வெள்ளி, 20 செப்டம்பர், 2024

பகுத்தறிவுப் பகலவன் 146ஆவது பிறந்த நாள் தமிழ்நாடெங்கும் கழகத் தோழர்கள் தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை


விடுதலை நாளேடு, Published September 20, 2024



பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்களின் பிறந்த நாள் (17.9.2024) தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து எழுச்சியுடன் கொண்டாடிய கழகத் தோழர்கள்


தந்தை பெரியாரின் 146 ஆம் ஆண்டு பிறந்த நாள்: கழகத் துணைத் தலைவரின் தலைமையில் சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்பு!

 


விடுதலை நாளேடு

சென்னை, செப்.17 பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரின் 146 ஆம் ஆண்டு பிறந்த நாளான இன்று (17.9.2024) சென்னை பெரியார் திடலில் உள்ள அவரது சிலைக்குக் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் தலைமையில் மாலை அணிவித்து, பெரியார் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தப்பட்டு, சமூகநீதி நாள் உறுதிமொழி எடுக்கப்பட்டது. இந்நிகழ்வில் திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் தலைவர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன், கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ், கழகப் பொருளாளர் வீ.குமரேசன், கழகத் துணைப் பொதுச்செயலாளர்கள் ச.இன்பக்கனி, சே.மெ.மதிவதனி மற்றும் மகளிரணி, இளைஞரணி தோழர்கள் பங்கேற்றனர்.

அறிவாசான் தந்தை பெரியார் 146ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா- கருத்தரங்கம்


அய்யா, அம்மா சிலை – நினைவிடத்தில் மாலை – மலர் வளையம் வைத்து
கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் தலைமையில் உறுதி மொழி ஏற்பு

சென்னை, செப்.17– அறிவாசான் தந்தை பெரியார் அவர்களின் 146ஆம் ஆண்டு பிறந்த நாளான இன்று காலை பெரியார் திடலில் அமைந்திருக்கும் அவரது சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டும், நினைவிடத்தில் மலர் வளையம் வைக்கப்பட்டும் கழகத் துணைத் தலைவர் தலைமையில் உறுதிமொழி ஏற்கப்பட்டது.

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்களின் 146ஆம் ஆண்டு பிறந்த நாளான இன்று (17.9.2024) அப்பெருவிழா உலகமெங்கும் உள்ள பகுத்தறிவாளர்களால் கொண்டாடப்படுகிறது.

இன்று காலை 10 மணியளவில் சென்னை பெரியார் திடலில் கூடியிருந்த திராவிடர் கழக தோழர் – தோழியர்கள் பெருந்திரளாக அணி வகுத்து பெரியார் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலையில் அமைந்துள்ள அன்னை மணியம்மையார் சிலைக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டது. திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் அவர்களின் தலைமையில் பெரியார் திடலில் அமைந்துள்ள தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு, சிலையின் கீழே வைக்கப்பட்டிருந்த படத்திற்கு மலர் மாலை வைத்தும் மரியாதை செலுத்தப்பட்டது.
தந்தை பெரியார் நினைவிடத்தில் மலர் வளையம் வைக்கப்பட்டு, கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் அவர்கள் தந்தை பெரியார் பிறந்த நாள் – ‘சமூகநீதி நாள் உறுதிமொழி’ கூற, கூடியிருந்த கழகத் தோழர்கள் அனைவரும் உறுதிமொழி ஏற்றனர்.

சமூகநீதிநாள் உறுதிமொழி வருமாறு:

‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்ற அன்பு நெறியும் – ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்ற பண்பு நெறியும் எனது வாழ்வியல் வழிமுறையாகக் கடைப்பிடிப்பேன்!
சுயமரியாதை ஆளுமைத் திறனும் – பகுத்தறிவுக் கூர்மைப் பார்வையும் கொண்டதாக என்னுடைய செயல்பாடுகள் அமையும்!

சமத்துவம், சகோதரத்துவம், சமதர்மம் ஆகிய கொள்கைகளுக்காக என்னை நான் ஒப்படைத்துக் கொள்வேன்!
மானுடப் பற்றும், மனிதாபிமானமும் ஒன்றே எனது இரத்த ஓட்டமாக அமையும்!
சமூகநீதியையே அடித்தளமாகக் கொண்ட சமுதாயம் அமைக்கும் எனது பயணம் தொடர இந்த நாளில் உறுதியேற்கிறேன்!”

தந்தை பெரியார் வாழ்க! அன்னை மணியம்மையார் வாழ்க!! தமிழர் தலைவர் வாழ்க!!! என ஒலி முழக்கத்துடன் உறுதிமொழி ஏற்கப்பட்டது.

முன்னதாக அன்னை மணியம்மையார் நினைவிடம், சுயமரியாதை சுடரொளிகள் நினைவிடம் ஆகிய இடங்களில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தப்பட்டது.

கம்யூனிஸ்ட்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா. முத்தரசன் தலைமையில் தோழர்கள் திரளாக வந்து பெரியார் நினைவிடத்தில் மலர் மாலை வைத்து மரியாதை செலுத்தினர்.
திராவிடர் இயக்க தமிழர் பேரவையின் நிறுவனர் பேராசிரியர் சுப. வீரபாண்டியன் தலைமையில் தோழர்களுடன் பெரியார் நினைவிடத்தில் மலர் மாலை வைத்து மரியாதை செலுத்தப்பட்டது.

காங்கிரஸ்

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் செல்வப் பெருந்தகை தலைமையில் பெரியார் நினைவிடத்தில் மலர் மாலை வைத்து மரியாதை செலுத்தப்பட்டது. மயிலாடுதுறைத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் சுதா உடனிருந்தார்.

தமிழக வெற்றிக் கழகம்

தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வில்லிவாக்கம் பகுதி தலைவர் ஜெ. அஸ்வின் தலைமையில் தோழர்கள் பெரியார் நினைவிடத்தில் மலர் மாலை வைத்து மரியாதை செலுத்தினர்.

முன்னதாக பெரியார் நினைவிடத்தில் பெரியார் மருத்துவமனை இயக்குநர் டாக்டர் மீனாம்பாள் தலைமையிலும், திராவிடன் நல நிதி சார்பில் அருள்செல்வன் தலைமையிலும், பெரியார் அய்.ஏ.எஸ்., பயிற்சி மய்யத்தின் சார்பில் இருதயநாத் தலைமையிலும், திராவிட தொழிலாளரணி, திராவிடர் கழக மகளிரணி, பெரியார் நூலக வாசகர் வட்டம் சார்பிலும் மலர் மாலை வைத்து மரியாதை செலுத்தப்பட்டது.

பிற்படுத்தப்பட்டோர்

அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் கோ.கருணாநிதி அவர்களின் தலைமையில் பெரியார் நினைவிடத்தில் மலர் மாலை வைத்து மரியாதை செலுத்தப்பட்டது.

இதில் பி.இ. சுதீர்குமார் (NIA), சுரேஷ் (AVT), ஆரோக்கியராஜ் (BOB), நடராஜன் (VBI) சந்திரன், ரவிகுமார், சத்தியமூர்த்தி, லோகேஷ் பிரபு, ரவியரசு, அருள் ஆகியோர் பங்கேற்று மரியாதை செலுத்தினர்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் தலைமையில் பெரியார் திடலில் உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
தந்தை பெரியார் பிறந்த நாள் நிகழ்வில் திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன், பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ், பொருளாளர் வீ.குமரேசன், பிரச்சார செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி, செயலவைத் தலைவர் வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி, துணைப் பொதுச் செயலாளர்கள் பொறியாளர் ச.இன்பக்கனி, வழக்குரைஞர்சே.மெ.மதிவதனி, திராவிட மகளிர் பாசறை மாநில செயலாளர் வழக்குரைஞர் பா.மணியம்மை, தலைமைக் கழக அமைப்பாளர் பொன்னேரி வி.பன்னீர்செல்வம், பகுத்தறிவாளர் கழக தலைவர் இரா. தமிழ்ச்செல்வன், துணைத் தலைவர் பொறியாளர் வேல்.சோ. நெடுமாறன், பொதுச் செயலாளர் ஆ.வெங்கடேசன், ஆடிட்டர் ஆர்.இராமச்சந்திரன், வட சென்னை மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் தளபதி பாண்டியன், செயலாளர் புரசை சு.அன்புச்செல்வன், தென்சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன், செயலாளர் செ.ர.பார்த்தசாரதி, துணைத் தலைவர் மயிலை சேதுராமன், தாம்பரம் மாவட்டத் தலைவர் ப.முத்தையன், செயலாளர்
கோ.நாத்திகன், சோழிங்கநல்லூர் மாவட்ட காப்பாளர் நீலாங்கரை ஆர்.டி. வீரபத்திரன், மாவட்டத் தலைவர் வே. பாண்டு, மாவட்ட இளைஞரணி தலைவர் நித்தியனாந்தம், திருவொற்றியூர் மாவட்டத் தலைவர் எண்ணூர் வெ.மு.மோகன் மற்றும் புலவர் வீரமணி, பேராசிரியர் தேவராஜ், வழக்குரைஞர் பிரசன்னா, வழக்குரைஞர்கள் ஆம்பூர் துரை, துரை. அருண், சி.வெற்றிச்செல்வி, சி. காமராஜ், க. பெரியார்செல்வி, பெரியார் சுயமரியாதை திருமண நிலைய இயக்குநர் பசும்பொன், பெரியார் களம் இறைவி, இளவேனில் ஜெயகுமார் மற்றும் திரளான தோழர்கள் பங்கேற்று மரியாதை செலுத்தினர்.

தந்தை பெரியாரின் 146ஆவது பிறந்த நாள் பெருவிழா அனைத்துக் கட்சித் தலைவர்கள் தந்தை பெரியார் நினைவிடத்தில் மரியாதை


அறிஞர் அண்ணாவின் 116ஆவது பிறந்த நாள் சிலைக்கு கழகத் துணைத் தலைவர் மாலை அணிவிப்பு

 

Published September 15, 2024, விடுதலை நாளேடு

சென்னை, செப்.15– அறிஞர் அண்ணாவின்116ஆம் ஆண்டு பிறந்த நாளான இன்று (15.9.2024) அவரது சிலைக்கு கழகத் துணைத் தலைவர் மாலை அணிவித்தும் படத்திற்கு மலர் தூவியும் மரியாதை செலுத்தினார்.

தி.மு. கழக நிறுவனர், தமிழ்நாடு மேனாள் முதலமைச்சர் அறிஞர் அண்ணா அவர்களின் 116ஆம் ஆண்டு பிறந்த நாளான இன்று (15.9.2024) காலை 10 மணியளவில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் அமைந்திருக்கும் அவரது சிலைக்கு திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் அவர்கள் மலர் மாலை அணிவித்தும், சிலைக்கு கீழே வைக்கப்பட்டிருந்த அறிஞர் அண்ணாவின் படத்திற்கு மலர் தூவியும் மரியாதை செலுத்தினார்.

இந்நிகழ்வில் கழக செயலவைத் தலைவர் வழக்குரைஞர் வீரமர்த்தினி, துணைப் பொதுச் செயலாளர் ச. இன்பகனி, தலைமைக் கழக அமைப்பாளர் பன்னீர்செல்வம், வழக்குரைஞர் சு. குமாரதேவன், மாநில இளைஞரணி துணை செயலாளர் சோ. சுரேஷ், சி. வெற்றிச்செல்வி, பெரியார் சுயமரியாதை திருமண நிலைய இயக்குநர் பசும்பொன், மு. பவானி, தங்க. தனலட்சமி, மரகதமணி, தென் சென்னை மாவட்டத் தலைவர் இரா. வில்வநாதன், செயலாளர் பார்த்தசாரதி, துணைத் தலைவர் மயிலை சேதுராமன்,
மு. சேகர், பழனிபாலு, தாம்பரம் மா. குணசேகரன், செல்லப்பன், ஜனார்த்தனம், வடசென்னை கணேசன், ஓட்டேரி பாஸ்கர் அயன்புரம் துரைராஜ், கொடுங்கையூர் தங்கமணி, வழக்குரைஞர் அருண், துரை.வேலவன், சூளைமேடு ராமச்சந்திரன், சா. மாரியப்பன், விருகை செல்வம், சண்முகபிரியன், கலைமணி, ஆனந்தன், மகேஷ், பார்த்திபன், எண்ணூர் மோகன், கலைஞர் கருணாநிதி நகர் கரு. அண்ணாமலை, ரங்கநாதன், எம்.ஜி.ஆர். நகர் மூவேந்தன். ஆவடி மாவட்ட அமைப்பாளர் உடுமலை, வழக்குரைஞர் ேவலவன், பெரியார் பிஞ்சு சாரல், செம்பியம் கோபாலகிருஷ்ணன், வியாசர்பாடி செல்வராஜ், பெரியார் செல்வி, சி. காமராஜ், இர. அருள், செந்தமிழ் சேகுவெரா, தெ.செ.மா. இளைஞரணிச் செயலாளர் ந. மணிதுரை மற்றும் திரளான கழகத் தோழர்கள் பங்கேற்று மரியதை செலுத்தினர்.

------------------------------------------------------------------------------------------------------------------------






ஞாயிறு, 15 செப்டம்பர், 2024

தே.செ.கோபால் - க.நிர்மலா வாழ்க்கைத் துணைநல ஒப்பந்த விழா (8.9.1996 )

 வடசென்னை கொடுங்கையூர் பகுதியைச் சேர்ந்த தே.பெ.ஜெயராமன் _ கண்ணம்மாள் ஆகியோரது செல்வனும் கொடுங்கையூர் நகர தி.க. தலைவருமான தே.செ.கோபால் அவர்களுக்கும், மறைந்த கன்னியப்பன் _ லட்சுமியம்மாள் ஆகியோரின் செல்வியுமான க.நிர்மலா அவர்களுக்கும் வாழ்க்கைத் துணைநல ஒப்பந்த விழாவை 8.9.1996 அன்று பெரியார் திடலில் தலைமையேற்று நடத்திவைத்தேன். விழாவில் முக்கிய பிரமுகர்களும் மற்றும் ஏராளமான கழகத் தோழர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர். திருச்சிக்கு கழகப் பொருளாளர் இல்லத் திருமண விழாவில் கலந்துகொள்ள புறப்பட்டேன்.

வாழ்விணையர் தே.செ.கோபால் – க.நிர்மலா ஆகியோரின் வாழ்க்கைத் துணைநல ஒப்பந்த நிகழ்ச்சிக்கு தலைமையேற்று நடத்தி வைக்கும் ஆசிரியர்

-கட்டுரையின் ஒரு பகுதி

அய்யாவின் அடிச்சுவட்டில்… : இயக்க வரலாறான தன் வரலாறு (270)

ஜுலை 1-15,2021

சட்ட விரோதமாகத் தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.பி.ஜீவன்ரெட்டி, கே.எஸ்.பரிபூர்ண அய்யங்கார் ஆகியோரின் கொடும்பாவி எரிப்புப் போராட்டம்(23.8.1996)

 

அய்யாவின் அடிச்சுவட்டில்… : இயக்க வரலாறான தன் வரலாறு (270)

ஜுலை 1-15,2021


கி.வீரமணி

சட்ட விரோதமாகத் தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.பி.ஜீவன்ரெட்டி, கே.எஸ்.பரிபூர்ண அய்யங்கார் ஆகியோரின் கொடும்பாவி எரிப்புப் போராட்டம் தமிழ்நாடு முழுவதும் 23.8.1996 அன்று கழகத் தோழர்களின் முழு ஒத்துழைப்போடு நடைபெற்றது. தமிழ்நாட்டில் 69 விழுக்காடு இடஒதுக்கீடு நடைமுறையில் உள்ளது. 31சி சட்டம் நிறைவேற்றப்பட்டு அரசியல் சட்டம் ஒன்பதாவது அட்டவணைப் பாதுகாப்பும் பெற்றுள்ளது. 9ஆவது அட்டவணைப் பாதுகாப்புப் பெற்றுவிட்டால் அதில் எந்த நீதிமன்றமும் தலையிட முடியாது என்பதுதான் சட்டத்தின் நிலை. வேலியே பயிரை மேய்வது போல, சட்ட விரோதமாக உச்சநீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பு வழங்கியிருப்பது மோசமான முன்னுதாரணம். அதனைக் கண்டிக்கும் வகையில் சென்னையில் நடைபெற்ற கொடும்பாவி எரிப்புப் போராட்டத்தில் கலந்துகொண்டேன்.

கழகத் தோழர்கள் இரண்டு இரண்டு பேராக அணிவகுத்து “கொளுத்துவோம்! கொளுத்துவோம்! பார்ப்பன நீதிபதிகளின் பொம்மைகளைக் கொளுத்துவோம்!’’ காப்போம்! காப்போம்! வகுப்புரிமையைக் காப்போம்! ஆகிய முழக்கங்களுடன் தோழர்களை வாழ்த்தி  பெரியார் திடலிலிருந்து புறப்பட்டோம். காவல் துறையினர் தடுத்ததால், ஈ.வெ.கி.சம்பத் சாலையில் அந்த நீதிபதிகளின் கொடும்பாவிகளுக்கு தீ வைக்கப்பட்டது. அப்போது கூடியிருந்த தோழர்களுடன் உரையாற்றுகையில், “இன்றைக்கு வைக்கப்பட்ட தீ சமூக அநீதிக்கு வைக்கப்பட்ட தீயாகும். இந்தத் தீ நாடு முழுவதும் கொழுந்துவிட்டு எரியட்டும். பெரியார் சுடர் உங்கள் கையில் உள்ளது. (சமூக நீதியினை பாதுகாக்கவே இது. தனிப்பட்ட விருப்பு, வெறுப்பு அல்ல).

நம்முடைய உணர்வுகளைப் புரிந்துகொள்ள வேண்டியவர்கள் புரிந்துகொள்ளட்டும். 1948இல் நடைபெற்ற தூத்துக்குடி மாநாட்டில் தந்தை பெரியார் அவர்கள் உரையாற்றும்போது, “நான் இறந்தாலும் ஏனைய திராவிடர் கழகத் தோழர்கள் ஏமாந்து விட மாட்டார்கள். எனது  வேலையை அப்படியே விட்டுவிட மாட்டார்கள். தொடர்ந்து போராடி வெற்றி பெறுவார்கள்’’ எனக் கூறியதை நினைவுபடுத்த விரும்புகிறேன். சிறை வாசம் நமக்குப் புதியதல்ல. அரசியல் சட்டப் பிரிவைக் கொளுத்தினோம். அய்யா ஆணைப்படி 6 மாதம் முதல் 3 ஆண்டுகள் வரை சிறை புகுந்தோம். 16 உயிர்களை பலி கொடுத்தோம். அதற்கு முன்னம் எத்தனை எத்தனைப் போராட்டங்கள். நன்றியுள்ள தமிழ்ப் பெருமக்களே, ஒத்துழைப்பு நல்குங்கள். நாங்கள் எங்களுக்காக _ எங்கள் பிள்ளை குட்டிகளின் வாழ்வுக்காக அல்ல சிறையேகுவது! உங்களுக்காக உங்களின் சந்ததிக்காக’’ எனக் கூறினேன். பிறகு போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரும்  சென்னை காவல் துறையால் கைது செய்யப்பட்டோம். இந்தப் போராட்டம் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் எழுச்சியோடு நடைபெற்றது. திருவாரூரில் அய்யாயிரம் பேர் பேரணியாகச் சென்று சமூகநீதிப் போராட்டத்திற்கு சிறப்பான பங்களிப்பைச் செய்தனர். சென்னையில் பட்டாளம் பன்னீர்செல்வம் _ கலைச்செல்வி ஆகியோரும் அவரது 3 வயது பெண் குழந்தை மணியம்மையும் கைது செய்யப்பட்டனர். குடும்பம் குடும்பமாக கழகப் பொறுப்பாளர்களும், தோழர்களும் கைது செய்யப்பட்டது. போராட்டத்தின் ஆழத்தை மக்களுக்கு எடுத்துக் கூறும் வகையில் அமைந்திருந்தது.

நீதிபதிகள் கொடும்பாவி எரிப்பில் கலந்து கொள்ளும் கழகத் தோழர்கள் மற்றும் அவர்களை வழி நடத்தும் ஆசிரியருடன் கழகப் பொறுப்பாளர்கள்

கைது செய்யப்பட்டு கழகத் தோழர்களுடன் கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் இருக்கையில், உடல்நிலை பாதிக்கப்பட்டு உடனடியாக ஒரு நர்சை அழைத்து வந்து இரத்த அழுத்தம்  பரிசோதிக்கப்பட்டது. பின்பு மருத்துவர்கள் ஆலோசனைப்படி ஓய்வு தேவை எனவும், மருத்துவமனையில் சேர்க்கலாம் என்றும் கூறினார்கள். அப்பொழுது அதனை ஏற்க மறுத்து, “நான் சிறைக்குள் சென்று அங்கு செத்தாலும் சாவேனே தவிர, சிறைக்குப் போகாமல் மருத்துவமனையில் சேரமாட்டேன்’’ என்று மறுத்துவிட்டேன்.

சென்னை 14ஆவது குற்றவியல் நீதிபதி முன்பு ஆஜர் செய்யப்பட்டு 14 நாள்கள் (செப்டம்பர் 6 வரை) காவலில் வைக்க உத்தரவிடப்பட்டது. சென்னை மத்திய சிறையில் இடம் இல்லை என்று காரணம் கூறப்பட்டது. பின்பு, காவல்துறை வேனிலே இரவு 11:00 மணிக்கு புறப்பட்டு வேலூர் சிறையில் விடியற்காலை அடைக்கப்பட்டோம். (இது கலைஞர் முதல்வராக இருந்த தி.மு.க ஆட்சியில் தான் நடைபெற்றது.)

கொடும்பாவி எரிப்பினைத் தொடர்ந்து கைதாகும் ஆசிரியருடன் கழகப் பொறுப்பாளர்கள்

இந்த கைது நடவடிக்கையைக் கண்டித்து நாட்டின் பல்வேறு பகுதியில் மக்கள் கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர். கழகத் தொண்டர்களையும், என்னையும் விடுதலை செய்ய முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, வை.கோபால்சாமி, சிங்கப்பூர் வாழ் சுயமரியாதை இயக்கத்தவர்கள், திருநாவுக்கரசு, தமிழ் உணர்வாளர்கள், அமெரிக்கா வாழ் தமிழ் அமைப்புகள், உலகமெங்கும் வாழும் பல்வேறு சமூக அமைப்பின் தலைவர்கள் அரசுக்கு வேண்டுகோள் வாயிலாக எடுத்துக் கூறியிருந்தனர். மாணவர்கள் சில பகுதிகளில் வகுப்புகளைப் புறக்கணித்து கைது நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

பதினான்கு நாள்கள் வேலூர் சிறை வாசத்தினைத் தொடர்ந்து 6.9.1996 அன்று பகல் 1:00 மணியளவில் சென்னை, எழும்பூரில் உள்ள 14ஆவது பெருநகரக் குற்றவியல் நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டோம். வழி நெடுக சமூகநீதிக்கு ஆதரவாகவும், சமூகநீதிக்கு எதிரானவர்களுக்கு எதிராகவும் முழக்கமிட்டுக் கொண்டே கழகத் தோழர்கள் இருந்தனர். என்னுடன் சேர்ந்து 175 பேர் ஆஜர்படுத்தப்பட்டு அரசுத் தரப்பில் காவலை நீட்டிக்க வற்புறுத்தாத காரணத்தால், அனைவரையும் விடுதலை செய்வதாக நீதிபதி அறிவித்தார். அனைவரும் உடனே விடுதலை செய்யப்பட்டோம். கழக வழக்கறிஞர் பாளையங்கோட்டை சண்முகம், கழகத் துணைப் பொதுச் செயலாளர் வழக்கறிஞர் கோ.சாமிதுரை, த.வீரசேகரன், அ.அருள்மொழி மற்றும் இரத்தினகுமார் ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராயினர். மாவட்டத்தின் பல்வேறு பகுதியிலிருந்து ஏராளமான கழகப் பொறுப்பாளர்கள் நீதிமன்றத்திற்கு வந்திருந்தனர். சென்¬னையைத் தொடர்ந்து பல்வேறு மாவட்டத்தில் கைது செய்யப்பட்ட தோழர்களும் விடுதலை செய்யப்பட்டனர். இரு தினங்களுக்குப் பிறகு கழகத் தோழர்களின் இல்ல நிகழ்வுகளில் கலந்துகொண்டேன்.


கட்டுரையின் ஒரு பகுதி....

ஈழத்தமிழர் படுகொலையைக் கண்டித்து இலங்கைத் தூதரகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம்(20.8.1996)

 

ஈழத்தமிழர் படுகொலையைக் கண்டித்து இலங்கைத் தூதரகம் முன்பு கண்டனஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு உரையாற்றும் ஆசிரியர் மற்றும் கழகத் தோழர்கள்

20.8.1996 அன்று ஈழத்தமிழர்கள் படுகொலையைக் கண்டித்து இலங்கை தூதர் அலுவலகத்தின் முன்பு திராவிடர் கழகத்தின் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பல்வேறு மாவட்டங்களிலிருந்து ஏராளமான தோழர்கள் காலை முதலே அண்ணாசாலையில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு முன்பு வரத் தொடங்கினார்கள். ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள், கொல்லாதே! கொல்லாதே! ஈழத் தமிழர்களைக் கொல்லாதே! என குரல் எழுப்பி முழக்கமிட்டனர். தமிழ் உணர்வாளர்கள் என பொதுமக்கள் பலரும் கலந்துகொண்டனர்.

நண்பகல் வெயிலையும் பொருட்படுத்தாது அங்குக் கூடியிருந்த கழகத்தினர் மற்றும் பொதுமக்கள் மத்தியில் உரையாற்றுகையில், “நாம் மிகுந்த வேதனையோடும், கனத்த நெஞ்சத்தோடும் சிங்கள அரசை எதிர்த்து இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்திலே ஈடுபட்டிருக்கிறோம். அங்கு தமிழர்கள் படுகொலை செய்யப்படுகிறார்கள். தமிழச்சிகளினுடைய கற்பு சூறையாடப்படுகிறது. நம்முடைய தாய்த்திரு நாட்டிற்கு அகதிகளாக வந்தால்தான் பாதுகாப்பாக இருக்க முடியும் என்று கருதி அங்குள்ள தமிழர்கள் அகதிகளாக ஓடி வருகிறார்கள். இனப் படுகொலைக்கு எதிராக அய்.நா. சாசனத்திலேயே விதிமுறை இருக்கிறது. இதைக் கேட்க நமக்கு உரிமை இருக்கிறது. ஆகவே, கேட்கின்றோம்’’ என கூடியிருந்த கழகத்தினர் மத்தியில் உரையாற்றினேன்.

(நினைவுகள் நீளும்…)

(கட்டுரையின் ஒரு பகுதி)

அய்யாவின் அடிச்சுவட்டில்…இயக்க வரலாறான தன் வரலாறு (271)

ஜுன் 16-30 ,2021

புதுக்கோட்டை திராவிடர் கழக இளைஞரணி மாநில மாநாடு (10.8.1996)

 

அய்யாவின் அடிச்சுவட்டில்…இயக்க வரலாறான தன் வரலாறு (271) (கட்டுரையின் ஒரு பகுதி)

ஜுன் 16-30 ,2021

உண்மை இதழ்

புதுக்கோட்டை திராவிடர் கழக இளைஞரணி மாநில மாநாட்டில் ஆசிரியருக்கு எடைக்கு எடை வெள்ளி வழங்கும் காட்சி

10.8.1996 அன்று திராவிடர் கழக இளைஞரணி மாநில மாநாடு புதுக்கோட்டையில் மிகுந்த எழுச்சியுடன் நடைபெற்றது. நகரமெங்கும் கழகக் கொடித் தோரணம்கூரையில் பொலிவுடன் சிறப்பாக அலங்கரிக்கப்பட்டு இருந்தது. தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலிருந்து மட்டுமின்றி, கர்நாடகம், மராட்டியம், ஆந்திரா மாநிலங்களிலிருந்தும் கழகக் குடும்பத்தினர் குவிந்தனர்.

மாநாட்டிற்கு வரவேற்கும் விதமாக புதுக்கோட்டை எல்லையில் 25 மோட்டார் சைக்கிள்களிலும், வேன்களிலும் ஏராளமான கழகத் தோழர்கள் வரவேற்று முழக்கமிட்டனர். மாநாட்டையொட்டி, அறிவியல் கண்காட்சி, புத்தக விற்பனை, கருத்தரங்கு, சுயமரியாதைச் சுடரொளிகள் படத்திறப்பு என விழாக் கோலம் பூண்டது.

புதுக்கோட்டையைக் குலுக்கும் வகையில் சிறப்பான பேரணி நடைபெற்றது. இளைஞரணி அணிவகுப்பு, மூடநம்பிக்கை ஒழிப்பு நிகழ்ச்சிகள் என சிறப்பான வகையில் மாவட்டப் பொறுப்பாளர்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஊர்வலம் _ கீழ ராஜவீதி, அண்ணாசாலை வழியாக வந்து இரவு 8:00 மணிக்கு மாநாட்டுப் பந்தலை அடைந்தது. அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் என்னை அமர வைத்து கழகத் தோழர்கள் பெரும் ஆரவாரத்துடன் அழைத்துச் சென்றனர்.

மாநாட்டு மேடையில் பெண்களின் அடிமைச் சின்னமெனும் தாலியை நீலமலை மாவட்ட தி.க. செயலாளர் கருணாகரன் அவர்களது துணைவியார் ஜோதி அவர்களும், நீலமலை மாவட்ட தி.க. இளைஞரணி செயலாளர் இரா.தாமோதரன் அவர்களது துணைவியார் மகேஸ்வரி அவர்களும் மேடையிலேயே  அகற்றினர்.

மாநாட்டில் நிறைவுரையாற்றுவதற்கு முன்பாக கழகத் தோழர்கள் பெரிய தராசினை மேடையின் மய்யப் பகுதியில் கொண்டு வந்து ஒரு தட்டில் என்னை அமர வைத்து எடைக்கு எடை வெள்ளி வழங்கும் நிகழ்வினை பெரும் மகிழ்ச்சியோடு நிகழ்த்தினர். புது வரலாறு படைத்த மாநாட்டில் உரையாற்றுகையில், “எனக்கு நீங்கள் எடைக்கு எடை வெள்ளி கொடுத்து என்னை பெருமைப்படுத்தினாலும், நான் அமர்ந்திருந்த பொழுது எனக்கு முன்னால் வைக்கப்பட்டிருந்த அய்யா, அம்மா படத்திற்கே அது காணிக்கை என்பதை நன்றியுணர்ச்சியோடு, அடக்கத்தோடு கூறிக் கொள்கிறேன். இங்கு எனக்கு மிகுந்த உணர்ச்சியும் நெகிழ்ச்சியும் ஏற்பட்டிருக்கின்றது.

இந்த இளைஞரணி மாநாட்டை நம்முடைய புதுக்கோட்டை மாவட்டத் திராவிடர் கழகத் தலைவர் புட்பநாதன் மற்றும் செயலாளர், இளைஞரணி செயலாளர் என அனைத்து பொறுப்பாளர்களும் மிகச் சிறப்பான அளவுக்குப் பணியாற்றி சிறப்பித்திருப்பதைக் காண முடிகிறது. நம்மைப் பற்றிப் பலர் குற்றம் சொன்ன காலத்திலும், நமது இயக்கம் என்ன சாதித்தது என்று கேட்க வந்த காலத்திலும் நாம் அவர்களை இலட்சியம் செய்து பதில் சொல்லிக் கொண்டிராமல் நமது இலட்சியத்திலேயே கவலை வைத்துக் கொண்டு, ‘நாம் அப்படித்தான் செய்வோம், இஷ்டமிருந்தால் பின்பற்றி வா, இல்லாவிட்டால் உன் வேலையைப் பார்த்துக் கொண்டு போ! அதன் பேரிலோ நமது கொள்கையின் பேரிலோ, நமது செய்கையின் பேரிலோ ஆதிக்கம் செலுத்த வேறு யாருக்கும் உரிமை இல்லை! என்று சொல்லிக் கொண்டு வந்த உறுதியான நிலைமையேதான் நல்லதோ, கெடுதியோ நமது இயக்கத்தின் தற்கால நிலைமைக்குக் காரணமாக இருந்து வருகிறது. தந்தை பெரியார் அவர்கள் இதனை தெளிவாகச் சொல்லியிருக்கின்றார்.

பொருளாளர் தஞ்சை கா.மா.குப்புசாமி அவர்களது சீரிய முயற்சியால் இந்த நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. நாம் எப்பொழுதுமே கொள்கை ரீதியாக இருப்போம். கொள்கை ரீதியாக இருந்தால் யாரோடும் இருப்போம். அந்தக் கொள்கையைச் செயல்படுத்தவில்லை என்றால் யாரைப் பற்றியும் கவலைப்பட மாட்டோம். இதை எப்பொழுது கையாண்டார்கள் என்பதே பல பேருக்குத் தெரியாது. இதை எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டும். நீ பெரியாரா என்று கேட்கலாம். நான் பெரியார் அல்ல; ஆனால், பெரியாருடைய காலடியில் இருந்த மண்ணுக்குரிய புத்திகூட இந்த நாட்டில் உள்ள மிகப் பெரிய அரசியல் தலைவர்களுக்கு அனுபவ சிந்தனை உடையது என்பதைச் சவால் விட்டு என்னால் கூற முடியும். ஆகவேதான், சொல்லுவது, சுட்டிக்காட்டுவது எங்களுடைய கடமை; எங்களுக்குரிய உரிமை. தமிழகத்தில் நாங்கள் எதற்கிருக்கின்றோம்? இந்த இனத்துக்குச் சோதனை வரும்பொழுது, சமூகநீதிக்குக் கேடு வரும்பொழுது, மதச்சார்பின்மைக்கு ஆபத்து வரும்பொழுது தற்கொலைப் பட்டாளமாக மாறுவோம், மாறித்தான் தீருவோம்!

கூடியிருக்கும் இளைஞர்களே, நீங்கள் என் மீது வைத்திருக்கின்ற நம்பிக்கைக்கு துரோகம் செய்யாமல் தந்தை பெரியார் அவர்களுடைய கொள்கையை இறுதிமூச்சு அடங்குகிறவரை செய்து கொண்டிருப்பேன். உங்களுடைய நம்பிக்கையைப்  பாழாக்க மாட்டேன்’’ என பல்வேறு கருத்துகளை இளைஞர்கள் மனத்தில் படும்படி எடுத்துக் கூறினேன். நெல்லையில் இருந்து சென்னை திரும்பி விடுதலையில் முக்கிய அறிக்கை ஒன்றை வெளியிட்டோம்.

_ கி.வீரமணி

புத்தக நிலைய மேனாள் மேலாளர் த.க. நடராசன் படத் திறப்பு

 

விடுதலை நாளேடு