வியாழன், 1 ஆகஸ்ட், 2024

பட்ஜெட்டில் ஓரவஞ்சனை செய்யும் ஒன்றிய அரசைக் கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் உரை


விடுதலை நாளேடு Published August 1, 2024

கனிம வளங்களுக்கு ராயல்டி உரிமை, வரி போடும் உரிமை மாநிலங்களுக்கு உண்டு என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது!

நெய்வேலி நிலக்கரி, நரிமணம் பெட்ரோலுக்கு அதிகளவு ராயல்டி – அதிக வரி கேட்டு ஒன்றிய அரசை வலியுறுத்தவேண்டும்!
தமிழ்நாடு முதலமைச்சருக்கு தமிழர் தலைவர் வேண்டுகோள்!

சென்னை, ஆக.1 சுரங்கங்கள், கனிமங்களுக்கு ராயல்டி, வரி போடும் உரிமை மாநில அரசுக்கு உரியது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதன் அடிப்படையில் ஒன்றிய அரசிடம் நெய்வேலி நிலக்கரி, நரிமணம் பெட்ரோலுக்கு ராயல்டியை அதிக அளவு விதிக்கவேண்டும் என்று தமிழ்நாடு முதலமைச்சருக்கு வேண்டுேகாள் விடுத்தார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
ஒன்றிய அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்!
நேற்று (31.7.2024) மாலை சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் தமிழ்நாடு அரசை ஓரவஞ்சனை செய்யும் ஒன்றிய அரசைக் கண்டித்து திராவிடர் கழகம் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்குத் தலைமை வகித்த திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் கண்டன உரையாற்றினார்.

அவரது கண்டன உரை வருமாறு:
மிகப்பெரிய அளவிற்கு அநீதியை இழைத்திருக்கிறது ஒன்றிய பா.ஜ.க. அரசு!
மிகக் குறுகிய கால அறிவிப்பில் இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தினை ஏற்பாடு செய்திருக்கிறீர்கள். கடந்த ஜூலை 23 ஆம் தேதி ஒன்றிய பா.ஜ.க. அரசி னால் நாடாளுமன்றத்தில் அளிக்கப்பட்ட பட்ஜெட் (வரவு – செலவு திட்டம்) என்பது எப்படி தமிழ்நாடு உள்பட எங்கெல்லாம் இந்தியா கூட்டணியினர், எதிர்க்கட்சிகள் ஆளுங்கட்சியாக கடந்த பொதுத் தேர்தலிலே பெருவாரியான வெற்றிகளைப் பெற்றி ருக்கிறார்களோ, அந்த மாநிலங்களுக்கெல்லாம் எந்த நிதியையும் தராமல், இங்கே கவிஞர் அவர்கள் சொன்னதைப்போல, மிகப்பெரிய அளவிற்கு அநீதியை இழைத்திருக்கிறார்கள்.

தமிழ்நாட்டையும், அதையொட்டிய மற்ற மாநிலங்களையும் ஒன்றிய பா.ஜ.க. அரசு
வஞ்சித்துக் கொண்டிருக்கின்றது!
இந்தப் பட்ஜெட்மூலம், கூட்டணிக் கட்சிக்கா ரர்களின்மேல் இருக்கின்ற கோபத்தை, வெறுப்பை மக்களிடம் காட்டவேண்டும் என்பதற்காக, தமிழ்நாட்டை யும், அதையொட்டிய மற்ற மாநிலங்களையும் ஒன்றிய பா.ஜ.க. அரசு வஞ்சித்துக் கொண்டிருக்கின்ற போக்கை கண்டிப்பதற்கான இந்தக் கண்டன ஆர்ப்பாட்ட நிகழ்வில் கலந்துகொள்ளக்கூடிய கழக மாநில பொறுப்பாளர்களே,
இந்நிகழ்ச்சியை சிறப்பாக ஏற்பாடு செய்து கலந்து கொண்டிருக்கக் கூடிய தென்சென்னை மாவட்ட கழகத் தலைவர் இரா.வில்வநாதன் அவர்களே, தாம்பரம் மாவட்டத் தலைவர் ப.முத்தையன் அவர்களே, திருவொற்றியூர் மாவட்டத் தலைவர் மோகன் அவர்களே, ஆவடி மாவட்டக் கழகத் தலைவர் கார்வேந்தன், வடசென்னை மாவட்டத் தலைவர் தளபதி பாண்டியன் அவர்களே, தென்சென்னை மாவட்ட செயலாளர் செ.ர.பார்த்தசாரதி அவர்களே, தலைமைக் கழக அமைப்பாளர்கள் எல்லப்பன், தே.செ.கோபால், ஆவடி க.இளவரசன், மயிலாதுறை கி.தளபதிராஜ், புரசை சு.அன்புச்செல்வன் ஆகிய நண்பர்களே,
மற்றும் பகுத்தறிவாளர் கழகத்தைச் சார்ந்த தமிழ்ச்செல்வன், வெங்கடேசன், மோகன், காஞ்சி கதிரவன், மாணவர் கழகத்தைச் சேர்ந்த சுரேஷ், சண்முகப்பிரியன், யாழ்திலீபன், நர்மதா, தொண்டறம் உள்ளிட்ட கழகப் பொறுப்பாளர்களே,
கழக வெளியுறவுத் துறை செயலாளர் அருமை நண்பர் சமூகநீதிப் போராளி கோ.கருணாநிதி அவர்களே,
ஊடகவியலாளர்களே, கட்சிகளுக்கு அப்பாற்பட்ட, இந்தக் கொள்கையில் ஈடுபாடு கொண்டு வந்துள்ள போராட்ட வீரர்களே, கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டிருக்கக் கூடிய சான்றோர்களே உங்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பான வணக்கத்தினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஒன்றிய அரசின் இந்த அநீதியை அப்பட்டமாகப் புட்டுப் புட்டு வைத்தார்கள்!
இங்கே எனக்குமுன் உரையாற்றிய கழகத் துணைத் தலைவரிலிருந்து அத்துணைப் பேரும் மிக விரிவாகவும், விளக்கமாகவும் ஒன்றிய அரசின் இந்த அநீதியை அப்பட்டமாகவும் புட்டுப் புட்டு வைத்திருக்கிறார்கள்.
ஏன் இந்த அநீதியை அவர்கள், அவர்களின் மனசாட்சிக்கு விரோதமாக – அப்படி ஒன்று அவர்களுக்கு இருப்பதாகவே தெரியவில்லை. அப்படி இருந்தால், அதற்கு விரோதமாக என்றுகூட சொல்லலாம்; இருக்கிறதா, என்பதே கேள்விக்குறி.
அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில், நம்மிடமே பணத்தை வசூலித்து, அதை நமக்குக் கொடுக்காமல், அவர்கள் விரும்பக் கூடியவர்களுக்குக் கொடுப்பது என்பது, அது எந்த வகையில், சம ஈவு, சம பகிர்வு ஆகும்?
இது ஒன்றும் தனிப்பட்ட அவர்களுடைய வியாபாரம் அல்ல; இது ஓர் அரசமைப்புச் சட்டத்தின்மீது பிரமாணம் எடுத்துக்கொண்டு அதன்படி நடக்கக்கூடிய ஓர் அரசியல் நிகழ்வு.
அந்த அரசமைப்புச் சட்டத்தில் என்ன சொல்லப்பட்டு இருக்கிறது?

இந்தியா என்பது பல மாநிலங்களைக் கொண்ட
ஒரு கூட்டாட்சி!
கூட்டாட்சி. அந்த அரசமைப்புச் சட்டப்படி நடை பெறக்கூடிய கூட்டாட்சி. இந்தியா என்பது பல மாநிலங்களைக் கொண்ட ஒரு கூட்டாட்சி என்றுதான் அரசமைப்புச் சட்டத்தின் முதல் பிரிவே தொடங்குகிறது.
India, that is Bharat, shall be a Union of States
என்று ஆரம்பிக்கிறது. இந்தியா பல மாநிலங்கள் சேர்ந்த ஒரு கூட்டாட்சி.
கோல்வால்கருடைய தத்துவம்!
அதனை நேரிடையாக மறுக்கக்கூடிய – எப்போதுமே அவர்களுக்குக் கூட்டாட்சி பிடிக்காது. ஒன்றுபட்ட ஒரு ஆட்சியாகத்தான் இருக்ககவேண்டும். யுனிட்டரி ஸ்டேட் என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள். ஒரே ஒரு அரசுதான் இருக்கவேண்டும். பல மாநில அரசுகள் இருக்கக்கூடாது. மாகாணங்களே இருக்கக்கூடாது.
இதுதான் அவர்களுடைய தத்துவகர்த்தாவான கோல்வால்கருடைய தத்துவம்.

விஷ உருண்டைக்கு
சர்க்கரைப்பூச்சு தடவுவார்கள்!
அவர்கள் யாருக்குமே மாநிலங்களே இருக்கக்கூடாது. ஆனாலும், அதை வெளிப்படையாகக் காட்டிக் கொள்ள முடியாது அவர்களால். அதனால், அவர்கள் மிகத் தந்திரமாக, ஆர்.எஸ்.எஸ். பதவிக்கு வந்தவுடன், அவர்கள் ஒரு வார்த்தையைக் கண்டுபிடித்தார்கள். ஏமாற்று வேலை – விஷ உருண்டைக்கு சர்க்கரைப்பூச்சு தடவுவார்கள். முதலில் சர்க்கரை இனிப்பதுபோன்று தோன்றும், பிறகு அது உயிரையே பறித்துவிடும்.
கோ-ஆப்ரேட்டிவ் பெடரலிசம்!
அதுபோன்று அதற்கு ஒரு வார்த்தையைக் கண்டு பிடித்தார்கள் அவர்கள் – கோ-ஆப்ரேட்டிவ் பெடரலிசம் என்று சொல்லுகிறார்கள்.
அதாவது கூட்டாட்சி மட்டுமல்ல – கூட்டுறவுள்ள கூட்டாட்சி.

கூட்டாட்சி என்றாலே, கூட்டுறவுதானே!
பெடரேசன் என்றாலே, கூட்டுறவுதான்.
கூட்டுறவுள்ள கூட்டாட்சி என்றால், என்ன அர்த்தம்?
கோ-ஆப்ரேட்டிவ் பெடரலிசம் என்றார்கள்.
ராஜவை மிஞ்சக்கூடிய ராஜ விசுவாசிகள் அளவுக்குப் பெயர் வைத்திருக்கிறீர்கள், சரி.
ஆனால், அதை நடைமுறையில் எத்தனை விழுக்காடு நீங்கள் செய்திருக்கிறீர்கள்?
எத்தனை மாநிலங்கள் இருக்கின்றன?

இந்தியா முழுமையும் முழக்கங்கள் எதிரொலிக்கின்றன!
நாடாளுமன்றத்தில் தொடங்கி, இந்தியா முழு வதும், வள்ளுவர் கோட்டம்வரை முழக்கங்கள் எதி ரொலிக்கின்றன.
இந்திய பட்ஜெட்டா? அல்லது இந்த பட்ஜெட் பீகாருக்கும், ஆந்திராவுக்கும் மட்டுமே இருக்கக்கூடிய பட்ஜெட்டா? என்று கேட்கக்கூடிய அளவிற்குக் குரல்கள் எதிரொலிக்கின்றன.
ஆந்திராவிற்கு நீங்கள் கொடுப்பதைப்பற்றி எங்களுக்கு ஆட்சேபணை இல்லை. பீகாருக்கு நீங்கள் அள்ளி அள்ளிக் கொடுப்பதைப்பற்றி எங்களுக்கு ஆட்சேபணை இல்லை. இன்னும் உங்களுக்கு வேண்டிய குஜராத்திற்கோ, உத்திரகாண்ட்டுக்கோ, உத்திரப்பிரதேசத்திற்கோ எங்கெங்கெல்லாம் காவி ஆட்சி நடைபெறுகிறதோ அங்கெல்லாம் நீங்கள் அள்ளிக் கொடுக்கிறீர்கள்.
ஆனால், தமிழ்நாடும், இந்தியாவில் உள்ள பிற மாநிலங்களும், இந்தியா கூட்டணி ஆட்சியாளர் ஆளுகின்ற மாநிலங்களும், அந்த கூட்டாட்சியில் உறுப்பினர்களாக இல்லையா?
கூட்டுறவு உள்ள கூட்டாட்சி என்றால் என்ன அர்த்தம்?

கோ-ஆப்ரேட்டிவ் பெடரலிசம் என்றால், அவர்களுக்கு அந்த உரிமை இல்லையா?
அரசமைப்புச் சட்டப்படி நமக்குள்ள உரிமை!
நாங்கள் ஒன்றும் பிச்சை கேட்கவில்லை; அரச மைப்புச் சட்டப்படி நமக்குள்ள உரிமை. அந்த அரசமைப்புச் சட்டப்படி நாம் வரி கொடுக்கின்றோம்.
அப்படி வரி கொடுப்பதில், இந்தக் காலத்தில் வீரபாண்டிய கட்டபொம்மன்தான் தேசியத்திற்கு மிக முக்கியம் என்று நீங்கள் சொல்லி, அவரை மிகப்பெரிய அளவிற்குப் பாராட்டினீர்கள்.
வீரபாண்டிய கட்டபொம்மன் சொல்லும் வசனம் என்ன? அந்த வசனத்தை நாங்கள் திருப்பிச் சொல்ல வேண்டுமா?
ஏனென்று கேட்டால், உங்களுடைய பங்கு என்ன இதில்?
மக்கள் மத்தியில் இந்தப் பிரச்சினை சேரவேண்டும் என்பதற்காகத்தான் இந்த ஆர்ப்பாட்டம்! இந்தப் பிரச்சாரத்தை எங்கெங்கும் செய்யவேண்டும்.

இன்றைக்கு சென்னையில் ஒரு நிகழ்ச்சிக்கு நாம் போகிறோம் என்றால், மற்ற மாநிலங்களையோ, மற்ற நகரங்களையோ பார்க்கும்பொழுது, நம் தமிழ்நாட்டில் உள்ள காவல்துறையினரும், மற்ற அதிகாரிகளும் மிகப்பெரிய அளவிற்கு அற்புதமாகப் பணியாற்றுகிறார்கள்.
மெட்ரோ ரயில் திட்டம் இல்லையென்றால், போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டிருக்கும்!
மெட்ரோ ரயில் திட்டம் என்ற ஒன்று இன்றைக்கு வரவில்லை என்றால், இன்னும் கடுமையான போக்கு வரத்து நெருக்கடி இருந்திருக்கும்.
மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ஒன்றிய அரசின் பங்களிப்பு இருக்கவேண்டாமா? அதிலும் அவர்கள் முட்டுக்கட்டை போடுகிறார்கள்.
ரயில்வே நிறுவனத்திலிருந்து லாபத்தை எடுத்து, பொது பட்ஜெட்டிற்குக் கொடுப்பார் லாலுபிரசாத்!
ரயில்வே போக்குவரத்திற்காக எந்தத் திட்டமும் தமிழ்நாட்டிற்குக் கிடையாது. இதற்கு முன்பாவது, ரயில்வே பட்ஜெட் என்ற ஒன்று தனியே இருந்தது. அந்த ரயில்வே பட்ஜெட்டில், லாலுபிரசாத் அவர்கள் ஒன்றிய ரயில்வே அமைச்சராக இருந்தபொழுது, ரயில்வே நிறுவனத்திலிருந்து லாபத்தை எடுத்து, பொது பட்ஜெட்டிற்குக் கொடுப்பார்.

ஆனால், இப்பொழுது என்ன நடக்கிறது என்றே யாருக்கும் தெரியாது. திட்டக் கமிஷன் என்பதை ஒழித்துவிட்டு, அதற்குப் பதில் நிட்டி ஆயோக் என்று புரியாத வார்த்தையில் ஒரு திட்டம்.
மாநில முதலமைச்சர்கள் அந்த நிதி ஆலோசனைக் கூட்டத்திற்குச் செல்லவேண்டும்; அங்கே ஒன்றிய அரசு என்ன கொடுப்பார்கள், என்ன செய்வார்கள் என்று தெரியாது.
இன்றைக்கு நம்முடைய உரிமைகள் நசுக்கப்பட்டு இருக்கின்றன. மாநில உரிமைகளை நாம் கேட்கிறோம். 29 பைசா ஆட்சியா? என்று கேட்டார்கள்.
ஒரு ரூபாய் கொடுத்த உத்தரப்பிரதேசத்திற்கு, ஒன்றிய அரசு இரண்டு ரூபாயாகத் திருப்பிக் கொடுக்கிறது!
ஒரு ரூபாய் நாம் ஒன்றிய அரசுக்குக் கொடுத்தால், 29 பைசாவைக் கொடுக்கிறீர்கள்.
ஆனால், ஒரு ரூபாய் கொடுத்த உத்தரப்பிரதேச மாநிலத்திற்கு, ஒன்றிய அரசு இரண்டு ரூபாயாகத் திருப்பிக் கொடுக்கிறது.

இது நியாயம்தானா?
இது எவ்வளவு கொடுமை!
நம்முடைய பணத்தை எடுத்து, நமக்குக் கொடுக்காமல், மற்ற மாநிலங்களுக்குக் கொடுக்கிறார்கள்.
இன்றைக்கு அநீதி, அக்கிரமங்கள் நடக்கின்றன. இதற்கு என்ன காரணம்?
மோடியினுடைய ஆட்சியான மைனாரிட்டி அரசு – சொந்த பலத்தில் நிற்கவில்லை. மெஜாரிட்டி போன்று காட்டவேண்டும் என்று சொன்னால், இரண்டு முக்கிய கட்சியினுடைய தயவினால் ஒன்றிய ஆட்சி நடக்கிறது.
ஒன்று, ஆந்திரா. இன்னொன்று பீகார்.
இந்த இரண்டு மாநிலமும் ஒன்றிய பா.ஜ.க. ஆட்சிக்கு முட்டுக் கொடுக்கின்றன.

பெவிகால் – மிஸ்டு கால் ஆட்சி!
பிரதமர் நாற்காலியில், நான்கு கால்கள் இல்லை. இரண்டு கால்கள்தான். மீதமுள்ள இரண்டு கால்களுக்குப் பதிலாக, ஆந்திராவும், பீகாரும் முட்டுக் கொடுத்துக் கொண்டிருக்கின்றன. அந்த இரண்டு கால்களும் ஆடிக்கொண்டே இருக்கின்றன அடிக்கடி.
அந்த ஆட்டத்தை நிறுத்துவதற்காகத்தான், பட்ஜெட்டில் அந்த இரு மாநிலங்களுக்கும் அதிகமான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த நிதி என்பது அந்த ஆடுகின்ற கால்களை ஒட்ட வைப்பதற்குப் பயன்படுத்தக்கூடிய பெஃவிகால்.
எப்படி?

இது பெஃவிகால் பட்ஜெட் –
சொந்தக்கால் பட்ஜெட் அல்ல!
நம்முடைய பணத்தை எடுத்து.
‘‘அண்டை வீட்டு நெய்யே, என் பொண்டாட்டி கையே!” என்று கிராமப்புறங்களில் சொல்வார்கள். அதுபோன்று, நாம் கொடுத்த வரிப் பணத்தை, நியாயமாக விநியோகம் செய்யாமல், ஆடுகின்ற நாற்காலிக்கே, அதனை ஓட்டுவதற்காகவே செலவழிக்கிறார் பிரதமர் மோடி.
எனவே, இது பெஃவிகால் பட்ஜெட். சொந்தக்கால் பட்ஜெட் அல்ல.
ஏற்கெனவே அவர்களுடைய கட்சியே மிஸ்டு காலில் நடந்தது. சொந்தக் காலிலே நடந்தது கிடையாது.
நாங்கள் அப்பொழுதே கேட்டோம், சொந்தக் கால் இல்லாத நீங்கள், மிஸ்டு காலில் எப்படி வளர முடியும்? என்று.

தப்பித் தவறிகூட பி.ஜே.பி. வளர்ந்துவிடக் கூடாது!
பி.ஜே.பி. வளராமல் பார்த்துக் கொள்வதற்காக நல்ல வாய்ப்பாக ஓர் அண்ணாமலையைக் கொண்டு வந்து வைத்தார்கள், அதுதான் ‘பாராட்டப்படவேண்டிய’ விஷயமாகும். தப்பித் தவறிகூட பி.ஜே.பி. வளர்ந்துவிடக் கூடாது என்பதற்கான திட்டத்தை மொத்தமாக அவர் குத்தகைக்கு எடுத்துக்கொண்டிருக்கின்றார்.
அதனால், நாம் அதைப்பற்றி பேசி, நேரத்தை வீணடிக்கவேண்டிய அவசியமில்லை.
தமிழ்நாட்டில், அண்ணாமலை முடிவுரையைக் காட்டிவிட்டார்!
அவர்கள் முன்னுரை எழுதினால், முடிவுரை எழுதுவதற்காகத்தான் நான் வந்திருக்கிறேன் என்று சொல்லக்கூடிய அளவிற்குத் தமிழ்நாட்டில், அண்ணாமலை முடிவுரையைக் காட்டிவிட்டார்.
அந்தத் திட்டம் வரப் போகிறது, இந்தத் திட்டம் வரப் போகிறது என்றெல்லாம் பட்ஜெட்டிற்கு முன் சொன்னார் அண்ணாமலை. மோடி வித்தை என்பதே அதுதான்.

இன்றைய இளைஞர்களுக்கு மூர்மார்க்கெட் பற்றி தெரியாது. பழைய ஆட்களுக்குத் தெரியும். அந்த மூர்மார்க்கெட்டில், பாம்புக்கும் – கீரிக்கும் சண்டை நடக்கப்போகிறது என்று ஒரு வித்தைக்காரர் சொல்வார். எல்லோரும் ஆச்சரியப்பட்டு, கும்பலாகச் சேருவார்கள். கடைசி வரையில் கீரிக்கும் – பாம்புக்கும் சண்டை போட விடமாட்டார்.
சென்னையில் உள்ளவர்கள் வித்தியாசமானவர்கள். ஒருவர், பாலத்தை எட்டிப் பார்த்தால் போதும், உடனே அவர் பின்னோ அய்ந்து பேர், பத்து பேர், நூறு பேர் என்று எட்டிப் பார்ப்பார்கள். அதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படும்.
ஒருவர் கேட்பார், ‘‘என்னங்க, அங்கே?” என்று.
‘‘அதுதான் எனக்கும் தெரியவில்லை, நானும் பார்த்துக் கொண்டிருக்கிறேன்” என்பார்.

சொன்ன சொல்லைக் காப்பாற்ற வேண்டாமா?
ஆகவே, என்னவென்றே தெரியாமலே நூறு பேர் கூடுகின்ற இடத்தில், போக்குவரத்திற்கு இடை யூறு இல்லாமல், மெட்ரோ ரயில் திட்டத்தைக் கொண்டு வந்திருக்கிறார்கள். அதற்காக சொன்ன சொல்லைக் காப்பாற்ற வேண்டாமா? நெருக்கடியை மாற்றவேண்டாமா?
இதையெல்லாம் எடுத்துச் சொல்லித்தான், ஓர் அற்புதமான ‘திராவிட மாடல்’ ஆட்சி, இவ்வளவு நெருக்கடிகள் இருந்தாலும், நன்றாக சமைக்கிறார்கள்.
ஒரு மாமியார், சமையலுக்குத் தேவைப்படும் பொருள்களை ஓர் அறையில் பூட்டி வைத்துவிட்டு, மருமகளிடம் சமையல் செய் என்று சொன்னால், அதையும் தாண்டி ஒழுங்காகச் செய்யும் மருமகள் போன்று நம்முடைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இருக்கிறார்.
அவ்வளவு சாமர்த்தியமாக அத்தனையையும் செய்து வைத்து விடுகிறார். அதைப் பார்த்த மாமியாருக்குக் கோபம்.
சமையலுக்கு வேண்டிய பொருள்களைப் பூட்டி வைத்தாலும், எப்படியோ சமையலை செய்துவிடுகிறார் என்கிற ஆத்திரம்!

அன்றைக்கே சொன்னோம்,
‘‘இனியவை 40’’ என்று!
எல்லோரும் நினைத்தார்கள், சும்மா அழகுக்குச் சொல்கிறார், நாடாளுமன்றத் தேர்தலில் புதுவை உள்பட தமிழ்நாட்டில் 40-க்கும் 40 இடங்களில் வெற்றி பெறுவோம் என்று. நாங்கள் அன்றைக்கே சொன்னோம், ‘‘இனியவை 40” என்று.
அந்த 40-க்கும் 40 இடங்களில் வெற்றி பெற்றதுதான், ஒன்றிய பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டு இருப்பதற்குக் காரணம்.
9 முறை தமிழ்நாட்டிற்குச் சென்றோம், ஆனாலும், எதுவும் நடக்கவில்லை என்கிற கோபம். ‘‘ஆத்திரக்காரனுக்கு அறிவு மட்டு” என்பதுதான் தெளிவு.
பிரிவினை கோரிக்கைக்கு
மீண்டும் மீண்டும் நீங்கள் உயிரூட்டுகிறீர்கள்!
இன்றைக்கு நீங்கள் திருப்தியாக இருக்கலாம். ஆனால், இது எங்கே கொண்டு போய்விடும் என்றால், மற்றவர்கள் கைவிட்ட பிரிவினை கோரிக்கை இருக்கி றதே, அதை மற்றவர்கள் மறந்துவிட்டார்கள்; நீங்கள், இளைய சமுதாயத்தினருக்கு அந்தப் பிரிவினை கோரிக்கைக்கு மீண்டும் மீண்டும் உயிரூட்டுகிறீர்கள்; அதற்கு நீங்கள்தான் காரணம்!
கோ-ஆப்ரேட்டிவ் பெடரலிசம் என்று சொல்லிவிட்டு, ஒத்துழையாத ஓர் ஒன்றிய அரசாங்கம் (Most Non
Co-operative Government)இருக்கிறது.

ஆகவேதான், இந்தக் கண்டனப் போராட்டம்!
மூன்றாவது முறையாக ஒன்றியத்தில் ஆட்சிக்கு வந்திருக்கின்றோம் என்று மார்தட்டிக் கொள்கிறீர்களே, மூன்றாவது முறை ஆட்சியில், இந்தியா முழுவதும் சரி, அல்லது நீங்கள் ஆட்சியில் இருக்கின்ற எந்த மாநிலத்திலாவது ஒன்றிய அரசின் சார்பாக, ஒரு பெரிய திட்டத்தை, நேரு காலத்தில் இருந்ததைப் போல, காங்கிரஸ் கட்சி ஆண்ட காலத்தில் செய்ததைப்போல, நெய்வேலி திட்டம், திருச்சி, திருவெறும்பூர்
பெல் தொழிற்சாலை மற்றும் அணைகள் அவை போன்று எதுவும் இல்லையே!
3000 கோடி ரூபாய் செலவில் பட்டேலுக்கு
சிலை வைத்த காரணம் என்ன?
ஒன்றே ஒன்றைத்தான் நீங்கள் சொல்வீர்கள், 3000 கோடி ரூபாய் செலவில் குஜராத் மாநில அரசு சார்பாக பட்டேலுக்கு சிலை வைத்தோமே என்று!
எதற்காக அந்த சிலையை வைத்தீர்கள்? பட்டேலுக்கு நன்றி சொல்வதற்காக வைத்தீர்கள். காந்தியார் கொல்லப்பட்டபொழுது, தடை செய்யப்பட்ட ஓர் இயக்கத்தை – மீண்டும் அந்தத் தடையை நீக்கக் கூடாது; இவர்களுக்குக் கொள்கை எதுவும் கிடையாது என்று நேரு அவர்கள் அதில் பிடிவாதமாக இருந்தார்.

அன்றைக்கு உள்துறை அமைச்சராக இருந்த வல்லபாய் பட்டேல் குஜராத்தைச் சார்ந்தவர்; தமிழ்நாட்டுப் பார்ப்பனரான டி.ஆர்.வெங்கட்டரமண சாஸ்திரி என்பவர்தான் சமரசத்தில் ஈடுபட்டார். (இதன் பின்னணியில் காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதியிருந்தார் என்பது குறிப்பிடத்தகுந்தது!) கோல்வால்கர், 9 முறை கடிதம் எழுதியிருந்தார். அதற்குப் பிறகு ஆர்.எஸ்.எஸ்.மீதான தடையை நீக்கினார்கள்.

மூன்று முறை தடை செய்யப்பட்ட இயக்கம்
ஆர்.எஸ்.எஸ்.
மூன்று முறை தடை செய்யப்பட்ட இயக்கம் ஆர்.எஸ்.எஸ். – நன்றி உணர்ச்சியாகக் கூட இருக்கலாம், அதைப்பற்றி நமக்குக் கவலையில்லை.
ஆனால், நமக்கு வரவேண்டிய பங்களிப்பு, நியாய மாக நமக்கு வரவேண்டாமா?
ஒரு சிறிய உதாரணம் – தமிழ்நாட்டில் மழை, புயலால் இரண்டு முறை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது. தூத்துக்குடியில் வெள்ளம், சென்னையில் வெள்ளம் ஏற்பட்டது.
அந்த நேரத்தில், அதை தேசியப் பேரிடராக அறிவித்து, 37 ஆயிரம் கோடி ரூபாய் கேட்டார்கள். ஆனால், கிடைத்தது 276 கோடி ரூபாய் மட்டும்தான்?
மாநிலத்திற்குக் கொடுக்கப்படவேண்டிய பொதுவான நிதி – தேசியப் பேரிடர் நிதி!
தேசியப் பேரிடர் நிவாரண நிதி என்று அந்த நிதிக்குப் பெயர். இந்த ஒன்றிய ஆட்சியே தேசியப் பேரிடர்தான். அதிலொன்றும் சந்தேகமேயில்லை.

அந்தத் தேசியப் பேரிடர் நிவாரணம் என்பது பொதுவான நிதி; எந்த மாநிலத்தில் தேசியப் பேரிடர் ஏற்பட்டாலும், அந்த மாநிலத்திற்குக் கொடுக்கப்படவேண்டிய பொதுவான நிதி.
மிகவும் வருத்தத்திற்குரிய செய்தி, இரண்டு நாள்களாக கேரள மாநிலத்தின் வயநாடு போன்ற பகுதிகளில் ஏற்பட்ட பெருமழை, நிலச்சரிவு காரணமாக 170-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். நிறைய பேர் காணாமல் போயிருக்கிறார்கள். அந்த மாநிலத்திற்கு எல்லா மாநிலங்களிலிருந்தும் தேசியப் பேரிடர் குழுவினர் சென்று உதவுகிறார்கள்.

உடல் ஒன்றாக இருக்கின்றது என்பதற்கு அர்த்தம்!
அதுபோன்று ஓரிடத்தில் ஆபத்து என்றால், உண்மையிலேயே ஒன்றுபட்டு இருந்தால் என்ன செய்திருக்கவேண்டும்? காலில் அடிபட்டால், தலைவரையில் வலிக்கும். அதுதான் உடல் ஒன்றாக இருக்கின்றது என்பதற்கு அர்த்தம்.
காலில் அடிபட்டால், தலைக்கு ஒன்றுமே தெரியவில்லையே! காலில் ரத்தம் போய்க்கொண்டி ருக்கிறதே என்றால், அந்த உடல் கெட்டுப் போய்விட்டது என்று அர்த்தம். அப்படிப்பட்ட ஒரு சூழல்தான் நாட்டில் இருக்கிறது.
தேசியப் பேரிடர் நிதியைத்தானே தமிழ்நாடு கேட்டது.

நீங்கள் அங்கே அள்ளிக் கொடுக்கிறீர்கள். ஆனால், தமிழ்நாடு போன்ற மாநிலங்களுக்கு, கேரளா போன்ற மாநிலங்களுக்கு, கருநாடகா போன்ற மாநிலங்களுக்கு, தெலங்கானா போன்ற மாநிலங்களுக்கு, இந்தியா கூட்டணிக் கட்சி ஆளுகின்ற வட மாநிலங்களுக்குக் கிள்ளிக்கூட கொடுக்கவில்லை.
எங்களுக்குக் கிள்ளி கொடுப்பதற்குக்கூட உங்களுக்கு மனம் இல்லை!
அள்ளிக்கொடுங்கள், அதைப்பற்றி நாங்கள் கேட்கவில்லை. ஆனால், எங்களுக்குக் கிள்ளி கொடுப்பதற்குக்கூட உங்களுக்கு மனம் இல்லையே!
ஏனென்றால், கோபம், ஆத்திரம். 9 முறை தமிழ்நாட்டிற்குப் படையெடுத்தோமே, கடைசியாக தியானம்கூட செய்து பார்த்தோமே; தியானம் செய்துகூட, தானம் கிடைக்கவில்லையே!
அதற்காகத் தமிழ்நாட்டைப் பழிவாங்கவேண்டு மென்று நினைத்துத்தானே பட்ஜெட்டில் உங்கள் கோபத்தை வெளிப்படுத்தி இருக்கிறீர்கள்!

தமிழ்நாடு அரசின் திட்டங்களுக்கு முட்டுக்கட்டை போடுவது போன்று ஒன்றிய அரசின் நெருக்கடி!
‘‘தமிழ்நாடு அரசுக்கு, தி.மு.க. அரசுக்கு எவ்வளவுதான் நாம் நெருக்கடி கொடுத்தாலும், புதிய புதிய திட்டங்களை அறிவிக்கிறாரே! 1000 ரூபாய் குடும்பத் தலைவிகளுக்கு மாதாமாதம் கொடுக்கப்படுகிறது. ‘தமிழ்ப்புதல்வன்’ என்ற பெயரில் மாணவர்களுக்கு மாதம் 1000 ரூபாய் அளிக்கப்படுகிறது. கல்லூரி செல்லும் மாணவிகளுக்கு மாதம் 1000 ரூபாய், பள்ளிக்கூட மாணவர்களுக்குக் காலைச் சிற்றுண்டி திட்டம்” என்றெல்லாம் அறிவிக்கின்றாரே தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் – முட்டுக்கட்டை போடுவதுபோன்று, நிதி நெருக்கடி கொடுத்தால், அந்தத் திட்டங்களைக் கைவிட்டுவிடுவார் என்று நினைத்தார்கள்.

ஆனால், நம்முடைய சமூகநீதிக்கான சரித்திர நாயகர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், இதுவரையில் காலைச் சிற்றுண்டித் திட்டம் அரசு பள்ளிகளுக்கு மட்டும்தான் இருந்தது. இனிமேல், அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கும் இத்திட்டம் நீட்டிக்கப்படும் என்று அறிவித்து, அதனை செய்தார்.
நிதி நெருக்கடி கொடுத்தாலும், திட்டங்களைத் தமிழ்நாட்டில் அறிவித்து, வெற்றிகரமாக செயல்படுத்திக் கொண்டிருக்கிறார்களே என்கிற ஆத்திரத்தில்தான், வெங்காயம் சாப்பிடாதீர்கள், பூண்டு சாப்பிடாத பரம்பரை என்று தன்னைப்பற்றி நாடாளுமன்றத்திலேயே பேசுகிறார் ஒன்றிய நிதியமைச்சர்.
வெங்காயம், பூண்டு விலை ஏறிவிட்டதே என்று கேட்டால், அதை நான் சாப்பிடுவதில்லை என்கிறார்.
இதுதான் நிதியமைச்சருடைய மிகப்பெரிய நுண்ணிய அறிவு.
நீங்கள் வெங்காயம் சாப்பிடுகிறீர்களோ, பூண்டு சாப்பிடுகிறீர்களோ, அல்வா சாப்பிடுகிறீர்களோ அதைப்பற்றி எங்களுக்குக் கவலையில்லை. ஆனால், எங்கள் மக்கள் உணவு அருந்தவேண்டாமா? எங்கள் மக்கள் பட்டினியாக இருக்கவேண்டுமா?

நாம் வாங்குகின்ற ஒவ்வொரு பொருளுக்கும்
ஜி.எஸ்.டி. வரி போடுகிறார்கள்!
அதுவும் எங்கள் பணத்தைக் கொடுத்துவிட்டு, உழைப்பைக் கொடுத்துவிட்டு – வரியில் எல்லோருக்கும் பங்கு உண்டு. நீங்கள் நினைக்கலாம், வருமான வரி கட்டுகிறவர்கள்தான், ஒன்றிய அரசுக்குப் பணம் கொடுக்கிறார்கள் என்று நினைக்கவேண்டாம். நாம் வாங்குகின்ற ஒவ்வொரு பொருளுக்கும் ஜி.எஸ்.டி. வரி போடுகிறார்கள். அதைக் கண்டுபிடித்ததே தமிழ்நாடுதான் – 1938 இல் இராஜகோபாலாச்சாரியார்தான் கண்டுபிடித்தார். அப்படிப்பட்ட வரி போடலாம் என்று மற்றவர்களுக்குத் தெரியாது. அந்த நேரத்தில் விற்பனை வரி என்று வந்தது.

கொஞ்ச கொஞ்சமாக பெருகிவந்தவுடன், பெரும்பாலான வருமான வழிமுறைகளை அவர்கள் எடுத்துக்கொண்டார்கள்.
‘‘நான் ஒரு போதும் ஜி.எஸ்.டி. என்ற திட்டத்தை ஏற்கமாட்டேன்” என்றவர்தான் மோடி!
பழைய அரசாங்கம், காங்கிரஸ் அரசாங்கத்தில் நடந்தது என்று சொல்கிறாரே இப்பொழுது இருக்கின்ற பிரதமர் மோடி, குஜராத் முதலமைச்சராக இருந்தபொழுது என்ன சொன்னீர்கள்,? ‘‘நான் ஒரு போதும் ஜி.எஸ்.டி. என்ற திட்டத்தை ஏற்கமாட்டேன். என்னுடைய பிணத்தின்மீதுதான் அந்தத் திட்டத்தை நிறைவேற்றவேண்டும்” என்று அன்றைக்குத் தீவிரமாகப் பேசினார். நீட்டையும் எதிர்த்தார்.
இன்றைக்கு அந்த ஜி.எஸ்.டி. திட்டத்தை எல்லா மாநிலங்களிலும் நடைமுறைப்படுத்தியதோடு மட்டுமல்ல, அப்படி வசூல் செய்த பணத்தை ஒழுங்காகப் பங்கீடு கொடுக்கவேண்டும் அல்லவா!

அரசமைப்புச் சட்டம் அளித்திருக்கின்ற உரிமை!
ஆகவேதான், இது நம்முடைய மாநில உரிமை. வெறும் நிதி உரிமை மட்டுமல்ல – மாநில உரிமை – அரசமைப்புச் சட்டம் அளித்திருக்கின்ற உரிமை.
எந்த அரசமைப்புச் சட்டத்தின்மீது நீங்கள் பதவிப் பிரமாணம் எடுத்தீர்களோ, அந்த அரசமைப்புச் சட்டம் வழங்கியிருக்கின்ற உரிமையை நீங்கள் மீறக்கூடாது.
உலகம் முழுவதும் இருக்கக்கூடிய
நியாயமான கேள்வியாகும்!
அரசமைப்புச் சட்டத்தை நீங்கள் மீறலாமா? அப்படி மீறினால், அந்த அரசு நீடிக்கலாமா? என்பதுதான் உலகம் முழுவதும் இருக்கக்கூடிய நியாயமான கேள்வியாகும்.
இதைத்தான் ஒவ்வொரு மாநிலத்திலும், ஒவ்வொரு கட்சிக்காரர்களும் சொல்கிறார்கள். தமிழ்நாட்டில் சில விபீடணர்களும், சுக்கிரீவன்களும், பிரகலாதன்களும், அனுமார்களும் இருக்கிறார்கள்.

அவருக்கு ஏமாற்றமாகத்தான் முடிந்தது!
அப்படிப்பட்ட ஒருவர், ‘‘மாற்றம், மாற்றம், மாற்றம்” என்று சொன்னார். அப்பொழுதே சொன்னோம், ‘‘மாற்றம், ஏமாற்றமாக மிஞ்சிவிடக் கூடாது” என்று. அவருக்கு ஏமாற்றமாகத்தான் முடிந்தது.
அவர் சொல்கிறார், ‘‘25 இடங்களை என்.டி.ஏ. கூட்டணிக்குக் கொடுத்திருந்தால், தமிழ்நாட்டிற்கு உரிய அளவு பணம் ஒதுக்கியிருப்போம்” என்று.
இதற்கு என்ன அர்த்தம்?
25 இடங்களில் அவர்களை வெற்றி பெற வைத்தி ருந்தால், அதிக அளவு நிதி ஒதுக்கியிருப்பார்களாம்!
இதைவிட அரசியல் கொச்சைத்தனம்
வேறு என்ன இருக்க முடியும்?
பெரிய வில்லாதி வீரர்கள் போன்று – நோபல் பரிசு வாங்குவதற்கு ஒரு மார்க் மட்டுமே குறைவாக இருப்பவர்கள் போன்று மிகப்பெரிய அளவிற்கு ஆணவமாகப் பேசக்கூடியவர்களாக இருக்கிறார்கள் என்றால், இதைவிட அரசியல் கொச்சைத்தனம் வேறு என்ன இருக்க முடியும்?
25 இடங்களில் அவர்களை வெற்றி பெற வைத்தி ருந்தால், பணத்தை வாரிக் கொடுத்திருப்போம் என்று அர்த்தமா? இதை ஒப்புக்கொள்கிறாரா, ஏற்றுக்கொள்கி றாரா, பிரதமர் மோடி.
நீங்களெல்லாம் எதற்காக அந்தக் கூட்டணிக்குச் சென்றீர்கள் என்று எல்லோருக்கும் நன்றாகத் தெளி வாகத் தெரியுமே!

ஒவ்வொருவருடைய குடுமியும் அவர்களின் கைகளில்!
ஏலம் போடுகின்ற அரசியல் ஒருபக்கம். இன்னொரு பக்கம் பேரம் நடத்திக் கொண்டிருந்தால், நீங்கள் வெளியே இருக்க முடியாது. ஒவ்வொருவருடைய குடுமியும் அவர்களின் கைகளில்!
சினிமா பார்ப்பவர்களுக்குத் தெரியும், ‘ஓர் இரவு’ திரைப்படத்தில் கொலை ஒன்று நடக்கும்; ஏதாவது கொலை செய்தவர் எதிர்த்துப் பேசினால், அந்தக் கொலை செய்தவரின் படத்தை எடுத்து எடுத்துக் காட்டுவான்; உடனே, பிரச்சினை செய்தவர் அடங்கி விடுவார். அதுபோன்றுதான் இவர்களின் நிலையும்.
உரிமைப் போராட்டத்தினை

எல்லா கட்சியினரும் நடத்துகிறார்கள்!
எனவே நண்பர்களே, இந்த உரிமைக்கான போராட்டம் என்பதை எல்லா கட்சியினரும் தமிழ்நாட்டில் நடத்துவது என்பது வரவேற்கத்தக்கதாகும்.
தி.மு.க., இடதுசாரி நண்பர்கள், விடுதலைச் சிறுத்தைகள், காங்கிரஸ் கட்சி, ஒவ்வொருவரும், ஒவ்வொரு அமைப்பும் தனது கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றன.
யாருக்கெல்லாம் தமிழ்நாட்டின் உரிமையும், நியாயத்தில் உள்ள உரிமையும் புரிந்து, அரசமைப்புச் சட்டத்தின் உரிமையையும் காத்திட வேண்டுமென்று நினைக்கின்றார்களோ அவர்கள் எல்லாம் ஒன்றிய அரசைக் கண்டிக்கின்றனர்.

ஒரு கட்சி – ஆட்சிப் பிரச்சினையல்ல!
இது ஒரு கட்சிப் பிரச்சினையல்ல நண்பர்களே! இது ஒரு ஆட்சியினுடைய பிரச்சினையும் அல்ல! இது நம்முடைய பிரச்சினை. ஏனென்றால், நம்முடைய பிள்ளைகள் படிக்கவேண்டாமா?
கல்வி என்பது எதிர்காலத்தினுடைய முதலீடு! பட்ஜெட்டில், கல்விக்குப் போதிய நிதி ஒதுக்கவேண்டும். மாநிலத்திற்கு நிதி ஒதுக்கீடு கல்வியில் உரிய அளவு கட்டாயம் செய்யவேண்டும். ராணுவம் பாதுகாப்பிற்குத் தேவைதான்; ஆனால், அதைவிட கல்வி என்பது இளைஞர்களுக்கு உயர்வு அளிக்கக் கூடியதல்லவா!
ஆனால், இவர்களுடைய ஆட்சியில் கல்விக்கு முக்கியத்துவம் கொடுப்பதே கிடையாது.
ஆண்டொன்றுக்கு 2 கோடி பேருக்கு வேலை கொடுப்போம் என்று சொன்னார்களே, அப்படியென்றால், கடந்த 10 ஆண்டுகாலத்தில், 20 கோடி இளைஞர்களுக்கு வேலை கிடைத்திருக்க வேண்டும் அல்லவா! செய்தார்களா என்றால், இல்லை என்பதுதான் பதில்.

தனியார்த் துறைக்கு ஒன்றிய அரசு
பணம் கொடுப்பது ஏன்?
பொதுத் துறைகளையெல்லாம் தனியார் மயமாக்கிக் கொண்டிருக்கிறார்கள். தனியார்த் துறையில், வேலை வாய்ப்பிற்காக ஆட்களை எடுத்தால், அதற்காக தனியார்த் துறைக்கு ஒன்றிய அரசு பணம் கொடுப்பது ஏன்? அந்தப் பணத்தை வைத்து, பொதுத் துறையைத் தொடங்கலாம் அல்லவா!
பொதுத்துறைகள் எல்லாம் நட்டத்தில் நடக்கின்றன; இன்றைக்கு எல்லோரும் கைப்பேசி வைத்திருக்கின்றோம். குறைந்த அளவு கட்டணத்தில் சேவையை அளிப்பது பி.எஸ்.என்.எல். துறைதான். ஆனால், அந்த பி.எஸ்.என்.எல். துறையைக் காப்பாற்றுவதற்கு ஒன்றிய அரசு தயாராக இல்லை.
ஏனென்றால், அதற்குப் பதிலாக அம்பானி, அதானி நிறுவனங்கள்தான் முன்னணியில் இருக்கவேண்டும் என்பதற்காகத்தானே!

சிம்ம சொப்பனமாக விளங்கும்
எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்!
இதுகுறித்து நம்முடைய எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் அவர்கள் நாடாளுமன்றத்தில் எழுந்து பேசும்பொழுதெல்லாம், அவர்களுக்குச் சிம்ம சொப்பனமாக விளங்குகிறார்.
அவர் கேட்ட கேள்விக்குப் பதில் சொல்ல முடியாமல், அவரைத் தனிப்பட்ட முறையில் விமர்சனம் செய்கிறார்கள். அவரைப்பற்றி ஆராய்ச்சி செய்கிறார்கள்; அவர் என்ன ஜாதி? அவருடைய ஜாதி தெரியுமா? என்று கேட்கிறார்கள்.
நாடாளுமன்றத்தினுடைய தகுதியா இது? உன்னுடைய அப்பாவின்பெயர் என்ன? உன் ஜாதி என்ன தெரியுமா? என்று கேட்கிறார்களே, இது நியாயம்தானா?
அவைக் குறிப்பிலிருந்து இவற்றை நீக்கவேண்டும் என்று பேரவைத் தலைவர் சொல்லியிருக்கிறார்.

ஆனால், இது தெரிந்தோ, தெரியாமலோ பிரதமராக இருக்கின்ற மோடி அவர்கள், சமூக வலைதளத்தில் இதைப் பதிவிடுகிறார்.
‘‘எல்லோரும் அவருடைய பேச்சை கேளுங்கள்; மிகப்பெரிய அறிவாளி அவர்” என்று கிண்டல் செய்கின்றார்.
ஆகவே, இதையெல்லாம் நினைத்துப் பார்த்தால், மிகக் கேவலமாக இருக்கிறது.
இதுபோன்ற போராட்டங்கள் இத்தோடு முடிந்து விடும், ஓய்ந்துவிடும் என்று நினைக்காதீர்கள்!

இப்படிப்பட்ட ஒரு நிலையில், நம்முடைய உரிமைக் குரல் என்றைக்கும் ஒலிக்கவேண்டும். இது ஒரு தொடக்கம்தான். இதுபோன்ற போராட்டங்கள் இத்தோடு முடிந்து விடும், ஓய்ந்துவிடும் என்று நினைக்காதீர்கள். தொடர்ந்து போராடவேண்டும். வலி இருக்கின்றவன், அந்த வலி தீரும்வரை சத்தம் போட்டுக் கொண்டுதான் இருப்பான்.
அந்த வலிக்காக மயக்க மருந்து கொடுத்தால் போதும் என்று நினைக்கக் கூடிய அளவில் இருக்க முடியாது.
பல களங்களைக் காணவேண்டிய அவசியம் வரும்!
எனவேதான் நண்பர்களே, இந்தப் போராட்டம், பல ரூபங்களில், பல களங்களைக் காணவேண்டிய அவசியம் வரும்.
நியாயங்கள் கிட்டும்வரை இந்தப் போராட்டங்கள் தொடரும்.
அதுமட்டுமல்ல, ஒன்றியத்தில் இருக்கின்ற மைனாரிட்டி ஆட்சி மிக விரைவில் கவிழும்.

9 நீதிபதிகள் அடங்கிய அமர்வின்
உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு!
இங்கே கழகப் பொருளாளர் ஒரு கருத்தைச் சொன்னார். உச்சநீதிமன்றத்தில் ஓர் அற்புதமான தீர்ப்பு – கனிம வளங்களுக்கு ஒன்றிய அரசுக்குத்தான் வரி போடுகின்ற உரிமை இருக்கின்றது என்று ஏழு நீதிபதிகள் கொடுத்த தீர்ப்பு தவறு என்று சொல்லி, 9 நீதிபதிகள் அடங்கிய அமர்வு, மாநில அரசுக்குத்தான் ராயல்டி உரிமை இருக்கிறது; ராயல்டி உரிமை இருந்தாலும், வரி போடுகின்ற உரிமையும் உண்டு என்று சொல்லியிருக்கிறார்கள்.
தமிழ்நாடு அரசுக்கு
எங்களுடைய வேண்டுகோள்!
தமிழ்நாடு அரசுக்கு இந்தக் கூட்டத்தின் வாயிலாக எங்களுடைய வேண்டுகோள் என்னவென்றால், நெய்வேலி நிலக்கரி, நரிமணம் பெட்ரோல் இவற்றிற்கெல்லாம் முதலில் அசாமிற்கு மட்டும் ராயல்டி வழங்கினார்கள். திராவிடர் கழகம் வலியுறுத்திதான், சுவர் விளம்பரங்களை எழுதி, எழுதி, நாங்கள் தொண்டை வறள கத்திய பிறகுதான், தமிழ்நாட்டிற்கு அந்த ராயல்டி, கலைஞர் காலம் முதல் இன்று எந்த அரசு வந்தாலும் ராயல்டி வாங்கிக் கொண்டிருக்கின்றது.

அதிக ராயல்டி தொகையைக் கேளுங்கள்!
புதிய வரியைப் போடுங்கள்!
எனவே, தமிழ்நாடு அரசுக்கு எங்களுடைய வேண்டுகோள் என்னவென்றால், உச்சநீதிமன்றம் ஆணி அடித்ததுபோன்று தீர்ப்பு வழங்கியிருக்கிறது. அதனால், ராயல்டி தொகையை அதிகப்படுத்திக் கேளுங்கள். பழைய ரேட் வேறு; இப்பொழுது ரூபாய் மதிப்பு குறைந்து போயிருக்கிறது. ஆகவே, பழைய ராயல்டி தொகையைவிட அதிக ராயல்டி தொகையை கொடுக்கவேண்டும் என்று ஒன்றிய அரசைக் கேட்கவேண்டும். புதிய வரியைப் போடுங்கள்; அதன்மூலம் என்ன பதில் வருகிறது என்று மக்களுக்குத் தெரியட்டும்.
எனவேதான், அவர்கள் அப்படிக் காயை நகர்த்தினால், நீங்கள் இப்படி காயை நகர்த்துங்கள் என்பதை எங்களுடைய வேண்டுகோளாக வைக்கிறோம். அவசியம் செய்தியாளர்கள் இதற்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.
நாங்கள் தெருத் தெருவாக எடுத்துச் சொல்வோம்; வீடு, வீடாக எடுத்துச் சொல்வோம்!
நீங்கள் முக்கியத்துவம் கொடுக்காவிட்டாலும், நாங்கள் தெருத் தெருவாக எடுத்துச் சொல்வோம்; வீடு, வீடாக எடுத்துச் சொல்வோம்.

ஒருமுறை முதலமைச்சர் கலைஞரிடம் கேட்டேன் நான், ‘‘என்னங்க, ராயல்டி வருகிறதா?” என்று.
‘‘ஏன்யா, தெரு முழுவதும் சுவர்களில் எல்லாம் “ராயல்டி வேண்டும், ராயல்டி வேண்டும்” என்று எழுது கின்றவர்கள் நீங்கள்தானே! அதைப் பார்த்துவிட்டு நாங்கள் சும்மா இருப்போமா? ராயல்டி நிறைய வருகிறது” என்றார்.
‘‘பரவாயில்லையே, சிங்கிள் டீ கூட இல்லாமல், அதை நாங்கள் உங்களுக்குக் கிடைக்கக் கூடிய வாய்ப்பை ஏற்படுத்தியிருக்கின்றோம்” என்று வேடிக்கையாகச் சொன்னேன்.
மாநில அரசு தன்னுடைய உரிமையை நிலைநாட்டவேண்டும்!
எனவே, இப்போது எங்கெங்கெல்லாம் வாய்ப்பு இருக்கிறதோ, அங்கெல்லாம் மாநில அரசு தன்னுடைய உரிமையை நிலைநாட்டவேண்டும்.

அதிலும் நம்முடைய முதலமைச்சர் அவர்கள், இந்தியாவிற்கே வழிகாட்டக் கூடிய முதலமைச்சராக இருக்கிறார். தமிழ்நாடு, ‘திராவிட மாடல்’ ஆட்சி இந்தியாவிற்கே வழிகாட்டிக் கொண்டிருக்கின்றது.
எனவேதான், ஒரு பக்கம் மாநில அரசின் திட்டங்கள் வெற்றி அடைகின்றன. அதனால், ஒவ்வொரு முறையும், ஒன்றிய அரசுக்குக் கோபங்களை உருவாக்குகிறது.
நீங்கள் எவ்வளவு இழுத்தாலும், கொதிப்பதை கொதிக்க வைக்கக்கூடிய ரகசியத்தைத் தெரிந்தவர் எங்களுடைய முதலமைச்சர்!

‘‘எரிவதை இழுத்தால், கொதிப்பது அடங்கிவிடும்” என்று நீங்கள் நினைக்கிறீர்கள்; ஆனால், நீங்கள் எவ்வளவு இழுத்தாலும், கொதிப்பதை கொதிக்க வைக்கக்கூடிய ரகசியத்தைத் தெரிந்தவர் எங்களுடைய முதலமைச்சர். மக்களுடைய ஆதரவு தமிழ்நாடு அரசுக்கு இருக்கிறது.
மீண்டும் மீண்டும் போராடுவோம்,
நியாயத்தைப் பெறுவோம்!
எனவேதான், மீண்டும் மீண்டும் போராடுவோம், நியாயத்தைப் பெறுவோம், வெற்றி பெறுவோம்!
நன்றி,வணக்கம்!
இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக