புதன், 3 மே, 2023

சென்னை ஆர்ப்பாட்டத்தில் தமிழர் தலைவர் கேள்வி! (வள்ளுவர் கோட்டம்-11.2.2023)

   

நம்மவர்களுக்கு உச்சநீதிமன்றக் கதவு திறப்பதில்லை!

எங்கள் சமுதாயத்தில் வழக்குரைஞர்களுக்குப் பஞ்சமா? ஆற்றலாளர்களுக்குப் பஞ்சமா?

7

சென்னை, பிப்.17 நம்மவர்களுக்கு உச்சநீதிமன்றக் கதவு திறப்பதில்லை எங்கள் சமுதாயத்தில் வழக்குரைஞர் களுக்குப்  பஞ்சமா? ஆற்றலாளர்களுக்குப் பஞ்சமா? என்று வினா எழுப்பினார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

சமூகநீதிகோரி ஆர்ப்பாட்டம்!

கடந்த 11.2.2023 அன்று முற்பகல் 11 மணியளவில் சென்னை வள்ளுவர்கோட்டம் அருகே  உச்ச - உயர்நீதிமன்றங்களில் உயர்ஜாதி பார்ப்பன ஆதிக்கமா? தகுதி இருந்தும் ஒடுக்கப்பட்ட சமூக நீதிபதிகள் புறக் கணிக்கப்படுவது ஏன்?  என சமூகநீதி கோரி திராவிடர் கழகம் நடத்திய ஆர்ப்பாட்டத்தில்   திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி சிறப்புரையாற்றினார்.

அவரது சிறப்புரையின் நேற்றையத் தொடர்ச்சி வருமாறு:

மக்களின் கடைசி நம்பிக்கைதான் உச்சநீதிமன்றம்!

மக்களுக்கு நீதி கிடைக்கவில்லை என்றால் என்ன அர்த்தம்?

மக்களின் கடைசி நம்பிக்கைதான் உச்சநீதிமன்றம். தந்தை பெரியார் அவருக்கே உரித்தான முறையில் சொல்வார்; உச்சநீதிமன்றத்தினுடைய தீர்ப்புதான் எல்லோரையும் கட்டுப்படுத்தவேண்டிய தீர்ப்பு. அந்தத் தீர்ப்பையும் மாற்றலாம் என்பது வேறு. ஆனால், அந்தத் தீர்ப்புதான் இறுதியானது.

அதற்கு மேல் அப்பீல் செய்வதற்கு கோர்ட்டு இல்லை!

ஒருமுறை தந்தை பெரியார் சொன்னார், ‘‘கடைசி அறிவாளி அங்கேதான் இருக்கிறான் என்று அர்த்தம் இல்லை; ஆனால், ஏன் அதற்குக் கட்டுப்படுகிறோம் என்றால், அதற்கு மேல் அப்பீல் செய்வதற்கு கோர்ட்டு இல்லை’’ என்றார்.

அந்த நீதிபதிகள்தான் முடிவு செய்கிறார்கள். அதைத்தான் இங்கே சகோதரர் சுட்டிக்காட்டினார்.

உச்சநீதிமன்றத்தில் மொத்தம் 34 நீதிபதிகள். 29 நீதிபதிகள் இருந்தார்கள்; கொலீஜியம் முறையை வைத்துக்கொண்டு, நீதிபதி நியமனங்களை செய்தார்கள். இப்பொழுது கொலீஜியத்திற்கும், ஒன்றிய அரசுக்கும் மோதல் இருக்கிறது; அந்தப் பிரச்சினைக்குள் நாம் போகவேண்டிய  அவசியமில்லை.

உயர்நீதிமன்றத்திற்கு நீதிபதிகளை தேர்ந்தெடுக் கிறார்கள்; அவர்களுக்கு சம்பளம், மற்ற வசதிகள் போன்றவற்றை கொடுப்பது யார்? மாநில அரசு? மாநில அரசு நிதி அளிக்கிறது; அந்த நிதி யாருடையது? பெரும்பாலான மக்கள் வரிப் பணம்தான்.

ஆனால், மாநில அரசுக்கு நீதிபதிகளை யார் நியமனம் செய்வது?

நீதிபதிகளின் நியமனத்தில் மாநில  அரசின் ஒப்புதல் பெறவேண்டும் என்றுதான் அரசமைப்புச் சட்டத்தில் இருந்தது. அதை அப்படியே எடுத்துவிட்டார்கள். கன்கரண்ட் என்றால், ஒத்திசைவு. அதற்குப் பதிலாக, கன்சல்ட் என்ற வார்த்தையைப் போட்டார்கள்; இப் பொழுது அதுவும் போய்விட்டது.

நாடாளுமன்றத்திலும் சொன்னார்கள், இங்கேயும் விளக்கிச் சொல்லப்பட்டது. 

இட ஒதுக்கீடு இல்லையா? என்று கேட்டால், உச்சநீதிமன்றத்தில், உயர்நீதிமன்றங்களில் இட ஒதுக்கீடு கிடையாது என்று சொல்கிறார்கள்.

சட்டம் மக்களுக்காகவா? அல்லது மக்கள் சட்டத் திற்காகவா?

நாம் தவறான முறையில் கேட்கவில்லை; சட்டப் பூர்வமான முறையில் கேட்கிறோம்.

ஒரு சிறிய உதாரணம், சமூகநீதி, இட ஒதுக்கீடு மாவட்ட நீதிபதிகள் தேர்ந்தெடுக்கும் வரையில் இருக்கிறது.

அப்படியென்றால், உச்ச, உயர்நீதிமன்றங்களுக்குத் தேர்ந்தெடுக்கப்படும் நீதிபதிகளுக்கு தகுதி, திறமை பார்க்கவேண்டாமா?

தகுதி, திறமை உள்ளவர்கள்தானே மாவட்ட நீதிபதிகளாக வருகிறார்கள்? வழக்குரைஞர்களில் இருந்து சில பேர்; நீதிபதிகளில் கொஞ்சம் பேரை தேர்ந் தெடுத்துத்தானே உயர்நீதிமன்றங்களுக்கும், உச்சநீதி மன்றத்திற்கும் அனுப்புகிறார்கள்; அப்படியென்றால், அதில் சமூகநீதி இருக்கவேண்டும் அல்லவா!

இரண்டாவது கேள்வி என்னவென்றால்,  ஒரே நேரத்தில் இவருக்கு ஒரு நீதி; அவருக்கு ஒரு நீதி; அதுதான் மனுநீதி. ஒரு குலத்துக்கொரு நீதி போன்று.

நாங்கள் பதில் சொல்வதற்குத் தயாராக இருக்கிறோம்

மாவட்ட நீதிபதி வரையில் இட ஒதுக்கீடு உண்டு. உயர்நீதிமன்ற நீதிபதி நியமனங்களில் இட ஒதுக்கீடு கூடாது என்று அரசமைப்புச் சட்டத்தை எடுத்துக் காட்டட்டும் பார்க்கலாமே! அல்லது அரசமைப்புச் சட்டத்தின் இந்தப் பிரிவின்கீழ் இட ஒதுக்கீடு கொடுக்க முடியாது என்று சொல்லட்டுமே! அதற்கு நாங்கள் பதில் சொல்வதற்குத் தயாராக இருக்கிறோம்.

இவர்களே உருவாக்கிக் கொண்டதுதான் இது. பெரியார்தான் கேட்பார், தலைக்கு ஒரு சீயக்காய்; தாடிக்கொரு சீயக்காயா? என்று.

இதுவரையில் உண்டு; அதற்குமேல் கிடையாது என்று அரசமைப்புச் சட்டத்தில் எந்த இடத்திலும் கிடையாது.

ஆகவே, அவர்கள் உருவாக்கிக் கொண்டதுதான் இது. எனவேதான் கேட்கிறோம், உயர்நீதிமன்றத்தில் ஏன் எங்களுடைய பங்களிப்பு இல்லை என்று.

ஜனநாயகம் என்று சொன்னால், சமூகநீதி அனை வருக்கும். அந்த சமூகநீதி இன்றைக்கு உச்ச, உயர்நீதி மன்றங்களில் இல்லாததினால்தான், உச்சநீதிமன்றத்தில் உள்ள நீதிபதிகள் 34 இடங்களில், 32  இடங்களை நிரப்பிவிட்டார்கள்.

ஒரே ஒரு ஆள் ஷெட்யூல்ட் காஸ்ட் சமுதாயத்தைச் சேர்ந்தவர் இருக்கிறாரா?

எங்கள் ஆட்களுக்குத் தகுதியில்லையா?

யாரை வேண்டுமானாலும் நீதிபதியாக போட முடியுமா? என்று நம்மாளே - விபீஷணர்களே கேள்வி கேட்கிறார்கள்.

‘‘ஏங்க, யாரை வேண்டுமானாலும் நீதிபதியாக போடலாமா?’’ என்று.

யாரை வேண்டுமானாலும் நீதிபதியாக நியமிக்கச் சொல்லவில்லை; தெருவில் போறவரை நீதிபதியாக ஆக்கவேண்டும் என்று சொல்லவில்லை.

ஓர் உதாரணத்திற்குச் சொல்கிறேன்; இங்கே இருந்த மணிக்குமார் என்ற மூத்த நீதிபதி கேரள மாநில உயர்நீதிமன்றத்திற்குத் தலைமை நீதிபதியாக போனார்; பல ஆண்டுகளாக தலைமை நீதிபதியாக இருக்கிறார்;  இன்னமும் இருக்கிறார்; தலைமை நீதிபதிகளைத்தான் உச்சநீதிமன்ற நீதிபதிகளாகத் தேர்ந்தெடுக்கிறார்கள். அப்படியென்றால், இவருடைய பெயரை ஏன் உச்சநீதி மன்ற நீதிபதியாவதற்குப் பரிந்துரைக்கவில்லை. மற்றவர் கள் பெயர்கள் போயிருக்கிறதே?

என்மீது வழக்குத் தொடர்ந்தாலும் பரவாயில்லை!

சீனியாரிட்டி முறையில்தான் நாங்கள் நீதிபதிகளை நியமித்தோம் என்று சொல்ல முடியுமா? அந்த முறையில்தான் நீதிபதிகளை நியமித்தோம் என்று சொல்ல முடியுமா?

என்மீது வழக்குப் போடட்டும்; இன்னும் பச்சையாக அம்பலப்படுத்துவதற்குத் தயாராக இருக்கிறோம். துணிந்துதான் பேசுகிறோம்.

முடிவு செய்துவிட்டு போர்க் களத்திற்கு  வந்து விட்டால், துப்பாக்கி வைத்துக்கொண்டு, அப்படி இப்படி பார்த்துக் கொண்டு நிற்க முடியுமா?

துப்பாக்கிக் குண்டு நம்மீது பாய்ந்தாலும் பரவாயில்லை என்று நிற்பவன்தான் போர் வீரன். அந்தப் போர்க் களத்தை நோக்கி வந்திருக்கிறவர்கள்தான் இங்கே வந்திருப்போர்.

நம்முடைய சமுதாயத்தைச் சார்ந்தவர்கள், ஒடுக் கப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், சிறுபான்மையினர் ஆகிய சமுதாயத் தைச் சேர்ந்தவர்கள் நீதிபதிகளாக ஆவதைத் தடுக்க  ஓர் ஆயுதம் வைத்திருக்கிறார்கள்.

அது என்னவென்றால், சீனியாரிட்டியாம். அதற்குப் பிறகு தகுதி, திறமையாம்?

சீனியாரிட்டி என்று பார்த்தால், தமிழ்நாட்டிலிருந்து உயர்நீதிமன்றத்திலிருந்து இரண்டு பேர் போனார்கள்.

உதாரணத்திற்குச் சொல்கிறேன், ஏதோ ஒரு கற்பனையாக நான் இதைப் பேசவில்லை.

தமிழ்நாட்டிலிருந்து மூத்த நீதிபதிகளை, தலைமை நீதிபதிகளைத்தான் உச்சநீதிமன்ற நீதிபதியாக தேர்ந் தெடுக்கிறார்கள்.

இங்கே இருந்த சுதாகர் இராமலிங்கம் என்பவரை மணிப்பூர் உயர்நீதிமன்றத்திற்கு மாற்றுகிறார்கள். 

கிறித்துவ சமுதாயத்தைச் சார்ந்த பால் வசந்தகுமார்

அதேபோன்று காஷ்மீர் நீதிமன்றத்திற்கு நீதிபதியாக போகமாட்டோம் என்று பல நீதிபதிகள் மறுப்புத் தெரிவித்து வந்தார்கள். அந்த இடத்திற்கு இங்கே இருந்து பால் வசந்தகுமார் என்பவர் கிறித்துவ சமுதாயத்தைச் சார்ந்த பிற்படுத்தப்பட்டவர்.

அவர் அங்கு சென்று, காஷ்மீர் உயர்நீதிமன்றத்திற்குத் தலைமை நீதிபதியாக சிறப்பாகப் பணியாற்றினார்.

இந்த இரண்டு பேரும் உச்சநீதிமன்ற நீதிபதிகளாக ஆகியிருக்கவேண்டும்.

நியாயத்தைத்தான் நான் சொல்கிறேன். மற்றவர்கள் மறுத்த இடத்திற்கு, இவர்கள் நீதிபதிகளாகச் சென்றனர்.

நீதிபதி மணிக்குமார் அவர்கள் 13 ஆவது இடத்தில் இருந்த நிலையில், 23 ஆவது வரிசையில் இருந்த இந்த ஊர் அய்யர் டபக்கென்று மேலே வந்து உட்கார்ந்து விட்டார்.

தனிப்பட்ட முறையில் யார்மீதும் எங்களுக்கு விருப்பு வெறுப்பு கிடையாது. ஆனால், நியாயங்களைப்பற்றி பேசும்பொழுது கண்டிப்பாக அதைக் கண்டிப்போம்.

உச்சநீதிமன்ற கதவு திறப்பதில்லை!

நம்மவர்கள் உயிரைப் பிடித்துக்கொண்டு, வட மாநிலங்களுக்குச் சென்று ஆபத்தான இடங்களுக்குச் சென்று பணியாற்றினாலும்கூட, உச்சநீதிமன்ற நீதிபதி களாக ஆகின்ற வாய்ப்பு  கிடையாது. உச்சநீதிமன்ற கதவு திறப்பதில்லை.

உச்சநீதிமன்றத்தில் உள்ள 34 பணியிடங்களும் நிரப்பப்பட்டன. அதில் 30 இடங்களில் உயர்ஜாதி சமூகத் தைச் சேர்ந்தவர்கள் உள்ளனர். யாருடைய வரிப் பணத்தை அவர்கள் சம்பளமாகப் பெறுகிறார்கள். அதைத்தான் சகோதரர் எழுச்சித் தமிழர் இங்கே சொன்னார்.

இப்பொழுது உச்சநீதிமன்றத்தில் உயர்ஜாதி சமூகத் தைச் சேர்ந்தவர்கள் 30 பேர் நீதிபதிகளாக இருக்கிறார்கள். யாருடைய  வரிப் பணம்? நியாயம் வேண்டாமா?

அவர்களுடைய தீர்ப்பு எப்படி இருக்கிறது என்பது மிகத் தெளிவாகத் தெரியுமே?

வன்னியர்களுக்கோ, மற்றவர்களுக்கோ உள் பிரிவு இட ஒதுக்கீடு சட்டம் வருகிறது என்று சொன் னால், அது செல்லுமா? செல்லாதா? என்று அந்த வழக்கு உச்சநீதிமன்றத்திற்குச் சென்றவுடன்,  அங்கே இருக்கும் நீதிபதிகள் என்ன கேட் கிறார்கள்?

புள்ளி விவரம் திரட்டியிருக்கிறீர்களா?

இதற்கு முன்பு ஏதாவது கணக்கு எடுத்திருக்கிறீர்களா?

கணக்கே எடுக்கவில்லை என்றால், எப்படி இந்த வழக்கைத் தொடுத்திருக்கிறீர்கள்? என்று கேட்கிறார்கள்; சரிதான்.

அவர்களுக்கு வசதியாக இருந்தால், எதை வேண்டுமானாலும் கண்டு கொள்ளாமல் விடுவார்கள்

ஆனால், அதேபோன்றதுதானே உயர்ஜாதியில் பொருளாதாரத்தில் நலிந்தோருக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு. அதற்கு ஏதாவது கேள்வி கேட்டார்களா?

அவர்களுக்கு வசதியாக இருந்தால், எதை வேண்டு மானாலும் கண்டு கொள்ளாமல் விடுவார்கள்; மற்றவர் களை கீழே தள்ளவேண்டுமானால், அதற்குரிய கணக்குகளை கேட்போம் என்பதா?

இதுதானே மனுநீதி.

அந்த மனுநீதிக்கு முற்றுப்புள்ளி வைக்கவில்லை என்றால், ஜனநாயகம் தழைக்குமா? மக்களாட்சி தழைக்குமா?

எனவேதான் தோழர்களே, அனைவருக்கும் அனைத்தும் என்பதுதான் சமூகநீதி.

மற்றவர்களுக்குக் கொடுக்காதே என்று நாங்கள் சொல்லவில்லை. மற்றவர்களை விட்டுவிடுங்கள் என்று நாங்கள் சொல்லவில்லை.

‘‘அனைவருக்கும் அனைத்தும்’’ - இந்த அனை வருக்கும் அனைத்தும் இருக்கிறதா? என்பதுதான் இப்போதைய கேள்வி.

ஆகவேதான், நீதிமன்றங்களில் நீதிபதிகள் நியமனங்களில் இட ஒதுக்கீடு வேண்டும் என்று கேட்கிறோம்.

பா.ஜ.க.  நாடாளுமன்ற உறுப்பினர் சுஷில் மோடியின் கேள்வி!

உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனம் குறித்து கணக்கெடுத்தோம் என்றால், இதற்கான பிரச்சினையில், பீகாரைச் சேர்ந்த பா.ஜ.க.  நாடாளுமன்ற உறுப்பினர் சுஷில் மோடி கேள்வி கேட்டார்.

நீதிமன்ற நீதிபதிகள் நியமனங்களில் கடந்த 5 ஆண்டுகளில் சமூகநீதி எப்படி இருக்கிறது? என்று.

அதற்கான பதிலலை அத்துறை அமைச்சர் சொல்கிறார்,

Last 5 years, 79% of new High Court judges all from upper caste. 

இந்தியா முழுக்க உள்ள உயர்நீதிமன்றங்களில், 79 சதவிகிதம் உயர்ஜாதியைச் சேர்ந்த பார்ப்பனர்கள்தான்.

எங்கள் சமுதாயத்தில் வழக்குரைஞர்களுக்குப் பஞ்சமா? ஆற்றலாளர்களுக்குப் பஞ்சமா?

இது என்ன நியாயம்? சிந்திக்கவேண்டாமா?

ஒரு காலத்தில் படிக்கக் கூடாது என்று சொன் னீர்கள்; மீறி படித்தோம்.

எங்கள் சமுதாயத்தில் வழக்குரைஞர்களுக்குப் பஞ்சமா? ஆற்றலாளர்களுக்குப் பஞ்சமா? இன்னுங்கேட்டால், நீதிபதிகள்மேல் வழக்கு வந்தது அல்லது அந்த நீதிபகளின்மீது புகார்கள் வந்தன என்று சொன்னால், உயர்ஜாதியைச் சேர்ந்த நீதிபதிகள்தான் ஊழல் செய்திருக்கிறார்கள் என்று புகார் வந்திருக்கிறதே தவிர, ஒடுக்கப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த நீதிபதி தவறு செய்தார் என்று இதுவரையில் புகார் கிடையாது.

இதுகுறித்து பேசவேண்டுமானால், மணிக் கணக்கில் பேசிக் கொண்டிருக்கலாம்.

தந்தை பெரியாரின்  ‘‘நீதி கெட்டது யாரால்?’’

தந்தை பெரியார் அவர்கள், ‘‘நீதி கெட்டது யாரால்?’’ என்ற தலைப்பில் ஒரு புத்தகத்தை எழுதியிருக்கிறார்; அதை வாங்கிப் படித்தால் உங்களுக்கு இன்னும் தெளிவாக பல உண்மைகள் புரியும்.

ஆகவே, பீகாரைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் எழுப்பிய கேள்விக்கு அத்துறை அமைச்சர் இவ்வாறு பதில் சொல்லியிருக்கிறார்:

Last 5 years, 79% of new High Court judges all from upper caste.

The Ministry’s Department of Justice is learnt to have made a presentation in this regard before the panel headed by BJP MP Sushil Modi.

இதற்கு முன்பு இரண்டு தலைமை நீதிபதிகளுக்கு சமூகநீதி வாய்ப்புக் கொடுக்கவில்லை என்பதைப்பற்றி நாங்கள் சொல்லியிருக்கின்றோம். 

எங்கே சமூகநீதி?

பேச்சு அளவில் மட்டும்தான்!

நடைமுறையில் வரும்பொழுது, அப்படி நடப்பது இல்லை.

தகுதி திறமைக்கான போராட்டம்தான்.

பிச்சையல்ல - சலுகையல்ல - உரிமைப்படி கொடுங்கள் என்று கேட்பதற்குத்தான் இந்தப் போராட்டம்!

எந்த நீதிபதிகள்மீதும் தனிப்பட்ட விரோதமல்ல - அல்லது எங்களுடைய சொந்தக்காரர்களுக்கு நீதிபதி பதவியை கொடுங்கள் என்று கேட்பதல்ல.

முழுக்க முழுக்க தகுதியுள்ள ஒடுக்கப்பட்ட சமு தாயத்தைச் சார்ந்தவர்களுக்கு பிச்சையல்ல - சலுகை யல்ல - உரிமைப்படி கொடுங்கள் என்று கேட்பதற்குத் தான் இந்தப் போராட்டம்!

இது ஒரு தொடக்கம் - இது முடிவல்ல!

தமிழ்நாடு முழுவதும் இப்போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

ஆகவேதான், இந்த நிலையில், நீங்கள் எல்லாம் இங்கே வந்து சிறப்பிக்கக் கூடிய இந்த வாய்ப்பு.

சென்னை உயர்நீதிமன்றத்திற்கு நீதிபதியாக நியமிப் பதற்கு முன்பே ஒருவர்மீது புகார்கள், வழக்கு. இதை யெல்லாம் தாண்டி அவர் நீதிபதியாக பதவியேற்றுக் கொண்டார்.

அவர்களுடைய தந்திரம் என்னவென்றால், பார்ப் பனரல்லாதாருக்கும்தான் வாய்ப்புக் கொடுத்திருக்கி றோமே, பிறகு ஏன் அந்த நீதிபதியை பதவியேற்கக் கூடாது என்று சொல்கிறீர்கள்? என்று தந்திரமாக கேட்கின்றனர்.

நம்முடைய ஆட்களும் புரியாமல் என்ன கேட் கிறார்கள்;  ஏங்க இப்படியெல்லாம் செய்யுறீங்க? என்று.

முழுக்க முழுக்க ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி., உணர்வாளராக இருக்கிறாரா? என்றுதான் பார்க்கிறார்கள்!

இப்பொழுது ஒன்றியத்தில் நடைபெறுகின்ற பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். ஆட்சியில், எதை முக்கியமாகப் பார்க் கிறார்கள் என்றால், ஒருவர் பார்ப்பனராக இருக்கிறாரா? என்பதுகூட முக்கியமல்ல; முழுக்க முழுக்க ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி., உணர்வாளராக இருக்கிறாரா? என்பதுதான் மிகவும் முக்கியம்.

இதுகுறித்து யாராவது நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினால், அவர்களுக்கே உறுத்துவதால்தான், நல்ல விஷயங்களை யார் சொன்னாலும், அதை அவைக் குறிப்பிலிருந்து நீக்கி விடுகிறார்கள்.

ஏனென்றால், நிகழ்காலத்தில் மட்டுமல்ல, எதிர் காலத்தில்கூட இது தெரியக்கூடாது.

எனவேதான் நண்பர்களே, இந்தப் போராட்டம் என்பது மிகவும் தேவை.

நாம் எடுத்த எந்தக் காரியமும் தோற்றுப் போனதே கிடையாது. வெற்றி வேண்டுமானால், கொஞ்சம் தள்ளி வரும்!

தந்தை பெரியார், ஒரு வரதராசுலுவைக் கொண்டு வந்தார். நாம் சோர்ந்து போக வேண்டிய அவசியமில்லை. இதுவரையில், நாம் எடுத்த எந்தக் காரியமும் தோற்றுப் போனதே கிடையாது. வெற்றி வேண்டுமானால், கொஞ்சம் தள்ளி வரும்.

அது அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆக வேண்டும் பிரச்சினையாக இருந்தாலும் சரி, மண்டல் அறிக்கையாக இருந்தாலும் சரி.

சமூகநீதிக் காவலர் பிரதமர் வி.பி.சிங்கின் உறுதி!

மண்டலைப்பற்றி நம்முடைய சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் அவர்கள் சொல்லும்பொழுது, ‘‘சமூகநீதிக்காக ஒருமுறை அல்ல 9 முறைகூட பிரதமர் பதவியை இழக்கத் தயாராக இருக்கிறேன்’’ என்று.

அப்பொழுதுதான் மண்டலுக்கும் - கமண்டலுக்கும் போட்டி என்ற அளவிற்கு வந்தது.

இன்றைக்கு ஒரு மாறுதல் ஏற்பட்டு இருக்கிறது. இன்றைக்கு நம்முடைய பிள்ளைகள் வரக்கூடிய அள விற்கு வந்திருக்கிறது. தொடர்ந்து போராடவேண்டும்.

தொடர்ந்து போராடினால்தான் உரிமை கிடைக்குமே தவிர, நாம் வாயை மூடிக்கொண்டு சும்மா இருந்து, ‘‘எல்லாம் பகவான் விட்ட வழி’’ என்று இருந்தால், அது ‘‘பகவான் விட்ட வழியாக இருக்காது; பார்ப்பான் விட்ட வழியாகத்தான் போகுமே தவிர’’ வேறு இருக்காது.

அதற்கான போராட்டம் தமிழ்நாடு முழுவதும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மேலும் இது தொடரும்.

கழகத் துணைத் தலைவர் அவர்கள் சொன்னார்களே, ‘‘இங்கே பேசிவிட்டு, நாங்கள் தப்பித்துப் போகவேண்டும் என்று நினைக்கவில்லை; இதற்காக தண்டைன கொடுத்தாலும் பரவாயில்லை’’ என்று.

பெரியார் சொன்னார், ‘‘பார்ப்பனர்கள் நீதிபதியாய், நிர்வாகத்தவராய் இருக்கும் நாடு கடும் புலி வாழும் காடேயாகும். புலி மேலே பாய்ந்தால், நாங்கள் புலி வேட்டை ஆடுகிறோம்; புலியை தனிப்பட்ட முறையில் அல்ல - புலி ஆதிக்கம் செய்ய நினைத்தால், அதை அழிப்போம்; கடிபட்டால் நாங்கள் சாகத் தயாராக இருக்கிறோம்’’ என்றார்.

குறுகிய காலத்தில் போராட்டத்தை ஏற்பாடு செய்தவர்களுக்கு நன்றி!

இப்படித் துணிந்தால்தான், வருங்கால சமுதாயமாவது நீதிக்கும், நேர்மைக்கும் ஆட்பட்டு, தங்களுடைய உரிமையை நிலை நிறுத்த முடியும். இவ்வளவு குறுகிய காலத்தில் ஏற்பாடு செய்யப்பட்டு, இவ்வளவு சிறப்பாக ஏற்பாடு செய்தவர்களுக்கு நன்றி தெரிவித்து, இந்தப் போராட்டம் தொடரும் என்று கூறி,  என்னுரையை முடிக்கின்றேன்.

வாழ்க சமூகநீதி!

வளர்க நம்முடைய உரிமை வேட்கை உணர்வு!

தோழமைக் கட்சிகளுக்கும் மனமார்ந்த உளப்பூர்வமான நன்றி!

குறுகிய காலத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட இப் போராட்டத்திற்கு வந்த நம்முடைய எழுச்சித் தமிழர் அவர்களுக்கும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சார்ந்த வீரபாண்டியன் அவர்களுக்கும் என்னுடைய மன மார்ந்த உளப்பூர்வமான நன்றியைத் தெரிவித்து விடைபெறுகிறேன்.

நன்றி, வணக்கம்!

- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலை வர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக