சென்னை, ஜூலை 30 புதுமை இலக்கியத் தென்றலின் ஆயிரமாவது விழாவில் ராஜபாளையம் நரேந்திரகுமாரின் ‘‘திராவிட மரபணு’’ நூலுக்குப் பாராட்டு விழா! நூலாசிரி யருக்குத் தமிழர் தலைவர் பாராட்டு!
புதுமை இலக்கியத் தென்றல் 1000 ஆவது நிகழ்ச்சி மற்றும் திராவிட மரபணு நூலாசிரியருக்கு பாராட்டு விழா ஆகிய நிகழ்ச்சிகள் சென்னை பெரியார் திடலில் நேற்று (29.7.2024) மாலை நடைபெற்றது.
21 ஆண்டுகள் தொய்வின்றி இயங்கும்
புதுமை இலக்கியத் தென்றல்!
கடந்த 25.04.2003 அன்று தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை புரவலராகவும், பெரியார் பேருரையாளர் இறையனார் அவர்களை நெறியாளராகவும் கொண்டு ஆரம்பிக்கப்பட்டு, தொடர்ந்து 21 ஆண்டுகளாக தொய்வின்றி நடந்து, கரோனா காலகட்டத்திலும் அறி வியலின் கொடையாக காணொலி மூலம் தொடர்ந்து நடைபெற்று 1000ஆவது நிகழ்ச்சியை புதுமை இலக்கியத் தென்றல் வெற்றிகரமாக அடைந்திருப்பதற்குக் காரணமாக அமைந்த சான்றோர் பெருமக்கள் அனைவருக்கும் நன்றி கூறி, வருகை தந்த அனைவரையும் வரவேற்று புதுமை இலக்கியத் தென்றலின் செயலாளர் வை.கலையரசன் வரவேற்புரை ஆற்றினார்.
தந்தை பெரியாரின் கொள்கை பரப்பும் பணி!
நிகழ்வில் புதுமை இலக்கியத் தென்றலின் தலைவர் பாவலர் செல்வ.மீனாட்சிசுந்தரம் தலைமை உரையாற்றினார்.
அவர் தனது உரையில், தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் தன்னை புதுமை இலக்கியத் தென்றலின் தலைவராக அறிவித்தது ஓர் அரிய வாய்ப்பு என்றும், இந்த 1000 ஆவது நிகழ்ச்சியில் கடந்த இரண்டு ஆண்டுகளில் 100 நிகழ்வுகள் தான் தன்னால் ஒருங்கிணைக்கப்பட்டதாகவும், இந்தத் தொடர் ஓட்டத்தில் பத்து விழுக்காடு தான் எங்கள் குழு செய்திருக்கிறது. மீதம் 90% இந்த தொடர் ஓட்டப்பந்தயத்தில் வெற்றிகரமாக பயணித்துத் தங்களிடம் இந்தப் பொறுப்பை ஒப்படைத்த ஆசிரியருக்கும், தோழர்களுக்கும் மன நிறைந்த நன்றிகளை தெரிவித்தார்.
தந்தை பெரியாரின் கருத்தைப் பரப்பும் பணியைத்தான் புதுமை இலக்கியத் தென்றல் மிக முக்கியமான பணியாகக் கருதுகிறது என்றும், தமிழ் மொழி பற்றி தந்தை பெரியாருடைய கூர்மையான பார்வையை விவரித்து, ஆயுதமாக தான் மொழியை பார்க்க வேண்டுமே தவிர ‘புனித’மாக பார்க்கக் கூடாது என்பதை அய்யாவின் வரிகளிலே எடுத்துரைத்து, தமிழை பரப்பும் நோக்கத்தோடும், அறிவியல் மொழியாக தமிழை மாற்ற வேண்டும் என்ற நோக்கத்தோடும் பயணிக்கக் கூடிய புதுமை இலக்கியத் தென்றலில் அதன் ஒரு பகுதியாக ‘திராவிட மரபணு’ என்ற நூலை எழுதிய நூல் ஆசிரியரான நரேந்திரகுமார் அவர்களைப் பாராட்டி மகிழ்கிறோம் என்றார். பெரியாரின் சிந்தனையின்படி தமிழ் மொழியிலே அறிவியல் புகுத்தப்படுகின்ற வரை நமது பணி ஓயாது என்றும், வாய்ப்பு வழங்கிய அனைவருக்கும் குழுவின் சார்பாக நன்றி தெரிவித்தார்.
நீங்கள் வில்லாக இருங்கள்;
நாங்கள் அம்பாக இருக்கிறோம்!
நிகழ்வில் தமிழ்நாடு சீர்மரபினர் நல வாரியத்தின் துணைத் தலைவர் இராசா.அருண்மொழி வாழ்த்துரை வழங்கினார்.
அவரது தனது உரையில், திராவிட இயக்கத்தினுடைய பிதாமகன் பெரியார் இருந்த, அறிவுலக மேதை அண்ணாவின் கால் தடம்பட்ட, கலைஞர் கொள்கை முழக்கமிட்ட வரலாற்று சிறப்பு வாய்ந்த இடத்தில் நின்று பேசுவது தனக்கு மிகப்பெரிய பெருமை என்றும், வெளியே நின்று கூட்டத்தில் உட்கார்ந்து கைதட்டி பார்த்தவர்கள் இன்றைக்கு அதே மேடைகள் ஏறி பேசுகிறோம் என்றால், அதற்குக் காரணம் ஆசிரியர்தான் என்றும், திராவிடர் இயக்கத்தின் கடைசி கையிருப்பாக திராவிடர் இயக்கத்தின் கருவூலமாக ஆசிரியர் தான் விளங்குகிறார் என்றார். இப்படியாக எங்களை மேடை ஏற்றிய சாதனையைத்தான் இந்த திராவிடம் செய்தது என்று உணர்ச்சிகரமாகப் பதிவு செய்தார்.
பூலித்தேவனின் வரலாற்றை பதிவு செய்த தனது தந்தையையும், ‘திராவிட மரபணு’ என்ற நூலை எழுதியி ருக்கக் கூடிய தனது அண்ணன் நரேந்திர குமார் அவர்களைப் பற்றியும், தன்னுடைய வாழ்வில் அவர்கள் ஆற்றிய பங்கினையும் விவரித்தார். குறிப்பாக, தான் கால் சட்டை போட்ட நாள் முதலே கருப்புச் சட்டையை தனக்கு வாங்கி தந்தவர் தன்னுடைய அண்ணன் நரேந்திரகுமார்தான் என்றும், திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்தபோதும் நாங்கள் வளர்ந்த இடம் திராவிடர் கழகம் தான் என்றார்.
தொலைபேசியில் ஒரு எண்ணை பதிவு செய்வது போல் தோழர்கள் அனைவருடைய பெயரையும் ஞாபகம் வைத்திருக்கும் ஆசிரியரை பார்க்க வியப்பாக இருக்கிறது என்றும், ஆசிரியர் தங்களின் மீது கொண்டுள்ள அன்பிற்கு தனது நன்றியை தெரிவித்தார். ஆசிரியர் தன்னுடைய உடல்நிலையை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்ற வேண்டுகோளோடு, ஆசிரியர் அவர்களே நீங்கள் வில்லாக இருங்கள்; நாங்கள் அம்பாக இருக்கிறோம். எதிரிகளை வீழ்த்துவதற்காக மட்டுமல்ல; இக்கொள்கையை தூக்கிப் பிடிப்பதற்காகவும்தான் என்று கூறி ஆசிரியருக்கு மனம் நிறைந்த நன்றியை தெரிவித்து நிறைவு தனது உரையை செய்தார்.
ஒவ்வொரு பக்கத்திலும்
பெரியார் தான் நிறைந்து இருக்கிறார்!
நிகழ்வில் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்.
அவர் தனது உரையில், ஒரு அமைப்பைத் தொடங்கு வது என்பது எளிது; ஆனால், அதனைத் தொடர்ந்து நடத்திக் காட்டுவது என்பது மிகுந்த கடினமான காரியம் என்றார். பொதுவாக அமைப்பைத் தொடங்கக் கூடியவர்கள் அதை பாதியிலேயே நிறுத்தி விடுவார்கள். ஆனால், தந்தை பெரியாரைப் பொறுத்தவரை, பெரியார் திடலை பொறுத்தவரை தொடங்கிய நிகழ்வுகளை தொய்வின்றித் தொடரக்கூடிய வரலாறு நமக்கு இருக்கிறது என்றும், குறிப்பாக பெரியார் நூலக வாசகர் வட்டத்தை நெருக்கடி காலத்தில் தான் தொடங்கினோம் என்ற வரலாற்றை நினைவு கூர்ந்து, தற்போது அந்த வாசகர் வட்டம் 2058 ஆவது நிகழ்வினை நடத்திக் கொண்டிருக்கிறது என்றால், இது ஒரு கின்னஸ் சாதனை என்றார். இனியும் அது தொடர்ந்து நடக்கும்; அதுதான் நம்முடைய தனி முத்திரை என்பதைப் பதிவு செய்தார்.
‘திராவிட மரபணு’ நூலை தான் முழுமையாக வாசித்து விட்டதாகவும், இரண்டு பகுதிகளில் ஏழு கட்டுரைகள் அடங்கிய அந்த நூலில் பெரியார்பற்றி இல்லையே என்று வாசிக்கும் யாராயினும் சிந்திக்கக்கூடும். அப்படி சிந்திப்ப வர்களுக்கு இரண்டே வரியில் நூலாசிரியர் பதில் எழுதி இருக்கிறார். இந்த நூலில் உள்ள ஒவ்வொரு பக்கத்திலும் பெரியார்தான் நிறைந்து இருக்கிறார் என்பது தான் அது என்றார்.
திராவிட இயக்கத்திற்கு பக்க பலமாக யார் இருந்தாலும், திராவிட இயக்கம் குறித்து யார் நூல் எழுதினாலும், அவர்களை தேடிச் சென்று பாராட்டாமல் ஆசிரியர் ஒருபோதும் இருந்ததில்லை என்றும், அந்த வகையில் தான் ‘திராவிட மரபணு’வின் நூலாசிரியர் நரேந்திரகுமார் அவர்களை ஆசிரியர் அவர்கள் பாராட்டிக் கொண்டிருக்கிறார் என்றார். ‘திராவிட மரபணு’ நூலில் மிக முக்கியமான செய்திகளை குறிப்புகளுடன் விளக்கினார். புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பற்றி தேசிய விநாயகம் பிள்ளை கூறிய செய்தி, எழுத்தாளர் சுந்தரராமசாமி அவர்கள் கூறிய செய்திகள், கலைஞர் இறுதியாக தனது கைப்பட எழுதிய ‘‘பெரியார்- அண்ணா – தமிழ்நாடு’’ என்ற வார்த்தைகள் போன்றவற்றை விளக்கினார்.
தற்போது உள்ள ஒன்றிய பிஜேபி அரசு நேரு, காந்தியை எல்லாம் விடுத்து சர்தார் வல்லபாய் பட்டேலுக்கு ரூ.3000 கோடி செலவில் சிலை வைப்பதற்கான காரணத்தையும், அதைப்பற்றி நூலில் இருக்கும் குறிப்புகளையும் விவரித்தார். நூலின் முக்கியத்துவமாக ஜெயகாந்தன் பற்றிய ஏராளமான தகவல்கள் இடம்பெற்றிருப்பதை எடுத்துரைத்து, நிறைவாக நூலாசிரியர் வைத்திருக்கக்கூடிய ஒரு மிகச் சரியான விமர்சனத்தையும், விமர்சனம் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்பதை விளக்கி, துணிச்சலுடன் விமர்சனம் வைப்பதற்கும் தயாராக இருக்கக்கூடிய எழுத்தாளர் என்று தனது பாராட்டினைப் பதிவு செய்தார்.
பாராட்டும்; நூல் விற்பனையும்!
திராவிட மரபணு நூலாசிரியர் இரா.நரேந்திரகுமார், நூலினை பதிப்பித்த பதிப்பாசிரியர் காவ்யா சண்முகசுந்தரம் ஆகியோருக்கும், புதுமை இலக்கியத் தென்றலின் மேனாள் உறுப்பினர்களுக்கும், கொடை வழங்கி நிகழ்வு சிறக்கக் காரணமாக அமைந்த சான்றோர் பெருமக்களுக்கும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களால் பாராட்டு செய்யப்பட்டது.
மேடையில் ‘திராவிட மரபணு’ நூலினை தமிழர் தலைவர் ஆசிரியரிடமிருந்து தோழர்கள் பெற்றுக் கொண்டனர். விற்பனை செய்யப்பட்ட மொத்த தொகையையும் புதுமை இலக்கியத் தென்றலுக்கு வழங்குவதாக தமிழ்நாடு சிறுபான்மையினர் நல வாரியத்தின் துணைத் தலைவர் இராசா. அருண்மொழி அவர்கள் அறிவித்தார்.
என் அணுவுக்குள்
திராவிடம் தான் கலந்திருக்கிறது!
நிகழ்வில் காவ்யா பதிப்பகத்தின் பதிப்பாளர் காவ்யா சண்முகசுந்தரம் ஏற்புரை வழங்கினார். அவர் தனது உரையில்,
தென்றலில் இருந்து வந்தவன் தான் என்றும், திருநெல்வேலியை சார்ந்த நான், இந்த 1000 ஆவது தென்றல் நிகழ்வில் பங்கேற்பது பெருமைக்குரிய செய்தி என்றும், ஆசிரியர் அய்யாவின் மனம் மிக உயர்ந்தது; அதனால் தான் இரண்டாவது முறையாக இதே திடலில் தன்னை அழைத்துப் பாராட்டு செய்கிறார் என்றும், இதற்கு முன்பு தான் பதிப்பித்த நூல்களின் சுயமரியாதை இயக்கத்தினுடைய தாக்கங்களை பற்றி எடுத்துரைத்து, என் அணுவுக்குள் திராவிடம் தான் கலந்திருக்கிறது என்றார். திராவிட மரபணு இருப்பதால்தான் தன்னால் திராவிடம் சார்ந்த நூல்களை பதிப்பிட முடிகிறது என்றும், தந்தை பெரியார், அண்ணா ,கலைஞர் போன்றவர்களின் உரைகளைக் கேட்டதிலிருந்து தன்னுடைய உடம்பில் உள்ள திராவிட மரபணுவை தான் உணர்ந்தேன் என்றார். இதுவரை தான் 1,600 நூல்களை காவ்யா பதிப்பகத்தின் மூலமாக வெளியிட்டு இருப்பதாகவும், நரேந்திரகுமார் அவர்களுடைய தந்தைக்கு காவ்யா விருது வழங்கியதையும் நினைவுகூர்ந்து, திராவிடம் தொடர்பாக இதுவரை 50 நூல்கள் வெளியிட்டிருப்பதாகவும், அதே நேரத்தில் அவர் எழுதிய நூல்களை பட்டியலிட்டும், அந்த வரிசையில் நரேந்திரகுமார் அவர்கள் எழுதி இருக்கக்கூடிய இந்த நூலை வெளியிட்டு இருக்கிறோம் என்றார்.
ஆனால், ஒரே ஒரு வருத்தமாக நூல்கள் அதிகம் வாங்கப்படுவதும் இல்லை; வாசிக்கப்படுவதும் இல்லை என்பது இருந்தாலும் கூட, ஆசிரியர் போன்றவர்கள் வாசிக்கவும், நூலினை நேசிக்கவும் செய்கின்ற போது இதுபோல் பல நூல்களை வெளியிட அது நம்மைத் தூண்டு வதாகவும் இருக்கிறது என்றார். நரேந்திரகுமார் அவர்களின் எழுத்து அபூர்வமானது என்றும், அத்தகைய நூலாசிரியர் உடைய எழுத்து தனி ரகம் என்றார். நரேந்திரகுமார் அவர்களின் இலக்கிய புலமைக்கு அகலமான வாசிப்பும், ஆழமான நேசிப்புமே காரணமாக அமைந்திருக்கிறது என்றார். இதுவரை திராவிட மரபணு நூலாசிரியரின் பத்து நூல்களை, தான் வெளியிட்டு இருப்பதாகவும், இனியும் தொடர்ந்து வெளியிடுவதற்கு அனைவரும் துணை நிற்க வேண்டும் என்று கேட்டு தனது நன்றியினை பதிவு செய்து நிறைவு செய்தார்.
ஆசிரியரின் பாணியில்தான்
தனது எழுத்தை வரித்துக் கொண்டேன்!
திராவிட மரபணுவின் நூலாசிரியர் இரா.நரேந்திரகுமார் அவர்கள் ஏற்புரை வழங்கினார். அவரது தனது உரையில்,
‘‘அளந்துவைக்கும் அடி அனைத்தும் அய்யாவின் வழித்தடமே’’ என்று இலக்கியச் சுவையுடன் தனது உரை யைத் தொடங்கினார். சுயமரியாதையும், சமதர்மமுமே திராவிட மரபணு என்ற அடிப்படையில் இந்த நூல் எழுதப்பட்டி ருப்பதாகவும், ‘‘2000 ஆண்டுகளுக்கு முன்பே பிறந்த பெரியாரே வள்ளுவர்; 2000 ஆண்டுகளுக்கு பின்பு பிறந்த வள்ளுவரே பெரியார்‘‘ என்றார். அப்படி சொல்லுவதற்கான மேற்கோள்களை குறளில் இருந்தே எடுத்துரைத்தார்.
இந்த நூலினை தலைமைக் கழக அமைப்பாளர் இல. திருப்பதியிடம் வழங்கியதையும், ஜூலை மாதம் குற்றாலத்தில் நடந்த பயிற்சி வகுப்பிலே அதை அவரின் மூலமாக ஆசிரியர் இடத்திலே வழங்கியதையும் நினைவு கூர்ந்து, அதை வாசித்து முடித்த உடனேயே ஆசிரியர் அவர்கள் தனக்கு இந்தப் பாராட்டை வழங்குவது மிகப் பெருமைக்குரிய ஒன்று என்றார்.
தான் பெரியார் நூலக வாசகர் வட்டத்தில் நடைபெற்ற நிகழ்விற்கு வாரந்தோறும் வியாழக்கிழமைகள் வந்த பசுமையான நினைவுகளை பகிர்ந்துகொண்டு, தொடர்ந்து அது போன்ற நிகழ்வுகள் தான் தன்னை இது சார்ந்து எழுதுவதற்குத் தூண்டியது என்றார். ராஜபாளையத்தில் நடந்த நூற்றாண்டு நிகழ்விலே காலை முதல் இரவு வரை ஆசிரியரை பார்க்கக்கூடிய வாய்ப்பும், அவருடன் இருக்கக்கூடிய வாய்ப்பையும் பெற்ற தருணங்களை நினைவுகூர்ந்து, இயக்க மாநாடுகளில் தொடர்ந்து பங்கேற்றதின் விளைவாகவும், அதிலும் குறிப்பாக பார்ப்பன ஆதிக்க ஒழிப்பு மாநாட்டில் கோவையில் ஆசிரியர் அவர்கள் பேசிய உரை தன்னை எவ்வளவு தூரம் கவர்ந்தது என்பதையும் குறிப்புகளோடு விவரித்தார்.
ஆசிரியரின் பாணியில்தான் எனது எழுத்தை வரித்துக் கொண்டதாகவும், ஒவ்வொரு முறையும் இன எதிரிகளால் எதிர்ப்பு கிளம்புகிறபோது அதனை எதிர்த்து ஆசிரியர் ஆற்றிய உரைகளும், அதனைத் தொடர்ந்து வெளிவந்த நூல்களும் தான் இது போன்றுதான் எழுதுவதற்கு அடிப்படையாக அமைந்தது என்றார். குறிப்பாக ‘‘கீதையின் மறுபக்கம்’’, ‘‘சங்கராச்சாரி யார்?’’ போன்ற நூல்கள் தான் தனக்கு இந்த எழுத்து பாணியை கொடுத்தது என்றார். கடல் போன்ற கருத்து உடைய திராவிடர் இயக்கத்திற்கு இந்த நூல் பெரிது அல்ல; ஆனால் திராவிடர் இயக்கத்தை பற்றி விமர்சித்து அதனை எதிர்த்த ஜெயகாந்தன் போன்றவர்கள் எல்லாம் இறுதியில் திராவிடர் இயக்கத்தை சிலாகித்த விதத்தை ஆவணப்படுத்தியுள்ளேன் என்றார். அதுதான் இந்த நூலில் உள்ள சிறப்பு செய்தி என்றார். அதற்கு அடிப்படையாக அமைந்தது ஜெயகாந்தனின் நூல்களைப் பற்றி ஓராண்டுகளுக்கு ‘உண்மை’ இதழில் தொடர்ந்து வந்த கட்டுரைகள் தான் என்றும், அதை வைத்து தான் இந்த நூல் எழுதப்பட்டிருக்கிறது என்றும், தன்னை பாராட்டிய தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.
எங்கள் கைகளில் இருந்த கரண்டியை பிடுங்கி,புத்தகத்தை கொடுத்தவர் ஆசிரியர்!
புதுமை இலக்கியத் தென்றலின் மேனாள் பொறுப்பா ளர்களின் சார்பில் கழகத்தின் செயலவை தலைவர் வழக்கு ரைஞர் ஆ. வீரமர்த்தினி அவர்கள் உரையாற்றினார். அவர் தனது உரையில், தான் இந்த நிகழ்வைத் தலைவராக பொறுப்பேற்று நடத்தியதாக அனைவரும் கூறினார்கள். ஆனால், இந்த நிகழ்வு சிறப்பாக அமைவதற்குக் காரணம் அதில் பேசிய சான்றோர் பெருமக்கள்தான் என்றும், குறிப்பாக, பெரியார் பேருரையாளர் கு.வெ.கி. ஆசான் போன்றவர்கள், யார் வந்தாலும் வரவில்லை என்றாலும் நிகழ்வு தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கவேண்டும் என்றும், எந்தத் தலைப்பாக இருந்தாலும் அவர்களே அதை எடுத்துப் பேசிய விதத்தையும், வரலாற்றிலே புதுமை இலக்கியத் தென்றல் வளர்ந்து நிற்பதற்கு காரணமாக அமைந்த சான்றோர் பெருமக்களை பட்டியலிட்டார்.
பெண்களுக்கு வாய்ப்பு கொடுத்தால் எதையும் திறம்பட செய்வார்கள் என்பதை ஆசிரியர் அவர்கள் தொடர்ந்து பெண்களுக்குப் பொறுப்பினை வழங்கி நிரூபித்து இருக்கிறார் என்றும், எங்கள் கையில் இருந்த கரண்டியை பிடிங்கிவிட்டு, புத்தகத்தை வாசிக்க கொடுத்த பெருமை ஆசிரியரைத்தான் சாரும் என்று கூறி, தனக்கு வந்த அனைத்துப் பாராட்டுகளும் ஆசிரியருக்கு உரித்தானது என்று கூறி நிறைவு செய்தார்.
கழகத் தலைவர் ஆசிரியர் சிறப்புரை
நிறைவாக, வரலாற்று நிகழ்வுகளை எல்லாம் நயமுடன் எடுத்துரைத்து, இலக்கியம் எப்படி புதுமை தென்றலாக இருக்க வேண்டும் என்பதை அரங்கம் வியக்க எடுத்துரைத்து, நூலாசிரியரின் எழுத்துகளின் சிறப்பினை விளக்கி, அதனை பதிப்பித்த பதிப்பாளருக்கு பாராட்டினை தெரிவித்து கழகத் தலைவர் ஆசிரியர் அவர்கள் சிறப்புரை ஆற்றினார். (முழு உரை பின்னர்)
தனக்கு ஆசிரியர் அவர்களால் வழங்கப்பட்ட பயனாடை மிக விலை உயர்ந்த பொன்னாடை போல இருக்கிறது என்று தனது உள்ளத்தில் எழுந்த மகிழ்வினை பதிவு செய்து, வருகை தந்த அனைவருக்கும் புதுமை இலக்கியத் தென்றலின் துணைச் செயலாளர் இராவணன் மல்லிகா நன்றி கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக