவற்றிற்கும் முன்னோடி நாம்தான்!

இப்பொழுதுதான் ஷெட்யூல் காஸ்டுக்கு 15 சதவிகிதம், 16 சதவிகிதம் கொடுக்கலாமா? என்று யோசித்துக் கொண்டிருக்கிறார்கள். தமிழ்நாட்டில் எத்த னையோ ஆண்டுகளுக்கு முன்பாக அவர்களுக்கு 18 சதவிகிதத்தைக் கொடுத்திருக்கிறோம்; எல்லாவற்றிற்கும் முன்னோடி நாம்தான்.

ஆனால், கல்வியில் இட ஒதுக்கீடு; வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு - எந்த அளவிற்கு செயல்பாட்டில் இருக்கிறது என்பது அது ஒரு தனி விவாதத்திற்குரியது. உதாரணமாக, மண்டல் அறிக்கையின்படி 27 சதவிகித இட ஒதுக்கீடு கொடுக்கவேண்டும் என்று நாம் போராடினோம். ஏட்டுச் சுரைக்காயாக 27 சதவிகிதம் என்று எழுதி, உத்தரவு போட்டிருக்கிறார்கள்.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் கேட்டால், வெறும் 11 சதவிகிதத்திலிருந்து 14 சதவிகிதம்தான் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினருக்கே கூட. மீதி 14 சதவிகிதம் யாருக்கு? உயர்ஜாதிக்காரர்களுக்குத்தான். இந்தத் தகவலை ஒன்றிய அரசே கொடுத்திருக்கிறது - தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில்.

எனவே, இது ஒரு பக்கத்தில் இருந்தாலும் நண்பர் களே, அங்கெல்லாம் இட ஒதுக்கீடு இருந்தாலும்கூட - ஜனநாயகத்தைப் பொறுத்தவரையில், 18 வயதுள்ள வர்களுக்கு வாக்குரிமை இருப்பதினால் வருகிறார்கள்.

மிக முக்கியமாகத் தேவை - நீதித் துறையில்தான் இட ஒதுக்கீடு தேவை

சட்டமன்றம்,  நாடாளுமன்றம் - நிர்வாகத் துறை இவற்றைவிட இட ஒதுக்கீடு எதற்கு மிக முக்கிய மாகத் தேவை என்றால், நீதித் துறையில்தான் இட ஒதுக்கீடு தேவை. ஏனென்றால், அதற்கு மிக எளிய விடை -  இந்த மேற்கண்ட இரண்டு துறைகளும் செய்யக்கூடியவற்றை சரியா? தவறா? என்று முடிவு செய்து - சிவப்பு மையினால் கோடு போட்டு அது செல்லுமா, செல்லாதா? என்று கூறும் சக்தி வாய்ந்த இடத்தில் நீதிமன்றங்கள் இருக்கின்றன.

நாம் அரும்பாடுபட்டு, ஆட்சியை உருவாக்கி, எல்லாவற்றையும் செய்தால், அவற்றை எதிர்த்து சிலர் நீதிமன்றத்திற்குச் செல்லும்பொழுது, தீர்ப்பு பல நேரங்களில் அவர்களுக்குச் சாதகமாக இருக்கிறது.

சாலையின் ஓரமாக இருக்கின்ற குடிசைகள்  போக்குவரத்திற்கு இடையூறாக இருக்கிறது எடுக்க வேண்டும் என்றால், பரவாயில்லை அகற்றி விடுங்கள் என்று சொல்கிறார்கள்.

சமமாக அல்லவா நீதி வழங்கவேண்டும்!

நடு சாலையில், பெரிய கல்லை வைத்து, அது கோவில் என்று சொல்லும்பொழுது, அது போக்கு வரத்திற்கு இடையூறாக இருக்கிறது; அதை அகற்ற வேண்டும் என்றால், ‘‘அய்யய்யோ அது கோவில், அதை இடிக்கக் கூடாது’’ என்று சொல்கிறார்கள்.

இதுதான் நீதியா? இரண்டிற்கும் சமமாக அல்லவா நீதி வழங்கவேண்டும்.

ஆகவேதான்,  நீதித் துறையில் இட ஒதுக்கீடு என்பது மிகமிக முக்கியம். ஏனென்றால், நிர்வாகத் துறையும், நாடாளுமன்றம், சட்டமன்றமும் கொண்டு வருகின்ற சட்டமும், போடுகின்ற ஆணையும் செல்லுமா? செல் லாதா? என்பதை முடிவு செய்யக்கூடிய சர்வ சக்தி வாய்ந்தது நீதிமன்றம்.

(தொடரும்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக