திங்கள், 5 ஆகஸ்ட், 2024

கும்பகோணத்தில் நடைபெற்ற திராவிடர் கழகப் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்!

அரசு ஊழியர்கள் ஆர்.எஸ்.எஸ். நடவடிக்கைகளில் பங்குகொள்ளலாம் என்ற ஒன்றிய அரசின் ஆணைைய ரத்து செய்க! கும்பகோணத்தில் நடைபெற்ற திராவிடர் கழகப் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்!

 * 21 மொழிகளில் தந்தை பெரியார் படைப்புகளை மொழியாக்கம் செய்துள்ள ‘திராவிட மாடல்’ முதலமைச்சருக்குப் பாராட்டு – நன்றி! * ‘‘பெரியார் உலகம்’’ நிர்மாணிக்கும் பணிக்கு ஆதரவு தாரீர்!

* நிதி திரட்டுவதைக் கட்டளை தீர்மானமாகக் கொள்வோம்! சுயமரியாதை இயக்க நூற்றாண்டை ஆண்டு முழுவதும் கொள்கை ரீதியாகக் கொண்டாடுவோம் – கடைகோடி மக்களுக்கும் கொண்டு செல்வோம்!

கும்பகோணம், ஆக.4 தந்தை பெரியார் படைப்புகளை 21 மொழிகளில் மொழியாக்கம் செய்துள்ள ‘திராவிட மாடல்‘ அரசின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்குப் பாராட்டும், நன்றியும் தெரிவித்தும், சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டு விழாவை நாடு முழுவதும் சிறப்பாகக் கொள்கை நோக்கோடு கொண்டாடுவது என்றும், பெரியார் உலகை நிர்மாணிக்க ஆதரவு கோரியும்– கும்பகோணத்தில் இன்று (4.8.2024) நடைபெற்ற திராவிடர் கழகப் பொதுக்குழுவில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:

தீர்மானம் 1:

இரங்கல் தீர்மானம்  ம.தி.மு.க. பொருளாளர், ஈரோடு மக்களவை மேனாள் உறுப்பினர் அ.கணேசமூர்த்தி வயது-77 (மறைவு 28-03.2024), விக்கிரவாண்டி சட்டமன்ற தி.மு.க. உறுப்பினர் புகழேந்தி வயது-71 (மறைவு
06-4-2024), திராவிட இயக்க மூத்த தலைவர்
ஆர்.எம்.வீரப்பன் வயது97, (மறைவு 09-04-2024), ஈழத் தமிழர் போராளி ஈழவேந்தன் வயது-91 (மறைவு 29-04-2024), தினத்தந்தி மேனாள் ஆசிரியர்
அய்.சண்முகநாதன் வயது-90 (03-05-2024), இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னணி தோழர், நாகப்பட்டினம் மக்களவை மேனாள் உறுப்பினர் தோழர் எம்.செல்வராஜ் வயது-67 (மறைவு
13-05-2024), இலங்கை மேனாள் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் வயது-91 (மறைவு
30-06-2024), பெரியார் மணியம்மை பல்கலைக் கழக ஆட்சி மன்றக் குழுவின் மேனாள் உறுப்பினர் பேராசிரியர் ஜெ.இராமலிங்கம் வயது-95 (மறைவு 04-072024),
தமிழ்நாடு பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் வயது-51 (மறைவு 05-07-2024), தி.மு.க.வைச் சேர்ந்த கோபி மேனாள் நாடாளுமன்ற உறுப்பினர் வி.பி.சண்முக சுந்தரம் வயது-80 (மறைவு
20-07-2024), எழுத்தாளர் கவிஞர் செவ்வியன் (மறைவு 02-08-2024), சிங்கப்பூர் திருமதி பூங்கொடி வயது-73 (மறைவு 07-04-2024), சிங்கப்பூர் தோழர் கோபிநாதன் வயது-70, (மறைவு 04-05-2024), பெங்களூரு கழகத் தோழர் பொன்மலர் வரதராஜன் வயது-65 (மறைவு 07-07-2024), ‘அந்திமழை’ மாத இதழின் ஆசிரியர் தோழர் ந.இளங்கோவன் வயது-55 (மறைவு
28-07-2024) ஆகிய பெருமக்களின் மறைவிற்கு திராவிடர் கழகப் பொதுக்குழு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து கொள்கிறது.
முகப்பேர் கழகத் தோழர் பொறியாளர் மு.இளங்கோ வயது-79, (மறைவு 25-03-2024), உண்மை கிருஷ்ணன் அவர்களின் வாழ்விணையர் கழக வீராங்கனை அன்னம்மாள் வயது-80 (மறைவு
01-04-2024), கடத்தூர் நகர கழக தலைவர் ஆசிரியர்
சுப.மாரிமுத்து வயது-85 (மறைவு 01-04-2024), பெரியார் பெருந்தொண்டர் சேலம்-பொன்னமாப்பேட்டை பெ.பாண்டியன் வயது-82(மறைவு 16-04-2024), பெரியார் பெருந்தொண்டர் சீர்காழி க.சபாபதி வயது-85 (மறைவு 17-04-2024), பெரியார் பெருந்தொண்டர் எடுத்தவாய் நத்தம் த.பெரியசாமி வயது-83 (மறைவு 20-04-2024), தேவகோட்டை பகுத்தறிவாளர் தோழர் மு.செல்லதுரை வயது-92 (மறைவு
03-05-2024), குடந்தை தாராசுரம் இ.பரமேசுவரி
வயது – 80 (மறைவு 04-05-2024), புலவன்காடு ஊராட்சி மன்றத் தலைவர் மாநல் மெய்க்கப்பன் (மறைவு 06-05-2024), பெரியார் பெருந்தொண்டர், பொதுக்குழு உறுப்பினர் அரியலூர் செல்லமுத்து வயது-83(மறைவு 06-05-2024), திருச்சி அம்புஜத்தம்மாள் வயது-95 (மறைவு 07-05-2024), கல்லக்குறிச்சி நகர கழக பொருளாளர் இரா.நல்லமுத்து வயது-90 (மறைவு
09-05-2024), திருநாகேசுவரம் வீ.கோவிந்தம்மாள் (மறைவு 10-05-2024), கோடியக்கரை வேதலட்சுமி அம்மையார் வயது-83 (மறைவு 10-05-2024), கோவை மாவட்ட கழகத் தோழர் இரா.காமராஜ் வயது-63 (மறைவு 17-05-2024), காரைக்குடி மாவட்ட பகுத்தறிவாளர் கழக மேனாள் தலைவர் ப.சுந்தரம் வயது-83 (மறைவு 28-05-2024), தாராபுரம்-அலங்கியம் கழகத் தலைவர் பெ.சுப்பிரமணி (மறைவு 03-06-2024), பெரியார் பெருந்தொண்டர் செஞ்சி நகர கழகத் தலைவர் சு.அண்ணாமலை வயது-94 (மறைவு 09-06-2024), நாமக்கல் பணி நிறைவுற்ற தலைமை ஆசிரியர், பகுத்தறிவாளர் ப.சுப்பண்ணன் வயது-95 (மறைவு 10-06-2024), ஆண்டிப்பட்டி நகர திராவிடர் கழகத் தலைவர் வே.ஜோதி (மறைவு
15-06-2024), முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் லால்குடி மாவட்ட திராவிடர் கழக மேனாள் தலைவர் மண்ணச்சநல்லூர் உடுக்கடி அட்டலிங்கம் வயது-93 (மறைவு 22-06-2024), பெரியார் பெருந்தொண்டர், தென்கொண்டார் இருப்பு காத்தையன் வயது-74 (மறைவு 24-06-2024), கரூர்-கொழுந்தானூர் கழகத் தோழர் ஆர்.துரைசாமி வயது-90 (மறைவு
23-06-2024), காரைக்குடி மாவட்ட கழக மேனாள் தலைவர் ச.அரங்கசாமி வயது-81(மறைவு 24-06-2024), தேனி-கூடலூர் நகர கழக துணைத் தலைவர் க.முருகன் (மறைவு 25-06-2024), பெரியார் பெருந்தொண்டர் எடக்கீழையூர் ரெ.மணி வயது-90 (மறைவு
01-07-2024), காரைக்கால் பெரியார் பெருந்தொண்டர் ரெ.ஜெயபாலன் வயது-74 (மறைவு 03-07-2024), தேனி-சுருளிப்பட்டி கழகத் துணைத் தலைவர் நாகராஜ் (மறைவு 05-07-2024), தந்தை பெரியார் பற்றாளர் அரியலூர் ரெகுநாதன் வயது-94 (மறைவு
07-07-2024), லால்குடி-திருமங்கலம் சட்ட எரிப்பு போராட்ட வீரர் மேகநாதன் (எ) ரெங்கசாமி வயது-82 (மறைவு 08-07-2024), குடவாசல் பொன்னம்மாள் வயது-87(மறைவு 10-07-2024), சிங்கம்புணரி-காளாப்பூர் சி.பன்னீர்செல்வி வயது-74 (மறைவு
19-07-2024), தென்காசி-சங்கரன்கோவில் பகுத்தறிவாளர் கழக தலைவர் சதாசிவம் ஆகியோர் மறைவிற்கு இப்பொதுக்குழு வருந்துவதுடன், அவர்களின் அளப்பரிய தொண்டுக்கு வீர வணக்கம் செலுத்தி, அவர்களின் பிரிவால் பெருந்துயரத்திற்கு ஆளாகியிருக்கும், குடும்பத்தினருக்கும், உற்றார் உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும், தோழர்களுக்கும் இப்பொதுக்குழு ஆறுதலையும், இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறது.
கேரள மாநில வயநாட்டில் இயற்கைப் பேரிடரால் நூற்றுக்கணக்கானோர் குடும்பம், குடும்பமாக மரணம் அடைந்ததற்கு இப்பொதுக்குழு ஆறாத் துயரத்தைத் தெரிவிப்பதுடன், எதிர்பாரா இயற்கைப் பேரிடரால் குடும்பத்தவர்களை இழந்துவாடுவோர்க்கு ஆறுதலையும், இரங்கலையும் இப்பொதுக்குழு தெரிவித்து கொள்கிறது.

தீர்மானம் எண் 2(அ):

சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா!
ஜாதி ஒழிப்பு, பெண்ணடிமை ஒழிப்பு, மூட நம்பிக்கை ஒழிப்பு, சமூகநீதி, மாநில உரிமைகள், சமத்துவம், சமதர்மம் உள்ளிட்ட மானுட உரிமைகளுக்கான பிரச்சாரம், போராட்டம் என்ற வகையில் நாட்டில் அமை திப் புரட்சியை ஏற்படுத்தி, தமிழ்நாட்டின் வரலாற்றைப் புரட்டிப் போட்ட, தந்தை பெரியாரால் தொடங்கப்பட்ட சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டு இவ்வாண்டு என்பதை இப்பொதுக்குழு பெருமிதத்துடன் நினைவு கூர்கிறது.
தொடர்ந்து ஓராண்டுக்காலம் இந்தக் கொள்கைகளை, காலத்திற்கேற்ற முற்போக்கு அணுகுமுறைகளோடு மாணவர்கள், இளைஞர்கள்முதல் முதியோர் வரை கொண்டு சென்று எழுச்சியை ஏற்படுத்துவதற்கான செயல் திட்டங்களை மேற்கொள்வது என்று இப்பொதுக்குழு மிகுந்த உற்சாகத்துடன் முடிவு செய்கிறது.

இந்த இயக்கத்திற்காகத் தங்களை அர்ப்பணித்துக் கொண்டு உழைத்த சுயமரியாதைச் சுடரொளிகளுக்கு வீர வணக்கத்தைச் செலுத்துகிறோம்.
தெருமுனைக் கூட்டங்கள், நூறு இடங்களில் மாபெரும் பொதுக்கூட்டங்கள், கருத்தரங்குகள், வட்டார மாநாடுகள் நடத்துதல், மாணவர்கள் மத்தியில் ‘பெரியார் 1000‘ நடத்துதல், இயக்க நூல்களைப் பரப்புதல், புத்தகக் கண்காட்சி நடத்துதல், துண்டறிக்கைகளை வெளியிட்டு, மக்களிடம் கொண்டு செல்லுதல், சமூக வலைதளங்களைத் தக்க முறையில் பயன்படுத்துதல், பெரியார் விஷன் ஓடிடி–க்குச் சந்தா சேர்த்தல் உள்ளிட்ட ஆக்க ரீதியான பணிகளில் ஈடுபடுவது என்று இப்பொதுக் குழு தீர்மானிக்கிறது.
முக்கியத்துவம் வாய்ந்த இந்த அரும்பெரும் பணிகளில் மும்முரமாக முனைப்போடு கழகத் தோழர்கள் ஈடுபடவேண்டுமாய் இப்பொதுக்குழு கேட்டுக்கொள்கிறது.
தீர்மானம் எண் 2(ஆ):

90 ஆம் ஆண்டில் ஏறுநடை போடும் ‘விடுதலை‘ நாளேடு – தமிழ் மக்களின் மேம்பாட்டுத் தளத்திலும், உரிமைக் களத்திலும் போர் வாளாகச் சுழன்றுவருகிறது.
‘விடுதலை’ ஏடு பரவாத ஊர் இல்லை, வீடு இல்லை என்று கருதும் அளவுக்கு ‘விடுதலை’ சந்தாக்களைத் திரட்டுவதிலும், கொண்டு சேர்ப்பதிலும் முன்னுரிமை கொடுத்துப் பாடுபடுவது என்று தீர்மானிக்கப்படுகிறது.
மாதம் இருமுறை இதழான ‘உண்மை’, ஆங்கில மாத இதழான ‘தி மாடர்ன் ரேசனலிஸ்ட்’, குழந்தைகளுக்கான மாத இதழான ‘பெரியார் பிஞ்சு’ ஏடுகளையும் அதிக அளவில் பரப்புவது என்று தீர்மானிக்கப்படுகிறது.

தீர்மானம் எண் 3:

பாசிச மோடி ஆட்சிக்கு எதிராக வாக்களித்த தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றி!
‘‘வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் பாசிச பாஜக ஆட்சியை விரட்டிடவும், இந்தியா கூட்டணிக்கு பேராதரவு தந்து வெற்றி பெற செய்திடவும் நாட்டு மக்களை கேட்டுக் கொள்கிறோம்” என திராவிடர் கழகப் பொதுக் குழுவில் (25.3.2024) நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு வெற்றி கிடைக்கும் வகையில், தமிழ்நாடு, புதுச்சேரி உட்பட அனைத்து 40 தொகுதிகளிலும், பாஜக கூட்டணியை தோல்வி அடையச் செய்து, திமுக தலைமையிலான இந்திய கூட்டணியை வெற்றி பெறச் செய்த தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநில மக்களுக்கு, இப்பொதுக்குழு தமது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.
தொடர்ந்து 17 நாட்கள் தமிழ்நாட்டின் பல தொகுதி களில் தொடர் பிரச்சாரம் செய்த தமிழர் தலைவருக்குப் பாராட்டையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறது.
இதற்கு முழு ஒத்துழைப்புக் கொடுத்த தோழர்கள் அனைவருக்கும் பாராட்டையும் தெரிவித்துக் கொள்கிறது.

தீர்மானம் எண் 4:

21 மொழிகளில் பெரியார் சிந்தனைகள் – திராவிட மாடல் அரசுக்கு
நன்றியும், பாராட்டும்!
தமிழ்நாடு அரசு 2022–2023 ஆம் ஆண்டு நிதி நிலை அறிக்கையில் பெரியார் சிந்தனைகள் அடங்கிய தொகுப்பு 12 இந்திய மொழிகள் மற்றும் 9 உலக மொழிகள் என மொத்தம் 21 மொழிகளில் ரூ.5 கோடி செலவில் மொழி பெயர்த்து வெளியிடப்படும் என்று அறிவித்தது. இதற்கான அரசாணை 3.2.2023 இல் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை வாயிலாக (அரசாணை (நிலை) எண்.18 தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை நாள்: 3.2.2023) வெளியிடப்பட்டு, இந்தத் திட்டத்தை நிறைவேற்றும் பொறுப்பு தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்திடம் ஒப்படைக்கப்பட்டது.
மேலும், இத்திட்டத்தை நிறைவேற்றுவதற்காக அமைச்சர்கள், ஆய்வாளர்கள் மற்றும் அலுவலர்கள் என 28 உறுப்பினர்களைக் கொண்ட குழு ஒன்றும் அமைக்கப்பட்டது. பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனத்தின் வழிகாட்டுதலோடு நடைபெற்ற இந்தப் பணியில், முதற்கட்டமாக பெரியார் சிந்தனைகள் அடங்கிய 5 குறுநூல்களைக் கொண்ட முதற்தொகுப்பு 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற சென்னை பன்னாட்டுப் புத்தகத் திருவிழாவில் மலையாளம், தெலுங்கு, மராத்தி, உருது, ஆங்கிலம், பிரெஞ்சு, ஸ்பானீஸ், ரஷ்ய மொழி, ஜப்பானிய மொழி, அரபி ஆகிய 10 மொழிகளில் மாண்புமிகு இளைஞர்நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களால் 40 நாடுகளின் இலக்கியவாதிகள் மற்றும் பதிப்பாளர்கள் முன்னிலையில் 18.1.2024 அன்று வெளிடப்பட்டது.
தற்போது கன்னடம், ஒடியா, குஜராத்தி, ஹிந்தி, பஞ்சாபி, பெங்காலி, அஸ்ஸாமி, போஜ்பூரி, ஜெர்மன், இத்தாலி, கொரியன் ஆகிய 11 மொழிகளில் மொழிப் பெயர்ப்புகள் தயாராகி வருகின்றன.
பெரியார் சிந்தனைகள் முற்போக்கானவையாகவும், உலகம் தழுவியவையாகவும் இருப்பதை எடுத்துக்காட்டும் வகையில் முதற்தொகுப்பில் பெரியார் எழுதிய குறுநூல்களான ‘‘பெண் ஏன் அடிமை யானாள்?”, ‘‘கிராம சீர்திருத்தம்”, ‘‘தீண்டாமையை ஒழித்தது யார்?”, ‘‘இனிவரும் உலகம்”, ‘‘ஜாதி ஒழிய வேண்டும் ஏன்” ஆகியவை இடம்பெற்றுள்ளன. தமிழி லிருந்து ஆங்கிலத்திற்கு மொழி பெயர்க்கப்பட்ட பதிப்பை அடிப்படையாகக் கொண்டு பிற இந்திய மொழிகளிலும்,உலக மொழிகளிலும் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது.
2024–2025 நிதிநிலை அறிக்கையில் அறி விக்கப்பட்டபடி உலக நாடுகளிலுள்ள 150 நூல கங்களுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ள பல்வேறு தமிழ் இலக்கிய வரலாற்று பண்பாட்டு நூல்களின் மொழி பெயர்ப்புகளோடு பெரியார் சிந்தனைத் தொகுப்பு மொழிபெயர்ப்பு நூல்களும் அனுப்பி வைக்கப்பட இருக்கின்றன.
பெரியார் உலக மயமாகி வருகிறார் என்பதற்கான சான்றாவணமாகும் இது.
இத்தகைய வரலாறு படைத்த ‘‘திராவிட மாடல் ஆட்சியின்” முதலமைச்சர் மானமிகு மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்களை, தாய்க்கழகமான திராவிடர் கழகம் நெஞ்சம் நிறைந்த நன்றியைத் தெரிவித்து, மகிழ்ந்து பாராட்டி வாழ்த்துகிறது.

தீர்மானம் எண் 5:

திருச்சி சிறுகனூரில் ‘‘பெரியார் உலகம்’’ உருவாக்கமும் – நமது கடமையும்!
திருச்சிராப்பள்ளியையடுத்த சிறுகனூரில் 1,20,000 சதுர அடி நிலப்பரப்பில், தந்தை பெரியாரின் பன்முகச் சிறப்புகளை வரலாற்றில் நிலை நிறுத்தும் வகையில், பல்வேறு அம்சங்களுடன் உருவாக்கப்படவிருக்கும் ‘‘பெரியார் உலகத்தின்” பணிகள் தொடங்கப்பட்டு, நடைபெற்று வருகின்றன.
தமிழர் ஒவ்வொருவரின் நிதி பங்களிப்பு என்பதுதான் தந்தை பெரியாருக்கு தமிழர்கள் காட்டும் உண்மையான நன்றி உணர்வாகும் என்பதால், தமிழர் வீடுதோறும் சென்று நிதி திரட்டும் பணியில் ஈடுபடுவது நமது தலையாய பணி என்ற ஊக்கத்துடன் செயல்படுவது என்று இப்பொதுக்குழு கட்டளைத் தீர்மானமாக ஏற்கிறது. ‘‘பெரியாரை உலக மயமாக்குவோம்; உலகத்தைப் பெரியார் மயமாக்குவோம்‘‘ என்ற இலட்சியப் பாதையில் நாம் மேற்கொள்ளவிருக்கும் மகத்தான சாதனைப் பணியாகவும் இருக்கும் என்பதை மனதிற்கொண்டு, அதே முனைப்பாக, நினைப்பாக பணி செய்து கிடப்பது என்ற உறுதியை இப்பொதுக்குழு மேற்கொள்கிறது.

தீர்மானம் எண் 6:

நீட் தேர்வு: முற்றிலும்
நீக்குவதே ஒரே தீர்வு!
‘‘நீட் தேர்வு எந்தவகையிலும் மருத்துவத் துறைக்கோ, அனைத்துப் பிரிவினைச் சேர்ந்த மாணவர்களுக்கோ சாதகமாக இருக்காது; பாதகமாகவே இருக்கும்” என திராவிடர் கழகம் தொடர்ந்து கூறி, ‘நீட்’்டை முற்றிலும் ரத்து செய்து, பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் தான் மாணவர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறது. முதலில் தேர்வு சரி என வாதிட்டவர்கள் கூட, தற்போது நீட் தேர்வில் நடைபெறும் மோசடிகள் கண்டு தங்கள் எண்ணத்தை மாற்றிக் கொண்டுள்ளார்கள். தமிழ்நாடு சட்டமன்றம் நீட் தேர்வு விலக்கு கேட்டு ஒருமித்த தீர்மானம் நிறைவேற்றி, பலமுறை ஆளுநருக்கு அனுப்பினால் அவர் அதற்கு ஒப்புதல் தராமல் இழுத்தடித்து வருகிறார். தற்போது மேற்கு வங்கம், கருநாடகா போன்ற சில மாநிலங்களும் நீட் தேர்வு வேண்டாம் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ‘‘நீட் தேர்வு மிகப்பெரிய மோசடி” எனப் பேசி உள்ளார். ஆனாலும் உச்ச நீதிமன்றம் இதில் சரியான முடிவு எடுக்காமல் கால நீட்டிப்பு செய்வது அதிர்ச்சியை அளிக்கிறது.
கல்வித் திட்டம் மாநிலத்திற்கு மாநிலம் வேறுபட்டு இருக்கக் கூடிய நிலையில், ஒரே மாதிரியான தேர்வு என்பதே அடிப்படையில் மோசடியாகும்.

இதில் நீட் தேர்வை ரத்து செய்து மீண்டும் தேர்வு நடத்துவது; காகிதம், பேனாவுக்குப் பதிலாக கணினி வழி தேர்வு நடத்துவது என்பதெல்லாம், பிரச்சினையின் ஆழத்தை அறியாமல் மீண்டும் சகதிக்குள் சிக்க வைப்பதாகும்.
தமிழ்நாட்டில் தொழிற்கல்வி படிப்பிற்கு இருந்து வந்த நுழைவுத் தேர்வு ஒழிக்கப்பட்டதால், அனைத்துப் பிரிவு மாணவர்களும், கிராமப்புற மாணவர்களும் பொறியியல், மருத்துவம் எனப் படித்து இன்றைக்கு இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் சிறப்பான வகையில் பணியாற்றி வருகிறார்கள்.

ஆகவே, நீட் தேர்வு முற்றிலும் ரத்து என்பதே சரியான முடிவும், தீர்வுமாகும். இதனைத் தான் நமது திராவிடர் கழகம் வலியுறுத்தி வருகிறது. தொடர் போராட்டங்கள், அண்மையில் நடைபெற்ற இருசக்கர வாகனப் பேரணி என்பவை மக்களிடையே நீட் தேர்வு மோசடி குறித்து நல்ல புரிதலை ஏற்படுத்தி உள்ளது. ஆகவே தமிழ்நாடு அரசுபோல மற்ற மாநிலங்களும் தங்கள் மாநிலத்தில் நீட் தேர்வு விலக்கு கேட்டு தொடர் முயற்சியை மேற்கொள்ள வேண்டும் என்றும், அதற்கும் மேலாக நீட் தேர்வே கூடாது என்று அறிவிக்கவேண்டும் என்றும் இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.
‘‘அகில இந்திய மருத்துவத் தொகுப்பில் தங்கள் மாநிலம் பங்கேற்காது; எங்கள் மாநிலத்தில் உள்ள மருத்துவ இடங்களை எங்கள் மாநிலத் திட்டப்படி, கலந்தாய்வு நடத்திக்கொள்வோம்” என்று குஜராத் முதலமைச்சராக நரேந்திர மோடி இருந்தபோது, நீட் தேர்வை எதிர்த்தார் என்பதையும் இந்த நேரத்தில் இப்பொதுக்குழு சுட்டிக்காட்டுகிறது.

தீர்மானம் எண் 7:

தமிழ்நாட்டை வஞ்சிக்கும்
ஒன்றிய பாஜக அரசுக்குக் கண்டனம்
மூன்றாவது முறையாக ஆட்சிக்கு வந்துள்ள ‘மைனாரிட்டி பாஜக அரசு’ தாக்கல் செய்த பட்ஜெட், எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களுக்குப் போதிய நிதி உதவி அளிக்காததை அனைத்துத் தலைவர்களும் கண்டித்துள்ளனர். தமிழ்நாட்டில் மெட்ரோ ரயில் திட்டம், இரண்டு இயற்கைப் பேரிடர்கள் காரணமாக ஏற்பட்ட இழப்பு, கல்வி வளர்ச்சிக்கான நிதி என அடிப்படையான திட்டங்களுக்குக் கூட நிதி ஒதுக்காத கொடுமையைத் தொடர்ந்து இழைத்து வருகிறது ஒன்றிய பி.ஜே.பி. தலைமையிலான என்.டி.ஏ. அரசு.

‘‘ஒன்றிய அரசுக்கு தமிழ்நாட்டு மக்களின் குரலாக – ஏன், இந்திய நாட்டு மக்களின் குரலாக ஒன்று சொல்கிறேன், மேலும் மேலும் தவறு செய்கிறீர்கள், மேலும் மேலும் தோல்விகளைச் சந்திப்பீர்கள், நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் கொந்தளிப்பது போல், இந்திய மக்களின் மனங்களும் கொந்தளிப்பில் இருக்கிறது, இதற்குப் பாஜக பதில் சொல்லியே தீர வேண்டும்” என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியது முற்றிலும் சரியே! இந்தியாவுக்கே வழிகாட்டும் கருத்தாகும்.
ஒன்றிய பட்ஜெட்டில் உரிய நிதியைத் தமிழ்நாட்டிற்கு அளிக்காத மோடி தலைமையிலான மைனாரிட்டி பாஜக அரசுக்கு கடும் கண்டனத்தை இப்பொதுக்குழு தெரிவித்துக் கொள்கிறது. இதை உணர்ந்து, உரிய நிதியைப் பாரபட்சமின்றி முறையாகத் தமிழ்நாட்டுக்கு உரிய நிதியை ஒதுக்கீடு செய்யுமாறு ஒன்றிய அரசை இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.

தீர்மானம் எண் 8:

தவத்திரு குன்றக்குடி அடிகளாரின் நூற்றாண்டு விழா!
தந்தை பெரியாரிடத்தில் பெருமதிப்பும், பேரன்பும் கொண்டவரும், தந்தை பெரியாரால் பெரிதும் மதிக்கப்பட்டவரும், இனநலன் பேணிய வரும், நமது இயக்க மாநாடுகளில், நிகழ்வுகளில் பெரும் அளவு பங்கேற்றவருமான மறைந்த தவத்திரு குன்றக்குடி அடிகளார் (திருப்பெருந்திரு தெய்வசிகாமணி அருணாசலம் தேசிக பரமாச்சாரிய சுவாமிகள்) அவர்களின் அருந்தொண்டினை நினைவு கூரும் வகையிலும், போற்றும் வகையிலும் அவர்தம் நூற்றாண்டு விழாவினை வரும் 31.8.2024 அன்று காரைக்குடியில் திராவிடர் கழகத்தின் சார்பில் சிறப்புடன் நடத்துவது என்று தீர்மானிக்கப்படுகிறது.

தீர்மானம் எண் 9:

அரசு ஊழியர்கள் ஆர்.எஸ்.எஸ். நடவடிக்கைகளில் பங்கேற்கலாம் என்ற ஒன்றிய அரசின் ஆணையை ரத்து செய்க!
ஆர்.எஸ்.எஸ். நடவடிக்கைகளில் அரசு ஊழியர்கள் பங்கேற்கக் கூடாது என்று 1966 ஆம் ஆண்டில் போடப்பட்ட தடையை 58 ஆண்டுகளுக்குப்பின் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஒன்றிய பி.ஜே.பி. அரசு நீக்கி, ஆணை பிறப்பித்துள்ளது
(F.No. 34013/1(S)/2016-Estt (B) Dated 9th July 2024 – Government of India).
ஆர்.எஸ்.எஸ். எந்தக் காரணத்துக்காகத் தடை செய்யப்பட்டதோ, அந்தக் காரணங்கள் முன்னிலும் மோசமாக, வன்முறை அணுகுமுறையில் தீவிரமாகச் செயல்பட்டுவரும் நிலையில், தடை நீக்கப்பட்டு இருப்பது – அரசு அலுவலகங்களைக் காவி மயமாக்கும், அமைதியைக் குலைக்கும், அலுவலகச் செயல்பாடுகளைச் சீரழிக்கும் காரியமாகும்.
இதுவரை மூன்று முறை தடை செய்யப்பட்ட ஓர் அமைப்புக்கு ஒன்றிய பி.ஜே.பி. அரசு தனது தாய் ஸ்தாப னம் ஆர்.எஸ்.எஸ். என்ற ஒரே நோக்கில் தடையை நீக்கியிருப்பதை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ளவே முடியாது.
ஆர்.எஸ்.எஸ். குருநாதர் என்று போற்றப்படும் குருஜி எம்.எஸ்.கோல்வால்கரால் எழுதப்பட்ட ‘‘வரை யறுக்கப்பட்ட நமது தேசியம்” என்ற நூலில் (We or Our Nationhood Defined) கூறப்பட்டுள்ள கருத்துகள்மூலம் ஆர்.எஸ்.எஸின் அபாயகரமான – மனிதத்தன்மையற்ற கொள்கையைப் புரிந்துகொள்ளலாம்.

‘‘இந்துஸ்தானில் உள்ள இந்து அல்லாதவர்கள் அன்பு, தியாகம் போன்றவற்றை வளர்த்துக் கொள்ளவேண்டும். எதையும் கேட்காமல், எந்தச் சலுகைகளையும் பெறாமல், எதற்கும் முன்னுரிமை பெறாமல், குடிமக்களின் உரிமையுமின்றி இருத்தல் வேண்டும்‘‘ என்பது ஆர்.எஸ்.எஸ். குருநாதர் கூறும் ஆர்.எஸ்.எஸின் கொள்கையும், கோட்பாடும் ஆகும்.
இந்திய அரசமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ள மதச் சார்பின்மை, சமத்துவம், குடியுரிமை போன்ற அடிப்படை கொள்கைகளுக்கு எதிரான ஆர்.எஸ்.எஸின் நடவடிக்கைகளில் அரசுப் பணியாளர்கள் பங்கேற்கலாம் என்றால், இதன்பொருள் – அரசு அலுவலகங்களைக் காவி மயமாக்கி, சுமூகமான சூழ்நிலையைச் சீரழித்து, அரசு அலுவலகங்களைக் கலவர மயமாக்கும் பேராபத்தாகும் என்பதால், இந்த ஆணையை ஒன்றிய அரசு உடனடியாக ரத்து செய்யவேண்டும் என்றும், அனைத்துக் கட்சிகளும், அமைப்புகளும், பொதுமக்களும் இந்த அபாயகரமான ஆணையை ரத்து செய்யும்வரை தொடர்ந்து போராடவேண்டும் என்றும் இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.

தீர்மானம் எண் 10:

2026 தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்
சமூகநீதிக்கான சரித்திர நாயகராம் தமிழ்நாட்டின் முதலமைச்சர் மானமிகு மாண்புமிகு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் தலைமையேற்று நடத்தி வருகின்ற ஆட்சி, மற்ற மற்ற மாநிலங்கள் பின்பற்றத்த குந்ததாகவும், மக்கள் நலம், குறிப்பாக மகளிர் நலம், வளர்ச்சித் திட்டங்கள், சமூகநீதி என்று ஒவ்வொரு துறையிலும் முத்திரை பொறித்து வருகிறது.
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலி்ல தமிழ்நாட்டில் 39–க்கு 39 இடங்களிலும் நூறு விழுக்காடு வெற்றி பெற்றதுபோல், 2026 இல் நடைபெறவிருக்கும் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலிலும் தி.மு.க. தலைமையிலான ஆட்சி மலர்வதற்கு – இந்தியா கூட்டணிக் கட்சிகள் இப்பொழுது முதலே ஆக்க ரீதியான பணிகளை மேற்கொள்ளவேண்டும் என்று இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக