

சென்னை, ஜூலை 30 ‘நீட்’ தேர்வையும், உயர் ஜாதியினருக்கான EWS இடஒதுக்கீட்டையும் முழுமையாக ரத்து செய்ய ஒன்றிய அரசை வலியுறுத்தி, திராவிடர் கழக இளைஞரணி, திராவிட மாணவர் கழகம், திராவிட மகளிர் பாசறை சார்பில் தமிழ்நாடு முழுவதும் இன்று (30.7.2026) முதல் 2.8.2026 வரை இரு சக்கர வாகனத்தின் மூலம் பரப்புரைப் பயணம் மேற்கொள்ளத் திட்டமிட்டு முறைப்படி காவல் துறைத் தலைமை இயக்குநர் அவர்களிடம் (டிஜிபி), திராவிடர் கழகத்தின் சார்பில் கடந்த 18.7.2026 அன்று அனுமதி கேட்டு விண்ணப்பம் அளிக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று (30.7.2026) காலை புறப்பட இருந்த இந்தத் தருணத்தில், திராவிடர் கழகத்தின் இரு சக்கர வாகனப் பயணத்திற்கு காவல்துறையினரால் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
சென்னையில் இன்று (30.7.2026) காலை 9 மணியளவில் பெரியார் திடலில் இருந்து இரு சக்கர வாகனப் பரப்புரைப் பயணம் தொடங்க இருந்த நிலையில், காவல்துறையினரால் அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் அவர்கள் செய்தியாளர்களிடம் இதுகுறித்து கூறுகையில்:
‘‘தடையை மீறி இந்தப் பிரச்சாரப் பயணத்தை நடத்த முடியும் என்றாலும், முதலில் சட்ட ரீதியாக இப்பிரச்சினையை கழகம் அணுகும். அரசியலமைப்புச் சட்டப்படியான நமது அடிப்படை கருத்து, பேச்சு, ஜனநாயக உரிமைக்கு நீதிமன்றத்தின் மூலமாகப் பரிகாரம் தேடப்படும். தற்போதைக்கு திராவிடர் கழகம் திட்டமிட்டிருந்த இரு சக்கர வாகனப் பிரச்சாரப் பயணம் ஒத்திவைக்கப்படுகின்றது’’ என்று தெரிவித்துள்ளார்.

இந்நிகழ்வில் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ், பொருளாளர் வீ. குமரேசன், துணைப் பொதுச் செயலாளர் பிரின்ஸ் என்னாரெசு பெரியார், மாநில கழக ஒருங்கிணைப்பாளர் வி. பன்னீர்செல்வம், தலைமை செயற்குழு உறுப்பினர் தே.செ. கோபால், மாநில ப.க. பொதுச் செயலாளர் ஆ. வெங்கடேசன், மாநில இளைஞரணி இணை செயலாளர் சோ. சுரேஷ், தென் சென்னை மாவட்ட செயலாளர் செ.ர. பார்த்தசாரதி, எம்.ஆர்.மாணிக்கம், வட சென்னை மாவட்ட தலைவர் வழக்குரைஞர் தளபதி பாண்டியன், செயலாளர் புரசை சு. அன்புச்செல்வன், காப்பாளர் கி. இராமலிங்கம், துணைத் தலைவர் நா. பார்த்திபன், பொதுக் குழு உறுப்பினர் கி. தளபதிராஜ், பொதுக்குழு உறுப்பினர் தங்க. தனலட்சுமி, வழக்குரைஞர் துரை அருண், வழக்குரைஞர் செ. துரை, மாநில மகளிரணி துணை செயலாளர் வி.கே.ஆர். பெரியார்செல்வி, பெரியார் சுயமரியாதைத் திருமண நிலைய இயக்குநர் பசும்பொன், வடசென்னை மகளிர் பாசறைத் தலைவர்
த. மரகதமணி, உத்ரா, க.கலைமணி, சி. காமராசு, அரும்பாக்கம் சா.தாமோதரன், அயன்புரம் சு. துரைராசு, கோ. தங்கமணி உள்ளிட்ட தோழர்கள் பெருந்திரளாக கூடியிருந்தனர்.
- விடுதலை நாளேடு, 30.07.2026
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக